மன்னன் தந்த மாலை
அத்தியாயம் 4
தன் முன்னே ஆத்திரத்துடன் நின்றிருந்தவனை பயத்துடன் பார்த்திருந்தான் பிரவின். சற்று முன்னர் அவன் கரத்தில் வாங்கிய அடி அவன் உடைலை சற்றே அசைத்துப் பார்த்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
“ப்ரோ, இப்போ எதுக்காக என்னை நீங்க அடிச்சீங்க?” என்றான் சிறுபிள்ளையாய்.
அவனின் சிறுபிள்ளைத் தனத்தில் விவேகனின் கோபம் கொஞ்சம் குறைந்தது என்றாலும் கூட முழுதாய் குறையவில்லை.
“எது… எதுக்காக உன்னை அடிச்சேனா? உன்னைக் கொல்லாம இருக்கேனேன்னு சந்தோஷப்படு. இடியட்! படிக்கத்தானே வந்துருக்க… அறிவு இருக்கா உனக்கு?” என்றான் கோபமாய்.
அப்போதும் எதற்காக இந்த அடியும் திட்டும் என்று கொஞ்சமும் எதிரில் இருந்தவனுக்கு விளங்கவில்லை என்பதுதான் இதன் உச்சமே!
“ப்ரோ, நான் என்ன செஞ்சேன்னு சத்தியமா எனக்குத் தெரியலை. கொஞ்சம் எனக்குச் சொல்றீங்களா நான் என்ன தப்பு செஞ்சேன்னு?” என்றவனின் குரலில் என்ன இருந்ததோ அதில் சற்று தெளிந்தவன்,
“இப்படித்தான் அடுத்தவங்களோட பொருளை அவங்க பர்மிஷன் இல்லாம எடுப்பியா நீ?” என்றான் அவன் கையில் இருந்த பொருளைப் பார்த்தபடி.
அப்படி நம்ம என்ன செஞ்சோம் என்று தன் கரத்தைப் பார்த்தவன்,
“ப்ரோ, இதைத்தான் சொன்னீங்களா? ஆக்சுவலி இதைப் பாக்க நல்லாருந்துச்சா… அதுதான் எடுத்தேன். ஆனா திருப்பி வச்சிடுவேன் ப்ரோ.” என்றான் சாதாரணமாக.
அவன் வைத்திருந்தது விவேகனின் தாயின் பேனா. வசுந்தராவின் நினைவாக அவனிடமிருந்தது அந்த ஒரு பொருள்தான்.
அதை இதுவரை யாரையும் தொடவிட்டது கிடையாது. இவ்வளவு ஏன்? அருந்ததி, அமுதா கூட இதனைத் தொட்டது கிடையாது. இவன் தொடவிட்டது கிடையாது.
அப்படிப் பொக்கிஷமாய் பாதுகாத்த ஒரு பொருளை நேற்று பார்த்த ஒருவன் அதைச் சாதாரணமாக எடுத்து எழுதிப் பார்த்ததை விவேகனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அதில் வந்த ஆத்திரத்தில்தான் எதையும் யோசிக்காமல் கை நீட்டிவிட்டான்.
“இதோ பாரு, என்னோட எந்தப் பொருளையும் என்னோட பர்மிஷன் இல்லாம எடுக்காத.” என்றவன் அந்தப் பேனாவை வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.
“இது என்னடா வம்பா போச்சு… இவரோட பர்மிஷன் இல்லாம இவரோட பொருளை எடுக்கக் கூடாதா? என்னங்கடா நியாயம் இது? நமக்குத்தான் அந்தப் பழக்கமே இல்லையே!” என்றபடி அவன் அடித்ததைப் பெரிதாய் எடுத்துக் கொள்ளாமல் சகஜமாய் எடுத்துக் கொண்ட இவன்தான் யாரோ அவனுக்கு?
வாழ்க்கையையே ஒரு வேள்வியாய் வாழ்ந்தவனுக்கும் சந்தோஷமாய் வாழ்வதற்கே இந்த மனிதப்பிறவி என்று நினைப்பவனுக்கும் இடையே நட்பு உருவாகுமோ? இல்லை பகைமைதான் கிடைக்குமோ? பொறுத்திருந்துதான் பார்ப்போமே!
*
இங்கே விவேகன் பிரிந்து சென்றதை தாங்கிக் கொள்ள முடியாமல் அழுது கொண்டே இருந்த அருந்ததிக்கு காய்ச்சல் கண்டு படுத்த படுக்கையாய் இருந்தவளை கண்டு கொள்ளத்தான் அந்தப் பெரிய வீட்டில் யாருமில்லை போலும்.
அவளுடன் அமுதா மட்டுமே நின்றாள். அவளுக்கு மருத்துவரை அழைத்து வந்து பார்த்ததிலிருந்து பக்கத்திலேயே இருந்து கஞ்சி கொடுத்து மாத்திரை கொடுப்பது வரையென அனைத்துமே அமுதாதான்.
ஏதோ பெற்ற கடனுக்கும் வளர்த்த கடனுக்குமாய் சகுந்தலா மாணிக்கத்துடன் கற்பகநாயகியும் வந்து பார்த்து விட்டுச் செல்லத் துருவன் தங்கை இருந்த திசைப் பக்கம் கூடச் செல்லவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆனால் மற்றவர்களைப் போல் அமுதாவால் இருக்க முடியவில்லை. அருந்ததி பிறந்து ஐந்து மாத குழந்தையிலிருந்து இதுவரை அவளைக் கண்ணும் கருத்துமாய் பார்த்துக் கொண்டது அமுதாதான்.
அந்தப் பாசம் இருவரிடையே ஒரு பாசப்பிணைப்பை தந்திருந்தது. அதுதான் இப்போது துடித்தது.
எந்நேரமும் அத்தான் அத்தான் என்று அவனையே நினைத்துக்கொண்டிருந்தாள் பேதையவள்.
அவளின் அந்த அன்பு பாசத்தை தாண்டி அமுதாவிற்கு எதையோ உணர்த்த அவரின் உடல் நடுங்க ஆரம்பித்தது.
‘கடவுளே இந்தப் பொண்ணோட மனசுல இப்படியொரு எண்ணம் இருக்கா? இது இந்த வீட்ல இருக்குறவங்களுக்கு தெரிஞ்சா என்ன நடக்கும்? இத்தனை மென்மையா இருக்குற பொண்ணு இந்த அரக்கர் கூட்டத்துல சிக்கி சீரழிஞ்சிடுமே…’ என்று ஒரு பெண்ணாகவும் தாயாகவும் அவளின் உள்ளம் தவித்தது.
மெல்ல மெல்ல அருந்ததி இயல்பு நிலைக்கு வந்து அவளின் அத்தானின் பிரிவை ஏற்றுக் கொண்டவள் அந்த அறையோடு அமிழ்ந்துதான் போனாள் என்று சொல்ல வேண்டும்.
அன்று தன் பள்ளியில் தந்த வீட்டுப்பாடங்களை முடித்தவள் அனைத்தையும் எடுத்து வைக்கும் சமயம்,
“அரு குட்டி, என்ன பண்றீங்க?” என்றபடி அவளுக்கான உணவுடன் உள்ளே வந்தாள் அமுதா.
அமுதாவைக் கண்டதும் மெல்ல புன்னகை புரிந்து,
“இப்போதான் ஹோம் ஒர்க் முடிச்சேன் அமு…” என்றாள் சிரித்தபடி.
ஆனால் அந்தச் சிரிப்பு அவளின் கண்களை எட்டாமல் வெறும் உதட்டுடன் மட்டுமே நின்றுவிட்டது.
“நான் வந்து அரு குட்டிக்குப் பிடிச்ச முட்டை சாதம் செஞ்சிட்டு வந்துருக்கேன். சாப்பிடலாமா தங்கம்?” என்றபடி மெல்ல அவளின் அருகே அமர்ந்தாள்.
“எனக்கு வாயெல்லாம் கசக்குது அமு. எனக்கு வேணாம் போ.” என்றாள் மழலையாய்.
அவளின் மழலை மொழியில் சிரித்தவள், “காய்ச்சல் கண்ட உடம்புடா தங்கம். அப்படித்தான் இருக்கும். அதுக்காகச் சாப்பிடாம இருக்க முடியுமா என்ன? இங்கே பாரு, என் தங்கத்துக்கு பிடிச்ச மாறி மிளகு பொடி போட்டு எடுத்துட்டு வந்துருக்கேன். நீ என் தங்கப் பொண்ணு இல்லை… இப்போ நான் ஊட்டுவேனாம். என் தங்க பொண்ணுப் சாப்பிடுவாளாம். சரியா?” என்று பேசியபடியே தன் கைகளால் தட்டில் இருந்த உணவை எடுத்து அருந்ததிக்கு ஊட்டிவிட்டாள்.
அதை வாங்கியபடியே, “ஏன் அமு, அத்தான் காலேஜ்ல சேர்ந்துருக்கும் இல்லை? அப்புறம் ஏன் நமக்கு இன்னும் பேசவே இல்லை? எனக்கு அத்தான்கிட்ட பேசணும் போல இருக்கு அமு.” என்றாள் அமுதாவின் முகத்தைப் பார்த்தபடியே.
விவேகனை பற்றி அருந்ததி கேட்கவுமே ஒரு நொடி அதிர்ந்து நின்றவள் அடுத்த நொடியே தன்னை மாற்றிக் கொண்டு, “ஏன் அரு குட்டி, உன் அத்தான் போன இடம் அவங்களுக்கு புதுசு இல்லையா… அப்போ அந்த இடம் எல்லாம் பழகணும் இல்லையா… இப்போ நமக்குப் பேசுனா அவங்களோட கவனம் சிதறும் இல்லையா… எல்லாம் முடிச்சிட்டு நமக்குப் பேசுவாங்களாம் சரியா? அதுவரைக்கும் அரு பாப்பா சமத்தா அடம்புடிக்காம இருக்கணும் சரியா?” என்றவள் நான்கு புறமும் தன் பார்வையைச் சுழற்றி விட்டு அருந்ததியிடம் திரும்பியவள்,
“அரு குட்டி, அமு ஒன்னு சொல்லுவேன். என் தங்கப் பொண்ணு கேட்பா இல்லை?” என்றாள் இறைஞ்சலாய்.
“ம்ம்… சொல்லு அமு.” என்றாள் புன்னகை முகமாய்.
“தங்கம், இனிமே நீ உன் அத்தானைப் பத்தி அதிகமா நினைக்கக் கூடாது. இங்கே பேசவும் கூடாது சரியா? உன் அத்தான் படிச்சு முடிச்சு பெரிய ஆபிசராயி இங்கே வருவாங்க. அதுவரைக்கும் நீ அமைதியா இருக்கணும் தங்கம் சரியா?” என்றாள் மெல்லமாய்.
“ஏன் அமு அப்படி இருக்கணும்?” என்றாள் மழலையாய்.
“இதோ பாரு தங்கம்… உன் அத்தான் ஒரு இலட்சியத்தோட இங்கிருந்து போயிருக்காங்க. அவங்களுக்கு நீதானே துணையா இருக்கணும். ஆனா நீ இப்படி அவங்களைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டா அப்புறம் எப்படி தங்கம் அவங்களோட இலட்சியத்துல ஜெயிப்பாங்க? நீ இனிமே எப்பவும் போலச் சாதாரணமாதான் இருக்கணும் சரியா?அதுபோல ராஜாவைப் பத்தி இனி இந்த வீட்ல நீ பேசக் கூடாது சரியா?” என்றாள் மழலையவளுக்கு புரியும் விதமாய்.
அவளுக்கு என்ன புரிந்ததோ, “ம்ம்… சரி அமு. நீ சொன்ன மாதிரி நான் இனி அத்தானைப் பத்தி அதிகமா பேசமாட்டேன். ஆனா உங்களோட இருக்கும்போது மட்டும் பேசிக்கவா அமு?” என்றாள் ஏக்கமாய்.
“சரிடா தங்கம். இந்தா இந்த மாத்திரையைப் போட்டுத் தூங்கு.” என்றாள் மாத்திரையும் தண்ணீருமாக.
அதை வாங்கியவள் மாத்திரையை முழுங்கிவிட்டு அப்படியே அமுதாவின் மடியிலேயே படுத்துக் கொண்டாள். அவள் என்னவோ தூங்கிவிட்டாள்தான் அமுதாவின் தூக்கத்தை பறித்துக் கொண்டு.
*
இவர்களின் நினைவுக்குச் சொந்தக்காரனோ பழைய நினைவுகளின் தாக்கத்தில் உடல் இறுக அந்தப் பௌர்ணமியை வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தான்.
கல்லூரி ஓரளவுக்கு அவனுக்குப் பழகிவிட்டது. என்ன இத்தனை வருடங்களாகத் தமிழில் படித்து விட்டு இப்போது முழுவதுமாய் ஆங்கிலத்தில் படிப்பது சற்று சிரமமாகத்தான் இருந்தது. ஆனாலும் வேறு வழி இருக்கவில்லை.
அவனின் இலட்சியம் அதை அடைய அவன் நிறைய உழைக்கவும் அறிந்து கொள்ளவும் வேண்டும். இன்னும் நிறைய கடினமான பாதைகளைக் கடந்து வர வேண்டும்.
இத்தனை நாளாகக் கடந்து வந்த பாதையைவிட சற்று முட்கள் குறைவாகத்தான் இருந்தது. இத்தனை நாட்களாகக் கடந்து வந்த பாதையில் முட்கள் குத்தி உதிரம் சிந்தி சிந்தி அவனின் பாதங்கள் மரத்துத்தான் போயிருந்தன. வலிகள் மரத்துப் போயின.
இதற்கு மேலும் அவனின் உதிரம் சிந்தத்தான் வேண்டியிருந்தது. இனி அவன் வகுக்கும் பாதைக்கு அவனே ராஜா.
“ஹேய் மேன்! இங்கே என்ன பண்ற தூங்காம?” என்று பின்னிருந்து குரல் கேட்க, அந்தக் குரலில் தன் பற்களைக் கடித்துக் கொண்டு திரும்ப அங்கே சிரிப்புடன் நின்றிருந்தான் பிரவீன்.
விவேகனுக்கு அவனைக் கண்டு அதிசயமாகத்தான் இருந்தது. இங்கு வந்த இந்த ஒரு வாரத்தில் தான் எத்தனையோ முறை அடித்துத் துரத்தியும் கூட அடுத்த நொடியே எதுவும் நடக்காதது போல் பேசியவனை ஏனோ கொஞ்சம் பிடித்துத்தான் போனது என்று சொல்ல வேண்டும்.
ஆரம்பத்தில் இருந்த கோபம் இப்போது இல்லையென்றாலும் கூட ஏனோ அதே சிடுசிடுப்புடன்தான் சுற்றி கொண்டிருக்கிறான்.
இதுவரை வாழ்க்கையில் பட்ட காயங்களாலும் வலிகளாலும் அவ்வளவு எளிதில் யாரையும் நம்ப மறுத்தது மனம்.
ஆனால் எதிரில் இருந்தவன் விவேகனின் மனதை முன்பே அறிந்துவிட்டதை இவன் அறியவில்லை.
“நான் வரேன் நீ போய்த் தூங்கு.” என்றான் எங்கோ பார்த்தபடி.
“எப்போடா வருவே? டைம் ரெண்டு மணி ஆகுது. இனிமே எப்போ தூங்கறதா ஐடியா?” என்று ஏட்டிக்குப் போட்டியாய் அவனுடன் பேசியபடி அங்கேயே நின்றான்.
“இதோ பாரு, எனக்குத் தெரியும் எப்போ தூங்கணும்னு? நீ போய் உன் வேலையை மட்டும் பாரு.” என்று எரிந்து விழுந்தபடி பேசியவனை மேலும் கீழுமாய் பார்த்தவன்,
“எது நான் உன் மேல இருக்குற அக்கறையில சொல்றேன்னு நினைச்சியா? போடா டேய்! ராத்திரியில தனியா தூங்க பயமா இருக்குடா. அதுக்குத்தான் உன்னைக் கூப்பிட்டேன். மத்தபடி நீ எப்படி இருந்தா எனக்கு என்னடா?” என்றவனின் பேச்சை அதற்கும் மேலும் கேட்காமல் பிரவீனை ஒரு முறை முறைத்தபடி அங்கிருந்து உள்ளே சென்றான்.
“அய்யோ ஆண்டவா! இப்பவே கண்ணைக் கட்டுதே. இவனை எப்படி இனிமே சமாளிக்கிறதுன்னே தெரியலையே?” என்று மேலே வானத்தைப் பார்த்துக் கூறியவன் தன் அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்தவன்,
“ஸ்டார்ட் மிஷன்…” என்ற ஒற்றை வார்த்தையில் அலைபேசியைக் கட் செய்து வைத்தான்.
யார் இவன்? யாரிடம் இவன் பேசினான்? என்று அடுத்தடுத்த பாகங்களில் பாக்கலாம் செல்லம்ஸ்.
மாலை வரும்…✍️
