அத்தியாயம் 4: நிழல் தொடரும் நிசப்தம்
கொடைக்கானலின் அதிகாலை பொழுது ஒரு ஓவியத்தைப் போல விரிந்திருந்தது. வானம் இளஞ்சிவப்பு மற்றும் ஊதா நிறத்தில் குழைந்து காணப்பட்டது. ஆர்யனுக்கும் யாழினிக்கும் இடையிலான அந்த மௌனமான உரையாடல் இப்போது ஒரு அழகான வழக்கமாகிவிட்டது. ஒருவரை ஒருவர் பார்க்காமல் அவர்களால் ஒரு நாளைக் கடத்த முடிவதில்லை. ஏன் நிமிடம் கூட பாரமாக இருந்தது.
இருவரும் ஒருவரை ஒருவர் எண்ணினால் போதும் அடுத்த நிமிடம் அவர்கள் சந்திப்பதற்கான வாய்ப்பை இயற்கையே அள்ளி வழங்கியது. காலை எழுந்ததும் யாழினியின் நினைப்பில் வீட்டு வாசலுக்கு வந்தால், அங்கு யாழினி பனியில் கூட நிதானமாக கோலம் போட்டுக்கொண்டிருந்தாள். ஆர்யனை பார்த்ததும் ஒரு புன்சிரிப்பு. யாழினிக்கும் ஆர்யன் எப்போது வெளியே வருவான் என்ற எண்ணத்தில் கோலத்தை அலங்கரித்ததால், அவளையே ஆழ்ந்த அழகாக பார்க்கும் ஆர்யன் அவளுக்கு முன் நின்றிருந்தான்.
இருவருக்கும் அப்படி ஒரு பிணைப்பு, காதலின் இணைப்பு. யாழினி கொடுத்த அந்த ஒற்றை ரோஜா, இன்னும் மனம் குறையாமல், இதழ் கூட வாடாமல் இப்போது பறித்தது போல புது பொலிவுடன் இருந்தது. ஆர்யனும் அவனது பங்கிற்கு ஒரு கொத்து ரோஜா மலர்களை அவள் வரைந்த கோலத்திற்கு மத்தியில் கொண்டு வந்து வைத்தான்.
அவனின் செயலில் அதிர்ந்தவள்,“பூசணி பூ தானே வைப்பார்கள், என்ற கேள்வியுடன் ஆர்யனை பார்த்தாள். பூனாலே அழகு தான்..அதுவும் ஓரு அழகான பூ போட்டு இருக்க கோலத்தை இந்த ரோஜா அலங்காரிக்க கூடாதா!!” கேட்டவனின் கேள்வியிலும் பார்வையிலும் கொட்டிய காதலில் மொத்தம் நனைந்து, யாழினி வெட்கத்தில் முகம் சிவந்தாள்.
அதிகாலை சூரியனும் இருவரின் காதலை பார்த்து சிவந்து தான் போயிருந்தான். இதற்கிடையில் ஆர்யன் தனது அலைபேசியை கடந்த சில நாட்கள் தொட்டுக்கூட பார்ப்பதில்லை. அவன் பார்க்கத்தான் யாழினி எப்போதும் அவன் முன் காட்சியளித்தாள். இயல்பிலும் சரி, எண்ணத்திலும் சரி யாழினி, யாழினி என்ற ஒற்றை பெயர் மந்திரம் போல அவனுக்குள் ஒலித்துக்கொண்டிருந்தது. ஆம் காதலுக்கு வார்த்தை தேவை இல்லை, என்றோ பார்த்த ஒரு பார்வை போதும் அதையே நினைத்து, நினைத்து உள்ளம் சிலாகித்து உண்மை உலகை மறந்து கற்பனை உலகில் கனவு மாளிகை கட்டும் பலரில், ஆர்யன் எப்போது நினைத்தாலும் அவன் முன் வெட்கச் சிரிப்போடு வந்து நிற்கும் யாழினியை நினைக்காமல் வேறு எதை எண்ண முடியும்.
அன்று மாலை, யாழினி ஆர்யனை ஒரு ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்றாள். கார் வளைந்த தார் சாலையில் பனியை விலக்கி பதுமை போல மெல்ல நகர்ந்தது. ஆர்யன் காரை ஓட்டியபடி எங்கு போகிறோம் என பாவனை மொழி பேசினாலும், யாழினி பொறுமை, பொறுமை என அவளும் பாவனையில் அமைதியாக்கினாள். கார் சில வளைவுகளில் வளைந்து, ஒரு பெரிய மேட்டின் மீது ஏற சிரமத்தோடு அழுத்தத்தை சந்தித்தது. யாழினுக்கு அது புரிந்தது, ஆர்யனும் இரண்டுவது கியரில் காரின் ஆக்சிலேட்டரை பக்குவமாய் அழுத்தினாலும் முகத்தில் ஒரு அழுத்தம் தெரிந்தது.
கியர் மீது இருந்த ஆர்யனின் கை மீது யாழினி தனது மிருதுவான கையை வைக்க, ஆர்யனின் அழுத்தம் சற்று குறைந்து அமைதி முழுவதும் பெற்று ஆக்சிலேட்டரை ஒரே மிதி கார் மேட்டின் மீது இறக்கை விரித்த பறவை போல மிதந்து சென்றது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டவனர். அது வெற்றிப் புன்னகை, காதலின் கனிவு புன்னகை. யாழினி காரை இடது பக்கம் நிறுத்த சொன்னாள். அது மலைச்சரிவில் இருந்த ஒரு பாழடைந்த தேவாலயம். அதன் கூரைகள் இடிந்து கிடந்தாலும், அங்கிருந்த அமைதி ஒரு தெய்வீகத் தன்மையைக் கொண்டிருந்தது.
ஆர்யன் தன் டைரியையும் பேனாவையும் கையில் வைத்திருந்தான். யாழினி அங்கிருந்த ஒரு பழைய கல் தூணில் சாய்ந்து அமர்ந்தாள்.
அவள் தன் கையில் இருந்த ஒரு காகிதத்தில் எழுதி அவனிடம் நீட்டினாள்:
“இங்கே பாருங்கள் ஆர்யன், இங்கே சத்தம் இல்லை… ஆனால் காற்றின் பாட்டு இருக்கிறது.”
ஆர்யன் சிரித்தான்.
“காற்றின் பாட்டா? எனக்கு அது கேட்கலையே யாழினி.” கூறினான் புன்னகைத்த படியே
யாழினி எழுந்து அவன் அருகில் வந்தாள். மெல்ல அவனது சட்டையின் காலரைப் பிடித்து, அவனை ஒரு மரத்தின் அருகே அழைத்துச் சென்றாள். மரம் பிரமாண்டமாக ஓங்கி வளர்ந்து, விரிந்து பரவியிருந்தது. தரையில் பூத்திருந்த காய்ந்த சருகுகள் காற்றின் வேகத்திற்கு ஏற்ப தரையில் ஓடி ஒருவித தாளத்தை உருவாக்கின. ஆர்யன் அனைத்தையும் கவனித்தான். சுற்றுப்புற கவனத்தை விட யாழினி பிடித்த பிடியில் உள்ள இறுக்கத்தை தான் பெரிதும் விரும்பி அவளையே ரசித்துப்பார்த்தான். இவ்வளவு நெருக்கத்தில் அவளை பார்ப்பது முதல் முறை, பளிங்கு போல பிரகாசமான முகம், அவள் முகத்தில் அவனையே பார்க்கலாம் போல அவ்வளவு வெண்மை. பனிதுளி போர்த்திய பூந்தோட்டம் போல அவ்வளவு வாசம். உள்ளத்தில் உண்மை இருந்தால், உடலும் மணக்கும் என்பது போல அவள் மணம், ஆர்யனை அவள் இழுக்க கூட இல்லை, அவளது தொடுதலில் காற்றில் மிதப்பது போல அவள் பின்னே நிழல் போல சென்றான்.
அவள் அவனது கையைப் பிடித்து அந்த மரத்தின் அடிமரத்தில் வைக்கச் சொன்னாள். அவளின் கை பிடி அவனின் இதயத்தை ஒரு ஆட்டம் போட வைத்தது. என்ன ஒரு ஸ்பரிசம் அந்த பிடி என்றும் அகலாமல் அப்படியே இருந்தால் எப்படி இருக்குமென்ற எண்ண ஓட்டம், யாழினுக்கு புரிந்தது. சின்ன வெட்கத்தோடு கையை சற்று தளர்த்தி மரத்தின் அடிபரப்பில் அவனது கையை வைத்தாள்.
மரம் காற்றின் வேகத்தில் லேசாக ஆடும்போது ஏற்படும் அந்த மெல்லிய அதிர்வு ஆர்யனின் நரம்புகளில் ஊடுருவியது. அவன் கண்களை மூடினான். இயற்கையின் ராகம் ஆரியனின் இதயத்தை இனிக்கச் செய்தது. மரத்திற்கு கூட எத்தனை காதலி? மண், காற்று, நீர், சூரிய ஒளி என்று காதலில் மரம் மயங்கிக் கிடக்கிறது. அதனால்தான் இப்படி ஒரு இசையை இனிமையாக இசைக்கமுடிகிறது. இதையெல்லாம் பார்க்கும் பொழுது தனது இசை கண்ணிற்கு தெரியாத தூசி போலத் தான். கற்றுக் கொள்ள வேண்டும். காட்டின் கவிதையை, காற்றின் சந்தத்தை, மணலின் மெட்டுக்களை, நீரின் பல்லவியை, சூரிய ஒளியின் ராகத்தை, இலைகளின் தாளத்தை என சில நிமிடம் இயற்கையின் விரும்பியாக மரத்தின் வேர் போல ஆழ்ந்து சென்றான். யாழினுக்கு அவனது நீள் ரசனை பிடித்து இருந்தது. அவனுக்கு இவை பிடிக்கும் என யாழினி முன்னமே அறிந்திருந்ததால் தான்.
அவனுக்கு இவ்விடம் நல்ல ஒரு மன மாற்றத்தை கொடுக்கும் என நம்பியது போல ஆர்யனின் மனம் பழைய கசப்பான நினைவுகளை காற்றில் ஒப்படைப்பது போல, இயற்கையே அவனின் பாரத்தை ஏற்றுக்கொண்டது. சுமை இறங்கிய மனம், ஆர்யனின் முகத்தை முன்பை விட பொலிவாக்கியது. புதுமை பெற்ற குரல் சுறு,சுறுப்பாக யாழினியிடம் கதைத்தது.
“உண்மைதான் யாழினி… இயற்கை கூட ஒரு பாடலைப் பாடிட்டு தான் இருக்கு,” என்றான் நெகிழ்ச்சியுடன்.
சட்டென்று அவன் யாழினியின் பக்கம் திரும்பினான். அவள் அவனை ஆழமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தப் பார்வையில் அத்தனை காதல், அத்தனை ஏக்கம், அத்தனை வலி ஒளிந்திருந்தது. ஆர்யன் அவளது முகத்தை மெல்லத் தன் கைகளால் ஏந்தினான். அவளது கண்கள் பனிந்தன.
“யாழினி, நீ ஏன் என்கிட்ட எதையும் வெளிப்படையா பேச மாட்டேங்குற? எல்லாத்திலும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு புதிர் ஒன்ன போட்டு, என்ன திக்குமுக்காட வைக்குற? உனக்குள்ள அப்படி என்ன ஓடிட்டு இருக்கு. நீ ஏன் உனக்கு நீயே வேலி போட்டுக்குற? உன்னோட அந்த மௌனம் எனக்குப் பிடிச்சிருக்கு தான், ஆனா உன்னோட உண்மையான குரலை ஒரே ஒரு முறை கேட்கணும்னு என் இதயம் துடிக்குது,” என்று ஆர்யன் கிசுகிசுத்தான்.
யாழினி பதில் சொல்லவில்லை. மாறாக, ஆர்யனின் நெஞ்சில் தலை சாய்த்துக் கொண்டாள். அவனது இதயத் துடிப்பு அவளுக்கு ஒரு சங்கீதமாகத் தெரிந்தது. இதுவரை பல கேள்விகள் கேட்டவன், அவளின் கன்னம் மார்பில் சாய்ந்ததும் அத்தனை கேள்விகளுக்கும் விடை கிடைத்தது போல ஆர்யனும் சாந்தமானான். அந்த உயர்ந்த தேவாலயத்தின் அமைதியில், இருவரது இதயங்களும் ஒரே தாளத்தில் துடிக்க ஆரம்பித்தன.
அந்தத் தருணம் ஒரு கவிதை போல இருந்தது. அந்த கவிதைக்கு மலர் தூவி வாழ்த்தும் வண்ணம் காய்ந்த இலைகள் அவர்கள் மீது சாரல் போல விழுந்தது. அந்த பிரமாண்ட மரத்தின் வேர் பகுதியில் இருவரும் காதலின் ஆணி வேர் போல இணைந்து இருந்தனர். இயற்கைக்கு, எப்படி இருந்தாலும் உண்மையான அன்பிற்கு எப்போதும் துணை நிற்பது போல காது கேளாத ஒரு இசைக்கலைஞனும், பேசாத ஒரு பெண்ணும் தங்களின் காதலை மொழிகளே இல்லாமல் பரிமாறிக் கொண்டனர்.
ஆனால், அந்த அமைதியைக் குலைக்க ஒரு நிழல் அங்கே வந்தது.
தூரத்தில் ஒரு கறுப்பு நிற கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய ஒரு நபர் பைனாகுலர் மூலம் இவர்கள் இருவரையும் கவனித்துக் கொண்டிருந்தான். அவனது காதில் இருந்த ‘வோக்கி-டோக்கி’யில் ஒரு குரல் கேட்டது:
“அவளைக் கண்டுபிடிச்சாச்சா?”
அந்த நபர் கரகரப்பான குரலில் சொன்னான்: “ஆமாம் சார். அந்த மியூசிஷியன் கூடத் தான் இருக்கா. ஆனா, அவ இன்னமும் பேசல. அவளை இப்போவே தூக்கிடலாமா?”
மறுமுனையில் இருந்து உத்தரவு வந்தது:
“இல்லை, அவகிட்ட இருக்கிற அந்த ஃபைல் (File) எங்க இருக்குன்னு தெரியணும். அதுவரைக்கும் வெயிட் பண்ணுங்க. அவனுக்குத் தெரியாம அவளைக் கண்காணிங்க.” போட்ட உத்தரவில் தன் கன்காணிப்பு வேலையை மீண்டும் தொண்டர்ந்தான் அவன்
யாழினியின் அரவணைப்பில் இருந்த ஆர்யனுக்குத் திடீரென்று ஏதோ ஒரு ஆபத்து உணர்வு ஏற்பட்டது. அவன் சுற்றும் முற்றும் பார்த்தான். எதுவும் தெரியவில்லை. ஆனால், அவனது ‘சிக்ஸ்த் சென்ஸ்’ ஏதோ தவறு நடப்பதாக எச்சரித்தது.
அவன் யாழினியின் கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டான். “யாழினி, நாம கிளம்பலாம். எனக்கு ஏதோ சரியாத் தோணல,” என்றான்.
யாழினியும் ஏதோ ஒரு பதற்றத்தை உணர்ந்தாள். அவள் ஆர்யனின் பின்னால் மறைந்து கொண்டாள். இருவரும் மெல்ல அங்கிருந்து நகரத் தொடங்கினர்.
தேவாலயத்திற்குள் யாழினி ஆர்யனை அழைத்து சென்றாள். பழமையான தேவாலயம், சுற்றிலும் தூசுக்களும், சிலந்தி வலையும், வவ்வால் எச்சங்களும் பரவி கிடந்தன. புறாக்களின் சப்தமும் ஓங்கி ஒலித்தது. சுற்று புற, சுவர்களில் ஏசுவின் ஓவியங்கள் அழகாக வரையப்பட்டு இருந்தது. ஆர்யன் அனைத்து ஓவியத்தையும் ரசித்துப்பார்த்தான்.
ஆனால் அவன் கை மட்டும் யாழினி கையை பிடித்தவாறே இருந்தது. யாழினிக்கும் அது பிடித்து இருந்தது. யாழினுக்கு இது போல ஒரு பாசம் தனது சிறுவயதில் இதே தேவாலயத்திற்கு தன், தந்தை மற்றும் அண்ணன் பிரகாஷ் கூட வந்த நினைவு அப்படியே மனதில் நிலைபெற்று இருந்தது. தன் தந்தையின் பாதுகாப்பு கை பிடியை விட சற்று கூடுதல் அழுத்தமாக இருந்தது ஆரியனின் பிடி. இரு கை கைகளை விரித்து வானத்தை பார்த்தபடி முள் கிரீடம் அணிந்து, சிலுவையில் கருணை முகத்தோடு இருந்த ஏசு நாதர் சிலை முன் இருவரும் அமர்ந்து பிராத்தனை செய்தனர்.
அவருக்கு தெரியாத ஒன்றையா இவர்கள் வேண்டி கேட்கப் போகிறார்கள். எல்லாம் தெரிந்த அவருக்கு இவர்களின் எதிர் காலம் முதல் இந்த ஆன்மா மனித பிறவி கடந்து இன்னும் என்ன என்ன செயல்கள் செய்ய இருக்கிறது. இதற்கே சுனங்கி போனால் இன்னும் எவ்வளவு இருக்கிறது என்று சுவற்றில் வரையப்பட்டு இருந்த தேவதைகளும்,உண்மையில் அவர்களின் எண்ணத்திற்குகேற்ப வருங்காலத்தை நினைத்து அவர்களின் செயல்களை நன்கு புரிந்தது.
காரில் இருந்து இறங்கிய மர்ம நபர், ‘வோக்கி-டோக்கியில், சார் நீங்க சொன்ன மாதிரி அந்த பொண்ணோட ஒவ்வொரு அசைவையும் நம்ம ஆளுங்க கண்காணிச்சிட்டு இருக்காங்க. அவ பேச ஆரம்பிச்சா அவளுக்கு பிரச்சனை ஆரம்பிச்சிருச்சின்னு அர்த்தம். நீங்க கவலைப்படாம இருங்க… எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன். நீள் நெற்றியும், வெளுத்த தேகமும், கூரிய பார்வையுமாக காசி நிமிர்ந்து நின்றான். அவன் நிற்கும் உயரத்தில் மேகங்களே அவனுக்கு கீழே பனிந்து சென்றது.
கொடைக்கானல் இறுதி மாலை பொழுது எப்பொழுதும் போல, சிறு சாரல் மழையை பெய்வித்தது. குளிரும் ஒரு படி மேலே சென்று, தட்பவெப்பம், ஒரு (0%) டிகிரியில் இருந்து மைனஸ் செல்ல தயாராக இருந்தது.
அன்று இரவு, ஆர்யன் தன் அறையில் மரக்கட்டைகள் நிரம்பிய நெருப்பு எரியும் சிமினி முன் அமர்ந்து ஒரு புதிய மெட்டை உருவாக்கிக் கொண்டிருந்தான். அந்த மெட்டு ஒரு காதலைப் போலத் தொடங்கி, இடையில் ஒரு பயங்கரமான எச்சரிக்கை ஒலி போல மாறியது.
யாழினி தன் வீட்டில் ஜன்னல் அருகே அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். அவள் முன் ஆர்யனின் வீடு வண்ணமயமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. ஆனால் யாழினி மனம் இருளில் ஒரு சிறு வெளிச்சத்திற்காக ஏங்கிக்கொண்டிருந்தது. அவள் கண்டிராத பிரச்னையா? ஆனால் இப்போது கூடி வந்திருக்கும் பிரச்சனை! எல்லாம் இழந்து நீதியை மட்டும் நிலைநாட்டும் தேசத்தின் உண்மையான குடிமகளாக இன்னும் நீடித்து நிற்கிறாள். அவள் கையில் ஒரு பென் டிரைவ் (Pen drive) இருந்தது. அதுதான் அவளது மௌனத்திற்குக் காரணமான அந்த ரகசிய ஆவணம்.
“ஆர்யன்… உன்னைத் தேடி வந்த இந்த நிம்மதி, நீ தேடி செல்லும் அமைதி என்னால சிதைஞ்சுடக் கூடாது,” என்று அவள் மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
இரவின் நிசப்தத்தில், இரண்டு இதயங்களும் தங்களின் காதலை விட, தங்களைச் சூழ்ந்துள்ள ஆபத்தைப் பற்றி அதிகம் சிந்திக்க ஆரம்பித்தன.
