மிதுன் தன் கேபினுக்குள் நுழைய, “என்னடா மித்து… நல்ல ஃப்ரெஷ் ஏர் கிடைச்சது போல” அரவிந்த் கிண்டலாகக் கேட்டதும், “இருந்தாலும் நீ லிப்ஸ்டிக்கை துடைச்சுட்டே வந்திருக்கலாம்” சத்யாவும் அவனுடன் சேர்ந்து கொண்டான்.
மிதுன் வேகமாக செல்போன் ஸ்க்ரீனில் தன் முகம் பார்க்க, நண்பர்கள் சத்தமாகச் சிரித்தனர். கைக்குட்டையால் இதழைத் துடைத்துக் கொண்டிருந்தவன், தனது உள் உதட்டில் அவள் கோபத்தில் கடித்த தடத்தைப் பார்த்து வெட்கத்தில் இதழ் விரித்தான்.
“அடேங்கப்பா… காலேஜ்ல எந்தப் பொண்ணு வந்து ப்ரொபோஸ் பண்ணாலும் கண்டுக்காம இருந்த மித்துவா இது! நான் கூடச் சாமியாரா ஆகிடுவான்னு தான் நினைச்சேன்” நண்பர்கள் அவனிடம் குறும்பாகப் பேசிக் கொண்டிருக்க, “வேலையைப் பாருங்கடா…” என்றவன் சீட்டில் கண் மூடிச் சாய்ந்தான்.
“நாங்க வேலையைத்தான் பார்க்கிறோம். வேற எதுவுமே பார்க்கல டா” நண்பர்கள் கேலி பேசியபடி இருக்க, சிரித்திருந்தவனின் மனதில் சொல்லொணா வலி. ‘இந்த சின்ன இடைவெளி பெரிதாகிடுமோ?! அவளின் பிரிவு நிரந்தரமாகிவிடுமோ?!’ என்ற பயம் அவனைச் சூழ ஆரம்பித்தது.
நதியா, வைஷாலியோடு வீட்டிற்குத் திரும்பியவன், இளைப்பாறக்கூட நினைக்காமல் மடிக்கணினியுடன் பால்கனியில் அமர்ந்து ஏதோ ஒரு முக்கியமான வேலையில் மூழ்கியிருந்தான்.
கதிரவன் மறையும் பொழுதில், அறைக்குள் மிதுன் நுழைய… அவனைப் பார்த்ததும் முறைத்த நதியா, “நான் என் அம்மாவைக் கூப்பிட்டுட்டு இங்கிருந்து கிளம்புறேன்” டிராலிப் பெட்டியுடன் தயாராக நின்றிருந்தாள்.
“எங்க போற? உங்க வீட்டுக்கா?” அவன் கோபமாய் ஒற்றைப் புருவத்தை உயர்த்திக் கேட்க,
“நான் எங்கேயோ போறேன். உங்களுக்கு என்ன? நீங்க என்னோட அம்மாவுக்காகச் செலவு பண்ண பணத்தை, ஏதாவது ஒரு வேலைக்குப் போய் வர்ற சேலரில இருந்து மாசம் மாசம் அனுப்பிடுறேன்” என்றவள் நகர முயல, அவளது கையை இறுக்கமாகப் பிடித்துத் தடுத்தான்.
“அவ்ளோ நாளா உன்னை விடாதவன், நீ எனக்கு முழுசா உரிமையான அப்புறம் விடுவேன்னு நினைக்கிறியா?” அவன் கேலியாய்ச் சிரிக்க, அவனிடம் சிக்கியிருந்த கையை இழுத்தாள்.
“நதிமா… லவ் யூ டா! என்னை விட்டுப் போகாத பிளீஸ்!” அதுவரை அதிகாரமாகக் கேட்ட குரல் இப்போது தழுதழுத்தது. மிதுன் சக்கரவர்த்தி தன் கம்பீரத்தை இழந்து மொத்தமாய் அவளிடம் சரணடைந்தான்.
“எதுக்குத் தேவையில்லாம என் பேர்ல மால் வாங்குனீங்க? கார், வீடு எல்லாம் என்னோட பேர்ல வாங்குறீங்க?”
“இப்போ வரைக்கும் எனக்குன்னு எந்த சொத்தும் இல்ல. எல்லாமே தம்பிங்க, தங்கச்சி பேர்ல தான் இருக்கு. நான் இல்லாதப்போ உனக்கு இருக்க வீடு, இன்கம் சோர்ஸுக்காக அந்த மால். ஒரு ஹஸ்பண்ட் டா உன்னைச் செட்டில் பண்ண வேண்டியது என்னோட பொறுப்புதானே?”
ஏனோ அவனது எந்த விளக்கத்தையும் அவள் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. முதன்முதலில் இங்கு வந்தபோது பார்த்த மிதுனுக்கும், இப்போது முன்னே நிற்பவனுக்கும் இடையே இருக்கும் அந்த அதீத வித்தியாசமே அவளைப் பயமுறுத்துகிறது. ஒருவேளை, அவன் மீண்டும் பழைய மிதுனாக மாறிவிட்டால்…?
“இல்ல… என்னை கிஸ் பண்ணனும்… அதுக்காகத் தானே இதெல்லாம் பண்ணீங்க?!” அவள் முகத்தில் கசப்பான புன்னகை அரும்பியது.
அவளை இழுத்து அணைத்துக்கொண்டவன், “ஏன் அதெல்லாம் பண்ணாம உன்னை நான் எடுத்துக்க முடியாதுன்னு நினைக்கிறியா? லவ் யூ டா…” என்று சிரித்தவாறு அவள் காதுமடலைக் கடித்தான்.
“என்னை விடுங்க. லவ் யூ சொல்லாதீங்க. உங்க பொய்யான காதலைக் கேட்டா எனக்குக் கடுப்பா இருக்கு.” கோபம் குறையாமல் வார்த்தைகளை வீசினாள்.
அவளது கோபமான பேச்சை ஒரு மெல்லியப் புன்னகையோடு எதிர்கொண்டவன், அவளைத் தன் பிடிக்குள் இன்னும் இறுக்கினான்.
“அப்படித்தான் சொல்லுவேன். லவ் யூ நதிமா… லவ் யூ! நீ பதிலுக்கு லவ் யூ சொல்ற வரைக்கும் சொல்லுவேன். நான் உயிரோட இருக்கிற வரைக்கும் சொல்லுவேன்டா…” என்றவன் அவளது கழுத்து வளைவிற்குள் புகுந்திருந்தான்.
“மிதுன் விடுங்க…” நதியா அவனைத் தள்ளிவிட முயல, அவளோடு மெத்தையில் விழுந்தவன் முத்தத்தால் ஆட்கொள்ள ஆரம்பித்தான். “மிதுனா சொல்லு… மிதுனா சொல்லுடா!” காதலால் தன்னவளை வசப்படுத்த நினைத்து, அவளுடைய இதழ்களை ஆக்கிரமித்தான்.
அதுவரை அவனிடம் போராடியவள், மெல்ல அவன் அள்ளித் தந்த முத்தங்களில் கரைந்து, அவனது பின்னந்தலை முடிக்குள் கைவிரல்களை நுழைத்து, இறுக்கமாக அணைத்துக்கொண்டாள்.
அவளது இதழ்களில் தன் முத்திரையை அழுத்தமாகப் பதித்துவிட்டுப் புன்னகைத்தபடி அவள் மீதிருந்து எழுந்தவன், “நீயெல்லாம் என்னோட ஒரு கிஸ்க்குத் தாங்க மாட்டேங்குற… எப்படி என்னை விட்டு பிரிஞ்சு இருப்பேன்னு நம்புற?” என உரிமையோடு சீண்டிட, பதிலேதும் பேசாமல் அவனைப் பார்த்தாள்.
‘தன்னையறியாமல் அவனது தீண்டலிலும், காதலிலும், முத்தங்களிலும் அவள் கரைந்து போகிறாள் என்பது அவளுக்கே தெரியும். அதற்குப் பயந்துதான் இங்கிருந்து செல்லவேண்டும் என யோசித்தாள். ஆனால், அது சாத்தியமில்லை. சொந்த மனமே தனக்கு எதிராகச் செயல்படுவதைக் கண்டு தன்மீதே அவளுக்குக் கோபம் வந்தது.
என்ன நினைத்தாளோ… மின்னல் வேகத்தில் எழுந்தவள், அங்கு மேசையிலிருந்த பென் ஸ்டாண்டில் ஒரு பேனாவை எடுத்து அதன் மூடியைத் தூக்கியெறிந்தாள். அடுத்த நொடி, கூர்மையான அந்தப் பேனாமுனையை வலது உள்ளங்கையில் குத்திக்கொண்டாள். அவளைப் பார்த்திருந்தவனோ அதிர்ந்து எழுந்து சென்று, அவள் மீண்டும் குத்துவதற்குள் கையை இறுக்கமாகப் பிடித்துத் தடுத்திருந்தான்.
“நதிமா… ஏன் இப்படி பண்ற?” என்றவன், அவளது கையிலிருந்த பேனாவைப் பிடுங்கி எறிந்தான்.
“எனக்குக் கஷ்டமா இருக்கு மிதுனா… ரொம்ப வலிக்குது. இதைவிட மனசுதான் ரொம்ப வலிக்குது. என்னால தாங்க முடியலடா…” காதல் காயம் தந்தவனிடமே ஆறுதல் தேடி, அவன் மார்பில் சாய்ந்தாள்.
அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவளை அணைத்தால் கூட காயப்படுவாளோ என்று பயந்தவன், எதுவும் செய்யாமல் இருந்தான். அவளை மெத்தையில் அமர வைத்தவன், வேகமாக டாக்டரை போன் செய்து வரவழைத்தான்.
“பெரிய காயம் ஒண்ணும் இல்ல. டிடி இன்ஜெக்ஷன் போடுறேன்” என்றவர் காயத்திற்கு மருந்து வைத்து கட்டினார். டாக்டரிடம் தெரியாமல் ஏதோ கூர்மையான பொருள் குத்தியதாகச் சொல்லி மிதுன் சமாளித்திருந்தான். எதுவுமே பேசாமல் நதியா இறுகிப் போயிருந்தாள்.
மனதின் பதற்றம் இன்னும் தணியாமல் இருக்க, ஒற்றைக் கையால் நெற்றியை நீவியபடி அவளையே பார்த்திருந்தான் மிதுன். இரவு உணவை அறைக்கே வரவழைத்தவன், மெல்ல அவளருகே அமர்ந்தான். ஒரு துண்டு இட்லியைப் பிட்டு, அவளுக்கு ஊட்டுவதற்காக அவளது இதழ்களுக்கு அருகே கொண்டு சென்றான்.
அவளோ சலனமின்றி அமர்ந்திருக்க, “சாப்பிடு நதிமா… டேப்லெட் போடணும்ல…” அவன் கெஞ்சும் குரலில் கேட்டும் அவளது இறுகிய மனம் அசையவில்லை.
மிதுன் வைஷாலியைப் போன் செய்து அறைக்கு வரவழைத்தான். அங்கு வந்தவள் நதியாவின் கையிலிருந்த கட்டைப் பார்த்துப் பதறிப்போனாள். “என்னாச்சு அண்ணி, கைல என்ன காயம்?” அக்கறையாக அவளுக்கருகில் அமர்ந்து, அவளது கையைப் பிடித்தபடி கண்கலங்கினாள் வைஷு.
“ஒண்ணும் இல்லடா… ஏதோ எடுக்கிறேன்னு டேபிள் டிராயர்ல தேடிட்டு இருக்கும் போது பேனா குத்திடுச்சு. டாக்டர் இன்ஜெக்ஷன் போட்டாங்க. நீ அவளுக்கு ஊட்டி விடு… டேப்லெட் போடணும்” என மிதுன் சமாளிக்க, “நீங்களே ஊட்டிவிட வேண்டியதுதான” வைஷு விளையாட்டாய்ப் பேசிட, அவன் பதில் சொல்வதற்குள் குறுக்கிட்ட நதியா, “நீயே ஊட்டிவிடு வைஷு… ப்ளீஸ்” என்றாள்.
நதியா சாப்பிட்டு முடித்ததும் மாத்திரைகளை எடுத்துத் தந்தவன், எந்த மாத்திரை எப்போது தர வேண்டும் என்று சொல்லியபின், டிரெஸ்ஸிங் அறைக்குச் சென்று உடை மாற்றி டிராலியுடன் வெளியே வந்தான்.
நதியாவும் வைஷுவும் அவனைக் கேள்வியாய்ப் பார்த்திருக்க, “வைஷு.. அண்ணனுக்கு ஒரு பிசினஸ் மீட் இருக்கு. நான் வர டூ, த்ரீ டேய்ஸ் ஆகும். அதுவரைக்கும் உன்னோட அண்ணியைப் பத்திரமா பார்த்துக்க வேண்டியது உன்னோட பொறுப்பு. நீ இங்கேயே இரு. டாக்டர் நாளைக்கு வந்து அவளோட காயத்துக்கு டிரெஸ்ஸிங் பண்ணுவாங்க” என்றுவிட்டு, மனைவியிடம் திரும்பி, “நான் கிளம்புறேன் நதிமா… லவ் யூ டா! டேக் கேர்” கனத்த மனதுடன் அங்கிருந்து வெளியேறினான்.
ஏனோ அருகிலிருந்து தன்னவளைத் தொந்தரவு செய்ய விரும்பாதவன், பொய்யாக ஒரு காரணத்தைச் சொல்லிக் கிளம்பியிருந்தான். அவளை மீண்டும் தொலைத்துவிடக் கூடாது என நினைத்துச் சென்றான்.
வைஷாலி அவர்களின் முகத்தை பார்த்தே, இருவருக்குள்ளும் ஏதோ பிரச்சனை என்று தெரிந்துகொண்டவள், “அண்ணி உங்களுக்கும் அண்ணனுக்கும் எதுவும் சண்டையா?” என்று கேட்க, “வைஷு… உன் அண்ணனைப் பத்தி என்கிட்ட எதுவும் பேசாத” என்று படுத்துக்கொண்டாள்.
“அச்சோ… எங்க நதியா அண்ணிக்கு கோபம் கூட வருமா? பாவம் எங்க அண்ணன்தான் உங்ககிட்ட மாட்டிக்கிட்டார் போல. சூப்பர் அண்ணி… நீங்க கோச்சுக்கிட்டுப் போகாம எங்க அண்ணனைத் துரத்தி விட்டீங்க பாருங்க. உங்களைப் பாராட்டுறேன்!” எனக் கைதட்டி வேடிக்கையாய்ப் பேசியவளை பார்த்து நதியாவும் சிரித்துவிட்டாள்.
இருவரும் ஏதேதோ கதைகளைப் பேசியபடி இருக்க, வைஷு தூங்கிவிட்டாள். நதியாவிற்கு தூக்கமே வரவில்லை. காதலோடு பேசும் கண்களில் அவன் வலியை ஏந்திச் சென்றிருக்க, அவளுக்கும் வலித்தது.
என்றோ அவளது ஆழ்மனதில் புதைந்து போன வலிகள், இன்று அவன் தரும் மகிழ்ச்சியை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன. மிதுன் செய்யும் அனைத்திற்கும் நியாயங்கள் இருந்தாலும், அவளது செய்கைக்கும் நியாயங்கள் இருக்கின்றன.
மறுநாள் காலை வைஷு கல்லூரிக்குச் சென்றிருக்க, நதியாவின் நினைவெல்லாம் மிதுன் நிறைந்திருந்தான். அவளது நினைவில் சிரித்தவாறு மெத்தையில் அமர்ந்திருந்தான். அவள் அசந்து தூக்கத்திலிருக்க, கனவில் அவளை மார்போடு அணைத்தபடி அவள் தலையை வருடியவாறு இருந்தான்.
திடுக்கிட்டு எழுந்தமர்ந்தவள் கண்ணீரோடு அவனுக்கு போனில் அழைத்தாள். அவன், “ஹலோ நதிமா…” என்றதும் பேசமுடியாமல் அழைப்பைத் துண்டித்தாள். எழுந்து சாந்தியைப் பார்க்கச் சென்றவள், அவர் மடியில் படுத்துக்கொண்டாள்.
“நதியாமா… இன்னும் நீ சின்னக் குழந்தையா? தெரியாம கைல இப்படியா காயம் பண்ணிக்குவாங்க? இவ்வளவு பெரிய குடும்பத்துல உனக்கு மூத்த மருமகளா மரியாதை தராங்க. நீயும் பொறுப்பா, கவனமா இருக்கணும். அம்மாவுக்கு இப்போ கொஞ்சம் பரவாயில்லை, நல்லா நடக்குறேன். என்னோட சித்தி பையன் அசோகன் போத்தனூர்ல இருக்கானே… நான் அவன் வீட்டுக்குப் போறேன், எனக்கு அவனோட கொரியர் கம்பெனில மேற்பார்வை பார்க்கிற வேலை தர்றதா சொன்னான். வேலைக்குப் போயிட்டு என்னை நானே பார்த்துப்பேன்” என்று சாந்தி சொன்னதும், சட்டென்று அவர் மடியிலிருந்து எழுந்தவள்,
“என்னம்மா… என்னை விட்டுட்டு எங்க போகணும்னு சொல்றீங்க. நீங்க எங்க போனாலும் என்னையும் கூப்பிட்டுப் போங்க” என்றவளின் விழிகள் நீரில் நனைந்தன.
“உனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு. நீ உன்னோட குடும்பத்தைப் பாரு. எத்தனை நாளைக்கு மருமகன் வீட்ல இருக்க முடியும். யாராவது சங்கடப்படுறதுக்குள்ள நானே போயிடுறது தான் நல்லது”
“எனக்குத் தெரியாது. அவர் வந்தா என்னைத்தான் திட்டுவார். நீங்க அவர் வந்த பிறகு சொல்லுங்க, உங்களை விடமாட்டார்” தாயிடம் அவனைப் பெருமையாகப் பேசியவள், ‘மிதுன் எனக்கு எவ்வளவோ நல்லது செய்திருக்கிறான். நான் ஏன் நன்றிகெட்டவள் போல நடந்துகொள்கிறேன்?’ யோசனையோடு அமர்ந்திருந்தாள்.
“சாந்திம்மா… வாங்க தோட்டத்துல ஒரு வாக் போயிட்டு வரலாம்” தாயை உடன் அழைத்துச் சென்றவள், சிறிது தூரம் நடந்துவிட்டு, அங்கே இருந்த கல்பலகையில் அவரை அமர வைக்க, அங்கு வந்த ருக்மணியும், ராதாவும் சாந்தியுடன் பேசிக் கொண்டிருந்தனர்.
மிதுனின் கார் வாசலுக்கு வந்து நின்றதும், அவன் வந்துவிட்டான் என்ற ஆவலில் நதியா காருக்கு அருகே சென்றாள். வைஷுவும் விஷ்ணுவும் மட்டும் அதிலிருந்து இறங்க, ஏமாற்றத்தில் முகம் சுருங்கினாள்.
“என்ன அண்ணி… யாரோ யாரையோ தேடுற மாதிரி இருக்கு?” வைஷாலி சுட்டித்தனமாய்ப் பேசியதும், “அடி வாங்கப் போற பாரு!” நதியா கையோங்கிட, அவள் வீட்டிற்குள் ஓடிவிட்டாள் .
“ஹலோ பிரதர்.. உங்க பாஸ் எங்க?” நதியா கண்கள் சுருக்கி விஷ்ணுவிடம் வினவ,
“மேடம்… உங்க புருஷன் எங்க போனார்னு உங்களுக்கே தெரியலைன்னா எனக்கெப்படித் தெரியும்?” என்று கிண்டலாகச் சிரித்தான்.
“உங்க கூடத்தான் எப்போ பார்த்தாலும் இருக்கார். அப்போ உங்களுக்குத் தானே தெரியும்?”
“இந்தாமா… ரொம்பப் பேசாத. நீதான் உன் புருஷனை வீட்டை விட்டு அடிச்சுத் துரத்திட்டியாம்ல… அந்த சின்ன வானரம் சொல்லிச்சு. இதுல உங்க ரெண்டு பேருக்கும் நான் சமாதானப் புறா வேலை வேற பார்க்கணுமாம். ஒரு மனுஷன் எத்தனை வேலையைத்தான் பார்க்கிறது? கஷ்டமா இருக்கா இல்லையா?” அவன் கேலியாகப் பேசியதும்.
“ஹலோ… மரியாதை… மரியாதை” சுட்டுவிரலை நீட்டி மிரட்டினாள்.
“ஹே… என்னாச்சு நதியா? அவர் எங்க போயிருக்கார்னு தெரியல. அடிக்கடி இப்படித்தான் ஆள் எஸ்கேப் ஆகிடுறார். ஒரே மர்மமாதான் இருக்கு. இப்படிக் கேட்கிறது தப்புதான். இருந்தாலும் ஒரு வெல்விஷரா கேட்கிறேன்… உனக்கும் அவருக்கும் என்னதான் பிரச்சனை?” அவன் உரிமையோடு விசாரிக்க, மௌனமாக இருந்தாள்.
“மறுபடியும் அக்ரிமெண்ட் அது இதுன்னு பேசினாரா?”
“இல்ல…”
“அப்புறமென்ன? அவர் தான் ஏதோ காலேஜ் லவ்வர் பாய் மாதிரி உன்னைச் சுத்திச் சுத்தி வந்து லவ் பண்ணிக்கிட்டு ‘லவ் மோட்’ல சுத்திக்கிட்டு இருந்தாரே… இப்போ என்னாச்சு?”
“விச்சு… உங்க அப்பா எப்படி இருக்காங்க? டாக்டர் என்ன சொன்னாங்க?” நதியா பேச்சை மாற்றியதிலேயே, தவறு அவள் மீதுதான் என்று விஷ்ணுவிற்குத் தெரிந்துபோனது.
“மேடம்… எங்க அப்பாவை நான் பார்த்துக்கிறேன். நீ ஒன் ஊட்டுக்காரரை நல்லா பார்த்துக்கிற வேலையைப் பாரு. எப்போ என்ன பிரச்சனைனாலும் எனக்கு கால் பண்ணு. ஒரு அண்ணனா என்னோட ஹெல்ப் உனக்கு எப்பவும் இருக்கும்” என்று வாஞ்சையோடு அவள் தலையை வருடியவன், அங்கிருந்து கிளம்பினான்.
❤️🔥 மோகம் தீர்ப்பாள் ❤️🔥
அடுத்த 2 அத்தியாயங்களில் கிளைமேக்ஸ் வரும். நாணயத்துக்கு ரெண்டு பக்கம் இருக்கிற மாதிரி எல்லா கதைகளுக்கும் சந்தோஷம், சோகம்னு ரெண்டு விதமான முடிவு இருக்கும். என் நாவலோடு பயணிப்பவர்கள் உங்களுக்கு என்ன மாதிரி முடிவு வேணும்னு சொல்லுங்க… இந்த நாவல் முடிவுல ஒரு சர்ப்ரைஸ் கூட வச்சிருக்கேன். காத்திருங்கள்… தொடர்ந்து ஆதரவு தாருங்கள்… பேரன்புகளும் நன்றிகளும்!!!
