மன்னன் தந்த மாலை
அத்தியாயம் 7
அந்தக் கலெக்டர் அலுவலகத்தின் முன்பு அரசாங்க வண்டி அதன் ஹார்ன் சத்தத்துடன் வந்து நின்றது. அதிலிருந்து கம்பீரமாய் இறங்கினான் ஆறடி ஆண்மகன். அவனின் பின்னே அவனின் உதவியாளர் மற்றும் அவனுக்குக் கீழே உள்ளவர்கள் என அனைவரும் நிற்கத் தன் விழியை உயர்த்திப் பார்க்க அவனின் முன்னே வந்து நின்ற ஒருவன்,
“வெல்கம் சார்!” என்றபடி தன் கையிலிருந்த பூங்கொத்தைக் கொடுக்க அதைத் தன் கையால் வாங்கியவன் தன் உதவியாளரிடம் கொடுத்து விட்டு மெல்ல தலையசைத்தான்.
“இப்படி எல்லாரும் வந்து வரவேற்கணும்னு எந்த அவசியமும் இல்லை. தேவைப்பட்டா நானே வந்து அறிமுகப்படுத்திக்குறேன். நீங்கப் போய் உங்க வேலையைப் பாருங்க.” என்றபடி தன் கண்களில் கூலிங்கிளாஸை அணிந்தவன் கம்பீரமாய் அந்த அலுவலகத்தின் உள்ளே நுழைந்தான்.
அவன் விவேகன். இளங்கலை படிக்கும் போதிருந்தே மத்திய தேர்வாணைய தேர்வுக்குத் தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தவன் முயற்சிக்கு அத்தனை எளிதாய் கிடைத்து விடவில்லை இந்த அதிகாரமும் அங்கீகாரமும்.
எத்தனை முறை தோற்றானோ அத்தனை முறையும் எழுந்தான் தன் தாயின் கனவுக்காக. படிக்க வந்தபின்பு பெரிதாய் ஊருக்குச் செல்லவில்லை. அவனைத் தேடவும் அங்கே யாருமில்லை. அதனால் அவன் போகவில்லை. ஆனால் அவன் அறிந்தே அவனுக்காக அங்கே இரு ஜீவன்கள் காத்திருக்கிறது என்று அறிந்தாலும் கூட அதை அவன் பெரிதாக எண்ணவில்லை என்பதை விட அவர்களை விட்டுச் சற்று தள்ளி இருக்கத்தான் நினைத்தான்.
அதன் காரணம் இல்லாமல் இல்லை. அவனையே நினைத்து ஏங்கும் அவனின் பட்டுவை விலகுவது அத்தனை எளிதாய் இருக்கவில்லை. இப்படித்தான் அவன் கடைசி வருடப் படிப்பில் ஏதோ வேலை என்று அவனை ஊருக்கு வரச் சொன்னார் கற்பகநாயகி.
அவரின் குரலில் இருந்த எதுவோ ஒன்றில் அவன் அங்கே செல்லச் சில பத்திரங்களில் அவனின் கையெழுத்தை வாங்கியதைக் கண்டவனின் இதழ்கள் வெறுமையாய் புன்னகைக்க அதைத் தனக்குள்ளே அடக்கியும் கொண்டான்.
ஆனால் இத்தனை வருடங்கள் கழித்து அவனைப் பார்த்த அருந்ததிக்கு அவன் உடனே கிளம்ப வேண்டும் என்று நின்றதில் அவளின் மென்மனம் பட்டுப் போனது. அதில் எந்நேரமும் கண்களைச் சுற்றி கரை கட்டியிருக்கும் கண்ணீரைக் கண்டவனின் மனம் துடித்துத் தான் போனது.
அந்தத் துடிப்பு எதற்காக என்று உணர்ந்தவன் விக்கித்து தான் போனான்.
என்ன இது எதிர்காலமே இல்லாத இந்தக் காதல் ஏன் வந்தது? என்ற கேள்வி தான் முளைத்தது.
‘இந்தக் காதலால் இழந்தது எத்தனை எத்தனை? மீண்டும் ஒரு இழப்பை மனம் ஏற்குமா?’ என்ற மனதின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் தடுமாறி நின்றான் ஆணவன்.
அன்று தனது மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவளைத் திரும்பியும் பாராமல் வந்தவன் தான் அதற்குப் பின்பு அவளிடம் அலைபேசியில் கூட அவன் பேசவில்லை. அவளின் குரலைக் கேட்டாலே எதுவும் பேசாமல் வைத்துவிட்டுச் சென்றுவிடுபவன் அதற்குப் பின்பு அவளைப் பற்றிய நினைவுகளில் கணணீர் சிந்துவான்.
அதன் பின்பு அவன் அங்கே யாரிடமும் அதிகம் பேசியதில்லை. ஏன் அமுதாவிடம் கூட ஒரு வார்த்தை இரண்டு வார்த்தை பேசுபவன் அதற்கு மேலும் எதுவும் பேசாமல் அலைபேசியை அணைத்துவிடுவான்.
தனது குறிக்கோளை நோக்கி மட்டுமே தனது பயணத்தைத் தொடர்ந்தவன் அவளின் நினைவுகளை ஒதுக்கி வைக்கவும் தன் படிப்பை மட்டுமே நாடினான்.
இதோ இந்த ஐந்து வருடத்தில் தான் எத்தனை மாற்றங்கள்! மெல்ல மெல்லப் போராடி தன் இலட்சிய பயணத்தில் மேலே வந்தவன் எத்தனை முறை விழுந்தாலும் அத்தனை முறை எழுந்தான், தன்னைத் தானே செதுக்கிப் பட்டைத் தீட்டிக் கொண்டான் வைரமாய்!
அவனின் இத்தனை வருடக் கனவு இதோ ஆந்திரா சித்தூர் மாவட்டத்தின் பொறுப்பு ஆட்சியராய் பதவி ஏற்றுள்ளான்.
இன்று தான் முதல் நாள். ஆனால் அத்தனை கம்பீரமாய் பேருக்கு ஏற்ற விவேகம் அவனின் முகத்திலும் புத்தியிலும் தெரிந்தது.
யாரிடமும் எந்த விதமான அலட்டலும் நாடகத் தன்மையும் இல்லாமல் நேரடியாக அனைவரையும் எதிர்கொண்ட விதத்தில் அந்த அலுவலகத்தின் ஆட்கள் தடுமாறியிருக்க இவனோ அவற்றைக் கவனத்தில் கொள்ளாமல் தன் வேலையை ஆரம்பித்தான்.
முதல் நாள் மாவட்டத்தின் அனைத்து தகவல்களையும் திரட்டிப் பார்த்தவனுக்கு நிறைய மாற்றம் செய்ய வேண்டும் என்று தோன்றியது. அப்படிச் செய்தால் நிச்சயம் நிறைய விரோதிகளையும் எதிரிகளையும் சந்திக்க நேரிடும் என்று நன்றாகவே அறிந்தவன் அடுத்தடுத்து செய்ய வேண்டிய வேலையைப் பட்டியலிட்டவன் அங்கே இருக்கும் மற்றவர்களுக்குப் பொறுப்புகள் வழங்கியவனின் கவனத்தில் அவனவளின் பிம்பம் தான் வந்தது.
இதோ யாரை மறக்க இத்தனை தூரம் தன்னை மறந்து ஊர்ப்பக்கம் திரும்பாமல் இருக்கிறானோ அவளின் நினைவு அவனை விட்டுக் கொஞ்சமும் அகலவில்லை என்பது தான் உண்மை.
‘பட்டு, இந்நேரம் நீயும் வளர்ந்திருப்பே இல்லை… என்னை நினைவு இருக்குமா பட்டு?’ என்று அவளிடம் மனதோரம் பேசிக் கொண்டவன் அவளின் நினைவில் அப்படியே தன் நாற்காலியில் சாய்ந்தவனுக்கு அதற்கு மேலும் அங்கே இருந்தால் வேலை செய்ய முடியும் என்று தோன்றவில்லை.
அங்கிருந்து வேகமாய் எழுந்தவன் காரில் அமர்ந்து அப்படியே கண்களை மூடியபடி சாய்ந்து படுத்துவிட்டான்.
அவனின் மனதில் தத்தி நடந்து வந்து தன் கரத்தைப் பிடித்த சிறுமலர் நினைவுக்கு வந்தாள்.
இதோ அவனின் போராட்டம் அவனின் வெற்றியில் வந்து நின்றிருக்கிறது. ஆனால் அதைத் தன் உறவுகள் யாரிடமும் பங்கிட்டுக் கொள்ள அவன் விரும்பவில்லை.
ஆனாலும் அமுதாவிடமும், அருந்ததியிடமும் இதைப் பற்றி இன்னும் மூச்சு கூட விடவில்லை. நேரில் சென்று சொல்ல வேண்டும் என்று தோன்றினாலும் கூட ஏனோ செல்வதற்கு முழுதாய் மனம் உந்தித் தள்ளவில்லை.
இன்று ஏனோ பெண்களின் நினைவு அதிகமாய் தான் அவனை வாட்டியது. தான் தங்கியிருக்கும் அந்த அரசுக் குடியிருப்புக்கு வந்தவன் முதலில் தன் அலைபேசியை எடுத்தவன் அமுதாவிற்கு அழைக்க அவர் அழைப்பு ஏற்ற அடுத்த நொடியே தன் பட்டுவின் குரல் கேட்காதா என்று ஏங்கியவனுக்கு இதோ வாங்கி கொள் என்ற அவளின் அத்தான் என்ற அழைப்பு அவனின் சுழலும் பூமியை சற்று நிறுத்தியது என்று தான் சொல்ல வேண்டும்.
ஆனால் அடுத்த நொடியே அவனின் கரங்கள் வழக்கப்படி அந்த அலைபேசியை அணைத்தது.
அடுத்த நொடியே தன் அலைபேசியை தூக்கி சுவற்றில் அடித்தவன், “பட்டு…” என்றவனின் கதறல் அந்த வீட்டுடனேயே முடிந்துவிட்டது.
“ஏன்டி எனக்குள்ள வந்த? உன் மேல பாசம் இருந்துச்சுன்னு தான் நினைச்சேன். ஆனா உன்னை எனக்குள்ள உணர்ந்த நொடியிலிருந்து நான் செத்துப் பிழைக்குறேன்டி. எந்தக் காதல் என்னை அனாதையா ஆக்குச்சோ இன்னைக்கு அதே காதல் எனக்கும் வந்துருக்கே? ஆனா உனக்குள்ளும் நான் இருக்கேனா பட்டு?
எனக்குத் தெரியலைடி… எத்தனையோ பொண்ணுங்களை கடந்து வந்துட்ட பின்னும் இன்னும் குமரியா பாக்காத உன்னைத் தான் என் மனசு தேடுது. வேணாம்டி… திரும்பவும் ஒன்னை இழந்தா என்னால வாழ முடியாதுடி… நீ எனக்கு வேணாம் பட்டு.” என்றவன் தன்னைத் தானே தேற்றித் தன்னை அவளின் நினைவுகளிலிருந்து காத்துக் கொள்வதற்காகப் புத்தகத்தில் கவனத்தைக் கொண்டு சென்றவன் அறியவில்லை அவனின் நினைவில் தான் அவளின் ஜீவன் துடித்துக் கொண்டிருக்கிறது என்று!
*
கன்னமெல்லாம் அழுதழுது வீங்கிச் சிவந்து படுக்கையில் கையைக் காலில் கட்டியபடி அமர்ந்திருந்தாள் அருந்ததி.
ஏனோ அவன் தன்னிடமிருந்து விலகியதிலிருந்து அவனையே தேட ஆரம்பித்திருந்தாள் பெண்மகள்.
“ஏன் அத்தான் என்கிட்ட பேசவே மாட்டேங்குறீங்க? நான் என்ன தப்பு பண்ணேன்? ஏன் என் குரலைக் கேட்டாவே விட்டுட்டுப் போறீங்க? எனக்குப் பயமா இருக்கு அத்தான்… சீக்கிரமா என்னைப் பாக்க வருவீங்களா? இல்லை நீங்க வரமாட்டீங்க… இத்தனை வருஷமா எங்களைப் பாக்காம இருக்கீங்க இல்ல…” என்று ஏதோ அவன் எதிரில் இருப்பது போல் பேசியபடி இருந்தாள் அருந்ததி.
அதே நேரம் அவளின் தலையை மென்மையாகத் தடவியபடி அவளின் அருகே அமர்ந்தாள் அமுதா.
“என்னாச்சு என் தங்கத்துக்கு, எதுக்கு இப்படி அழுதுட்டு இருக்கீங்க?” என்றாள் மென்மையாய்.
“போ அமு, அத்தான் என் குரலைக் கேட்டதுமே கட் பண்ணிடுச்சு இல்ல… அத்தானுக்கும் என்னைப் பிடிக்கலையா அமு? நான் அவரோட பட்டுத் தானே? இனிமே என்னைப் பாக்க அவரு வரமாட்டாரா அமு?” என்றவளின் குரலில் அவனுக்கும் தன்னை பிடிக்கவில்லையே என்ற ஏக்கம் தான்.
அவளின் ஏக்கம் உணர்ந்தாலும் மனதோரம் சற்று வலிக்கத் தான் செய்தது.
“அப்படி இல்லடா தங்கம்… உன் அத்தான் நிச்சயம் சீக்கிரம் உன்னைப் பாக்க வருவாருடா. என் தங்கத்துக்காக வருவாரு, சரியா? ரொம்ப நேரம் கண்டதையும் யோசிக்காத சரியா? இப்போ வா, வந்து சாப்பிட்டுத் தூங்கு.” என்றழைக்க அவளோ எதுவும் பேசாமல் அமுதாவின் மடியில் படுத்தவள்,
“போ அமு, நீ என்கிட்ட பொய் சொல்ற. இங்கே இருக்கற யாருக்கும் என்னைப் பிடிக்காது. அதுமாதிரி அத்தானுக்கும் பிடிக்காது, சரிதானே?” என்றபடி கண்களைத் துடைத்துக் கொண்டவள்,
“அமு, நான் இப்படியே உன் மடியில கொஞ்ச நேரம் படுக்கவா? எனக்குத் தனியா இருந்தா அழுகையா வருது.” என்றாள் மழலையாய்.
அவளின் கண்ணீரைத் துடைத்து விட்டவள், “படுத்துக்கோடி தங்கமே… இதுக்கு நீ யாருகிட்டேயும் அனுமதி வாங்கணும்னு அவசியமே இல்லடி பொண்ணே…” என்று மெல்லத் தடவி கொடுக்கக் கொடுக்கத் தாயின் மார்புச்சூட்டின் கதகதப்பை அமுதாவின் மடியில் உணர்ந்தாளோ என்னவோ அப்படியே மெல்ல மெல்ல ஆழ்ந்து உறங்கிவிட்டாள்.
அவள் உறங்கியதும் மெல்ல அவளை இறக்கித் தலையணையில் படுக்க வைத்தவள் எழுந்து வெளியே வர அங்கே கற்பகநாயகி நின்றிருந்தார்.
அவரைக் கண்டதும் அதிர்ந்தது ஒரு நொடி தான். அடுத்த நொடியே தன்னை மீட்டுக் கொண்டு அங்கிருந்து செல்ல முனைய,
“அமுதா…” என்றழைத்தார் அழுத்தமாக.
அந்த அழுத்தத்தில் அப்படியே நின்றவர் திரும்பி, “அம்மா சொல்லுங்க…” என்றாள் அவரின் முகத்தைப் பார்த்தபடி.
“எப்பவும் அருந்ததி கூடவே இரு. நான் இல்லாதபோது நீதான் அவளைப் பத்திரமா பாத்துக்கணும். அவ வயசு புள்ளை, இனி தான் கவனமா இருக்கணும்.” என்றவரின் வார்த்தைகள் இறுகிப் போய்த் தான் இருந்தது.
அவரின் வார்த்தைகளைக் கேட்டதும் அமுதாவின் உடலில் ஒரு விறைப்பு தன்மை வந்தது.
‘கடவுளே! என்னப்பா இது உன் சோதனை. அந்தப் பொண்ணுக்கு இன்னும் என்னென்ன சோதனையைத் தருவே…’ என்று எண்ணியவள் சரியென்று தலையாட்டியபடி அங்கிருந்து செல்ல, போகும் அவளைப் பார்த்தவரின் கண்களில் சில நிகழ்வுகள் தோன்ற அதில் நிழலாய் ஒரு குரல்,
“அவ்வளவு சீக்கிரம் நீங்கத் தப்பிச்சிடலாம்னு நினைக்காதீங்க… நியாயத்திற்கு எப்பவும் உயிர் இருக்கு. அதுக்கு நீங்கப் பதில் சொல்ற காலம் ரொம்ப தூரம் இல்லை. என் எண்ணம் நிச்சயம் நடக்கும். அன்னைக்கு நீங்கத் தோத்துப் போவீங்க…” என்ற வார்த்தை வேகமாய் வந்து காதில் ஒலிக்க, அதை உணர்ந்த கற்பகநாயகியின் விழிகளில் ஒரு உறுதி வந்தது.
‘இல்ல நான் தோக்கமாட்டேன். நிச்சயம் ஜெயிப்பேன்!’ என்றவர் அறியவில்லை வெற்றியோ தோல்வியோ அதை முடிவெடுப்பதற்கு நமக்கு மேலே உள்ளவன் ஒருவன் இருக்கிறான் என்று!
யாரிடம் தோற்றுவிடுவார் என்ற பயமோ? பொறுத்திருந்து தான் பார்ப்போமே அடுத்தடுத்த பாகங்களில்.
மாலை வரும்…✍️
