அத்தியாயம் 4
செய்தி சேனல்களில் பின்னணி இசை ஒரு புறம் அதிர, பானுவின் பழைய புகைப்படமும், மருத்துவமனையில் அவள் அனுமதிக்கப்படும் காட்சியும் மாறி மாறித் திரையில் ஓடிக் கொண்டிருந்தது.
“தங்கத்தை விற்கும் கடைகளில் உழைக்கும் பெண்களின் நிலை இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கிறதா?
பத்து ஆண்டு உழைப்பை உறிஞ்சிவிட்டு, இன்று தெருவில் வீசப்பட்ட ஒரு ஏழைத் தொழிலாளி!
அடிமட்ட மனிதநேயம் கூட வேலைக்கு வரும் ஏழை பெண்களுக்கு வர்மா கோல்டு பேலசில் இல்லையா?
வர்மா கோல்டு பேலஸ் நிறுவனத்தின் அசுர வளர்ச்சிக்கு பின்னால் உறியப்படுவது ஊழியர்களின் ரத்தமா?
சட்டம் இதற்கு என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறது?”
இப்படி செய்திக் குரல் ஊடகங்களில் வைரலாகிக் கொண்டிருக்க. வர்மாவின் தாடைகள் மேலும் இறுகியது.
அவன் முன் அமர்ந்திருந்த அவன் தந்தையும் இந்த செய்தியை எல்லாம் கேட்டப்படி இளைய மகனை பார்த்தார்.
“தீபக்…” என வர்மா கத்தி அழைத்தான் தன் காரியதர்சியை.
“சர்…” என அழைத்ததும் வந்து நின்றான் அவன்.
“ஹூ இஸ் ஷீ?”
“இந்த பொண்ணு நம்மக்கிட்ட வேலைக்கு வந்து எவ்வளவு நாளாச்சு?”
“எத்தனை ஹவர்ஸ் ஷிஃப்ட்?”
“வாட்ஸ் கோயிங் ஆன்?”
“முதல்ல இந்த நியூஸ் ஸ்பிரெட் ஆகுறதை நிறுத்த சொன்னனே என்ன பண்ணிட்டு இருக்க?”
இப்படி அடுக்கடுக்காக முதலாளி கேட்ட போது விழி பிதுங்கியது தீபக்கிற்கு.
“சர்… நியூஸ் ஆல்ரெடி நம்ம கையை மீறி போயிடுச்சு. ஹேஷ்டேக் சேவ் பானுனு டிவீட் எல்லாம் இப்போ டிரென்டிங்!” என்றவனால் பல்லை கடித்தான் வர்மா.
மொத்தமாக சொல்லி முடித்து திட்டு வாங்கிக் கொள்ளலாம் என நினைத்து விட்டான் போல. மேலும் தொடர்ந்தான்.
“சர் இவங்க நம்ம சபாபதி சர் பார்த்துக்கிற வர்ணம் ஜவுளி மாளிகைல தான் டென் இயர்ஸ்கிட்ட வொர்க் பண்ணியிருக்காங்க.
அங்க இருக்க மேனேஜர் கிட்ட பேசி ரெக்கார்ட்ஸ் எல்லாம் எடுத்து பார்த்ததில் கடந்த எட்டு வருஷத்தில் மேக்சிமம் ஒரு நாளைக்கு பதினொன்று முதல் பன்னிரண்டு மணி நேரம்னு இவங்க ரெகுலராவே ஓவர் டைம் பார்த்திருக்காங்க. அதுக்கான டபுள் வேஜஸூம் வாங்கியிருக்காங்க!
நம்ம கிட்ட வந்து இப்போ ஒன் இயர் தான் ஆகுது. இங்க அவங்களுக்கு நைன் ஹவர்ஸ் தாண்டி ஷிஃப்ட் போட்டதே இல்லை. அவங்களும் அடிக்கடி கால் வலினு லீவ் எடுத்துட்டு இருந்து இருக்காங்க…” என்றான்.
“எப்படி வர்மா? ஓவர் டைமுக்கும் சட்டப்படி லிமிட் இருக்கே. இது ரொம்பவே தப்பா இருக்கே!” என்றார் ராஜேந்திரன் சிந்தனை முகமாக.
“இதெல்லாம் உங்க பெரிய பையனை வர சொல்லி இருக்கேன். அவர்கிட்ட கேளுங்கப்பா. சும்மா அவரால உண்டான பாதிப்புக்கு என் பெயரை கெடுத்துட்டு!” சிடுசிடுத்தான் சூர்யவர்மன்.
“அவன் மேலுள்ள தப்பு தான். ஆனால் அண்ணன் தொழில் என்பதால உனக்கு அதில் தலையீடு இல்லைனு ஆகிடுமா? நாம தானே கலந்து பேசி ஒரு முடிவுக்கு வரணும். இதுல சம்மந்தப்பட்டு இருக்கிறது ஒரு பொண்ணோட வாழ்க்கை வேற…” என்றார் ராஜேந்திரன்.
“இப்படி அவருக்காக சொல்லி சொல்லி தான் இரண்டு கடைக்கும் வெவ்வேறு விதமா லிங்க் வச்சீங்க. இரண்டு கடையும் கிட்ட கிட்ட இருக்கணும். இங்க நகை எடுத்தா, அங்க துணி எடுக்க போவாங்க. அப்படி இப்படினு கிட்டத்தட்ட ஒரே பிசினஸ் போல போர்டிரெயிட்டிங் ஸ்டிரேட்டிஜி. அப்படி வந்தது தானே இந்த வொர்க்கஸ் எக்ஸ்சேஞ்ச். எல்லாம் யாருக்காக? அவருக்காக. ஆனால் இப்போ அவர் நிர்வாகத்தால பிரச்சனை யாருக்கு எனக்கு?” என்றான் வர்மா.
அவனுக்கு தன் தொழில் தனியாக இருக்க வேண்டும். லாபமோ நட்டமோ அது தன்னில் தொடங்கி தன்னோடு முடிந்திடட்டும் என்ற எண்ணம்.
“இல்லைப்பா. நீ உன் அண்ணனோட தொழில் செய்ய மாட்டேன்னு நின்ன. அவனுக்கு அதுல மனசு கஷ்டம். அவனுக்கும் ஒரு லாபமா இருக்கணும்னு நான் சில விஷயங்கள் செய்தது உண்மை தான். ஆனால் இது…” என ராஜேந்திரன் பேசிக் கொண்டிருக்கும் போதே தடுத்து விட்டான் வர்மா.
“அப்படி வந்தது தானே இந்த வொர்க்கஸ் எக்ஸ்சேஞ்ச்?” கேட்டவனிடம், “அது ஊழியர்களுக்கு ஒரு முன்னேற்றத்தை தர நாம செய்தது தானே வர்மா!” என்றார் அவர்.
“ஆகமொத்தம் இரண்டும் ஒரே நிறுவனம்னா இப்போ ஏன் என் கடை பெயர் மட்டும் மீடியால வருது. இப்போ லாபம் யாருக்கு? பாதிப்பு யாருக்கு?” கோபமாக அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்து சேர்ந்தார் சபாபதி.
அவருக்கு வர்மா கடை ஊழியர் என செய்தி பரவத் துவங்கியதுமே, அதன் ஆணி வேர் தன் நிறுவனத்தில் இருந்து துவங்கி விட்டதும் தெரிந்து விட்டிருந்தது.
“என்ன வர்மா வர சொன்னியாம்?” என்றபடி எதிரில் வந்தமர்ந்தவரை எரிக்கும் பார்வை பார்த்தான் வர்மா.
“என்ன இதெல்லாம்?” திரையை காட்டி கேட்டவனிடம், “ஆமாமாம் பார்த்தேன். உன் கடைல தான் அந்த பொண்ணு வேலை பார்க்குதாம்? ஏன் இப்படி மீடியா வரை விஷயத்தை போகவிட்ட. ஐந்தோ பத்தோ பேசி செட்டில் பண்ணி அனுப்பி இருக்கலாம்ல?” என சபாபதி சாவகாசமாக கேட்டதும் வர்மாவின் பொறுமை எல்லாம் காற்றில் பறந்து விட்டது.
“என்ன எனக்கு எதுவும் தெரியாதுனு நினைச்சு பேசிட்டு இருக்கீங்களா ஹான்ன்ன்…?” எடுத்ததும் எகிறியவனால் சபாபதியிடம் கூட ஒரு திகைப்பு வந்து போகாதில்லை.
“அவ எட்டு வருஷமா உங்க எம்பிளாயி. இப்போ கெட்ட பெயர் மட்டும் எனக்கா?” கேட்டவனை அவன் போக்கிலேயே வளைத்து பிடித்தார் சபாபதி.
“கரெக்ட் எட்டு வருஷம். அதுக்கு முன்ன அந்த பொண்ணு என்கிட்ட வேலை பார்த்த இரண்டு வருஷம் என் தொழில் நம்ம இரண்டு பேரோடதா தானே இருந்தது. இதோ இப்ப அந்த பொண்ணு பாதிக்கப்படும் முன்ன இந்த ஒரு வருஷம் அவள் உன் எம்பிளாயி தானே!” என்றார் சபாபதி.
இரு மகன்களும் இப்படியே வாதம் கொள்ள, “நிறுத்துங்க!” என கத்தினார் ராஜேந்திரன்.
அவருக்கு சபாபதி, சூர்யவர்மன் இருவரை பற்றியும் நன்றாக தெரியுமே. சபாபதி தன்னிடம் பணிபுரிந்த போது இந்நிலை என்றால் ஆரம்பத்திலேயே, சற்று முன் சொன்ன போல பேரம் பேசி துரத்தி இருப்பார்.
வர்மாவாக இருக்கவே தானே இந்த செய்தி தன் செவிக்கு எட்டியதும், அந்த பெண்ணை நல்ல மருத்துவமனையாக பார்த்து சேர்க்க சொன்னது. இதோ இப்போது அவனால் அந்த பெண்ணுக்கு மருத்துவமும் நடந்து கொண்டிருக்கிறது. என்ன செய்தி வெளியே கசிந்து விட்டது.
“தீபக் அந்த பொண்ணு குடும்பம் பத்தி விசாரிச்சியா?” என கேட்டார் ராஜேந்திரன்.
“சர் ரொம்ப கஷ்டப்பட்ட குடும்பம் தான். அப்பா இல்லை. அம்மா. ஒரு அக்கா. ஒரு தங்கச்சி. அவங்க இரண்டு பேருக்கும் இந்த பானுமதி தான் நம்மக்கிட்ட வொர்க் பண்ணிட்டே மேரேஜ் பண்ணி வச்சிருக்காங்க. அவங்களுக்கு வரன் பார்த்துட்டு இருக்கும் போது தான் இப்படி ஆகிடுச்சுனு விசாரிச்ச வரை சொல்றாங்க…” என்றான் அவன்.
ஏனோ அந்த பெண்ணின் வாழ்வே தங்கள் நிறுவனத்தால் பாதிக்கபட்ட போல உணர்ந்தவர், ஒரு கணம் விழிகளை மூடினார்.
விழி திறந்தவர், “சரி வர்மா சபா நாம இப்போ ஹாஸ்பிடல் போவோம். மீடியா வேற கழுகு மாதிரி எப்போ என்ன எழுதலாம்னு காத்துட்டு இருக்கு!” என்றார்.
“நான் எதுக்குப்பா?” என சபாபதி வாய் திறக்க.
“உனக்காக தான் நான் வர்மாவை பேசி சரிக்கட்டி வச்சிருக்கேன். அப்புறம் அவனால உனக்கு எதுவும் பாதகமானா என்னை கேட்காத!” அவர் தீர்த்து சொல்லிவிட சபாபதியும் புறப்பட்டார்.
மறுபுறம் மருத்துவமனையில்…
அந்த பெரிய மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பானுமதி அனுமதிக்கப்பட்டு சில மணிநேரங்கள் ஆகியிருந்தது.
“ஏன்மா இத்தனை பெரிய ஹாஸ்பிடல்ல சேர்த்து விட்டுட்டு போன நிர்வாகத்தில் இருந்து இன்னும் யாரையும் காணலையே. லட்ச கணக்குல பில்லுங்கிற பெயர்ல மொய்யை வைனா நாம எங்க போக?” என விசாலத்திடம் கேட்டு வைத்தாள் அவர் மூத்த மகள் வாசுகி.
விசாலமோ வீட்டிற்காக ஓடாக தேய்ந்து இன்று நலிந்து போய் கிடக்கும் நடு மகளை நினைத்து தனக்கே கால் கை விழுந்திடும் அளவு மன பாரத்தில் அல்லவா நின்றிருக்கிறார். இதில் எங்கிருந்து இவள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்வார்?
மூத்ததும், கடைசியும் சுயநலம் என தெரியும். ஆனால் மூவரில் ஒருத்தி அனுசரித்து போனால் மற்ற இருவரின் வாழ்வு சிறக்கும். அதன் பின் இருவருக்கும் நல்லது செய்தவளுக்கும் நல்லது நடக்கும் என நினைத்திருந்தார்.
சுயநலம் தான். அதை அவரும் அறியாதில்லை. தான் பெற்ற மூன்றில் இரு பிள்ளைகளை கரை சேர்க்க, அதில் ஒருத்தியின் வாழ்வை பணயம் வைத்ததாக தான் நினைத்திருந்தார். ஆனால் அழித்து விட்டோமோ என உணரும் போது நெஞ்சு வலியே வந்திடுமோ! என்ற நிலை விசாலத்திற்கு.
இருக்கும் பிரச்சனையில் பானுவை தேற்றி கொண்டு வர வேண்டுமே. என்றுமே முடியவில்லை என சோர்ந்து போகாத தன் மகள் இதற்கு தான் சோர்ந்து சோர்ந்து வந்தாளா? நினைத்தவர் தலையில் அடித்துக் கொண்டு அழுதார்.
“நீ சும்மா இரு வாசு. அதெல்லாம் ஃபுல் மீடியாவுல நம்ம பானு விஷயம் வந்தாச்சு. அவங்க பொறுப்பு ஏத்து அவளை பார்த்து செட்டில் பண்ணி தான் ஆகணும்!” என்றான் கணேசன்.
பிருந்தாவோடு வந்த அவள் கணவன் கடமையே என அமைதியாக நின்றிருந்தான்.
அவளுக்கோ அக்காள் செய்ததற்கு எல்லாம் சேர்த்து அன்னை நம்மிடம் உதவி என்று கேட்டு விட்டால்? இவரும் மனம் வந்து தந்து விட்டால்? பின்னர் இவர் அம்மாவும், அக்காவும் பேசுவதை யார் கேட்பது? என்ற கவலை.
வீட்டில் குழந்தையை விட்டு விட்டு வந்திருந்தவள் பானுவின் நிலை இது தான் என மருத்துவர்கள் இரண்டில் ஒன்று சொன்னால் வீடு போய் சேரலாம் என்றே நின்றிருந்தாள்.
இவர்கள் யாவரும் யாருக்காக இத்தனை நேரம் காத்திருந்தனரோ. யார் வந்து பானுவின் பொறுப்பை ஏற்க வேண்டும் என காத்திருந்தனரோ அவன் அந்த மருத்துவமனை வாசலில் வந்து இறங்கியிருந்தான்.
அவன் தன் ஆடி கார் கதவை திறந்து கொண்டு காலை தரையில் ஊன்றிய போது, மொத்த மீடியாவும் தாங்களும் அவன் வரவிற்காக தானே காத்திருக்கிறோம் என அவனை சூழ்ந்து கொண்டிருந்தது.
அவர்களை எதிர்கொண்ட வர்மாவின் கழுகு பார்வை தான் எத்தகையது? அனைவரும் அவன் பார்வைக்கே ஒரு அடி பின்னே வைக்க.
சூர்யவர்மன் தன் கம்பீரமான நடையோடு பானுமதியை கண்டிட மருத்துவமனை உள்ளே தன் காரியதர்சியோடு சென்றான்.
“முதல்ல போய் எங்க ஊழியரை பார்த்துட்டு வர்றோம். அப்புறம் பேசிக்கலாம். அதுவரை எந்த ஆதாரமற்ற செய்தியும் பரப்ப வேண்டாம்!” என்ற ராஜேந்திரன் பதற்றமாகவும், சபாபதி எரிச்சலுடனும் அவனை பின்தொடர்ந்து சென்றனர்.
வர்மா பானுமதியை சந்திக்கும் இந்த சந்திப்பு அவர்கள் வாழ்வை எப்படி மாற்றப் போகிறதோ!
தொடரும்…
