அத்தியாயம் – 4

  ​   பெரிய வீடு முழுவதும் ஒலித்த பாட்டு சத்தத்தில், மலர்விழியின் கதறல் சத்தம் யாருக்கும் கேட்காமல் காணாமல் தான் போனது. வெகு நாட்களுக்குப் பிறகு அந்த வீட்டில் விசேஷம் என்பதால், வீடே கலைகட்டியிருந்தது. நண்டு, சிண்டுகள் எல்லாம் அங்குமிங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருக்க, மேடையில் சம்பந்தங்கள் சூழ்ந்து நிறைந்து இருந்தனர். 
      ஒரு பக்கம் ஐயர் மந்திரம் ஓதி நிச்சய பத்திரிகை வாசிக்க என அந்த பிசியான நேரத்தில் மலரைத் தேட அங்கு ஆள் இல்லை. அனைவரது கவனமும் மணமக்கள் மீதே இருந்தது.
​இரு வீட்டாரும் நிச்சய தாம்பூலம் மாற்றிக் கொண்டனர். 
    அதன் பிறகு மோதிரம் மாற்றிக் கொள்ளுமாறு பெரியவர்கள் கூற, கதிரோ ஏதோ ஒரு வித தயக்கத்துடனேயே நின்றான். சுடர்விழியின் முகத்தைக் கூடப் பார்க்காமல், அவள் கைகளைப் பற்றி மோதிரம் போட முயன்ற போது அவனது கைகள் நடுங்கின.

  சுடர்விழியோ தன் மாமனை வெட்கத்துடன் நிமிர்ந்து பார்த்தாள். ஆனால் கதிரின் பார்வையோ அவனது கையில் இருந்த மோதிரத்தின் மீதே இருந்தது. நொடி நேரத்தில் ஒரு வித பதட்டம் அவளை ஆட்கொள்ள அவன் கைதவறி மோதிரம் கீழே விழ,
     “டேய் கதிரு! என்னல இது? பார்த்து பண்ணுல…” என்று கதிரின் அம்மா பதறினாள்.
     “சரி சரி… கை தவறியிருக்கும், விடுங்க” என்று கீழே இருந்து அதை எடுத்து அவரே கதிருக்கு கொடுத்து, “போடுல என் மருமகளுக்கு!” என்று அதட்டினார்.

     ஒரு வழியாகத் தடுமாற்றத்துடன் கதிர் மோதிரத்தைப் போட்டு முடிக்க, அடுத்து சுடர்விழி கதிரின் கையில் மோதிரம் போட்டு முடிக்கவும். அங்கே கரகோஷம் பலமாக எழுந்தது.

    ​ஹரிஷோ மலர்விழியின் அப்பாவிடம் பேசிக் கொண்டிருந்தவன். அவர் மேடைக்குச் சென்றதும் கூட்டத்தில் தனியாக மாட்டிக் கொண்டான். விழா நடந்து முடியவும் வழி கிடைக்க, அவன் மலரையும் ,ஆனந்தியையும் தேடி, ஒரு வழியாக ஆனந்தியைக் கண்டுபிடித்தவன்.
    “மலர் எங்க?” என்று அவன் கேட்க,
   “அவ ரெஸ்ட் ரூம் போயிருக்கா ஹரிஷ்” என்று மழுப்பினாள் ஆனந்தி. “எங்கேஜ்மென்ட் முடிஞ்சிருச்சு போல… “
  ” ம்ம் இவ்வளவு நேரம் இங்க தான் இருந்தா, இப்போ தான் போனா? “

 ” இல்ல அவ ஸ்டேஜ்க்கு போலையா?” என்று ஹரிஷ் கேட்க, ஆனந்தியோ அதை இதை கூறி அவனைச் சமாளித்துக் கொண்டிருந்தாள்.

  அந்த நேரம் ஹரிஷிற்கு ஒரு ஃபோன் வரவே, அவன் பேசிக்கொண்டே வெளியே சென்றுவிட்டான்.
​நிச்சயதார்த்தம் முடிந்ததும், “இந்த மலர்ப்புள்ள எங்க போச்சு?” என்று அப்போது தான் அவளது அன்னை தேடினார்.

   “மச்சினிச்சி முறைக்கு அவ மாமாங்காரனுக்கு ஒரு தங்கச் சங்கிலி போடணும்ல!” என்ற பேச்சு வந்ததும், கதிரின் முகத்தில் எந்த ரியாக்ஷனும் இல்லை.
   மலரின் அன்னையோ கண்களை சுழற்றி அங்கு வந்து, “மலர் எங்கதான் போச்சு? நிச்சயதார்த்தமே முடிஞ்சு போச்சு!” என்று ஆதங்கமாக ஆனந்தியிடம் கேட்க,
   ஆனந்தி அருகிலிருந்த அறையைக் காட்டினாள்.
     ​அடுத்த நிமிடம் அந்த அறைக்கதவு பலமாகத் தட்டப்பட்டது. மலர் அதிர்ந்து போய், வேகமாக வாஷ்பேஷனில் தன் முகத்தைக் கழுவினாள். டவலால் துடைத்துவிட்டு வெளியே வர, அவளது அன்னையோ ‘பத்திரகாளியாக’ அங்கே நின்றிருந்தார்.

    “எங்கடி போய் தொலைஞ்ச? உங்க அக்காவுக்கு நிச்சயதார்த்தம் நடக்குது, நீ என்னன்னா இங்க வந்து ஒளிஞ்சுட்டு இருக்க? வா!” என்று அவளைக் கையோடு இழுத்துச் சென்றார்.

​”அம்மா… அதுதான் முடிஞ்சிடுச்சே, இப்போ எதுக்கு?” என்று மலர் கேட்டும் அவளது அன்னை விடுவதாய் இல்லை.

   “நீ தங்கச் சங்கிலி போடுறதுதான் ட்டி முறை வா” என்று மேடைக்கு இழுத்துச் சென்றார்.
​மேடையில் கதிரின் பார்வை மலர் மீது மட்டுமே இருந்தது. ஆனால் மலரோ அவன் முகத்தைக் கூடப் பார்க்கவில்லை. குனிந்தபடியே நின்றவள், தன் அக்காவைப் பார்த்து “கங்கிராஜுலேஷன் அக்கா” என்று சகஜமாகச் சொல்ல முயன்றாள். 

 “அதெல்லாம் அப்புறம் சொல்லிக்கலாம், முதல்ல இதை உன் மாமனுக்குப் போட்டு விடு” என்று அவளது அன்னை ஒரு தங்கச் சங்கிலியை கையில் கொடுக்க,

  ​ஏற்கனவே இதயம் படபடவென்று அடித்துக் கொண்டிருக்க, “இது என்ன சத்திய சோதனை?” என்று மலர் தன் அன்னையை முறைத்துப் பார்த்தாள். அனைவர் முன்பு நீட்டும் பொழுது வேண்டாம் என்றா கூற முடியும். வேறு வழியின்றி அதை வாங்கியவள், தயக்கத்துடன் கதிர் அருகில் சென்றாள்.

     சுடர்விழி சிரித்துக் கொண்டே, “என்ன மலரு, இவ்வளவு தயக்கம்? நம்ம மாமா தானே” என்றாள்.

​”அதெல்லாம் இல்ல அக்கா.  இனி அவர்  உன்னோட மாமா மட்டும்தான்!” – அந்த வார்த்தை மலரின் வாயிலிருந்து சட்டென்று வந்து விழ, அதைக் கேட்டதும் கதிர் அவளையே உற்றுப் பார்த்தான்.

     அவள் அந்தச் சங்கிலியைப் போட முயல, கதிர் உயரமாக இருந்ததால் அவளால் எட்டி போட முடியவில்லை. நிமிர்ந்து அவனைப் பார்த்தபோது, இருவரின் கண்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. அவன் பார்வையில் இருந்த வலியை அவளால் படிக்க முடியவில்லை. ஆனால் அந்தத் தாக்கம் அவளைப் பலமாகத் தாக்கியது உண்மை.

அந்தச் சங்கிலியைப் போட்டு முடித்த வேகத்தில், சுற்றியிருந்தவர்களின் பார்வையில் இருந்து தப்பிக்க மலர் படிகளில் இறங்க முற்பட்டாள். ஆனால், அவள் எதிர்பார்த்ததை விட கதிர் வேகமாகச் செயல்பட்டான். யாரும் கவனிக்காத ஒரு நொடியில், அவளது தாவணித் தலைப்பைத் தற்செயலாக மிதிப்பது போலச் செய்தவன், அவள் தடுமாறியபோது அவள் கையைப் பலமாகப் பற்றிக் கொண்டான்.
​”பதனமா போ ட்டி… ஊருல இல்லாத வேகத்துல எங்க ஓடுற நீ?” – என்று கதிரின் குரலில் அந்தப் பழைய அதிகாரமும், தவிப்பும் கலந்திருந்தது.

     ​மலர் சட்டென கையை உதறியவள். “கைய விடுங்க மாமா! அக்கா பார்த்துட்டு இருக்கா.”
​”பார்க்கட்டுமே… அவளுக்குத் தெரியாததா? நீயும் அவளும் எனக்கு ஒன்னுதான்” என்று கதிர் சொன்ன அந்த ‘ஒன்னுதான்’ என்ற வார்த்தை மலரின் நெஞ்சில் ஈட்டியாய்ப் பாய்ந்தது.

​”ஒன்னா? எதை வச்சு மாமா சொல்றீங்க? நீங்க அவ கழுத்துல தாலி கட்டப் போறீங்க… என் வாழ்க்கையில நீங்க ஒரு கரும்புள்ளியை வச்சுட்டுப் போறிங்க. இது எப்படி ஒன்னாகும்?” என்று மலர் விழியோ அனல் பறக்கக் கேட்டாள்.

       ​அந்த நேரம் பார்த்து ஹரிஷ் அங்கே வந்தான். “மலர்! இங்க என்ன பண்ற? வா… சாப்பாடு போட ஆரம்பிச்சிட்டாங்க, போலாம்.”
​ஹரிஷைப் பார்த்ததும் கதிரின் கண்கள் சிவந்தன.
     “யாருல இவன்? வூட்டு விசேஷத்துல ஓட்டிட்டு வந்துருக்க?” என்று கதிர் நெல்லை பாஷையிலேயே அதட்ட,
     ஹரிஷ் குழப்பத்துடன் மலரைப் பார்த்தான்.
​”இவன் என் ஃப்ரெண்ட்… இல்லல்ல, அதுக்கும் மேல! எனக்குத் துணையா சென்னைல இவன் தான் இருந்தான் மாமா. வா ஹரிஷ், நாம போலாம்” என்று கதிர் முன்னாடியே ஹரிஷின் கையைப் பிடித்து மலர்  செல்ல, கதிர் மேடையிலேயே கல்லாய் சமைந்து நின்றான்.

     ​அவளது ஒவ்வொரு அடியும் கதிரின் நெஞ்சை மிதிப்பது போல இருந்தது. ‘3 வருசம் கழிச்சு வந்துட்டு என்னா ஒரு திமிரு காட்டுறா’ என்று கதிர் தனக்குள் புழுங்கினான்.

பெரிய வீட்டு வாசலில் பந்திக்குத் தயாராக இலைகள் விரிக்கப்பட்டன. “வாங்க… வாங்க… வரிசையா உட்காருங்க மக்கா!” என்று பெரியவர்கள் கூவிக்கொண்டிருக்க,

    மலர்விழி வேண்டுமென்றே ஹரிஷையும் ,ஆனந்தியையும் கூட்டிக் கொண்டு முன் வரிசையில் போய் அமர்ந்தாள்.
​பரிமாறுபவர்கள் ஓடிக்கொண்டிருக்க, திடீரென அங்கு ஒரு நிசப்தம். கையில் ஒரு பெரிய வாளியுடன் கதிர் அங்கே வந்து நின்றான். வேட்டியை மடித்துக் கட்டி, தோளில் துண்டைப் போட்டபடி அவன் பந்தியில் உணவு பரிமாற வந்திருந்தான்.
​சரியாக மலர்விழி அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தவன்.

    ஹரிஷை ஒரு விசித்திரமான பார்வையால் அளவெடுத்தான்.
​”ஏலே தம்பி… நம்ம ஊரு சாப்பாடு உனக்கு ஒத்துக்கிடுமா? சிட்டி பையன், செரிக்காம போயிடப்போகுது!” என்று கதிர் நக்கலாகக் கேட்க,

   ஹரிஷ் சிரித்துக்கொண்டே, “அப்படிலாம் இல்லங்க, மலர் அடிக்கடி உங்க ஊர் சாப்பாட்டைப் பத்தி சொல்லுவா, அதான் ஒரு பிடி பிடிக்கலாம்னு வந்தேன்” என்றான்.

    ​மலர்விழி சட்டென்று தலையை நிமிர்ந்து கதிரைப் பார்த்தாள். கதிர் அவளது இலையில் பருப்பு ஊற்றும்போது, அவன் கை லேசாக மலரின் கையை உரசியது. அந்தத் தொடுதலில் மின்னல் அடித்தது போல இருவருமே அதிர்ந்தனர்.

​”போதுமா? இல்ல இன்னும் வேணுமா மலரு?” என்று கதிர் ரகசியமாக, அவளுக்கு மட்டுமே கேட்கும் குரலில் கேட்டான்.

​”உங்ககிட்ட இருந்து எனக்கு எதுவுமே வேணாம் மாமா. நீங்க என் அக்காவுக்கு மட்டும் பரிமாறுங்க, அதுவே போதும்” என்று மலர்விழி அதே வேகத்தில் பதிலடி கொடுத்தாள்.
​அந்த நேரம் பார்த்து, “ஏப்பா கதிர்… மாப்பிள்ளைய எதுக்குப்பா வேலை வாங்கிக்கிட்டு? நீ போய் அத்தை கூடச் சாப்பிடுப்பா” என்று யாரோ சொல்ல, கதிர் அங்கிருந்து நகர மனமில்லாமல் நகர்ந்தான். ஆனால் அவன் பார்வை முழுவதும் ஹரிஷ் , மலருக்கு தண்ணீர் ஊற்றிக் கொடுப்பதையும், இருவரும் சிரித்துப் பேசுவதையும் நோக்கியே இருந்தது.

    ​கதிர் கையில் இருந்த அந்த வாளியை இரும்பைப் பிடிப்பது போல இறுக்கிப் பிடித்தான். “எந்த ஒரு பயலும் என் மலரு பக்கத்துல இம்புட்டு நெருக்கமா இருக்கிறதை நான் பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன்ல…” என்று அவன் கண்கள் சிவக்கத் தொடங்கியது.

நிச்சயதார்த்த பரபரப்பு அடங்கி, பூஞ்சோலையூர் அமைதியான நிலவொளியில் நனைந்து கொண்டிருந்தது. வீட்டிற்குள் உறவினர்களின் குறட்டைச் சத்தமும், மின்விசிறியின் சுழற்சியும் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்த அந்த நள்ளிரவில், மலர்விழிக்குத் தூக்கம் வரவில்லை. மனதிற்குள் எரியும் கனல் அவளை உறங்க விடவில்லை.
​மெதுவாக எழுந்தவள், கால்கள் தானாக நடந்ததில் மொட்டை மாடிக்கு வந்து சேர்ந்தாள்.

  அதே இடம்… 3 வருஷத்துக்கு முன்னாடி “நீ எனக்கு வேணான் ட்டி”ன்னு கதிர் அவளைத் தூக்கி எறிஞ்ச அதே இடம். அந்த நினைவுகளில் மலர் கண்கள் கலங்கி நிக்க, பின்னாடி ஒரு கனமான நிழல் அசைஞ்சது.

​”ஏன் புள்ள… இன்னும் தூங்காம இங்கன என்ன பண்ணிட்டு இருக்கவ?” – கதிரோட குரல் அந்த இருட்டிலும் கம்பீரமா ஒலிக்க.
​மலர் திடுக்கிட்டுத் திரும்பினாள். கதிர் வேட்டியைக் கொஞ்சம் உயர்த்தி மடித்துக் கட்டி, ஒரு கையை இடுப்புல வச்சுக்கிட்டு கெத்தா நின்னுட்டு இருந்தான்.

​”உங்களுக்கு ஏன் மாமா அதைப்பத்தி கவலை? அக்கா கூட நிச்சயம் முடிஞ்சதும், என்னைப் பத்தி கேள்வி கேக்குற உரிமையை நீங்க இழந்துட்டீங்க” – மலர் பேச்சில் அத்தனை கசப்பு.

​கதிர் மெதுவா அவளை நெருங்கி வந்தான். “இழந்துட்டேனா? உன் மாமன் உயிரோட இருக்குற வரைக்கும் அந்த உரிமை யாருக்கும் போகாது ட்டி. அது சரி… கீழ ஒரு பய நிக்கானே, சிட்டி பையன்… அவன்கூட ரொம்பச் சிரிச்சுப் பேசிட்டு இருந்த? அவன் யாருல?”

​”அவன் பேரு ஹரிஷ். என் ஃப்ரென்ட் ஆல்ரெடி சொன்னேன் தான,   உங்கள விட என்னை நல்லா பார்த்துப்பான்” – மலர் வேண்டுமென்றே அவன் மனதைக் காயப்படுத்தச் சொன்னாள்.

​”ஏய்… மலரு! நாவை அடக்கிப் பேசு. பிச்சுப்புடுவேன் பிச்சு. மாப்பிள்ளையா மேடையில நின்னதுக்காக நான் சும்மா இருக்கேன்னு நெனச்சியா? உன் மனசுல யாரு இருக்காங்கிறது எனக்குத் தெரியும்” என்று கதிர் அவள் கையைப் பலமாகப் பற்றினான்.

​”தெரியுமா? உங்களுக்கு என்ன தெரியும்? 3 வருஷம் நான் சென்னைல தனியா அழுதது தெரியுமா? இல்ல, நீங்க வேணாம்னு சொன்ன அப்புறம் ஒவ்வொரு நாளும் உங்களைச் சபிச்சது தெரியுமா? இப்போ அக்காவுக்குப் புருஷனா வரப்போறீங்க… என்னைத் தொடாதீங்க மாமா!” என்று மலர் தன் கையை உதறிவிட்டுச் சீறினாள்.

    ​கதிரின் முகத்தில் ஒரு நிமிடம் வலி தெரிந்தது. “மலரு… நான் ஏன் உங்க அக்காவைக் கட்டிக்கச் சம்மதிச்சேன்னு உனக்குத் தெரியாது. அது ஒரு பெரிய கதை…”

– தொடரும்

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
முத்த மழை
396 7 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page