ராம் அவரின் பிஏவுடன் அவரின் அறைக்குள்ளே நுழைந்து அவரின் இருக்கையில் அமர்ந்து அன்றைய வேலைகளை எல்லாம் கேட்டுக்கொண்டே சைட்டில் அன்றைக்கு நடக்க வேண்டிய வேலைக்கான அனுமதி கையெழுத்துகளை போட்டப்படியே நிமிர அங்கு ரதியில்லை என்பதை அப்போதே கண்டார்.
உடனே “என் கூட வந்த பொண்ணு எங்க?” என்று ஸ்டெல்லாவை பார்த்து கேட்க
“அவங்க அங்கையே நின்னுட்டாங்கன்னு நினைக்கிறேன் சார்…” என்று கூற
“போயி அவங்கள கூட்டிக்கிட்டு வாங்க…” என்று கூறியபடியே சில செக்கில் ராம் கையெழுத்து போட
ஸ்டெல்லாவும் ஒருமுறை ராமை பார்த்துவிட்டே வெளியே சென்று லிப்ட்டுக்கு வெளியவே நிற்கும் ரதியை கண்டாள்.
“இவ யாரு? இவ எதுக்கு சாரோட வந்தா?” என்ற கேள்வி மனதில் எழுந்தாலும் நமக்கு தெரியாமையா போயிடும் என்றே ரதியிடம் சென்று “உன்னைய சார் வர சொன்னாரு…” என்றாள்.
ஸ்டெல்லாவை சுத்தமாக ரதிக்கு பிடிக்கவில்லை.
ஸ்டெல்லாவை தலையில் இருந்து கால் வரைக்கும் ஒருமுறை பார்த்துவிட்டே “யாரு அந்த சாரு?” என்று வேண்டுமென்றே கேட்க
“சார் யாருன்னு தெரியாம தான் சார் கூடவே வந்தாலோ… ஆமாம் இவ எதுக்கு இப்ப நம்ம கிட்ட இப்படி பேசுறா?” என்றே நினைத்துக்கொண்டு “இந்த ஆபிஸ் ஓனர்… அவர் கூட தானே அவரோட பர்ஸ்னல் லிப்ட்ல வந்த…” என்று கூற
“உன்னோட சார் கூட பர்சனல் லிப்ட்ல வந்த என்கிட்ட எப்படி மரியாதையா பேசணும்னு கூட உனக்கு தெரியாதா?” என்று ரதி கேட்க ஸ்டெல்லாவின் ஈகோவை தொட்டது போல் இருந்தது.
அதுவரை மலர்ந்த முகமாக பேசிய ஸ்டெல்லாவின் முகம் மாறி “சார் கூட தினமும் ஒரு பொண்ணு வரும் போவும்… அதுக்கெல்லாம் மரியாதை கொடுக்கணும்னு எனக்கு ஒன்னும் அவசியம் இல்ல… உன்னைய வர சொன்னாரு… வரேன்னா வா… இல்லாட்டி கிளம்பு…” என்று ஸ்டெல்லா முகத்தில் அடித்தது போல் கூற
அதுக்கெல்லாமா எவ்வளவு திமிர் என்றே “உன் சார் கிட்ட போயி சொல்லு… இனி என்கால்ல வந்து விழுந்தாலும் அவனோட வர மாட்டேன்னு…” என்றே வந்த லிப்ட்டின் உள்ளே நுழைந்து பட்டெனை அழுத்தினாள்.
ஸ்டெல்லாவுக்கு அவளை தடுக்க வேண்டும் என்று தோன்றவில்லை… “போ… எனக்கென்ன?” என்றே அவள் நேராக ராமின் அறையின் கதவை தட்டி அனுமதி கேட்டு உள்ள நுழைய
ஸ்டெல்லா மட்டும் வருவதைக் கண்டு “எங்க அந்த பொண்ணு?” என்று ராம் கேட்க
ரதி பேசியதில் சினமாகவே வந்த ஸ்டெல்லாவும் “ரொம்ப திமிரா பேசுறா சார்… நீங்க கூப்பிட்டீங்கன்னு கூப்பிட்டா உங்களையே யாருனு கேக்குறா… நீங்க யாருன்னு சொன்னா அது இதுன்னு பேசிட்டு அவ கால்ல போயி நீங்களே விழுந்தாலும் இனி வரமாட்டேன்னு சொல்லிட்டு திமிரா கிளம்பிட்டா சார்…” என்று படபடவென கூற
“என்ன கிளம்பிட்டாளா? இடியட்…” என்றே ராம் அவசரமாக எழுந்து வெளியே ஓடினார்.
ராம் ஓடுவதை கண்டதும் ஸ்டெல்லாவும் புரியாமல் ராமின் பின்னாடியே ஓடியவள் “சார் சார்…” என்று அழைத்துக் கொண்டே வர ராம் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் லிப்ட்டின் பட்டனை அழுத்த லிப்ட் கீழே சென்று கொண்டிருப்பதை கண்டதும் அவசர அவசரமாக படிக்கட்டு வழியாக கீழே இறங்க ஆரம்பித்தார்.
ராமின் இத்தகைய பதட்டத்தை கண்டதும் ஸ்டெல்லாவுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது… ஏதாவது முக்கிய கிளைண்டா இருப்பாங்களோ என்று நினைத்தே ராமின் பின் ஓடிவந்தாள்.
தரை வந்த ராம் எந்த பக்கம் போகலாம் என்று யோசித்துக்கொண்டு இருந்த ரதியின் முன் ஓடிவந்து குனிந்து முட்டிகாலில் கரத்தை ஊன்றி மூச்சி வாங்கிய படியே “இப்ப என்ன கால்ல விழுந்தா தான் என்கூட வருவியா?” என்று கேட்க
“என்னைய அப்படியே அம்போனு விட்டுட்டு போனல… அதுக்கு கால்ல விழுந்தாலும் தப்பில்ல…” என்றாள்.
இதை சிறிதும் எதிர்பார்க்காத ராம் பின்னாடி வந்த ஸ்டெல்லாவை பார்த்து எச்சில் விழுங்கியே திரும்பி ரதியை பார்த்து “ரெண்டு பேரும் ஒண்ணா தானே வந்தோம்… நீ என் கூடவே வருவன்னு நினைச்சேன்… நீ என் கூட வரலன்னு தெரிஞ்சதுமே நான் உன்னைய அழைக்க ஆள் அனுப்பினேனே… அப்பறமும் கால்ல விழணுமா?” என்று ராம் அப்பாவியாக கேட்க
ரதியோ ஸ்டெல்லாவை ஒரு நக்கல் பார்வை பார்த்துவிட்டு ராமை வில்லங்கமாகவே பார்த்து “அப்போ நீ என்னைய அழைக்க வர மாட்ட… கண்டவங்கள என்னைய அழைக்க அனுப்புவ… நானும் ராம் உன்னைய அழைச்சிக்கிட்டு வர சொன்னார்னு யார் வந்து சொன்னாலும் அவங்க பின்னாடியே போகணும்… அப்படித்தானே…” என்றவளின் வார்த்தையில் ராம் முழி பிதுங்கி தான் போனார்.
ஆனால் அவள் கூறுவதும் சரி தானே… நாளைக்கே யாராவது அவளிடம் சென்று ராம் வர சொன்னார்னு சொல்லி அவள கடத்திக்கிட்டு போயிட்டா என்று யோசித்த ராம் உடனே “சாரி சாரி… தப்பெல்லாம் என் மேல தான்… நான் யாரையும் இந்த மாதிரி அனுப்பியிருக்க கூடாது… இனி இந்த மாதிரி கண்டவங்களை எல்லாம் அனுப்பி உன்னைய கூப்பிட சொல்ல மாட்டேன்… இனிமே எப்பவுமே எங்கே இருந்தாலும் உன்னைய அழைக்க நான் தான் வருவேன்… நான் மட்டும்தான் வருவேன்… நான் கூப்பிட்டதா யார் வந்து எப்ப சொன்னாலும் அவங்க கூட நீ போகக்கூடாது… சரியா?” என்று ஏதோ சின்ன பிள்ளையிடம் சொல்வது போலவே சொல்ல அவளும் நல்ல பிள்ளையாக தலையாட்டினாள்.
அவள் தலையாட்டியதும் அவளின் தலை முடியை கலைத்து “இப்ப போலாமா? நிறைய மீட்டிங் இருக்கு…” என்று கூற
“போலாம்… ஆனா அதுக்கு முன்னாடி ஒரு ஆரஞ்சு ஜூஸ் வேணும்…” என்று கேட்க
உடனே ராம் ஸ்டெல்லாவை வாங்கி வர சொல்ல பார்க்க ஸ்டெல்லாவும் “வாங்கிக்கிட்டு வரேன் சார்…” என்று கூறி செல்ல போக
அவசரமாக “இல்ல இல்ல அவங்க வேணாம்… அவங்க பாட்டுக்கும் அவங்களோட பாஸ்ச நான் ரொம்ப டார்ச்சர் பண்றேன்னு சொல்லிட்டு எனக்கு வாங்கிட்டு வர ஜூஸ்ல எச்சி துப்பிட போறாங்க… எனக்கு வேணாம்ப்பா…” என்றவளை பார்த்த ராமும்
“ஓகே… நான் வாங்கிக்கிட்டு வரேன்… நான் வாங்கிட்டு வந்தா குடிப்ப தானே…” என்று கேட்க
“கண்டிப்பா ராம்…” என்றே ராமின் கரத்தோடு கரம் கோர்த்து அவருடன் நடந்தாள்.
ராமும் “ஜூஸ் மட்டும் போதுமா? ஏதாவது ஸ்னாக்ஸ் ஃப்ரூட் சாலட் இந்த மாதிரி ஏதாவது…” என்று கேட்டே அழைத்து செல்ல ஸ்டெல்லாவின் வயிறு எரிந்தது.
கிட்ட தட்ட பல வருஷமாக ராம் பார்வை தன் மீது இப்போது விழுமா? இந்த நிமிடம் விழுமா? இன்றாவது விழுமா? இந்த மீட்டிங் போதாவது விழுமா? இந்த பிசினஸ் நைட் டின்னர் போதாவது விழுமா? என்றே காத்திருந்தவளுக்கு உலகம் அவளின் காலை விட்டு நழுவுவது போல இருந்தது.
ராம் கரத்தோடு ரதியின் கரம் சேரும் போது ஸ்டெல்லாவின் இதயத்திலையே யாரோ நெருப்பை வைத்தது போல எரிந்தது… அவள் விரும்புவரை தனியாக ரதியுடன் விட ஸ்டெல்லாவின் மனம் விடவில்லை.
அதோடு அவள் ராமின் கூடவே இருக்க தான் பிஏ என்ற பதவி இருக்கின்றதே… அவளும் அவர்களின் பின்னாடியே சென்றாள்.
ராம் ஆரஞ்சு ஜூஸ் கூறிவிட்டு அவள் கேட்ட அனைத்தையும் வாங்கினார்… கூடவே ஸ்பெஷல் ஆக ஒரு பெரிய டைரி மில்க் சாக்லேட்டையும் வாங்கி “நிறைய மீட்டிங் நடக்கும்… அப்ப எல்லாம் உனக்கு போர் அடிக்கும் போது சாப்பிடு…” என்று ரதியிடம் நீட்ட
உண்மையிலேயே ரதிக்கு டைரி மில்க் என்றால் கொள்ளை பிரியம்… அதனை முகம் கொள்ளா புன்னகையுடன் வாங்கியதும் ராமின் மீதே பாய்ந்த அணைத்து அவரின் கன்னத்தில் ஒரு முத்தம் தந்து “தேங்க்யூ தேங்க்யூ சோ மச்… ஐ லவ் டைரி மில்க்…” என்றே அவள் கூற
ஒரு நிமிடம் ரதி தந்த முத்தத்தில் ராமின் தலையே சுற்றி மூச்சு முட்டுவது போல் இருந்தது… ஆனால் அடுத்த நிமிடமே அதை சரி செய்து அவரை அவரே சமம் செய்து கொண்டு அணைத்திருந்த ரதியை விலக்கி நிறுத்தி
“ஜூஸ் வந்துடுச்சி…” என்று கூறி ஜூஸ் வாங்கி அவளின் கரத்தில் தந்துவிட்டு ரதி வாங்கிய பிஸ்கட் லாலிபாப் மிட்டாய் இன்னும் சிலவற்றை எல்லாம் ராம் அவரே அவரின் கோட் பாக்கெட்டில் வைக்க ரதியும் இடதுகரத்தில் வைத்திருந்த டைரி மில்க்கையும் ராமின் கோட் பாக்கெட்டில் சொருக்கிக்கொண்டே
“இதெல்லாம் நீ சாப்பிட மாட்டல்ல…” என்று கேட்க
“மாட்டேன்ம்மா… எல்லாம் உனக்கு தான்…” என்று கூறி செல்ல ராமின் கரத்தோடு கப்பில்ஸ் கரம் கோர்ப்பது போலவே கோர்த்துக்கொண்டு ஜூஸ் பருகியபடியே ரதி சென்றாள்.
இடை இடையே ஸ்டெல்லாவையும் பார்த்துக்கொண்டாள் ரதி.
லிப்ட் உள்ளே ராம் ரதி நுழைய அவர்களின் பின்னாடியே வந்த ஸ்டெல்லா “நான் அந்த லிப்ட்ல வரேன்…” என்று கூற
உடனே ரதி “குட்…” என்றதும் ஸ்டெல்லா ஒருமுறை ராமை பார்த்தாள்.
ராமோ பட்டனை அழுத்தினார் விரைவாக மேலே செல்ல வேண்டும்… வேலையெல்லாம் அப்படியே இருக்கு என்று.
ரதி கூறியதற்கு எதுவும் ராம் கூறவில்லை என்றதும் ஸ்டெல்லாவின் மனம் உடைந்தே போனது.
“இத்தனை வருடம் கூடவே தானே வருகிறாள்… பரவாயில்ல உள்ள வா என்று ஒரு வார்த்தை கூடவா சொல்ல தோன்றவில்லை…” என்றே நினைத்தபடி வேதனையுடன் மறுபக்கத்தில் இருந்த எம்ப்ளாயீஸ் பயன்படுத்தும் லிப்டில் ஏறிக்கொண்டாள்.
லிப்டை விட்டு வெளியே வரும் பொழுது ரதி மெல்லிய குரலில் “ஆமா உன் கூடவே நீ சொல்ற எல்லாத்தையும் செய்ற அந்த லேடி யாரு?” என்று கேட்க
ராம் புரியாமல் “யார கேக்குற?” என்று கேட்க
“என்னைய கூட்டிக்கிட்டு வர சொல்லி ஒரு ஆள அனுப்புனியே… அந்த ஆளு தான் யாருன்னு கேட்கிறேன்…” என்று ரதி வினாவ
“ஓஓ அவங்களா… அவங்க பேர் ஸ்டெல்லா என்னோட பிஏ…” என்று கூறியபடியே ராம் அவரின் அறையின் கதவை திறந்து ரதியை முதலில் உள்ளே போக வைத்து பின்னாடி நுழைந்தார்.
“தங்களின் முதலாளியே ஒரு பெண்ணிற்கு கதவை திறந்து விடுகிறார் என்றால் யார் அந்த பெண்?” என்று வேலை பார்க்கும் அத்தனை பேரும் அவர்களை தான் பார்த்தனர்.
ஆனால் ராம் அதை எதையும் கண்டுகொள்ளாமல் அறையின் உள்ளே நுழைந்தார்… முதலில் உள்ளே வந்த ரதி “ராம்… உன்கிட்ட பர்சனலா ஒரு விஷயத்தை சொல்லணும்னு நினைக்கிறேன்…” என்று கூற
“ம்…” என்று மட்டும் கூறிக்கொண்டு ராம் அவரின் இருக்கையில் அமர
அவரின் முன்னிருந்த டேபிளின் மீது சாய்ந்தே “ஐ திங்க் உன்னோட பிஏ ஸ்டெல்லா உன்னைய லவ் பண்றாங்கனு நினைக்கிறேன்…” என்றாள்.
வருவாள் ரதி…
