அத்தியாயம் 3

மன்னன் தந்த மாலை

அத்தியாயம் 3

    அமுதாவின் கண்கள் கலங்கியிருந்தது. அதைக் கண்ட விவேகன் சற்று முறைப்புடன்,

“இப்போ எதுக்கு இந்த அழுகை?” என்றான் அழுத்தமாய்.

“இல்ல ராஜா… இப்போ உன்னைப் பாக்க அப்படியே என் வசுவை பாக்குற மாறியே இருக்கு.” என்றாள் கலங்கிய கண்களைத் துடைத்தபடி.

அதைக் கேட்டவனின் கண்கள் கலங்கித்தான் போயின தன் தாயின் நினைவில்.

அதை அமுதா அறியாமல் துடைத்தவன், “கவலைப்படாதீங்க! அம்மா நம்மளோடதான் இருக்காங்க. நம்மளைவிட்டு அவங்களால ரொம்ப நாள் இருக்க முடியாது.” என்றான் உறுதியாய்.

தன் கண்களைத் துடைத்துக் கொண்டவள், “ஆமா ராஜா, அவளால நம்மளைவிட்டு இருக்க முடியாது. நான் பாரு ஒரு கிறுக்கச்சி… ஊருக்குக் கிளம்புற புள்ளையை நிக்க வச்சி பேசிட்டு இருக்கேன். ராஜா, பத்திரமா போயிட்டு வா. புது ஊரு புது இடம் அங்கே இருக்க மக்களும் புதுசு. பாத்து சூதனமா நடந்துக்கோ ராஜா. எதுனாலும் எனக்குக் கூப்பிடு. அதுபோல வாரத்துக்கு ஒருமுறை என்கிட்ட பேசிடு ராஜா. இத்தனை நாளா கைக்குள்ளேயே வச்சிட்டு இப்போ தூரமா அனுப்புறதை நினைச்சா மனசு ரொம்பவே கஷ்டமா இருக்கு. ஆனாலும் உனக்கு இந்தப் படிப்பும் வேணுமே ராஜா! இந்தாப்பா, இதுல கொஞ்சம் காசு இருக்கு. உனக்கு என்ன வேணுமோ வாங்கிக்கோ. இன்னும் வேணும்னாலும் கேளு நான் உனக்கு அனுப்பி வைக்குறேன்.” என்றபடி தன் புடவையிலிருந்த காசை எடுத்து அவன் கைகளில் திணித்தாள்.

அவளை அதிர்ச்சியுடன் பார்த்தான் ஆடவன். அவன் இன்று கல்லூரியில் சேருவதற்கு சென்னைக்குக் கிளம்புகிறான் என்று தெரிந்தும் இதுவரை யாரும் எதுவும் அவனிடம் கேட்கவும் இல்லை. அதைப் பற்றிப் பேசவும் இல்லை.

இவ்வளவு ஏன் அவனைப் படிக்க அனுமதித்த கற்பகநாயகி கூடப் பணத்தைப் பற்றியும் அவனின் மற்ற விடயங்கள் பற்றியும் சிறிதும் கேட்கவில்லை. ஆனால் அமுதாவின் பாசம் அவனின் மனதை சற்று அசைத்தது.

இதுவரை அமுதாவை ‘வாங்க போங்க’ என்றுதான் அழைத்திருக்கிறான். அவளும் பெயர் சொல்லியாவது இல்லை அம்மா என்றாவது அழைக்கும்படி பலமுறை சொல்லிவிட்டாள்தான்.

ஆனால் அவனோ தன் தாயை தவிர யாரையும் அம்மா என்று அழைக்கமாட்டேன் என்று மனதினுள் சபதம் எடுத்தவன் எதுவும் பேசாமல் அமைதியாகச் சென்றுவிடுவான்.

ஆனால் இன்று அவளின் இந்தப் பாசத்தில் ஏனோ ஆடவனின் மனம் தடுமாறியது.

சற்று நேரத்தில் தன்னை மீட்டுக் கொண்டவன், “இல்ல, இந்தக் காசை நீங்க வச்சிக்கோங்க. எனக்கு எல்லா செலவும் காலேஜ்லேயே பண்றாங்க.” என்றான் அவளிடமே திருப்பிக் கொடுத்தபடி.

“இருக்கட்டும் ராஜா. ஏன் இந்த அம்மா கொடுத்தா வாங்கிக்கமாட்டியா? நான் உனக்காக மட்டும் இதைச் செய்யலை ராஜா, உன் அம்மா வசுவுக்கும் சேர்த்துத்தான். என் வசுவோட பையனை என்னோட பையனாதான் நான் பாக்குறேன் ராஜா.” என்றாள் பாசத்துடன் அவனைப் பார்த்தபடி.

அதைக் கேட்டவனின் கண்கள் கலங்கி உள்ளம் தவித்தது. இத்தனைப் பாசம் தன் தாயின் மேல் பெற்றவர்களுக்கே இல்லாத பாசம்! இதை என்னவென்றுதான் சொல்லுவது இந்தப் பாசத்தை? என்றவனின் எண்ண அலைகள் எங்கெங்கோ செல்ல அவனின் உடல் இறுகியது.
 
சற்று நேரத்தில் தன்னை மீட்டவன் அமுதாவை ஒருமுறை பார்த்துவிட்டு அவளின் காலில் சடாரென விழுந்தான் அவளின் ஆசீர்வாதத்திற்காக.

“ராஜா, என்ன பண்ற நீ? எழுந்திருப்பா…” என்று வேகமாய் அவனைத் தூக்கிவிட்டவள்,

“எதுக்கு ராஜா என் கால்ல விழுந்த? என்னோட ஆசீர்வாதம் உனக்கு எப்பவும் இருக்கும்பா.” என்றபடி அவனின் வதனத்தைத் தடவிக் கொண்டாள்.

வளர்த்த பாசமும் ஆருயிர் தோழியின் உதிர சொந்தமாயிற்றே அவளின் ராஜா.

“நான் போயிட்டு வரேன். நீங்கப் பத்திரமா இருங்க. பட்டுவை நல்லா பாத்துக்கோங்க. நான் திரும்பி வருவேன். ஆனா இப்படி இல்லை… இவங்க யாரும் எதிர்பார்க்காத உயரத்துலதான் வருவேன். வாரத்துக்கு ஒரு முறை போன் பண்றேன். யாரும் இல்லாதபோது பட்டுக்கிட்ட கொடுங்க. உங்களை நம்பிதான் அவளை விட்டுட்டுப் போறேன். பத்திரம்!” என்றவன் கீழே குனிந்து அந்த ஒரு பேக்கையும் எடுத்துக் கொண்டு வெளியேறியவன் மீண்டும் அந்த வீட்டைப் பார்க்கப் பார்க்க அவன் கண்களில் அத்தனை வலியும் வேதனையும் வந்தது. ஆனால் அதைத் தாண்டிய மனதில் உருப்போட்டு உரமேறிய சபதமும் நினைவில் தோன்ற ஒரு விதமான உறுதியுடன் அங்கிருந்து சென்றான்.

அந்த வீட்டின் கேட்டைத் தாண்டும் நேரம், “அத்தான்…” என்ற கதறலுடன் வீட்டின் உள்ளே இருந்து ஓடிவந்தாள் அருந்ததி.

அவளின் குரலைக் கேட்டவனின் கால்கள் அப்படியே வேருன்றி நின்றுவிட்டன.

அவனின் மனமோ, ‘வேண்டாம் விவேகா, பின்னாடி திரும்பிப் பார்க்காத. உன்னை இப்படியே இருக்க வைச்சிடுவா உன் பட்டு.’ என்று அவன் யோசிக்கும் போதே ஓடி வந்தவள் அவனின் முன்னே நின்று அவனின் கரத்தைப் பிடித்தாள்.

“பட்டு, உள்ளே போ. உன்னை இங்கே யாராவது பாத்தா உன்னைத்தான் திட்டுவாங்க.” என்றான் அழுத்தமான குரலில்.

“நான் போறேன் அத்தான். ஆனா என்னை நீங்க மறந்துடாதீங்க. இந்தாங்க, இதை என்னோட ஞாபகமா வச்சிக்கோங்க.” என்றபடி அவளுக்கென இருந்த கைச்செயினை அவனின் கரத்தில் கட்டினாள். அது தங்கம் எல்லாம் இல்லை வெள்ளிதான். அவளின் தாயிடம் அடம்பிடித்து வாங்கியது.

அவளின் பூந்தளிர் தேகத்திற்கும் ஆடவனின் தேகத்திற்கும் நிறைய வித்தியாசம் இருந்த போதும் கூட அதில் ஒரு கயிறைக் கட்டி அவனின் கரத்தில் கட்டிவிட்டாள்.

“அத்தான், இதை எப்போதும் கழட்டாதீங்க. இது உங்க கூட இருக்குற வரைக்கும் நான் உங்களோடதான் இருப்பேன். அதுமாதிரி இதுதான் உங்களுக்காக இங்கே ஒருத்தி காத்திருக்கான்னு சொல்லும். பாத்து போயிட்டு வாங்கத்தான். உங்களுக்காக நான் காத்திருப்பேன். நீங்கச் சொன்னமாறி அமுதாம்மா நம்பருக்குக் கூப்பிடுங்க வாரம் ஒரு முறை.” என்றபடி கண்கள் கலங்க அவனை அனுப்பி வைத்தாள்.

அவளிடம் இளகத் தொடங்கிய தன் மனதைத் தட்டி வைத்தவன் வேகமாய் அங்கிருந்து சென்று மறைந்தான்.

அவன் சென்றதும் தன் கன்னத்தைத் துடைத்துக் கொண்டவள் வீட்டின் உள்ளே திரும்பும் நொடி அவளின் தளிர் மேனியில் பளீரென அறை விழுந்தது.

கண்களில் பூச்சி பறக்க மெல்ல நிதானத்திற்கு வந்தவள் எதிரே பார்க்க அங்கே ஆக்ரோஷத்துடன் துருவன் நின்றிருந்தான்.

“என்னடி லவ்வா? கொன்னு புதைச்சிடுவேன். நீ இந்த வீட்டு பொண்ணு, அதை நினைவுல வச்சிட்டு இரு. இன்னொரு முறை நீ அவன்கிட்ட பேசுறதைப் பார்த்தேன். அதே இடத்துல கொன்னு புதைச்சிடுவேன். அவனே ஒரு அனாதை, அவனுக்கு நீ சப்போர்ட்டா? இருந்த தடமே தெரியாம அழிச்சிருவேன் பாத்துக்கோ.” வாலிப திமிரில் தங்கையிடம் அதிகாரம் செய்தான்.

ஆனால் பெண்ணவளோ அவனிடம் எதுவும் பேசாமல் ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.

துருவனுக்கு ஏனோ தங்கையின் மேல் சிறுவயதில் இருந்தே கொஞ்சமும் பாசம் இல்லை. அவள் பெண், வீட்டிற்கு அடங்கவேண்டியவள் என்ற மனநிலையிலேயே இதுவரை இருந்துவிட்டான். அவளும் அவனிடம் பெரிதாக எதுவும் பேசமாட்டாள். அவளைப் பொறுத்தவரை அவன் அவளின் தமையன் மட்டுமே.

இவற்றையெல்லாம் மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த கற்பகநாயகி எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றார் தன் அறைக்கு.

ஏனோ நடப்பதை எல்லாம் கண்டவருக்குத் தவறு செய்துவிட்டோமோ என்று தோன்றாமல் இல்லை. ஆனால் அதைத் தாண்டிய ஊர் மரியாதை, குடும்ப மானம், ரத்தத்திலேயே ஊறிப்போன ஜாதி வெறியென அனைத்தும் அவரைத் தான் செய்வது சரியென்று நிற்க வைத்தது.

ஆனால் அவர் அறியவில்லை பாவம்… அவர் விதைத்த விதை ஒன்று முளைக்க ஆரம்பித்து அது வானம் தொடும் தூரம் வெகுதொலைவில் இல்லை என்பது தான்! அதை அறியும் நேரம் அவரின் கையை விட்டு அனைத்தும் போயிருக்கும்.

பொறுத்திருந்துதான் பார்ப்போமே அவரின் பாவத்திற்கான சம்பளத்தை!

வந்தாரை வாழ வைக்கும் சென்னை மாநகரம் விவேகனையும் அரவணைத்துக் கொண்டது.

புகழ்பெற்ற அந்தக் கல்லூரியின் உள்ளே தன் காலடித் தடத்தைப் பதித்தான் மனதில் உறுதியுடன்.

யாரின் உதவியுமின்றி இத்தனைப் பெரிய கல்லூரியில் அதுவும் தமிழகத்தின் பெயர் சொல்லும் கல்லூரியில் ஒன்றான இந்தக் கல்லூரியில் அவனுக்கு இடம் கிடைத்தது அத்தனை எளிதான காரியம் அல்ல.

அதற்காக அவன் தன் தூக்கத்தை துறந்து அந்த வீட்டினரின் கேலிப்பேச்சுக்களைத் தாண்டி மனதில் படித்து உயர்பதவிக்கு செல்ல வேண்டும் என்ற உத்வேகத்துடன் படித்தற்கான அரிய சன்மானம் இது.

கல்லூரி முதல்வரின் அறைக்குள் சென்றவன் அடுத்த அரைமணி நேரத்தில் அங்கே சைபர் என்ஜீனியரிங் படிப்பதற்கான அனுமதிக் கடிதத்துடன் வெளியே வந்தான்.

படிப்பதற்கு மட்டும் அல்ல அவன் அங்கே தங்கி உண்பதற்குமான கடிதம் அது. அந்தக் கடித்த்தில் இருக்கும் ஒரு கையெழுத்து இவனின் நான்கு வருட வாழ்வாதாரத்திற்கான ஒளிவிளக்காகும்.

தன்னுடைய பேக்கை எடுத்தவன் அந்தக் கல்லூரி வளாகத்தினுள் இருந்த விடுதிக்குச் சென்றான்.

அங்கே இருந்தவர்களிடம் அந்தக் கடித்தத்தின் ஒரு பிரதியைக் கொடுக்க அடுத்த அரைமணி நேரத்தில் அவனுக்கான அறை கொடுக்கப்பட்டது.

விடுதியின் பாதுகாவலரிடம் ஒரு நன்றியைச் சொல்லிவிட்டு தனக்குக் கொடுக்கப்பட்ட அறைக்குச் சென்றவன் அங்கிருந்த கட்டிலில் சற்று அமர்ந்து மூச்செடுத்துக் கொண்டவன் தன் பேக்கை திறந்து அதில் இருந்த அவனின் தாயின் புகைப்படத்தை எடுத்தான்.

அதில் அழகாய் புன்னகை பூத்த முகத்துடன் அவனை அணைத்தபடி நின்றிருந்தாள் வசுந்தரா.

‘அம்மா, உங்க ஆசைப்படி நான் படிக்க வந்துட்டேன்மா. இன்னும் கொஞ்சம் வருஷம்தான் பொறுத்துக்கோங்க. நிச்சயம் உங்களுக்கு நான் நீதி வாங்கித் தருவேன். இது உங்க மேல சத்தியம்!’ என்று தனது தாயிடம் மனதினுள் சங்கல்பம் செய்து கொண்டவன் தனக்கு எதிரே இருந்த டேபிளில் தன் தாயின் புகைப்படத்தை வைத்தான்.

அதேநேரம் அவனின் பின்னே, “ஹாய் ப்ரோ, மே ஐ கம் இன்?” என்ற குரல் கேட்க இவனோ திரும்பாமல் தலையை மட்டும் ஆட்டினான்.

அதே நேரம் கண்களில் கண்ணாடி அணிந்த அந்த உருவம் மெல்ல உள்ளே வந்து,

“ஹாய் ப்ரோ, ஐ ஆம் பிரவின்.” என்றபடி தன் கரத்தை அவனை நோக்கி நீட்டினான்.

அவனின் கரத்தையும் அவனையும் பார்த்தவன் அங்கிருந்த குளியல் அறைக்குள் சென்றுவிட்டான்.

பிரவினுக்கோ அது மிகவும் ஏமாற்றமாய் போனது. அவனும் தொலைதூரத்திலிருந்து இங்கே படிக்க வந்துள்ள மாணவன்தான். அவனுக்கும் இதே அறைதான் ஒதுக்கப்பட்டிருக்க அறையைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு தோழமைக்காகத்தான் வந்து பேசினான்.

ஆனால் அவனுக்கு விவேகனை பற்றிப் பெரிதாய் தெரியாதே! இனி வரும் காலங்கள் அவனைப் பற்றி அறிந்து கொள்ளலாம். பார்ப்போமா பொறுத்திருந்துதான்.

ஆனால் மறுநாள் விவேகனிடம் அடிவாங்கியபின்பு அவன் இருக்கும் திசை கூடத் திரும்பாமல்தான் சென்றான் பிரவின். அப்படி எதற்காக விவேகனிடம் அடிவாங்கியிருப்பானோ பிரவின்?

அடுத்த பாகத்தில் பாக்கலாம் செல்லம்ஸ்…

மாலை வரும்…✍️

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page