போதையில் உறங்கிக்கொண்டு இருந்தாலும் இடை இடையே பெண்ணவளை இயற்கை அழைத்துக்கொண்டே இருந்தது… அதில் உறக்கம் கலைந்து எழுந்த ரதி அப்போதே அவள் இருக்கும் இடம் பார்த்தாள்.
ஏதோ ஒரு காரில் படுத்திருப்பதை உணர்ந்து வேகமாக அவளின் ஆடையை தான் முதலில் பார்த்தாள் எல்லாம் சரியாக தானே இருக்கு நமக்கு ஒன்றும் ஆகவில்லை தானே என்று.
ஆனால் பாவம் அந்த ஆடைக்கே வாய் இருந்தால் ஏம்மா என்னமோ ரொம்ப அதிகமா போட்டிருந்த மாதிரி இவ்வளவு நேரம் தேடுற என்று கிண்டல் செய்திருக்கும்… அந்த அளவுக்கு தான் தேடி தேடி நிறைய நேரம் சென்ற பின்னே அவள் மேனியில் அணிந்திருந்த ஆடையில் அவள் பத்திரமாக தான் இருக்கிறாள் என்பதனை உணர்ந்தாள்.
உணர்ந்த பின்பே மீண்டும் இயற்கை அழைக்க கதவை திறக்க பார்த்தாள்… கதவு திறக்கப்படவில்லை… அடக்கடவுளே என்றே சுத்தி முத்திலும் பார்த்தவளுக்கு நிறைய முறை குடிபோதையில் கார் சாவியை தொலைத்துவிட்டு அதன் பின் அதனை எவ்வாறு சாவி இல்லாமல் ஓட்ட முடியும் திறக்க முடியும் என்ற வித்தையும் காத்திருந்ததால் அவள் காரை எளிதாக திறந்துவிட்டாள்.
வெளியே வந்து சுத்திலும் பார்த்துவிட்டு பார்க்கிங்கை விட்டு வெளியே வந்தவள் எந்த இடம்டா இது என்றே தேடியவளுக்கு கேட் அருகே இருந்த செக்கியூரிட்டி அறை தெரிய விசாரிக்கலாம் என்று அங்கு சென்றாள்.
சென்று அங்கிருந்த கழிப்பறையை பயன்படுத்திவிட்டு வந்தவள் செக்கியூரிட்டியை அவரின் அறையில் தேட அங்கு ஒரு ஓரமாக பதுக்கி வைத்திருந்த இரண்டு மூன்று சரக்கு பாட்டில் விழிகளில் தெரிய
“வாவ் லோக்கல் சரக்கா… இதையும் டிரை பண்ணி பாத்துடலாம்…” என்றே தூக்கி கொண்டே வந்து காரில் பின் சீட்டில் அமர்ந்து ஒவ்வொன்றாக குடித்து மட்டையானாள்.
வேலையெல்லாம் முடித்து இரவு ஆன பின்பே ராமுக்கு ஒரு பெண்ணை காரில் படுக்க வைத்திருந்தோம் என்பது நினைவு வர வேகமாக ஓடிவந்தார்… வந்தவர் முன் சீட்டில் படுக்க வைத்திருந்த ரதியை காணவில்லை என்று பதறி கதவை திறக்க பின் சீட்டில் இருகாலினை பப்பரக்க என்று விரித்து சீட்டின் மேலே போட்டுக்கொண்டு படுத்திருந்தவளை பார்த்தவருக்கு
“என்ன பொண்ணுடா இவ…” என்றே அவளின் காலினை சரியாக போட்டு அவனின் கோட்டினை கழட்டி காலினை மறைத்து காரினை எடுத்தார்.
ராம்மின் மனமெல்லாம் “இந்த பொண்ண இப்ப வீட்டுக்கு எப்படி கூட்டிக்கிட்டு போரது? அம்மா ஏதாவது சொன்னா என்ன பண்ண?” என்ற யோசனையுடனே சென்டர் மிரர் வழியாக பின் சீட்டை பார்த்தார்.
ராமின் கோட்டினை கட்டிக்கொண்டு ரதி சுருண்டு படுத்திருந்தாள்… அவளை பார்க்க குழந்தை போலவே ராமுக்கு இருக்க தானாக பாத்துக்கலாம் என்றே வீட்டை நோக்கி வண்டியை விட்டார்.
வாட்ச்மேன் கேட்டை திறந்துவிட்டு வணக்கம் வைத்தார்… சிறு தலையசைவுடன் காரை ஓட்டிய ராம் போர்டிகோவில் காரை நிறுத்தி இறங்கினார்… வீட்டு வாசலில் அவரை வரவேற்க யாரும் இல்லை.
வாசலை பார்த்தவிட்டு காரின் பின் கதவை திறந்து ரதியை அவரின் இருகரத்தில் ஏந்தினார்… தானாக அவளின் கரம் அவரின் கழுத்தை சுற்றி விழுந்து அவரின் நெஞ்சில் கன்னம் பதித்துக்கொண்டாள்.
எந்தவித தவறான உணர்வும் இல்லாமல் பெண்ணவளை ஏந்திக்கொண்டு வீட்டின் உள்ளே நுழைந்தார்… அந்தநேரம் வீட்டில் யாரும் இல்லை… வேலைக்கார பெண்மணி தான் ஓடிவந்தாள்.
“ஐயா நீங்க வந்ததும் உங்களுக்கு சாப்பாடு போட அம்மா சொன்னாங்க…” என்று அவளுக்கு சொல்ல பட்ட வேலையை கூறி ராமின் கரத்தில் இருந்த பெண்ணை புரியாமல் பார்த்தாள்.
அவளின் பார்வையை பார்த்தாலும் பெரியதாக எடுத்துக்கொள்ளாமல் “எங்க இரண்டு பேருக்கும் டிபன் எடுத்து வைங்க…” என்றவர் அவளை அப்படியே தூக்கி சென்று டைனிங் டேபிளின் முன்னிருந்த நாற்காலியில் அமர வைத்து கை கழுவி வந்து வைக்கப்பட்ட இட்லியை எடுத்து அவளுக்கு ஊட்டினார்.
அவள் வாய் திறக்கவில்லை என்றதும் மெல்ல அவளின் கன்னம் தட்டி “சாப்பிட்டு தூங்கு… ஆ காட்டு ஆஆஆ…” என்று கூற தானாக வாயை திறந்தாள்.
எந்த தயக்கமும் கொள்ளாமல் ஒவ்வொரு வாயாக ஊட்டினார்… போதும் என்றானதும் “ம்ம்…” என்று முகத்தை திருப்பிக்கொள்ள அவரும் அவளின் வாயை தண்ணீரால் துடைத்துவிட்டு எழ தானாக அவள் அவரின் சட்டையை இழுத்து வாயை துடைத்துக்கொண்டாள்.
அவளின் செயலில் அதிர்ந்து அவளை ராம் பார்க்க அவளோ அமர்ந்திருந்த நாற்காலியிலே உறங்க ஆரம்பித்தாள்.
வேலைக்கார பெண்மணி இவ்வளவு நேரம் நடப்பதை அப்படியே பார்த்துக்கொண்டே இருந்தாள்… கை கழுவி வந்து ராம் சாப்பிட அமர்ந்த படியே
“என் ரூம் பக்கத்து ரூம மேடம் தங்க சுத்தம் பண்ணுங்க… இனி மேடம் இங்க தான் தங்க போறாங்க…” என்றார்.
இவங்க யார் என்று கேட்க தோன்றியது தான்… கூடவே பெரிய இடத்து பொல்லாப்பு நமக்கு எதுக்கு என்ற எண்ணமும் வர “இதோ போறேங்க ஐயா…” என்று ஓடினாள்.
ஹாலில் மாட்டியிருந்த கடிகாரத்தில் மணி பன்னிரெண்டு ஆனதை பார்த்த ராமின் பார்வை தானாக அவரின் அம்மாவின் அறைக்கு சென்றது… கதவு சாத்தியிருந்தது… அதன் அருகே இருக்கும் அறையை பார்த்தது தங்கையும் அவளின் கணவரும் இருந்தனர்… அந்த அறையும் சாத்தியே இருந்தது.
மாடியை பார்த்தார்… ஒருபக்கம் தம்பியும் தம்பியின் மனைவியும் இருக்கும் அறை… அதுவும் மூடியிருந்தது… யாருக்கும் ராம் வருவான்… அவனுடன் பேசுவோம் என்ற எண்ணமெல்லாம் இல்லை… இதே ஏதாவது பணம் வேண்டும் என்றால் எல்லாரும் வந்து நிற்பார்கள்.
ஐந்து வருடம் முன் தம்பிக்கு மருத்துவமனை கட்டி தர கூறி அம்மா தம்பி தம்பியின் மனைவி தங்கை எல்லாரும் இரண்டு மணி வரைக்கும் உக்கார்ந்து இருந்தனர்.
அடுத்து அரசாங்க உத்தியோகத்தில் இருக்கும் தங்கையின் கணவருக்கு பதவி உயர்வு வாங்கி தர சிபாரிசு வேண்டும் என்று கேட்டு மூன்று வருடம் முன் அமர்ந்திருந்தனர்… வேலை ஆனதும் அவ்வளவு தான் அண்ணனின் தேவை.
செய்ததை நினைக்க வில்லை… தானாக ஏதேனும் தேவையிருந்தால் தான் தனக்காக காத்திருப்பார்களா என்ற எண்ணம் வந்துவிடுகிறது ராமுக்கு… அதுவே ராமுக்கு தனிமையின் வேதனையை தருக்கின்றது.
தம்பியின் அறையின் எதிர் அறையில் தான் ராம் அறை இருக்கிறது… அதன் அருகே தான் ரதி தேவியின் அறை சுத்தம் செய்யப்பட்டது.
ராம் சாப்பிட்டு முடித்ததும் குழந்தையை தூக்குவது போலவே சர்வசாதாரணமாக ரதியை தூக்கிக்கொண்டு அவளுக்காக தயார் செய்த அறையில் அவளை படுக்க வைத்து போர்வையால் போத்திவிட்டு
“புது இடம்னு இடையில எழுந்தா மேடம் பயந்துட போறாங்க… அதனால நீங்களும் இங்கையே நைட் இருந்து அவங்களுக்கு ஏதாவது தேவையிருந்தா பார்த்துக்குங்க…” என்று கூற
அதிகம் வாயை திறந்து பேசாதவர் இன்று நிறைய பேசியதாகவே எட்டு வருடமாக அங்கையே தங்கி வேலை பார்க்கும் அந்த வேலைக்கார பெண்மணி கமலத்திற்கு தோன்ற உடனே சரி என்று தலையசைத்தாள்… அதன்பின் அறையின் வாசல் வரைக்கும் சென்றவர் திரும்பி
“அவங்க எனக்கும் மேல… அதனால அவங்கள நல்லபடியா பார்த்துக்க வேண்டியது உங்க பொறுப்பு… புரியுதா?” என்று கேட்க
“நான் பார்த்துக்குறேன் ஐயா…” என்று பணிவாக கூறிய பின்னே அவரின் அறைக்கு சென்றார்… சென்றவர் அப்படியே படுக்கையில் விழுந்தார்… எப்போதும் வராத உறக்கம் இன்று படுக்கையில் விழுந்ததும் வந்துவிட்டது.
காலை வரைக்கும் அடித்து போட்டது போல தான் உறங்கினார்… ஆறுமணிக்கு அலாரம் அடித்தே எழுந்தவர் உடற்பயிற்சி எல்லாம் முடித்து அலுவலகத்திற்கு தயாராகி எட்டு மணிக்கு அவரின் அறையை விட்டு வெளியே வர எதிரே இருந்த அறையில் இருந்து இப்போதே தூங்கி எழுந்து தம்பியும் தம்பியின் மனைவியும் வெளியே வந்தனர்.
அவர்களை எல்லாம் காணாமல் கம்பீர நடையுடன் மாடி படியிலிருந்து இறங்கினார்… நேராக டைனிங் டேபிளுக்கு சென்றார்… நேரத்தை பார்த்தே அவருக்கான உணவை எடுத்து வைத்துக்கொண்டு கமலம் இருந்தார்… வைத்த காலை டிபனை உண்டுக்கொண்டு ராம் இருக்க அப்போதே ஒவ்வொருவராக அங்கு வந்து அமர்ந்து காலை காபியை வாங்கி பருகினர்.
சாப்பிட்ட படியே “இடையில அவங்க எழுந்தாங்களா?” என்று கேட்க
“ஆமாங்க ஐயா இடையில இரண்டு தடவ எழுந்து தண்ணீ குடிச்சிட்டு படுத்துட்டாங்க… காலையில ஆறு மணிக்கெல்லாம் எழுந்து எங்கையோ போகணும்னு சொன்னாங்க… நான் நீங்க வந்ததும் உங்க கிட்ட சொல்லிட்டு போக சொன்னேன்…” என்றாள் கமலம்.
“குட்… அவங்க கிட்ட அவங்கள பார்க்க நான் வெயிட் பண்றேன்னு சொல்லுங்க…” என்று கூற பங்கஜத்தின் காது கூர்மையானது யாரை இவன் சொல்கிறான் என்ற கேள்வியுடன்.
ராமின் தம்பி சந்திரனின் செவியில் அவனின் மனைவி “யாரா இருக்கும்…” என்று கேட்க
“என்னைய கேட்டா…” என்றே போனை நோண்டிக்கொண்டு இருந்தான்… இவன என்றே மாமியாரின் செவியில் “உங்க மகனையே வெயிட் பண்றதா சொல்ல வச்ச ஆளு யாரு அத்தை…” என்று கேட்க
எழுவது வயதானாலும் திடமாகவே இருந்த பங்கஜம் மூக்கு கண்ணாடியை சரி செய்தே “யாருப்பா அது?” என்று கேட்கும் போதே
“ஹலோ மிஸ்டர்… காலையில எழுந்து வரவே உனக்கு இவ்வளவு நேரமா?” என்ற கேள்வியோடவே மாடி படிக்கட்டின் வழியாக டொக் டொக் என்ற ஹீல்ஸ் சத்தத்துடனே இறங்கினாள்.
ரதியின் குரலை கேட்டதும் “எல்லாம் ஒரு ரகம்… இவ எந்த ரகமா இருக்க போறாளோ…” என்றே சாப்பிட்ட தட்டில் அப்படியே கை கழுவ செல்ல
“ஏய் மிஸ்டர்… சாப்பாட்ட வேஸ்ட் பண்ண கூடாதுனு உன் அம்மா உனக்கு சொல்லி தரலையா?” என்ற கேள்வியில் ராம் கை கழுவாமல் தண்ணீரை ஓரம் வைக்க பங்கஜத்தின் மூக்கு சிவந்தது.
“என் வீட்லையே வந்து நாட்டாமை பண்ண இவ யாரு?” என்றே “ஏய் யாருடி நீ? என் பையனையே மிரட்டிக்கிட்டு இருக்க… ஆளும் டிரஸ்சையும் பாரு…” என்றார்.
“என் டிரஸ்க்கு என்ன ஓல்ட் லேடி? அந்த ரூம் கப்போர்ட்ல இந்த டிரஸ் தான் இருந்துச்சி… ஆமாம் யாரு உங்க பையன்? ஓஓ… தட்டுலையே கை கழுவ போனவனா?” என்ற கேள்வியில் அங்கிருந்த அனைவருமே எழுந்துவிட்டனர்.
பங்கஜம் சினமாக “ஏய் அவன் வயசு என்ன உன் வயசென்ன? இன்னொரு தடவை மரியாதை இல்லாம அவன் இவன்னு சொன்ன வாய உடைச்சிடுவேன்…” என்று அவளை நோக்கி சென்றார்.
வருவாள் ரதி…
