அன்று ஆத்திரத்தில் நதியா கழற்றியெறிந்த மோதிரத்தை அறையைச் சுத்தம் செய்யும் பணியாளர்கள் எடுத்துத் தந்திருக்க, அதை லாக்கரில் வைத்திருந்தவள், இப்போது எடுத்து வந்து கைகளில் வைத்துப்பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
அது கைதவறிக் கீழே விழுந்துவிட, கட்டிலுக்குக் கீழே கையை விட்டுத் தேடினாள். ஒருவழியாக மோதிரத்தைக் கண்டெடுத்த சந்தோஷத்தில் அவள் சட்டென நிமிர்ந்து எழ, எதிர்பாராத விதமாகக் கட்டிலின் விளிம்பில் சிக்கி அவளது தாலிக்கயிறு அறுந்து விழுந்தது.
ஏதோ இனம்புரியாத அச்சம் ஒன்று அவள் மனதிற்குள் பரவ, பதறிப்போனவள் வேகமாக அதைக் கையில் எடுத்தாள். நதியா தாலி சென்டிமென்ட் பார்க்காத நவீனயுகப் பெண்தான். இருந்தாலும், அவன் அருகாமையில் இல்லாத இந்தப் பிரிவு… அவனது காதலையும் தவிப்பையும் அவளுக்குப் புரியவைத்திருந்தது. அதை எடுத்து கழுத்தில் கட்டிக்கொண்டவள், மிதுனுக்குப் போன் செய்தாள். அவன் அழைப்பை ஏற்காமல் இருக்கவே, அவளுக்கு மேலும் கலக்கமாய் இருந்தது.
எழுந்து அவன் புகைப்படத்தைத் தொட்டுப் பார்த்தபடி நதியா நின்றிருக்க, “அண்ணி… அண்ணனை ரொம்ப மிஸ் பண்றீங்க போல!” எனக் கேலிப் பேசியவாறு உள்ளே வந்தாள் வைஷு. “அப்படியே இருங்க…” என்றவள், அதைப்போட்டோ எடுத்து வாட்ஸ்அப்பில் மிதுனுக்கு அனுப்பினாள்.
“நாளைக்குப் பாருங்க அண்ணன் காலைல இங்க வந்து நிக்கப் போறார். அப்புறம், ‘நீ உன்னோட ரூமுக்குப் போ’ன்னு என்னைத் துரத்தி விட்டுடுவீங்க” குழந்தையாய்ச் சிரித்தபடி நதியாவை அணைத்துக்கொண்டாள் வைஷு.
மிதுனிடம் இருந்து எந்த அழைப்பும் வராமல் இருக்கவே, இரவெல்லாம் உறக்கமின்றித் தவித்திருந்தாள் நதியா. மறுநாள் காலை எழுந்து குளித்துக் கிளம்பியவள், வீட்டிலிருக்கும் பெரியவர்களிடம் சொல்லிவிட்டு கோவிலுக்குச் செல்ல, ருக்மணி பாட்டியும் அவளுடன் சென்றார். காரில் ஏதோ பிரச்சனை என்று டிரைவரும், இரண்டு மெய்க்காப்பாளர்களும் (Bodyguard) வெளியே நின்று அதைச் சரிசெய்து கொண்டிருக்க, இருவரும் கோவிலுக்கு உள்ளே சென்று சுவாமியைத் தரிசனம் செய்தனர்.
பிரகாரத்தை ஒருமுறை சுற்றிய ருக்மணி கோவிலுக்குள் அமர, “பாட்டிமா… ஒரு வேண்டுதல், பிரகாரத்தை ஒன்பது தடவை சுத்திட்டு வந்திடுறேன்” என்று நதியா சென்றாள்.
நீண்ட நேரமாகியும் நதியா வராததால், ருக்மணி பிரகாரத்திற்கு வெளியே அவளைத் தேடியும் எங்குமே தென்படவில்லை. அவர் உள்ளம் படபடக்க மெதுவாகக் கோவிலுக்கு வெளியே காருக்குச் சென்று பார்த்தால், அங்கும் ஏமாற்றமே மிஞ்சியது. அதே சமயம் மிதுனிடம் இருந்து ஒரு மெய்க்காப்பாளருக்கு போனில் அழைப்பு வர, சிறு நடுக்கத்துடன் அதை ஏற்றவர், “சார்… நதியா மேடத்தைக் காணோம்…” என்றதும், அவனோ அதிர்ச்சியில் உறைந்தான்.
அடுத்த சில நிமிடங்களில் மிதுனின் கட்டளையின் பேரில் கூடுதல் மெய்க்காப்பாளர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களில் சிலர் பாட்டியை வீட்டில் பத்திரமாக இறக்கிவிட, மற்றவர்கள் நதியாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். ருக்மணி வீட்டிற்குச் சென்று நடந்தவற்றைச் சொன்னதும், அங்கிருந்தவர்களுக்கும் பதற்றம் தொற்றிக் கொண்டது.
தேவ், சூர்யா, விஷ்ணு, அரவிந்த், சத்யா எல்லோரும் கோவிலுக்குச் சென்று அங்கிருந்து தேடுதலைத் தொடங்க, அடுத்த சில மணி நேரங்களில் புயலென அங்கே வந்து இறங்கினான் மிதுன்.
******************************************
நதியா பாட்டியை அங்கே அமர வைத்தபின், மூன்று முறை பிரகாரத்தைச் சுற்றியிருந்தாள். மிதுனிடம் இருந்து அவளுக்கு போனில் அழைப்பு வர, முகம் மலரப் புன்னகையுடன் வேகமாய் அதை அட்டென்ட் செய்தவள், “ஹலோ மிதுனா..” என்று சொல்லி முடிப்பதற்குள், கோவிலின் பின்வாசல் வழியே வந்த இருவர், மயக்க மருந்து ஸ்பிரேயை அடித்து அவளைத் தூக்கிச் சென்றனர். அவளுடைய போன் அங்கேயே கீழே விழுந்து உடைந்தது.
மிதுன் மீண்டும் மீண்டும் அவளுக்கு அழைத்துப் பார்த்தவன், ரீச் ஆகாததால் ராதாவிற்கு போனில் அழைத்தான். அவர்தான் நதியா கோவிலுக்குச் சென்ற விஷயத்தைக் கூற, அவன் மெய்க்காப்பாளருக்கு போன் செய்தபோது, அவள் காணாமல் போன தகவல் கிடைத்தது.
******************************************
கோவிலின் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது, முகமூடி அணிந்தவர்கள் அவளைக் கடத்தியிருக்க, வண்டியும் நம்பர் பிளேட் இல்லாமல் இருந்தது. மிதுன் மாநகர காவல் ஆணையரிடம் தன் மனைவி காணாமல் போன புகாரைப் பதிவு செய்தவன், கோகுலுக்கும் ராகுலுக்கும் அழைத்தான்.
மிதுனின் சந்தேகப்பார்வை முதலில் ராஜீவ் மீதுதான் விழுந்தது. அவன் குடும்பத்தோடு சுற்றுலாச் சென்றிருக்க, அவனது அலைபேசிக்கு வரும் அழைப்புகளை டிரேஸ் செய்தனர். ராஜீவின் தம்பி அகிலனுக்கு அழைத்தவன் விஷயத்தைச் சொல்லி, அவனைக் கண்காணிக்கச் சொல்லியிருந்தான்.
நேரம் ஆக ஆக மிதுனின் பதற்றம் அதிகமானது. ‘அவளை விட்டு நான் சென்றிருக்கக் கூடாது. இதுநாள் வரையிலும் பிரச்சினையில்லை. அவளுக்கு பாதுகாப்பாக இருக்கத் தவறிவிட்டோமோ?!’ எனத் தோன்றியது.
சமீபத்தில்தான் மிதுனின் திருமணம் நடந்திருக்க, செய்தித் தொலைக்காட்சிகளிலும், சில யூடியூப் சேனல்களிலும் மிதுன் – நதியா திருமணப் புகைப்படங்கள், வீடியோக்கள், அவன் பிரம்மாண்ட வணிக வளாகத்தை(Mall) அவளுக்கு பரிசாகத் தந்த வீடியோக்கள் வந்தவண்ணம் இருக்க, அவனுடைய எதிரிகள் பார்வை அவள் பக்கம் திரும்பும் என்பதை யோசிக்காமல் போனான்.
வீட்டில் நதியாவுடன் ஏற்பட்ட பிரச்சினைகளால், வெளி உலகத்தைக் கவனிக்க மறந்தான். இப்போது அவளைத் தொலைத்துவிட்டுத் தவிக்கிறான்.
******************************************
மிதுன் விட்டுச் சென்றதிலிருந்தே சரியாக உண்ணாதவள், ‘அவனுக்கு எந்தத் தீங்கும் நேரக் கூடாது’ என அன்று காலை முதலே விரதமும் இருந்தாள். உணவும் நீருமின்றி மயக்கத்திலேயே கிடந்தவள், மெல்லக் கண்விழித்தாள். ஆனால் அவளைக் கடத்தியவர்கள் உடனடியாக மயக்க ஊசி போடவே, அவள் மீண்டும் ஆழ்ந்த மயக்கத்திற்குள் மூழ்கினாள்.
மாலை முடிந்து வானம் கரிய இருளைப் பூசிக்கொண்டது. எங்கோ ஓரிடத்தில் அவள் கைகளும், கால்களும் கட்டப்பட்டுக் கிடக்க, மெல்லக் கண்திறந்து பார்த்தாள். அங்கே மிதுன் மண்டியிட்டுக் கிடக்க, அவனுக்கு எதிரில் தொழில் எதிரியான பிரதாப், அவனது நெற்றியில் துப்பாக்கியை அழுத்தி பிடித்துக் குறிவைத்திருந்தான்.
******************************************
இரண்டு மணி நேரங்களுக்கு முன்பு…
ஆளுக்கொரு பக்கம் நதியாவைத் தேடிக்கொண்டிருக்க, மிதுனின் செல்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.
“மிதுன்… உன் பொண்டாட்டி வேணும்னா நான் சொல்ற இடத்துக்குத் தனியா வரணும். மறுபடியும் சொல்றேன், தனியாத்தான் வரணும். நீ இல்லாதப்போ ஸ்கெட்ச் போட்டு உன் ஒய்ஃபைத் தூக்கினதுலேயே நான் எப்படின்னு உனக்குத் தெரிஞ்சிருக்கும். உன்னோட பிசினஸ் மூளையை என்கிட்ட யூஸ் பண்ணப் பார்த்தா, நடக்கப்போற எதுக்கும் நான் பொறுப்பில்ல. எனக்கு உன்னோட உயிர்தான் வேணும். நீ வந்துட்டா உன் பொண்டாட்டியை விட்டுடுறேன். டீல் ஓகேனா, நான் கொஞ்ச நேரத்துல சொல்ற இடத்துக்கு வா” என்று அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டது.
ஆக்ரோஷமாகச் செல்பேசியைக் கையில் இறுக்கிப் பிடித்திருந்தவனின் கண்கள் சிவந்து, அவன் ருத்ரமூர்த்தியாய்த் தெரிந்தான். ஒருபுறம் அடக்க முடியாத கோபமும், மறுபுறம் அவளைக் காணாத தவிப்புமாய் சிலையென உறைந்து நின்றிருந்தான்.
நாற்காலி ஒன்றில் கைகளும் கால்களும் தனித்தனியாகக் கட்டப்பட்டு, நதியா சோர்வுடன் மயங்கிக்கிடக்கும் வீடியோ அவனுக்கு வந்திருந்தது. அதைக் கண்டதும் மிதுனுக்கு உயிர் போகும் வலி ஏற்பட்டது. அந்த போன்கால், மெசேஜ் வந்த எண், அது எங்கிருந்து வந்தது என்பதை டிரேஸ்(Trace) செய்ய முடியவில்லை.
ஏற்கனவே ‘தன் சுயநலத்திற்காக அவளைக் காயப்படுத்திவிட்டோமோ?!’ என்ற குற்ற உணர்ச்சியில் தவித்தவன், ‘எப்படியாவது அவளைப் பாதுகாக்க வேண்டும், அவள் உயிரைக் காப்பாற்ற வேண்டும்’ என வெறியுடன் அங்கிருந்து கிளம்பினான்.
“மித்து… எதுனாலும் யோசிச்சுப் பண்ணு” என்று நண்பர்கள் அவனை நினைத்துக் கலங்க, “இல்லடா… நதிமா விஷயத்துல நான் ரிஸ்க் எடுக்க விரும்பல. நான் போய் கொஞ்ச நேரத்துல அவ வெளில வந்துட்டா ஓகே. இல்லன்னா நீங்க உள்ள வந்துருங்க. அங்க என்ன சூழ்நிலையா இருந்தாலும் நீங்க ஃபர்ஸ்ட் சேவ்(save) பண்ண வேண்டியது நதியாவைத்தான்” என்றவன் நண்பர்களையும், சகோதரர்களையும் அணைத்து விடுவித்தான்.
தனிமனித வாழ்வில் அவரவர் சந்திக்கும் பிரச்சனைகள் அனைத்தும் போருக்குச் சமானம்தான். யாரையும் கொல்லக்கூடாது என நினைத்தவன், இன்று தன் எதிரில் வரும் யாரையும் அழிக்கும் கடுங்கோபத்தில் இருந்தான். துப்பாக்கி, கத்தி என இன்னும் சில ஆயுதங்களோடு கிளம்பியிருந்தான்.
மிதுன் கடத்தல்காரன் அனுப்பிய இடத்திற்குச் சென்றுவிட, அவனுக்குத் துணையாக வந்தவர்கள் அங்கிருந்து இருநூறு மீட்டர் தொலைவில் யார் கண்ணிலும் படாமல் மறைந்திருந்தனர். அது ஒரு பாழடைந்த கட்டிடம். உள்ளே சென்றவனுக்கு எதிரே, மலை போன்ற தோற்றமுடைய ஒருவன் வந்தான். “ஹ்ம்ம்.. உன்னோட செல்போனையும் உன்கிட்ட இருக்கிற எல்லா ஆயுதங்களையும் எடு” இதுதான் நடக்கும் என்று அவனுக்குத் தெரிந்திருந்தது.
செல்போனோடு கொண்டுவந்த எல்லா ஆயுதங்களையும் எடுத்துத் தந்தான். இதுவரை தனியாகவே எதிரிகளை எதிர்கொண்டவனுக்கு இது முற்றிலும் புதிதுதான். தன்னுடைய உயிரானவள் அவர்களிடம் இருக்கும்போது, இப்போது துணிவைவிடச் சமயோசிதமே முக்கியம் என்பது அவன் எண்ணம்.
“உன்னோட பொண்டாட்டி எங்ககிட்ட இருக்கும்போதே இவ்வளவு வெப்பன்ஸோட வந்திருக்க. உனக்கு எவ்வளவு தைரியம்?!” என்றவன் துப்பாக்கியின் பின்பகுதியால் அவனது தலையில் பலமாக அடிக்க மிதுன் மயங்கினான். அரை மயக்கத்தில் இருந்தவனை தூக்கிக்கொண்ட அடியாள், அங்கிருந்த பின்வாசல் வழியாக அவனை ஒரு வாகனத்தில் ஏற்றிச் சென்றான்.
அந்த இடத்திற்குள் நுழைந்தவுடனேயே, இது வீடியோவில் நதியா இருந்த இடமல்ல என்பதைக் கண்டுகொண்டவன் அமைதியாக இருந்தான். அவனை ஏற்றிச் சென்ற வாகனம் வேறொரு இடத்திற்குச் சென்றது. அது இன்னும் கட்டி முடிக்கப்படாத ஒரு பத்துமாடிக் கட்டிடம்.
அந்த மலை போன்ற மனிதன் மிதுனைத் தன் தோளில் சுமந்து பத்தாவது மாடிக்குத் தூக்கிச் சென்றான். மேலே சென்றதும் அவனைத் தரையில் போட, மயக்கம் தெளிந்தவன் போல மெல்ல எழுந்து அமர்ந்தான். உண்மையில் அவன் மயங்கியிருக்கவே இல்லை. சூழலைப் புரிந்துகொள்ள நடித்திருக்கிறான்.
மிதுன் தன் காதலியைக் கண்டுவிட்டான். வேகமாக எழுந்து அவளருகே சென்றவன், “நதிமா… வேக்கப். எழுந்து என்னைப் பாரு…” என்றவாறு அவள் முகமெங்கும் முத்தமிட்டான். (நம்மாளு சும்மாவே தூங்கும். இவனுங்க எதுக்கு வேஸ்டா மயக்கமருந்து தந்திருக்காங்க)
அவளோ அசைவில்லாமல் கிடப்பதைப் பார்க்க, அவனது இதயம் கனத்துப் போனது. தன் பொக்கிஷமானவளைப் பார்த்த பிறகுதான் அவனை விட்டுச் சென்ற உயிரே திரும்பியதாக உணர்ந்தான்.
மிதுன் வேகமாக அவளது கட்டுகளை அவிழ்த்துக்கொண்டிருக்க, பிரதாப் உருட்டுக்கட்டையோடு வந்து, அவனை அடித்தான். நிலைதடுமாறி கீழே விழுந்தவன், அடிபட்ட வேங்கையென ஆக்ரோஷமாக எழுந்து நின்றிட, அதற்குள் நதியாவின் தலையில் துப்பாக்கியை வைத்திருந்தான் பிரதாப்.
“ஹ்ம்ம்… நீல் டவுன்” என்று பிரதாப் சொன்னதும், மிதுன் அவன் மீது அனல் கக்கும் பார்வையை வீசினான். “என்ன மிதுன்… உன் ஒய்ஃப் வேணுமா? வேணாமா?” அவன் குரூரமாய்ச் சிரித்து மிரட்டவே, வேறு வழியின்றித் தன் சினத்தை அடக்கிக்கொண்டு காதலுக்காக மண்டியிட்டான் மிதுன்.
பிரதாப் துப்பாக்கியைச் சரியாக மிதுன் தலைப்பக்கம் திருப்பியதும், நதியா மெல்ல கண்திறந்து பார்த்தாள். மங்கலாக அவனது கம்பீரமான உருவம் தெரிய, “மிதுனா…” உள்ளிழுத்த குரலோடு அவனை அழைத்தாள்.
யாருக்கும் கேட்காத அவளது மெல்லிய குரல் அவன் காதுகளுக்கு எட்டியதும், திரும்பித் தன் உயிரானவளைப் பார்த்தவன், எப்போதும்போல் வசீகரமாய்ப் புன்னகைத்தான். இதைக் கண்ட பிரதாப் அவன் முகத்திலேயே பலமாகத் தாக்க, இதழ்களில் ரத்தம் கசிந்தது.
“அதான் நான் வந்துட்டேன்ல, அவளை விட்டுடுறேன்னு சொன்ன. கமான்… ரிலீஸ் அண்ட் சென்ட் ஹர் அவே…” அவன் முகத்திலிருந்த அந்தப் புன்னகை மாறவே இல்லை. ஆனால் நதியா சென்றுவிட்டால் தங்களுக்குப் பாதுகாப்பில்லை என்பது அவர்கள் அறிந்ததே.
“கவலைப்படாத மிதுன்… உன் பொண்டாட்டியை நான் ஒண்ணும் பண்ணமாட்டேன். கேவலம் ஒரு பொண்ணுகிட்ட மோதுற அளவு நான் கோழை இல்ல…” பிரதாப் சத்தமாய்ச் சிரித்தான்.
நதியா இதையெல்லாம் அதிர்ச்சியாய் பார்த்திருந்தவள், எழ முயற்சிக்க உடலில் தெம்பில்லை. “அவரை விட்டுடுங்க…” “மிதுனா… இங்க இருந்து போயிடுங்க” முடிந்த அளவு சத்தமாகக் கத்தினாள்.
பிரதாப் கையில் இருந்த உருட்டுக்கட்டையை ஓங்கி, மிதுனின் தலையில் பலமாக அடித்த அடியில் அவன் ஒருபுறமாகச் சரிந்தான். விடாமல் பிரதாப் மிதுனின் மார்பில் தனது கனத்த பூட்ஸ் காலால் ஓங்கி உதைத்தான். பின்னால் இருந்த சிமெண்ட் தூணில் அவனது முதுகு சட்டென்று மோத, அவன் வாயிலிருந்து ரத்தம் பீறிட்டது.
அவனை எப்போதும் கம்பீரமாகவே பார்த்திருந்தவள், அவன் நிலைகுலைந்து கிடப்பதைப் பார்த்து மனம் தாங்காமல், “ஐயோ… அவரை விட்டுடுங்க… ஏன் இப்படி பண்றீங்க?!” என்று கதறி அழுதாள். “யாராவது ஹெல்ப் பண்ணுங்களேன்… ஹெல்ப்… ஹெல்ப்…” எப்படியாவது அவனைக் காப்பாற்ற வேண்டும் என அந்தக் கட்டிடமே அதிருமளவு சத்தமாகக் கத்தினாள்.
அவள் பதற்றத்தில் இருந்த காதலைக் கண்டுகொண்டவனுக்கு அப்படியொரு மகிழ்ச்சி. அந்த நிலையிலும் மிதுன் தன் ரத்தம் படிந்த இதழ்களால் அவளைப் பார்த்து மெல்லப் புன்னகைத்தான். “வேண்டாம் அழாத டா…” கண்களாலேயே ஜாடை பேசினான்.
நதியாவைப் பார்த்துக் கேலியாகச் சிரித்த பிரதாப், மிதுன் பக்கம் திரும்பி, “உன்னை இப்படிப் பார்க்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? ஏன், நீ மட்டுந்தான் எப்பவும் பெஸ்ட் இண்டஸ்ட்ரியலிஸ்ட் முதலிடத்துல இருக்கணுமா? இந்த வருஷம் அவார்டு வாங்க நீ இருக்கமாட்ட. இட்ஸ் எ பிரெஸ்டீஜ் பிராப்ளம் மேன். நீ இல்லனா என்னோட ரூட் கிளியர் ஆகிடும். எத்தனை வருஷத்துக்குத்தான் நான் செகண்ட் பிளேஸ்ல இருக்கிறது” நீளமாய்ப் பேசினான்.
ஏற்கனவே பாதி கட்டுகளை மிதுன் அவிழ்த்திருக்க, தன் பலத்தையெல்லாம் ஒன்றுதிரட்டிய நதியா, கட்டுகளை மெதுவாக அவிழ்க்க முயற்சித்தாள்.
மிதுன் தடுமாறி எழுந்திருக்க, பிரதாப் தன் கையில் இருந்த துப்பாக்கியால் அவனது நெற்றியை நோக்கி குறிவைத்தான்.
பிரதாப் ட்ரிக்கரை அழுத்தப்போகும் நேரத்தில், “ஐ லவ் யூ டா நதிமா…” என்று மிதுன் அவளையே பார்த்திருக்க, நதியாவோ கண்ணிமைக்கும் நேரத்தில் எழுந்து தன்னால் முடிந்து அளவு ஆவேசத்துடன் பிரதாப்பைத் தள்ளினாள்.
துப்பாக்கியில் இருந்து குண்டு வெளிப்படும் சத்தம் அந்த இடத்தையே அதிரவைக்க, பிரதாப் பதிலுக்கு ஆக்ரோஷமாக அவளைத் தள்ளியதில் அருகிலிருந்த தூணில் மோதிச் சுருண்டு விழுந்தாள்.
பிரதாப் தடுமாறித் துப்பாக்கியைத் தவறவிட்டிருக்க, சுதாரித்துக்கொண்ட மிதுன் துப்பாக்கியை எடுத்து பிரதாப்பைத் தன் வெறி தீருமளவுக்குச் சுட்டான். தன்னை நோக்கிப் பாய்ந்து வந்த மலை ஆசாமியின் கழுத்தை மிதுன் தன் இரும்புக்கரங்களால் பற்றித் தூணில் மோதினான்.
ஆங்காரத்தோடு அந்த ஆசாமியின் முகத்தில் மிதுன் இறக்கிய ஒவ்வொரு அடியிலும் அவன் நிலைகுலைந்து தளர்ந்து விழுந்தான்.
இடையில் புகுந்த மற்ற அடியாட்களைத் தன் கால்களால் சுழற்றி அடித்தவன், அங்கு கையில் அகப்பட்ட இரும்புக் கம்பியால் அவர்களைக் குத்திக் கிழித்தான். அந்த மலை ஆசாமியோடு சேர்த்து அங்கிருப்பவர்களை அடித்துக் கொல்ல அவனுக்கு ஐந்து நிமிடங்கள் போதுமானதாக இருந்தது.
நதியாவிற்கு அருகில் சென்றவன் அவளைத் தூக்க, இரத்த வெள்ளத்தில் கிடந்தாள். பிரதாப் சுட்ட குண்டு அவளது தோளைத் தாக்கியிருந்தது.
“ஐயோ நதிமா… என்னைப் பாருடா…” என்று பதறியபடி மிதுன் அவளது கன்னத்தில் மெல்ல தட்டி எழுப்ப முயற்சிக்க, அவளோ ஆழ்ந்த மயக்கத்திலேயே இருந்தாள்.
❤️🔥 மோகம் தீர்ப்பாள் ❤️🔥
அடுத்த அத்தியாயத்தில் முற்று பெறும்…
