அத்தியாயம் 36
விடிந்ததும் முதல் வேலையாக மித்ராவை அழைத்துக் கொண்டு நேராக வீட்டிற்கு வந்தான் தீரன்.
கணவன் மனைவி இருவரும் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு எங்கோ வெளியே போய் சந்தோஷமாக சுற்றித் திரிந்து விட்டு வந்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டார் வசுந்தரா.
ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பதை அவர் அறியவில்லை அவரிடம் எவரும் கூறவுமில்லை..
இரவு நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு இருவரும் பேசிக்கொள்ளவில்லை..
மனதளவில் மிகவும் காயப்பட்டு விட்டான் தீரன்..💔💔
அவளுக்கு பிடித்த எல்லாவற்றையும் செய்து அவளிடம் மன்னிப்பை வேண்டி, தன் மனதில் உள்ள காதலை வெளிப்படுத்திய சமயத்தில் தலையில் இடி விழுவது போல சட்டென்று அவனை விலக்கி அத்தனை பெரிய கேள்வியை அவள் கேட்பாள் என்று அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை..!!
எந்த வித எதிர்ப்பும் கூறாமல் அவனை அப்படியே அவள் ஏற்றுக் கொள்வாள் என்று நினைத்து விட்டான் போலும்..
அதனால்தான் அவள் கேட்ட கேள்வியையும் அவளுடைய பார்வையையும் அவனால் எதிர்கொள்ள முடியவில்லை..
தவறு செய்வது சுலபம் தான்.. ஆனால் அந்த தவறுக்கு மன்னிப்பை வேண்டி அந்த மன்னிப்பை அவர்கள் ஏற்றுக் கொண்டு நமக்கு மன்னிப்பு வழங்குவது அத்தனை சுலபம் அல்ல என்பதை இப்பொழுது உணர்ந்து கொண்டான் அவன்..
செய்த தவறுக்கு மன்னிப்பு என்கிற ஒரே ஒரு வார்த்தையை கூறி அவன் தப்பித்துக் கொள்ள முயலவில்லை..
இருந்தும் இப்பொழுது மன்னிப்பை தவிர அவனிடம் சொல்வதற்கு வேறு வார்த்தை இல்லையே..!!
என்ன செய்வதென்று அறியாமல் விழித்தான்..
இதற்கு முன் தீரன் இது போல் தடுமாறியதே கிடையாது..
இதுதான் முதல் முறை.. வாழ்க்கையில் எந்த ஒரு முடிவையும் சாதாரணமாக எடுத்து விடுவான்..
அசாதாரணமான விஷயத்தை கூட மிக சாதாரணமாக கையாள்பவன் அவன்..
ஆனால் இப்பொழுது தன் மனைவி முன்பு தடுமாறி நிற்கிறான் மன்னிப்பை வேண்டி..💔💔
எப்பேர்ப்பட்ட ஜாம்பவானாக இருந்தாலும் காதல் என்று வந்து விட்டால் அடி சறுக்கத்தான் செய்கிறது போல..
பெண்களின்
உள்ளம் படு குழி என்பேன்
விழுந்து எழுந்தவன் யாா்
ஆழம் அளந்தவன் யாா்
ஹோ… கரையை கடந்தவன் யாா்
காதல் இருக்கும்
பயத்தினில் தான் கடவுள்
பூமிக்கு வருவதில்லை
மீறி அவன் பூமி வந்தால்
தாடியுடன் தான் அலைவான்
வீதியிலே….
சூழ்நிலைக்கு தகுந்தார் போல அங்கே ரேடியோவில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது..!!
அதைக் கேட்டதும் மேலும் அவனுக்கு மனம் வேதனைக்குள்ளானது..!!
பழைய குருடி கதவை திறடி என்பது போல மீண்டும் அவர்கள் மத்தியில் அமைதி நிலவியது..
அவள் கேட்ட கேள்வி மீண்டும் மீண்டும் அவன் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது..
தான் செய்தது மாபெரும் தவறு என்று நன்றாகவே உணர்ந்து கொண்டான்.. அவன் சொன்ன வார்த்தைகளை நினைத்து பார்க்கும் பொழுது அவன் மீதே அவனுக்கு வெறுப்பு உண்டானது..
அன்று காலை 9 மணி..
குளித்த முடித்து வழக்கம் போல அலுவலகம் கிளம்பி செல்ல தயாரானாள் மித்ரா.
அப்போது அவள் எதிரே வந்து நின்றான் தீரன்..
” மித்ரா தயவு செஞ்சு என்கிட்ட பேசு.. நான் செஞ்சது தப்புதான், நான் அப்படி பேசிருக்க கூடாது.. எதையும் நான் மனசறிஞ்சு வேணும்னே சொல்லல.. கோபத்தில் என்னவோ பேசிட்டேன் தயவு செஞ்சு மனசுல எதுவும் வச்சுக்காத.. என்கிட்ட பேச மாட்டியா?? என்கிட்ட நீ சண்டை போட்டிருந்தால் கூட என் மனம் ஆறுதல் அடைந்திருக்கும் ஆனால் நீ இப்படி பேசாமல் மௌனமாக இருப்பது எனக்கு என்னவோ போலருக்கு மித்து.. என்னால முடியல..
எந்த வேலையும் பார்க்க முடியல, மீட்டிங் அட்டென்ட் பண்ண முடியல, வண்டியை ஒழுங்கா ஓட்ட முடியல, சரியா சாப்பிட முடியல, தூங்க முடியல, கிட்டத்தட்ட நான் நானாகவே இல்லை.. !!
என்னுடைய எண்ணம் முழுக்க நீ தான் நிறைஞ்சிருக்க.. கண்ணை மூடி தூங்கினால் கனவிலும் நீ தான் வர்ற.. இப்போ இந்த தீரன் தீரனாகவே இல்லை.. முழுக்க முழுக்க மித்ராவின் கணவனாகவும் காதலனாகவும் தான் வாழ்ந்துட்டு இருக்கேன்..
உனக்கு புரியுதா இல்லையா என்று எனக்கு தெரியல.. பண்றதும் பண்ணிட்டு இப்ப வந்து மன்னிப்பு கேட்கிறான் பாரு அப்படின்னு நீ என்னை தப்பா கூட நினைக்கலாம்.. நீ என்னை என்ன வேணா நினைச்சுட்டு போ மித்ரா.. ஆனால் என்னுடைய நிலைமை இதுதான் என் மனதில் இருக்கிறத தான் உன்கிட்ட சொல்றேன் தயவு செஞ்சு என்னை புரிஞ்சுக்கோ நான் எதுவும் வேணும்னே பண்ணல..
நான் தப்பானவன் தான்.. ஆரம்பத்தில் கடுமையாக நடந்துக்கிட்டேன் முரட்டுத்தனமா நடந்துக்கிட்டேன் தான்.. என்னை மன்னிச்சுடும்மா.. காதல்னா என்ன அன்புனா என்னன்னு எதுவுமே தெரியாமல் இருந்தேன்..ஆனால் நீ என் வாழ்க்கைக்குள் நுழைஞ்ச பிறகுதான் எனக்கு பல விஷயங்கள் புரியுது.. உன்னுடைய பிறந்த வீட்டில் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்க ஆனால் அது எல்லாவற்றையும் தாண்டி இப்போ என்கிட்டயும் வந்து நரக வேதனையை அனுபவிச்சிருக்க.. முடிஞ்சளவு உன்னை சந்தோஷமா வச்சு பார்த்துக்க வேண்டியது என்னுடைய கடமை ஆனால் அந்த கடமையை நான் செய்ய தவறிட்டேன்… என் பங்குக்கு நானும் உன்னை சித்திரவதை செய்துட்டேன்.. அதுக்கான தண்டனையை தான் நான் இப்போ அனுபவிச்சிட்டு இருக்கேன்.. என்னை நாலு அடி கூட அடிச்சுக்க மித்ரா இப்படி பேசாமல் இருந்து என்னை கொல்லாதடி என்னால தாங்க முடியல.. உன்னுடைய மௌனத்தால் என்னையும் என் மனதையும் நீ எப்பவோ ஜெயிச்சுட்ட..”, என்று கண் கலங்க கூறியவன் அப்படியே அவள் முன்பாக மண்டி போட்டு தரையில் அமர்ந்து அவளின் கைகளைப் பற்றிக் கொண்டான்.
அவள் எதுவும் பேசாமல் கண்கள் விரிய அவனையே பார்த்து கொண்டிருந்தாள்..
அவளின் முகத்தை பார்க்கும் போது அவனால் எதையும் உணர்ந்து கொள்ள முடியவில்லை.. இருந்தும் தொடர்ந்து அவளிடம் பேசினான்.
” ஐ லவ் யூ மித்து.. எந்த சூழ்நிலையிலும் உன்னை நான் கைவிட மாட்டேன் எப்பவும் உன் கூடவே இருப்பேன்.. முடிஞ்சளவு உன்னை நல்லா பாத்துப்பேன்.. காதல்னா இப்படித்தான் இருக்கணும் அப்படித்தான் இருக்கணும்னு எனக்கு எதுவும் தெரியாது சொல்லப்போனால் காதல் என்கிற வார்த்தைக்கு எனக்கு அர்த்தம் கூட தெரியாது.. மற்ற பெண்களை கட்டிப்பிடிப்பதிலும் முத்தம் கொடுப்பதிலும் கிடைக்கும் உணர்ச்சியை தான் காதல் என்று இத்தனை காலம் நான் முட்டாள்த்தனமாய் நெனச்சிட்டு இருந்தேன்..
ஆனால் காதல் என்பது கட்டி பிடிக்கிறதுலையும் முத்தம் கொடுக்கிறதுலையும் இல்லை.. அதையும் தாண்டி மனதின் தேடல் அதுன்னு புரியுது..❤️❤️
என்னைக்கு ஒரு பொண்ணு கண்ணுல தன்னுடையவனை பெருமை கலந்த கர்வத்தோடு காதலாக பார்க்கிறாளோ, அந்த நிமிஷம் தான் ஒரு ஆண் ஜெயிக்கிறான்.. அவள் மனதையும் அப்போது தான் ஜெயிக்கிறான்.. ஆனா நான் தோத்துட்டேன்.. நான் தோத்துட்டேன் மித்து.. 💔💔
அன்னைக்கு ஒரு நாள் என்னை அருவருப்போடு ஒரு பார்வை பார்த்து விலகினியே அன்னைக்கே நான் பாதி செத்துட்டேன்டி.. இப்ப மீதி இருக்கிற உயிரையும் பேசாமல் அமைதியாக இருந்து என்னை கொன்று விடாதே.. நான் பேசியது தப்பு தான் என்னை மன்னித்துவிடு..
குழந்தை பிறக்கும் தகுதி மட்டுமே வைத்து ஒரு பெண்ணை எடை போட முடியாது தான், எப்போ மத்தவங்களுக்காக யோசித்து பிறர் கிட்ட அன்பு காட்டி அவள் அன்பாக பழக நினைக்கிறாளோ அப்பவே அம்மா ஸ்தானத்திற்கு ஒரு பெண் வந்துடுறா.. அப்படி பார்த்தால் இந்த முரடன் கிட்ட நீ எவ்வளவோ அன்பா இருந்திருக்க.. எத்தனையோ இடத்தில் என்னை விட்டுக் கொடுக்காமல் எனக்காக பேசியிருக்க.. என்கிட்ட அன்பையும் காதலையும் நீ கொட்டி கொடுக்கலானாலும் ஒரு இடத்தில் கூட நீ என்னை காயப்படுத்தியதே கிடையாது.. அப்பேர்பட்ட குணவதி நீ.. !!
உன்கிட்ட நான் அப்படி பேசிருக்க கூடாது பெரிய தப்பு பண்ணிட்டேன் என்னை மன்னித்துவிடுமா.. பிளீஸ் நீ இல்லாமல் என்னால இருக்க முடியாது.. என்னையும் என் காதலையும் ஏத்துப்பியா மித்து”, என்று கூறி அவளின் கைகளை பற்றி கொண்டு கதறி அழுதான் அந்த ஆண்மகன்..💔💔
அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையிலும் உண்மை இருந்தது கண்களில் பொய் இல்லை.. அவளுக்காகவும் அவளுடைய அன்பிற்காகவும் அவன் ஏங்கித் தவிப்பதை அவள் நன்றாகவே உணர்ந்து கொண்டாள்..!!
எனக்கு உன்னை பிடித்திருக்கிறது நீ எனக்கு வேணும் உன்னுடைய அன்பு வேணும் என்று வெளிப்படையாக சொல்லத் தெரியாவிட்டாலும் எனக்காக எத்தனை விஷயங்களை இவன் செய்திருக்கிறான்?? பல நாள் கனவாக இருந்த அந்த புகைப்பட ஆசையை நொடியில் செயலாற்றி என் ஆழ்மன ஆசையை நிறைவேற்றி விட்டானே, முரடனாக இருந்தாலும் ஒரு நாளும் என்னை விட்டு பிரிய மனம் இல்லாமல் தவிக்கிறானே..
அருகில் அமர்ந்து ஆசைத்தீர பேசவில்லை என்றாலும் தூரம் நின்று என் ஆசைகளை நிறைவேற்றியவன் இவன்.. என் கண்ணில் கண்ணீர் வரக்கூடாது என்று நினைப்பவன் இவன்.. தொழிலில் ஊருக்கே ஜாம்பவானாக திகழ்ந்தாலும் இதோ என் கண் முன்னாடி சிறு குழந்தை போல மண்டியிட்டு என் அன்பிற்காக ஏங்கி தவம் கிடக்கிறானே இந்த ஆறடி ஆண்மகன்..!!
காதலைக் கூட சரியாக சொல்லத் தெரியாமல் எல்லாவற்றிலும் சொதப்பி விட்டு சிறுபிள்ளை போல மன்னிப்பை வேண்டி நிற்கிறானே இந்த கள்வன்..
ஆம்..…
என் இதயத்தை திருடிய கள்வன் இவன்..❤️❤️
என்னால் இவனிடம் தொடர்ந்து கோபத்தை கூட வெளிக்காட்ட முடியவில்லை உம்மென்று மூஞ்சியை தூக்கி வைத்துக் கொள்கிறான்.. தொடர்ந்து ஐந்து நிமிடம் இவன் கிட்ட பேசாமல் அமைதியாக இருந்தாலே என்னவோ போல இருக்கிறது.. அடித்தால் கூட வாங்கிவிடலாம் ஆனால் மௌனமாக இவன் விலகுவதை என்னால் கூட தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. இவனிடம் பேசாமல் இருந்த ஒவ்வொரு நிமிடமும் எனக்கும் தானே வலித்தது.. இதையெல்லாம் இந்த முரடனுக்கு யார் புரியவைப்பது??, என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாளே ஒழிய தப்பி தவறி கூட தன் மனதில் உள்ள எண்ணங்களை அவள் அவனிடம் வெளிப்படுத்தவில்லை..!!
மாறாக அவனுடைய கைகளை விலக்கி அவனை ஆழமாக ஒரு பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து வேகமாக வெளியே சென்று விட்டாள் மித்ரா..
எத்தனை சொல்லியும் புரிந்து கொள்ளாமல் விலகி செல்கிறாளே என்கிற ஆற்றாமை அவன் மனதில் பொங்கியது..!!
வாழ்க்கையில் மொத்தமாக தோற்றுப் போனது போல உணர்ந்தான் தீரன்..💔💔
தரையில் மண்டியிட்டு அமர்ந்திருந்தவன் அப்படியே நேரம் போவது தெரியாமல் கண்களை மூடி கண்ணீர் சொரிந்து கொண்டிருந்தான்..
அடுத்த பத்தாவது நிமிடத்தில் கீழிருந்து அவனுடைய அம்மாவின் குரல் ஒலித்தது சப்தமாக..!!
– தொடரும்..
