அத்தியாயம்- 30

பாகம் – 30

” சரிடா என்ன நல்ல விஷயம்னு சொல்லு கேக்கறேன்..”

“நீதான கிழவி ராத்திரி என்கிட்ட வந்து ஓது ஓதுன்னு ஓதுன.. கடைசியில அது அப்படியே பலிச்சு போச்சு பாரு. “

“நான் என்னடா உன்கிட்ட தப்பா பேசினேன்..”

” நீ எங்க தப்பா பேசின. நல்லது தான் சொன்னே .. அதை நான் அப்படியே கடைபிடிச்சேனா ..அதுதான் இப்ப தப்பா போச்சு .. “

கயலுக்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை. அவருக்கு தான் தூக்க கலக்கத்துடன் கேட்பதால் தான் இப்படியாகிறதோ என சந்தேகம்..

” இருடா நான் போய் முகத்தை கழுவிட்டு வருகிறேன்.. அப்பவாவது நீ பேசுறது புரியுதான்னு பார்க்கலாம்.. “

“முகத்தை கழுவுவதோடு கொஞ்சம் சர்க்கரை எடுத்துட்டு வந்து உன் மருமக வாயில போடு..அப்படியே வீட்ல எல்லாருக்கும் கொடு.. “

இப்பொழுதுதான் அவருக்கு லேசாக ஏதோ புரிவது போல இருக்கிறது.. அதற்குள் மாறன் மனைவியின் நச்சரிப்பு கேட்டு வெளியே வந்தவர் மகனுக்கு கை கொடுக்கிறார் ..

“வாழ்த்துக்கள்டா மகனே..நீ அப்பாவானதற்கு வாழ்த்துக்கள்.. “

” பார்த்தியா கிழவி, என்னுடைய அப்பா என்னை மாதிரியே புத்திசாலி.. நீதான் மண்டு மரமண்டை மட்டி.. நல்ல வேளை நான் உன்னை மாதிரி பிறக்கல . ” என்றதும் கயல் அவன் கன்னத்தில் வேகமாக அடிக்கிறார்..

“நீ பேசுனது அப்படி இருக்கு.. நான் வேற பரிமளம் நின்னுட்டாளோ என்னமோ என்று பயந்து போயிட்டேன்.. எனக்கு பேத்தி வந்துட்டா ரொம்ப சந்தோஷம்.. நீ இதைப் பெத்து முடிச்ச உடனே  சோர்ந்து போயிடாத ..இன்னும் மூணு நாலு பெத்து போடு.. ” என்றதும் மாறன் முறைக்கிறார்..

” ஏன்டி நீ மட்டும் ஒன்னே ஒன்னு பெத்துப்பியாம்.. அடுத்தவங்கள அஞ்சு ஆறு பெத்துக்க சொல்லுவியா .. “

” அட நான் ஒரு சோம்பேறி. அதனால நான் ஒன்னோட விட்டுட்டு இப்ப கஷ்டப்படுறேன்.. அந்த நல்லதுக்காக தான் அவனை நாலைந்து பெத்துக்க சொல்றேன்.இப்ப கூட பாருங்க .. ஒரு விஷயத்தை சொல்றதுக்கு எவ்வளவு பிரச்சனை செய்கிறான்னு.. “

” இன்னொரு பிள்ளை இருந்தா இவன் தொல்லை இல்லாம அவன் வீட்டுக்கு போய் இருப்பேன்ல.. “

” கிழவி நீ இதே சொல்லிக்கிட்டு இருக்க. உனக்கு ஒரு நல்ல ஒரு முதியோர் இல்லமா பார்த்து கொண்டு போய் விட்டுட்டு வரேன் பாரு. ” சொல்லி விட்டு செல்கிறான் ..

“பார்ப்போம் டா நீ என்னைக் கொண்டு போய் விடுறியா.. இல்ல நானா கோபித்துக் கொண்டு போகிறேனா என்று பார்ப்போம்.. ” சொன்ன படியே கயல் முகத்தை கழுவி விட்டு பூஜை அறைக்கு சென்று சாமியிடம் மனம் உருக வேண்டிக் கொள்கிறார்..

‘ கடவுளே என் குடும்பம் வம்ச விருத்தியுடன் நிறைவா  சந்தோஷமா வாழணும் ..இன்னும் நிறைய  பேரப்பிள்ளைங்க என் வீட்டுல விளையாடனும்.. என் மருமக நல்லபடியா பிள்ளை பெற்று நல்லபடியா வீட்டுக்கு வரணும்.. ,என்று அவருக்கு இப்பொழுதே கவலை வருகிறது..

சாமி கும்பிட்டு முடித்து சர்க்கரையை எடுத்துக் கொண்டு அங்கே சென்றால் அவர் கையில் உள்ள பொருளை பார்த்ததுமே மித்ரா வாந்தி எடுப்பதற்காக எழுந்து ஓடுகிறாள்..

“அய்யோ அத்தை எனக்கு எதுவுமே கொடுத்திடாதீங்க .எனக்கு அப்படி வாந்தி வருது .. “

“ஒன்னும் பயப்படாதடி. எல்லாம் நல்ல படியாக தான் முடியும் .கொஞ்ச நாள் வாந்தி இருக்கும் .அப்புறமே சரியாயிடும். இரண்டாவது பிள்ளை தானே.. உன்னுடைய உடம்பு அதற்கு ஏற்ற தகவமைப்போட மாறி விடும் ..அப்படியே வாந்தி இருந்தாலும் பயப்படாத .. பிள்ளைக்கு சத்து வேணும்னு நிறைய சாப்பிடணும்.. இல்லா விட்டால் வெளியில் வந்து உன்னை பாடாப் படுத்தி விடும்.. “

அவர் சொன்னதை போலவே ஒரு வாரம் கழித்து மித்ரா இன்னும் சுறுசுறுப்பாய் ஆரோக்கியமாய் இருப்பதை போல உணர்கிறாள்.. அரவிந்துக்கு மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை.. ஸ்வீட்டோடு சென்று நவீனிடம் கொடுக்கிறான் ..

நவீன் தான் கலகம் செய்யும் நாரதர் ஆகி விட்டானே .. நவீன் ஒரு நவீன நாரதர்..இப்படியே நாரதர் கலகம் நன்மையில் முடிந்தால் சரிதான் .அவன் சிந்தனை எல்லாம் அந்த ஒரு விஷயத்தில் மட்டும் தான் இருக்கிறது..

” என்னடா ஸ்வீட் கொண்டு வந்து கொடுக்கிற .அந்த செல்லிலும் எதுவும் இல்லையா .. பார்த்தியா நான் சாமிகிட்ட வேண்டியது எல்லாம் உண்மையாகி விட்டது ..எதுமே உனக்கு வாழ்க்கையில் எந்த கஷ்டமும் கிடையாதுடா..”அதை சொன்னதும் தான் அரவிந்துக்கு பகீர் என்கிறது .

அச்சச்சோ என்று தலையில் கை வைத்துக் கொள்கிறான்..அவன் செய்கையைப் பார்த்ததுமே நவீனுக்கு புரிந்து விடுகிறது..

“என்னடா நான் தான் உங்ககிட்ட தப்பா பேசிட்டானா..நான் பேசியதை எல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாதே.. எல்லாவற்றையும் ரப்பரால் அழித்து விடு..  வேற எதற்காக டா இப்பொழுது ஸ்வீட் கொடுத்தாய்.. “என்று அவன் கவனத்தை திசை திருப்புகிறான்..

அரவிந்த தலையில் வைத்த கையை இன்னும்  எடுக்கவே இல்லை..” இல்லடா நவீன் நான் பெரிய தப்பு செய்து விட்டேன்.. “

“ஆமாடா அரவிந்த நீ என்னை வந்து பார்ப்பது தான் பெரிய தப்பு ..என்னை பார்க்காமல் இருந்தால் உன் குடும்பத்தோடு சந்தோஷமாக தான்டா இருக்க..”

” அது என்னமோ நிஜம் தான்..” என்று சொன்னவன் , “அப்படியும் இல்லடா என்னுடைய சந்தேக புத்தி தான் என்னை கொல்லாமல் கொல்கிறது ..அதுவும் உன்னை பார்த்ததும் தான் எனக்கு அதுவே நினைவுக்கு வருகிறது.. “

இதை சொன்னதுமே நவீனுக்கு வருத்தமாகிறது .. “அப்படி என்றால் நான் இந்த இடத்தில் இருந்து வேறு எங்காவது வேலையை டிரான்ஸ்பர் மாற்றிக் கொள்ளவாடா..”

” எனக்குஎன்று ஆறுதல் கொடுப்பதற்கு நீ ஒருத்தன் தான்டா இருக்க . நீ இல்லாமல் போய் விட்டால் அதுவும் எனக்கு கிடைக்காது.. என்னை விட்டுப் போய் விடாதடா .. ” என்று நவீன் கையை பிடித்து கெஞ்சுகிறான்..

” இன்னும் மிச்சம் ஒரே ஒரு செல் தான் ..அதை மட்டும் பார்த்து விட்டேன் என்றால் அதோடு என்னைப் பிடிச்ச சனியன் ஒழிஞ்சதுடா.. எல்லாவற்றையும் தொலைத்து தலை முழுகி நிம்மதியாகி விடுவேன் .. ” .

நவீனுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.. “அப்படி என்றால் நீ இன்னமும் அந்த செல்லை பார்க்கவில்லையா. நீ இப்பொழுது எதற்காகத்தான் ஸ்வீட் கொண்டு வந்து கொடுத்த ..அதை முதல்ல சொல்லு..”

” அதுவாடா என் மனைவி மாசமாக இருக்கிறாள். எனக்கு அடுத்த குழந்தை வரப் போகிறது .அதற்காக தான் ஸ்வீட் கொடுத்தேன் .. “

” வாழ்த்துக்கள் டா மச்சான் ..இதை விட உனக்கு வேற  என்னடா சந்தோசம் வேண்டும் .. செல்லாவது, மயிராவது எல்லாவற்றையும் தூக்கி ஏறி இனி எதுவும் பார்க்க வேண்டாம் . “

“அதெல்லாம் இல்லடா .அந்த ஒரு செல் தானே.. அதையும் பார்த்து விட்டால் நான் நிம்மதியாக ஆகி விடுவேன்..”என்று அன்று நடந்த சம்பவங்களை அப்படியே சொல்கிறான் ..அப்படியே வேற எதுவாக இருந்தாலும் என்னால் என் குடும்பத்தை இழக்க முடியாதுடா .. “

“அப்படி என்றால் அதில் எதுவுமே இருக்காதுடா அரவிந்த். அப்படி ஏதாவது இருந்தால் உன் மனைவி உன்னிடம் மறைக்காமல் இருந்திருப்பாங்களா.. சாதாரணமாக தானே சுத்தம் செய்து கையில் வைத்திருந்தாங்க .. “

“ஆமாடா அதோட நான் தூக்கி மேல் கபோர்டு போட்டதுதான்.. அதை இன்று எடுத்து வந்து விடுகிறேன்.. அதையும் சரி பண்ணி விடுவோம் ..அவ்வளவுதான் விஷயம் முடிந்தது..இன்றிலிருந்து நான் ரொம்ப சந்தோசமாக இருக்கப் போகிறேன் .. “சொன்னவன் நவீனை வேகமாக கட்டிக் கொள்கிறான்..அவனும் ஆறுதலாக முதுகைத் தடவி கொடுக்கிறான் ..

எந்த நேரத்தில் அப்படி சொன்னானோ. ஆனாலும் பாவம் தான் அரவிந்த்..
செல்லை கொண்டு போய் கொடுத்த கடையிலும் அவருக்கு என்ன பிரச்சனையோ .. வீட்டில் ஏதாவது சண்டையோ. கொஞ்சம் எரிச்சலாகத்தான் பேசுகிறார் ..

“ஏன் சார் உங்கள் வீட்டில் அப்படி எத்தனை செல்லுதான் ரிப்பேர் ஆகி இருக்கிறது.. அப்படி சரி செய்ய வேண்டும் என்று நினைத்தால் எல்லா செல்லையும் ஒட்டு மொத்தமாக கொண்டு வந்து கொடுத்திருந்தால் என்ன ..இப்படி ஒன்று ஒன்றாக கொண்டு வந்து கொடுக்கிறீர்கள்.. அதை ரிப்பேர் செய்யும் பையன் வேற இன்று லீவு போட்டு இருக்கிறான் ..உடனே வேறு வேண்டும் என்பீர்கள் ..வேறு எதாவது கடைக்கு கொண்டு போய் கொடுத்து சரி செய்து கொள்ளுங்கள் .. “என்கிறார் ..

“இல்ல ஒன்றும் அவசரம் இல்லை ..அந்த பையன் வரட்டும் .அவன் வந்ததும் சரி செய்து கொடுங்க . “என்று போன் நம்பரை கொடுத்து விட்டு வருகிறான்.. அது சரி செய்து திரும்ப வருவதற்கு இரண்டு நாட்களுக்கு மேல் ஆகிறது..

அதுவரையுமே அவனுக்கு பொறுமை இல்லை ..ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது அந்த கடைக்காரரை சென்று பார்த்து விட்டு வருகிறான்..

” நீங்கள் இப்படி தொந்தரவு செய்வீர்கள் என்று தானே சார் நான் வேறு ஏதாவது கடையில் கொடுங்கள் என்றேன்..ஏன் சார் இப்படி படுத்தி எடுக்குறீங்க ..,என்று முகத்தில் அடித்தாற் போல பேசுகிறார்..

” இதுதாங்க கடைசி ..இனிமேல் நான் வரவே மாட்டேன் ..தயவு செய்து சரி செய்து கொடுங்கள் ..என்று அரை மணி நேரத்திற்கு மேல் பொறுமையாய் அங்கேயே நின்று சரி செய்து வாங்கிக் கொண்டு வருகிறான்..

வழக்கம் போல இருக்கும் பதட்டம் எல்லாம் அவனிடம் இல்லை ..எப்பொழுதும் போல வேலைகளை செய்து விட்டு மதியம் சாப்பிட்டு முடித்ததும், ” நவீன் கடைசி செல்லையும் எடுத்து வந்து விட்டேன். நம்ம எப்போதும் போகும் அந்த ஹோட்டலுக்கு போய் பார்த்து விட்டு வருவோமா ..அறைக் கூட பிடிக்க வேண்டாம் .சும்மா காபி குடிப்பது போல அங்கே உட்கார்ந்து கொஞ்ச நேரம் பார்த்து விட்டு நீ சொன்னது போல ஏதாவது  சாக்கடையில் தலையை சுற்றி தூக்கி எறிந்து விட்டு வருவோம் வா..” சொன்னதுமே நவீன் குஷியாய் கிளம்புகிறான் ..

சரிடா இனிமேல் ஒளிமயமான வாழ்க்கை தான் உனக்கு ..அப்படியே எனக்கும் ஒரு நல்ல பெண்ணா பாருடா” என்று கோரிக்கையும் வைக்கிறான்..

நவீனுக்கு எங்கே இனி திருமணம் ஆகப்போகிறது. அந்த செல்லில் தான் பெரிய பெரிய வெடிகுண்டுகளாய் வெடிக்கத் தொடங்கி விட்டதே..

தொடரும்..

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page