அத்தியாயம் 8

மன்னன் தந்த மாலை

அத்தியாயம் 8

 

“அரும்மா, இதை மட்டும் சாப்பிடுடா… காய்ச்சல் கண்ட உடம்பு, இப்படி எதுவும் சாப்பிடாம எதுக்கும்மா பிடிவாதம் பிடிக்குற?” என்ற அமுதாவின் கரங்களில் உணவுத் தட்டு இருக்க அதையே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் அருந்ததி.

“எனக்கு வேணாம் அமு, என்னைக் கம்பெல் பண்ணாத… கொஞ்சம் என்னைத் தனியா விடு.” என்றவளின் கண்களில் கொஞ்சமும் ஒளி இல்லை.

அவளின் கல்லூரிப் படிப்பை நிறுத்திவிட்டாள் சகுந்தலா. அதற்கு வீட்டு ஆட்களும் அமைதியாய் இருந்து விட அவளால் யாரிடமும் அனுமதி பெற முடியாமல் போனது.

அதுமட்டும் இல்லாமல் அவளை வீட்டை விட்டு எதற்காகவும் இப்போது வெளியே அனுப்புவதில்லை. கிட்டத்தட்ட வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டாள். யாருடனும் எதற்காகவும் அதிகம் பேச விடுவதில்லை இப்போது.

காரணம் பெரிதாய் ஒன்றுமில்லை. அவள் பெரிய பெண்ணாகிவிட்டாளாம். இனி அவள் வீட்டு வேலை கற்றுக் கொண்டால் போதும் திருமணம் செய்து கொடுத்து விடலாம்.

அதுமட்டும் இல்லாமல் அதிகம் படிக்க வைத்து முன்பு இந்தக் குடும்பத்தில் நடந்த சம்பவம்போல் மீண்டும் நடக்கக் கூடாது என்று எல்லோரின் மனதிலும் அது விதையாய் விழுந்துவிட்டது.

அவளுக்குத் திருமணம் செய்யாமல் துருவனுக்கும் திருமணம் நடத்த முடியாது. அதுதான் முதலில் அவளுக்குத் திருமணத்தை முடித்துவிட்டால் அடுத்தபடியாக இலக்கியாவை துருவனுக்கு முடித்துவிடலாம். அது சிறுவயதிலேயே பேசி முடிவெடுத்தது தானே என்று எல்லோரின் யோசனையும்.

ஏன் அன்புக்கும் அருந்ததிக்கும் தான் முதலில் திருமணம் நடக்க வேண்டும் என்று பரிமளம் நினைத்தார். அனைவரின் சிந்தனையும் அது தான்.

ஆனால் சகுந்தலவால் ராசி இல்லாதவள் என்ற பெயர் பரிமளத்தின் மனதையும் மாற்றியது.

இவ்வளவு ஏன் அன்புவும் அருந்ததி வயதுக்கு வந்ததிலிருந்து அவளைத் திருமணம் செய்யலாம் என்று நினைத்தவனுக்கு பரிமளம் தான் இப்போது தடையாய் இருந்தாள்.

நெகுநெகுவெனத் தங்கச்சிலையாய் இருந்தவளைப் பார்த்தவனின கண்களும், மனமும் அலைபாய்ந்தாலும் கூடச் சிறுவயதிலிருந்து தாய் சொல்லைத் தட்டாத தனயனாக இருந்ததாலோ என்னவோ சுயமாய் யோசிக்கும் சிந்தனை தான் இல்லாமல் போனது.

எடுப்பார் கைப்பிள்ளையாய் இருந்தான் அன்பரசன். பெயரில் மட்டும் அன்பு இருந்து என்னதான் பயனோ?

ஏனோ தன்னைவிட பேரழகியாய் இருக்கும் அருந்ததியைக் கண்டால் இலக்கியாவிற்குப் பிடிக்காது. எல்லா வயது வந்த பெண்களின் மனநிலை தான் அது.

அதனாலோ என்னவோ அதிகமாய் அருந்ததியுடன் பேசமாட்டாள். இப்போது தன் மகனுக்கும் அருந்ததி வேண்டாம் என்று பரிமளம் மறுத்து விட அவளுக்கு வெளியிலிருந்து மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தாள் சகுந்தலா.

கற்பகநாயகியும் மாணிக்கமும் வீட்டில் நடப்பதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை என்று சொல்வதை விட அவர்களின் கவனம் இங்கே இல்லை என்பது தான் உண்மை.

இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் மண்ணில் புதைக்கப்பட்ட உண்மை வெளிவந்துவிடுமோ என்ற பயமே அவர்களை நிம்மதி இல்லாமல் அலைக்கழித்தது. அதே நேரம் உண்மையை ஒப்புக் கொள்ள அவர்களுக்குத் துணிச்சல் இல்லை. அப்படி எதைக் கண்டு தான் இந்தப் பயமோ?

அன்று அருந்ததியைப் பெண் பார்க்க வருகிறார்கள் பக்கத்து ஊரிலிருந்து. அவளால் அதைத் தடுக்க முடியவில்லை என்பதை விட அப்போது அவள் உணர்ந்த செய்தி தான் அவளைப் பெரிதும் அலைக்கழித்தது.

ஆம்! அதுதான் தன் அத்தானின் மேல் இத்தனை நாளாய் படர்ந்திருந்த பாசத்தை நேசம் என்று உணர்ந்த தருணம்.

அவளுக்கென்று கல்யாண கனவுகள் என்றும் எப்போதும் இருந்தது இல்லை. அந்த வீட்டில் யாருக்கும் பிடிக்காதவளாய் ராசி இல்லாதவளாய் வெறுத்து ஒதுக்கிய பின்பும் தன்னை ஒருவனுக்குத் திருமணம் செய்து கொடுக்க முன்வருவார்களா என்ன? இதுதான் அவளின் அறிவுக்கு எட்டிய சேதி.

ஆனால் அவள் அறியாதது இன்னும் அதிகமாக உள்ளது அந்தக் குடும்பத்தில். பேருக்காகவும் புகழுக்காகவும் சிறப்பு வாய்ந்த இந்தக் குடும்பம் ஜாதிவெறியிலும் சிறப்பு வாய்ந்தது தான்.

அதை அவள் அறியும் நாள் வெகுதொலைவில் இல்லை.

“என்னடா தங்கம், இப்படி உட்காந்து இருக்கே? என்னாச்சு சாமி…” என்றபடி வீட்டின் பின்புற தோப்பின் கல்லில் அமர்ந்திருந்த அருந்ததியின் அருகே வந்து நின்றபடி கேட்ட அமுதாவை ஒருபார்வை பார்த்தவள்,

“அமு, நான் உன்கிட்ட ஒன்னு சொல்லுவேன். ஆனா நீ என்னைத் திட்டக் கூடாது, சரியா?” என்றாள் புதிர் போட்டபடி.

“என்ன‌ அரும்மா…” என்றவரின் உள்ளம் சற்று கலங்கி தான் இருந்தது.

“நான் அத்தானையே கல்யாணம் செஞ்சுக்கவா அமு?” என்றாள் தூரத்தே தெரிந்த ஆதவனைக் கண்டபடி.

“எ… எந்த அத்தானை சொல்ற அருந்ததி?” என்றவரின் பார்வை தங்களை யாரேனும் பார்க்கிறார்களா என்று பார்த்தபடியே இருந்தது.

“விவேக…” என்று அவள் பெயரைச் சொல்வதற்குள்ளாகவே அவளின் வாயில் தன் கரத்தை வைத்துப் பொத்தியவள்,

“அய்யோ தங்கமே! எதுவும் பேசாதடா…இங்கே சுவத்துக்கும் கூடக் காது இருக்குது.” என்று படபடப்பாகப் பேசியவள்,

“அரும்மா, இதைப்பத்தி யாருகிட்டேயும் பேசாதம்மா. இது மட்டும் வெளியே தெரிஞ்சா உன் அத்தானோட உயிருக்கும் உலை வச்சிடுவாங்கடா இந்த மிருகங்க…” என்றவளின் கண்களிலும் கண்ணீர் தான் வழிந்தது.

“அமு, எனக்கு அத்தானை இத்தனை நாளா பிடிச்சது பாசத்துலன்னு தானே நினைச்சேன். ஆனா இப்போ தான் உணர்ந்தேன் எனக்குப் புருஷன்னா அது என்னோட விவேகன் அத்தானாத்தான் இருக்க முடியும். அமு, அத்தானை வந்து என்னை இங்கேயிருந்து கூட்டிட்டுப் போகச் சொல்லுங்களேன். ப்ளீஸ்! நீங்கச் சொன்னா கேட்பாரு தானே?” என்றவளின் விழிகளில் தெரிந்த யாசகத்தில் அன்னையாய் அரவணைத்த மனம் தவித்துத் துடித்தது.

தன் தங்கத்திற்காக யாரிடம் வேணாலும் இறங்கிப் பேசலாம் என்று தான் அமுதாவின் மனம் துடித்தது.

ஆனால் விவேகன் இதை ஏற்றுக் கொள்ளுவானா? அவன் பட்ட அடியும் வேதனையும் கொஞ்சம் இல்லையே? பழைய நிகழ்வுகளை அவனால் மறந்து இதோ மலரினும் மென்மையானவளைத் தாங்கிக் கொள்ள முடியுமா?

அப்படி நடந்தால் அவனின் லட்சியம், அவனின் பாதை, பயணம் இதில் வெற்றி பெறுவானா? இல்லை அவனின் தாய்க்கு ஏற்பட்ட நிலை அவனுக்கும் தோன்றினால் வசுவின் ஆன்மா என்னை மன்னிக்குமா?

மனதோரம் ஆயிரம் விவாதங்கள் தோன்றியதில் அவளின் உடலில் வியர்வை நாளங்கள் அதிகமாய் சுரந்திருந்தன.

“அமு… அமு என்னாச்சு உனக்கு?” என்ற அருந்ததியின் உலுக்கலில் நினைவு வந்தவள் அருந்ததியை சற்று நேரம் பார்த்து விட்டு,

“தங்கம், உன்னோட நிலமையை உன் அத்தான்கிட்ட நான் சொல்றேன். ஆனா அவனை நான் வற்புறுத்த முடியாது ராஜாத்தி. அதுக்கு மேல அவனோட முடிவுடா தங்கம்.” என்றார் கலங்கிய குரலில்.

“அமு, அப்போ இப்பவே அத்தானுக்கு கூப்பிடு. இப்பவே சொல்லு… அவரு என்ன சொல்றாருன்னு நானும் கேட்கணும்.” என்றாள் படபடப்பாய்.

“யாராவது வந்துர போறாங்க தங்கம்…” என்ற அமுதாவின் பார்வை சுற்றியும் தான் இருந்தது.

“இப்போ வீட்ல யாருமில்லை அமு. நீ இப்போ அத்தானுக்கு பண்ணு…” என்றாள் படபடப்பாய்.

அதற்கு மேலும் மறுக்கமுடியாமல் தன் அலைபேசியை எடுத்தவள் விவேகனுக்கு அழைத்தாள்.

அவன் எடுக்கும் நொடிக்காக ஆர்வமாய் காத்திருந்தாள் அருந்ததி.

அந்த அலைபேசி அழைப்பை அவன் உடனே எடுக்கவில்லை. கிட்டத்தட்ட அலைபேசி அணையும் நேரம் அதுவரை இருந்த ஆர்வம் போய்ப் பெண்ணவளால் ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கண்கள் கலங்கி கண்ணீர் துளி கீழே விழும் நேரம் தான் அவனின் கம்பீரமான குரல் கேட்டது.

அதில் அழுது கொண்டே சிரித்தபடி அமுதாவைப் பார்த்துப் பேசச் சொன்னாள்.

“ராஜா நல்லாருக்கீங்களா?” அருந்ததியை பார்த்தபடியே பேசினாள் அமுதா.

“ஹ்ம்ம்… நல்லாருக்கேன் சொல்லுங்க திடீர்னு கூப்பிட்டுருக்கீங்க…” என்றவனின் குரலில் என்ன இருந்ததோ அவனே அறிவான்.

“அது வந்து ராஜா…” என்று அவர் ஆரம்பிக்கும் போதே மொபைலை தன் கைக்குள் பறித்துக் கொண்ட அருந்ததி,

“அத்தான், இந்த முறை போனை கட் செஞ்சீங்கன்னா உங்க பட்டுவை நீங்க உயிரோட பாக்க முடியாது. இது நீங்க உயிரா மதிக்குற உங்க அம்மா மேல சத்தியம்!” என்று பட்டெனக் கூறிவிட்டாள்.

அதை அந்தப் பக்கம் கேட்டவன் அதிர்ச்சியில் அப்படியே திகைத்து இருக்க, அந்த நேரத்தைப் பயன்படுத்தி தன் மனதில் உள்ள அத்தனை விஷயங்களையும் கொட்டித் தீர்த்தவள் இந்த முறை அவனுக்கு முன்பே அணைத்தாள் அலைபேசியை.

அமுதாவோ அவளையே அதிசயமாய் பார்த்திருந்தார். இந்தப் பெண்ணுக்குள் இத்தனை விஷயங்கள் இத்தனை நாளாய் உறங்கிக் கிடக்கின்றதா என்று நினைத்தவர் அருந்ததியிடம் திரும்பி,

“உன் அத்தான் வருவான்னு நம்புறியா அரு?” என்றார் இறுதியாக.

“அவரோட பட்டுக்காக அவரு வருவாரு அமு…” என்று அவரிடம் சொல்லியவளின் பார்வை அப்படியே தோட்டத்திலிருந்த அரளிச் செடியில் பதிந்தது.

‘அவரு வந்தா இந்த உயிரு‌ வாழும்… இல்லைன்னா இந்த உயிரு உன்னால தான் போகும்…’ என்றாள் மனதோரம்.

அவளின் உண்மையான மனநிலையை அறியாத அமுதாவோ மெல்லச் சிரித்தபடி தன் கடவுளிடம் வேண்டுதல் வைத்தபடி உள்ளே வேலையாய் சென்றுவிட்டார்.

அப்போது வீட்டின் உள்ளே இருந்த தொலைக்காட்சியில் வந்த பாடலில் அவளின் உள்ளம் சென்றது.

சண்ட போட்ட கெண்டை மீனு
ரெண்டும் சேந்து ஒண்ணாச்சு
ரெண்டும் சேந்து கொஞ்சும்போது
ஏரித் தண்ணி தேனாச்சு

தூண்டியிலே சிக்கவில்ல
சுத்தி வரக் கொக்கும் இல்ல
மீனு ரெண்டும் தூங்கயில
அக்கம் பக்கம் யாரும் இல்ல

ரெண்டு மீனும் கண் முழிச்சா
ஏரியில தண்ணி இல்ல
ஏரியில தண்ணி இல்ல

ஆசை வச்சேன் உன் மேல
மச்சான் அரளி வச்சேன்
கொல்லையிலே
ஆசை வச்சேன்… உன் மேல
உன் மேல…

இந்த வரிகளில் அவளின் மென்மையான உள்ளம் உடைந்து ஆடவனை தேடியது.

அவளின் தேடலுக்குச் சொந்தமானவனோ இத்தனை நேரமாய் கேட்ட குரலில் உள்ளம் மகிழ்ந்தாலும் கூட அந்தக் குரலில் இருந்த வலியும் உறுதியும் ஆடவனை அசைத்துப் பார்த்தது.

‘வலிகளில் தன்னைத் தானே செதுக்கி கொள்ளும் சிற்பியும் அவளே…
சிலையும் அவளே…
உளியும் அவளே…
உயிரும் அவளே…

எத்தனை உண்மையான வரிகள்! இந்தப் பெண்களுக்குத் தான் எத்தனை எத்தனை வேதனைகள் வந்தாலும் கூடத் தனக்கு வேண்டும் விஷயங்களுக்காக எத்தனை போராட்டங்களைச் சந்திக்கின்றனர். அதில் இவளும் ஒருவளே!’ என்று நினைத்தவனின் மனம் அவள் பேசிய பேச்சுக்களை மீண்டும் அசைபோட்டது உள்ளம்.

அப்படி என்ன தான் பெண்ணவள் பேசியிருப்பாள்? அடுத்த பாகத்தில் பாக்கலாம் செல்லம்ஸ்.

‌‌மாலை வரும்…✍️

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page