அத்தியாயம் 29
மிதுன் இரவு வீட்டிற்கு வந்தவன் அவளிடம் எதுவும் பேசாமல் தன்னுடைய வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தான். நதியா எழுந்து குளித்து வந்தவள், தயாராகிப் படுத்துக்கொள்ள, அவனோ அவளைக் கண்டும் காணாது இருந்தான்.
“சார் சீக்கிரம் வாங்க. நான் முடிச்சுட்டுத் தூங்கணும்” எரிச்சலோடு பேசியவளைக் கூர்மையாகப் பார்த்தவன், “எனக்கு வேணாம்” என்றான்.
“ஆனா எனக்கு இப்பவே வேணும். டைம் இல்ல, நான் சீக்கிரமே குழந்தையைப் பெத்துக் கொடுத்துட்டு இந்த வீட்டை விட்டுப் போகணும். ஏதோ நரகத்துல இருக்கிற மாதிரியே இருக்கு” அவள் பேசிக்கொண்டிருக்க, லேப்டாப்பை மூடிவைத்தவன், அமைதியாகப் படுத்துக்கொண்டான்.
மன அழுத்தம் தந்த சோர்வில் இருவரும் தூங்கியிருந்தனர். மறுநாள் இரவும் அவன்பாட்டுக்கு தன் வேலையில் மும்முரமாக இருக்க, கோபமாய் எழுந்தவள் அவனுக்கருகே சென்று, “சார்.. உங்களுக்கு என்ன பிரச்சனை? ஏன் இப்படி பண்றீங்க? உங்க இஷ்டப்படி தான் இருப்பீங்களா? என் மனசுல இருக்கிறதை புரிஞ்சுக்க மாட்டீங்களா?” என்றிட,
“நீ மட்டும் என்னையும் என்னோட காதலையும் புரிஞ்சுக்கிறியா?” அவனும் கோபத்தில் சீறினான்.
“காதலுங்கற பேர்ல என்னை ஏமாத்தாதீங்க. அதான் உங்களுக்கு தேவையானதெல்லாம் பண்ணிக்கிட்டீங்களே இன்னும் என்ன தான் வேணும் உங்களுக்கு?”
“உன்னோட காதல் வேணும். நீ வேணும்” என்றவனைப் பார்த்துக் கேலியாய் இதழ் வளைத்தாள்.
“சார்.. நான் உங்களை ஏமாத்தி உங்க சொத்தெல்லாம் எடுத்துட்டுப் போயிட்டா என்ன பண்ணுவீங்க? என் அம்மா இப்போ நல்லா இருக்காங்க. அவங்களைக் கூப்பிட்டுட்டு நான் ஓடிப் போயிட்டா என்ன செய்வீங்க?”
“நதிமா.. நீ பேசுறது குழந்தைத்தனமா இருக்கு. நீ என்னை ஏமாத்தணும்னு நினைச்சா, அதை என்கிட்ட சொல்லிட்டா செய்வ? எனக்கு உன்மேல முழு நம்பிக்கை இருக்கு. என்னோட சொத்தெல்லாம் உனக்குத்தான்.. நானே உனக்குத்தான் சொந்தம். இதுல நீ எதை எடுத்துட்டுப் போகப் போற?”
“என்ன சார்.. என்மேல உங்களுக்குப் புதுசா நம்பிக்கை எல்லாம் வந்திருக்கு. ஓஹோ.. நீங்க இன்னும் என் போனை ஸ்பை பண்றீங்க. அப்போ நான் என்ன பிளான் போட்டாலும் உங்களுக்குத் தெரிஞ்சுடும் தானே” தெரிந்தே அவனைத் தன் வார்த்தைகளால் காயப்படுத்தினாள்.
விரக்தியாய் சிரித்தவன், மௌனமாகத் தலைசாய்த்துப் படுத்தான். தான் செய்த தவறுகளுக்கு அவளது விலகலையும், அவள் வீசும் சொற்களையும் தண்டனையாக ஏற்றுக்கொண்டான்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு…
“சார்.. உங்களுக்கு நாம ஒண்ணா இருக்கிறது இஷ்டம் இல்லனா நாளைக்கு ஹாஸ்பிட்டலுக்குப் போய் டெஸ்ட்யூப் மூலமாகக் கூட குழந்தை பெத்துக்கலாம்” என்று நதியா சொன்னதும், மனவேதனையுடன் அவளைப் பார்த்தான்.
“நதிமா.. உனக்கு இங்க இருக்கப் பிடிக்கலைனா, நீ உன் அம்மாவை கூப்பிட்டுட்டு உங்க வீட்டுக்கே போகலாம். நான் உன்னை எந்த தொந்தரவும் பண்ண மாட்டேன். எனக்கு குழந்தையும் வேணாம், அந்த அக்ரிமெண்ட்டும் வேணாம்”
“நீங்க எனக்காக நிறையப் பணம் செலவு பண்ணியிருக்கீங்களே. நான் இப்போ உங்களுக்குப் பதிலுக்குக் குழந்தை பெத்துக் கொடுத்தா சரகஸி மதர் அப்படின்னு எனக்குப் பெயர் கிடைக்கும். இல்லனா நான் இவ்ளோ நாள் பார்த்த வேலைக்கு செக்ஸ் ஒர்க்கர்னு ஆகிடும்” கேலியாய் அவள் பேசியதும்,
“நதிமா..” என்றவன் அவளை அடிக்கக் கை ஓங்கியிருந்தான். தன் தலையை அழுத்தமாகக் கோதிக் கோபத்தைக் கட்டுப்படுத்தியவன், “நீ என்னோட காதலி.. நீதான் என்னோட மனைவி புரிஞ்சுதா” என ஆக்ரோஷமாய்க் கர்ஜித்தான்.
“மனைவியா? எப்போ சார் நம்ம கல்யாணம் நடந்தது? எப்போ எனக்குத் தாலி கட்டினீங்க? எந்த மண்டபத்துல? யாரையெல்லாம் கூப்பிட்டீங்க? போங்க சார்.. காமெடி பண்ணிக்கிட்டு இருக்காதீங்க. எனக்கே தெரியாம கல்யாணம் முடிஞ்சு நான் உங்க மனைவியாகிட்டேனா?” அவள் வறண்டு போயிருந்த விழிகளில் மீண்டும் கண்ணீர் துளிர்த்தது.
“நான் பண்ணதெல்லாம் தப்புதான், ஒத்துக்கிறேன். சாரிடா. அதுக்காக உன்னோட கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்கச் சொன்னாக் கூடக் கேட்கிறேன். ஆனா நீ உன்னை கஷ்டப்படுத்திக்காத.. என்னை விட்டு விலகிப் போகாத. கூடவே இருந்து என்ன தண்டனை வேணும்னாலும் கொடு. இப்படியெல்லாம் பேசாத”
“ஏன் நீங்க என்னை இந்த மாதிரியெல்லாம் பேசினதில்லையா? இப்போ நான் பேசினா வலிக்குதா? என்னோட முடிவு ஒண்ணுதான். நாம ஆரம்பத்துல இருந்த மாதிரி ஒண்ணா இருந்து, நமக்குக் குழந்தை பிறந்ததும் இந்த வீட்டை விட்டுப் போயிடுவேன். எனக்கு நீங்க குடுத்த எங்க வீடு வேண்டாம். என்னால ஒரு நல்ல வேலைக்குப் போய் என்னோட அம்மாவைப் பார்த்துக்க முடியும். இப்போ நீங்க வந்தா பரவாயில்ல” என்றவள் உடைகளைக் களைந்து மெத்தையில் படுக்க, அவன் பேச்சற்றுப் போனான்.
மன அழுத்தம் குறையாமல் தவித்தவன், வேகமாய் அங்கிருந்த சிகரெட்டை எடுத்து, ஈஸி சேரில் அமர்ந்து அதன் போதையில் மூழ்கினான்.
மறுநாள் காலை அவள் விழித்துப் பார்த்தபோது, அவனிடம் இருந்த பத்துக்கும் மேற்பட்ட சிகரெட் பாக்கெட்டுகளை இரவெல்லாம் குடித்து முடித்திருந்தான். தரையெல்லாம் சிகரெட் துண்டுகள், அறை முழுக்க அதன் புகை, எழுந்ததும் அவளுக்குக் குமட்டிக் கொண்டு வந்தது.
பாத்ரூமிற்குள் சென்று வாந்தியெடுத்தவள், “சைக்கோ அவன் என்னை ஏமாத்தினதுக்கு நான் தான் நல்லா சரக்கு அடிச்சுட்டு மட்டையாகியிருக்கனும். இந்த ரோபோ எதுக்குத்தான் என் உயிரை வாங்குறானோ?!” அவன் இல்லாத தைரியத்தில் சத்தமாகவே புலம்பினாள்.
இப்படியே சில நாட்கள் கழிய…
“நதிமா.. நம்ம கிளையண்ட் ஒருத்தருக்கு இரண்டு நாள்ல கல்யாணம். நம்மளை ஃபேமிலியோட இன்வைட் பண்ணியிருக்காங்க. நீயும் கிளம்பு.. எல்லாரையும் அழைச்சுட்டுப் போயிட்டு வந்துடலாம்” அவன் பேசி முடிப்பதற்குள், “நான் எங்கயும் வரல” என்றிருந்தாள்.
“அவங்க எனக்கு ரொம்ப முக்கியமானவங்க. நாம போய்த்தான் ஆகணும். வைஷுகிட்ட சொல்லி உங்க எல்லாருக்கும் ட்ரெஸ், ஜூவல்ஸ் எல்லாம் ரெடி பண்ணச் சொல்லியிருக்கேன். நீ கிளம்புற அவ்ளோதான்” கட்டளையாகச் சொன்னவன் அவளது பதிலை எதிர்பாராமல் அங்கிருந்து சென்றான்.
அன்று மிதுன் கிளம்பி வெளியே வர, அவளோ இன்னும் தயாராகாமல் இருந்தாள். “என்ன நதிமா.. இன்னும் கிளம்பாம இருக்க? என்னை அசிங்கப்படுத்தணும்னு முடிவே பண்ணிட்டியா?” கோபமாகக் கத்திக் கொண்டிருந்தவன், வைஷு அறைக்குள் வந்த சத்தம் கேட்டு அமைதியானான்.
“சாரிண்ணா மேக்கப் ஆர்டிஸ்ட் வர லேட்டாகிடுச்சு. நீங்க ஹாஃப் ஹவர் வெயிட் பண்ணுங்க. அண்ணியும் நானும் ரெடியாகி வந்திடுறோம்” என்று தங்கை சொன்னதும், கோபம் குறைந்து சிரித்தவாறே அறையை விட்டு வெளியேறினான்.
‘நானே நொந்து போயிருக்கேன். இதுல இதெல்லாம் அவசியமா?!’ எனத் தனக்குள்ளே புலம்பியவள், ஒப்பனை முடிந்ததும் அழகுப் பதுமையாய் கீழே இறங்கிட, காதலியின் பேரழகில் மெய் மறந்தான் அந்த ஆணழகன். மற்றவர்கள் ஏற்கனவே திருமண மண்டபத்திற்குப் புறப்பட்டுச் சென்றிருக்க, இவர்கள் மூவர் மட்டும் தனியாகக் கிளம்பினர்.
கோவை மாநகரின் அந்த பிரம்மாண்டமான திருமண மண்டபமே கூட்டத்தால் நிறைந்திருந்தது. பத்திரிகையாளர்களும் ஊடகத்தினரும் அங்கே மொய்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்தபோது, ‘ஏதோ பெரிய புள்ளியின் திருமணம் போல’ என நதியா நினைத்துக் கொண்டாள்.
மிதுன் கூட்டத்திற்குள் சென்றுவிட, நதியாவும், வைஷாலியும் அங்கிருந்த அறைக்குள் சென்று, தங்கள் உடைகளையும் ஒப்பனைகளையும் சரிசெய்தனர்.
“அண்ணி உங்களுக்கு இந்த ரெட் கலர் பட்டுசேலையும், அதுக்கு கான்ட்ராஸ்ட்டா இந்த கிரீன் பிளவுஸும் சூப்பர். சேலையில இருக்க மாதிரியே பட்டர்பிளை புரூச் ஒர்க் பண்ண சொல்லியிருந்தேன், நான் நினைச்ச மாதிரியே வந்திருக்கு. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க! நான் மட்டும் பையனா பிறந்திருந்தா எங்க அண்ணனுக்குப் பதிலா நான்தான் உங்களைக் கல்யாணம் பண்ணியிருப்பேன்” என்று வைஷு குறும்பாகச் சிரித்திட,
“ஹே வாலு.. நல்லா வாய் பேசுற. இதென்ன மேரேஜ்ல இவ்ளோ கூட்டமா இருக்கு. உங்க அண்ணனுங்க யாரையும் காணோம். நாம எப்படி அங்க போறது?” நதியா தயக்கத்துடன் கேட்டாள்.
“நீங்க வாங்க. நான் உங்களைப் பத்திரமாக் கூப்பிட்டுப் போறேன்” என்ற வைஷு அவளது கையைப் பிடித்தவாறு, மணமேடையில் விறுவிறுவென ஏறினாள்.
இவர்கள் வந்ததும் அங்கிருந்த மொத்தக் கூட்டமும் விலகி நிற்க, வைஷு அவளை இன்னும் முன்னே இழுத்துச் சென்று, வேகமாய் நதியாவின் கழுத்தில் மாலையைப் போட்டு மணமேடையில் அவளை அமர வைத்தாள்.
அங்கே பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாக அமர்ந்திருந்த மிதுன், மந்திரங்கள் ஒலிக்க, மங்கள வாத்தியங்கள் முழங்க, மஞ்சள் கயிற்றோடு பிணைந்திருந்த பொன் தாலியைத் தன்னவளின் கழுத்தில் கட்டினான். அவன் இரண்டு முடிச்சுகளைப் போட, மூன்றாவது முடிச்சை உரிமையோடு போட்டாள் வைஷு.
நதியா அதிர்ச்சியோடு அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க, தன் பழுப்பு நிற விழிகளில் காதலோடும், முகம் முழுக்கப் புன்னகையோடும் அவளைப் பார்த்தவன், “இந்த சேலையில நீ ரொம்ப அழகா இருக்க! யூ ஆர் அமேஸிங்! ஐ லவ் யூ டா!” என்று அவளது நெற்றியில் குங்குமம் வைத்தபின், அன்பின் மிகுதியால் அங்கே இதழ்பதித்தான்.
அவனது காதலில் கரைந்தவளின் கண்களும் ஆனந்தக்கண்ணீரில் கரைய, “நதிமா.. வேணாண்டா பிளீஸ்” என்று அவள் கண்ணீரைத் துடைத்தான். இருவரும் மணவறையைச் சுற்றி வரும்போதுதான், மிதுனின் மொத்த குடும்பமும், நதியாவின் அம்மா, அவனது நண்பர்கள், சொந்த பந்தம், நிறுவனத்தின் ஊழியர்கள் என அந்த மண்டபமே நிரம்பி வழிவதைக் கவனித்தாள்.
மெட்டி போடும்போது, ஒரு காலை மடக்கி மறுகாலை ஊன்றிக் குத்துக்காலிட்டு அமர்ந்தவன், அம்மியின் மீதிருந்த அவளது பொன் பாதத்தைத் தூக்கித் தனது இடதுகையில் ஏந்தினான். தன் வலது கையால் மென்மையாய் மெட்டியை மாட்டியபின்னர், அது கழன்றுவிடாதிருக்க லேசாய் அழுத்தியவன், அவளுக்கு வலித்திருக்குமோ என எண்ணித் தன் இதழ்களால் ஒற்றி ஒத்தடம் தர நினைத்து, மீசை முடிகளால் அவள் மென்விரலை காயமாக்கி வைத்தான்.
மிதுன் தந்த காதல் அதிர்ச்சிகளில் சிக்குண்டு மீளாமல் சிலையாய்ச் சமைந்திருந்தவளை, போட்டோஷூட் என்ற பெயரில் அவளை அணைப்பது போல் நடித்து, யாருக்கும் தெரியாதவாறு அவள் வெற்று இடையில் கிள்ளினான். நினைவு திரும்பியவள் கோபமாய் அவனைப் பார்த்து முறைத்திட, வசீகரமாய் இதழ் விரித்தவனின் புன்னகையில் மதி மயங்கினாள் அவனது காதல் நதியவள்.
இந்தியாவின் பல முக்கிய பிரமுகர்களும், தொழிலதிபர்களும் கலந்துகொண்ட அந்தத் திருமணத்தில், பாவம்.. மணப்பெண்ணைத்தான் யாரும் அழைத்திருக்கவில்லை.
திடீர்த் திருமணம் என்றாலும், முறையாகப் பத்திரிகை அடித்து, முக்கியமானவர்களை மிதுன் நேரில் சந்தித்து அழைத்திருந்தான். ‘நதியாவிடம் எதையும் சொல்ல வேண்டாம். அவளுக்கு சர்ப்ரைஸ் தரப்போகிறேன்’ எனத் தன் குடும்பத்தாரிடம் கூறி அத்தனை ஏற்பாடுகளையும் ரகசியமாகச் செய்திருந்தான்.
ஏற்கனவே அவர்களுக்குத் திருமணம் நடந்துவிட்டதாக நினைத்துக் கொண்டவர்கள், ‘என்னமோ செய்யட்டும்’ என்று கண்டுகொள்ளாமல் இருந்தனர். நதியாவின் அம்மாவிற்கும், இத்தனை நாட்களாக மிதுனின் திருமணத்தைக் காண இயலாமல் போனதே என வருத்தப்பட்ட அவனது குடும்பத்தாருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி.
எல்லா ஏற்பாடுகளும் முறையாக அதற்குரிய ஈவென்ட் ஏஜென்ஸிகளிடம் கொடுக்கப்பட்டிருக்க, திருமணம் நல்லபடியாக நடந்தேறியிருந்தது. நதியாவிற்கு முன்கூட்டியே தெரிந்திருந்தால் நிச்சயம் இதற்குச் சம்மதிக்க மாட்டாள் என எண்ணியவன், அதற்காகத்தான் இத்தனை அதிரடியான ஏற்பாடுகளைச் செய்தான்.
மிதுன் தன் காதல் மனைவியின் பெயரில், ரோல்ஸ் ராய்ஸ் காரின் புதிய மாடலை வாங்கியிருக்க, ரோஜாக்களால் அலங்கரிக்கப்பட்ட அந்தக் காரில் ஏறி மணமக்கள் கிளம்பினர். ஆரத்தி எடுத்த பின்னர் மருமகளாக மிதுனின் வீட்டிற்குள் நுழைந்த நதியா, பாட்டியும், ராதாவும் சொல்லித்தரப் பூஜையறையில் சடங்குகள் யாவற்றையும் செய்தாள்.
நதியாவிற்கு இருந்த மனக்கஷ்டத்தால் வைஷு மெகந்திக்கு ஏற்பாடு செய்தபோதும், வளையல்கள், நகைகள் என நிறைய தந்தபோதும் அவள் அதைப் பெரிதாகக் கவனிக்கவில்லை. இதற்கு முன்பு சத்யாவின் திருமணத்திற்கே அவர்கள் அப்படித்தான் கிளம்பிச் சென்றிருந்தனர்.
நதியா கோபத்திலிருப்பாள் எனத் தெரிந்திருந்தும், முதலிரவுக்கான ஏற்பாடுகளைச் செய்தான் மிதுன். “சார்.. இது உங்களுக்கு ஃபர்ஸ்ட் நைட் இல்லையே” குறும்பாகக் கிண்டல் செய்த விஷ்ணுவை முறைத்தவன், “விச்சு.. போய் அரேன்ஜ்மென்ட் ஒழுங்கா பண்ணியிருக்காங்களா பாரு.. போ” என்றிட, ‘ஒரு கல்யாணமாகாத கன்னிப்பையன் கிட்ட சொல்ற வேலையா இது?! என் மனசு புண்படும்னு கொஞ்சமாச்சும் இவருக்குக் கவலை இருக்கா?’ விஷ்ணு மனதிற்குள் புலம்பியபடி வராத கண்ணீரைத் துடைத்துக்கொண்டான்.
முழு அலங்காரத்துடன் தேவதையாய்த் தன் முன் நின்றிருந்த காதலியை, மிதுன் கண்களாலேயே தழுவிக் கொண்டிருக்க, தன் கழுத்திலிருந்த தாலியைக் கழற்றித் தூக்கியெறிந்தாள் அவனின் காதல் நதி. (நல்லவேளை அவன் முகத்துல எறியல)
❤️🔥 மோகம் தீர்ப்பாள் ❤️🔥
