அத்தியாயம் 3

அத்தியாயம் 3

இந்த ஒரு ஆண்டு காலத்தில் பானுவின் வாழ்க்கையில் பெரியம்மா என்கிற பிரமோஷனோடு, கூடுதல் இரண்டாயிரம் சம்பளத்தை அவளுக்கு தந்து அவளை இழுத்து போய்க் கொண்டிருந்தது‌ வாழ்க்கை.

அத்தோடு போனஸாக வர வர அதிக கால் வலியில் துவண்டு தான் போய்க் கொண்டிருந்தாள்.

ஒரே வண்ண கிரீப் சேலையில், நேர்த்தியாக கூந்தலை கொண்டையிட்டு, நெஞ்சில் பெயர் பேட்ச், கையில் வார் வாட்ச் என அணிந்து செல்லும் இந்த நகைக்கடை பணியை ஏதோ ஆஃபிசர் பணி போல ஆச்சர்யித்து செய்ய துவங்கிய பானுமதிக்கு வர வர உடல் ஒத்துழைக்காது மக்கர் செய்தது.

ஆனால் குடும்ப கட்டமைப்பு அவளை மீண்டும் மீண்டும் ஓட வைத்துக் கொண்டிருந்தது.

அன்றும் அப்படித்தான், “பானு இந்த கஸ்டமருக்கு மூணுல இருந்து ஐந்து பவுன்ல முகப்பு செயின் வேணுமாம். நான் ஏற்கனவே கம்மல் காட்டி செலக்ட் செய்துட்டாங்க. நீ செயின் மட்டும் காட்டிடு. ஓல்டு வேற போடணும் சொல்றாங்க. அது என்னனு பாரு. நான் இன்னோரு கஸ்டமர் டீல் பண்றேன்!” அவதியாக இவளிடம் சொல்லி விட்டு நகர்ந்தாள் வாணி.

இத்தனை நேரம் கால் குடைந்த குடைச்சலில் தனக்கு முன்னிருந்த கண்ணாடி ஷோகேஸ் மேசையை பிடித்துக் கொண்டு வளைந்து நெளிந்து நின்று கொண்டிருந்தவள், உடனே நிமிர்ந்து நேராக நின்றாள்.

“வாங்க மேடம். என்ன பார்க்குறீங்க?” முகத்தில் உடனே இன்ஸ்டன்ட் புன்னகை ஒன்றை கொண்டு வந்து கேட்டு நின்றிருந்தாள்.

அவர்களுக்கு இன்று என்ன தான் மோசமான மனநிலையோ.

“ஏன்மா அதான் அந்த பொண்ணு சொல்லிட்டு போச்சே. முகப்பு செயின் காட்டணும். மூணுல இருந்து ஐந்து பவுன்லனு. அப்புறம் என்ன நீ வேற புதுசா கேட்கிற!” கடுகடுவென எரிந்து விழுந்தார் அந்த வயதான பெண்மணி.

“சரி தான்ங்க மேடம். ஆனால் நான் என்ன கேட்க வந்தேன்னா மூணுல இருந்து ஐந்து பவுன்லனு நீங்க குறிப்பிட்டு கேட்ட போல கல்லு வச்சது, வைக்காதது, இந்த டிசைன், அந்த டிசைன்னு வேற எதாவது உங்களுக்கு பிடித்தமான மாடல் இருக்கலாம் இல்லையா? சரி உட்காருங்க நான் எல்லா மாடலுமே எடுத்து காட்றேன். உங்களுக்கு பிடிச்சதா பாருங்க மேடம்…” பணிவாக தான் சொல்லி விட்டு நகைகளை எடுத்து காட்ட துவங்கினாள்.

புது புது மாடலாக, தற்சமயம் டிரென்டில் உள்ள டிசைன்களாக என அவள் எடுத்து காட்ட காட்ட அவரிடம் இருந்து பல கேள்விகள் வந்து குவிந்தது. அதற்கு எல்லாம் பதில் கூற வேண்டியது சேல்ஸ் வுமனாக அவள் கடமை தானே. இந்த ஒரு வருடத்தில் அதற்கும் நன்கு பழகி விட்டிருந்தாள்.

“கல்லுக்கு என்ன ரேட் எடுக்குறீங்க இங்க?”

“அவ்வளவா? அது சரி செய்கூலி சேதாரம் எத்தனை பர்சென்ட் இதுக்கு எல்லாம்?”

“ஹா… அவ்வளவா? இதுக்கு தான் லேடிஸ் மட்டும் நகைக்கடைக்கு வரவே கூடாது! எப்படி ஏமாத்துறீங்க…”

இப்படி அவர் புலம்ப, திட்ட என பேசிக் கொண்டே போக பானு இன்முகமாக, “அப்படி எல்லாம் இல்லை மேடம். மத்த கடை நிலவரம் தான்‌. அதிலும் இங்க பார்த்து தான் பண்ணி தர்றோம். நீங்க செலக்ட் செய்யவும் மேனேஜர் கிட்ட கேட்டு சொல்றேன்!” என்று சொல்லி நின்று பானு காட்டிய எதிலும் அவருக்கு பெரிய ஈடுபாடில்லை.

அவர் பிடித்தமாய் எடுத்த சிலதை வெல்வெட் டிரேயில் வைத்தும் அவள் காட்டிக் கொண்டிருக்க மீண்டும்,

“இது எத்தனை பவுன்?”

“நான் இதையா எடுத்து வைக்க சொன்னேன்?”

“என்ன மாடல் காட்ற‌ நீ?”

“சர்வீஸ் கொஞ்சம் கூட சரியில்லையே!”

என அவர் சத்தமாய் திட்ட துவங்கிவிட‌.

“நீங்க இதை தான் மேடம் செலக்ட் பண்ணீங்க…” அமைதியாக கூறிப் பார்த்தாள் அவளும்.

“அம்மா நீங்க இதை தான் செலக்ட் பண்ணீங்க…” என்றாள் அவரோடு வந்திருந்த பெண்ணும். ஆனால் அவர் ஒப்புக் கொண்டாள் தானே!

“நீ சும்மா இரு. எனக்கு தெரியாதா நான் எதை எடுத்து வைக்க சொன்னேன்னு! மேனேஜர் எங்க?” என அந்த பெண்மணி திரும்ப.

அந்தோ பரிதாபப் தான் இனி பானுவுக்கு என மேனேஜரும் அவர்கள் இருந்த பிரிவுக்கு வந்து விட்டார்.

வந்தவரிடம் அந்த பெண்மணி, பானு அலட்சியமாய் நகைகளை காட்டுவதாக கூறி விட்டு மேனேஜர் எத்தனை கூறியும் நகையை வாங்காமலே புறப்பட்டு போய்விட்டார்.

அவரோடு வந்திருந்த அவரின் மருமகள் பானுவை பாவமாக பார்த்து விட்டு போயிருந்தாள்.

அவர்கள் சென்றது தான் தாமதமென மேனேஜர் இவளை விலாசி எடுத்து விட்டார்.

“என்ன இது பானுமதி? நீங்க ஏதோ சபா சார் துணிக்கடைல பத்து வருஷமா இருக்கீங்க. நம்பிக்கையான ஆளுனு தான் உங்களை இங்க ஜூவல்லரி ஷாப்புக்கு வேலைக்கு எடுத்தோம். 

ஆனால் வந்ததில் இருந்து உங்க பர்ஃபார்மென்ஸ் ரொம்ப லோவ். உங்களால எவ்வளவு சேல்ஸ் லாஸ் ஆகுதுனு தெரியுதா?

மாசம் பிறந்தா சம்பளம் மட்டும் வாங்க தெரியுதுல்ல. அதுக்கு ஒழுங்கா வேலை பார்க்க தெரியாதா? இப்படியே போனால் திரும்ப ஜவுளிக்கடைக்கே பேக் பண்ண வேண்டி வரும்!”

சூடான எண்ணெயில் போட்ட கடுகு போல மேனேஜர் பொறித்து தள்ளிவிட்டு போக. சோர்ந்து போய் நின்று விட்டாள் பானு.

“என்னடி அந்தம்மா உனக்குனே இன்னிக்கு வந்து இருக்கும் போல!” என்றாள் சவிதா.

“ஆனாலும் கொஞ்சம் பார்த்து டீல் பண்ணி இருக்கலாம் பானு நீ. கடைசில நான் ஒரு மணி நேரம் போராடி காட்டின கம்மலுக்கான டைமும் வேஸ்ட்!” என குறைபட்டுக் கொண்டு அதை எடுத்து போய் அதன் இடத்திலேயே மாட்டி வைத்தாள் வாணி.

இவளுக்கு யார் பேச்சும் ஆறுதலையும் தரவில்லை. வருத்தத்தையும் தரவில்லை. அந்தளவிற்கு கால் வலி பின்னி எடுத்துக் கொண்டிருந்தது.

“என்ன பானு கால் ரொம்ப வலிக்குதா? நான் சொன்ன செருப்பு மாத்தி பார்த்தியா? டாக்டரை வேணா போய் பாருடி. இப்படியே வலில நின்னா வேலையிலும் கவனம் குறைஞ்சு போகும்!” சொல்லி விட்டு வந்த கஸ்டமரை நோக்கி சென்று விட்டாள் சவிதா.

ஆனால் அன்று மதியத்திற்கு மேல் வலி என்னவோ கூடிக் கொண்டே போக. சேல்ஸ் பார்த்து நின்றிருந்த இடத்திலேயே காலை பிடித்துக் கொண்டு தரையில் விழுந்து விட்டாள் பானு.

“என்னாச்சு…?” வாடிக்கையாளர்கள் தொடங்கி உடன் பணிபுரிவோர் வரை பதற்றம் கொண்டிருக்க.

“கால்… கால்… சுத்தமா நிற்க முடியலை!” என அழவே துவங்கி விட்டிருந்தாள் பானு.

“கால் வலிக்கா இத்தனை ஆர்பாட்டம்? அதுவும் கஸ்டமர் முன்ன!” சலித்துக் கொண்ட மேனேஜர் அவளை உடனே அப்புறப்படுத்த கூறினார் ஹவுஸ் கீப்பிங் பணியில் இருப்போரை.

ஆனால் நிஜத்தில் இரண்டு கால்களிலும் கிலோ வெயிட்டை தூக்கி வைத்த வலியை உணர்ந்து உணர்ந்து, அடி எடுத்து வைக்கவே சிரமத்தில் நின்று, கெண்டைக்கால் நரம்புகள் துடி துடிக்க பிடித்து இழுக்கும் வலியை உணர்பவளை தாண்டி யாராலும் அவள் உணர முடியாது என்பதே உண்மை. 

அவளை இரு பெண்கள் சேர்ந்து பணியாளர்கள் உடைமைகளை வைக்கும் அறைக்கு அழைத்து செல்ல முயல. கால் பாதங்கள் இரண்டும் உணர்வுகளை இழந்த போல எழ முடியாது துடித்தாள் பானு. அவளை தங்கள் தோள்களில் தாங்கி தான் சென்றனர் இறுதியில்.

நேரம் தான் கடந்ததே தவிர பானுவின் நிலையில் துளி முன்னேற்றம் இல்லை. 

“யோவ் சூப்பர்வைசர் அந்த பொண்ணு வீட்டுக்கு போன் போட்டு வந்து கூட்டிட்டு போக சொல்லு!” எரிச்சலோடு சொல்லி சென்று விட்டார் மேனேஜர். 

பணிக்கு இடையே, “இப்போ பரவாயில்லையா? ரொம்ப வலிக்குதா?” என சவிதாவும், வாணியும் வந்து விசாரித்து சென்றனர்.

மாலை நேரம் அந்த நகைக்கடை வாசலில் தன் மூத்த மருமகன் டூவீலரில் வந்திறங்கினார் விசாலாட்சி.

மகளுக்கு என்னவோ ஏதோ என பதறித் கொண்டு வந்தவரை கடைக்கு பின் வாசல் பக்கம் தான் அழைத்து போனார் காவலாளி.

“கஸ்டமர் வந்து போற இடம். நீங்க இப்படி நில்லுங்கமா. நான் போய் பானுவை அழைச்சுட்டு வர சொல்றேன்…” இரண்டு காவலாளிகளில் ஒருவர் சொல்லிவிட்டு போக.

பத்து நிமிடத்தில் பானு இருவர் தோள்களில் கைதாங்கலாக தொங்கிக் கொண்டு வரும் துவண்ட நிலையில் அங்கு வந்து சேர, “ஐயோ பானு என்னடி ஆச்சு உனக்கு?” என பதறி கத்தியே விட்டார் விசாலம்‌.

அவளை அழைத்து வந்த பெண்களோ, “அம்மா கொஞ்சம் இவளை புடிமா முதல்ல!” என்றனர்.

அவரால் தனியாக அவளை தாங்க முடியாது போக. எப்படியோ மகளை தன்மீது சாய்த்து பிடித்துக் கொள்ள முயன்றார். ஆனால் அவளோ தரையில் சரிய.

“ஐயோ மாப்பிள்ளை நம்ம பானுவை பாருங்களேன். காலைல கூட நல்லா தானே வேலைக்கு வந்தா. இப்போ இப்படி தர்றாங்களே அவளை. பானு என்னடி ஆச்சு?” என மகளின் கன்னம் தட்டி கேள.

மதியம் முதல் தனக்கு என்ன ஆனது என உணரக்கூட முடியாத பேரதிர்ச்சியில் இருந்தவள், அவர் தன் தோள்களை பற்றி உலுக்கிய உலுக்கலில் சற்றே சுயம் தெளிந்தாள்.

“ம்மா… என்னால நடக்க முடியலைமா. முட்டியெல்லாம் இழுத்து இழுத்து வலிக்குது. பாதத்தை வலியில் உணரவே முடியலைமா…” அன்னையை கட்டிக் கொண்டு தேம்பி தேம்பி அழும் பானுவை காண்போருக்கே அவள் மீது இறக்கம் வரும்.

ஆனால் அங்கிருந்த காவலாளிக்கோ தன் கடமையை சரியாக செய்யாவிடில், தன் குடும்பமும் இப்படி நடுத்தெருவில் நிற்க வேண்டியது தான் என்ற கவலை.

மேனேஜர் சொன்ன போல, “மா எதுவா இருந்தாலும் இங்கிருந்து கூட்டிட்டு போய் பாருங்க. சும்மா வியாபரம் நடக்கும் இடத்தில் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு…” என அவர்களை கிளம்ப சொல்லி நின்றார் மனிதர்.

“என்னய்யா பேசுற நீ? காலைல நல்லா வேலைக்கு வந்த பொண்ணை சாயந்திரம் காலை நொடிச்சு திருப்பி தர்றீங்க. என்ன ஏதுன்னு கேட்காம அப்படியே போயிடுவோமா நாங்க?” கணேசன் குரலை ஓங்கி கேட்டு நிற்க.

அடுத்த சில நிமிடங்களில் பரபரப்பானது அவ்விடமே. 

“என்ன இங்க சத்தம்?” காரை எடுக்க பார்க்கிங் வந்த கஸ்டமர்கள் வேறு வேடிக்கை பார்க்க துவங்கியதை கண்ணாடி வழி கண்ட மேனேஜர் வெளியே வந்து நிற்கும் நிலை உருவாகியிருந்தது.

“இதோ பாருங்க உங்க பொண்ணு இங்க வேலை தான்‌ பார்த்தாளே ஒழிய அவளோட இந்த நிலைமைக்கு நாங்க ஒன்னும் காரணம் இல்லை. அதனால ஒழுங்கா கூட்டிட்டு கிளம்புங்க. அதை விட்டுட்டு வீண் பிரச்சனை பண்ணா கழுத்தை பிடிச்சு வெளிய தள்ள சொல்வேன்!” என்றார்.

“ஐய்யோ… ஐய்யோ… ஐய்யோ… இந்த அநியாயத்தை கேட்க யாருமே இல்லையே. இவங்க கடையில் தானே என் பொண்ணு இராவும், பகலும் உழைச்சா. இப்போ உடம்புக்கு ஒன்னுனதும் நாயை போல துரத்தி விடுறாங்களே!” என விசாலம் வயிற்றில் அடித்துக் கொண்டு அழுது ஊரையே கூட்டி விட்டார்.

இதனை தொடர்ந்து அந்த மேனேஜர் சொல்படி காவலாளி இவர்களை கடை வாசலை விட்டு தெரு வாசலுக்கு அப்புறப்படுத்த.

“போலாம்மா…” என பலகீனமாக ஒலித்தது பானுவின் குரல்.

ஆனால், “நீ இருமா. இந்த கடைக்காக ஓவர் டைம் எல்லாம் பார்த்து ஓடா தேய்ஞ்சிருக்க. நம்ம நிலைமைக்கு இவங்க பதில் சொல்லியே ஆகணும். அதுவரை இங்கிருந்து போகக்கூடாது!” என்று கணேசனும் மாமியாரோடு சேர்த்து வீதியிலேயே பானுவை வைத்துக் கொண்டு அமர்ந்து விட.

விசாலத்திற்கு வீட்டில் அனைவர் வாழ்விலும் அடுத்து என்ன என பார்த்து செய்த பானுவை இந்நிலையில் வைத்துக் கொண்டு அடுத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவரும் மருமகன் சொற்படி போராட்டத்தில் ஈடுப்பட. சோர்ந்து மயங்கியே விட்டாள் பானு.

தங்கள் பெண் ஊழியர் ஒருத்தி கால்கள் செயலற்ற நிலையில், குடும்பத்தாரோடு வீதியில் அமர்ந்து போராடும் செய்தி செய்திகளில், சமூக வலைத்தளத்தில் பரவிக் கொண்டிருப்பதை கேள்விப்பட்டு அந்த செய்தியை தன் மானிட்டரில் கண்ட வர்மாவின் பார்வை விழிகளை மூடி விசாலம் தோளில் சாய்ந்திருந்த பானுமதி மீது அழுத்தமாக பதிந்திருந்தது.

தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page