அத்தியாயம் 9
அறைக்குள் சென்றதும், “சார்.. பாட்டிமா நம்ம ரெண்டு பேரையும் இன்னைக்கு மட்டும் விலகி இருக்க சொன்னாங்க” நதியா பயந்தவாறு சொல்லி முடித்ததும் மிதுன் சத்தமாகச் சிரித்தான்.
அவள் அவனை கேள்வியாய் பார்த்திருக்க, “என் பாட்டி என்கிட்ட எதும் சொல்லலையே” புருவத்தை தூக்கி வினவினான்.
“என்கிட்ட தனியா கூப்பிட்டு சொல்லி அனுப்பி….” அவள் சொல்லி முடிப்பதற்குள் கழுத்தில் கை வைத்து நெறித்து, அவளை கொஞ்சம் தூக்கியிருந்தான். அவள் மூச்சு விட முடியாமல் தவித்து, அவன் கைகளைப் பிடித்து இழுக்க முயற்சிக்க,
அவளை மெத்தையில் போட்டவன், “தினமும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தள்ளி இருக்கலாம்னு பார்க்குறியா? நானும் பார்த்துட்டே இருக்கேன். ஏதாவது பொய் சொல்ல வேண்டியது, பாவமா முகத்தை வச்சுக்க வேண்டியது. ச்சீ.. கெட் லாஸ்ட்” கோபத்தில் கர்ஜித்தான்.
“ஆஆ..” வலி தாங்காமல் கழுத்தை பிடித்து முனகியவள் அவன் முகத்தையே பார்த்தாள். ‘டேய் பாவி.. விட்டா என்னைக் கொன்னுருப்பான். உனக்கு பூஜை பண்ணனும்னு உன் பாட்டி தான தள்ளி இருக்க சொன்னாங்க. அவங்களை போய் கேட்டுத் தொலைய வேண்டியது தான’ அவளால் பேச முடியுமா, மனதோடு நினைத்து மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள்.
மிதுன் அங்கிருந்த ஒரு அலமாரியைத் திறந்து ஒரு சின்ன மரப்பெட்டியை எடுத்தான். அதிலிருந்து பார்ப்பதற்கு சுருட்டு போல தோற்றமுள்ள Davidoff சிகரெட்டையும், ஒரு லைட்டரையும், கையோடு ஆஷ் டிரேயும் எடுத்தவன், அங்கிருந்த தேக்கினால் ஆன ஈஸி சேரில் அமர்ந்தான்.
சிகரெட்டை அவன் அதரங்களுக்கு இடையே பொருத்தியவன், லைட்டரில் டிராகன் தலை போன்றிருந்த பிரஸ் பட்டனை அழுத்தியதும் நெருப்பு வர, சிகரெட்டைப் பற்ற வைத்தவாறு அவளைப் பார்த்தான். அனல் சிந்தும் அவன் பழுப்பு நிற விழிப் பார்வையில் மிரண்டாள் பாவையவள்.
கண்களை மூடி ஆசுவாசமாக இருக்கையில் சாய்ந்தவன், அந்த சிகரெட் புகையை இழுத்து நுரையீரலுக்கு அனுப்பிக் கொண்டிருந்தான். அனுப்பிய புகையில் கொஞ்சம் வெளியே வர, அறையில் சிகரெட் நெடி வீசிட, நதியா இருமினாள்.
‘இவனுக்கு குழந்தை பெத்துக் குடுக்கிற நான் சிகரெட் குடிக்கக் கூடாதாம். இவன் மட்டும் சிகரெட் குடிச்சுட்டு வந்து …….. அடச்சே வரவர கெட்ட வார்த்தையா தான் பேசறேன். இப்போ என்ன சொன்னேன்னு டென்ஷனாகி தம் அடிக்கிறான். சைக்கோ பிடிச்ச ரோபோ.. இவன் பண்ணதுக்கு நான் தான் டென்ஷன் ஆகணும்’ தனக்குள்ளே புலம்பியவள் எழுந்து அவனுக்கு அருகில் சென்றாள்.
“சார்..” அவன் தொண்டையை இறுக்கியதால் அவளுடைய குரல் கரகரத்தது.
“ஹ்ம்ம்..” சிகரெட் புகையோடு பேசினான்.
சாரி சார். உங்களுக்காக பூஜை பண்ணனும்னு பாட்டி சொன்னாங்கன்னு தான் அப்படி சொன்னேன். நான் எல்லாத்துக்கும் ஒத்துக்கிட்டு தான இங்க வந்தேன். எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல” அவள் மெதுவாய் சொல்லிட, “ஹ்ம்ம்.. கோ அண்ட் கெட் ரெடி” அலட்சியமாய் சொன்னான்.
அவள் ஐந்து நிமிடத்தில் குளித்து, வெளியே வந்து உடைகளைக் களைந்து போர்வையைப் போர்த்திப் படுத்தவள், அவனைப் பார்க்க, அவன் இன்னமும் சிகரெட் தந்த போதையில் மயங்கியிருந்தான். அதை முடித்து கீழே வைத்திருந்த ஆஷ் டிரேயை கையில் எடுத்து, அதில் சிகரெட்டை அணைத்தபின் அந்த குப்பையை, எழுந்து குப்பைத் தொட்டியில் போட்டான். எடுத்த அத்தனையும் எடுத்த அலமாரியில் வைத்து மூடினான்.
‘சரியான ஓசிடி பைத்தியம் போல’ நதியா அவன் செய்வதையெல்லாம் வேடிக்கைப் பார்த்திருந்தாள்.
அவளுக்கு அருகில் வந்தவன், சிறிது நேரம் அவள் விழிகளைப் பார்த்தவாறு நின்றிருக்க,
‘உன்னோட கண்ணு வித்தியாசமா இருக்கே’ அவன் விழியழகில் தொலையவிருந்தவள், தன்னை மீட்டு அவனைப் பார்க்க, இன்னும் அவன் அப்படியே நின்றிருந்தான்.
‘ஏன் இப்படி பார்க்கிறான்?’ யோசித்தவள், நினைவு வந்தவளாய் கால்களை தூக்கி மெத்தையின் மேல் வைக்க, அவன் அவளை ஆட்கொண்டு தன் கடமையைத் தொடங்கினான்.
அதிகாலையிலேயே இண்டர்காமில் அழைப்பு வர, நதியா எழுந்து குளித்து ருக்மணி பாட்டி சொன்னதால், ஒரு சில்க் புடவையும் கட்டிக் கொண்டாள். அவள் கீழே இறங்கி வர, வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. கீழ்தளம் முழுக்க மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வேலையாட்கள் பூஜை அறையை சுத்தம் செய்து அலங்கரித்துக் கொண்டிருந்தனர். சமையலறையில் பிரசாதமும், வருபவர்களுக்கு சாப்பாடும் தயாராகிக் கொண்டிருந்தது.
ராதாவும், ரூபிணியும் தங்கள் தோழிகளுக்கு, உறவினர்களுக்கு போன் செய்து அழைப்பு விடுத்த வண்ணம் இருந்தனர். ரூபிணி வீட்டில் இருந்து அவளுடைய அப்பா, அம்மா, அதிதி மூவரும் வந்திருந்தனர். அங்கே வந்த பாட்டி நதியாவை பார்த்து, “மித்து ரெடி ஆகிட்டானா. போய் அவனையும் சீக்கிரம் ரெடியாகச் சொல்லு” என்க, திருதிருவென விழித்தவள், அவனை அழைக்க மேலே செல்வதற்காக மாடிப்படிக்கு அருகே வந்தால், மிதுன் கீழே இறங்கி வந்து கொண்டிருந்தான்.
டீஷர்ட், ஜாக்கர்ஸ் அணிந்திருந்தவனைப் பார்த்த பாட்டி, “மித்து கண்ணா.. இன்னும் நீ ரெடி ஆகலையா?” என்று கேட்க, “இன்னும் பங்க்ஷனுக்கு டைம் இருக்குல பாட்டிமா. நான் அப்புறமா கிளம்பிக்கிறேன்” என்றவாறு அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான்.
அங்கு தேவ்வும் அமர்ந்திருக்க, இருவரும் ஆபீஸ் விஷயங்களை பற்றி பேசிக் கொண்டிருந்தனர். பட்டு லெஹெங்காவை அணிந்து, துள்ளி துள்ளி நடந்து வந்த வைஷாலி மிதுனுக்கு அருகில் சென்று, “குட்மார்னிங் அண்ணா” என்று அவனை அணைத்துக் கொண்டாள்.
“இன்னைக்கு தான் வைஷு குளிச்சிருக்கா போல?” மிதுன் கேலி செய்ய, “எப்படியோ இந்த மாதிரி பங்க்ஷன் வைக்கிறதால வாரத்துக்கு ஒருதடவை நம்ம வைஷு குளிக்கிறா” தேவ்வும் அண்ணனுடன் சேர்ந்து கொண்டான். “அண்ணா….” சகோதரர்களின் கேலியைத் தாங்காதவளாக சிணுங்கினாள் கடைக்குட்டி.
நதியாவைப் பார்த்தவள் வேகமாக அவளுக்கு அருகில் சென்று, “அண்ணி.. சேலை கட்டி சூப்பரா இருக்கீங்க. ரொம்ப அழகா ஆகிட்டீங்க” என்று அவளை தாஜா செய்யும்படி பேசினாள்.
“அப்போ இவ்ளோ நாளா நான் அழகா இல்ல. இப்போதான் அழகா ஆகிட்டேனா” என நதியாவும் சிரிக்க, “கரெக்ட் அண்ணி கண்டுபிடிச்சுட்டீங்க” என்று வைஷு அவள் காலை வாரிவிட, அவள் அடிக்கத் துரத்த, வைஷு ரூபிணியின் மேல் மோதி நின்றாள்.
“ஹே ரூபி டார்லிங் என்ன இன்னைக்கு பொம்பளை வேஷம் போட்டிருக்க?” வைஷு ரூபிணியை கிண்டல் செய்திட, இருவரையும் கோபமாக முறைத்தவள் பூஜை அறைக்குள் சென்று விட்டாள். அங்கே பாட்டிக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொடுத்து, அவருக்கு உதவியாக இருந்தாள் ரூபிணி.
சூர்யாவும் ஹாலுக்கு வர, ஆண்கள் மூவரும் தங்கையின் சேட்டைகளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர். மிதுனின் பார்வை மட்டும் சில நிமிடங்கள் நதியாவைத் தழுவி, அவள் நேர்த்தியாக புடவை கட்டியிருப்பதைப் பார்த்து ஒரு கணம் ரசித்து மீண்டது.
ஆண்களுக்கு காபி வர அவர்கள் குடித்துக் கொண்டிருந்தனர். வேலையாளிடம், “எனக்கும் காபி கொண்டு வாங்க அக்கா” வைஷு கேட்க, நதியாவும் “எனக்கு காபி கொடுங்க” என்றாள்.
“நதியா.. வைஷு.. பூஜை முடியுற வரைக்கும் விரதம் தான். ரெண்டு பேரும் எதுவும் சாப்பிடாம இருங்க” அங்கு வந்த ருக்மணி சொல்ல, “பாட்டிமா.. எனக்குத்தான் இன்னும் கல்யாணமே ஆகலையே. நான் யாருக்காக விரதம் இருக்கணும்?” குறும்பாய் கேட்டாள் வைஷு.
“அது உனக்கு நல்ல புருஷனா கிடைக்கணும்னு வேண்டிக்கோ டா” என்று பாட்டி சொல்ல, “என் அண்ணனுங்க எனக்கு நல்ல புருஷனாத்தான் பார்ப்பாங்க. நீ ஒண்ணும் கவலைப்படாத கிழவி” அவள் பாட்டியை வம்பிழுக்க, அவர் இப்போது அவளை அடிக்கத் துரத்தினார்.
மிதுன் சத்தமாக சிரித்துக் கொண்டிருக்க, ‘அடடா.. இவனுக்கு சிரிக்கக் கூட தெரியுமா? இந்த ரோபாக்காக நான் விரதம் இருக்கணுமா?’ நதியா அவனைப் பார்த்து முறைத்தாள்.
அவள் முறைப்பதை கண்டுகொண்டவன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். ‘சரியா தூக்கமில்ல. தலை வேற வலிக்குதே. ஒரு காபி குடிக்க விடுறாங்களா?’ தன்னோடு அவள் புலம்பிக் கொண்டிருக்க, மிதுன் அவளை அழுத்தமாய்ப் பார்த்தவாறு இருந்தான்.
சூர்யா தேவ்விடம் கண்ணைக் காட்ட இருவரும் மிதுனைப் பார்த்தார்கள். மிதுனும் நதியாவும் ஒருவரையொருவர் பார்த்தவண்ணம் இருக்க, ‘இருவரும் காதல் பார்வை பரிமாறிக் கொள்கின்றனர் போல’ என நினைத்து நமட்டுச் சிரிப்பு சிரித்தனர்.
சிறிது நேரம் கழித்து.. அரவிந்த் தன் மனைவியோடும் சத்யாவோடும் அங்கு வந்தான். அரவிந்துக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்திருந்தது. சத்யாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. மிதுன் தன்னுடைய நண்பர்களை போன் செய்து அழைத்திருந்தான். அவர்கள் வந்ததும், “வாங்க..” என்று மரியாதை நிமித்தம் அழைத்த தேவ், எழுந்து அவனுடைய அறைக்குச் சென்றுவிட்டான்.
ஏனோ தேவ்வுக்கு மிதுன் நண்பர்களை கண்டால் பிடிக்காது. அண்ணன் தங்களை விட அவர்களிடம் மிகவும் நெருக்கமாக இருப்பது ஒரு காரணம். அரவிந்த், சத்யா இருவரும் மிடில் கிளாஸ் தான். மிதுன் அவர்களுக்கென்று தனியாக ஒரு பிராஞ்ச் சும் கம்பெனியில் சில முக்கிய பொறுப்புகளும் கொடுத்திருப்பதால், ‘இப்படியே விட்டால் உன் அண்ணன் நண்பர்களுக்காக மொத்த சொத்தையும் கூட கொடுப்பான். நீ அவர்கள் மீது உன் பார்வையை வைத்துக் கொள்’ என்று ராதா தேவ்விடம் சொல்லி வைத்ததால், வந்த வெறுப்பும் கூட சேர்ந்து விட்டது.
மிதுன் மட்டுமல்ல பொதுவாக எல்லோருமே சகோதரர்களை விட நண்பர்களுடன் இருக்கும் போது மிகவும் இயல்பாக, மகிழ்ச்சியாக இருப்பார்கள். அது நட்புக்கே உரிய பண்பு. அது தவிர மிதுன் போலவே விஸ்காம் படித்த அவனுடைய நண்பர்கள், அவனுக்காக தங்களுடைய கனவுகளை விட்டு, இத்தனை வருடங்களாக அவன் தொழிலில் அவனுக்கு உதவியாக, பக்கபலமாக இருக்கின்றனர்.
அப்பாவிற்கு பிறகு மிதுன் அந்த கம்பெனியை உயர்த்தியதில் அவனுடைய நண்பர்களின் கடின உழைப்பும் இருக்கிறது. மிதுன் அதற்கு நியாயம் செய்யும் விதமாக அவர்களை தன்னுடைய தொழில் பார்ட்னர்களாக்கி இருக்கிறான். அவர்களுக்காக கம்பெனி ஷேர்ஸில் பங்குகளும் தந்திருக்கிறான்.
இதெல்லாம் சமீபத்தில் சில வருடங்களாக கம்பெனி பொறுப்பை ஏற்றிருக்கும் தேவ்வுக்கு தெரியாதல்லவா. மிதுன் தான் பட்ட கஷ்டங்களை குடும்பத்திற்குத் தெரியாதவாறு பார்த்துக் கொண்டான். அது தவறு என்று புரிந்து கொள்ளும் நேரம் ஒன்று வரும். அதற்காக அவன் இழக்க போகிறவை கொஞ்சம் அதிகம் தான்.
விஷ்ணு அங்கே சில கோப்புகளோடு வந்தான். “என்ன விச்சு இங்கேயே கடை விரிச்சுட்ட?” நக்கலாக கேட்ட சத்யாவைப் பார்த்து இளித்தவன், “சார் ஆபீஸுக்கு வரலன்னா, ஆபீஸ் வீட்டுக்கு வந்து தான ஆகணும்” என்றான்.
“விச்சுக்கு வேலை நல்லா வருதோ இல்லையோ பேச்சு மட்டும் நல்லா வருது” அரவிந்த் கிண்டலாகப் பேச, அதற்கும் அவனிடம் சிரிப்பு தான். நதியா அவர்களுக்கு காபியோடு வந்தாள். அனைவரையும் “வாங்க..” என்றழைத்தவள், விஷ்ணுவிடம் சிரித்து கண்களால் ஏதோ ஜாடை பேசினாள்.
“என்னமா உனக்கு இந்த வீடு செட் ஆகிடுச்சா?” சத்யா நதியாவிடம் கேட்க, “ஹ்ம்ம்.. செட்டாகிடுச்சு அண்ணா” என்றாள்.
“நதியா.. இவ என்னோட ஒய்ஃப் ரேஷ்மி” என்ற அரவிந்த், மனைவியிடம் திரும்பி, “இவங்க மிதுனோட மிஸஸ்” என்று அறிமுகம் செய்து வைக்க, விஷ்ணுவுக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வர, களுக்கென்று சிரித்து விட்டான்.
மிதுனும், நண்பர்களும் கோபமாக அவனைத் திரும்பிப் பார்த்திட, ‘போச்சுடா செத்தோம். சும்மாவே இவனுங்க வச்சு செய்வானுங்க. இன்னைக்கு சிக்குனோம் அவ்ளோதான்’ உள்ளுக்குள் நினைத்தவாறு “மிதுன் சார்.. இந்த ஃபைல்ல சைன் பண்ணுங்க. நான் போய் இதை அனுப்புற வேலையை பார்க்குறேன்” என்றான்.
“இரு விச்சு.. பங்க்ஷன் முடிஞ்சதும் போகலாம்” மிதுன் சொல்லிட, சார்.. பங்க்ஷன் ஸ்டார்ட் பண்றதுக்கு எப்படியும் மதியத்துக்கு மேல ஆகிடும். நான் போயிட்டு வேலையெல்லாம் முடிச்சுட்டு வரேன்” என்றான் விஷ்ணு.
“கரெக்ட்டா சாப்பிடுற நேரத்துக்கு வர்றேன்னு சொல்ற. அப்படித்தான விச்சு” சத்யா அவன் காலை வாரிவிட, ‘நீயும் அதுக்கு தானடா வந்திருக்க தடிமாடே’ நினைத்தவாறு சிரித்து வைத்தான் விஷ்ணு.
❤️🔥மோகம் தீர்ப்பாள்❤️🔥
