பாகம் 39
“ ஏன் அக்கா இப்படி எல்லாம் சொல்கிறீர்கள்..நாங்கள் அங்கே இருந்தாலும் எங்கள் நினைவு முழுக்க இங்கேதான் இருக்கும் .இடையில் இது மாதிரி ஏதாவது சான்ஸ் கிடைத்தால் வர பார்க்கிறோம். அதே மாதிரி நீங்களும் வர முடித்தால் வாங்க .. ”
“கண்டிப்பா மித்ரா முதலில் எப்பொழுது இவங்களுக்கு இடம் மாற்றுதல் கிடைக்கும் என்று தெரியவில்லை. அப்படி கிடைத்து விட்டால் உங்கள் வீட்டருகே எதாவது இடம் பிடித்து போட்டு விடுங்கள் .. ”
“கண்டிப்பா அக்கா, இந்த யோசனை கூட நன்றாக இருக்கிறதே.. நாங்களும் இப்போதிலிருந்து இரண்டு வீடுகள் ஒன்றாய் ஏதாவது இடம் கிடைக்கிறதா என்று பார்க்க ஆரம்பிக்கிறோம் .. “அப்படி இருந்தால் ரொம்ப நன்றாக இருக்கும் அக்கா.. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் சந்தோசமாய் இருக்கலாம்.. ”
இந்த திட்டம் பெண்கள் இருவருக்குமே பிடித்து இருக்கிறது. ஆனால் நடக்குமா என்று தான் தெரியவில்லை..
ஊரெல்லாம் சுற்றி முடித்து விட்டு பிறந்த நாளுக்கு முதல் நாள் தான் ஆதி தன்னை சுற்றி உள்ளவர்களுக்கு போன் செய்ய தொடங்குகிறான்..
காப்பி அடிக்கும் ஆளான அரவிந்துக்கு இதுவுமே புதிதாக இருக்கிறது.. ‘ ஏன் தனக்கு இதெல்லாம் தோன்ற மாட்டேன் என்கிறது ..ஆதி அண்ணாவுக்கு மட்டுமே எப்படி இப்படி எல்லாம் செய்யத் தெரிகிறது.., யோசித்தவனுக்கு உடனே அதற்குரிய பதிலும் கிடைக்கிறது ..
‘பாவம் அண்ணா யாருமே இல்லாமல் தனியாக வளர்ந்தவருக்கு தானே உறவு முறையின் அருமை தெரியும். அதனால் தானே தம்பி தம்பி என்று என்னிடம் உயிரையே வைத்து இருக்கிறார்கள் .. ஏன் தூரத்தில் இருக்கும் என்னிடமே இப்படி இருக்கும் போது அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடமும் எத்தனை பிரியமாக இருப்பார்கள்.. நான் தான் வீட்டில் இருக்கும் அம்மாவை கூட கிழவி கிழவி என்று வம்பு செய்கிறேன்.. அது கூட செல்லமாய் தான் அதனால் என்ன இப்போது பரவாயில்லை .., என தன்னையே சமாதானம் செய்து கொள்கிறான்..
ஆதியிடம் , “அண்ணா நான் இதையும் காப்பி (Copy) செய்ய போகிறேன்.. அடுத்த வருடம் இவர்கள் பிறந்த நாளுக்கு எல்லாரையும் அழைக்கப் போகிறேன்..” ஆதியின் அந்த மர்மமான சிரிப்பிற்கு அர்த்தமே இவனுக்கு புரியவில்லை..
அடுத்து, ” வீட்டில் தானே அண்ணா பிறந்தநாள்.. அலங்காரம் எல்லாம் செய்ய வேண்டாமா .. “என்றதும் அதற்கும் மர்மமாய் சிரிக்கிறான் ..
“உங்கள் மனதில் என்ன இருக்கிறதோ.. எனக்கு தான் தெரியவில்லை.. என்ற படியே எழுந்து செல்கிறான்..
இதோ இன்று தான் பிறந்தநாள்.. ஆனால் வீட்டில் பிறந்த நாளிற்குரிய சுவடையே காணோம் ..காலை சாப்பாடு ஹோட்டலில் இருந்து வரவழைத்து சாப்பிட்டு முடித்தாயிற்று.. திரும்பத் திரும்ப போய் எப்படி கேட்பது என்று அமைதியாக அறையில் இருந்தவர்களை தேடிக் கொண்டு வருகிறான் ஆதி..
“டேய் என்னடா பிள்ளைகள் பிறந்த நாளை கொண்டாட வேண்டாமா.. எல்லாரும் இப்படியே உட்கார்ந்து இருந்தால் எப்படி.. யூனிபார்ம் உடைகள் வாங்கி வைத்திருக்கிறேன். அதை தான் நாம எல்லாரும் போட்டுக் கொள்ள வேண்டும்.. ” என்றதும் அரவிந்த் திகைப்புடன் அவன் முகத்தை பார்க்கிறான் ..
“ஆமா பிறந்தநாள் கொண்டாட போகும் நம்ம எல்லோரும் ஒரே மாதிரி டிரஸ்.நீ நான் அப்பா மூன்று பேரும் ஒரே மாதிரி உடை.. பெண்கள் மூன்று பேரும் ஒரே மாதிரி .அதே போல இந்த குட்டி பயல்களுக்கும், ரெண்டு குட்டி ஏஞ்சல்களுக்கும்.. பார்க்கவே அழகா இருக்கும்ல. ”
அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அவர்களுடைய உடைகளை கொண்டு வந்து பத்மா கொடுக்கிறாள்.. “இதை போட்டுட்டு சீக்கிரமா கிளம்புங்க…”
எல்லா உடைகளுமே படு அமர்க்களமாய் இருக்கிறது.விலையும் அதிகம் தான் போல .. “ஏன் இந்த அண்ணா இப்படி செய்கிறார்களோ.. தேவையில்லாமல் செலவை இழுத்து விட்டுக் கொள்கிறார்களே..” என்று சங்கடப் படுகிறார்கள் மித்ராவும் அரவிந்தும்..
அரவிந்த் போன பிறந்த நாளிற்கு இவர்கள் இருவரையும் அழைத்ததற்கு காரணமே வேறு .ஆனால் இப்பொழுது நடப்பதுவோ அப்படியே தலைகீழாய் இருக்கிறது..
“ஏங்க நீங்க எப்படி பிறந்தநாளை கொண்டாடுனீங்க.. இந்த அண்ணன் எப்படி கொண்டாடுறாங்க பார்த்தீங்களா. பார்க்கப் போனா அவங்க நம்மளை விட கொஞ்சம் வசதி கம்மி தான்..”மனதில் பட்டதை மித்ரா அப்படியே சொல்கிறாள்..
“பரவாயில்லைடி, அதற்கென்ன செய்வது.. எனக்கு தெரியாதது, அண்ணனுக்கு தெரியுது..நான் என்ன வேண்டும் என்றேவா செய்யாமல் இருந்தேன்.. அடுத்த பிறந்த நாளை நம்ம இன்னும் கொண்டாட்டமாய் கொண்டாடி விடுவோம்.. ” என்றதும் தான் மித்ராவுக்கும் மனம் கொஞ்சம் சமாதானம் ஆகிறது..
ஹோட்டலில் இவர்கள் குடும்பம், சுற்றி உள்ளவர்கள் தான் என்று எண்ணி இருந்தவனுக்கு கும்பல் கும்பலாய் திருமணத்திற்கு வரும் அளவிற்கு கூட்டம் வர ஆரம்பிக்கவும் அசந்து போகிறான் அரவிந்த்..
அவனுக்கு கொஞ்சம் ஏதோ ஒரு மாதிரியாக வேறு இருக்கிறது ..அதை மித்ராவிடமும் சொல்லி புலம்புகிறான் ..
“ஏன்டி இங்கு யாரையுமே தெரியாது.. ஆதி சண்ணாவை மட்டும் தான் தெரியும்..அவரை மட்டும்தான் நம்பி வந்தோம்.. இப்பொழுது வந்தவர்கள் எல்லாருமே பூங்குழலிக்காக மட்டும்தான் வந்திருப்பார்கள்.. அமிர்தன் அவளுக்கு வரும் பரிசுப் பொருட்களை பார்த்தால் ஏங்கி போய் விட மாட்டானா.. இந்த அண்ணா ஏன் இப்படி ஏற்பாடு செய்து இருக்கிறார்கள் .இப்பொழுது என்ன செய்வது . பாதியில் திரும்பவும் போக முடியாது .. இவன் அழ ஆரம்பித்தால் சமாதானமும் செய்ய முடியாது .. “என்று தர்ம சங்கடத்திற்குள் ஆளாகிறான் ..
அதற்கு மேல் மித்ராவின் முகம் வாடிப் போய் கிடக்கிறது. அங்கு குசியாக இருந்தது யார் என்றால் கயல் தான். வந்திருந்தவர்கள் பாதிப்பேர் தமிழ் பேசவுமே எல்லாரிடமும் சென்று தன்னுடைய தமிழ் புலமையை காட்டிக் கொண்டு இருந்தார். அவர் தெரிந்தவர் தெரியாதவர் என்று எல்லோரிடமும் பேசிக் கொண்டிருந்தார் .. இதை அரவிந்த் போய் கேட்டால் அதற்கும் எடக்கு மடக்காய் பதில் கூறுவார்..
” இங்கே தங்கி இருந்தேனா. அதனால் எல்லோரும் எனக்கு தெரிந்தவர்கள் தான்.. நான் எல்லோரிடமும் நன்றாகப் பழகுவேன் … உன்னை மாதிரி கிடையாது.. ” என்று. இப்பொழுது இருக்கும் மனநிலையில் கயலை கவனிக்க கூடாது என்று அமைதியாக இருக்கிறான்..
ஆதி ஏதோ செய்யப் போகிறான் போல. அதனால் சஸ்பென்ஸ் ஆகவே அந்த விஷயத்தை வைத்திருக்கிறான். அவனது வாடிய முகத்தை கவனித்தாலும் கண்டு கொள்ளாதவனை போல பரபரப்பாய் வேலைகளை செய்கிறான்..
பிறந்தநாளுக்கு கூடியிருக்கும் எல்லாரையும் ஒருங்கிணைக்கும் வேலையில் பரபரப்பாய் இருக்கவும் அந்த வேலைகளில் கொஞ்சம் அரவிந்தும் கையில் எடுத்துக் கொள்கிறான் ..எல்லாருமே அவனிடமும் இலகுவாக தான் பழகுகிறார்கள். அதுவே அவனுக்கு கொஞ்சம் ஆச்சரியம்தான்..
கேக் வெட்டும் நேரமும் வந்து விடுகிறது. ஆதி இருவரையும் கொஞ்சம் கடிந்து கொள்கிறான்..” என்னடா நம்ம பிள்ளைகளுக்கு கேக் வெட்ட போகிறோம் .. என்னவோ விருந்தினர் போல ஒதுங்கி ஒதுங்கி நிற்கிறீர்கள்… இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு வா.. இங்கு கொண்டு வந்து நிற்க வை ..நம்ம குடும்பம் எல்லாரையுமே மேடையில் ஏற்றி விடு.. “என்றதும் அமிர்தனை எண்ணிக் கொஞ்சம் கலங்கியவனாய் மேடையில் பூங்குழலியையும் அவனையும் நிற்க வைக்கிறான்..
கேக் வெட்டி எல்லாருக்கும் ஊட்டி முடித்ததும் ஒவ்வொருவராய் வந்து பிறந்த நாள் பரிசு பொருட்களை கொடுக்க ஆரம்பிக்கிறார்கள்.. அரவிந்த் தயாராக இருக்கிறான் .. மகன் அழுதால் எப்படி சமாதானம் செய்வது என்று. சட்டை பையில் ஆதி அண்ணாவின் சார்பாக இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்துக் கொள்கிறான். அவன் முன்கூட்டியே முன் யோசனையாக இருக்கிறானாம்.. அழுதால் பெரியதாக ரவுண்ட் அடித்து விடலாம் என்று .அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லாமல் போய் விடுகிறது..
முதலில் ஊருக்கு பெரியவராய் இருந்த வயதானவர் தான் மேடைக்கு வருகிறார் … அவர் இரண்டு குழந்தைகளையும் சேர்த்து ஆசீர்வாதம் செய்து விட்டு ஒரே மாதிரியாக பேக் செய்யப்பட்ட கிப்ட் பொருள்களை இரண்டு குழந்தைகள் கையிலும் கொடுக்கிறார்..
‘இவர் ஏதோ இரண்டு பிறந்தநாள் என்று பார்த்து விட்டு வாங்கி இருப்பாரோ.. சரி எப்படியோ இவன் அழாமல் இருக்கட்டும்.., என்று வேடிக்கை பார்க்கிறான்.. ஆனால் வந்து கிப்ஃட் கொடுப்பவர்கள் எல்லாருமே இரண்டு குழந்தைகளுக்கும் ஒரே விதமான பொருள்களை தான் கொடுக்கிறார்கள் ..அரவிந்துக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை..
அண்ணா தன் எதிரே தான் பிறந்த நாளுக்கு அழைப்பு விடுத்தார் ..அதுவும் கொஞ்சம் பேருக்கு தான்..நாங்கள் வந்த இந்த ஒரு வாரத்திற்குமே ஊர் சுற்றி பார்க்க தானே நேரம் சரியாக இருந்தது. இவ்வளவு கூட்டம் எங்கிருந்து வந்தது.. எப்பொழுது இரண்டு குழந்தைகளுக்கு பிறந்தநாள் என்று சொன்னார்.. அண்ணாவிடம் இதை கண்டிப்பாக கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் ..அவரிடம் கட்டு திட்டான ஒரு அமைப்பு இருக்கிறது. அதில் தானும் தேர்ச்சி பெற்றுக் கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறான்..
அரவிந்தின் மனதில் அவனுடைய ஆதி அண்ணாவின் பிம்பம் மலையளவிற்கு உயர்ந்து கொண்டே போகிறது ..
அமிர்தனுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.. அதனால் அருகில் நின்ற தன் அப்பா அம்மாவை கூட கண்டு கொள்ளவில்லை.. பூங்குழலியுடன் கை சேர்த்துக் கொண்டு பரிசு பொருள்களை வாங்கி அடுக்கி வைப்பதில் தான் மும்முரமாய் நிற்கிறான்..இரண்டு குழந்தைகளுக்கு என்றதும் பரிசு பொருள்களால் மேடையே நிரம்பி வழிகிறது..
வந்திருந்த அனைவருக்கும் தடல் புடல் விருந்து தான் .அதுவும் தமிழ்நாட்டு உணவு வகைகள் .. வெளிநாட்டு வாசிகளான அவர்களுக்கு அந்த உணவு சாப்பிடுவதற்கு அமிர்தம் போல தோன்றுகிறது.. பிறந்த நாள் கொண்டாட்டத்தை விட சாப்பாடுதான் சூப்பர் என்றபடி செல்கிறார்கள்..
பிறந்தநாள் முடிந்து இடத்தை காலி செய்து வீட்டிற்கு திரும்ப மாலை ஆகி விடுகிறது.. இப்போதுமே மித்ராவும் அரவிந்தும் செய்யாத காரியத்தை தான் பத்மா செய்கிறாள் ..அவர்கள் வீட்டிற்கு வருவதற்குள் வீட்டு வேலைக்கார அம்மாவிடம் சொல்லி ஆரத்தி கரைத்து நான்கு குழந்தைகளையும் வாசலிலே இருக்க வைத்து திருஷ்டி கழித்து உள்ளே அழைத்து செல்கிறாள்..
மித்ராவும் அரவிந்த் மாதிரியே இதை மனதில் பதிய வைத்துக் கொள்கிறாள். தானும் இதை எல்லாம் செய்ய வேண்டும் என்று.. உள்ளே வரும் போது கயலிடம் வம்பு செய்த படியே வருகிறான்..
“ கிழவி வீட்டில் பெருசுங்கன்னு ரெண்டு பேரும் இருக்கீங்கன்னு தான் பேரு.. எங்களுக்கு ஏதாவது சொல்லிக் கொடுத்து இருக்கீங்களா.. இங்க பாரு அண்ணனுக்கு யாருமே இல்லை. ஆனால் எல்லாவற்றையும் முறைப்படி செய்கிறார்கள்..”
“ அந்த பிள்ளைக்கு தன் குடும்பத்தின் மீது பொறுப்புகள் ஜாஸ்தி. அதனால அக்கறையாய் செய்கிறார்.. உனக்கு அப்படி எதுவுமே கிடையாது..உன் மனைவி பிள்ளையிடம் கூட எப்பொழுது பார்த்தாலும் வம்பு செய்துக் கொண்டிருப்பாய் ..என்னமோ அதிசயமாய் போன பிறந்த நாளில்இருந்து தான் புத்தருக்கு ஞானோதயம் கிடைத்தது மாதிரி ஏதோ கொஞ்சம் ஞானோதயம் கிடைத்து இருக்கிறது. அதனால் தான் ஒழுங்காக இருக்கிறாய்.. ”
என்ன கயல் நேரில் பார்த்தது போல இப்படி பேசுகிறார் ..
தொடரும்..
