அத்தியாயம் – 4

“அம்மா உன் மகனுக்கு பைத்தியம் முத்திருச்சு போல. கொஞ்சம் சீக்கிரம் வா” என்ற மகள் அதிதியின் குரல் கேட்டு வேகமாக ஓடி வந்தார் இளவரசி. 

உயரமான மொட்டைமாடி திண்டில் அமர்ந்து, வானைப் பார்த்து, ஏதேதோ பேசி சிரிக்கும் மகனைக் கண்டு “ரதன். அங்க என்ன பண்ற? கீழ இறங்கி வாடா” என்று தாய் கூறியதெல்லாம் மகனின் காதில் விழுந்தால் தானே! 

அவன் தான் இன்னதென புரியா ஈர்ப்பில், சாலையில் கண்ட பெண்ணவளின் பிம்பத்தை மூளைக்குள் பதித்து, வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் அமர்ந்து எந்நேரமும் சிந்தனை முகமல்லவா வைத்துக் கொண்டுள்ளான். 

“இங்க என்ன சத்தம்?” என்று கேட்டபடி வந்த அருள்ராஜும் மகனின் இந்த கேளிக்கையில், “அன்னைக்கே சொன்னேன். உன் பையன ஒரு நல்ல டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய் காட்டுனா, என்ன பிரச்சனைனு கண்டுபிடிச்சிடலாம்னு.

நீ எங்க என் பேச்சை கேட்ட? இப்ப கிறுக்கன் என்னென்னமோ பண்ணிட்டு இருக்கான். 

நீ மொத வந்து எனக்கு சாப்பாடு எடுத்து வை. நான் சாப்பிட்டு இன்னைக்கு சங்கத்துக்கு வேற போகணும்” என்று கூறினார் அருள்ராஜ். 

இளவரசி தான், மகனை பாவமாக பார்த்தபடியே கணவனுடன் சென்றார். 

சாப்பிட்டு முடித்து, வீட்டில் இருந்து புறப்பட்ட அருள்ராஜ், நேராக கோயம்புத்தூரின் ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்திற்கு சென்றார். 

இன்றைய நிலைக்கு, ஆடை உற்பத்தி நகரங்களான திருப்பூர் மற்றும் கோயம்புத்தூரில், பெரிய அளவிலான தொழிற்சாலைகள் அமைத்து, பல லட்சம் தொழிலாளர்களை வேலைக்கு வைத்து திறன் பட மேம்படுத்தி வரும் ஒரு முக்கிய தொழிலதிபர் அருள்ராஜ். 

தொலைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டே உள்ளே நுழைந்த அருள்ராஜ்,  நடை பாதையில் இருந்த மின்கம்பியை கவனிக்காது அதை நோக்கி சென்றார்.

அதில் மின்சாரம் வேறு பாய்ந்து கொண்டிருக்க, சரியாய் அவர் கால் அந்த கம்பியில் படும் இறுதி நொடியில், அவரின் வலிமையான கரத்தை, ஒரு மென்மையான கரம் பற்றி இழுத்து, இடையில் தள்ளிவிட்டது. 

அதில் கம்பியில் காலை வைக்காமல் சற்று தள்ளி போய் விழுந்துவிட்டார் அருள்ராஜ்.

சட்டென நடந்த அதிர்வில் அவர் யாரென நிமிர்ந்து பார்க்க, “உங்களுக்கு ஒன்னும் இல்லையே சர்?” என கேட்டபடி நின்றிருந்தாள் வேதிகா. 

அப்போதுதான் கீழே கிடந்த கம்பியை கண்டவருக்கு, தன் கவனக்குறைவு புரிந்தது.

தன்னை சமன்படுத்திக் கொண்டு எழுந்தவர், “சாரிமா. கீழ பாக்காம நடந்து வந்துட்டேன். என்ன காப்பாத்தினதுக்கு ரொம்ப நன்றி” என்று வேதிகாவிடம் உரைத்தார். 

“இதுக்கு எதுக்கு சார் நன்றி எல்லாம்? ஃபோன் முக்கியம் தான். அதுக்குன்னு எந்நேரமும் அதையே பாத்துட்டு இருந்தா, இந்த மாதிரி சில சமயம் கவனம் தவறவும் வாய்ப்பு இருக்கு” என்று மென்மையாக கூறினாள். 

அறிவுரை என்று நீட்டி நெளித்து பேசாது, வயதிற்கு ஏற்றார் போல் பணிவாக பேசும் அவள் பேச்சும் சுபாவமும் அருள்ராஜிற்க்கு கண்டதும் பிடித்துவிட்டது. 

“சரிமா. இனிமே பாத்து இருக்கேன்” என்று கூறி புன்னகைத்து விட்டு அங்கிருந்து சென்றார். 

ஒரு சில நிமிடங்களில், கோவையில் புதிதாக துவங்கி இருக்கும் சிறு குறு பெண் தொழிலாளர்களுக்கான வர்த்தக கூட்டம் தொடங்கியது. 

ஏராளமான பெண்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஒன்றிணைந்து, தாங்கள் நடத்தி வரும் சிறு தொழில்களை குறித்த சிறிய முன்னோட்டத்தை கூறி, அங்கு இருக்கும் பெரிய பங்குதாரர்களிடம் விவரித்து கொண்டிருந்தனர். 

அந்த வரிசையில் பங்குதாரர்களுக்கு மத்தியில் அருள்ராஜ் அமர்ந்திருக்க, பின்னால் ஓர் வரிசையில் வேதிகாவும் அவள் தோழி இசையும் அமர்ந்திருந்தனர். 

“பிரசன்டேஷன் ரெடி தானடி?” என்று உறுதிப்படுத்திக் கொண்ட வேதிகா, தங்கள் பெயர் அழைக்கப்பட்டதும் தோழியுடன் முன்னே வந்தாள்.

“எல்லாருக்கும் வணக்கம். என் பெயர் வேதிகா. இவ என் பிரண்ட் இசை. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து சின்னதா ஒரு பிளவர் பொக்கே ஷாப் நடத்திட்டிருக்கோம். 

பூக்கள்ல என்ன புதுசா இருக்குன்னு நீங்க நினைக்கலாம். மனுஷன் சாப்பிடுற காய்கறிலையே ஏகப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கிற இந்த காலத்துல, தலைக்கும் அழகுக்கும் மட்டுமே பயன்படுத்துற பூக்கள யாரும் பெருசா எடுத்துக்குறதில்லை.

வகைவகையா கலர் கலரா வேணுங்கிறதுக்காக, அதிக அளவுலான பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிச்சு உற்பத்தி பண்றாங்க. 

நவீனத்து பின்னாடி போய், நம்ம பாரம்பரிய மலர்களை மொத்தமா மறந்துட்டோம்ங்கிறது தான் உண்மை. 

முன்ன எல்லாம் வீட்டுக்கு வீடு, கனகாம்பரம், மல்லி, ரோஜானு நிறைய பூச்செடிகள் வெச்சிருப்பாங்க. 

பெண்கள் தலைக்கு வைக்கிற பூக்களோட நறுமணம் அதிகமா? இல்ல அவங்க கூந்தல்ல இயற்கையாகவே வீசுற நறுமணம் அதிகமானு, நிறைய விவாதங்கள் கூட நடந்திருக்கு. 

ஆனா இன்னைக்கு நம்ம நாட்டு பூக்கள் எல்லாத்தையும் விட்டுட்டு, வெளிநாட்டு பூக்களைத்தான் நம்ம விசேஷங்களுக்கு அலங்காரம் பண்ணவும், தலையில வச்சுக்கவும் உபயோகப்படுத்துறோம். 

அதுவும் இந்த பூக்கள் எதுவுமே, நம்ம இயற்கை விவசாயிகள் கிட்ட வாங்காம, குளிர்சாதன வசதில ஹைபிரிட்டா வளர கூடிய பூக்கள மட்டும் தான் வாங்குறோம்.

ஆனா நாங்க பொள்ளாச்சி, மதுக்கரை, தொண்டாமுத்தூர் மாதிரி இடத்துல இருக்க விவசாயிகள ஒருங்கினைச்சு, நேரடியா பூக்கள வாங்கி, அத இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி நவீன முறையில அழகுபடுத்தி கொடுத்துட்டு இருக்கோம். 

இதையே கொஞ்சம் பெரிய லெவல்ல, வீட்டு விஷேசங்களுக்கும் செய்யலாம்ங்குறது தான் இந்த பிஸ்னஸ்.

இதுல லாபம் நஷ்டத்தை தாண்டி, நம்ம இயற்கை விவசாயிகளை அங்கீகரிக்கிறதுக்காகவும், நம்ம பாரம்பரிய மலர்களுக்கு ஒரு புதுமையான பரிமாணம் கொடுக்கிறதும் தான் எங்க நோக்கம்” என்று அவர்கள் தொழிலைப் பற்றி விவரித்தாள் வேதிகா. 

“சரி மா இப்ப நீங்க ஒரு சின்ன பொக்கே ஷாப் தான் வச்சு ரன் பண்ணிட்டு இருக்கீங்க. நீங்க சொல்ற யோசனைய வச்சு, எப்படி இந்த தொழில பெருசு பண்ண முடியும்னு நினைக்கிறீங்க?”  என்று ஒரு பங்குதாரர் கேட்டார். 

“நம்ம ஊர்ல விளையிற கனகாம்பரம், வாடாமல்லி, செம்பருத்தி, செங்காந்தள் இந்த மாதிரி பூக்கள வச்சு மாடர்னா டெக்கரேசன் பண்ண முடியும் சர்.

ஒரே மாதிரி அலங்காரத்த மட்டும் பாத்து பழகுன கெஸ்ட்ஸ்கு, இது ஒரு விண்டேஜ் ஃபீல் கொடுக்கும். 

பிடிச்சிருச்சுனா நிறைய ஆர்டரும் நமக்கு வரும்” என்று கூறினாள் வேதிகா.

அருள்ராஜுக்கு ஒரு பக்கம் வேதிகாவின் இந்த விளக்கம், தன் மகனின் சிந்தனையை ஒத்திருந்தாற் போல் இருந்தது. 

அதிரதனும் இப்படித்தானே ‘இயற்கை விவசாயத்தை மேம்படுத்தும் தொழிலை தான் செய்வேன்’ என்று ஒற்றை காலில் நின்று வருகிறான். 

இதுவரை அவன் கூறுவதை உளறலாய் நினைத்து, பெரிதாய் செவி சாய்க்காதவரின் கோணம், தற்போது வேதிகாவின் விளக்கத்தில் சற்றே மாறியிருந்தது.

அதே சமயம், அவளின் இந்த புதுமையான தொழில் யோசனை அங்கிருந்த பங்குதாரர்களுள், சிலருக்கு பிடித்தது.

பலருக்கு அவள் கூற வருவதன் நோக்கமே சரியாக விளங்கவில்லை. ‘இதெல்லாம் அவசியமா?’ என்றே இருந்தது.

“விதவிதமா கலர் கலரா பாத்து பழகுன பூக்களுக்கு நடுவுல, குறிப்பிட்ட நிறத்துல மட்டும் இருக்க பூக்கள வச்சு கேட்குற டிசைன பண்ண முடியலைனா, முதலீடு பண்ற காசு நஷ்டமாயிடும்.

இதுவே ஜெருசலேமோ, ஆர்சிட்சோ, ஆர்ட்டிஃபிஷியல் பிளவராவோ இருந்தா, கேட்கிற போல நம்மாள டிசைன் பண்ணிட முடியும்.

உங்க ஐடியா நடைமுறைக்கு சாத்தியமாகுறது கொஞ்சம் சந்தேகம் தான்” என்று கூறி அவர்கள் தொழில் ஒப்பந்தத்தை நிராகரித்தனர். 

சிறிதளவும் ஏற்பட்ட ஏமாற்றத்தை முகத்தில் காட்டாது, புன்னகை முகமாகவே அதை கடந்து விட்டாள் வேதிகா. 

வெளியில் வந்த இசை தான், “என்னடி இப்படி சொதப்பிருச்சு?” என்று கேட்டாள். 

“இன்னைக்கு அங்க எத்தனையோ பேர் கம்மி இன்வெஸ்ட்மெண்ட்ல, பெரிய லாபத்தை கொடுக்கிற பிசினஸ் எல்லாம் எடுத்துட்டு வந்துருந்தாங்க.

நம்மளோடது லாபம் கம்மியா தான் வரும். நம்ம மனதிருப்திக்காக பண்றோம். எல்லாரும் அத ஒத்துக்கணும்னு அவசியம் இல்லையே. விடு பாத்துக்கலாம்” என்று கூறி தோழியை சமாதானம் செய்தாள் வேதிகா. 

“நீ சொல்றது சரி தான் மா. ஆனா லாபத்தை மட்டுமே எதிர்பார்க்காம, உன் திருப்திக்காக செய்யணும்னு நினைக்கிற பாத்தியா? அந்த மனசு பெருசு. 

உனக்கு நான் ஒரு வாய்ப்பு தரேன். இப்ப உள்ள இருந்த அத்தனை ஷேர் ஹோல்டர்ஸும், அடுத்த வாரம் நடக்கப் போற என் பொண்ணோட பர்த்டே பார்ட்டிக்கு வருவாங்க. 

நான் ஒரு ஈவென்ட் ஆர்கனைசர் கிட்ட தான் பொறுப்ப ஒப்படைக்கலாம்னு இருந்தேன். 

ஆனா இப்ப உன் கிட்ட டெக்கரேஷன் பொறுப்பை ஒப்படைக்கிறேன். இதை மட்டும் நீ நல்ல முறைல செஞ்சு, உன் திறமையை நிரூபிச்சுட்டேனா, நானே உனக்கு பிசினஸ் டீலிங் வாங்கி தரேன்” என்று கூறினார்.

“சர் நீங்க நிஜமா தான் சொல்றீங்களா?  நாங்க இந்த ஃபீல்டுக்கு புதுசு. எங்கள நம்பி…” என்று வேதிகா வினவ, “உண்மையா தான் மா சொல்றேன். உன்னோட யோசனை எனக்கு பிடிச்சிருக்கு. 

இங்க எதையுமே செஞ்சு காட்டினா தான் நம்மள நம்புவாங்க. இப்போ உன் திறமைக்கு தேவை ஒரு வாய்ப்பு தான். 

அது கிடைக்கும்போது பயன்படுத்திக்கோ” என்று கூறியவர் தனது உதவியாளரை அழைத்து, தன் விசிட்டிங் கார்டையும் அவள் கையில் கொடுத்து விட்டு தான் நகர்ந்தார்.

அருள்ராஜ் அங்கிருந்து சென்றதும் இசை, வேதிகாவின் தோளை இடித்து, “அவ்ளோ பெரிய மனுஷன், இப்படி நம்மள நம்பி பொறுப்ப குடுத்துட்டு போறாரு? எப்படி டி?” என்று ஆச்சரியமாக வினவினாள். 

“இதுல என்ன இருக்கு? நம்ம திறமையை பார்த்து வாய்ப்பு கொடுக்குறாங்க” என்று தோள்களை குலுக்கினாள் வேதிகா.

அவள் மூளை அடுத்து அந்த விழாவில் எவ்வாறு தன் சிந்தனையை புகுத்தி செயல்படுத்த வேண்டும் என்று திட்டமிட தொடங்கிய வேளையே, அவள் வாழ்வின் திசையும் சறுக்கு வழியில் பயணிக்க தயாராகிவிட்டது.

-தொடரும்.

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page