அத்தியாயம் 38

மித்ராவை ரசித்துக் கொண்டே காரை ஓட்டிக் கொண்டிருந்தான் தீரன்.. 

கார் சிட்டி லிமிட்டை தாண்டி வெளியே சென்று விட..

 ஆளரவம் இல்லாத ரோட்டில் வண்டியை வேகமாக ஓட்டிக் கொண்டிருந்தான் அவன்..

கழுத்து வலிக்க ஜன்னல் பக்கம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவள், ஒரு கட்டத்தில் கார் அளவுக்கதிகமான வேகத்தோடு செல்வதை கவனித்து விட்டு தான் தீரன் பக்கம் திரும்பினாள்..

அவன் முகத்தில் டென்ஷன் அளவுக்கதிகமாக இருந்தது இப்பொழுது..

“ எதுக்காக இப்படி வண்டியை வேகமாக ஓட்டுறீங்க??”

” தெரியல கார்ல பிரேக் பிடிக்க மாட்டேங்குது.. காலையில் நல்லா தான் இருந்தது இப்ப என்ன ஆச்சுன்னு தெரியல..”, என்றான் பதட்டத்தோடு.

அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தவள்..

“ காலையில் ஹாஸ்பிடல் கிளம்பி வரும்போது நல்லா தானே இருந்தது இப்போ மட்டும் எப்படி??”

” எனக்கும் தான் என்ன தெரியும்?? நானும் உன் கூட தானே வந்தேன்..??”, என்றான் கோபமாக.

அவுட்டர் ஏரியா என்கிற காரணத்தினால் அதிகமாக வாகனங்கள் இல்லை..

புயல் வேகத்தில் போய்க் கொண்டிருந்த கார் ஒரு கட்டத்தில் ரோட்டின் வளைவை நோக்கி சென்று கொண்டிருந்தது..

எப்படியும் அந்த இடத்தில் நெருங்கும் போது கார் பிரேக் போட்டால் தான் சமாளிக்க முடியும்.. இல்லையென்றால் மொத்தமாக கார் கவிழ்ந்து விடுமே.. என்ன செய்வது என்கிற பயம் இருவரின் மனதிற்குளளும் எழுந்தது…!!

“ நேரா வீட்டுக்கு போகாம நீங்க ஏன் இந்த பக்கம் வந்தீங்க??”

” வீட்டுக்கு போயிருந்தா மட்டும் பிரேக் பிடிச்சிருக்குமா?? அப்பவும் இதே பிரச்சினை தானடி வந்திருக்கும்”, என்று கடிந்து கொண்டான் ..

“ இங்க பாரு மித்து.. இப்ப யோசிக்கிறதுக்கு நேரமில்ல.. இன்னும் கொஞ்ச நேரத்தில் கார் அந்த வளைவை நோக்கி போகும் அந்த இடத்தில் பிரேக் பிடிக்கலைன்னா தப்பிக்கிறது ரொம்ப கஷ்டம் அதனால நான் ஒன்னு சொல்றேன் தயங்காம செய்வியா??”

“என்ன ?? சொல்லுங்க..”

அவன் பதில் எதுவும் பேசவில்லை.. 

இன்னும் பத்தடி தூரத்தை நெருங்கினால் வளைவு வந்துவிடும்..

அதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் கார் கதவை திறந்து புல் தரை இருக்கும் இடமாக பார்த்து அவளை வெளியே தள்ளி விட்டான் தீரன்..!!

ஏதோ வழி சொல்ல போகிறான் என்று பார்த்தால் கடைசியில் நம்மை காப்பாற்றி விட்டு அவன் .. அவன்.. கடவுளே.. !!

“தீரா……!!”, என்று கதறி கொண்டே காரின் பின்னாடியே தட்டுத்தடுமாறி ஓடினாள் அவள்..

ஆனால்  பிரேக் பிடிக்காமல் வளைவில் திரும்பும் பொழுது தாங்க முடியாத பிரஷர் காரணமாக பல்ட்டி அடித்தது கார்..!!

அந்த காட்சியை கண்கொண்டு பார்க்க முடியாமல் பயத்தில் கண்களை இறுக மூடிக்கொண்டாள் அவள்..!!

நெஞ்சம் பதற கண்களிலிருந்து வழியும் கண்ணீரை துடைக்க கூட தோன்றாமல் தீரா தீரா என்று பைத்தியம் போல் பிதற்றி கொண்டு ரோட்டில் தலைவிரி கோலமாக ஓடினாள் மித்ரா..

கவிழ்ந்திருந்த காரிலிருந்து புகை வெளியே வந்தது.

தன் கணவனின் பெயரை உச்சரித்து கொண்டே அந்த காரை சுற்றி சுற்றி வந்தாள்.. 

அவனுக்கு என்னவோ ஆகிவிட்டது அவன் தன்னை விட்டுட்டு மொத்தமாக போய் விட்டானோ என்கிற பயத்தில் தலை தலையாக அடித்துக் கொண்டு தீரா தீரா என்று கதறினாள்..!!

உலகமே இருண்டு போய்விட்டது போல கண்களை மூடி அழுது கொண்டிருந்தவளின் தோள் மீது அழுத்தமாக ஒரு கரம் படிந்தது..!!

திடுக்கிட்டு போய் திரும்பிப் பார்க்க..

 அங்கே..

 உடம்பில் காயங்களுடன் நின்று கொண்டிருந்தான் தீரன்..!!

சுவாசத்திற்கு திணறி கொண்டிருந்தவளுக்கு ஆக்சிஜன் மாஸ்க் கிடைத்தது போல அவனைக் கண்டதும் ஆற தழுவிக் கொண்டு “தீரா தீரா.. உங்களுக்கு ஒன்னும் இல்லயே நான் ரொம்பவே பயந்து போயிட்டேன் தெரியுமா ?? என்னாச்சு உங்களுக்கு எங்க போனீங்க ??”, என்று புலம்பிக்கொண்டே கதறி அழுதாள்..

” கார் வளைவில் திரும்பும்போது நான் குதிச்சிட்டேன் மித்து.. பிழைப்பது கஷ்டம் என்று தான் நினைச்சேன்.. ஆனா மறுபடியும் உன் கூட சண்டை போடணும்னு ஆசையா இருந்தது அதனால தான் உயிரோடு திரும்ப வந்துட்டேன்”, என்று கூறி அவனும் அவளை தழுவிக் கொண்டு ஆறுதல் படுத்தினான்.

கண்ணீர் வழிய சிறு புன்னகையுடன் அவனைப் பார்த்துக் கொண்டே விலகி நின்றவள் அவன் நெஞ்சில் ஒரு குத்து விட்டாள் செல்ல கோபத்தோடு..

அவள் கண்ணிலிருந்து வழிந்த கண்ணீரே அவன் கேள்விகளுக்கெல்லாம் பதிலளித்துவிட்டது..!!

அவளின் உயிர், அவன் தான் என்று..!!

சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு டாக்ஸியை வரவழைத்து  அங்கிருந்து வீடு வந்து சேர்ந்தார்கள் இருவரும்..

விஷயம் கேள்விப்பட்டு வசுந்தரா துடித்து போனாலும், கணவன் மனைவி இருவருக்கும் தனிமையை கொடுத்துவிட்டு சற்று விலகி இருந்தார்..

 அதன் பிறகு, அவனுக்கு தேவையானவற்றை அவளே பார்த்துக் கொண்டாள்.. சாப்பாடு ஊட்டி விடுவதிலிருந்து உடைமாற்றும் வரை..!!

அவனுக்கு தன்னை மிகவும் பிடிக்கும் என்று அவளுக்கு தெரியும் தான் ஆனால் உயிரை கொடுத்தாவது தன்னை காப்பாற்றுமளவிற்கு அவன் தன் மீது உயிராக இருப்பான் என்று அன்று தான் தெரிந்து கொண்டாள்..!!

ஏன் தீரனுக்கு கூட.. தான் மித்ராவை இந்தளவிற்கு உயிராய் நேசிக்கிறோம் என்பதையே அன்று தான் உணர்ந்து கொண்டான்..!!

ஆசையாக மேனியை வருடும் விரல்கள் விடுமுறை எடுத்திருக்க.. இப்போது காதலாக தீண்டும் விழிகள் மட்டுமே கதை பேசியது இருவர் மத்தியில்..!!

நான்கு நாட்களுக்குப் பிறகு..

” இன்னைக்கு ஹாஸ்பிடல் போய் ரிசல்ட் வாங்கணும்.. சாயங்காலம் வந்து நானே உன்னை கூட்டிட்டு போறேன் அப்புறமா போய் பார்க்கலாம்..”, என்றான் மித்ராவிடம்.

சரியென்று தலையாட்டினாள்..

என்ன ரிசல்ட் வரப்போகிறதோ என்று ஆர்வத்தோடு காத்திருந்தாள் ஒவ்வொரு மணித்துளியும்..

சாப்பிட்ட மருந்து மாத்திரைக்கேற்ப பிரச்சினை குறைந்திருக்குமா?? அல்லது….?? என்று அதற்கு மேல் அவளால் யோசிக்க முடியவில்லை..

எப்படியும் தீரன் வரும் வரை காத்திருப்போம்.. வந்த பிறகு அவனே கூட்டிட்டு போவான் அப்போ தெரிஞ்சுக்க வேண்டியது தான் என்று நினைத்துக் கொண்டாள்..

மாலை நேரம் நெருங்க நெருங்க வயிற்றில் புளியை கரைத்தது அவளுக்கு..

டாக்டர் என்ன சொல்லப் போகிறார் என்கிற பதட்டம் அவளுக்கு மட்டுமல்ல வசுந்தராவிற்கும் தான் இருந்தது.. ஆனால் அவர் எதையும் வெளி காட்டிக் கொள்ளாமல் மருமகளுக்கு தைரியம் சொல்லிக் கொண்டிருந்தார்..

மாலை ஐந்து மணி..

வழி மேல் விழி வைத்து காத்திருந்தாள் தன் கணவன் எப்பொழுது வருவான் என்று..

அவர்களது அறையிலிருந்த டேப்ரெக்கார்டரில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது..

எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அதில் பாடல் கேட்பது தீரனின் பழக்கம்.. அவனுக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் இதுவும் ஒன்று..

இப்பொழுதும் அவனுக்கு பிடித்த பாடல் தான் ஒலித்துக் கொண்டிருந்தது..

அதே நேரம் வாசலில் அவனுடைய கார் வந்து நிற்கும் சத்தம் கேட்கவும் கட்டிலில் அமர்ந்திருந்தவள் துள்ளி குதித்துக் கொண்டு எழுந்தாள்..

கீழே சென்று அவனை வரவேற்பதற்கு முன்பாக அவனே மாடிக்கு தடதடவென்று ஏறி வந்தான்..

” டேய் தீரன் ஆஸ்பத்திரி போகணும்னு உனக்காக ரொம்ப நேரம் காத்திருக்கா அவ.. நீ ஏன் லேட்??”, என வசுந்தரா கேட்ட கேள்விக்கு கூட பதிலளிக்காமல் வேகமாக அறைக்குள் நுழைந்தான்.

கண்கள் சிவந்து , தலை முடி கலைந்து, மூச்சுவாங்க நின்று கொண்டிருந்தவனை பார்த்ததும் வித்தியாசமாக உணர்ந்தாள் மித்ரா..

” என்னாச்சு தீரன்?? எதுவும் பிரச்சனையா?? ஏன் இப்படி இருக்கீங்க??”, என்று கேட்ட வண்ணம்  அருகில் வந்து அவன் தோளை மெதுவாக தொட்டாள்..

ஆனால் அவன் பதிலேதும் கூறாமல் செதுக்கி வைத்த சிலை போல அப்படியே நின்று கொண்டிருந்தான்..

கண்ணின் கருவிழிகள் மட்டும் அங்கும் இங்கும் பதட்டத்தோடு அலைப்பாய்ந்தது..

அவன் கண்களில் என்ன கண்ணீரா??

ஆம்..!!

அது கண்ணீரே தான்..!!

ஆனால் எதற்கு??

முகமெல்லாம் சிவந்து அதரங்கள் துடிக்க கண்ணீர் வழிய எதற்காக இப்படி நிற்கிறான்?? அப்படி என்ன சோகமான நிகழ்வு நிகழ்ந்துவிட்டது?? என்று தாறுமாறாக யோசித்தது அவளின் நெஞ்சம் பதறியது..

இந்த எல்லா உணர்வுகளையும் தாண்டி அந்த அறைக்குள் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது துள்ளலாக..

நான் செய்த குறும்பு உண்டாச்சு கரும்பு

நான் தந்த பரிசு அது ரொம்ப புதுசு

கையோடு துள்ளாதோ ரோஜா பந்து

பூவில் செய்த உடம்பு அந்த பூவுக்குள்ளே அரும்பு

நாணம் என்ன திரும்பு நான் இரவில் கடிக்கும் எறும்பு..❤️❤️

அதைக் கேட்டதும் அவனுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை.. 

உடனே அந்த டேப்ரெக்கார்டரை  தூக்கிப்போட்டு சுக்கு நூறாக உடைத்தெறிந்தான் தீரன்..🔥🔥

” ஐயோ”, என்ற அலறலோடு இரண்டடிகள் பின்னாடி நகர்ந்து சென்றாள் அவள்..

சத்தம் கேட்டு மேலே வர நினைத்த வசுந்தரா பிறகு என்ன நினைத்தாரோ அவர்களே பேசி தீர்த்து கொள்ளட்டும் என்று அமைதியாக கீழேயே இருந்து விட்டார்..

“ என்னாச்சு உங்களுக்கு ஏன் இப்படி எல்லாம் பண்றீங்க தீரன்??”

அவனோ பதில் சொல்லாமல்..

“நோ……….!!”, என்று தலை முடியை பிடித்துக் கொண்டு அலறியவன் அப்படியே தரையில் மண்டி போட்டு அமர்ந்து கதறியழுதான்..

கணவனின் செயலில் அதிர்ந்து போனவள்.. அவளும் தரையில அவனுடன் அமர்ந்து கொண்டு மெதுவாக தோளோடு சேர்த்து அவனை அணைத்துக் கொண்டு ஆறுதல் படுத்து முயன்றாள்..

என்னாச்சு இவருக்கு?? ஏன் இப்படி அழுவுறாரு?? அவருக்கு ரொம்ப பிடிச்ச பொருளை கூட போட்டு உடைத்து விட்டாரே ?? அந்தளவிற்கு என்ன நடந்திருக்கும்??

ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன்னு சொன்னாரு..

 ஒருவேளை.. 

அவரே ஹாஸ்பிடல் போய் ரிசல்ட் வாங்கி பார்த்துட்டாரோ..?? 

ரிசல்ட் எனக்கு சாதகமாக இல்லையா?? அதனால்தான் அவருக்கு இத்தனை கோபமா?? என்று கண்ணீர் வழிய பதட்டத்தோடு யோசித்தவள் அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்..

அவனும் தாயைப் பிரிந்த கோழி குஞ்சாய் அவளின் மார்போடு ஒட்டிக்கொண்டு கதறி அழுது கொண்டிருந்தான்..

” தீரா..”, நடுக்கத்தோடு ஒலித்த அவளின் குரலை  தொடர்ந்து அவளுடைய விரல்கள் அவன் முகத்தை கையில் ஏந்தியது..!!

” என்னை பார்த்து உண்மை பேசுங்க.. ஹாஸ்பிடல் போனீங்களா??”, தடுமாற்றத்தோடு அவளிடமிருந்து வந்தது கேள்வி.

இல்லை என்று சொல்ல மாட்டானா என்று ஏங்கினாள் , மனதிற்குள்..

 ஆனால் அவளுடைய நம்பிக்கையை பொய்யாக்குவது போல அவன் ஆமாம் என்று தலையசைக்கவும் இடிந்து போய் அமர்ந்து விட்டாள்..!!

– தொடரும்..

 

 

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page