அத்தியாயம் 5

அத்தியாயம் 5
 

தங்களை நோக்கி நடந்து வரும் மனிதர்களை இவர்கள் தானா? என்ற ஆவலுடன் பார்த்திருந்தது பானுவின் குடும்பம்.
 

பானு அனுமதிக்கப்பட்டிருந்த அறை முன் வந்து நின்ற வர்மா, “இங்க தானே தீபக்?” என கேட்டான்.
 

“யெஸ் சர்!” என்றான் அவன்.
 

“வேர் இஸ் தி டாக்டர்? முதல்ல அவங்க கன்டிஷன் எனக்கு ரிப்போர்ட் பண்ண சொல்லு!” என்றவன் அந்த கதவில் வட்டமாய் இருந்த கண்ணாடி வழி அவளை ஒரு கணம் பார்த்தான்.
 

தளர்ந்து போய் மயக்கத்தில் இருந்த பானுவை அவன் பார்த்த அந்த பார்வையில், துளி ஈரம் இருந்ததா? என தீபக்கிற்கே தெரியவில்லை.
 

இவரை ஆராய்வது வீண் என அவன் மருத்துவரை அழைத்து வர சென்றிட. அவரே வர்மா வந்துவிட்டது அறிந்து அங்கு தான் வந்து கொண்டிருந்தார்.
 

விசாலம் வயதில் பெரியவராய் வர்மாவை தொடர்ந்து வந்து சேர்ந்த ராஜேந்திரன் முன் வந்து நின்றவர், “ஐயா நீங்க தான் என் பொண்ணு முதலாளிங்களா? என் பொண்ணோட நிலைமைய பார்த்தீங்களா? உங்க கடையில் ஓடா உழைச்சு தேய்ஞ்சு இன்னிக்கு அவளுக்கு இந்த நிலைமயா?” என ஆதங்கமாக கேட்டு நின்றார்.
 

“ஏன்மா சம்பளம் வாங்கிட்டு தானே உன் பொண்ணு எங்க கடைல வேலை பார்த்தா. என்னமோ ஓசில நிப்பாட்டின போல பேசுறீங்க? ஆமா எதுக்கு ரோட்டுல உட்கார்ந்து போராட்டம் பண்ணி எங்க பெயரை கெடுத்தீங்க? பெருசா வசூல் பண்ண தானே!” என வார்த்தைகளை கொட்டினார் சபாபதி.
 

“ஐயா அப்படி உங்க பெயரை கெடுக்கும் நோக்கம் எல்லாம் இல்லை. அந்த மேனேஜர் எங்களை அடிச்சு துரத்தாத குறையா நடத்தினாருங்க. அதான் ரோட்டில அவளை வச்சுட்டு உட்கார வேண்டியதா போச்சு…” என்றார் விசாலம்.
 

“நாங்க அப்படி உட்காராட்டி நீங்க இப்போ எங்க பொண்ணுக்கு மருத்துவம் பார்த்து இருப்பீங்களா? எங்க நிலைமை என்ன ஆகுறது!” என்றான் கணேசன்.
 

அவனை ஒற்றை பார்வை பார்த்த வர்மா, “சைலன்ஸ்!” என கத்தினான்.
 

மருத்துவர் அவனுக்கும், அவன் குடும்பத்தினருக்கும் வணக்கம் வைத்து நிற்க.
 

“அவங்களை பார்க்கலாமா? ஹவ் இஸ் ஷீ?” கேட்டுக் கொண்டே பானு இருந்த அறைக்குள் நுழைந்தவனிடம், அடுத்தடுத்து மருத்துவர் விவரித்த எதுவும் நல்ல செய்தியாக இல்லை.
 

“வர்மா சர் அவங்க நிலைமை கிரிட்டிகல் தான். அவங்க கால்கள்ல இருக்குற ரத்த நாளங்கள்ல ரத்தம் உறைஞ்சு போயிருக்கு. சர்ஜரி பண்ணி அந்த நரம்புகளைச் சரி பண்ணனும்.

ஆனால் ஆஃப்டர் சர்ஜரி இனிமே அவங்களால சாதாரண மனிதர்களை போல நிக்க முடியாது. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம்.

அதுக்கூட குத்து மதிப்பாக தான் சொல்ல முடியும். அதுவும் தொடர்ச்சியாக இல்லை‌. அந்த லிமிட் மீறி அவங்க தொடர்ச்சியா நின்னா மீண்டும் கால் நரம்புகள் வெடிக்கலாம்!” என்றார்.

“அப்படி ஆனால்?” உணர்ச்சி துடைத்த குரலில் மயக்கத்தில் இருந்த பானுமதி முகத்தை பார்த்தபடி வர்மா கேட்டிருக்க.

“அப்படி ஆனால் இவங்க நிரந்தரா கால்கள் ஊனமாகும் அபாயம் இருக்கு! என்றார் மருத்துவர்.
 

அவர் பேச பேச வர்மாவின் கண்கள் பானுவின் கால்களில் பதிந்து இருந்தது இப்போது அவள் முகத்தில் வந்து நின்றது.
 

அவளை தன் கிளையகம் ஒன்றில் என்றோ எப்போதோ பார்த்த நினைவு‌. சரியாக நினைவில் இல்லை. ஆனால் அவளை பார்த்த போது அவள் இப்படி இருந்திருக்கவும் இல்லை.
 

வாழ்வில் எத்தனை கஷ்டம் இருந்தாலும் சூரியகாந்தி பூப்போல மலர்ந்த மஞ்சள் முகமாக இருத்தவள் அல்லவா பானுமதி. ஆதலால் இன்று அழுது ஓய்ந்து, வலியில் சுருங்கிய வதனமாய் படுத்திருப்பவளை அடையாளம் காண முடியவில்லை போல அவனால்.
 

அவள் முகத்தை ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தான். மருந்து மாத்திரை வீரியத்தில் உறங்கிக் கொண்டிருந்தவள் முகம் எல்லாம் வீங்கிப்போய் இருந்தது. கன்னத்தில் இன்னும் ஈரம் காய்ந்த கண்ணீர் கோடுகள் தெரிந்தது.
 

“அ…ம்மா…” வலியில் அவள் வரண்ட உதடுகள் முனகியது.

முனகிய அவள் உதடுகளை ஒரு கணம்

உற்று பார்த்து விட்டு, விழிகளை மூடி நின்றான்.

ஏதோ சிந்திக்கிறார் போல என அவனை பார்த்திருந்த தீபக் நினைத்துக் கொண்டான்.
 

சபாபதி பானுமதி அனுமதிக்கப் பட்டிருந்த உள்ளே வந்திருக்கவே இல்லை. அது தனக்கு தேவையில்லை என்ற தோரணையில் வெளியேவே நின்றிருந்தார் அவர்.
 

ஆனால் பானுமதி நிலலயை கேட்ட ராஜேந்திரனுக்கு தான் மனம் தாளவில்லை.
 

எந்த பிரச்சனயாக இருந்தாலும் மருத்துவம் பார்த்து இந்த பெண்ணை தேற்றி, அவள் குடும்பத்திடம் ஒப்படைத்திடலாம் என அல்லவா நினைத்திருந்தார்.
 

“என்ன டாக்டர் சொல்றீங்க? இதைவிட வேற பெட்டர் ஆப்ஷன் இல்லையா? எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை. இந்த துறைல உள்ள ஸ்பேஷலிஸ்ட்டை இங்க வர வச்சு வேணாலும் மருத்துவம் பார்க்க நாங்க பணம் தர்றோம்…”என்றார்.
 

அவர் மனைவியும் மறையும் முன் சில காலம் வீல் சேரில் இருந்திருக்கிறாரே. வயதானவருக்கு பார்த்துக்கொள்ள வசதியும், ஆட்களும் இருந்துமே எத்தனை கஷ்டம். இவளோ இளம் பெண்ணாக இருக்கிறாளே.
 

அவருக்கும் மகள் உள்ளாள். திருமணமாகி குழந்தை பேறில்லாது உள்ளாள். அப்படி இருக்கையில் பானுமதியின் எதிர்காலம் அவருக்குள் ஒரு வித அழுத்தத்தை தந்தது.
 

தான் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்ட பின் வர்மாவும், சபாபதியோடு இருந்தான். அதுவரை அனைத்தும் சரியாக தான் போயிருக்கிறது. ஆனால் வர்மா வெளியேறிய பின்? என நினைத்தவர் சிந்தையில் இருந்து தெளிந்தார்.
 

“டாக்டர் இந்த பொண்ணுக்கு இனி தான் கல்யாணம் பண்ணனும் போல. அவளோட இந்த நிலைமை அவ எதிர்காலத்துக்கு எப்படி சரி வரும்? வேறு எதாவது வழி இருந்தால் முயற்சி செய்து பாருங்களேன்…” அவளுக்காக யோசித்து கேட்டிருந்தார் ராஜேந்திரன்.

தந்தை முகத்தையே பார்த்து நின்றிருந்தான் வர்மா.
 

“சாரி சர். பட் இந்த சர்ஜரி மட்டும் தான் லாஸ்ட் சாய்ஸ். அதன் பிறகான அவங்க வாழ்க்கை இப்படி தான் இருக்கும்!” என்று முடிவாக சொல்லி விட்டார் மருத்துவர்.
 

அடுத்த ஐந்து நிமிடத்தில் அவளுக்கு உடனே நன்முறையில் சர்ஜரி செய்யுமாறும், அதற்கான முழு செலவு தங்களுடையது என்றும் பேசி முடித்து தன் தந்தையோடு வெளியே வந்தான் வர்மா.
 

அவர்களை தொடர்ந்து வந்த மருத்துவரை பானுவின் குடும்பம் சூழ்ந்து நிற்க.
 

அவரோ வர்மாவை பார்த்தார்.
 

அவன் சொல்லி விடுமாறு அவருக்கு தலையை அசைக்கவும், அவர் சொல்லியது கேட்டு விசாலம் அதிர்த்து போய் மயங்கிடே விட்டார்.
 

பின்ன வயது பெண்ணை நாளின் ஒன்றிரண்டு மணி நேரம் தவிர்த்து வீல் சேரில் வைத்து தான் இனி பார்க்க வேண்டும் என்றால் அவள் எதிர்காலம்?
 

விசாலம் முகத்தில் உடனே தண்ணீரை தெளித்து எழுப்பும் வரை தந்தை, மகன் இருவரும் அங்கு தான் இருந்தனர். மகள் நிலையை கேட்ட அதிர்ச்சியில் வந்த சாதாரண மயக்கம் தான். பானுவின் சகோதரிகளும் கூட அதிர்ச்சி முகமாக தான் இருந்தனர்.
 

ஏதோ உடல் நல பிரச்சனை. இத்தனை பெரிய மருத்துவமனையில் வைத்து மருத்துவம் பார்க்கிறார்கள். சரியாகி விடுவாள் என்று தானே நினைத்திருந்தனர்.
 

இது அனைவர் தலையிலும் விழுந்த இடி அல்லவா? அதுவும் குடும்பத்தை எடுத்து நடத்தி வந்தவளே வீழ்ந்து விட்டால் என்னாவது!
 

“பானு வாழ்க்கையே போச்சே…” என விசாலம் கத்தி அழ.
 

“அம்மா… அம்மா..‌. அதெல்லாம் முடிந்தளவு உங்க பொண்ணை காப்பாத்தி நல்லபடியா ஒப்படைச்சிடுவோம். அதுக்கான பொறுப்பை இவங்களே ஏத்துக்கிட்டாங்க‌. நீங்க இப்போ ஆப்ரேஷனுக்கு சம்மதிச்சு கையெழுத்து போட்டால் மட்டும் போதும்!” என்றார் மருத்துவர்.
 

கையெழுத்து என்றதும் ஏதோ பெரிய வார்த்தையை கேட்டதை போல அவர்கள் அனைவரும் கத்தி வாதம் செய்ய ஆரம்பிக்க.
 

“தீபக்… கிளியர் தெம் ஆர் மேக் தெம் ஷட் அப்!” என உருமினான் வர்மா.
 

தீபக் அவர்கள் முன் வந்தவன், “இதோ பாருங்க நீங்க இப்படியே சண்டை போட்டு வாதம் செய்தா, உங்க பொண்ணு சர்ஜரி தான் டிலே ஆகும். அது இன்னும் ஆபத்துல கூட போய் முடியலாம். நீங்க ஆப்ரேஷன் செய்யாம இங்கிருந்து வெளிய அழைச்சுட்டு போனாலும் லட்ச கணக்கில் செலவாகும்!” என்றதில் ஒவ்வொருவராக கப் சிப் என்றாகினர்.
 

இப்போது தான் பேச துவங்கினான் வர்மா.

“இங்க அவங்களுக்கு…” என ஆரம்பித்தவனுக்கு அவள் பெயர் சட்டென நினைவு வரவில்லை.

“ப்ச்… தீபக் அவங்க பெயர் என்ன?” வர்மா கேளவும், “பானுமதி சர்…” என்றான் அவன்.
 

“இங்க பானுமதிக்கு தேவையான எல்லா கேரும் கிடைக்கும். ஆப்ரேஷன் முடிஞ்சு டிஸ்சார்ஜ் ஆகும் வரை எல்லாம் எங்க செலவு. தென் மத்தது எல்லாம் ஆப்ரேஷன் முடிஞ்சதும் பேசிக்கலாம்!” என்றவன் அங்கிருந்து கிளம்ப போனான்.
 

“ஆப்ரேஷன் பண்ணி தந்திடுவீங்க. ஆனால் இனி எங்க பொண்ணு வாழ்க்கை?” என எகிறினான் கணேசன்.
 

“அமைதியா இருங்க. சர் பேசிக்கலாம்னா பார்த்துப்பார்னு அர்த்தம்!” என்றான் தீபக்.
 

“தம்பி எல்லாம் ஆப்ரேஷன் நல்ல படியா முடியவும் பேசிக்கலாம். நீங்க எங்களை நம்பலாம்!” என்ற ராஜேந்திரன் கணத்த முகத்தோடு அங்கிருந்து புறப்பட.
 

“ரொம்ப பெரிய இடமா இருக்காங்க‌. கொஞ்சம் விட்டே பிடிங்க! அதான் இப்போ பானு அண்ணி ஆப்ரேஷன் வரை பொறுப்பு எடுத்துக்கிட்டாங்களே…” என்றான் பிருந்தா கணவன் மகேஷ்.
 

அவன் சொல்வதும் சரி தான் என கணேசன் அமைதியாகி விட.
 

விசாலத்திற்கு தண்ணீர் தெளித்து எழுந்து கொண்டார்.
 

அவரிடம் ஆறுதலாய் தாங்கள் இருப்பதாக கூறி விட்டு நகர்ந்தார் ராஜேந்திரன். தந்தையோடு மருத்துவமனையை விட்டு வெளியேறினான் வர்மா. 
 

சபாபதி பாட்டிற்கு தன் காரில் புறப்பட்டு விட. அவர் போவதை இறுகிய முகமாக பார்த்து நின்ற வர்மா முன் செய்தியாளர்களின் கேள்விகளும், மைக்கும்.
 

“ஓவர் டைம் பார்த்தே ஆகணும்னு நாங்க ஒன்னும் ரூல் போடலையே. எல்லாம் அவங்க அவங்க ஆதாயத்துக்கு வந்துட்டு, இப்போ எங்க மேல பழி சொன்னா எப்படி? பட் ஸ்டில் வீ வில் ஹெல்ப் ஹெர்!” என்றான்.
 

“அதுக்கான சூழலை உருவாக்கி தந்து உழைப்பாளியை பயன்படுத்திக்கிட்டு, பணம் உள்ள நீங்க இன்னிக்கு ஈஸியா சொல்லிட்டீங்க சார். ஆனால் அந்த பொண்ணு லைஃப் இனி?” என்ற கேள்வியை எழுப்பினார் ஒருவர்.
 

அதற்கு அவன்‌ பதில் கூற முன் ராஜேந்திரன், “உங்க கேள்வி சரி தான். இனி பானுமதி எங்க வீட்டு பொண்ணு மாதிரி. அவளோட இந்த நிலைக்கு எங்க நிர்வாகம் முழு பொறுப்பேற்கும். அவளோட மொத்த மருத்துவ செலவையும் நாங்களே ஏத்துக்குறோம். அதுமட்டும் இல்லை அவ குணமாகி வந்ததும் எங்க கடையில அவளுக்கு உட்கார்ந்து வேலை பார்க்குற அளவுக்கு ஒரு பொறுப்பை நாங்களே தருவோம். அவளுக்கு கல்யாணமும் நாங்களே செய்து வைப்போம்!” என்றார்.
 

அவர் தந்த வாக்கு எதனை மனதில் வைத்தோ அவரே அறிவார். ஆனால் வருங்காலத்தில் நடந்தது என்னவோ வர்மாவின் வாழ்வோடு பானுமதி இணைவதாக அல்லவா இருந்தது!

தொடரும்…
 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page