வாய உடைச்சிடுவேன் என்று பங்கஜம் சொன்னதும் “யார் வாய யார் உடைக்கிறது? இதோ பாருங்க ஓல்ட் லேடி தேவையில்லாதத பேசி காலையிலையே என்னைய டென்சன் பண்ணாதிங்க… நான் ஒரு நேரம் பார்த்த மாதிரி ஒரு நேரம் இருக்க மாட்டேன்…” என்றவள் ராமை பார்க்க அவர் பாட்டுக்கும் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்.
தான் சொன்னதும் கை கழுவாமல் சாப்பிடும் ராமை பார்த்தே அவரிடம் வந்து “ஆமாம் யார் நீங்க? என்னைய எதுக்கு உங்க கார்ல பூட்டி வச்சீங்க? இப்ப இங்க உங்க வீட்டுக்கு எதுக்கு என்னைய கூட்டிக்கிட்டு வந்தீங்க?” என்று கேட்டாள்.
அவரோ எதுவோ பேசாமல் அவளின் முன் ஒரு தட்டினை வைத்து கமலத்தை பார்க்க உடனே கமலம் இட்லி, இட்லி சாம்பார் வைத்தாள்… ரதி தட்டில் கை வைக்கவில்லை.
சாப்பிட்டு முடித்த ராம் அவர் தட்டில் கை கழுவி ஓரம் தள்ளிவிட்டு ரதியின் தட்டை அவரின் அருகே இழுத்து அவரே இட்லியை பிட்டு சாம்பாரில் நனைத்து ரதியின் வாயின் அருகே கொண்டு சென்றார்.
ரதிக்கு இரவு அவளுக்கு யாரோ ஊட்டிவிட்டது நினைவு வர அது ராம் தான் என்று தோன்ற வாயை திறந்தாள்.
நடப்பதை கண்ட அங்கிருந்த அத்தனை பேருக்கும் பத்திக்கொண்டு வந்தது… ராமின் தங்கை சரிகாவுக்கோ ரதியின் மீது பொறாமை பொத்துக்கொண்டு வர “அண்ணா… யாரு இவ? இவளுக்கு நீங்க ஏன் ஊட்டிவிடுறீங்க?” என்று கத்தாத குறையாக கேட்க
ரதிக்கு ஊட்டுவதை நிறுத்தாமல் தங்கையின் முகத்தை பார்க்காமல் “இவங்க பேர் ரதி தேவி… இனி இவங்க இங்க இந்த வீட்டுல தான் இருப்பாங்க…” என்று கூறும் போதே
“உங்களுக்கு கொஞ்சமாவது இங்கிதம் இருக்கா மாமா… குடும்பம் நடத்துற வீட்டுல இப்புடி அரைகுறையா டிரஸ் போடுற கண்டவள கூட்டிக்கிட்டு வந்து தங்க வச்சா என்ன அர்த்தம்?” என்ற தம்பியின் மனைவி காயத்ரி கத்த
எழுந்த வேகத்தில் தம்பியின் கன்னத்தை சாப்பாடு ஊட்டிவிட்ட கையால் அறைந்திருந்தார் ராம்.
பேசிய காயத்ரியின் வாய் அப்படியே மூடிக்கொள்ள “இனி இந்த வீடு ரதி தேவியோட வீடு… அவங்க இங்க தான் இருப்பாங்க… யாருக்காவது இதுல விருப்பம் இல்லனாலோ மாற்று கருத்து இருந்தாலோ தாராளமா வீட்ட விட்டு போகலாம்…” என்றவர் மீண்டும் கையை கழுவிய படியே
“சந்திரன் அப்பறம் உனக்கு கல்யாணம் பண்ணி குடுக்க வேண்டியத குடுத்து பத்து வருஷத்துக்கு முன்னாடியே கை கழுவி விட்டுட்டேன்…” என்றவர் அமர்ந்து வாயை பிளந்துக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த ரதிக்கு ஊட்டிவிட்டே
“நீயே உனக்கு கொடுத்த வீடு உனக்கு கொடுத்த பணம் எல்லாத்தையும் இரண்டே வருஷத்துல அழிச்சிட்டு இங்க வந்து ஒட்டிக்கிட்டு இருக்க… உன் பொண்டாட்டி உன்னோட ஒட்டிக்கிட்டு வந்து இருக்காங்க… நீ அவங்க எல்லாம் என் முன்னாடி பேசவே கூடாது… அப்படி இருக்கும்போது என் முடிவுக்கு எதிரா பேச நினைச்சாலே வாசல் கதவு உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் திறந்து தான் இருக்கு…” என்றார்.
யாரோ ஒருவள் முன் தனக்கு அவமானம் நேர்ந்ததாக சந்திரன் நினைத்தான்… சந்திரனின் மனைவி காயத்ரி அப்போதும் அமைதியாக இல்லாமல் “நீங்க ரொம்ப பேசுறீங்க மாமா… சரிகா அண்ணிக்கும் எங்களுக்கும் பெண்குழந்தைங்க இருக்கு… இவள பார்த்து அவங்க கெட்டு போனா…” என்று சொல்லும் போதே ராமின் பார்வை சரிகாவின் பக்கம் செல்ல
“எனக்கு அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல அண்ணா…” என்று பின் வாங்க சரிகாவின் கணவர் அவர் பிள்ளைகளுடன் தயாராகி அங்கு வந்தார்… பிள்ளைகளை பார்த்த ராம் அழைக்க பள்ளி சீருடையில் ஓடி வந்து ராமின் முன் நின்றார்கள்.
நின்றவர்களிடம் “சாப்பிட்டீங்களா?” என்று கேட்க அவர்களும் தலையாட்ட
“இவங்க பேர் ரதி தேவி… இனி நம்ப வீட்டுல தான் இருக்க போறாங்க… ஈவினிங்க நீங்க ஹோம் ஒர்க் பண்ண ஹெல்ப் பண்ணுவாங்க… பண்ணுவ தானே ரதி…” என்றவனை ரதி முறைக்க தான் செய்தாள்.
அவளின் முறைப்பை பார்த்தே “நீங்க என்ன மாப்பிள்ளை சொல்றீங்க? இவங்க இங்க இருக்குறதுல உங்களுக்கு ஏதாவது பிரட்ச்சனை இருக்கா?” என்று கேட்க
“இதுல நான் சொல்ல என்ன இருக்கு மாமா? இது உங்க வீடு… நீங்க யார நினைக்கிறீங்களோ அவங்கள இங்க தாராளமா தங்க வைக்கலாம்… வெல்கம் ஹோம் சிஸ்டர்… நானே பக்கத்துல என் ஆபிஸ் பிள்ளைங்க ஸ்கூல் இருக்குறதால தான் இங்க வந்து குடும்பத்தோட தங்கியிருக்கோம்… அதனால எனக்கு எந்த பிரட்ச்சனையும் இல்ல…” என்றவர்
“பிள்ளைங்க ஸ்கூலுக்கும் என் ஆபிஸ்க்கும் நேரம் ஆச்சி மாமா… இப்ப கிளம்புனா தான் சரியா இருக்கும்… சரிகா லன்ச் ரெடி பண்ணிட்டியா இல்லையா?” என்ற கேள்வியுடனே
பத்தாவதில் கால் வைக்கும் பெரிய பெண்ணுடனும் ஆறாவதில் கால் வைத்திருக்கும் மகனையும் அழைத்துக்கொண்டு கிளம்பினார்.
சரிகா பிள்ளைகளுக்கும் கணவருக்கும் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு வெளியே ஓடிவர பிள்ளைகளின் பையை எல்லாம் வாங்கி முன் வைத்துக்கொண்டே மனைவியிடம்
“இதோ பாருடி… உன் அண்ணன் நமக்கு பண்றது எல்லாம் அதிகம்… கடைசி வரைக்கும் உன் அண்ணன் கை உன் தலைமேல இருக்கணும்னு நினைத்தா உன் அம்மாவோடையும் உன் தம்பி பொண்டாட்டியோடையும் சேராம தள்ளியே இரு… அதான் நமக்கு நல்லது… அதவிட்டுட்டு நீயும் உன் தம்பி பொண்டாட்டி கூட சேர்ந்து ஏதாவது ஆடி உன்னால ஒரு வார்த்தை உன் அண்ணன் என்மனசு கஷ்ட படுற மாதிரி சொன்னா…” என்றவர்
மனைவியின் காதில் மட்டும் கேட்கும்மாறு “வந்தா வாடி வராட்டி போடின்னு அடுத்த நாளே நான் வாடகை வீட்ட பார்த்துக்கிட்டு பிள்ளைங்களோட போயிடுவேன்… இப்பவே சொல்லிட்டேன் பார்த்துக்கோ…” என்று கூறியே பைக்கை ஸ்டார்ட் செய்ய அவரின் பின் மகன் அடுத்து மகள் ஏறிக்கொள்ள தலைகவசத்தை அணிந்துக்கொண்டு சென்றுவிட்டார் பிள்ளைகளுடன்.
சரிகாவுக்கு பெரியதாக கெட்ட எண்ணம் எல்லாம் இல்லை… அண்ணன் தனக்கு முன்னுரிமை எல்லாத்திலும் தரணும் என்ற எண்ணம் தான்… அக்கா பெரியவள் என்பதால் சின்னவளை சிறுவயதில் இருந்து ராம் கொஞ்சுவான்… தந்தைக்கு பின் அண்ணனே அவளுக்கு தந்தையும் ஆகிவிட ராமின் பாசத்தின் மீது ஆசை சரிகாவுக்கு கொஞ்சம் அதிகம்.
அதான் அப்பைக்கு அப்ப வாய் விட்டுடுவா… கணவனின் மீதும் அதிக காதல் உண்டு அவளுக்கு… எங்கிருந்தாலும் எப்படியிருந்தாலும் எவ்வளவு சண்டை கோபத்தில் இருந்தாலும் இரவு கணவனிடம் இவளே சமாதானம் ஆகிவிடுவாள்… அந்த அளவுக்கான காதல் தான் சரிகாவுக்கு.
அதனால் தான் அப்பைக்கு அப்ப கணவன் மனைவியை கண்டித்து வைத்திருக்கார்… சரிகாவும் கணவனின் சொல்லுக்கு தலையசைத்து அவர்களுக்கு கை அசைத்து வழியனுப்பிவிட்டு உள்ளே வந்தாள்.
பிள்ளைகள் அங்கிருந்து சென்றதும் விருட்டென எழுந்த ரதி “ஏய் மிஸ்டர்… நான் ஒன்னும் இங்க தங்கறதா சொல்லவே இல்ல… ஆமாம் நீ யாரு? நான் ஏன் உங்க கூட உன் வீட்டுல தங்கணும்?” என்று கேட்க
“அத நீங்க உங்க வக்கீல் கிட்ட கேட்டுக்கோங்க… அவர் சொன்னால்தான் உங்களுக்கு சரியா இருக்கும்… அப்புறம் இனி நீங்க இங்கதான் இருக்க போறீங்க… நான் தான் உங்களோட கார்டியன்…” என்ற ராமை முறைத்த படியே வக்கீலுக்கு போன் செய்தாள்.
அவரும் “இனி நீங்க ராம்குமார் கூட தான் இருக்கணும்… அவர் தான் உங்களோட கார்டியன்… உங்க டாடி மம்மியோட விருப்பமும் அதுதான்… அதனாலதான் உங்க அத்தை மாமா எல்லாரையுமே வீட்டுவிட்டு அனுப்பிட்டு உங்கள அவர் கூட அனுப்பி வச்சது…” என்றார்.
வக்கீல் கூறிய அனைத்தும் ரதியின் செவியில் விழுந்ததோ இல்லையோ ராம்குமார் என்ற பெயர் மட்டும் தெளிவாக அவளின் செவியில் விழுந்து விட்டது… ராம்குமார் என்றால் என்று ராம்குமாரை பார்த்தாள்… அவளின் முன் நெடுநெடுவென உயரமாக நின்றிருந்தார்.
இவள் ஐந்தே கால் அடி தான்… ஆறடியில் இருந்தவரை நிமிர்ந்து பார்த்ததும் தலைசுற்றுவது போல் ஆக தலையை சிலுப்பிக்கொண்டு குனிந்தே “என்னால உன்னைய வாங்க போங்கனு எல்லாம் மரியாதையா பேச முடியாது…” என்றாள்.
“நான் உங்ககிட்ட எந்த ஒரு மரியாதையும் கேட்கவே இல்லையே… நான் உங்களுக்கு மரியாதை தறேன்… அதுபோதும்…” என்று கூற
இதழில் வந்த புன்னகையை மறைத்தபடியே மீண்டும் நிமிர்ந்து ராமின் முகத்தைப் பார்த்து “என் டாடி சொன்னத விட நீங்க ரொம்ப ஹேண்ட்சம்… ரொம்ப அழகு… கூடவே ரவுடியாவும் தான் இருக்கீங்க…” என்றவளை புன்னகையுடன் பார்த்தே
“சரி உங்களுக்கு ஏதாவது வேணும்னா கமலம் அவங்க கிட்ட சொல்லுங்க… அவங்க உங்களுக்கு எல்லாம் செஞ்சு தருவாங்க… வாங்கி தருவாங்க… எனக்கு வேலை இருக்கு நான் கிளம்புறேன்…” என்று கிளம்பிய ராமின் கையை பிடித்தாள்.
ரதி ராம் கையை பிடித்ததில் பங்கஜத்திற்கு பத்தி கொண்டு வந்தது… “ஏம்மா எதுவா இருந்தாலும் தொட்டுக்கிட்டு பேசாத…” என்று பட்டென கூறினார்.
அம்மாவுக்கு எதிராக எதுவும் பேச முடியவில்லை ராமால்… ராம் அப்படியே நிற்க ரதி ராமுடைய கரத்தை நன்கு இறுக்கமாக பற்றி நெருங்கி இடையோடு அணைத்துக்கொண்டு “அவன தொடக்கூடாது நெருங்க கூடாதுன்னு சொல்ற உரிமை எல்லாம் அவனோட மனைவிக்கு தான் இருக்கு… அவனோட மனைவி எங்க? வந்து சொல்ல சொல்லுங்க…” என்றதும்
“அண்ணாவுக்கு மனைவி எல்லாம் இல்ல… அவருக்கு இன்னும் கல்யாணம் ஆகல…” என்று அப்போதே உள்ளே வந்த தங்கை சரிகா கூற
“ஏன் கல்யாணம் ஆகல? இவனோட தம்பி தங்கச்சிக்கு எல்லாம் கல்யாணம் ஆகியிருக்கு… இவனுக்கு மட்டும் ஏன் கல்யாணம் ஆகல? பண்ணி வச்சிருக்கலாம்ல…” என்று ரதி கேள்ளி கேட்க
இந்த கேள்வியை கேட்க இவள் யார் என்ற எண்ணம் பங்கஜத்திற்கு சந்திரனுக்கு வர “இவரோட வயசுக்கு யாரு இவர கட்டிக்க வருவா? இவருக்கு என்ன வயசு தெரியுமா நாப்பத்தஞ்சி…” என்று காயத்ரி எங்கள அவமானப்படுத்தின தானே… இப்போ உன் வயச சொல்லி உன்னைய அவமானப்படுத்துறேன்… அதோட மட்டும் விட மாட்டேன் என்றே
“இவருக்கு எல்லாம் வயசுலையே கல்யாணம் ஆகியிருந்தா இன்னேரம் உன் வயசுக்கு மேல பொண்ணே இருக்கும்…” என்று ராமை ஒரேயடியாக அவமானப்படுத்தினாள்.
அவள் நினைத்தது நடப்பது போல தான் ராம் அவமான பட்டான்… மனம் குமுறி அங்கிருந்து விருட்டென வெளியேறினார்… காயத்ரிக்கு ஏதோ பதில் சொல்ல தான் ரதி நினைத்தாள்.
ஆனால் ராம் போனதும் அவரின் பின்னாடியே ரதி ஓடினாள்.
வருவாள் ரதி…
