அத்தியாயம்  4

 

அப்போது அவன் கணினி இளங்கலையில் இறுதி ஆண்டு படித்து கொண்டிருந்த சமயம் வர்ஷினியும் பள்ளி இறுதி படிப்பை முடித்திருந்தாள். திடீரென்று ஒரு நாள் வர்ஷினியின் தாய் தந்தை இருவரும் கஸ்தூரியின் வீட்டிற்கு வந்தார்கள். கவிதாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. ஏனென்றால் கஸ்தூரிதான் அடிக்கடி கவிதாவின் வீட்டுற்கு வருவாள். கரண் இதுவரை வந்ததில்லை. கரணை பார்த்தாலே கவிதாவுக்கு கொஞ்சம் பயம் தான். கவிதாவிற்கு தன் மகன் வர்ஷினியை காதலிப்பது அரசல் புரசலாக தெரியும். ஆதலால் அவளுக்கு உள்ளுக்குள் பயம் தான். அதைப்பற்றி கேக்க தான் வந்திருக்கிறாரா?அல்லது வேறு ஏதாவது விஷயமா? என்று உள்ளுக்குள் உழன்றுக் கொண்டிருந்தாள். கௌரியிடம் சண்டை போட வந்திருக்கிறாரோ! படிப்பே முடிக்கவில்லை, அதற்குள் காதல் கேட்கிறதோ , என்றெல்லாம் கேட்பாரோ, என்று பலவாறான எண்ணங்கள் ஓட , கஸ்தூரி, கவிதாவிடம் பேச ஆரம்பித்தாள். அவள் முகத்தில் பழைய கலையே இல்லை. மிகவும் சோர்வாக காணப்பட்டாள். அக்கா, என் பெண்ணிற்கு அடுத்த மாதம் பெங்களூரில் திருமணம் வைத்திருக்கிறேன். நீங்கள் உங்கள் கணவர் மற்றும் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வரவேண்டும் என்று அழைக்க, கவிதாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. என்ன கஸ்தூரி, உன் பொண்ணு இப்பதானே பள்ளி இறுதி படிப்பையே முடிச்சியிருக்கா, நல்லா படிக்கிற பொண்ணு. மேற்கொண்டு கல்லூரி படிப்பு படிக்க வேண்டாமா? அதற்குள் திருமணம் செய்கிறாய் என்று ஆதங்கமாய் கேட்டாள். 

 

எனக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போயிடுது. எங்கே இவ கல்யாணத்தை பார்க்காம போயிடுவேனோனு பயமாய் இருக்கு. என்னுடைய தூரத்து சொந்தத்தில் நல்ல வரன் வந்திருக்கு. பையன் நல்ல வேலையில் இருக்கான். அதனாலே தான் திருமணத்தை முடித்துவிடலாம் என்று பார்க்கிறேன். எங்களுக்கு பின்னாடி என் பொண்னுக்குன்னு  யாரும் இல்லை.  இவளுக்கு சீக்கிரமா திருமணம் செஞ்சிட்டா எங்க கடமை முடிஞ்சிடும் என்று கூற, கவிதா, அதுக்குன்னு நல்லா படிக்கிற பொண்ணுக்கு இப்பவே ஏம்மா கல்யாணம் பண்ற? அவ குறைஞ்சது ஒரு டிகிரியாவது வாங்கிட்டா நல்லா இருக்கும் தானே, இல்லை அக்கா பொண்ணு அதிகமா படிச்சா அதற்கு ஏத்தமாதிரி மாப்பிள்ளை பாக்கணும். அவங்க சீர் செனத்தி எல்லாம் நிறைய கேப்பாங்க. அதையெல்லாம் எங்களாலே செய்ய முடியாதுக்கா. இந்த மாப்பிள்ளை பொண்ணுக்கு இந்த படிப்பே போதும். உங்களாலே முடிஞ்சதே பொண்ணுக்கு போட்டு அனுப்புங்கன்னு சொல்லிட்டாங்க என்று கூறியவுடன் கௌரிக்கு மனசு கனமாகியது. என் பிள்ளை வர்ஷினியை விரும்புகிறானே, இதை அவன் எப்படி எடுத்துப்பான்னு தெரியலையே என்று மனசுக்குள்ளேயே புலம்பினாள். அதுக்குமேல் கௌரிக்கு எதுவும் பேச தோன்றவில்லை. சிறிது நேரத்தில் மாசிலாமணியும் வந்துவிட இருவரிடமும் கல்யாண பத்திரிகையை வைத்துவிட்டு சென்று இருந்தனர்.

 

அன்று எழுந்ததிலிருந்தே கௌரிக்கு மனம் ஏனோ பாரமாக இருந்தது.ஏனென்றே தெரியாத ஒரு வலி மனதிற்குள் இருந்துக் கொண்டே இருந்தது. அன்று அவனுக்கு கல்லூரிக்கு கூட செல்ல பிடிக்கவில்லை. ஆனால் அன்று முக்கியமான பயிற்சி வகுப்பு இருப்பதால் போயே ஆகவேண்டும் என்ற நிலை இருப்பதால் வேண்டா வெறுப்பாக கல்லூரிக்கு சென்றான். அங்கு அவனுக்கு பாடத்தில் ஒழுங்காக கவனம் செலுத்த முடியவில்லை . எனவே சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்துவிட்டான். வீடு வந்தவுடன் வர்ஷினிக்கு திருமணம் என்ற செய்தி கேட்டதும் தலையில் இடி விழுந்தாற் போன்று நிலையில் அப்படியே அருகில் இருந்த சோபாவில் அமர்ந்துவிட்டான். அவனால் எதையும் யோசிக்க கூட முடியவில்லை. அடுத்து என்ன செய்வது என்றுகூட தெரியாமல் அவனது மூளை வேலை நிறுத்தம் செய்தது. அப்படியே எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தானோ அவனுக்கே தெரியவில்லை. கவிதா வந்து அழைக்கவும் தான் உணர்வே பெற்றான். கவிதாவுக்கு தன் பிள்ளை வர்ஷினியை நினைத்துக் கவலைப்படுகிறான் என்று நன்றாகவே தெரிந்தது. ஆனால் அவனை எப்படி தேற்றுவது என்பது தான் தெரியவில்லை. அவனிடத்தில் வந்து என்னப்பா? என்ன ஆச்சு? என்று அவனை அழைத்து தன் மடியில் தாங்கி அவன் முடியை கோதி விட, அவன் தன் தாயிடம் எதையும் மறைத்ததில்லை, வர்ஷினியை காதலிப்பதை பற்றி கூற, அவள், இனிமேல் நம்மாலே எதுவும் செய்ய முடியாது கௌரி. அவங்க கல்யாண பத்திரிகை வரை அடிச்சு எல்லோருக்கும் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க! என்னாலேயும் போய் அவ அப்பாகிட்ட பேச முடியாது. நீ படிச்சு முடிச்சு வேலையில் இருந்தால் தைரியமாக பொண்ணு கேக்கலாம். ஆனா நீ உன் படிப்பையே முடிக்கலே. அவளுடைய அப்பா பத்தி உனக்கே தெரியும். அவர் கொஞ்சம் கரார் பேர்வழி. காதல் எல்லாம் சுத்தமா பிடிக்காது. எனவே நான் போய் பேசினாலும் அவரு தன் பொண்ணை உனக்கு தர மாட்டார். நீ வர்ஷினியை மறக்கறது தவிர வேறு வழியே இல்லடா என்று கூறிய கவிதாவின் கண்களிலும் இருந்து நீர் தளும்பி படுத்திருந்த அவன் நெற்றியில் பட்டது. 

 

அன்று இரவு முழுவதும் கௌரி அவனது அறையில் தூக்கம் வராமல் விட்டதையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு நொடி கூட அவனால் கண்ணயர முடியவில்லை. கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. “யார் சொன்னார்கள் ஆண் பிள்ளை அழமாட்டான்.

 

என்று” அவர்களுக்கும் கண்களில் கண்ணீர் உண்டு தானே! மது அருந்தும் பழக்கம் இருந்தால் தன் மன பாரத்தை சற்று நேரம் மறந்து இருப்பான். புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் கூட புகை ஊதி தன் மனப் புண்ணை ஆற்றி இருப்பான். அவன்தான் அக்மார்க் நல்லவனாய் இருக்கிறானே! என்ன செய்வான்! கண்ணீர் மட்டுமே அவன் வேதனைக்கு துணையாக போனது. இறுதியாக வர்ஷினியிடம் பேசியாகவேண்டும். தான் காதலை அவளிடம் சொல்லி எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லவேண்டும் என்ற முடிவோடு விடியற்காலையில் தான் சற்று கண்ணயர்ந்தான்.

 

 

மறுநாள் வெகு சீக்கிரமாகவே விழித்து தயாராகி அவன் வீட்டு வாசலில் வர்ஷினியின் வரவுக்காக காத்திருக்க தொடங்கினான். வர்ஷினி தன் தோழி வீட்டுக்கு சென்று வருவதாக கூறி வெளியில் வர, கௌரியும் அவளை பின் தொடர்ந்து சென்றான். சற்று தூரம் சென்றதும் கௌரி ,வர்ஷினி அருகில் சென்று, வர்ஷினி உன்னிடம் தனியாக முக்கியமாக ஒரு விஷயம் பேசவேண்டும் பக்கத்தில் இருக்கும் காபி ஷாப்புக்கு வர முடியுமா? என்று கேட்க,  வர்ஷினி,  எனக்கு கல்யாணம் உறுதியாகிவிட்டது. இந்த நேரத்தில் இவன் என்னிடத்தில் என்ன பேச போகிறான்? என்று நினத்துக் கொண்டு வருகிறேன்! சங்கர் என்று கூறி அவனோடு நடக்க, இருவரும் காபி ஷாப்பை அடைந்து எதிரெதிரே அமர்ந்துக் கொண்டனர். கௌரிக்கு எப்படி தொடங்குவது என்று தெரியவில்லை. சுற்றி வளைத்து பேசாமல் நேரடியாகவே வர்ஷினி உன்னை காதலிக்கிறேன், சின்ன வயசிலிருந்தே உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்.  பிடித்தம் எப்போ காதல் ஆச்சுன்னு எனக்கே தெரியலே. நீ படிச்சு முடிச்ச பிறகும் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைச்சபிறகும் என் காதலை சொல்லி உன்னை உன் வீட்டில் வந்து பெண் கேக்கலாம்னு நினைச்சுட்டிருந்தேன், ஆனா அதுக்குள்ளே உனக்கு திருமணம் பேசி முடிப்பாங்கனு நான் சத்தியமா எதிர் பார்க்கலே! இப்பவும் ஒன்னு கெட்டு போகலை. என் மனசு பூராவும் நீ தான் இருக்கே! இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திரு வர்ஷினி. எனக்கு இரண்டு வருஷம் டைம் கொடு. நான் படிச்சு முடிச்சு நல்ல வேலை கிடைச்சப்புறம் நானே உங்க அப்பாகிட்ட வந்து பேசுறேன். அப்படி எல்லாம் இல்ல, இப்பவே உங்க வீட்டில கல்யாணம் பண்ண சொன்னாலும் நான் தயார் தான், என்று தன் மனதில் உள்ளதை அனைத்தையும் கொட்டி தீர்த்தான். அவன் சொன்னதை எல்லாம் கேட்ட வர்ஷினியின் முகம் மாறியது. என்ன சங்கர் இப்ப வந்து இப்படி பேசுற? எனக்கும் உன்னை பிடிக்கும் தான். நான் இல்லையின்னு சொல்லமாட்டேன். ஆனால் அதெல்லாம் காதல் இல்லை. இந்த வயசில வரும் வெறும் ஈர்ப்பு தான். இதுகெல்லாம் நாம் முக்கியத்துவம் கொடுக்க கூடாது. நீ நல்லா படிக்கணும். நல்ல வேலையில் அமரனும். ஒரு தோழியாய் இது தான் என் விருப்பம். அதுமட்டும் இல்லாம நான்  என் அப்பா அம்மாவை ரொம்ப மதிக்கிறேன். அவங்க சந்தோஷம் தான் என்னோட சந்தோஷமும். அவங்க இப்ப எனக்கு கல்யாணம் பண்ண ஆசைப்படுறாங்க. அவங்க சந்தோசத்தை என்னால கலைக்க முடியாது. உனக்கு என்னைவிட நல்ல பொண்ணு கிடைப்பா. என்னை மறந்துட்டு  நீ படிக்கிற வேலையை போய் பார். அதான் ரெண்டு பேருக்கும் நல்லது. இதுக்கு மேல் இதில் பேச ஒன்னும் இல்லை என்று அவள் எழுந்துக் கொள்ள கௌரியின் முகத்தில் அப்படி ஒரு வேதனை, எப்படியாவது வர்ஷினிக்கு புரிய வைத்து இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம் என்று நம்பி கொண்டிருந்தவனுக்கு அவளின் பேச்சு மனதை கீறி ரணமாக்கியது. இது தான் உன் இறுதி முடிவா என்று மனம் தாளாமல் அவன் மறுபடியும் கேட்க, ஆமாம் என்று தளையாடிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள். அவனால்தான் அங்கிருத்து அசைய கூட முடியவில்லை. காதலில் தோற்ற வலி அவன் மனதை அரித்தெடுத்தது. என்னை ஏன் நிராகிக்கிறாள்? எனக்காக அவளால் சில வருடங்கள் கூட காத்திருக்க முடியாதா? அவள் தந்தையிடம் பேசுகிறேன் என்றால் கூட மறுத்துவிட்டாளே? நான் அவளுக்கு பொருத்தமானவன் இல்லையா ? என்று வெகு நேரம் மனதில் புலம்பிக் கொண்டே அங்கேயே அமர்ந்திருந்தான். பின் தன்னுடைய செல்போன் ஒலிக்கவும் தான் நிகழ் உலகத்திற்கு வந்தான். 

 

 

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
கண்மணியே காதலில் கரைந்திட வா
791 10 4
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page