அத்தியாயம்- 3
தாமரை போன திசையை பார்த்தபடி உள்ளுக்குள் எரிந்து கொண்டு இருந்த ராகவன், “என்ன முதல் நாளே மிஸ்டர் ஆதித்யனோடு ஒன்னா சாப்பிடுற அளவுக்கு வந்து இருக்கு. இது சரிப்பட்டு வராது. இனி ஆதித்யனைப் பார்க்கும் போகும் போதெல்லாம் நம்மளும் தாமரை கூட போகணும். இல்லனா காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் தூக்கிட்டு போனானாம் அந்த மாதிரி ஆகிடும் நம்ம ஒன் சைட் லவ்,” என்று தாமரையிடம் காதலைக் கூட சொல்ல முடியாமல் ஒருதலையாக காதலித்துக் கொண்டு இருப்பதை எண்ணி பெருமூச்சு விட்டான் ராகவன்.
அன்று வேலை முடிந்து தன் வீட்டிற்குத் திரும்பினாள் தாமரை.
அது ஒரு சிறிய, ஆனால் நேர்த்தியான வாடகை வீடு.
வாசலிலேயே அவளது அம்மா சரஸ்வதி பக்கத்து வீட்டு அக்கா பத்மாவிடம் பேசிக் கொண்டிருந்தார்.
தாமரையைக் கண்டதும் “சரிடி பாப்பா வந்துட்டா. நான் போய் புள்ளைக்கு சூடா காபி போட்டு கொடுக்கிறேன்,” என்று எழுந்து மகளோடே உள்ளே சென்றார்.
தாமரை பத்மாவிற்கு சிறு புன்னகையும் தலையசைப்பும் மட்டும் கொடுத்து விட்டு சோர்ந்து போய் தாயுடன் உள்ளே சென்றாள்.
”என்ன பாப்பா இவ்வளவு சோர்வா இருக்க? வேலை ரொம்ப அதிகமா பாப்பா? விடிஞ்சும் விடியாததுமா போனவ இப்போ தான் வர்ற. ரொம்ப வேலையாடா தங்கம்?” என்று கேட்டபடி உள்ளே ஏற்கனவே போட்டு வைத்திருந்த காபியை சூடு செய்து எடுத்து வந்து மகளிடம் நீட்டினார்.
தாமரை சோபாவில் சாய்ந்தபடி சரஸ்வதி கொடுத்த காபியை வாங்கி ஒரு வாய் பருகி “ஆமாம்மா.. புது கிளைண்ட் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட். வேலை முடியற வரைக்கும் இப்படித்தான் இருக்கும் போல,” என்றாள் களைப்பாக.
சரஸ்வதி அவளுக்குக் காபி கொடுத்துவிட்டு அருகில் அமர்ந்தவர், “அம்மா உன்னை ரொம்ப படுத்துறேனாடா? ஆனா என்ன செய்யுறதுடா.. நமக்கு இந்த வேலை தான் இப்போ எல்லாமே. ஆனா, உன் முகத்துல ஒரு தெளிவே இல்லையே? ஏதாவது பிரச்சினையா?” என்று கேட்ட அம்மாவின் கேள்விக்கு எந்த பதிலும் கூறாமல் தாமரை அம்மாவின் கைகளைப் பற்றிக்கொண்டாள்.
அவளுக்குள் இருக்கும் பாரத்தை பற்றிச் சொல்லத் தோன்றியது. ஆனால், அந்த நினைவுகள் அம்மாவையும் வருத்தும் என்று அமைதி காத்தாள்.
“ஒண்ணுமில்லம்மா.. ஜஸ்ட் ஒர்க் டென்ஷன் தான்,” என்று சமாளித்தாள். சரஸ்வதிக்குத் தாமரை எதையோ மறைக்கிறாள் என்று புரிந்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்,
“எங்களுக்காக நீ எவ்வளவு கஷ்டப்படுறடா” என்று வாஞ்சையோடு அவள் தலையை தடவ,
அவளோ புன்முறுவலோடு “ஆமா நித்யா எங்கே?” என்று கேட்டாள்.
”அவ ஸ்கூல் விட்டு வந்ததுமே ஏதோ அசைன்மென்ட் எழுதணும்னு பக்கத்து வீட்டு பத்மா பொண்ணோடு ப்ரெண்ட் வீட்டுக்கு போய் இருக்காம்மா” என்றார்.
தாமரையோ யோசனையுடன் கைக்கடிகாரத்தைப் பார்த்தவள், “நேரம் எட்டாகுதும்மா. இன்னுமா ப்ரெண்ட் வீட்ல இருக்கா?”
”என் கிட்ட சொல்லிட்டு தானேம்மா போய் இருக்கா” என்று சரஸ்வதி அழுத்தி கூற,
அவரை ஒரு முறை பார்த்தவள், “ம்… வயசு பொண்ணும்மா காலம் கெட்டு போய் இருக்கு” என்று மட்டும் கூறிவிட்டு, “நான் போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன்” என்று எழுந்து அவளது அறைக்கு சென்றாள்.
தாமரை போகும் திசையை பார்த்த சரஸ்வதியோ தன் கைப்பேசியை எடுத்து நித்யாவிற்கு அழைத்தார்.
அங்கே… ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் பிறந்தநாள் விழா களைகட்டியிருந்தது.
வண்ண விளக்குகள் சரங்களாகத் தொங்கவிடப்பட்டு, அந்த இடமே ஒரு மாய உலகத்தைப் போல ஜொலித்தன.
மேற்கத்திய இசையின் அதிரடித் தாளங்கள் காதுகளைத் துளைக்க, இளைஞர் கூட்டம் உற்சாகத்தில் மிதந்து கொண்டிருந்தனர்.
தாயின் அழைப்பை கவனித்த நித்யா சற்று ஒதுங்கி வந்து அழைப்பை ஏற்று,
”சொல்லும்மா”
”எங்கேடி இருக்க?”
”அம்மா உன்கிட்ட சொல்லிட்டு தானே வந்தேன் ப்ரெண்ட் பர்த்டே பார்ட்டினு. இப்போ தான்ம்மா கேக் கட் பண்ணாங்க” என்று நித்யா பேசிக் கொண்டு இருக்கும் போதே,
“அதெல்லாம் பார்ட்டில இருந்த வரைக்கும் போதும் சீக்கிரம் கிளம்பி வா. தாமரை வந்துட்டா. வந்ததும் உன்னை தான் கேட்டா” என்று சொன்னதை கேட்டு எரிச்சல் அடைந்த நித்யா,
“அவ வந்தா நான் என்ன பண்ண முடியும். நான் பார்ட்டி முடிச்சிட்டு தான் வருவேன்ம்மா” என்று சிடுசிடுத்த மகளிடம்,
“அடியே நீ அசைன்மென்ட் எழுத போய் இருக்குன்னு பொய் சொல்லிருக்கேன். அதனால சீக்கிரமா வீடு வந்து சேர வழியை பாரு” என்று பற்களை கடித்து மெதுவாக பேசி முடித்து அழைப்பை துண்டித்தார்.
தாயின் தொடர்பு துண்டிக்கப்படவும், கடுப்பாக இருந்த நித்யாவின் அருகில் அப்போது பிறந்தநாள் நாயகன் ரோஷன் அவளருகே வந்தான்.
கறுப்பு நிற உடையில் மிக எடுப்பாக இருந்த அவன், “ஏய் பேபி… என்ன தனியா வந்து நிக்கிற?” என்று கேட்டபடி, கேக் துண்டுகள் இருந்த தட்டை அவளிடம் நீட்டினான். அவனின் அந்த ‘பேபி’ என்ற அழைப்பில் நித்யா சொக்கிப் போனாள்.
“நத்திங் ரோஷன். மாம் தான் போன் பண்ணாங்க, அக்கா வந்துட்டாளாம் சீக்கிரம் வர சொன்னாங்க. அப்போ நான் கிளம்பட்டா?” என்று கேக் துண்டை சாப்பிட்டாள்.
”அதுக்குள்ளவா? இப்போதானே கேக் கட்டிங் முடிஞ்சது,” என்ற ரோஷன், அவளது உதட்டோரம் ஒட்டியிருந்த கிரீமைத் தன் கட்டை விரலால் மென்மையாக அழுத்தி எடுத்தான்.
அந்தத் தீண்டலில் நித்யாவின் உடல் சிலிர்த்தது.
அவன் அந்த விரலைத் தன் நாவால் சுவைத்தபடி, அவளை ஒரு காமப் பார்வையால் ஊடுருவினான்.
”உண்மையைச் சொல்லணும்னா… இப்போதான் இந்த புளூபெர்ரி கேக் ரொம்பச் சுவையா இருக்கு,” என்று அவன் போதை ஏற்றும் குரலில் சொல்ல, நித்யாவின் இதயத் துடிப்பு எகிறியது.
அவள் கரம் பற்றி, கூட்டத்திலிருந்து சற்று ஒதுங்கியிருந்த இருட்டான பகுதிக்கு அவளை அழைத்துச் சென்றான்.
அங்கே மனிதர்களின் நிழல்கள் மட்டும் ஆடிக்கொண்டிருக்க, அவளது இடையைச் சுற்றி வளைத்துத் தன்னோடு அணைத்தபடி நிற்க வைத்தான்.
”ரோ… ரோஷன்… என்ன பண்ற?” என்று தடுமாறினாள் நித்யா.
”ஏய் பேபி… இன்னும் நீ எனக்குப் பர்த்டே கிப்ட் தரவே இல்ல. அதனால நானே எடுத்துக்கப் போறேன்,” என்று ரகசியக் குரலில் மொழிந்தவன், அந்தச் சிறுபெண்ணின் உதடுகளைத் தன் இதழ்களால் சிறைப்பிடித்தான்.
உலகமே சுழல்வதைப் போல உணர்ந்த நித்யா, அவனது பிடியில் முழுமையாகத் தன்னை இழந்தாள்.
அதே நேரம், அங்கே ஆதித்யனின் பிரம்மாண்டமான பங்களாவில் இரவு உணவு நேரம்.
ஆதித்யன் வெறும் தொழிலதிபர் மட்டுமல்ல, அவன் ஒரு மிகப்பெரிய கூட்டுக் குடும்பத்தின் செல்லப்பிள்ளை.
அவனது தந்தை விஸ்வநாதன், ஓய்வு பெற்றாலும் குடும்பத்தின் கௌரவத்தை இன்றும் கட்டிக்காப்பவர். தாய் ராஜலட்சுமி, ஒரு கண்டிப்பான அதே சமயம் பாசமான இல்லத்தரசி.
இவை அனைத்திற்கும் மேலாக, ஆதித்யன் எதற்கும் அஞ்சாதவன் என்றால், அதற்கு அவனது தாத்தா சிவஞானம் மற்றும் பாட்டி பார்வதி கொடுத்த தைரியமே காரணம்.
அவர்கள் தான் இன்றும் அந்தக் குடும்பத்தின் வேர்களாக இருக்கிறார்கள்.
மேலும், ஆதித்யனின் செல்லத் தங்கை அக்ஷரா, அண்ணனின் அதிகாரத்தை அன்பால் அடக்கத் தெரிந்த ஒரே ஆள்.
டைனிங் டேபிளில் சிவஞானம் தாத்தாவும், பாட்டியும் அமர்ந்திருக்க, ராஜலட்சுமி பரிமாறிக்கொண்டிருந்தார்.
“என்ன ஆதி.. புது புராஜெக்ட் எப்படிப் போகுது? அந்த இன்டீரியர் டிசைன் வேலைக்கு ஏதோ ஒரு சின்ன கம்பெனில இருந்து அனுபவமே இல்லாத பொண்ணை தேர்ந்தெடுத்து இருக்கியாம்? நல்லா வேலை செய்யுறாளா?” என்று கேட்டார் சிவஞானம்.
ஆதித்யன் உணவை சாப்பிட்டபடி, “சின்ன கம்பெனி தான் தாத்தா. பட் வேலையில நேர்த்தியா இருக்கு. அதிலும் அந்த பொண்ணை இன்னைக்கு நம்ம சைட்டுக்கு வர சொல்லி கட்டிடத்தை சுற்றி பார்க்க சொன்னேன். நான் கூட என்ன தெரியும் அந்த பொண்ணுக்குன்னு நினைச்சி தான் இருந்தேன். ஆனா வேலையினு வந்துட்டா அந்த பொண்ணோட முகத்துல தெரிஞ்ச தீவிரமும் அதை விட அவ கிட்ட இருந்த நிதானமும், அதை பார்க்கும் போது அப்படியே நம்ம பாரும்மாவை பார்த்த மாதிரியே இருந்துச்சு. ஆனா கொஞ்சம் பிடிவாதம் அதிகமா இருக்கும் போல,” என்றான் லேசான புன்னகையுடன்.
அதை கேட்ட தாத்தா சிவஞானம் “என்னடா, முதல் தடவை பார்க்கும் போதே என் பொண்டாட்டியோட ஒப்பிட்டு சொல்ற?” என்று தாத்தா கேட்க,
பாட்டி பார்வதிக்கு பேரன் பார்த்த பெண்ணை அவன் அம்மாவோடு கூட ஒப்பிடாமல் அவன் பாட்டியோடு ஒப்பிட்டு சொன்னதில் அத்தனை குதூகலம்.
”உங்களுக்கு என்ன பொறாமையோ” என்று தன் கணவரிடம் கேட்ட பார்வதி, “இவர் கிடக்கிறாருப்பா. நீ சொல்லு என்னை மாதிரியே பார்த்தனு சொன்னீயே அந்த பொண்ணு எப்படி இருப்பாப்பா?” என்று கேட்கவும்,
சாப்பாத்தியை பியித்து வாய் வைத்த ஆதியின் கண் முன் அதிகாலையில் அவள் ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு அவனை நோக்கி வேகமாக ஓடி வந்த காட்சியை தன் கண்முன் ஸ்லோ மோஷனில் ஓட விட்டுப் பார்த்தான்.
கண்களை மூடினான், முடிய இமைக்குள் அவள்…
உறைந்த நொடியின் பேரழகு,
காலை நேரத்து நீல வெளிச்சம் அவன் அந்தக் கட்டிடத்தின் வெளியே நின்றுகொண்டு, மூச்சுக் காற்று புகையாக வருவதைக் கவனித்துக் கொண்டிருந்தான்.
திடீரென்று, தூரத்தில் ஒரு உருவம் தெரிந்தது. அது அவள்! அவள் அவனைப் பார்த்ததும் ஓடி வரத் தொடங்கினாள்.
அவன் கண்களுக்கு உலகம் அப்படியே ‘ஸ்லோ மோஷனில்’ மாறத் தொடங்கியது. சுற்றியிருந்த கட்டிடமும், வீசிய பனிக்காற்றும் ஒரு கவிதையாக உருமாறியது.
அவனது ஆழ்மனதில் அந்தத் தருணம் அப்படியே ஒரு படம் போல்,
”உறைந்த மேகங்கள் தரை இறங்கி,
ஊசிப் பனியாய் கொட்டும் காடு!
உயிரின் சூட்டை தேடச் சொல்லும்
உன்னதப் பெண்ணின் தனிமை நாடு!
அவள் ஓடி வரும்போது, அவளது அந்த வெள்ளி நிறக் கூந்தல் காற்றில் அலை அலையாய் எழும்ப, ஒவ்வொரு முறை அவள் பாதம் தரையில் படும்போதும், அங்கிருந்த பனித்துகள்கள் வைரத் துகள்களைப் போல சிதற,
கண்ணாடித் துகளாய் உதிர்ந்த காற்று கூந்தல் இழைக்குள் கூடு கட்டும்!
கண்ணிமை ஓரம் மின்னும் முத்து
காதல் பிரிவின் கதை சொல்லும்!
அவள் நெருங்கி வரும்போது, அவளது விழிகளில் தெரிந்த அந்த பதற்றம் அவனை அப்படியே நிலைகுலையச் செய்தது. அவளைத் தவிர அந்த உலகில் வேறு எதுவும் இயங்குவதாகத் தெரியவில்லை அந்நொடி.
கற்கள் கூட பனியில் தூங்க
கானகம் முழுதும் வெள்ளை ஆடை!
காலம் அங்கே நின்று போனதோ?
கனவில் வாழும் கவிதை மேடை!
கடைசியாக அவள் அவனது கைகளைப் பற்றினாள்.
பனிச்சிலையாய் குளிர்ந்திருந்த அவளது கரங்களில், அவனது காதலின் வெப்பம் தீயாய் படர,
அவனது பார்வையில் அவளது வேகமான மூச்சும், அவனது இதயத் துடிப்பும் அந்த அதிகாலைப் பனியில் ஒன்றாகக் கலந்த கணம்,
தங்கை அக்ஷரா இடைமறித்து, “அண்ணா… அண்ணா” என்று உசுப்ப, சட்டென்று கனவிலிருந்து வெளியே வந்தவன் பட்டென்று விழிகளை திறந்து தான் எங்கே இருக்கிறோம் என்று சுற்றிப் பார்த்தான்.
”என்னன்னா சாப்பிட்டுட்டு இருக்கும் போதே கனவா? ஓ.. எங்க அண்ணனையே இப்படி டோட்டலா மாத்துற அளவுக்கு ஒரு பொண்ணா? அவளை நான் பார்த்தே ஆகணுமே!” என்று கிண்டல் செய்தாள்.
அக்ஷரா பேசியதை கேட்டதும் தான், தான் இவ்வளவு நேரமாக கனவில் இருந்ததை எண்ணியவனுக்கு அதில் தாமரை உடன் இருந்ததை நினைத்து மிகப்பெரிய அதிர்ச்சி தான் ஆதித்யனுக்கு.
மீண்டும் “அண்ணா, திரும்ப கனவா?” என்று கேட்ட
தங்கையிடம், “வேலையைப் பத்தி மட்டும் பேசு அக்ஷு,” என்று அவளை அடக்கினான் ஆதித்யன்.
தாத்தாவும் பாட்டியும் தாய் மற்றும் தந்தை என்று ஆதித்யனை யோசனையாக பார்த்தனர்.
ஆனால், அவர்களை கண்டுக் கொள்ளாத அவனது மனதுக்குள் தாமரையின் அந்த அமைதியான முகம் வந்து போனது.
பணமும், அதிகாரமும், உறவுகளும் சூழ்ந்த ஆதித்யனின் உலகமும்,
இழப்புகளும், உழைப்பும், தனிமையும் நிறைந்த தாமரையின் உலகமும் மெல்ல மெல்ல ஒன்றையொன்று நெருங்கத் தொடங்குமா?
தாமரைக்குத் தெரியாதே, அவளது அமைதியான வாழ்க்கையில் ஆதித்யன் ஒரு புயலாக அல்ல, அவளது விதியையே மாற்றப்போகும் ஒரு சக்தியாக நுழையப்போகிறான் என்று.
