அத்தியாயம்- 3
கபில் – கண்மணி தம்பதியராய் அந்த இல்லத்தில் பால் காய்ச்சி, புது வாழ்வைத் தொடங்க ஆயத்தமானார்கள்.
ஆனால், விதியின் விளையாட்டை யார் அறிவார்?
வீட்டுப் பொருட்களை ஒதுக்கி வைத்து, சில பல உதவிகளைச் செய்து கொடுத்து, புதுமணத் தம்பதிகளைத் தனியே விடுத்துப் பெற்றோர்கள் ஊருக்குச் சென்று இரண்டு நாட்கள் ஆகின்றன.
”ஏன் என்கிட்ட எதுவுமே சொல்லல?” என்று சீறினாள் கண்மணி.
”என்ன சொல்லல?” என்று அலட்சியமாகக் கேட்டான் கபில்.
”பெங்களூரு வர்றதாவோ, இங்கயே ஸ்டே பண்றதாவோ என்கிட்ட டிஸ்கஸ் பண்ணவே இல்லையே!”
”ஆமா, சொல்லல. இப்போ என்ன பண்ணலாம்?” என்று நிதானமாக இழுத்துச் சொல்லி, அவளை நெருங்கி நின்றான் கபில்.
”இப்போ எதுக்குக் கிட்ட வர்ற?”
”ஏன்? வரக்கூடாதா?”
”நீ பேச்சை மாத்தாத. எனக்கு இதெல்லாம் பிடிக்கல!”
”நிஜமாவே பிடிக்கலையா?”
”ஆமா! ஆமா! ஆமா! போதுமா? சுத்தமா பிடிக்கல. உன்னைப் பார்க்கவும் பிடிக்கல, பேசவும் பிடிக்கல, உன் கூட இங்க இருக்கவும் பிடிக்கல!”
”சரி, இப்போ என்னை என்ன பண்ணச் சொல்ற?”
”அதான் சொன்னேனே, கல்யாணத்துக்கு முன்னாடியே நிறுத்திடச் சொல்லி! அப்போ எதுவும் செய்யாம இப்போ வந்து கேளு, என்ன பண்ணணும்னு,” என்று அத்தனை எரிச்சலுடன் கத்தினாள்.
”அப்போ உனக்கு என்னை பிடிக்கல, அப்படித்தானே?”
”ஆமா!”
”கல்யாணத்தை நிறுத்தியிருந்தா மேடம்க்கு ரொம்பச் சந்தோஷமா இருந்திருக்கும், இல்லையா?”
”ஆமாமாமாஆஆ!”
”அப்போ என்ன எதிர்பார்க்குற? டிவோர்ஸா (Divorce)?” என்று
அவன் அந்த வார்த்தையைச் சொன்னதும், ஒரு நிமிடம் கண்மணியின் உலகம் அதிர்ந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.
அவனிடமிருந்து சற்று விலகி இருக்கவே நினைத்தாளே தவிர, மொத்தமாக விலகிவிட நினைக்கவில்லை. அவளின் முகத்தில் வந்து போன அந்தச் சிறு நேர அதிர்வைச் சரியாகப் புரிந்துகொண்டான் கபில்.
’சும்மா பேச்சுக்குச் சொன்னதுக்கே இப்படி இருக்கா! இவளுக்கு என்னைப் பிடிக்கலையாம்… டேய் கபிலா, விட்றாத!’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான்.
”ஹலோ மேடம்! கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரல,” என்று மீண்டும் வம்புக்கு இழுத்தான்.
”அது… அது… எனக்கு… எனக்குக் கொஞ்சம் டைம் வேணும்,” என்று தடுமாறினாள் கண்மணி. அவளுக்குத் தலை சுற்றுவது போல இருந்தது.
”எதுக்கு? நம்ம லவ்வ ரீ-ஸ்டார்ட் (Restart) பண்ணவா? இல்லை மொத்தமா விலகிப் போகவா?” என்று அவளை மேலும் சோதித்தான் கபில்.
அவனிடமிருந்து பார்வையை விலக்காமல், முடிந்தவரைத் தன் கண்களாலேயே தீக்கனைகளை வாரி இறைத்தாள் கண்மணி.
”ஓகே கூல்! நமக்குள்ள ஒரு டீல் (Deal). அதுக்கு உனக்கு ஓகேன்னா, நீ என்ன சொன்னாலும் நான் கேட்டுக்கிறேன். அது என்னவா இருந்தாலும் எனக்கு ஓகே. ஆனா, நீ அதை பாலோ பண்ணலன்னா, நீ பினிஷ் (Finish). நான் என்ன சொன்னாலும் நீ கேட்டுத்தான் ஆகணும்.
“அது என்னன்னா…”
டக்… டக்… டக்…
(அவர்கள் வீட்டு கதவு தட்டப்பட்டது )
சிவபூஜையில் கரடி நுழைந்தது போல, மீனா அங்கே வந்தாள்.
அன்று நடக்கவிருந்த அரங்கேற்றத்திற்கு கண்மணியை அழைத்துச் செல்ல அவள் வந்திருந்தாள்.
”சரி கிளம்பு. சாயங்காலம் அந்த மேரேஜ் பங்க்ஷன் முடிச்சிட்டு வெளிய போகலாம்,” என்று சஸ்பென்ஸுடன் அவளை அனுப்பி வைத்தான் கபில்.
அன்று..…
எப்போதும் போல அன்றும் நாட்டியாலயாவிற்குச் செல்லக் கிளம்பிக்கொண்டிருந்தாள் கண்மணி. முந்தைய நாள் கௌசியின் வீட்டில் கார் ரிப்பேர் ஆகி நின்றுவிட்டதால், இன்று பேருந்தில் செல்ல வேண்டிய சூழ்நிலை.
’சாமி! இவ்வளவு கூட்டத்துல எப்படி அடிச்சுப் பிடிச்சு ஏறிப் போறதோ? இது வேலைக்கு ஆகாது. கேப் (Cab) தான் புக் பண்ணணும் போல.’ போனை எடுத்துப் பார்த்தவள் அதிர்ந்தாள்.
‘பேலன்ஸ் முடிஞ்சு போச்சா? டேய்! சாயங்காலம் தானேடா முடியும்? சுத்தம்! இந்த நாள் இதைவிட மோசமா அமைய முடியாது,’ என்று மனதிற்குள் சலித்துக்கொண்டாள்.
அவளின் மைண்ட் வாய்ஸைத் தற்காலிகமாக நிறுத்த அங்கு வந்து சேர்ந்தான் கபில்.
”ஹாய் கண்மணி! எப்படி இருக்கீங்க? மூஞ்சியைப் பார்த்தா அப்படி ஒன்றும் நல்லா இருக்கிற மாதிரி தெரியலையே! ஏதாச்சும் உதவி தேவைப்படுதா?” என்று படு ஆரவாரமாய் வந்து நின்றான் கபில்.
அவன் முன்னால் கைகளைக் கட்டிக்கொண்டு நின்று விழி அகற்றாமல் நோக்கினாள்.
அவள் கண்களைச் சந்திக்க முடியாமல் வேறெங்கோ பார்ப்பது போல…, “ஓகே புரியுது. நேத்து நாமதானே டிராப் (Drop) பண்ணோம், இன்னிக்கு எப்படிப் போவீங்களோன்னு ஒரு அக்கறையில தான் வந்தேன்,” என்றான் கபில்.
அவள் புருவத்தை உயர்த்தினாள், ‘ஏன்?’ என்பது போல.
”ஏங்க! நீங்க டான்சர்னு நூறு சதவீதம் (100%) நம்புறேன். இப்படி கண்ணை உருட்டி திணறச் செஞ்சா பாவம்ங்க நான்!” என
அவன் சொன்ன விதத்தில் சிறு முறுவல் தோன்றி விட , அதை மிகவும் சிரமப்பட்டு மறைத்தாள்.
”ஏங்க, நல்லாவே சிரிக்கலாம். நான் தப்பா நினைச்சுக்க மாட்டேன்.”
அவள் மறுபடியும் கண்களைச் சுருக்க, “ஓகே கூல்! எப்படியும் கேப்ல தானே போகப்போறீங்க? என் வண்டியை கேப் போல நினைச்சுக்கோங்க, அவ்வளவுதான்,” என்றான்.
இருந்தும் தயக்கம் விலகாமல் அப்படியே நின்றிருந்தாள் கண்மணி.
”ஏங்க, ஒரு ஆம்பளைப் பையனை இவ்வளவு கெஞ்ச வைக்கக் கூடாது நீங்க!” என்றதும், இப்போது எழுந்த சிரிப்பை அவளால் மறைக்க தோன்றவில்லை போலும் சிரித்தே விட்டாள்.
”அப்பாடி! சிரிச்சுட்டீங்களா? தேங்க் காட். சரி வாங்க போலாம்,” என்றான் கபில்.
’ரொம்பத்தான் அழுத்தம்! ஒரு சின்ன டிராப்புக்கே இந்த நிலைமைன்னா, இனி என் எதிர் எதிர்காலம் ரொம்ப பிரகாசமாத் தெரியுதே…’ என்று கபில் மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே, கண்மணி வண்டியில் அமர்ந்திருந்தாள்.
”ஏங்க, இன்னிக்கு எதுவும் மௌன விரதமா? வந்ததுல இருந்தே ஒரு வார்த்தை கூட பேசவே இல்லையே!”….
”எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் பண்ண முடியுமா?” – ஒரு வழியாகத் தன் திருவாய் மலர்ந்து பேசினாள் கண்மணி.
”அட, தயங்காம சொல்லுங்க. சாயங்காலமும் வீட்டுல டிராப் பண்ணிடவா?” என்று கிடைத்த கேப்பில் சிக்ஸர் அடித்தான் கபில்.
”இப்படியே பிளர்ட் (Flirt) பண்ணிக்கிட்டே வந்தீங்கன்னா, உங்க அக்கா கிட்டப் போட்டுக் கொடுத்துடுவேன், பார்த்துக்கோங்க!” என்று அவனது சிக்ஸர்களை ‘நோ பால்’ ஆக்கினாள் கண்மணி.
”கௌசிகிட்டயா? வினையே வேணாம்! அட என்னங்க இதுக்குப்போய் கோவிச்சுக்கலாமா? சரி, என்ன ஹெல்ப் வேணும்னு சொல்லுங்க,” என்று கபில் அடக்கி வாசித்தான்.
”போன்ல ரீசார்ஜ் முடிஞ்சு போச்சு. ஒரு மாசத்துக்கு மட்டும் போட்டாலே போதும், உங்க அக்கவுண்ட்டுக்குக் காசு மாத்திடுறேன்.”
அவள் நம்பர் சொல்ல, கபில் ரீசார்ஜ் செய்து முடித்தான்.
“உங்க அக்கவுண்ட் நம்பர் சொல்லுங்க,” என்றாள். அவனும் சொல்ல, காசை அனுப்பி முடித்தாள்.
”என்னங்க, காசு சேர்த்து அனுப்பியிருக்கீங்க?”
”கேப் போலதானே நினைச்சுக்கச் சொன்னதா ஞாபகம்” என்றாள் கண்மணி.
”ரைட்டுங்க!” என்று கபில் ஆஃப் (Off) ஆனான். அதற்குப் பின் அவன் அவ்வளவாகப் பேசவில்லை. கண்மணியும் அதைப் பெரிதுபடுத்தவில்லை.
அவள் சேர வேண்டிய இடமும் வந்தது.
”இங்கேயே நிறுத்திடுங்க. பை தி வே (By the way), ரொம்ப தேங்க்ஸ். இது ரொம்பப் பெரிய உதவிதான். ஈவ்னிங் சீக்கிரமா வந்துடுங்க, அதுக்கும் சேர்த்துதான் காசு போட்டுவிட்டேன். ஓகே பாய், டைம் ஆயிடுச்சு!” என்று சொல்லிவிட்டு அவள் சுதாரிக்கும் முன் நகர்ந்துவிட்டாள்.
“ஹலோ ஏங்க… ” அவள் தான் சென்றுவிட்டாளே …
என்ன இப்படி சொல்லிட்டு போறா, இத எப்படி எடுத்துகிறது ..
சரி பாப்போம்..
சாயங்காலமும் அவன் வந்துவிட, இந்தப் பயணத்தில் இருவரையும் விட மௌனமே பெரிய கச்சேரி நடத்திக் கொண்டு வந்தது.
‘ஏன் இவ்வளவு அமைதியா இருக்கான்? ஒருவேளை காலைல பேசினது எதுவும் ஹர்ட் (Hurt) ஆகியிருக்குமோ? கொஞ்சம் ஓவரா போயிட்டோமோ?’ – கண்மணியின் இந்த யோசனையைக் கபிலின் குரல் கலைத்தது.
”கண்மணி… கண்மணி… உங்க வீடு வந்தாச்சு.”
”ஹான்… தேங்க் யூ!”
”இட்ஸ் ஓகே. டேக் கேர், பாய்!”
காலையில் பார்த்த பார்வையை விட, இப்போது அவன் பார்வையில் ஒரு மாற்றம்.
அது கண்மணியின் மனதில் சிறு குழப்பத்தை ஏற்படுத்தியது. அதன் பின் கபில் அவள் கண்களில் படவே இல்லை. கௌசி வீட்டிலும் காணவில்லை. அவளின் வேலைகளுக்கு நடுவில் அவனின் புன்னகை இம்சையைக் கிளப்பினாலும், அதைத் தடுக்க முடியாமல் திணறினாள்.
சில மாதங்கள் கடந்துவிட்டன. ஒரு நாள் கண்மணியின் போன் திரையில் ‘கபில்’ என்ற பெயர் மின்னி மின்னி அழைத்துக் கொண்டிருந்தது.
மீண்டும் நிகழ்காலத்தில்…
அந்த மாலை வேலையில், ஞாயிறு தன் கதிர்கள் அனைத்தையும் விடுத்து நிலவுக்கு போட்டியாய் சாந்தமாய் காட்சியளிக்கும் நேரம். சிறு தோட்டத்திற்கு மத்தியில் போடப்பட்ட நாற்காலியில் எதிரெதிராய் இருவர் அமர்ந்திருந்தனர்.
பிளைன் மெரூன் கலரில் கோல்டன் பார்டர் வைத்த காட்டன் புடவையில் கண்மணி அத்தனை அம்சமாக இருந்தாள். தாலியும் குங்குமமும் அவளுக்கு இன்னும் அழகைச் சேர்த்தன.
அவளுக்கு எதிராக, கோல்டன் கலர் பேன்ட் மற்றும் மெரூன் ஷர்ட் அணிந்து கபில் அமர்ந்திருந்தான். இருவரும் ஒரு திருமண விழாவிற்குச் சென்றுவிட்டு நேரடியாக இந்த ரெஸ்டாரண்டிற்கு வந்திருந்தனர்.
”காலைல ஏதோ டீல் அது இதுன்னு என்னவோ சொல்லிட்டு இருந்தியே…” என்று அவன் கண்களைச் சந்திக்க முடியாமல் எங்கோ பார்த்துக் கேட்டாள் கண்மணி.
”ம்ம்ம்… நேரா விஷயத்துக்கே வர்றேன். இனி வர்ற ஆறு மாசமும் நீ யாரோ, நான் யாரோ!”
”புரியல?”
”நான் இன்னும் முடிக்கல. ஒரே இடம், ஒரே வீடு. ஆனா, இனி நாம பேசிக்கக் கூடாது. ஒருத்தரை ஒருத்தர் எதிர்பார்க்கக் கூடாது.
நாம புருஷன் பொண்டாட்டியா இல்லை, ஒரு பிரண்டாகக் (Friend) கூட அந்த வீட்டுல இருக்கப் போறது இல்லை. ஜஸ்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ் (Just strangers) போல இருக்கப் போறோம்.
உனக்குத்தான் என் கூட இருக்கப் பிடிக்கலையே! உனக்கு உன் கமிட்மென்ட்ஸ் முக்கியம், எனக்கு என் பிசினஸ் முக்கியம். சோ (So), இந்த ஆறு மாசம் இது எல்லாத்துக்கும் ஹெல்ப் பண்ணும்னு நினைக்கிறேன். இது நமக்குள்ள மட்டும் தான் இருக்கணும், வேற யாருக்கும் தெரியக்கூடாது.”
”ஆனா, ஒரே வீட்டுல இருந்துட்டு இது எப்படி சாத்தியம்?”
”ஏன் முடியாது?”
”நம்ம வீட்டு ஆளுங்க இங்க வந்தாலோ, நாம அங்க போனாலோ என்ன பண்ணுவ?”
”நான் முதல்லயே சொல்லிட்டேன், இது நமக்குள்ள தான். அவங்களுக்குத் தெரியாம பார்த்துக்கிறது நம்ம பொறுப்பு. இதுக்கு மேலயும் இது சரிவராதுன்னு தோணுச்சுன்னா, நான் என்ன சொன்னாலும் கேக்குறேன்னு ஒத்துக்கோ. இந்த டீலை இப்பவே கேன்சல் பண்ணிடலாம். சிம்பிள்!”
”ஆனா…”
”என்ன கண்மணி வேணும் உனக்கு? ஒண்ணாவும் இருக்க முடியாது, பிரிஞ்சும் போக முடியாது. சரி, கொஞ்சம் டைம் எடுத்து யோசிக்கலாம்னாலும் முடியாது. அப்படி என்ன கோபம் என் மேல?” – கபிலின் குரல் சற்று உடைந்ததை போல இருந்ததோ..
”சரி, எனக்கு ஓகே!” என்றாள் கண்மணி.
”அப்படி வா வழிக்கு! சரி கிளம்பலாம்.”
கண்மணிக்கு இப்போது எப்படி நடந்துகொள்வது என்று புரியவில்லை.
”கேப் மாதிரி நினைச்சுக்கோ… அதுதான் உனக்குப் புதுசு இல்லையே!” என்று கபில் கிண்டலாகச் சொன்னான்.
”நீயும் காசு வாங்கிக்கோ, அது உனக்குப் புதுசு இல்லையே!” என்று பதிலடி கொடுத்தாள் கண்மணி.
”ம்ம்ம்ச்!” சலித்துக் கொண்டான் கபில்.
இவர்களின் இந்தப் புதிய பயணத்தில் யார் யாரிடம் சிக்கிக்கொள்ளப் போகிறார்கள்?
