அத்தியாயம்- 3

அவள் முதல் அவள் வரை.
***********************************

அத்தியாயம் – 3.
“””””””””””””””””””””””

    அது ராகவனின் மனைவி, ஸ்வேதா.

    சக்ரவர்த்தி, ஸ்வேதாவைப் பார்த்து மகிழ்ந்தாலும் அவளுக்குப் பக்கத்திலும், பின்புறமும்  பார்வையால் தேடினார். சக்ரவர்த்தியின் அருகில் வந்த ஸ்வேதா அவரிடம் பேசினாள்.

    “யாரத் தேடறீங்க சார்?”

     “வந்து, நீ  நீ மட்டுமா வந்த?” தடுமாறினார், சக்ரவர்த்தி.

    “நான் மட்டும் தான். உங்களப் பாக்கத் தான் வந்தேன்.”

    “எதுக்கு?” அவரது கேள்வியில் புரியாமை பூசப்பட்டிருந்தது.

    “சாரி சார்” அவளது பதிலில் விளக்கம் பூசப்பட்டிருந்தது.

    “நீ எதுக்குமா சாரி சொல்லணும். நான் தாம்மா சொல்லணும். தப்பு எம் மேல தான?”

    “இல்ல சார். வீடு தேடி வந்த உங்கள அவரு இந்த மாதிரி நடத்துனது பெரிய தப்பு. மன்னிச்சிருங்க.”

    “இருக்கட்டும்மா. நான் இங்க இருக்கிறது உனக்கு எப்படித் தெரியும்?”

    “அவருகிட்ட போன்ல பேசினேன். சொன்னாரு. வந்துட்டேன். நான் இங்க வந்தது கூட அவருக்குத் தெரியும்.”    

    “ரொம்ப சந்தோஷம். உம் பேரு என்னம்மா?”

    “ஸ்வேதா.”

    “அழகான பேரு. ஸ்வேதா, நான் உங்கிட்ட ஒண்ணு கேக்கலாமா?”

    “அத்தையப் பத்தி தான சார்?”

    ஸ்வேதா மிகச் சரியாகக் கேட்டாள். அவள் அப்படிக் கேட்டதும் சக்ரவர்த்திக்கு வார்த்தைகள் வரவில்லை. அவளே தொடர்ந்தாள்.

    “உங்க கிட்டக் கொஞ்சம் பேசணும். இங்க வேணாம்னு நெனைக்கிறேன். பக்கத்துல வேற எங்கயாச்சும் போலாம். ப்ளீஸ், கொஞ்சம் வர முடியுமா?”

    “என்னம்மா இப்படி கேட்டுட்ட? என்னப் பாக்க நீ இவ்ளோ தூரம் வந்திருக்கப்போ உன் கூட பேச நான் வரமாட்டேனா? வர்றம்மா.”

    ஸ்வேதா சிரித்துக்கொண்டே நடக்கத் தொடங்கினாள். அவளுடன் அவரும் சென்றார்.

    சக்ரவர்த்தியின் மனதிற்குள் சந்திராவைச் சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக நினைத்த போதும் அது குறித்து அவருக்குச் சந்தேகமாகவே இருந்தது.
 
    இருவரும் பேருந்து நிலையத்திற்கு வெளியே வந்தனர். இடது புறமாக சற்றுத் தள்ளி நிறுத்தியிருந்த தனது வெள்ளை நிற ஸ்கூட்டரை நகர்த்தி ஆன் செய்து பின்னால் சக்ரவர்த்தியை அமரச் சொன்னாள்.

    அவர் அமரவும், ஸ்கூட்டர் புறப்பட்டு ஐந்து நிமிடத்தில் வலது புறம் திரும்பிச் சற்று உள்ளே அமைந்திருந்த அழகான “யுவர் மிஸ்டு காஃபி” (Your Missed Coffee) என்ற பெயர் தாங்கிய, அந்தக் காஃபி ஷாப்பில் நின்றது.

    கேரளக் கட்டிடக் கலையிலான ஓட்டு வீடு அமைப்பில் மிகவும் அழகான காஃபி ஷாப்.

    தொண்ணூறுகளில் கட்டப்பட்ட அழகான கட்டிடம் அது. வெள்ளை நிற மார்பிள் தரை சுத்தமாகவும் பளீரென்றும் இருந்தது.

    சீலிங்கின் முழுப் பரப்பையும் ஒரே ஒரு காஃபிக் கொட்டையின் படம் ஆக்ரமித்து அழகூட்டியது.

    குளிரூட்டப் படாமலேயே குளிர்ச்சியாக இருந்தது.

    உள் புறச் சுவரில் வண்ணங்களைக் கொண்டு ஒரு அழகான படம் வரையப்பட்டிருந்தது.

    ஒரு பங்களாவின் உள் காம்பெளண்ட் பகுதியில் பச்சைப் புல் வெளி. இரண்டே இரண்டு பூக்கள் பூத்திருந்த செடி ஒன்று. அதன் அருகில் வெகு சிலதாய் குரோட்டன்ஸ்.

    புல் வெளியின் நடுவில் வெள்ளை நிறத்தில் ஒரு டேபிள். எதிரெதிரே அதே வெள்ளை நிறத்தில் இரண்டு சேர்கள். ஒவ்வொரு சேரின் முன்னாலும் டேபிளின் மேல் தலா ஒரு கண்ணாடிக் கோப்பையில் ஆவி பறக்கும் காஃபி.

    அந்த ஓவியத்தில் வேறெதுவும் மிகையாக இல்லை. மிகவும் அழகாக இருந்தது.

    அது, கம்ப்யூட்டர் தராத ஓவியம். ஒரு ஓவியக் கலைஞன் தூரிகை கொண்டு வரைந்த ஓவியம்.

    அந்த ஓவியத்தில் அழகு மட்டுமல்ல. உயிரும் இருந்தது.

    காஃபி ஷாப்பின் நுழைவாயிலில் மூன்று படிகள் ஏறியதும் வலமும் இடமும் நீண்ட முன்புற வராண்டா போன்ற அமைப்பிலான இடத்தில் தலா நான்கு டேபிள்களும் டேபிளுக்கு இரண்டு சேர்கள் என்ற வகையில் எதிரெதிரில் போடப்பட்டிருந்தன.

    அவைகள் மரத்தாலான கேரளத்தின் கலை நயத்துடன் அழகாக இருந்தன. 
    
    வராண்டாக்களை ஒட்டி அதன் நீளம் முழுமைக்கும் குறிப்பிட்ட இடைவெளியில் அழகழகான குரோட்டன்ஸ் செடிகள் செழிப்புடன் நின்று கொண்டிருந்தன.

    இரண்டு வண்ணத்துப் பூச்சிகள் செடிகளுக்கு மேல் பறந்து வந்து கட்டிடத்தின் மூலையில் திரும்பி மறைந்தன.

    அவற்றில் ஒன்று பெண்ணென்றும் மற்றொன்று ஆணென்றும் அவற்றின் நெருக்கமே சான்றிதழ் தந்தது.

    மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒலி பெருக்கிகளில் இருந்து சேக்ஸாஃபோன் இன்ஸ்ட்ரூமெண்டல் ம்யூசிக் மென்மையாக வழிந்து கொண்டிருந்தது.

    வலதுபுற வராண்டாவின் கடைசி டேபிளுக்குச் சென்று இருவரும் சேர்களில் எதிரெதிரே அமர்ந்தனர்.

    அவர்கள் அமர்ந்த டேபிளுக்குக் காஃபி ஷாப்பின் பெண் ஊழியர் ஒருத்தி வந்தாள்.

    காஃபி ஷாப் ஊழியர் என்பதற்கான அடையாளமாக அடர் காஃபி நிறத்தில் பேண்ட்டும் வெளிர் காஃபி நிறத்தில் சட்டையும் சீருடையாக அணிந்து அழகாக இருந்தாள்.

    “என்ன வேணும் மேம்?” என்று கேட்டாள் அந்த ரோஜா நிற ரோஜா.

    “உங்களோட ஸ்பெஷல் காஃபி ரெண்டு” என்றாள் ஸ்வேதா.

    “வேற எதாவது மேம்?”

    “உங்க காஃபிய விடவா?”

    கேள்விக்கான பதிலில் பாராட்டையும் சிரிப்பையும் கலந்து உதிர்த்தாள் ஸ்வேதா.

    “தேங்க் யூ மேம். ஃபியூ மினிட்ஸ்.”

    சொற்களைத் தெளித்துவிட்டுப் போனாள், சீருடைக்குள் இருந்த அந்தச் சில்லென்ற ஐஸ் க்ரீம் சிலை.

    சில நொடிகள் அமைதிக்குப் பிறகு, சக்ரவர்த்தியைப் பார்த்துப் பேசத் தொடங்கினாள் ஸ்வேதா.

    “சார், என்னவோ தெரியல. உங்ககிட்ட என்னை ஏதோ ஒண்ணு இழுத்துட்டு வந்த மாதிரி எனக்கு ஃபீல் ஆகுது.”

    “சந்தோஷம்மா.”

    “உங்கள இப்படித் திருப்பி அனுப்ப என் மனசு இடம் தரல. அதான், அவருகிட்டப் பேசிட்டு உங்களப் பாக்க வந்தேன்.”

    “நல்லதும்மா. நீ இப்படிப் பேசறது எனக்கு சந்தோஷமா இருக்கு. தன்மையான பொண்ணா இருக்க.”

    “வரும் போது உங்க கிட்ட பேசணும்ங்கற நெனப்போட மட்டும் தான் வந்தேன். ஆனா, வந்ததுக்கு அப்புறம் ஒரு படி மேல போயி, மனசு விட்டு பேசணும்னு தோணுது. ஏன்னு தெரியல.”

    அந்த வார்த்தைகளைக் கேட்ட சக்ரவர்த்தி மகிழ்ந்தவராக முகத்தில் ஒரு புன்னைகையை மிதக்கவிட்டார். ஸ்வேதா பேச்சைத் தொடங்கினான்.

    “எங்க மேரேஜ் லவ் மேரேஜ் சார்.”

    “ஓ.”

    “நான் பிளஸ் டூ முடிச்சதுக்கு அப்புறமா காலேஜ்ல சேர்ந்தேன். காலேஜ் திறக்கிறதுக்கு முதல் நாள் எங்க அக்காவுக்கு பர்த்டே செலபரேஷனுக்காகப் புடவை எடுக்குறதுக்கு நானும் எங்க அக்காவும் ஒரு ஜவுளி கடைக்குப் போயிருந்தோம். 
    நாங்க புடவையை செலக்ட் பண்ணிட்டு இருக்கும்போது ஒருத்தர் வந்தார். நாங்க எடுக்குறதையே அவரும் எடுத்து எடுத்துப் பார்த்தார்.
    அதுமட்டுமில்லாம இடையில புகுந்து சேல்ஸ் மேன் கிட்ட அதை எடுங்க இதை எடுங்கன்னு சொல்லி பொம்பளைங்கள விட மோசமா ரொம்ப டைம் எடுத்துக்கிட்டார்.
     அதுக்கப்புறம் ஒரு வழியா ஒரு புடவையை அவரு செலக்ட் பண்ணிட்டுப் போனாரு. நாங்க கடுப்புல அவரையே பாத்துட்டு இருந்தோம். 
    போனவர் சேர்ல உக்காந்து இருந்த ஒரு அம்மாகிட்டப் போயிப் புடவையைக் கொடுத்ததும் அந்த அம்மா அதை வாங்கி ரொம்ப சந்தோஷப்பட்டு அவங்களுக்குப் புடிச்சிருக்குறதா சொல்லி அவரோட தோளுல கையை போட்டுட்டே போய் பில் செட்டில் பண்ணிட்டுப் போயிட்டாங்க.
    மறுநாள் நான் காலேஜுக்கு போனேன். அங்க எனக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்துச்சு. 
    புடவைக் கடையில எங்களக் கடுப்பேத்துனவர் அந்த காலேஜ்ல எனக்கு சீனியர். ஒரே டிபார்ட்மெண்ட். 
    அவர் கடையில என்னைச் சரியா பார்க்கல. அதனால என்னை அவருக்குச் சரியா அடையாளம் தெரியல. ஆனா, நான் அவரை கரெக்டாக் கண்டுபிடிச்சிட்டேன். 
    அதுக்கப்புறம் சின்ன சின்னதா சிரிப்புகள். சில ஹாய்ஸ். அப்படியே போயிட்டு இருந்துச்சு. 
    ஒரு சந்தர்ப்பத்தில் பேச்சு பழக்கம்னு வரும்போது நான் புடவைக் கடை பத்திச் சொன்னேன். விழுந்து விழுந்து சிரிச்சாரு. சாரி, எனக்கு நினைவு இல்ல நீ தான்னு எனக்குத் தெரியல. எங்க அம்மாவுக்குப் புடவை எடுக்கத்தான் வந்தோம்னு சொன்னாரு.  
    ஏன் உங்க அம்மா செலக்ட் பண்ணாம நீங்க செலக்ட் பண்ணணீங்கன்னு கேட்டேன். 
    என்னமோ அன்னைக்கு எங்க அம்மாவுக்கு நான் தான் செலக்ட் பண்ணனும்னு தோணுச்சு. 
    நான் எடுத்த புடவை அதுவரைக்கும் எடுக்காத கலரு. அது அம்மாவுக்கு ரொம்பப் புடிச்சு இருந்துச்சு.    
    அதுக்கு முன்னாடி எத்தனையோ புடவைகள் எடுத்து இருந்தாலும் அன்னைக்கு நான் எடுத்தது அவங்களுக்கு ரொம்ப புடிச்சி இருந்துச்சுன்னு சொன்னாரு.”

    “அது, லைட் க்ரீன் கலரா ஸ்வேதா?”

    ஸ்வேதா, சில நொடிகள் சக்கரவர்த்தியையே உற்றுப் பார்த்த பிறகு சொன்னாள்.

    “இல்ல சார். அது மாம்பழக் கலர்.”

    ஸ்வேதா சொன்னது சக்ரவர்த்திக்குச் சற்றே ஏமாற்றத்தைத் தந்தது.

    “எதனால சார் லைட் க்ரீன் கலரான்னு  கேட்டீங்க?”

    “அது வந்து சும்மா தோணுச்சு.”

    அதைக் கேட்ட ஸ்வேதா அர்த்தத்தோடு அவரை ஒரு பார்வை பார்த்தாள்.

    “சரி ஸ்வேதா நீ சொல்ல வந்ததை சொல்லு.”

    தூண்டில் காரனுக்கு மிதப்பில் கண் இருப்பதைப் போலச் சக்கரவர்த்திக்குச் சந்திராவைப் பற்றி ஏதாவது ஒன்றை ஸ்வேதா தன்னிடம் சொல்லிவிட மாட்டாளா என்ற எண்ணமும் தவிப்பும் இருந்தது.

    “அவர் எந்த விஷயத்தைச் சொன்னாலும் தெளிவா, ஸ்ட்ராங்கா, சுருக்கமா சொல்லிடுவாரு. அந்தப் பழக்கம் எனக்கு ரொம்ப பிடிச்சது.”

    அதைக் கேட்டதும் சக்கரவர்த்திக்கு ராகவன் ஹோட்டலில் நடந்து கொண்ட விதமும் பேசிய விதமும் கண்களுக்கு முன்னால் நிழலாடிவிட்டுப் போனது.

    “உம் புருஷன் கோபத்தில இருந்தா ஹோட்டலுக்கு போய் நல்லாச் சாப்பிடுவாரா?”  

    “அது எப்படி உங்களுக்கு தெரியும்?”

    “சொன்னாரு. அதே மாதிரி சாப்டாரு. காலையில நடந்துச்சு.”

     “உங்க மனசு புண்படுற மாதிரி ஏதாவது பேசிட்டாரா?”

     “இல்ல. அப்படி எல்லாம் ஒண்ணும் பேசல. அவரு சொல்ல நெனச்சத நாகரீகமாத் தான் என்கிட்ட சொன்னாரு. அந்த விதத்தில் ராகவன் ஜென்டில்மேன்.
    அது மட்டும் இல்ல. இவ்வளவு கோபத்துக்கு அப்புறமும் என்னை பார்க்கணும்னு நீ சொன்னதும் உனக்கு அனுமதி குடுத்து அனுப்பி இருக்காருன்னா இதுக்காக நான் ராகவனுக்கு கண்டிப்பா நன்றி சொல்லியே ஆகணும்.”

    “அவரு அவங்க அம்மாவப் போல சார். அவங்க அம்மாகிட்ட இருக்கிற பெரும்பாலான நல்ல குணங்கள் அவர்கிட்ட இருக்கு. நான் நிறையத் தடவை நோட் பண்ணி இருக்கேன்.”

    ஸ்வேதா சொன்னதைக் கேட்டதும், சக்கரவர்த்தியின் முகத்தில் ஒரு சிறிய சந்தோஷம் மின்னலடித்தது. தன் அத்தையைப் பற்றிப் பேசும்போதெல்லாம் சக்கரவர்த்தி முகத்தில் ஒரு தனி சந்தோஷம் வருவதை ஸ்வேதா நன்றாகவே கவனித்தாள்.

    சக்கரவர்த்தியிடம் எந்த விஷயத்தையும் கேட்காமல், தன்னுடைய காதலைப் பற்றி மட்டுமே அவரிடம் ஸ்வேதா சொல்லிக்கொண்டு இருப்பதற்கும் ஒரு காரணம் இருந்தது. அந்தக் காரணத்தை அவள் மட்டுமே அறிவாள்.

    அவள் சொன்னதன் தொடர்ச்சியாக சக்கரவர்த்தியும் ஒன்றைச் சொன்னார்.

    “முகச் சாயல் கூட அவங்க அம்மாவப் போலவே கொஞ்சம் ராகவன் கிட்ட இருக்கிறத நான் கவனிச்சேன்.”

    அவர் அப்படிச் சொன்னதும், அவரைப் பார்த்துப் பட்டென்று தன்னையும் மீறிச் சற்றும் யோசிக்காமல் அந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டாள் ஸ்வேதா.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page