கொடைக்கானலின் அமைதி இப்போது அவர்களுக்கு அந்நியமாகிவிட்டது. அமைச்சரின் ஆட்கள் அங்கேயும் வந்துவிட்டார்கள் என்பதால், அந்த மலைக்கிராமம் இனி பாதுகாப்பானது அல்ல என்பதை ஆர்யன் உணர்ந்தான். இரண்டு நாள் ஓய்வுக்கு பின் ஆர்யன் நல்ல ஆரோக்கியம் அடைந்திருந்தான். கௌதமின் ஆலோசனையின்படி, அவர்கள் சென்னைக்குச் செல்ல முடிவெடுத்தனர்.
“ சென்னையா?”
“ ஆமா ஆர்யா… இங்க எல்லாம் செக் பண்ணிட்டே, ரிஷினு ஒருத்தன் உங்க ரெண்டு பேர் போட்டோவையும் வச்சுக்கிட்டு தெரு, தெருவா சுத்திட்டு இருக்கான். எப்ப வேணாலும் இங்க வரலாம்.
யாழினி அதிர்ச்சியின் எல்லைக்கு சென்றாள்.
“ இங்க இருந்திட்டே எப்படி அமைச்சர, குற்றவாளினி நிரூபிக்க முடியும், யாழினி அண்ணன் சாவுக்கு நீதி எப்படி கேட்க முடியும். சென்னை தான் அதற்கான களம்”.
“ மோதனும்னு முடிவான பின்னாடி, கொடைக்கானலும் சரி, சென்னையும் சரி, எதுனாலும் எனக்கு சம்மதம் தான்.”
யாழினி தனது அந்த மர்மமான பென்-டிரைவையும் எடுத்துக் கொண்டாள்.
கார் கிளம்பும் போது
“அண்ணா நாம போகும் போது, நா இருந்த வீட்டுக்கு போய்ட்டு போலாமா?”.
“ அது கொஞ்சம் ரிஸ்க் யாழினி”
ஆர்யன் கௌதம் தோளைத் தொட்டான்,
“ சரி ஆக்ஷன் ஹீரோ தயாரா இருக்காரு, அப்பறம் என்னக் கவலை”
கார், யாழினி வீடு வந்தடைந்தது. யாழினி தான் ஆசையாக வளர்த்த பூச்செடிகள் அனைத்து பிய்த்து எறியப்பட்டுக் கிடந்தது. பறவைகள் யாழினி இல்லா வீட்டை சுற்றி வனத்தில் வட்டமடித்துக்கொண்டு இருந்தது. வீட்டினுள் பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்தது. யாழினி வெற்றிக்கு முன் கிடைப்பதெல்லாம் முன்னேற்றத்தின் படியே என மனதிற்குள் நினைத்துகொண்டு தான், தனது தந்தை, மற்றும் அண்ணன் இருக்கும் குடும்ப புகைப்படத்தை எடுத்துக்கொண்டாள்.
ஆர்யன் தனது கிதார் பெட்டியை எடுத்துக்கொண்டான். இதுவரை எழுதி வைத்த இசை குறிப்புகளையும், யாழினி பற்றிய தனது சுய நாட்குறிப்பையும் மறக்காமல் எடுத்துக்கொண்டான். இருவரும் தாங்கள் மெய் உணர்ந்து வாழ்ந்த இடத்தை ஒரு முறை சுற்றி வந்தனர். தூரத்தில் கருப்பு ஜர்கின் அணிந்த ஒருவன் இவர்களை கவனித்துக்கொண்டு இருந்தான்.
கிளம்பும் போது யாழினி ஒருமுறை அந்த மலைக் குடிலைத் திரும்பிப் பார்த்தாள். அவள் மௌனமாக வாழ்ந்த அந்த நாட்கள் அவளுக்கு ஒரு புதிய அடையாளத்தைத் தந்திருந்தன. இந்த இடத்தில் தான் அவள் அதற்கு முன் இருந்த கசப்பான அனுபவத்தை செரிமானம் செய்ய ஏதுவாக அமைந்தது. அதுவும் சிறுவயதில் வளர்ந்த இடம் என்பதால் மிகவும் நெருங்கி போயிருந்தாள். அந்த இயற்கையின் ஊடான நெருக்கம் மனதளவில் பலம் இழந்தவளுக்கு நல் ஆற்றல் மூலம், இயற்கை மெல்ல குணப்படுத்தியது. மேலும் தோட்டத்து பூக்கள், வானத்து பறவைகள் எல்லாம் நண்பர்கள் ஆகிப்போனது இன்னும் சிறந்த அனுபவத்தை வழங்கியது. தனக்கு ஏற்பட்ட வலி, மெல்ல மறைந்து, வலியை கொடுத்தவனுக்கே திருப்பி கொடுக்க ஆர்யன் வந்து சேர்ந்தான். அவன் வரும்பொழுதே வலி தாங்கிய வெடித்த இதயம் போலத்தான் தெரிந்தான். நாட்கள் செல்ல, செல்ல அவனுடனான நட்பு, பின்னர் காதல் இன்று எனது நோக்கத்தை அவனின் நோக்கமாக நினைத்து பயணப்படும் பிணைப்பு போன்ற நல்லவற்றை வழங்கிய இந்த கொடை இல்லத்திற்கு மிக்க நன்றி, என்று நன்றியுணர்வோடு அந்த வீட்டை கண்ணீர் மல்க பார்த்துக்கொண்டிருந்தாள். ஆர்யன் அவள் கையைப் பற்றிக்கொண்டு, “பயப்படாதே யாழினி, இனி உன் குரலாக, சிந்தனையாக, செயலாக நான் இருப்பேன்,” என்று சைகையில் சொன்னான்.
கார் கொடைக்கானலை விட்டு மலை இறங்கத் தொடங்கியது.
பனி மேகங்களுக்கு நடுவே மிதமான வேகத்தில் கௌதம் காரை இயக்கிக்கொண்டிருந்தான்.
“அப்பறம் எப்ப கல்யாணம்? ஆர்யன் லவ் பண்ற நியூஸ் கிடைச்சாலே பத்திரிக்கைக்கு செம்ம தீனி, இனி கல்யாண மேட்டர் தெரிஞ்சா அடுத்த ஒரு மாசத்துக்கு வைரல் நீங்க ரெண்டு பேரும் தான்”
ஆர்யன் வண்டியை ஓட்டுடா, என சைகையில் கூற, யாழினுக்கு சிறு வெட்கம் குடிகொண்டது. அதை பார்த்த கௌதம்.
“ புது பொண்ணுக்கு வெட்கம் வந்திருச்சு. கல்யாண ஆல்பத்தை நெட் ப்ளிக்ஸ் (netflix) க்கு வித்திட வேண்டியது தான்.”
மூவரும் ஒரே போல சிரிக்க, திடீரென கருப்பு ஜாக்கெட் அணிந்த ஒருவன் பைக்கில் வேகமாக காரை இடிப்பது போல வர, அவன் மீது மோதக் கூடாதென்பதற்காக காரை வலது பக்கம் திருப்ப, அப்போது இன்னொரு கார் எதிரே வேகமாக வர மீண்டும் காரை இடது பக்கம் திருப்ப கார், கட்டுப்பாட்டை இழந்து அறுபது அடி பள்ளத்தை நோக்கி பாய்ந்தது.
பைக்கில், வந்த கருப்பு ஜர்கின் காரனுக்கு, ரிஷி சில கட்டுகள் பணத்தை கொடுக்க, அவன் ஒரு சலாம் வைத்துவிட்டு அடுத்த குடியை கெடுக்க கிளம்பினான்.
ரிஷி தனது ஆட்களை அழைத்துகொண்டு, முதலில் கார் பள்ளத்திற்குள் விழுந்த தடையத்தை அழித்தான். பின்னர் பள்ளத்தை நோக்கி இறங்கினான்.
பள்ளத்தில் பாய்ந்த கார், நேராக ஒரு நீர் நிறைந்த பகுதியில் மூழ்கி கிடந்தது. யாழினி காரினுள் மூழ்கி மயக்கத்தில் கிடந்தாள். கௌதமும், ஆர்யனும் வெளியேறிய பின்னர் காரின் கதவு நீரின் போக்கில் தன்னால் மூடிக்கொண்டது. யாழினியை வெளிக்கொண்டு வர முயற்சி செய்தனர். ஆனால் நீரின் அழுத்தத்தில் கார் கதவை திறக்க சிரமமாக இருந்தது. ஆர்யன் தண்ணீரில் மூழ்கி ஒரு பாறையை தூக்கிக்கொண்டு கண்ணாடியை உடைக்க முயன்றான். சிரமம் மேலும் கூடியது. கௌதம் வாங்கி அவன் பங்கிற்கு ஒரு போடு போட்டான், சில நிமிடங்களில் கண்ணாடி உடைந்து யாழினி வெளியே மீட்கப்பட்டாள்.
சிறுபாறைகள் அடங்கிய நிலப்பரப்பில், யாழினியை கிடத்தி ஆர்யன் வயிற்றில் கை வைத்து அழுத்தினான். அப்போது ரிஷியும் அவனது ஆட்களும் கொடூர போர்வையோடு வந்து சுற்றி நின்றனர்.
“வேணா ஆர்யன், எப்படியும் போக போற உயிரை, எதுக்கு கொண்டு வர சிரமப்படுற?”
“அவ என் உயிர் டா…”
“ போகபோற உயிர் உன்னோடதும் தான், மொத உன்ன காப்பாத்திகோ,”
“ அதுக்கு நீ என்ன கொல்ல முயற்சி பண்ணு”
என கோர்ட்டை கழட்டி சண்டைக்கு தயாரா இருந்தான்.
“இங்க பாருடா புது ஹீரோ, டே மொத இவன் கதையை முடிங்கடா”
என ரிஷி ஆணையிட, அடியாட்கள் கௌதம் மீது பாய்ந்தனர். ஆறு பேர் மொத்தமாக கௌதமை போட்டு அமுக்கினர். மேலிருந்து பார்த்தால் கௌதம் இருப்பதே தெரியாமல் பரவி கிடந்தனர். திடீரென துப்பாக்கி சுடும் சத்தம், டமார், டமார், டமார், டமார், டமார், டமார், ஆறு ரவுண்ட் மேலே கிடந்த ஆறு பேரும், திசைக்கு ஒரு பக்கமாக சிதறி கிடந்தனர்.
ரிஷி ஒரு நிமிடம் உறைந்து போனான். யாழினியும் மயக்கத்தில் இருந்து எழுந்து இருந்தாள்.
“ ஆள் இருக்குற தைரியத்தில, அதிகமாக பேசிட்ட, இனி உன் உயிரை எப்படி காப்பாத்த போற?” என்ற ஆர்யனை பார்த்த ரிஷி!
“ நான் என்னிக்கு கத்திய எடுத்தேனோ, அன்னிக்கே செத்துட்டே, என்ன புதுசா கொள்ள எவனாலும் முடியாது. வாடா! ”
என ஆக்ரோசமாக மோத வர, கௌதம் ரிஷியின் நெற்றியில் துப்பாக்கிக் குண்டால் கச்சிதமா போட்டு வைத்தான்.
“இவன் கூடலாம் மோதி டைம் வேஸ்ட் பண்ணக்கூடாது. இவன் சும்மா அடியில வேலை செய்றது. இவனுக்கு வேலை கொடுத்தவன, பாக்க சென்னைக்கு போலாமா?”
சென்னை… ஒலிகளின் நகரம். ஆர்யன் ஒரு காலத்தில் இந்தச் சத்தங்களை நேசித்தான். ஆனால் இப்போது அந்த நகரத்தின் இரைச்சல் அவனுக்கு வெறும் அதிர்வுகளாக மட்டுமே இருந்தன.கௌதமுக்குச் சொந்தமான ஒரு ரகசிய பண்ணை வீட்டில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.
அங்கே வந்த பிறகுதான் யாழினி அந்த ரகசியத்தை உடைக்க முன்வந்தாள். அவள் ஒரு போர்டில் விரிவாக எழுதத் தொடங்கினாள். ஆர்யனும், கௌதமும் அதனை கூர்மையாக பார்த்துக்கொண்டிருந்தனர்.
“ஆர்யன், அந்தப் பென்-டிரைவில் இருப்பது ஒரு சாதாரண ஊழல் அல்ல. ஒரு பெரிய மருத்துவக் கும்பல், “மெடிக்கல் மாஃபியா”
ஏழை மக்களுக்கு இலவச மருத்துவம்னு சொல்லி,
ஏழை மக்களுக்குத் தெரியாமலேயே அவர்கள் மீது புதிய மருந்துகளைப் பரிசோதனை செய்து, அதில் ஏற்படும் மாற்றங்களை, உடல் முன்னேற்றங்களை பதிவு செய்வது. ஒரு வேளை நோயாளி இறக்க நேர்ந்தால், அவர்களின் நல்ல இயக்கத்தில் இருக்கும் உடல் உறுப்புகளை திருடுவது. அவர்களின் குடும்பத்தை வாயடைக்க கணிசமான பணத்தை கொடுப்பது. மேலும் பல ஏழைகளை அறிமுகம் செய்தால் கமிஷன் என மாவட்ட வாரியாக பல லட்சம் கோடிக்கு வியாபாரம் நடந்திருக்கு. ஏழை மக்கள் பலரின் மரணங்களுக்குக் காரணமாக இருந்திருக்கிறார்கள். ஸ்டாஃப் நர்சாக, இருந்த என் அண்ணன் பிரகாஷ் அதை கண்டுபிடித்தான். இது தவறு என்று முக்கிய மருத்துவர்களிடம் வாக்குவாதம் செய்தான். இவனை விட்டால் பெரிய பிரச்சனை வரும் என்று மருத்துவ கூடத்தில் தீ விபத்து என்ற கட்டுக்கதையில் அவன் கொல்லப்பட்டான். நான் பார்த்த அந்த முகங்கள் சாதாரணமானவை அல்ல, அவை அதிகாரத்தின் உச்சியில் இருப்பவர்களுடையது.”
ஆர்யன் அதிர்ந்து போனான். தான் ஒரு கலைஞனாகப் புகழின் உச்சியில் இருந்தபோது, இதே சமூகத்தில் இவ்வளவு பெரிய அநீதி நடந்திருக்கிறதா?
மச்சா, இந்த கேஸ் பத்தி நானும் கேள்விப்பட்டேன், ஆரம்பத்துல பெரிய அமைச்சர்கள் வரை தொடர்பு இருந்துச்சுனு சொன்னாங்க, அப்பறம் அப்படியே அமுங்கி போயிடுச்சி, இப்ப தான் தெரியுது முழு விபரம்”
“ அண்ணே பிரகாஷ் எல்லா ஆவணத்தை ஒரு காப்பி எடுத்து எனக்கு அனுப்பிட்டான். இதுல இருக்குற டாக்டர்ஸ், அரசியல்வாதிங்க, கமிஷன் ஏஜென்ட்னு எல்லோருக்கும் மக்கள் முன்னாடி தண்டனை கிடைக்கணும்,எல்லோருடைய விவரமும் இந்த பென்- டிரைவுல இருக்கு, இதை எடுக்கத்தான் ஆளு, மேல ஆளு வந்துட்டு இருந்தாங்க”
ஆர்யனுக்கு முழு விபரமும் புரிந்தது. கௌதமும் அதற்கு துணை நின்றான். மிகப்பெரிய ஆளுமையை எதிர்க்க போகிறோம். அதற்கான திட்டமும் மிகப்பலமாக இருக்கவேண்டும். என இருவரும் பேசிக்கொண்டனர்.
யாழினுக்கு இப்போது தான் முழு திருப்தி, அமைதி கிடைத்தது. நம் வாழ்வு நமக்கு நன்மை செய்கிறோமோ இல்லையோ, கண் கா காஎன்ற கொள்கை கொண்டவளுக்கு பக்க பலமாக ஆர்யன், மற்றும் கௌதம் இருப்பது, நிம்மதியான சந்தோஷத்தை கொடுத்தது.
கௌதம், கொடைக்கானலில் பரலோகம் அனுப்பியவர்களை கார் விபத்தில் இறந்தது போல மாற்றி அமைக்க ஏற்பாடு செய்தான். அதற்கான ஆட்களும் சுறுசுறுப்பாக வேலையை செய்து முடித்தனர். ரிஷி போட்ட திட்டம் அவனுக்கே பாதகமா வந்து சேர்ந்தது தான் இயற்கையின் நியதி, பண்ணை வீட்டு வராண்டாவில் வேலை செய்தவர்களுடன் பேசிக்கொண்டு அவர்களுக்கு தேவையான பணத்தையும் அனுப்பினான்.
யாழினுக்கு ஒருபக்கம் சந்தோசம் இருப்பினும், தான் எதற்கு இறந்தோம் என தெரியாமலே மடிந்த மனித உயிர்களை எண்ணி கலக்கம் கொண்டாள்.
அன்று இரவு, யாழினி ஆர்யனின் மடியில் அமர்ந்து அழுதாள். அவளது மௌன அழுகை இப்போது ஒரு பாரமாக இருந்தது. ஆர்யன் அவளது கூந்தலை வருடினான். அவளது கண்ணீர் அவனது சட்டையை நனைத்தது. அவன் அவளது முகத்தை நிமிர்த்தி, அவளது கண்களை ஆழமாகப் பார்த்தான்.
அந்த பண்ணை வீட்டின் நிலவொளியில், அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் உணர்ந்தனர். ஆர்யன் மெல்ல அவளது இதழ்களைத் தொட்டான். அது ஒரு முத்தமல்ல, அவளது காயங்களுக்கு அவன் தரும் மருந்து. யாழினி அவனை இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள். அந்த மௌனமான இரவில், காதலின் அதிர்வுகள் மட்டுமே அந்த அறையில் நிறைந்திருந்தன.
மறுநாள் காலை, ஆர்யன் ஒரு முடிவுக்கு வந்தான். “யாழினி, நீ ஒரு பத்திரிகையாளர். உன் அண்ணன் எதை முடிக்க நினைத்தானோ அதை நீ முடிக்கணும். ஆனா இப்போ நீ வெளியே போனா உன்னைக் கொன்னுடுவாங்க. அதனால, நான் உன் குரலா மாறப்போறேன்,” என்றான்.
“எப்படி?” என்று யாழினி சைகையில் கேட்டாள்.
“நான் ஒரு மியூசிக் கன்சர்ட் (Music Concert) ஏற்பாடு பண்ணப் போறேன். என் மேல இருக்கிற வெளிச்சம், உன்னை மறைக்கும். அந்த மேடையில இருந்து நாம உண்மையைச் சொல்லுவோம்,” என்றான் ஆர்யன்.
ஆனால், கௌதம் குறுக்கிட்டான். “ஆர்யன், உனக்குத்தான் காது கேட்காதே… நீ எப்படி மேடையில பாடப் போற? தாளம் தப்பினால் ரசிகர்கள் உன்னைக் கேலி பண்ணுவாங்க,” என்றான் கௌதம் கவலையுடன்.
ஆர்யன் யாழினியைப் பார்த்தான். “எனக்குத் தாளம் தப்பாது கௌதம். ஏன்னா என் தாளம் இப்போ யாழினியோட இதயத் துடிப்புல இருக்கு. அவ முன்னாடி நின்னு சைகை காட்டுவா… அவளோட அசைவுகளுக்கு ஏத்த மாதிரி நான் பாடுவேன்,” என்றான் உறுதியாக.
இது ஒரு மிகப்பெரிய ரிஸ்க். ஒரு காது கேட்காத பாடகனும், பேச முடியாத ஒரு பெண்ணும் இணைந்து ஒரு மாபெரும் அதிகாரத்தை எதிர்க்கத் திட்டமிட்டனர்.
அதே சமயம், அமைச்சரின் அலுவலகத்தில் ஒரு கூட்டம் நடந்தது. “அந்தப் பொண்ணு சென்னைக்கு வந்துட்டான்னு தகவல் கிடைச்சிருக்கு. ஆர்யனுக்கு தெரிஞ்ச ஒரு பண்ணை வீட்டுல தான் இருக்கா. ஒரே அடியில ரெண்டு பேரையும் முடிச்சிடுங்க,” என்று அமைச்சர் உத்தரவிட்டார்.
சென்னை நகரத்தின் நிழல்களில் ஆபத்து பதுங்கியிருந்தது. ஆனால் ஆர்யன் மற்றும் யாழினியின் காதல், அந்த ஆபத்தை விட வலிமையாக வளர்ந்து கொண்டிருந்தது.
