ஆபீஸில் மீட்டிங் முடிந்து மிதுன் கிளம்பலாம் என்றிருக்க, அந்த நேரத்தில் ஒரு முக்கியமான வாடிக்கையாளர் வந்ததால் அவருடன் பேசியபின், இன்னும் சில வேலைகளை முடித்து வீட்டிற்குச் செல்ல இரவு வெகுநேரமாகியது.
அறைக்குள் நுழைந்தவன், வெளிச்சமின்றி மொத்த அறையும் இருளில் இருக்க, மின்விளக்கைப் போட்டான். நதியா அவனுக்கு முதுகு காட்டிப் படுத்திருக்க, உறக்கத்தில் இருக்கிறாள் என நினைத்தவன், ஃப்ரெஷ் அப் ஆகி இரவு உணவும் உண்டபின், பின்னாலிருந்து அவளை அணைத்துப் படுத்தபடி அவள் முகத்தை எட்டிப் பார்த்தான்.
கண்களில் கண்ணீரோடு இருந்தவளைப் பார்த்து அதிர்ந்தவன், “நதிமா என்ன பண்ணுதுடா” என்று கேட்டவாறே அவளைத் தன் பக்கம் திருப்பினான்.
“அய்யோ நதிமா.. என்னாச்சு. ஏன் அழற? முகமெல்லாம் வீங்கி இருக்கு” அழுது சிவந்திருந்த அவளது முகத்தைப் பார்த்துப் பதறினான்.
“நான் டான்ஸ் ஆடி ரீல்ஸ் பண்ண வீடியோலாம் எப்படி உங்க லேப்டாப்ல வந்தது?” அவள் உடைந்த குரலில் வினவிட,
“உன்னோட போனை ஸ்கிரீன் மிரரிங் பண்ணப்போ எடுத்தேன் டா” அது அவனுக்குப் பெரிய விஷயமில்லை என்பதுபோல் சொன்னான்.
“எப்போ இருந்து என் போனை ஸ்பை பண்றீங்க?” அவள் கேட்ட கேள்வியில் தடுமாறியவன், பதிலேதும் பேசாமல் இருந்தான்.
“நான் உங்ககிட்ட வேலைக்கு வந்ததுல இருந்தா?”
“இல்ல நதிமா”
“அப்போ வைஷாலி பிரச்சனை நடந்தப்போ இருந்துதானா?”
“லிசன். அப்போ எனக்கு வேற வழி தெரியல, உன்னோட போனை ஸ்கிரீன் மிரரிங் பண்ணேன். ஆனா நான் உன்னை சந்தேகப்படல. உன்னோட டான்ஸ் பிடிச்சது, அதனாலதான் அந்த வீடியோஸ்லாம் எடுத்து அப்பப்போ பார்ப்பேன்”
“எதுக்கு டிடெக்டிவ் கிட்ட என்னைப் பத்தி விசாரிக்கச் சொன்னீங்க?”
“நீ என்னைக் காப்பாத்துன பொண்ணா அப்படின்னு தெரிஞ்சுக்கத்தான்”
“ஏன் என்னோட ஃபோன் கால்ஸ் எல்லாம் ரெக்கார்ட் பண்ணிக் கேட்டீங்க?”
“நதிமா.. எனக்கு வேற எந்த இன்டென்ஷனும் இல்ல. நான் அந்தப்பிரச்சனையை முடிக்கணும்னு தான் அப்படிப் பண்ணேன்”
“அப்போ நாங்க உண்மையை சொன்னபிறகும் நீங்க ஏன் என்னை ஸ்பை பண்ணீங்க”
“அய்யோ.. நான் அப்படிலாம் பண்ணல டா. ஏதோ உன்னைப் பத்தி தெரிஞ்சுக்கிற ஆர்வத்தில அப்படியே விட்டுட்டேன். நாம ரெண்டு பேரும் லவ்வர்ஸ் தானே. நமக்குள்ள என்ன பெரிய பிரைவஸி இருக்கப்போகுது”
“சரி உங்க போனை குடுங்க. நானும் ஸ்கிரீன் மிரரிங் பண்ணிக்கிறேன்” என்று நதியா கேட்டதும், மிதுன் தயங்கினான்.
கண்களைத் துடைத்துக் கொண்டவள், அவனை நோக்கி அனல் பார்வையை வீசிட, நிலைகுலைந்து போனான்.
“என்னைப் பத்தி நல்லா விசாரிச்சுட்டு, நான் வேற யாரையும் லவ் பண்றேனான்னு தெரிஞ்சுக்கிட்டு, அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல அவன் என்னை எதுவும் பண்ணானா இல்லையான்னு செக் பண்ணிட்டுதான் என்னை லவ் பண்ணியிருக்கீங்க. அப்படித்தானே”
“நதிமா…” என்றவனுக்கு அதற்கு மேல் பேசமுடியாமல் தொண்டை அடைத்துக் கொண்டது.
“என் மேல நம்பிக்கையே இல்லாமதான இவ்வளவும் பண்ணியிருக்கீங்க. நம்பிக்கை இல்லாம காதல் மட்டும் எப்படி வந்தது? எனக்குத் தெரிஞ்சுடுச்சு. இன்னும் குழந்தை கன்சீவ் ஆகலைன்னு, இப்படியெல்லாம் நடந்துக்கிட்டா குழந்தை பிறக்கும்னு லவ் மேக்கிங் பண்ணியிருக்கீங்க. சரியா?”
“நான் குழந்தைக்காக இதெல்லாம் பண்ணல. உனக்காக.. உன்னோட காதலுக்காகத் தான்டா இப்படி நடந்துகிட்டேன்” மிதுன் அவளை அணைக்க முயல சட்டென்று விலகி அமர்ந்தாள்.
“நான் உங்களை எவ்ளோ நம்பினேன்?! நீங்க என்னை லவ் பண்ண ஆரம்பிச்ச பிறகு கூட குழந்தை விஷயத்தைப் பத்தி ஏதாவது கேட்டிருப்பேனா? நீங்க எது செஞ்சாலும் சரியாத்தான் இருக்கும்னு நம்பினேன். ஆனா ஏன் என்னை இப்படி ஏமாத்துனீங்க?” தன் இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு கதறி அழுதாள்.
“நதிமா.. பிளீஸ் அழாதடா.. சாரி. இனிமே இப்படிப் பண்ணமாட்டேன். உனக்கு என்னோட போனை தரேன். நீ பாரு. நான் உன்கிட்ட எதுவும் மறைக்க மாட்டேன். உன்னை நீயே கஷ்டப்படுத்திக்காத டா” ஆறுதலாக அவளது தோளை வருடியவனின் கையைத் தட்டிவிட்டவள், அவனைத் தீயாய் முறைத்தாள்.
“என்னைத் தொடாதீங்க. என்னால இதைத் தாங்கிக்கவே முடியல. நீங்க.. உங்களோட காதல் எல்லாமே பொய்”
“நீ இங்க இருக்கிற இத்தனை நாள்ல என்னோட காதல் உனக்கு புரியலையா டா?” அவனது கம்பீரக்குரலும் தழுதழுத்தது.
“எது காதல் தினமும் வலுக்கட்டாயமா எனக்குப் பிடிக்குமா? பிடிக்காதா? நான் என்ன மனநிலைமையில இருக்கேன்னு கூடத் தெரிஞ்சுக்காம உங்க தேவையைத் தீர்த்துக்கிட்டீங்களே அதுதான் காதலா?” நதியா கேட்ட கேள்வியில் அதிர்ந்து நின்றான். அவள் கேட்பது அத்தனையும் நியாயம்தானே? தவறு என்று தெரிந்தும் மனதை கல்லாக்கிக் கொண்டு அனைத்தையும் திட்டமிட்டே செய்தான். செய்த தவறுகள் கூர்வாளாக மாறி அவன் மனதைக் கொல்ல ஆரம்பித்தன.
“சொல்லுங்க. எதுக்கு சரகஸி மதர் மூலமா குழந்தை பெத்துக்க முடிவு பண்ணீங்க?” அவள் கலங்கிய குரலில் கேட்டதும், அவளை அழுத்தமாய்ப் பார்த்தான்.
“அப்போ சொல்லமாட்டீங்க அப்படித்தானே?!”
“தேவ் காகத்தான். அவனுக்கு கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி அடிக்கடி ஹெல்த் பிரச்சனைகள் வந்தது. அதுக்காக டெஸ்ட் பண்ணப்போ, வெரிகோசெல் குறைபாடு இருக்கதால குழந்தை பிறக்க சான்ஸ் இல்லன்னு சொல்லிட்டாங்க”
“அதுக்கு??”
“அவனுக்கு இப்போதான் மேரேஜ் ஆகியிருக்கு. இந்த டைம்ல குழந்தை கிடைச்சா அவனோட குழந்தைன்னு சொல்லிடலாம். தேவ், ரூபிணியோட குழந்தையாவே வளர்க்கலாம், அதான்”
“நீங்க கல்யாணம் பண்ணி, குழந்தை பெத்துக்கிட்டு உங்க தம்பிக்கு அந்த குழந்தையைத் தரலாமே”
“நான் என்னைக் காப்பாத்துன பொண்ணைத் தான் லவ் பண்ணேன். அவளுக்காகக் காத்துக்கிட்டிருந்தேன். அவ கிடைப்பாளா? எப்போ கிடைப்பான்னு கூட தெரியாத நிலைமை, அதனால தான் சரகஸி மதரா உன்னை….”
“சூப்பர். உங்க காதலை நம்பின என்னையும் ஏமாத்திட்டீங்க. உங்களை நம்பி குழந்தை பெத்துக் குடுக்கலாம்னா அதையும் நீங்க வளர்க்க மாட்டீங்க, உங்க தம்பிக்கு குடுத்துருவீங்க. தேவ், ரூபிணி அந்தக் குழந்தையை அவங்க குழந்தை மாதிரி வளர்ப்பாங்களா? வேணாம்னு சொன்னா என்ன பண்ணுவீங்க?” சிவந்த கண்களுடன் ஆக்ரோஷமாகக் கத்தினாள்.
“நதிமா.. நான் பண்ணதெல்லாம் தப்பு தான். தேவ் மேல இருக்கிற பாசத்துல நிதானம் இல்லாம இப்படி செஞ்சுட்டேன். அவன் ரூபியை காதலிக்கிறதா வந்து சொன்னப்போ, ரூபியோட அப்பா கிட்ட இந்த விஷயத்தை சொல்ல முடியல. எல்லார் கிட்டயும் இதை மறைச்சு அவங்க கல்யாணத்தை நடத்திட்டேன். அப்போ அவங்களுக்கு வேணுங்கிறதை நான் பண்ணித்தானே ஆகணும். அது என்னோட கடமை”
“உங்க கிட்ட பணம் இருக்கு சார். நீங்க என்ன வேணும்னாலும் செய்யலாம். தாராளமா பண்ணுங்க”
“என்னைப் புரிஞ்சுக்கோ டா. உன் மனசு கஷ்டப்படுற மாதிரி இனிமேல் எப்பவும் நடந்துக்க மாட்டேன். எனக்கு நீ வேணும்”
“இனிமேல் நடந்துக்கிறதுக்கு என்ன இருக்கு. உங்களுக்கு மனுசங்க மேல நம்பிக்கையே இல்ல. நீங்க நினைக்கிறது நடக்கணும். அதுக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவீங்க அப்படித்தானே. ஒருநாளாவது எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கான்னு கேட்டிருக்கீங்களா? இல்ல.. லவ் பண்றியானு ஒரு வார்த்தையாவது கேட்டிருப்பீங்களா?”
“அப்போ நீ என்னை லவ் பண்ணலையா?”
“தெரியலை. என்னைத்தான் நீங்க யோசிக்கவே விடலையே. லவ்ங்கற பேர்ல உங்களுக்குத் தேவையானதை எடுத்துக்கிட்டீங்க. வேணுங்கறதெல்லாம் பண்ணிக்கிட்டீங்க”
“சரி பழசெல்லாம் விடு. நாம ரெண்டு பேரும் இன்னைலருந்து, இந்த நிமிஷத்திலருந்து லவ் பண்ணலாம். உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா? எனக்குத் தெரியும் நீ என்னை லவ் பண்ற. ஆனா கோபத்துல ஏதேதோ பேசுற. லவ் யூ டா நதிமா”
“ஒருவேளை நமக்குக் குழந்தை பிறந்த பிறகு, எனக்குத் தெரியாம அது உங்க குழந்தை தானான்னு சந்தேகப்பட்டு டி.என்.ஏ டெஸ்ட் எடுத்து பார்ப்பீங்களா?”
“நதிமா..” என்றவன் மொத்தமாய் உடைந்திருந்தான்.
அவளோ அவனைக் கண்டுகொள்ளாமல் எழுந்து வெளியே செல்ல எத்தனிக்க, “எங்க போற டா?” மெல்லிய குரலில் கேட்டான்.
“பயப்படாதீங்க சார். நான் எங்கேயும் ஓடிட மாட்டேன். எனக்கு மனசு சரியில்ல. நான் இன்னைக்கு என் அம்மா கூட போய் தூங்குறேன். நாளைலருந்து கரெக்ட்டா உங்க டியூட்டி நடக்கும்” என்றவள் அறையை விட்டு வெளியேறினாள்.
அவள் சென்றதும் மிதுன் தலையில் கை வைத்தபடி அப்படியே அமர்ந்துவிட்டான். அவர்களது கேள்விகள் திசைமாறின, பதில்கள் தடம்மாறின. சில மாதங்களாய் தன் மனதில் தீட்டி, சில நாட்களாய் தன் வாழ்க்கையை அழகாக்கிய காதலெனும் வண்ண ஓவியத்தை, ஒரு கண நேர அடைமழை கரைத்துச் சென்றது போல் உணர்ந்தான்.
தன்னுடைய காதலை அவள் புரிந்துகொள்ளவில்லையே என்ற எண்ணமே அவனுக்கு அதிகமாய் வலித்தது.
மிதுனின் நம்பிக்கையின்மைக்கான காரணம் நதியாவிற்குத் தெரியாததுதானே. அதேபோல அவள் தேவையில்லாமல் தன்மீது ஆசைகளை வளர்த்துக்கொள்ளக் கூடாது என்பதற்காகவே, இங்கு வந்த நாளிலிருந்து அவளிடம் கடுமையாக நடந்துகொண்டான். அவனுடைய மனதில் இருந்தவள் வேறொருத்தி அல்லவா.
‘தன்னுடைய சூழ்நிலையை எப்படி புரியவைப்பது? தன் பக்க நியாயங்களை எப்படி அவளுக்கு சொல்வது?’ குழப்பத்தில் இருந்தான் மிதுன். ‘இதற்கே இப்படி கோபப்படுகிறாள். இன்னும் தன்னைப் பற்றிய உண்மைகள் தெரிந்தால் அவள் விட்டுச் சென்றுவிடுவாளோ?!’ என்கிற பயத்தில் மீண்டும் அவளிடம் உண்மைகளை மறைக்கும் தவறைத் தெரிந்தே செய்தான்.
தன்னை மறந்து எப்போது உறங்கினானோ வழக்கமான நேரத்திற்கு விழித்தவன், எழுந்து ஆபீஸுக்குக் கிளம்பினான். அவனுக்கு, அவள் அருகில் இல்லாத நொடிகளோ கடக்க மறுத்தன, நிமிடங்களோ நகர மறுத்தன.
நதியா பேசாவிட்டாலும் பரவாயில்லை, அவளை ஒருமுறை பார்க்க வேண்டும் என்ற தவிப்பில் அவளுடைய தாயின் அறைக்குச் சென்றான். அவனுக்கு முதுகு காட்டியபடி அவள் இன்னும் உறக்கத்தில் இருக்க, சாந்தி அந்த அறைக்குள்ளேயே நடந்து கொண்டிருந்தார்.
சாந்தி மிதுனைப் பார்த்ததும் “வாங்கப்பா..” என்று அழைத்தார். “அம்மா.. நதிமா..” அவன் தயங்கியவாறே கேட்க, “நைட் எப்போ இங்க வந்து தூங்கினான்னு தெரியல. எழுப்பி விடட்டுமாப்பா” என்றவர், “நதியாமா எழுந்திரு, தம்பி வந்திருக்காங்க பாரு” அவளின் தோளைத் தட்டி எழுப்பினார்.
“இல்லமா இருக்கட்டும், அவ தூங்கட்டும். எங்க ரூம்ல நைட் ஏசி சரியா ஒர்க் ஆகல. அதான் இங்க வந்து தூங்குறேன்னு சொல்லிட்டு தான் வந்தா. அவ எழுந்ததும் எனக்கு போன் பண்ண சொல்லுங்க” என்றவன் அங்கிருந்து சென்றான்.
அவன் சென்றதும், எழுந்து அமர்ந்தாள் நதியா. அவள் எங்கு தூங்கினாள் எழுவதற்கு?! மன நிம்மதியோடு சேர்த்து அவளது தூக்கத்தையும் அல்லவா பறித்துவிட்டான்.
“தம்பியே ஏசி சரியில்லாம உங்க ரூம்ல தூங்கும் போது உனக்கென்ன? அவர் கூடவே தூங்க வேண்டியது தான” சலிப்பாய் சொன்னவரை முறைத்தவள், அவரைச் சாப்பிட வைத்து அவருக்கு தேவையானதெல்லாம் செய்தபின் அறைக்குச் சென்றாள்.
நடந்ததையெல்லாம் நினைத்து மௌனமாய் அழுதாள். அவளைப் பொறுத்தவரை காதல் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம். அது ஒருவரைப் பார்த்ததும் இயல்பாய்த் தோன்றும் உணர்வு.
கண் முன்னே அவனது செயல்கள் கடுமையானதாக இருந்தாலும், அவனைப் பற்றி எதுவும் தெரியாமல், அவன் நல்லவனா, கெட்டவனா என்று கூட அறியாமல் நதியாவிற்கு மிதுன் மீது நம்பிக்கை வந்ததுபோல, அவனும் அவளைப்போலவே மனப்பூர்வமாகக் காதலித்திருப்பான் என நம்பினாள்.
‘தன்னுடைய காரியங்களை மட்டும் செய்துகொள்ளும் சரியான சுயநலவாதி. எனக்காக.. என் மகிழ்ச்சிக்காக என்ன செய்திருப்பான்’ என்று யோசித்தவள், தன் விரலில் அவன் அணிவித்த மோதிரத்தைப் பார்த்தாள். அதில் மித்து என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது.
‘யாருக்குத் தெரியும் ஊருக்கு முன் தான் பெரிய காதல்காரன் என்று நிரூபிக்கத்தான் அன்று பாடியிருப்பான், எனக்கு ப்ரொபோஸ் செய்திருப்பான்’ அவன் மீது கோபம் கொண்ட அவளது மனம் ஏடாகூடமாக யோசித்தது. எரிச்சலோடு தன் விரலில் இருந்த மோதிரத்தைக் கழற்றித் தூக்கி எறிந்தாள்.
அவன் மீது காதல் பித்துக்கொண்ட மனதிற்கு அதைச் சாதாரண விஷயமாகக் கடந்து செல்ல முடியவில்லை.
‘நம்பிக்கையும் புரிதலும் உள்ள உறவுகள் மட்டுமே காலமெல்லாம் நிலைத்திருக்கும். எனக்கான நம்பிக்கையைத் தராதவனை, என்னைப் பற்றிப் புரிந்துகொள்ளாதனை நான் எப்படி நம்பினேன். என்னுடைய போனில் நான் யாரிடமோ பேசியதை வைத்து என்னைப் புரிந்துகொண்டவன், யாரோ ஒரு டிடெக்டிவ் சொன்ன விஷயங்களை வைத்து என்னை அறிந்துகொண்டவனுக்கு எப்படி என்மேல் காதல் இருக்க முடியும்’ பலவித யோசனைகளுடன் இரவு வரை மெத்தையில் அழுதபடியே கிடந்தாள்.
❤️🔥 மோகம் தீர்ப்பாள் ❤️🔥
