அத்தியாயம் – 7
ஆனந்தியும், ஹரிஷும் அங்கிருந்த தோட்டத்தின் அழகை ரசித்துக் கொண்டே கொஞ்சம் தூரம் முன்னேறிச் செல்ல, மலர் மட்டும் அந்த வரப்பில் அப்படியே நின்றுவிட்டாள். கதிர் கையில் இருந்த மண்வெட்டியைக் கீழே வைத்துவிட்டு, கிணற்றடியில் இருந்த அந்தச் சிமெண்ட் தொட்டியில் கைகால் கழுவிக் கொண்டிருந்தான்.
மலர் மெதுவாக அவன் அருகில் சென்றாள். தண்ணீரின் சத்தம் மட்டும் தான் அங்கே கேட்டது. அவளது மனதிற்குள்ளோ ஆயிரம் கேள்விகள் தொக்கி நிற்க, அவனோ
”எதுக்கு இங்க நிக்கிற? அவங்க கூடப் போக வேண்டியதுதானே?” என்று தண்ணீரைத் துடைத்துக் கொண்டே அவளைப் பார்க்காமல் கேட்டான்.
அவன் குரலில் ஒரு மிதப்பான அலட்சியம் இருந்தாலும், அவன் காதில் மலரின் மூச்சுச் சத்தம் கூட தெளிவாக கேட்டது.
”உங்களுக்கு என் மேல அவ்வளவு கோபமா மாமா?” என்று மலர் நேரடியாகவே கேட்டாள்.
அவள் குரலில் ஒரு மெல்லிய நடுக்கம்.
கதிர் இப்போது அவளைத் திரும்பிப் பார்த்தான். அவன் நெற்றியில் வழிந்த வியர்வைத் துளியும், அந்தத் தீர்க்கமான பார்வையும் மலரின் சுவாசத்தை ஒரு நிமிடம் நிறுத்தியது. அவனது கைகள் அவள் கூந்தலை வருடத் துடித்தன. ஆனால் அவன் தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டான்.
”கோப பட எனக்கு என்ன உரிமை இருக்கு மலரு? நீ இப்போ இந்த ஊருக்கு வந்த விருந்தாளி. உன் கூட வந்திருக்கானே ஒருத்தன், அவனைப் பத்திரமா கூட்டிட்டுப் போய் ஊரைச் சுத்திக் காட்டு. அதேன் உனக்கு அழகு” என்றவனது வார்த்தைகளில் நக்கல் இருந்தாலும், அவன் கண்கள் அவளது இதழ்களிலேயே நிலைத்திருந்தது.
அவன் சொல்ல வந்ததற்கு நேர் மாறாக அவன் கண்கள் காதலைச் சொன்னது.
”உரிமை இல்லைன்னு சொல்லாதீங்க மாமா. அந்த ரூம்ல நான் பார்த்தேனே. அந்தப் பெட்டி, அதுல இருந்த என்னோட பொருட்கள். அதுக்கெல்லாம் பதில் சொல்லாம நீங்க தப்பிக்க முடியாது,” என்று மலர் அவன் முன்னால் இன்னும் நெருக்கமாக வந்து நின்றாள்.
அவளது அருகாமை கதிரின் இதயத் துடிப்பை எகிற வைத்தது.
கதிர் ஒரு அடி பின்னால் நகர, நொடியில் அவன் முகம் இறுகியது. “மலர்! பழசைப் பேசாதன்னு சொன்னேன்ல? அது ஒரு காலம் இப்போ எல்லாம் மாறிடுச்சு. நான் இப்போ உன் அக்காவுக்குத் தாலி கட்டப் போறவன். எனக்கு எதுக்கு நீ அந்தப் பெட்டியைப் பத்தி ஞாபகப்படுத்துற?”
”குப்பையை ஏன் பத்திரமா வச்சிருக்கீங்க மாமா? . அதுக்கெல்லாம் என்ன அர்த்தம் ?” மலரின் குரல் கம்மியது, அவள் கண்கள் கலங்கின.
கதிர் அவளுக்கு மிக அருகில் வந்தான். அவனது மூச்சுக்காற்று அவள் முகத்தில் பட, இருவருக்கும் இடையில் ஒரு மெல்லிய மின்சாரம் பாய்ந்தது.
அவனது கைகளோ அவளது தோளைத் பற்றத் துடித்தன. ஆனால் அவன் தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டான். அவன் பார்வையில் ஒரு கனமான காதல் இருந்தது.
”ஆமா மலரு இது அவ்வளவு தான்! நீ படிச்சவ, பெரிய இடத்துல இருக்க வேண்டியவ. என்ன மட்டுமே நம்பிட்டு இருக்க முடியாது புள்ள. உன் வாழ்க்கை சிறப்பா அமையணும்னா நான் இப்போ செய்யுறது தான் சரி. இனிமே என்னைத் தனியா சந்திச்சு இதைப் பத்திக் கேட்காதே… போயிடு!” என்று நொடி நேரத்தில் கூறிவிட்டு விறுவிறுவென்று வயலுக்குள் இறங்கினான்.
மலர் அங்கே அந்த வரப்பில் ஒற்றையாளாய் அப்படியே சமைந்து நின்றாள். கதிர் காதலைச் சொல்லவில்லை. ஆனால் அவனது ஒவ்வொரு அசைவிலும், பார்வையிலும் அவள் மீதான காதல் கொந்தளித்தது. அவன் அவளுக்காகத் தன்னையே அழித்துக் கொள்கிறான் என்பது அவளுக்குப் புரிந்தது. அவனது அந்த முரட்டுத்தனமான அன்பே அவளுக்குப் பெரிய வலியைக் கொடுத்தது.
அடுத்த நாள் யாருக்கும் காத்திருக்காமல் அழகாக விடிய, மலரோ தன் அறையில் போர்வைக்குள் சுருண்டு கிடந்தாள். காய்ச்சல் அவளை அடியோடு சாய்த்துவிட்டது. “அம்மா… தாகமா இருக்கு…” என்று மெல்லிய குரலில் முனகினாள்.
கீழே கல்யாண வேலைகளில் இருந்த கதிரின் காதுக்கு மலர் சோர்ந்து போயிருக்கிற செய்தி எட்டியதும்.
“என்னது, மலருக்குக் காய்ச்சலா? அம்புட்டு நேரம் அருவியில நனைஞ்சப்பவே நினைச்சேன்” என்று முணுமுணுத்தவன். யாரிடமும் சொல்லாமல் மாடிக்கு வந்தான்.
அறைக்குள் நுழைந்த கதிர், மலரின் வாடிய முகத்தைப் பார்த்ததும் நிலைகுலைந்து போனான்.
“ஏய் மலரு…” என்று மெதுவாக அவளருகில் அமர்ந்தான். அவனது முரட்டுத்தனமான கையை அவள் நெற்றியில் வைக்க, கதிர் கையை வைத்த அடுத்த நொடி, “அய்யோ! உடம்பு என்ன இவ்வளவு அனலா கொதிக்குது” என்று அவன் இதயம் துடிக்க,
”மாமா… நீங்களா?” என்று அவன் தொடுகையில் கண் விழித்த மலர் காய்ச்சல் வேகத்தில் அரைகுறையாக அவனை பார்த்தாள்.
”ஆமா… நான் தான். ஏன் இப்படி உடம்பைக் கெடுத்து வச்சிருக்க?” என்று கதிர் அவள் கையைப் பற்ற. அந்த ஒரு நிமிடம் அவளது அக்காவுக்கு மணமகனாக வரப்போகிறவன் என்பதையெல்லாம் மறந்துவிட்டான்.
தன் காதலி காய்ச்சலில் துடிப்பதைப் பார்த்து ஒரு சராசரி காதலனாகத் துடித்து தான் போனான்.
”உங்களுக்கு எதுக்கு மாமா கவலை? நான் செத்துப்போனா கூட உங்களுக்குச் சந்தோஷம்தானே?” என்று மலர் விரக்தியில் கேட்க,
”மலரு!” என்று கர்ஜித்தவன் கண்களில் கோபத்தையும் மீறி ஒரு ஈரம் இருந்தது. “இன்னொரு வாட்டி இப்படிப் பேசினே… கொன்னுடுவேன்! உனக்கு ஒரு சின்ன கீறல் விழுந்தா கூட இங்க எனக்குத் துடிக்குதுடி” என்று தன் நெஞ்சை தொட்டு அவன் காட்ட,
அப்பொழுதும் அவன் காதலைச் சொல்லவில்லை. ஆனால் அந்த வார்த்தை அவனது பல வருஷத் தவிப்பை அப்பட்டமாக வெளிப்படுத்தியது.
”அப்போ ஏன் மாமா என்னை வேணாம்னு சொன்னீங்க?” என்று மலர் அவன் சட்டையைப் பிடித்துக் கொண்டு கேட்க,
கதிர் பதில் சொல்ல முடியாமல் தவித்தான். மௌனமாக அவள் நெற்றியில் ஈரத்துணியை வைத்துத் துடைத்துவிட்டவனது கைகள் நடுங்குவதை மலர் கவனித்தாள்.
சிறிது நேரத்தில் கீழே சுடர்விழியின் குரல் கேட்க, கதிர் சட்டென்று தன் கையை விலக்கிக்கொண்டு எழுந்தவன்.
“உடம்பைப் பார்த்துக்கோ… நான் டாக்டரை அனுப்பி வைக்கிறேன்” என்று கரகரப்பான குரலில் கூறிவிட்டு, அவள் முகத்தை கூட பார்க்காமல் விறுவிறுவென்று வெளியேறி விட்டான்.
இரவு மணி இரண்டு. வீடே நிசப்தத்தில் மூழ்கியிருந்தது. ஜன்னல் வழியே புகுந்த நிலவொளி மலரின் அறையில் நீளமாக விழுந்திருந்தது. காய்ச்சல் வேகத்தில் மலர் “அம்மா… சுடுது…” என்று முனகியபடி, போர்வையை உதறித் தள்ளினாள்.
கதவோரம் ஒரு நிழல் அசைந்தது. கதிர் மெதுவான அடிகளுடன் உள்ளே வந்தான்.
கையில் ஒரு சின்னக் கிண்ணத்தில் கஷாயம் இருந்தது. அவன் முகம் தூக்கமில்லாமல் சிவந்து, ஒருவித தவிப்போடு இருந்தது.
அவன் மலரின் அருகில் கட்டிலில் அமர்ந்தான். அவனது முரட்டுத்தனமான கையை மெதுவாக அவளது நெற்றியில் வைத்தான். “அய்யோ… என்ன இன்னும் இவ்ளோ அனலா கொதிக்குது!” என்று அவன் இதயம் துடித்தது.
”மலரு… மலரு… எந்திரி… இந்த மருந்தை குடி புள்ள,” என்று அவளை மெதுவாகத் தன் இடது கையால் தாங்கி அணைத்து எழுப்பினான்.
மயக்க நிலையில் இருந்த மலர், கதிரின் மார்பில் சாய்ந்து கொண்டாள். அவனது வேட்டியின் வாசமும், அந்தச் சந்தன வாசனையும் அவளுக்கு ஒரு பாதுகாப்பான உணர்வைக் கொடுத்தது. கதிர் மருந்தை அவளது இதழோரம் கொண்டு செல்ல, கசப்பில் அவள் முகத்தைச் சுளித்தாள்.
”வேணாம் மாமா… கசக்குது…” என்று அவள் சிணுங்க,
”அடம்பிடிக்காம குடிடி… நீ இப்படி வாடிப் போய் கிடக்குறதைப் பார்க்க எனக்குச் சகிக்கல,” என்று அவன் சொல்லும்போது அவன் குரலில் இருந்த கனிவு. இதுவரை அவன் காட்டிய முரட்டுத்தனத்தை அப்படியே மறைத்தது.
அவள் குடித்து முடித்ததும், அவளது இதழோரம் வழிந்த மருந்தை அவன் தன் கட்டைவிரலால் மென்மையாகத் துடைத்து விட்டான். அந்தத் தீண்டலில் ஒரு நிமிடம் இருவருமே சிலையாக நின்றார்கள். கதிர் அவளைத் தன் அணைப்பிலிருந்து விடுவிக்க மனமில்லாமல், அவளது தலையைத் தன் தோளிலேயே சாய்த்து வைத்திருந்தான்.
”என்னை விட்டுட்டுப் போயிடாதீங்க மாமா… எனக்கு பயமா இருக்கு,” என்று மலர் அவன் சட்டையை இறுகப் பற்றிக் கொள்ள,
கதிர் அவளது நெற்றியில் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டான். “எங்கேயும் போக மாட்டேன்… தூங்கு,” என்று அவளது கூந்தலை மென்மையாக வருடிக் கொடுத்தான். அவன் காதலைச் சொல்லவில்லை, ஆனால் அந்தப் பிடியில் அவன் உயிரையே அவளிடம் கொடுத்திருந்தான்.
காலை இளவெயில் மலரின் அறைக்குள் எட்டிப்பார்த்தது. காய்ச்சல் குறைந்திருந்தாலும், மலரின் முகம் இன்னும் லேசாக வாடியிருந்தது. ஆனந்தியும் ,ஹரிஷும் மலரின் கட்டிலுக்கு அருகிலேயே அமர்ந்திருந்தார்கள்.
”இப்போ எப்படி இருக்கு மலர்? நேத்து நைட்டு நீ பட்ட பாடு இருக்கே… ஹரிஷ் கூட ரொம்ப பயந்துட்டான்,” என்று ஆனந்தி அக்கறையாகக் கேட்டாள்.
ஹரிஷ் கவலையுடன், “ஆமா மலர், உனக்காக நான் பிரேயர் கூட பண்ணினேன். இப்போ ஓகேவா?” என்று அவள் கையைத் தொடப் போக,
சரியாக அந்த நேரத்தில் கதிரும், சுடர்விழியும் அறைக்குள் நுழைந்தார்கள்.
ஹரிஷ் மலரின் கையைத் தொடப் போனதைப் பார்த்ததும், கதிரின் முகத்தில் ஒரு மின்னல் வெட்டி மறைந்தது. அவன் கைகள் தானாகவே இறுகின.
”என்ன மலரு… விடிஞ்சுருச்சு, இன்னும் படுத்துட்டே இருக்கியா? காய்ச்சல் விட்டுடுச்சா இல்லையா?” என்று கதிர் வழக்கமான முரட்டுத்தனமான குரலில் கேட்டான்.
ஆனால் அவன் கண்கள் மட்டும் மலரின் முகத்தில் காய்ச்சலின் தடம் இருக்கிறதா என்று நுணுக்கமாக ஆராய்ந்தது.
சுடர்விழி கையில் ஒரு தட்டில் இட்லியும் சட்னியும் எடுத்து வந்திருந்தவள்.
“மாமா… அவ இன்னும் சோர்வா தான் தெரியுறா, மெதுவா பேசலாமே?” என்று கதிரைச் செல்லமாகக் கண்டித்துவிட்டு,
“மலர், இந்தா… மாமா தான் சொன்னாரு, இட்லி கொடுத்தாத்தான் சீக்கிரம் தெம்பு வரும்னு,” என்றாள்.
மலர் மெதுவாக நிமிர்ந்து கதிரைப் பார்த்தாள்.
கதிரின் கண்கள் சிவந்திருந்தன. இரவு முழுக்க அவன் தூங்கவில்லை என்பதற்கு அதுவே சாட்சி.
”எனக்கு ஒன்னும் இல்ல மாமா… ஆனா நேத்து ராத்திரி யாரோ எனக்கு கசப்பான மருந்து கொடுத்தாங்க. அது யாருன்னு தான் தெரியல,” என்று மலர் நக்கலாகக் கதிரைப் பார்த்துச் சொல்ல, கதிர் ஒரு நிமிடம் தடுமாறிப் போனான்.
ஆனந்தி ஆச்சரியமாக, “நேத்து ராத்திரி நாங்க வரும்போது நீ தூங்கிட்டு இருந்தியே மலர், யாரு மருந்து கொடுத்தா?” என்று கேட்க,
கதிர் உடனே சமாளித்தான். “நான்தான் கொடுத்து விட்டேன். இந்தப் பொண்ணுக்குப் பிடிவாதம் அதிகம், அதான் எதையாவது உளறிட்டு இருக்கு,” என்று சொல்லிவிட்டு ஹரிஷைப் பார்த்தான்.
“ஹரிஷ் தம்பி… நீங்க சிட்டி ஆளுங்க, இந்த ஊர் பனி உங்களுக்கு ஒத்துக்காது. முதல்ல போய் காபி குடிங்க,” என்று அவனை அங்கிருந்து நகர்த்த பார்க்க,
கதிர் ஹரீஷை தவிர்க்கப் பார்க்கிறான் என்பது மலருக்குத் தெளிவாகத் தெரிந்தது. சுடர்விழிக்கு எதுவும் தெரியாது என்பதால் அவள் மலருக்கு ஊட்டத் தொடங்கினாள். கதிரோ மலரை பார்த்தபடி அமர்ந்திருக்க, மலரும் அவனையே பார்க்க, ஒருவரை ஒருவர் பார்த்த பார்வையில், ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருந்தன.
– தொடரும்
