அத்தியாயம் 31

அத்தியாயம் 31

தன் மனதில் உள்ள எண்ணங்களை எல்லாம் தன் மனைவியிடம் கூறிய தீரன் எதிர்பாராத நேரமாக பார்த்து அவளுடைய கையை டக்கென்று பிடித்து அதில் அந்த பரிசு  பொருளை திணித்தான்..

ஆச்சரியமும் அதிர்ச்சியும் கலந்த பார்வையுடன் மித்ரா அவனை பார்த்துக் கொண்டிருந்தாள், நடப்பதெல்லாம் கனவா அல்லது நினைவா என்று..!!

நிச்சயம் கனவல்ல என்பதற்கு சாட்சியாக இப்பொழுது அவளுடைய கையை உரசி கொண்டு அவன் கொடுத்த பரிசு பொருள் அமர்ந்திருந்தது..

பதில் எதுவும் கூறாமல்  மெதுவாக அந்த பரிசு பொருளை பிரித்துப் பார்த்தாள்..

என்ன பரிசாக இருக்கும்?? இவன் வாழ்த்து சொன்னதே பெரிய விஷயம்,சொல்ல போனால் இருப்பதிலேயே பெரிய அதிசயம் அது தான்..

இதில் இவன் பரிசு வேற தருகிறானே?? இது அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருக்கிறதே!!

இதுவரைக்கும் தன்னுடைய வாழ்வில் நடக்காத ஆச்சர்யமூட்டும் விஷயங்கள் எல்லாம் ஒரே நாளில் ஒரே நேரத்தில் நடப்பது போல் உணர்ந்தாள் அவள்..

இதுவரைக்கும் யாரும் அவளுக்கு எந்த பரிசும் கொடுத்ததும் கிடையாது.. மனதார வாழ்த்து எதுவும் சொன்னதும் கிடையாது..

முதல்முறையாக இது இரண்டையுமே அவன் வாரி வழங்கவும் அவள் திக்கு முக்காடி போய்விட்டாள்..!!

அதற்குள் என்ன இருக்கும் என்ற ஆவலுடனே அந்த பரிசு பொருளை பிரித்து பார்த்தாள்..

அது ஏதோ பார்ப்பதற்கு சிறிய போட்டோ ஃபிரேம் போல தான் காட்சியளித்தது..

யாருடைய போட்டோவோ உள்ளே இருக்கிறது.. ஒருவேளை கல்யாண போட்டோவாக இருக்குமோ?? என்று யோசித்துக் கொண்டே அந்த ஃபிரேமை திருப்பி பார்க்க..

அதைப் பார்த்ததும் கண்களிலிருந்து மடை திறந்த வெள்ளமாய் கண்ணீர் கொட்டியது அவளுக்கு..!!

பேச முடியாமல் திணறிப் போய்விட்டாள் அவள்.. சிறுவயதிலிருந்து படித்து கரைத்துக் குடித்த தமிழ் எழுத்துக்கள் மொத்தமும் ஒரே நேரத்தில் மறந்து போனது போல தடுமாறி போனாள் பேசுவதற்கு..!!

” இது.. இது.. எப்…படி…?? எப்படி தீரன் ?? நிஜமாவே நா இத.. நா.. நா.. ஹக்….”, அதற்கு மேல அவளுக்கு வார்த்தையே வரவில்லை தேம்பித் தேம்பி அழுது கொண்டே மண்டியிட்டாள்  தரையில்..!!

அவளின் இந்த உணர்ச்சி குவியலான  தருணத்திற்கு காரணம் அந்த போட்டோ ஃப்ரேம் தான்..!!

அதில்…

அவளும் அவளுடைய அன்னையும் கட்டி அணைத்தபடி முத்தமிடுவது போன்ற புகைப்படம் இருந்தது..

ஒருமுறை கூட தன் அன்னையுடன் அவள் புகைப்படம் எடுத்துக் கொண்டதே கிடையாது..

சொல்லப்போனால் தன் அன்னையுடன் ஒரு முறையாவது போட்டோ எடுத்திருக்கலாம் அல்லவா?? என்ற ஏக்கம் பல நாளாகவே  இருந்தது அவளுக்கு..!!

அந்த ஆசையை எப்பொழுதும் நிறைவேற்ற முடியாது என்கிற நிதர்சனத்தை உணர்ந்து கொண்ட பிறகு அவளுக்கு அது நிறைவேறாத ஆசையாகவே தங்கி விட்டது மனதில்..!!

ஆனால் எதிர்பாராத நேரத்தில் ஏற்பட்ட அதிர்ச்சி போல அவளுடைய இதயம் துடிக்க மறந்தது..

வாய் பேச மறுத்தது..

கண்கள் இமைக்க மறந்தது..!!

அப்படி என்ன பெரிய பரிசு தர போகிறான் ஒரு முறை பார்த்துவிட்டு பிறகு அதை அவனிடமே திருப்பிக் கொடுத்து விடலாம் என்கிற எண்ணத்தில் தான் இருந்தாள்..

அவன் கூறிய வாழ்த்தே போதும்.. அவனுடைய பரிசு தேவையில்லை ஏற்கனவே அவனிடம் வாங்கிய கடனை வேறு அடைக்காமல் இருக்கிறேன் இதில் பரிசை வேறு கொடுத்து மேலும் கடனாளியாக்கி விடுவானோ என்கிற அச்சத்தில் தான் அவள் இருந்தாள்..

ஆனால் வாங்கிய பரிசை இப்பொழுது அவனுக்கு திருப்பி தரும் எண்ணம் அவளுக்கு துளி கூட கிடையாது..

நீண்ட நாட்களாக.. ஏன்  பல வருடங்களாக  நிறைவேறாமல் கிடந்த ஆசை அல்லவா அது??!!

இப்போது அந்த பொக்கிஷம் அவள் கைகளில் கை குழந்தையாய் தவழ்ந்து கொண்டிருக்க..அதை எப்படி அவள் தூக்கிக் கொடுப்பாள் அவனிடம்??!!

அந்த புகைப்படத்தை ஆற தழுவிக்கொண்டு ஓவென்று கதறி அழுது கொண்டிருந்தாள் மித்ரா..

நன்றாக அழுது முடிக்கட்டும் என்று கைகட்டி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் தீரன்.. சில நிமிடங்கள் கழித்து அவளின் தோள் தொட்டு எழுப்பினான்.

வற்றாத கங்கையாய் வழிந்து கொண்டிருக்கும் கண்ணீரை அவனுடைய ஒற்றை விரலால் ஒற்றி எடுத்தான்..

“ அழாத மித்து.. உனக்கு இந்த பரிசு பிடிச்சிருக்கா??”

பிடிச்சிருக்கா வா?? எப்பேர்பட்ட பொக்கிஷத்தை கொடுத்திருக்கிறான் இதை போய்  பிடிக்காமல் இருக்குமா அவளுக்கு??

அவன் அப்படி கேட்ட அடுத்த கணமே அவனை கட்டி அணைத்துக் கொண்டு கதறி அழுதாள்..

” தேங்க்யூ தீரா..  தேங்க்யூ சோ மச் நிஜமாவே இந்த பரிசை நான் எப்பொழுதும் மறக்கவே மாட்டேன் ரொம்பவே நன்றி நான் இத எதிர்பார்க்கவே இல்ல.. தேங்க்யூ தேங்க்யூ சோ மச்..”, வாய் ஓயாமல் அவனுக்கு நன்றி உரைத்துக் கொண்டே இருந்தாள் அவள்.

அழுது அழுது பெருமூச்சு வாங்கிக் கொண்டிருந்த அவளின் முதுகை மெதுவாக நீவி விட்டான் அவன்..

அழுது அழுது ஓய்ந்து போன குழந்தை தன் தாய் மடியில் ஆறுதலை தேடுவது போல அவன் மார்பில் சாய்ந்து கொண்டு கண்மூடி நின்றாள்..

இப்படியே இருவரும் எத்தனை நேரம் நின்று கொண்டிருந்தார்களோ தெரியவில்லை..

” அம்மாடி மித்ரா,அடேய் தீரன்.. ரெண்டு பேரும் கீழே இறங்கி வாங்க சாப்பாடு தயாரா இருக்கு சாப்பிட்டு கிளம்புவீங்களாம் “, கீழிருந்து வசுந்தரா அழைக்க..

இருவரும் உடனே விலகி நின்றனர்..

நீண்ட நேரம் அழுததால் அவளுடைய கண்கள் கன்னம் எல்லாம் சிவந்து லேசாக உப்பி கிடந்தது கன்னங்கள்..

இயற்கையாகவே மின்னும் அவளின் மாம்பழ  கன்னங்கள் இப்போது அழுத காரணத்தினால் நன்றாக சிவந்து கிடந்தது..

அவன் மார்பில் சாய்ந்து கிடந்ததால்  அவனின் மேல் சட்டை முழுக்க ஈரம் படிந்திருந்தது..

லேசாக அவளுடைய தலை முடி கலைந்திருக்க அதை சரி செய்து கொண்டு குளியலறை நோக்கி ஓடினாள்..

மெல்லிய புன்னகை ஒன்று அவன் உதட்டில் பூக்க ஓடும் தன் மனைவியை குறும்பாக பார்த்தான் தீரன்..❤️❤️

குளித்து முடித்து வேகமாக வெளியே வந்த மித்ரா கபோர்ட்டில் உள்ள தன்னுடைய ஆடைகளை எடுத்து அணிந்து கொண்டாள்..

தீரன் கொடுத்த பரிசை பத்திரமாக எடுத்து தன்னுடைய பெட்டிக்குள்  வைத்துக் கொண்டாள்..

நிஜமாகவே இந்த பரிசை நான் அவனிடமிருந்து எதிர்பார்க்கவே இல்லை.. எப்படி அவனுக்கு இது தெரிந்தது?? 

இது என்னுடைய நீண்ட நாள் ஆசை அல்லவா எப்படி கண்டுபிடித்தான்? எப்படி அவனுக்கு இன்று தான் என்னுடைய பிறந்தநாள் என்று தெரிந்தது??, இப்படி விடை தெரியாத கேள்விகள் அவள் மனதில் ஏராளமாக எழும்பியது..!!

ஆனால் எதற்கும் விடை தெரியவில்லை விடை அறிந்து கொள்ளலாம் என்று பார்த்தால் அந்த கேள்வியின் நாயகன் அங்கு இருக்கவே இல்லை ..

அறை முழுவதும் தேடிப் பார்த்தாள் எங்கும் இல்லை..

 ஒருவேளை கிளம்பி அலுவலகம் சென்று விட்டானோ என்று யோசித்தவள் வேக வேகமாக கைப்பையை எடுத்துக் கொண்டு படியில் இறங்கி ஓடினாள்.

“ வாம்மா எத்தனை நேரம் கூப்பிட்டுக்கிட்டே இருந்தேன் உன் காதில் விழலையா ?? சரி சீக்கிரம் வா சாப்பிடலாம் இன்னிக்கு லேட் ஆயிடுச்சு போல நேரம் கழிச்சு எந்திருச்சியா??”

அவர் கேட்ட கேள்விக்கு எதற்கும் பதில் அளிக்காமல் அவளின் கண்கள் என்னவோ வீட்டை சுற்றி சுற்றி வந்தது எங்காவது தன்னுடைய கணவன் தென்படுகிறானா என்று..

“ என்னம்மா யாரை தேடுற நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கேன் நீ பதிலே சொல்லல என்ன ஆச்சு??”

“ இல்ல.. அது..  வந்து.. அவரு.. அவரு கிளம்பிட்டாரா அத்தை??”

” அது சரி உன்னுடைய புருஷனை தான் இப்படி தேடுனியோ…அவன் அப்போவே கிளம்பிட்டான்..உனக்கு தெரியாதா??”, என்று கேட்டார்.

இன்னைக்கும் சீக்கிரம் கிளம்பிட்டானா??

இவனுக்கு இதே பொழப்பா போச்சு அப்படி என்னதான் தலை போற வேலை பார்க்கிறானோ தெரியவில்லை.. ச்சே..!!

“ அத்தை எனக்கு சாப்பாடு வேண்டாம் நான் ஆபீஸ் கிளம்புறேன்..”

” எது சாப்பாடு வேணாமா அது சரி நீ சாப்பிடாமல் கிளம்பினா உன் புருஷன் என்னை ஒருவழி பண்ணிடுவான்.. தயவு செஞ்சு சாப்பிட்டு போம்மா”, என்றவர் உடனே ஒரு தட்டை கையில் எடுத்து அவளுக்கு சாப்பாட்டை பரிமாறினார்..

வழக்கமாக இட்லி தோசை தான் காலை உணவாக இருக்கும் இன்றும் அதேதான் இருக்கும் என்று நினைத்து தட்டை வாங்கி பார்த்தவள் ஆச்சரியத்தில் வாய் பிளந்தாள்..

காரணம் அதில் இருந்தது அவளுக்கு மிகவும் பிடித்த பால் கொழுக்கட்டை..

வெகு நாட்களாக இதை சாப்பிட வேண்டும் என்று அவளுக்கு அதீத ஆசை ஆனால் யார் செய்து கொடுப்பார்கள்?? தானாகவே செய்து சாப்பிடுவதற்கும் ஒரு சோம்பல்..

அதனால் இப்பொழுது அந்த பால் கொழுக்கட்டையை தட்டில் பார்க்கவும் அவளுக்கு மகிழ்ச்சி உண்டானது..

உடனே இரண்டு வாய் அள்ளி சாப்பிட.. அதன் ருசியில் கரைந்து போனாள்..

“ அத்தை.. எப்படி??  எனக்கு ரொம்ப பிடிச்சது இது.. எனக்காக செஞ்சீங்களா??”

” உனக்காக உன்னுடைய புருஷன் தான் செய்ய சொன்னான் அதனால் தான் நான் செஞ்சேன்.. உன் மேல அம்புட்டு பிரியம் போல அவனுக்கு..அப்புறம் இன்னொரு விஷயம், இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்”, என்று கூறி அவளை கட்டி அணைத்து உச்சி முகர்ந்து முத்தமிட்டார் அவர்.

அந்த அன்பில் அப்படியே கரைந்து போனவள் கண்ணீர் வடித்தாள்..

தாய் இல்லாத குறையை யாரிடமும் சொல்லி அழுதது கிடையாது..

அப்பன் இருந்தும் இல்லாததற்கு சமம்.. வாழ்க்கையே வெறுத்துப் போயிருந்த நிலையில் தான் அவள் ஏற்கனவே இருந்தாள்..

இப்பொழுது அவள் இந்த நிமிஷம் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த மகிழ்ச்சி எல்லாம் கிட்டத்தட்ட பாலைவனத்தில் பொழிந்து கொண்டிருக்கும் அடை மழைக்கு சமம்..!!

எப்படி ?? எப்படி?? எனக்கு பிடித்தது எல்லாம் பார்த்து பார்த்து எப்படி இவனால் செய்ய முடிகிறது ?? எப்படி இவனுக்கு இதெல்லாம் தெரிந்தது?? ஒன்றும் புரியவில்லையே..

நீண்ட நாள் ஆசையாக இருந்த அந்தப் புகைப்படத்தையும் எனக்கு பரிசளித்துவிட்டான் இதோ இப்பொழுது எனக்கு பிடித்த பால் கொழுக்கட்டை வேற செய்ய சொல்லி எனக்கு சாப்பிட கொடுக்க சொல்லி இருக்கிறான்..

 போதாது என்று எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி ஆச்சரியப்பட வைத்திருக்கிறான் இத்தனையும் அவன் எப்படி செய்தான் அவனுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?? என்று யோசித்து குழம்பியது அவளுடைய மனம்..!!

இவள் எல்லாவற்றையும் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே வாசலில் யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்க..

உடனே  இருவரும் திரும்பி வாசல் பக்கம் பார்த்தனர்..

அங்கே…!!

– தொடரும்..

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page