பாகம் – 31
அந்த மொபைலில் தான் அதிகமான வாட்ஸ் ஆப் பேச்சுகள் இருந்தது.. அதனை பார்க்கும் போதும் ஆடியோவைக் கேட்கும் போதும் நவீனுக்கும் அரவிந்துக்கும் சிரிப்பு வருகிறது.. காரணம் மித்ரா கல்யாணம் ஆன அன்று இரவிலிருந்து தான் அந்த மொபைலை உபயோகிக்க ஆரம்பித்தாள்..
அதில் ஆபீஸ்ல இருந்து சும்மா கூப்பிடுவதற்குமே முத்தம் ஸ்மைலிகளையும், ஹஸ்கி வாய்ஸில் செல்லமாய் கொஞ்சிப் பேசியும் அனுப்பி வைத்திருந்தாள் மித்ரா ..
“டேய் இதையெல்லாம் நீ தனியா கேட்டு தொலைடா. என்னிடம் வேற ஏன்டா கொடுக்கற.. ” நவீன் தலையில் அடித்துக் கொள்கிறான் ..ஒரு வழியாய் இருவரும் ஒத்துக் கொண்டு அதை ப்ளூடூத் வழியாக அரவிந்த் மட்டும் கேட்கிறான்.. வரிசையாக பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருக்கும் போதுதான் அரவிந்த்துக்கு அந்த சந்தேகம் வருகிறது..
” என்னடா இப்படியே வந்து கொண்டிருக்கிறது ..இரு ஒரு நிமிஷம் .. ” என்று அதிலிருந்த நபர்களை கவனிக்கிறான்.. உண்மையிலேயே அதில் அவன் சந்தேகப்படும் அவனுக்குப் பிடிக்காத புவனா எந்த இடத்திலும் பேசவும் இல்லை ..அவளது இருப்பும் தெரியவில்லை..
“டேய் என்னடா இது.. ஒரே ஆச்சரியமா இருக்கு..கல்யாணம் ஆன சமயத்தில் எல்லாம் அவகிட்ட பேசாம தான் இருந்திருக்கா..” என்றவன் எதையோ யோசிக்கிறான் ..
“இருடா இருடா எனக்கு இப்பதான் ஞாபகம் வருது.. மித்ராவுக்கு நாள் தள்ளிப் போய் இருக்கிறது என ஹாஸ்பிடல் அழைத்து போய் காட்டும் போது தான் புவனாவை முதல் முதலாக சந்தித்தோம்.. அப்படி என்றால் அதன் பிறகு தான் பேச ஆரம்பித்திருப்பார்கள். அது என்ன மாதம் .. ” என்று யோசித்து பார்க்கிறான்..
முதலில் அந்த இடத்தில் புவனாவே இல்லை ..பிறகு அவர்கள் பேசியது மட்டும் எங்கே இருந்து வரும் ..
“அது எப்படிடா வேற செல்லும் அவகிட்ட கிடையாது ..எல்லோரிடமும் பேசும் போது புவனாவிடம் ஹாய் ஹவ் ஆர் யூ என்று கூடவா பேசி இருக்க மாட்டாள்.. இதில் ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது .. எனக்குத் தெரியாமல் ரகசியமாக வேற செல் ஏதாவது வைத்து இருந்தாளா.. அப்படி எதுவும் இல்லையேடா.. இரு என்ன என்று பார்க்கிறேன் .. “
தெரிந்தோ, தெரியாமலோ நவீன நாரதர் நவீன் தான் இப்பொழுதும் அந்த யோசனையைக் கூறுகிறான்..
” சில பேர ஒளிச்சு வச்சுக்கலாம்டா ..அது மாதிரி தங்கச்சி செஞ்சு வெச்சி இருக்காங்களோ என்னமோ .. ” அரவிந்த் உடனே Archieved சென்று பார்க்கிறான்.. அங்குதான் புவனா ஒளிந்து கொண்டு இருக்கிறாள் …
பார்த்தியா இரண்டு குட்டிகளும் சரியான திருட்டு பூனைங்க.. ஒளிச்சு வச்சு பேசுறதுக்கு இவங்க என்ன லவ்வரா .. அது வேற ஒன்னும் இல்லடா நவீன். நான் பேசும் போது எல்லாம் திட்டுகிறேனா.. எனக்கு பயந்து கொண்டுதான் இப்படி எல்லாம் செய்து இருக்கிறாள். “
நவீனுக்கு அவன் பேசுவதைக் கேட்டதுமே மனம் நிம்மதியாகிறது. “பரவாயில்லடா நான் திட்டாத என்று சொல்லும் போதெல்லாம் உன் இஷ்டத்துக்கு பேசுவ .இப்பொழுது கையில் செல்லும் கிடைத்து விட்டது புவனாவின் பெயரும் இருக்கிறது.. அதுவும் மறைத்து வைக்கப் பட்டு இருக்கிறது.. அப்படியும் நீ உன் மனைவியை விட்டுக் கொடுக்காமல் பேசுகிறாயடா.. அதனால் அந்த பொண்ணு மேல எந்த தப்பும் இருக்காது.. கவலைப்படாம வா .. நம்ம இரண்டு பேரும் சேர்ந்தே பார்க்கலாம் .. “என்று அவனை இழுத்து பக்கத்தில் உட்கார வைத்துக் கொள்கிறான்..
அவர்கள் இருவரையும் செய்திகளையும் படிக்க படிக்க அரவிந்தும் நவீனும் மிரண்டு போகிறார்கள்..பெரிய துப்பறியும் நாவலை படிப்பது போல இருக்கிறது அவர்களுக்கு ..
நவீனுக்கு, ‘ அதனால் தான் அவனுடைய உள்மனம் ஆரம்பத்திலிருந்து ஏதோ ஒன்று சொல்லி குழப்பம் அடைய வைத்திருக்கிறது. கடைசில அவன் சந்தேகப்பட்டது உண்மைதானா.. இனி இவன் என்ன செய்யப் போகிறானோ.., என்று பயப்படுகிறான்..
அரவிந்த் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டுகிறது ..அப்படியே தலையை குனிந்த படியே உட்கார்ந்து இருக்கிறான்.. “டேய் நீ இப்போது என்ன நடந்து விட்டது..எதற்கு இப்படி எல்லாம் ஓவரா சீன் போடுகிறாய்.. ” என்றதும் என்ன கோபமோ எழுந்து நவீனை அடிக்கத் தொடங்குகிறான்..
நவீன் அவன் அடிப்பதை எல்லாம் வாங்கிக் கொண்டு அதன் பிறகு அவனை கட்டி அணைத்து சமாதானம் செய்கிறான்..
” உன்னுடைய நிலைமை எனக்கு புரியுதுடா.. ஆனாலும் இதெல்லாம் உண்மையா என்று நீ எப்படி
நம்புகிறாய்.. “
“ஏன்டா இதற்கு மேல் வேறு என்னடா சாட்சி வேண்டும் .. “
“இல்லை கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய் ..தீர விசாரிப்பதே மெய்.. நம்ம இதை முழுக்க விசாரிக்கணும். விசாரித்த பிறகு தான் இதெல்லாம் உண்மையா என்று தெரியும். அதன் பிறகு தான் ,ஆனால் அதன் பிறகு நீ என்ன செய்யப் போகிறாய் என்று என்னால் யோசிக்கவே முடியலடா .. ” என்று நவீனும் அழத் தொடங்குகிறான்..
அவன் அழுவதை பார்த்ததுமே அரவிந்துக்கு மனம் உருகுகிறது.. “எனக்கு ஒரு நல்ல பிரண்டு கிடைச்சிருக்கடா.. இது ஒன்னும் போதும்டா எனக்கு.. வேற எதுவுமே வேண்டாம் .. ” என்று அவனும் அழுத படியே அவன் கண்களை துடைத்து விடுகிறான்..
“நவீன் நீ பயப்படாத சொல்லப் போனா உண்மையிலேயே நான் மித்ராவை வேறு மாதிரி சந்தேகப்பட்டேன் ..இப்பொழுது நாம் யூகம் செய்ய முடியாத அளவிற்கு இது வேறு விதமாக நடந்து இருக்கிறது..மித்ராவா இப்படி எல்லாம் செய்தாள் என்று என்னால் நம்பவே முடியவில்லைடா.. இப்பொழுது நான் என்ன செய்வது என்று எனக்கே தெரியல.. நீ சொல்வதைப் போல முதல்ல நம்ம விசாரிக்க ஆரம்பிப்போம் .அதன் பிறகு உண்மை என்று தெரிந்த பிறகு நான் என்ன செய்யப் போகிறேனோ..என் மனம் என்ன சொல்கிறதோ.. அதை தான் செய்வேன். ” அவன் பேசுவதை கேட்ட படியே நவீன் வருத்தத்துடன் அப்படியே உட்கார்ந்து இருக்கிறான்.
” என்னடா நவீன் நீ கிளம்பலையா..இனி நம்ம ஒரு நொடி நேரத்தை கூட வீணடிக்க கூடாதுடா சீக்கிரம்.. “அரவிந்த் பதட்டத்துடன் பரபரக்கிறான்..
” இல்லடா இதை கொஞ்சம் ஆறப் போடுவோம்.. கோபத்துடன் நீ செய்ய ஆரம்பித்தால் பதட்டமாக தான் முடியும். நாளிலிருந்து செய்வோம்.. அதற்கு முன் எனக்கு ஒரு சத்தியம் செய்.. “
” நீ என்ன கேட்க போறேன்னு எனக்கு தெரியும்டா. இந்த விஷயம் முடியும் வரை நான் மித்ராவிடம் எதையும் கேட்க மாட்டேன்..இது என் மேல சத்தியம் .. “என்று தன் தலையில் கை வைத்து சத்தியம் செய்து கொள்கிறான்..
ஆராய ஆரம்பித்ததும் தோண்டிய கிணற்றில் இருந்து பெரிய பெரிய பூதங்களாக வெளிவர தொடங்குகின்றன. அவன் நம்பவே முடியாத அவன் எதிர்பார்க்காத ஒரு நபரும் இந்த சிக்கலில் வந்து மாட்டிக் கொள்கிறார் .
இனி இந்த எடுத்த காரியத்தை பாதியில் விடுவதா .இல்லை அவரிடமே விசாரிப்பதா என்று இருவருக்குமே குழப்பம் ஆகிறது ..
நவீன் , “நீ எதையும் பார்க்காதடா.. நல்லதோ கெட்டதோ ஆரம்பித்து விட்டோம் .இதை முடித்து தான் ஆக வேண்டும் ..முடிந்த பிறகு அதில் உள்ள சாதக பாதகங்களை நாமே சரி செய்து கொள்வோம். என்ன என் தங்கச்சி தான் ரொம்ப கஷ்டப்பட போறாங்க ..அதை நினைச்சா தான் எனக்கு வருத்தமாக இருக்கிறது..மகன் மீது உன் மீதும் உயிரையே வைத்திருந்தார்கள் .பழைய பாசம் எல்லாம் இனி திரும்ப கிடைக்குமா என்று வேறு தெரியவில்லை.. “
“நீ என்ன சொன்னாலும் நான் கேட்க வேண்டியவரிடம் கேட்டு தெளிவு பெறுவேன் டா..இந்த உறவே இல்லாமல் போனாலும் போகலாம்.. அதையும் நான் ஏற்றுக் கொள்ள தான் வேண்டும்..”
நவீனும் இதை ஒத்துக் கொள்கிறான்.. “ஆமாடா வேறு வழியே இல்லை. உன்கிட்ட நானும் இதே தான் சொல்கிறேன். அதை எப்பொழுது செய்யப் போகிறாய் என்று தான் தெரியவில்லை.. “
“இன்னும் ஒரு மாதத்தில் அமிர்தனின் பிறந்தநாள் வரப் போகிறது .அதற்கு எல்லாரையும் அழைப்பேன் ..என்னுடைய ஆதி அண்ணாவையும் தான் ..முதல் நாள் வைத்து என்னுடைய சந்தேகங்களை எல்லாம் கேட்டு தெளிவு செய்து கொள்கிறேன் .. “
இந்த டீலுக்கு நவீனும் சரி என ஒத்துக் கொள்கிறான் ..
மனதிற்குள் பிரளயமாய் கிளம்பும் இந்த பிரச்சனையை அடக்கி வைத்துக் கொண்டு வீட்டில் குதூகலமாய் நடிப்பது என்பது மிகவும் சிரமமாக இருக்கிறது அரவிந்துக்கு .. சில சமயம் மனைவியையும் குழந்தையையும் பார்க்கவே கோபமாக வருகிறது..
ஆனாலும் அவள் வாயும் வயுறுமாக இருக்கும் நேரம் மனசை கஷ்டப்படுத்தக் கூடாது என்று பல்லை கடித்துக் கொண்டு பொறுமை காக்கிறான்..
இடையில் அவனுடைய ஆதி அண்ணாவிடம் பேசுகிறான் ..பிறந்தநாள் நேரத்தில் அவரிடம் கூறினால் டிக்கெட் போட சிரமப்படுவாரே என்று நவீனிடம் பேசிய மறுநாளே அவரிடம் பேசுகிறான்..
” அண்ணா இந்த முறை என் பிள்ளையின் பிறந்தநாளுக்கு குடும்பத்துடன் இங்கு வரவேண்டும் .. “
அப்பொழுது தான் அவரும் அந்த இனிப்பான செய்தியை கூறுகிறார். நாங்களே உங்கள் வீட்டுக்கு வரவேண்டும் என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.. உன்னிடம் செய்தியை சொல்லாமல் இருந்ததற்கு என்னை மன்னித்துக் கொள்ளடா.. சஸ்பென்சாக வீட்டிற்கு வரலாம் என்று இருந்தோம்.. நீயே கூப்பிட்டு விட்டாயா.. அதனால இனி அந்த ரகசியத்தை மறைக்க முடியாது ..மன்னித்து விடடா நான் உன்னிடம் ஒரு உண்மையை கூறுகிறேன்..”
” நான் என் மனைவி என் மகள் என் மகன் நான்கு பேரும் தான் வரப் போகிறோம்.. ” சாதாரணமாக செய்தியை கேட்டவன் மகன் என்ற பிறகு தான் புரிந்து கொள்கிறான்..
“அப்படியா அண்ணா வாழ்த்துக்கள்.. சொல்லவே இல்லை பார்த்தீர்களா..அதே மாதிரி நானும் உங்களிடம் ஒன்றை மறைத்து வைத்திருக்கிறேன் ..நீங்கள் பிறந்தநாள் அன்று வந்து பார்த்துக் கொள்ளுங்கள் .. “அவன் மித்ரா மாசமாக இருப்பதை மனதில் வைத்துக் கொண்டுதான் கூறுகிறான்.
ஆதி உடனே கெஞ்ச தொடங்குகிறான்.. டேய் டேய் எனக்கு என்னுடைய சூழ்நிலை தான் காரணம்டா. உன்னிடம் சொல்ல முடியாததற்கு ..இதோ மகன் பிறந்து மூன்று மாதம் ஆகிறது ..இன்றே நாங்கள் டிக்கெட்டை பதிவு செய்து விடுவோம். பிறந்தநாள் வந்து உங்கள் வீட்டில் இறங்கி விடுவோம் ..ஆனால் நீ மட்டும் சஸ்பென்சாக வைக்காதடா ..என்ன என்று சொல்லுடா .. “
” சரி அண்ணா உங்களை பார்த்தால் பாவமாக இருக்கிறது .அதனால் உண்மையை சொல்லி விடுகிறேன்.. எனக்கும் இரண்டாவது குழந்தை பிறக்கப் போகிறது. மித்ராவுக்கு இப்பொழுது ஆறு மாதம் நடக்கிறது. ” என்றதும் வாழ்த்துக்கள் சொல்லி சந்தோஷப் படுகிறார் ..
தொடரும்.
