நாச்சியப்பன் கண்டிப்பு மிகுந்த வாத்தியார். அவர் பிள்ளை என்பதால், எப்போதும் உடல் நலனில் அதிக அக்கறை கொண்டவன். அது போக, அவனுக்கு இயற்கையாகவே அழகான உடலும், ஆளைக் கவரும் முகமும் கிடைத்திருந்தது. சிரித்தால், சாட்சாத் அந்த கிருஷ்ண பரமாத்மா போல அப்படியே மனதை மயக்கி விடுவான். ஆனால் எள்ளளவும் சிரிக்க மாட்டான்…
அவனின் பால்ய வயது சிநேகிதனான ரவி, கேமரா விஷயங்களில் அதிக ஆர்வம் கொண்டவன். எனவே இருவரும் சேர்ந்து விளையாட்டாக ஒரு குக்கிங் வீடியோ எடுத்து யூடியூபில் போட்டனர். எதிர்பாராத விதமாக அது அதிக பார்வையாளர்களை கவர்ந்தது. அதையே தொழிலாய் செய்து பார்த்தால் என்ன? என்ற நினைப்பில் அடுத்தடுத்து ஒரு பத்து வீடியோக்கள் பதிவேற்றினார்கள். அனைத்துமே பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
வேலை கிடைக்கும் வரை இதை செய்யலாம் என்று நினைத்திருக்க, அதன் பிறகு பார்வையாளர்கள் குறைந்தனர். வியாபார யுத்தி போல, சட்டை போடாமல் ஆர்ம்ஸ் காட்டியபடி சமையல் வீடியோ எடுத்துப் போட்டார்கள். இம்முறை இதற்கு முந்தைய எல்லா வீடியோக்களை விடவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே நேரம், வீட்டில் புயல் கிளம்பி இருந்தது…
பள்ளிக்கூட வேலை முடிந்து வீட்டிற்கு வந்த நாச்சியப்பன், “யாரைக் கேட்டு இந்த வேலையை பார்த்த நீ?” என்று பெல்ட்டை கையில் வைத்துக் கொண்டு கத்தினார்.
அவர் திட்டுவார் அடிப்பார் என்று அவனும் எதிர்பார்த்தான்… ஆனால் இவ்வளவு உக்கிரமாக வந்து நிற்பார் என்று நினைக்கவில்லை.
“தண்டச்சோறு, வேலைக்கு போக துப்பில்லையானு, நீங்கதான தினம் தினம் திட்டி டார்ச்சர் பண்ணுனீங்க?”
“அதுக்காக, சட்டை போடாம, அசிங்கமா கையையும் நெஞ்சையும் காட்டிக்கிட்டு. ச்சீ… பணத்துக்காக என்னெல்லாம் பண்ற?” என்று அவர் கேட்ட அந்தக் கேள்வியில் அவன் மொத்தமாக நொறுங்கிப் போனான்.
“நான் திருடல, பொய் சொல்லல, யார் வாழ்க்கையையும் கெடுக்கல. என்னால எந்த வழியில சம்பாதிக்க முடியுமோ, அந்த வழியில சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டேன். உங்களுக்கு பிடிக்கலன்னா கண்ணையும் காதையும் மூடிக்கோங்க.”
“யார் வாழ்க்கையையும் கெடுக்கலையா? உன்னால என் பேர் கெட்டுப் போச்சுடா. ஸ்கூல்ல அத்தனை பேரும் என் முதுகுக்கு பின்னால சிரிக்கிறாங்க. இப்படி ஒரு பயலை பெத்ததுக்கு, நைட் ஷோ சினிமாவுக்கு போயிருக்க வேண்டியதுதானே? னு கேட்கிறான்டா ஒருத்தன்.”
“நான் சொல்லல, அவன் சொல்லிட்டான்” என்றான் கண்ணன் முணுமுணுப்பாக.
அவ்வளவுதான், அவர் பெல்ட் சுழன்று வந்து அவன் முதுகில் விழுந்தது.
“அம்மா…” என்று அலறிக்கொண்டே தரையில் விழுந்தான் கண்ணன். இரண்டு வருடங்கள் முன்பே இறந்துவிட்ட அவனின் தாய், இப்போது எங்கிருந்து வரப்போகிறார்?
“இப்படி ஒரு பிள்ளை எனக்கு தேவையே இல்ல. நீ செத்துப் போயிட்டேன்னு நானும் உன் தம்பியும் நினைச்சுக்கிறோம். வெளிய போடா நாயே…” என்று ஊர் பார்க்க அவனை அடித்து விரட்டி விட்டார் நாச்சியப்பன்.
அன்றிலிருந்து அந்த வீட்டு பக்கம் இவன் தலை வைத்து கூட படுத்தது இல்லை. முன்பை விட கடுமையாக உழைத்தான். கிடைத்த வருமானத்தை வைத்து தனியாக ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கி வந்து விட்டான். அவ்வப்போது நகுல் அவனைப் பார்க்க இங்கு வருவதும், அவன் பின்னாலேயே நாச்சியப்பன் வந்து கேவலமாய் திட்டுவதும் சகஜம். எனவேதான் நகுலை இவன் உள்ளே விடுவதை நிறுத்திவிட்டான்.
ரவி வீட்டில் பிரச்சனை செய்யவில்லைதான். ஆனாலும் நண்பனுக்காக அவனும் இங்கேயே வந்து தங்கிக் கொண்டான். ஃபாலோயராக அறிமுகமாகி, பின்தோழியாகி, இப்போது சோசியல் மீடியா வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறாள் ப்ரியா. சேனலில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டாலும், அவள்தான் பார்த்துக் கொள்வாள். நல்ல புத்திசாலி! கூடவே அழகும் குறும்பும் அதிகம்.
ப்ரியா நடந்து முடிந்த சம்பவங்கள் அனைத்தையும் விளக்கிச் சொன்ன பிறகு மீராவுக்கு, கண்ணனின் மேல் ஒருவித அனுதாபம் உண்டானது.
அவளையும் தான் அவளின் பெற்றோர் கஷ்டப்பட்டு பி.காம் வரை படிக்க வைத்தனர். குடும்பத்தின் முதல் நிலை பட்டதாரி என்று பெயர் மட்டும்தான். வருமானத்திற்காக கிடைத்த வேலைக்கு சென்று கொண்டிருந்தாள். ஆனால் திடீரென அவளின் தாய் வைதேகி நோய்வாய்ப்பட்டு விழுந்துவிட்டார். அவள் படித்த படிப்பு, அம்மாவின் உடல்நிலையை சரி செய்ய உதவவில்லை.
பக்கத்து வீட்டு கிழவி, “உன்னை படிக்க வச்சதுக்கு பதிலா பத்து மாட்டை வாங்கி போடுனு பல தடவை சொன்னேன். உங்க ஆத்தா கேட்டாளா? இப்ப மாடு இருந்திருந்தா, அதை வித்து அவளுக்கு ஆபரேஷன் பண்ணி இருக்கலாம். ம்ஹூம், அம்புட்டு காசும் கரியா போச்சு” என்று மீராவின் காதுபட திட்டி விட்டுப் போனார்.
அவர் குற்றச்சாட்டுகள் வருத்தம் தருவதாக இருந்தாலும், அதுதான் எதார்த்தம் அல்லவா? எனவே படித்தது வீணோ?! என்று அவள் மனம், பலமுறை வருத்தப்பட்டு இருக்கிறது.
எப்படி வாழ்க்கையில் முன்னேறுவது? என்று வழி தேடிக் கொண்டிருந்த நேரம், அவள் பெரியம்மா மூலம் ஒரு வழி கிடைத்தது. அவள் பெரியம்மா சரஸ்வதி, ரவியின் வீட்டில் பல வருடங்களாக சமையல் வேலை செய்து வருபவர்.
மருத்துவமனையில் இருந்த வைதேகியை பார்க்க வந்திருந்த சரஸ்வதி, “எனக்கு தெரிஞ்ச இடத்துல ஒரு வேலை இருக்கு. நீ முயற்சி பண்ணி பார்க்கலாம்னு நினைக்கிறேன். சம்பளமும் தாராளமா கிடைக்கும். ஆனா அத பத்தி நீ வெளியில மூச்சு கூட விடக்கூடாது. என்ன ஏதுனு விவரம் கேட்டு பார்க்கட்டுமா?” என்று கேட்டார்.
ஏற்கனவே தனக்காக பணம் செலவழித்ததால் அம்மாவுக்கு இப்போது வைத்தியம் பார்க்க பணம் இல்லை என்ற நினைப்பில் இருக்கிறாள். பணம் சம்பாதிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தால் தலையையே வெட்டி தந்திருப்பாள். வேலைக்கு தானே கூப்பிடுகிறார்கள். மறுப்பாளா என்ன?
“கண்டிப்பா பண்றேன் பெரியம்மா. எப்படியாவது எனக்கு அந்த வேலையை வாங்கி கொடுங்க. லீவு கூட எடுக்க மாட்டேன்…” என்று கூறினாள். உடனே ரவியின் நம்பர் கை மாறியது.
“ஹாய், எங்களுக்கு மருத்துவமும் பாரம்பரிய சமையலும் சேர்த்து செய்ற ஒரு ஆள் வேணும். ஒவ்வொரு ரெசிபிக்கும் குறைந்தபட்ச சம்பளமா ரெண்டாயிரம் ரூபாய் உங்களுக்கு கிடைக்கும். பத்து நாள்ல நாங்க எதிர்பார்த்ததை விட அதிக வியூஸ் போச்சுனா, போனஸ் அமௌன்ட்டும் தனியா தருவோம். அந்த ரெசிபிய எங்களுக்கே ராயல்டியோட தந்தீங்கனா அதுக்கு தனி பேமெண்ட். ஒரு வாரத்துக்கு குறைஞ்சது இருபது ரெசிபி வாங்கிக்க ரெடியா இருக்கோம். பட், எங்க கண்ணு முன்னால சமையல் செய்யணும். டேஸ்ட் பண்ணி பாத்துட்டு தான் செலக்ட் பண்ணுவோம். இது உங்களுக்கு ஓகேவா?” என்றான்.
அவளது தாய் வழி தாத்தா நாட்டு மருந்துகள் மூலம் அக்கம் பக்கத்து கிராமங்களுக்கு மருத்துவம் செய்தவர். அவர் மூலமாக மீரா அதையெல்லாம் நன்றாக கற்று தேர்ந்திருந்தாள். வைதேகிக்கு திடீரென மூளையில் கட்டி வந்துவிட்டது. ஆறு மாதத்திற்குள் ஆபரேஷன் செய்தால் காப்பாற்றி விடலாம் என்று கூறி இருக்கிறார்கள். அதற்கு ஐந்து லட்சம் பணம் தேவை…
ஆறு மாதத்தில் எங்கு போய் புரட்டுவாள்? ஒரே வாரத்தில் ஐம்பதாயிரம் சம்பாதிக்க வாய்ப்பு தருகிறேன் என்று கூறுகிறான் ரவி. மாட்டேன் என்று சொல்ல எப்படி மனம் வரும்?
“கண்டிப்பா பண்றேன் சார். கொஞ்சம் கூட குறைய பணம் இருந்தாலும், எனக்கு உடனே வேலை மட்டும் கொடுங்க. நீங்க என்ன ரூல்ஸ் சொன்னாலும் நான் ஏத்துக்கிறேன்” என்று கூறிவிட்டாள்.
அதன் பலனாகத்தான் இங்கே வந்து தங்கி இருப்பது வரை எல்லாமே நடந்து முடிந்திருக்கிறது…
மதிய நேரம் முழுவதும் அப்பார்ட்மென்ட்டை சூழ்ந்திருந்த அமைதி, இப்போது உருமாறியது. மாலை நேரத்தில் விளையாடும் குழந்தைகளின் சத்தம், வாகனங்களின் வருகை, பறவைகளின் ஓசை என அந்த இடமே ரம்யமாய் இருந்தது. அந்த யதார்த்தை ஓசைகளோடு சமையல் வீடியோ தயார் செய்வதுதான் கண்ணனின் மிகப்பெரிய பலம்.
திடீரென, ஒரு பெரிய சைஸ் அலாரம், “ட்ரர்ர்ர்ர்ர்…” என்று அலறியது. அது வழக்கமான மொபைல் அலாரம் இல்லை, சமையலறைக்கு அருகிலிருந்த ஒரு பெரிய சைஸ் கடிகாரத்தில் இருந்து ஒலித்தது.
படுக்கை அறையில் இருந்த ப்ரியா படாரென்று எழுந்து உட்கார்ந்தாள். பரட்டையாய் கிடந்த கூந்தலை அள்ளிக் கொண்டையிட்டுக் கொண்டு, கண்களைக் கசக்கியபடி ஹாலுக்கு வந்தாள். ஏற்கனவே உறக்கம் இல்லாமல் உட்கார்ந்திருந்த மீராவும், கண்ணனின் கோபப் பார்வைக்கு அஞ்சி, அவளுக்குப் பின்னாலேயே வந்தாள்.
கண்ணன், எப்போதும் போல கோபமும் கடுமையும் நிறைந்த முகத்துடன் சோபாவில் அமர்ந்திருந்தான். அவனது ஒவ்வொரு அசைவிலும் ஒருவித அதிகாரமும் எரிச்சலும் கலந்திருந்தன. இது போதாதென, அவன் முதுகு பக்கம் இருந்த கருவண்ண சுவர், அவன் ஆக்ரோஷத்தை அதிகப்படுத்தி காண்பித்துக் கொண்டிருந்தது.
மீராவைப் பார்த்த கண்ணன், தன் கழுகு கண்களால் அவளை முறைத்தான். அந்தப் பார்வையின் வீரியம் தாங்காமல், மீரா உடனே மொத்தமாக ப்ரியாவின் பின்னால் ஒளிந்து கொண்டாள்.
ரவி, “கேர்ள்ஸ், சிட் ஹியர்” என்று பெரிய சைஸ் சோபாவில் அவர்களுக்கு இடம் கொடுத்தான்.
மீரா, சோபாவின் ஓரத்தில் ஒடுங்கி அமர்ந்திருந்தாள். கண்ணனின் பார்வை இன்னமும் அவள் மீதிருந்து நகராது இருக்க, அச்சத்திலேயே அவள் வியர்த்துப் போயிருந்தாள். ப்ரியாவோ, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து எழுந்து வந்ததற்கு அத்தாட்சியாக லேசான மந்த நிலையில் இருந்தாள்.
ரவி பொறுப்புடன் அடுத்த வேலைக்கான திட்டமிடல்களை மனதுக்குள் ஓட்டிக் கொண்டிருந்தான். அவன் பார்வை வெகு தாமதமாகத்தான் கண்ணன் பக்கம் திரும்பியது. நிலமையை உணர்ந்ததும், உடனே கண்ணன் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தான்.
தன் வாட்சைப் பார்த்தபடி, “பத்து நிமிஷம் தான் டிஸ்கஸனுக்கான டைம். படபடன்னு சொல்ல வேண்டியதை சொல்லுங்க” என்றான் ரவி.
கண்ணன் தன் கடுமையை குரலில் ஏற்றிக் கொண்டு, “நாளைக்கு மதியத்துக்குள்ள முப்பது ரெசிபிக்கு வீடியோ ரெடி பண்ணனும். ரவி, ஏற்கனவே உன்கிட்ட ரெசிபி லிஸ்ட் கொடுத்துட்டேன். எதை எப்போ செய்யணும்னு டைம் ஸ்லாட் போட்டுட்டியா?” என்றான்.
“எஸ், எந்த ரெசிபிக்கு எந்த டைம் கரெக்டா இருக்கும்னு பார்த்துப் பார்த்து ரெடி பண்ணிட்டேன். இன்னைக்கு சாயங்காலம் அஞ்சறைக்கு ஆரம்பிச்சா, நாளைக்கு மத்தியானத்துக்குள்ள நாம நெனச்சபடி முடிச்சிடலாம்.”
“சூப்பர். அப்போ நீ போய் கேமராவை ரெடியா வை. ஒவ்வொரு ரெசிபிக்கும் தேவையான ஆங்கிள்ஸ் எல்லாம் ப்ரீ-செட் பண்ணிடு. நீ சொல்ற நேரத்துல கரெக்டா ஷூட் ஆரம்பிக்கணும்” என்று சொன்னதும், ரவி எழுந்து போய்விட்டான்.
கண்ணன் ப்ரியாவின் பக்கம் திரும்பினான். அவள் பின்னால் இன்னமும் பம்மிக் கொண்டிருந்தாள் மீரா…
