அத்தியாயம் -6

வேனலின் வெண்பூவே!

 

அத்தியாயம் 6

 

ருத்ராவை எனக்குக் குழந்தையில் இருந்தே தெரியும். ஆனால் ருத்ரா எப்போதும் அமைதி, அடக்கம். எங்கிட்ட பேசவே மாட்டான். கார்த்திக் கூடவும், அப்பா கூடவும் நல்ல பான்டிங் அவனுக்கு. ஆனால் நான் மட்டும் ஆகவே ஆகாது. அவனை நான் எதுவுமே செஞ்சதும் இல்லை. ஒருத்தங்களை நாம வம்படியாகப் பிடிக்கவும் வைக்க முடியாது. ஆனால் ஒருத்தங்களுக்கு நாம பிடிக்கலைனா நாம என்ன செஞ்சோம், ஏன் பிடிக்கலைனு தோணறது இயல்புதானே! அவனோட சொந்த விஷயங்களில் நான் மூக்கை நுழைச்சது இல்லை. அலுவலக விஷயங்களில் கண்டிப்பாக அப்படி இருக்க முடியாது.
                -காமினி.

இரண்டு நாட்கள் கழித்து இரவு நேரம், காமினியும், பத்மமுகியும் இரவு எட்டு மணிக்கு மேல் கயிற்றால் ஆன மேம்பாலத்தில் நடந்து கொண்டிருந்தனர். இரவு நேரம் அங்கு ஆட்கள் குறைவு. ஒன்பது மணிக்கு சாகச விளையாட்டுகள் மூடப்பட்டு விடும்.

“அப்படித்தான் அக்கா மெதுவாகக் காலை எடுத்து வைங்க.”

கயிற்றுப் பாலம் காற்றுக்கும், அவர்களுடைய எடைக்கும் ஊஞ்சல் ஆடியது. தரையிலிருந்து இருபது மீட்டர் உயரத்தில் நடக்கும்போது அட்ரினலின் உற்பத்தியாகி முகியை அதிக கவனத்துடன் இருக்க வைத்தது. காமினி அதிக நிதானத்துடன் நடந்து கொண்டிருந்தாள். அவளுக்கு இது மிகவும் பழக்கமானது.

“எப்படிக்கா?”

நாற்பது மீட்டர் உயரம் நடந்திருக்க மெல்ல மூச்சு வாங்கியபடி முகி வர, காமினி படிக்கட்டுகள் வந்ததும், அதில் இறங்காமல் கயிற்றில் வழுக்கிச் செல்லும் கைப்பிடியைப் பிடித்தவள் அப்படியே காற்றில் வழுக்கிச் செல்ல ஆரம்பித்தாள். அப்படியே கயிறு கீழே சாய்வாக இறங்கும். பின் அப்படியே தரையில் குதித்துக் கொள்ளலாம்.

பத்மமுகியும் காமினியைத் தொடர்ந்து அப்படியே காற்றில் வழுக்கி வரத் தரையில் இறங்கும்போது தடுமாறியவளைத் தாங்கிப் பிடித்தது இரு கரங்கள்.

“வாவ் பியூட்டிஃபுல்!” என முணுமுணுத்தான் அவன்.

“சிவகார்த்திக்.” என விழிகளில் கண்டனத்துடன் நின்றுகொண்டிருந்தாள் சிவகாமினி.

தரை இறங்கும்போது தடுமாறிய பத்மமுகியைத் தாங்கிப் பிடித்திருந்தான் சிவகார்த்திக். பத்மமுகியின் உடல் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தது.

“விடுடா, அவங்க என் பிரண்ட்.”

“கேள்விப்பட்டேன். நீ புதுசா ஒரு பிரண்ட் பிடிச்சுருக்குறதை. ஆனால் அது இவங்கன்னு நினைக்கல.”

பத்மமுகியை விடுவித்தவன், “ஹாய் நான் சிவகார்த்திக், மினியனோட தம்பி. நீங்க ஹோட்டலுக்கு வந்தப்ப என்னைப் பார்த்திருக்கீங்க.”

“ஓ… யெஸ்… யெஸ். ஹலோ!”

“கண்ணை மூடிட்டு குதிக்காதீங்க மேம். லேன்டிங்க் கீழ பார்த்துட்டு நிதானமாக இறங்கணும்.”

“ஓகே.”

தன் சகோதரனின் தோளில் கைபோட்டுக் கொண்டவள், “வாங்க, எக்ஸ்பீரியன்ஸ் ஏகாம்பரம்.” எனக் கேலி செய்யச் சகோதரியை முறைத்தான் அவன்.

“கலாய்க்கிறியா நீ?”

“சாப்பிட்டீங்களா பத்மமுகி மேம். நைட் வீட்டுக்கு வந்தால் உங்களைப் பத்திதான் பேச்சு. என்னோட அப்பாவே உங்களைப் பார்க்க ஆர்வமாக இருக்காரு. காமினி இவ்ளோ சீக்கிரம் ஒருத்தங்ககிட்ட ஜெல் ஆகி பார்த்ததே இல்லை.”

“எனக்கு அவங்களை ரொம்ப பிடிச்சுருச்சு. ஏன்னு தெரியலை!”

இருபத்தி ஐந்து வயதைக் கடந்தவர்கள் பொதுவாக அனுபவத்தின் காரணமாக எளிதில் கொஞ்சம் மற்றவர்களிடம் பழகத் தயங்குவர். காமினியும் அதே வகையறாதான். வயது ஏற ஏற நம்முடைய நட்பு வட்டம் சுருங்கி விடும். காமினிக்கு அது குறைந்துவிட்டது.

அவளுடன் ஆதாயத்திற்காகப் பழகிய நட்புகளை அவளே ஒரு எல்லையில் தள்ளி நிற்க வைத்திருத்தாள். யார் இருந்தாலும், இல்லை என்றாலும் அவளுடைய முதல் நட்பு சிவகார்த்திக் இருக்கிறான். ருத்ரனின் அன்னை இன்னொரு தோழி மாதிரி இருக்கிறார்.

அவளுடைய முகம் பார்த்தே எண்ணங்களை அறிந்து கொள்வான் அவன். காமினியும் அப்படித்தான். இரட்டைகளின் பந்தம் அப்படி. இருவரும் வளவளக்க ஆரம்பிக்க அவர்களின் அரட்டையைப் பார்த்த பத்மமுகியிடம் மெல்லிய சிரிப்பு எழுந்தது. இரு உடன் பிறப்புகளும் கலகலப்பாகப் பேசியபடி சென்றனர். பேசியபடி விடுதியின் முன்பகுதிக்கு வந்து விட்டனர்.

“சரி, குட் நைட்! நாளைக்கு மார்னிங் கொஞ்சம் சீக்கிரம் வொர்க்குக்குப் போகணும்.”

“ஓகே. குட் நைட்!”

“ஹான்…” என நெற்றியைத் தேய்த்தாள்.

“சொல்லுங்க முகி அக்கா.” முகி தயங்குவதைப் பார்த்த காமினியே கேள்வியைக் கேட்டாள்.

“உங்களுக்கு லாயர் யாராவது தெரியுமா?”

“எந்த மாதிரி லாயர்?”

“ஃபேமிலி கோர்ட் சம்பந்தமாக?”

“ஓகே. உங்களுக்கு நான் நம்பர் அனுப்புறேன். நீங்க அவங்ககிட்ட இப்பவே பேசுங்க.” எனக் கைப்பேசியில் எண்ணை அனுப்பி வைத்தாள்.

“தேங்க்ஸ்.” என அவளுக்கு நன்றி உரைத்தாள். ஏன் ஏதற்கு என்ற கேள்வி இல்லை. அதுவே முகிக்கு நிம்மதியாக இருந்தது.

“குட் நைட் முகி மேம்!” எனச் சிவகார்த்திக் கூறவும்,

“குட் நைட்!” என இருவருக்கும் விடை கொடுத்தவள் தன் அறைக்குச் செல்ல, இரட்டைகள் இருவரும் வாகன தரிப்பிடம் நோக்கிச் சென்றனர்.

“அவங்களுக்கு எதுக்கு லாயர் மினியன்?”

“அவங்க பர்சனல்டா.”

“டிவோர்ஸ்தானே?”

“டேய் உனக்கெப்படி?”

“அவங்க ரூம் எடுக்க வந்தப்பவே ஓடி வந்துட்டேன்னு ஹின்ட் கொடுத்தாங்க. மேரீட்னு இருந்தப்பவே ஒரு டவுட்.”

“உனக்கும் மேல சரக்கு இருக்குன்னு தெரியுது.”

“உன்னை…” என அவள் தலையில் கொட்டினாள்.

“எனக்கு உன்னைவிட அறிவு அதிகம்னு உனக்குப் பொறாமை. அதனால் இப்படிக் கொட்டி என்னோட அறிவை குறைக்கப் பார்க்காதே.” இப்படி அவர்கள் குழந்தைபோல் மாற்றி மாற்றிப் பேசிச் சென்றனர்.

***

அடுத்த நாள் காலை நான்கு மணிக்கு ருத்ராவின் அருகில் விடுதியின் சமையலறையில் நின்றிருந்தாள் சிவகாமினி. அவள் கேட்ட உணவுப்பட்டியல் இன்றிலிருந்து மூன்று நாட்களுக்குச் சமைக்கப்படுவதால் ஆர்வத்துடன் அதிகாலையில் கிளம்பி வந்திருந்தாள்.

ருத்ரா பேஸ்ட்ரி வகை சிற்றுண்டிகள் செய்ய மாவைப் பிசைய, அதைத் தொடர்ந்து மற்ற பன்னிரண்டு பேரும், காலை உணவுக்கான வேலையை ஆரம்பித்தனர். வழக்கமாக ஐந்து மணிக்குத் தொடங்கும் பணி இன்று நான்கு மணிக்கே ஆரம்பிக்கப்பட்டிருந்தது. புதிய உணவு வகைகள் செய்ய நேரம் ஆகும் என்பதால் இந்த ஏற்பாடு. ருத்ராவின் அருகில் நின்று மாவு பிசைவதைப் பார்த்துக்கொண்டிருந்த காமினி அவளது தலையில் ஹேர் நெட் கவரும், ஆப்ரானும் அணிந்திருந்தாள்.

அவள்மீது எழும் பிரத்யேக நறுமணமும், கூந்தலின் வாசமும் ருத்ராவின் நாசிக்கு நன்றாகவே ஏறியது. தலைக்கு ஒரு தொப்பியும், ஆப்ரானும் அணிந்து கொண்டு நின்றிருந்தான். தன்னுடைய வெண்ணிற மேற்சட்டையின் கைப்பகுதி மணிக்கட்டு வரை இருக்க, அதைச் சற்று சுருட்டி விட்டிருக்க, அது அவனுடைய கையின் நரம்புகள் அசைவதை தெளிவாக எடுத்துக் காட்டியது. சிவகாமினியின் விழிகள் சில நொடிகள் அவன் கையில் பதிய, ருத்ரா திரும்பவும் அவளும் விழிகளைத் திருப்பினாள். தன் விழிகள் இடுங்க சில நொடிகள் அவளைப் பார்த்தவன் மீண்டும் மாவில் கவனம் வைத்தான்.

ஸ்ட்ராபெர்ரி கூம்பு வடிவ கிராஸ்யாண்ட் பேஸ்ட்ரிக்கு மாவை அடுக்கடுக்காகப் போட்டு, அதன் மீது ஸ்ட்ராபெர்ரி கலந்து செய்யச் செந்நிற மாவையும் அடுக்கி, நேராக்கி, கூம்பு வடிவில் வெட்டி, அதைக் கூம்பிலான உருவ வார்ப்புகளில் இட அது கூம்பு வடிவில் அழகாக வெந்து கொண்டிருக்க, இங்கு ஸ்ட்ராபெர்ரி கிரீமை தயார் செய்தான் ருத்ரா. ஓவனில் தயார் செய்த, கிராஸ்யாண்ட் அழகாகச் செந்நிறத்திலும், வெண்ணெய் நிறம் போன்ற வெண்ணிறத்திலும் வெண்ணெயால் குளித்து வெந்திருக்க, அதன் நறுமணம் சிவகாமினியின் நாசியை சீண்டிப்பார்த்து அதை உண்ண வேண்டும் என்று மூளையைக் கட்டளை இட வைத்தது. பிரஞ்சு மக்களுக்குப் பிடித்த காலை உணவைக் காமினிக்கு உண்ண ஆசை பிறந்தது. அதுவும் ருத்ராவின் கைமணம் என்றால் காமினிக்கு கொள்ளைப் பிரியம்.

“வாவ் ருத்ரா! எனக்கு இப்பவே சாப்பிடணும் போல இருக்கு.” என்ற சிவகாமினியை அமைதியாகப் பார்த்தவன் வேலையில் ஈடுபட்டான்.

அதற்குள் பேஸ்ட்ரி உணவுக்குப் பிரஞ்சு நாட்டுடன் போட்டி போடும் இத்தாலி நாட்டின் வெனிலா பெர்ரி கஸ்டர்ட் செய்ய முடிவெடுத்து மாவை சதுரமாக வெட்டி எடுத்து, அதை மேலும் பிரேம் போல் இரு முனையில் மட்டும் இணைந்திருப்பதைப் போல் வெட்டியவன், வெட்டிய இருமுனைகளைத் திருப்பிப் போட, அது சாய்சதுர வடிவத்திற்கு மாறியதும், சர்க்கரை தூவி அதையும் வேக வைக்க, உப்பி நடுவில் கூடை போன்று இடைவெளி உண்டானது.
மற்ற செஃப்கள் சமைத்துக் கொண்டிருக்க, கிராஸ்யாண்ட் அதில் ஸ்ட்ராபெர்ரி கிரீம், வெண்ணிலா கிரீம் மற்றும் சாக்லேட் கிரீம் என மாற்றி மாற்றி உட்செலுத்த அது தயாராகிவிட்டது.

பெர்ரி கஸ்டர்ட்டுக்கு மாவு வெந்து விட, அதன் மீது இத்தாலியன் கிரீம் தடவப்பட்டு, ராஸ்ப்பெர்ரி மற்றும் ப்ளூபெர்ரிகள் போடப்பட்டு, சீவிய பாதமும் சேர்க்கப்பட்டது.

இரண்டும் தயார் ஆனதும் காமினிக்கு இரண்டையும் இரு தட்டுகளில் போட்டு ஸ்பூனையும் வைத்துக் கொடுக்க, அதை ஓரம் வைத்து விட்டு, முதலில் கிராஸ்யாண்ட்டை எடுத்து வாயைத் திறந்து கடித்து விழிகளை மூடிச் சுவைத்தவளின் இதழில், “ம்ம்ம்…” என ஒலி மட்டும் அதன் ருசியில் எழ, ருத்ராவுக்கு அவள் முகம் காட்டிய திருப்தியில் ஒரு சமையல் கலைஞனாக அலாதி நிம்மதி பிறந்தது.

அடுத்த சில நிமிடங்களில் இரண்டுமே காலியாகி விட்டிருந்தது.

“ருத்ரா, உனக்கு நான் தங்க காப்பு வாங்கிப் போடப் போறேன். இப்படி பேஸ்ட்ரி செஞ்சு கொடுத்தால் இதை வச்சு என்னைக் கிட்நாப் பண்ணிடலாம். உன்னோட பேஸ்ட்ரி ஸ்கில்ஸை ஏன் நீ வெளிய காட்ட மாட்டேங்கிறேன்னு தெரியலை. ஐ லவ் இட்! பிளீஸ், எப்படியாவது இதை மெனுவில் சேர்த்திரு!”

“பார்க்கலாம். கஸ்டமர்ஸ் ரெஸ்பான்ஸ் பொறுத்து. அதோட என்னோட அசிஸ்டெண்ட்ஸ் முடிவும் இதில் இருக்கு. அதோட இதனால் எல்லாப் பக்கமும், நாம காஸ்டை இன்கிரீஸ் செய்ய வேண்டியது வரும்.”

உடனே தன் புருவத்தைச் சுருக்கியவள், “நீ இருக்கியே?” எனச் சலித்துக் கொண்டாள்.

***

அதே நாள் மாலை ருத்ராவின் வீட்டில் அமர்ந்திருந்தாள் பத்மமுகி. அபிதா அவளுக்குத் தேநீர் கொடுக்க, அதைப் பருகியபடி இருந்தாள்.

“சொல்லுங்க பத்மமுகி. உங்களுக்கு என்ன வேணும்?”

“என் ஹஸ்பண்ட்கிட்ட இருந்து டிவோர்ஸ் வேணும் மேம்.”

“ஏன் உன்னைக் கொடுமைப்படுத்துனாரா? இல்லை அடிச்சு துன்புறுத்துனாரா?”

“எதுவும் பண்ணலை மேம். அன்பா இருந்தாரு. ஆனால் என்னை நெக்லெட் பண்ணிட்டாரு. அவர் கூட நான் வாழறது அவங்க அம்மாவுக்கும், நாத்தனாருக்கும் பிடிக்கலை.”

“ஏன்?”

“நான் ஒரு அனாதை மேம். அதான் காரணம்.”

“வாட்? ஏன் அதெல்லாம் தெரிஞ்சுதானே கல்யாணம் நடந்துச்சு?”

“யெஸ் மேம்! மாமியார்தான் முன்ன நின்னு கல்யாணம் பண்ணி வச்சாங்க.”

தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page