அத்தியாயம் -8

வேனலின் வெண்பூவே!

 

அத்தியாயம் 8

 

ஒரு உறவு நிலைச்சு நிக்குறது எல்லாம் ரொம்பக் கஷ்டம். அதுக்கு இரண்டு பேரோட முயற்சியும் வேணும். கயிறு இழுக்குற போட்டி மாதிரி கிடையாது ஒரு உறவு. ஒரு பக்கம் அதிக விசை கொடுத்து இழுத்தால் இன்னொரு பக்கம் விழுந்துருவாங்க. இரண்டு பக்கமும் சமமான அளவு அந்த உறவைக் காப்பாத்திக்க முயற்சி வேணும். பொண்ணுங்க மட்டும் கல்யாண வாழ்க்கையைக் காப்பாத்திக்க முயற்சி செய்யணும் அப்படிங்கிறது எல்லாம் இப்ப இல்லை. இரண்டு பக்கமும் ஓரளவு எஃபர்ட் போடும் போதும் அந்த உறவு நீடித்து நிற்கும். 
          -பத்மமுகி.

கோயம்புத்தூரில் உள்ள ஒரு தகவல் தொழில் நுட்ப அலுவலகத்தில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறையில் கணினியில் வேகமாகத் தட்டச்சு செய்தபடி இருந்தான் அவன்.
அப்போது அவனுக்கு உள்ளே இணைக்கப்பட்ட தொலைபேசியிலிருந்து அழைப்பு வர அதை எடுத்துக் காதில் வைத்தான்.

“சார், உங்களுக்குப் பார்சல் வந்துருக்கு.”

“என்ன பார்சல்? யார்கிட்டே இருந்து?”

“தெரியலை. ஆனால் ஏதோ கோர்ட்னு இருக்கு.”

“என்னோட கேபின்ல வச்சுருங்க மாலினி.”

“ஓகே சார்.” அத்துடன் அழைப்புத் துண்டிக்கப்பட, அதன் பின் வேலையில் மூழ்கியவன் இரண்டு மணி நேரம் கழித்து தன்னுடைய அலுவலக அறைக்குச் செல்ல அப்போதுதான் தனக்கு ஒரு தபால் வந்ததே நினைவுக்கு வந்தது. அவன் விழிகளில் சில நாட்கள் உறங்காததற்கான சாட்சியாக முகம் வீங்கி விழிகள் சிவந்து கிடந்தது. தாடியும் வளர்ந்து அவன் முகத்தை மெல்ல மூட ஆரம்பித்தது.

பழுப்பு நிற அஞ்சல் உறையைப் பிரித்தவன் உள்ளே இருந்த தாள்களைப் பார்த்ததும் நெஞ்சைப் பிடித்து விட்டான். அவன் ஆசையாய் காதலித்து மணந்த மனைவியின் மணமுறிவுத் தாள் அங்கே இருந்தது.

“முகி…” என வலியுடன் முணுமுணுத்தவன் இதயம் படபடவென அடித்துக் கொண்டது.

“ஏன் முகி இப்படி செஞ்ச?” அருகில் உள்ள நாற்காலியில் சோர்ந்து போய் அமர்ந்தான்.

அப்போது அவன் அறைக்கதவை இலேசாகத் தட்டி விட்டு உள்ளே நுழைந்தான் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுக்ரீவ். ஆதி அமர்ந்திருந்த தோற்றம் ஒரு மாதிரி இருந்தது. கையில் ஒரு தாளுடன் அப்படியே விழிகள் சுவற்றை வெறிக்க அமர்ந்திருந்தான்.

“ஆதி என்னாச்சு? ஏன் இப்படி உட்கார்ந்திருக்க?”

ஆதியும், சுக்ரீவும் நண்பர்கள். இருவரின் தந்தையும் சேர்ந்து இந்த நிறுவனத்தை ஆரம்பித்திருக்க, இவர்களின் தோழமையும் உறுதியாக இருந்தது. அத்தோடு நிறுவனத்தை நிர்வாகம் செய்யச் சுக்ரீவும், அதை வளர்க்க வேண்டும் என்று ஆதியும் படித்திருக்க, அப்படியே வேலையிலும் சேர்ந்து கொண்டனர். அவன் கையில் இருந்த தாளை நீட்ட, சுக்ரீவ் அதை வாங்கிப் படித்தவன் அதிர்ச்சியில் நின்றான்.

“எப்படிடா? பத்மமுகி உன்கிட்ட சண்டை கூடப் போட்டு நான் பார்த்தது இல்லை. ரொம்ப புரிதலான கபிள்னு நானும் நினைச்சேன்.”

“எல்லாம் அந்தப் பார்ட்டிக்கு அப்புறம்தான்டா.” ஆதியின் குரலே மெலிந்து போயிருந்தது.

“அப்படியே இருந்தாலும் முகி சட்டையைப் பிடிச்சு சண்டை போட்ருக்கணும். எதுவும் பேசாமல் கிளம்பி இப்ப இப்படி டைவர்ஸ் நோட்டீஸ்னா இது இப்ப ஆரம்பிச்சது இல்லை. நீ உன் வீட்டிலிருந்து ஆரம்பிக்கணும்டா.”

“புரியுதுடா. அதுக்கு முகி இருந்தால்தானே பேச முடியும். என்ன நடந்துச்சுன்னு கேட்க முடியும். மொட்டையாய் டிவோர்ஸ்னா? என்னால் தாங்க முடியலைடா.”

“நீ வீட்டுக்குப் போ. உன் வீட்டில் உனக்கு நிச்சயம் ஏதாவது க்ளூ கிடைக்கும்.” எனத் தன் நண்பனைத் துரிதப்படுத்தினான்.

முகி அவனை விட்டு நீங்கிச் சென்று நான்கு நாட்களாகி இருந்தது. இரண்டு நாட்கள் இரவு பகல் எனத் தேடியவன் ஓய்ந்து போனான். அவள் தெளிவாகத் தாலி, நிச்சய மோதிரம், அவன் வாங்கிக் கொடுத்த நகைகள், உடைகள் என அத்தனையையும் அப்படியே விட்டுச் சென்றிருந்தாள். அவள் வைத்திருக்கும் உடைகளும், அவளுடைய படிப்பு சான்றிதழ்களும் இல்லை. அவன் வாங்கிக் கொடுத்த வங்கியின் கருப்பு பற்று அட்டையும் அங்கேயே இருந்தது.

தெளிவாகத் திட்டமிட்டு அவனுடைய மனைவி அவனை விட்டு நீங்கிச் சென்றிருந்தாள் என்பது நன்றாகப் புரிந்தது ஆதிக்கு.

உடனடியாகச் சுக்ரீவிடம் விடைபெற்றான்.

“கார், டிரைவர் எல்லாம் ரெடியாக இருக்கும். கீழ போ.” என்றான் சுக்ரீவ்.

நண்பனை நன்றியுடன் ஒரு பார்வை பார்த்தவன் விரைவாக மின்தூக்கியில் ஏறிக் கீழே சென்றான். வீட்டில் மாதவி கால்மேல் கால் போட்டு அமர்ந்து பழம் உண்டு கொண்டிருந்தார். அருகே அவனுடைய அக்காவும் அமர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்.

வீட்டிற்கு வந்த மருமகள் காணாமல் போன வருத்தம் மருந்திற்கும் அவர்கள் முகத்தில் இல்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். வீட்டுக் கதவு திறந்து வைத்திருக்க, தொலைக்காட்சியில் ஏதோ படம் ஓடிக் கொண்டிருந்தது.

அதைப் பார்த்தபடி மெதுவாக உள்ளே நுழைந்த மகனைப் பார்த்ததும் மாதவி பரபரப்பு அடைய, அவனுடைய அக்கா விலாசினியும் எழுந்து கொண்டார்.

“வா ஆதி. என்னடா இவ்வளவு டயர்டா இருக்குற? தூங்கலையா?” எனக் குசலம் விசாரித்தாள்.

“ஆதி வாப்பா, சாப்பிடலாம். அந்த அனாதை போனதிலிருந்து இப்படித்தான் இருக்கான் விலாசினி. இந்த வீட்டில் சொகுசாக வாழ்ந்திட்டு இப்ப என்னன்னு போனாள்னு தெரியலை. யார் கூடப் போனாள்னு தெரியலை. டிவோர்ஸ் பத்திரம் வேற வந்திருக்கு. இதுக்குத்தான் தராதரம் பார்த்துக் கல்யாணம் செய்யணும். அனாதைக்கு எல்லாம் எப்படி குடும்பத்தோட அருமை தெரியும்? அதுமாதிரி குடும்பத்தில் நாம பொண்ணு எடுத்துருக்கணும். என் கையால் இந்தக் கல்யாணத்தைப் பண்ணி வச்சு எம்மவன் இப்படி நிக்கறானே!” என விழிகளில் நீருடன் அவர் பேசியதைப் பார்த்தவுடன் ஆதியின் மனதுக்குள் அதிர்வு. 

அவர் சொன்ன அனாதை என்ற வார்த்தையில் ஆதியின் மனம் துணுக்குற்றது. அதுமட்டுமின்றி இப்போது வரை மகிழ்ச்சியுடன் இருந்து விட்டுச் சட்டென அழும் தாயின் குணம் அவனுக்கு முதல் அதிர்ச்சி.

“இப்படி அப்பா அம்மா பேர் தெரியாவளைக் கட்டி வைக்க வேணாம்னு நான் அன்னிக்கே சொன்னேன். உங்களுக்குப் பிடிக்கலைன்னாலும் நீங்கதாம்மா கட்டி வச்சீங்க. இப்ப வாழ்க்கையை இழந்துட்டு நிக்குறது என் தம்பிதான். அவளுக்கென்ன! நம்ம குடும்பம் மானம் போச்சு.” என விலாசினியும் பேச ஆதியால் அவர்கள் பேசிய விஷயத்தைக் கிரகிக்க முடியவில்லை.

“உனக்கு அவ டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பிருக்கா ஆதி. அவளை வெட்டி விடு முதல்ல. நான் நல்ல பொண்ணா, நம்ம குடும்பத்துக்கு ஏத்தவளா, அந்தஸ்தோட பார்த்து உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.” எனச் சகோதரி மேலும் பேச ஆதிக்கு ஏதோ தெளிவாகப் புரிவது போல் இருந்தது.

“நான் ஒரு வேலையாக வெளியில் போகணும். கிளம்பறேன்.”

அவன் இப்படி சில தடவை வெளியூர்களுக்குச் செல்வது வாடிக்கை என்பதால் அவர்களும் எதுவும் கூறவில்லை. தன்னுடைய அறைக்குச் சென்று தளர்வாக அமர்ந்தவனுக்கு சுக்ரீவின் அழைப்பு வர அதை ஏற்றான்.

“ஆதி, அந்தப் போஸ்டல் கவரில் லாயர் அட்ரஸ் இருக்கு. நான் போட்டோ அனுப்பறேன். நீ கிளம்பி அங்க போ. முகியைப் பத்தி தெரிஞ்சுக்கலாம்.”

அவனுக்குத் தெரியாமல் பின்னப்பட்ட வலைகளில் மாட்டிக் கொண்டவனுக்கு ஒரு ஒளி தெரிய உடனே அவன் அதைத் தேடிச் சென்றான்.

“எங்க இருந்தாலும் நீ பத்திரமா இருடி.” என முணுமுணுத்துக் கொண்டவன் வேகமாகத் தன்னுடைய உடைமைகளைப் பெட்டியில் போட்டவன் அறையை விட்டு வெளியே வந்தான்.

மீண்டும் மும்முரமாகப் பேசிக் கொண்டிருந்த அன்னையையும், அக்காவையும் பார்த்தவனுக்குத் தெளிவாக ஏதோ புரிந்தது. அவர்களிடம் தலையசைத்து விட்டுக் கிளம்பினான்.

***

மாலைப் பொழுதை இருள் விழுங்கி விட்டிருந்தது. விடுதியின் ஐந்தாவது தளத்தில் உள்ள தனது அலுவலக அறையின் பால்கனியில் போடப்பட்டிருந்த நாற்காலியில் காற்று வாங்கியபடி மங்கிய வெளிச்சத்தில் அமர்ந்திருந்தான் ருத்ரசேனா. தன்னுடைய வெண்ணிற உடையிலிருந்து, இலகுவாக மேல் சட்டை மற்றும் பேன்ட் என மாறி இருந்தான். மார்பில் இரண்டு சட்டைப் பட்டன்கள் கழற்றி விட்டிருந்தான். அருகில் சில பூந்தொட்டிகளும் இருந்தது. கண்ணாடியால் கடலைப் பார்க்கும்படி அறையின் கதவு இருக்க, அதை மறைக்கப் போடப்பட்டிருந்த திரைச்சீலைகள் திறந்த கதவின் உபயத்துடன் பறந்து கொண்டிருந்தன.

சிவகாமினி கூறியபடி அவனது பேஸ்ட்ரி உணவு வகைகளுக்கு மிகுந்த வரவேற்பு. மூன்று நாட்களாக மிச்சமின்றி அனைத்தும் காலியாகிருந்தது.

வெளிநாட்டு மக்களின்றி, இந்திய நாட்டின் மற்ற பகுதிகளிலிருந்து வந்து தங்கி இருக்கும் பயணிகளும் உணவை ஆர்வமுடன் வாங்கி உண்டனர். சிவகாமினி கூறியபடியே மீண்டும் வாடிக்கையாளர்கள் வேண்டும் எனக் கேட்டிருந்தனர்.

அனைத்தையும் தீர விசாரித்து விட்டு, ஆராய்ச்சி செய்து ஒரு முடிவுக்கு வந்திருந்தான் ருத்ரா. அதைச் சிவபொன்னம்பலத்திடமும், சிவகார்த்திக்கிடமும் கூறி இருந்தான். காமினியிடம் இன்னும் கூறவில்லை. ஆனால் தகவல் அறிந்த அவள் உடனே ருத்ராவைத் தேடி வந்திருந்தாள்.

அவனுடைய அறைக்கதவு தட்டப்பட, “கம் இன்” என்றதும் உள்ளே வந்தாள் சிவகாமினி.

இன்று வெந்தய நிறத்தில் அலுவல் சீருடையில் இருந்தாள். டொக் டொக் என அவள் நடந்து வரும் சத்தம் கேட்டது. ருத்ரா வரிவடிவமாக அமர்ந்திருந்தது திரைச்சீலைகளின் இடையே தெரிந்தது.

“இங்க இருக்கியா ருத்ரா?” என உற்சாகத்துடன் பேசியபடி வந்தாள். அவள் குரலில் உற்சாகம், சந்தோஷம் என அனைத்தும் வெளிப்பட்டது.

“ருத்ரா, ஐம் ஸோ ஹேப்பி!” என்றபடி அவனைத் தோளோடு சேர்த்துக் கட்டிக் கொண்டாள்.

“ஏன் ருத்ரா, எங்கிட்ட முதல்ல இதைச் சொல்லலை? கேட்டதும் எவ்வளவு சந்தோஷம் தெரியுமா! தேங்க்ஸ் ருத்ரா, இதை இவ்வளவு சீக்கிரம் அப்ரூவ் பண்ணதுக்கு.”

உடனே அவளைத் தன்னிடமிருந்து விலக்கி விட்டு எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான். அவன் முகத்தில் இலேசாகப் புன்னகை இருப்பது போல் தோன்றியது. ஆனால் புன்னகைக்கவில்லை. ஆனால் எதிரில் காமினி புன்னகையுடன் அமர்ந்திருந்தாள்.

“ஓகே காமினி. நீ நினைச்சபடியே நடந்துருச்சு. மூணு நாள் பேஸ்ட்ரிஸ் சமையல் இருக்கும். ரூம் ரெண்ட் காஸ்ட் ஏத்திட்டேன். அதே மாதிரி ஹவர் பேஸிஸ்ல சேலரி ஏத்தி ஃபைல் ரெடி பண்ணிட்டேன். நீ கொடுத்த டாக்குமெண்ட்டில் சில சேஞ்சஸ் பண்ணி இருக்கேன். நாளைக்கு உன்னோட கைக்கு வரும். இப்ப நான் தனியாக இருக்கணும். கேன் யூ லீவ்?” என்றான்.

“ஓகே. நீ தனியா என்ஜாய் பண்ணு.” என்றவள் அவனைப் பார்த்தபடி எழுந்து கொண்டு காலை முன் வைத்தாள்.

காலை முன் வைத்தவள் திரைச்சீலையின் மீதும், புடவையின் மீதும் வைக்க, அது அவளுடைய ஹீல்ஸ் செருப்பில் மாட்டிக் கீழே விழப் போனவளை தாங்கிக் கொண்டது ருத்ரனின் கரங்களும், கன்னமும்.

 

தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page