அத்தியாயம் 9
நம் நாயகன் அஸ்வந்த் மற்றும் நாயகி அபிராமி இருவரின் திருமணத்திற்கு பத்திரிக்கை அடிக்கும் வேலை மும்முரமாக நடந்து கொண்டிருக்க, நம் அபிராமியை திருமணம் வரை வீட்டில் இருக்கும் படி கட்டளை இட்டு விட்டார் கௌரி.
என்ன வீட்டுல இருக்கணுமா? தன் அன்பு செல்வங்கள் யாவும் தன்னை பார்க்காமல் ஏங்கி போய் விடுவார்களே! என்று தாயிடம் அன்பு வாக்கு வாதம் சென்று பள்ளிக்கு போய் வந்து கொண்டு தான் இருந்தாள் அபிராமி.
ஊர் மக்களுக்கு பத்திரிக்கை வைக்கும் முன் அபிராமியின் திருமணம் ஊர் எங்கும் காட்டு தீ போல் பரவி கொண்டிருந்தது. எப்படி தெரிந்திருக்கும் 🤔
மூன்று முறை திருமணம் நின்று போய் விட்டது.இப்பொழுது அபிராமிக்கு நான்காவது முறை வரன் அமைந்திருக்கிறது என்று ஊர் எங்கும் செய்தி சென்று கொண்டிருந்தது.
அது மட்டுமா நம் அஸ்வந்த் வேறு பணக்காரன் வீட்டு பையன் ஆயிச்சே. அபிராமியின் குடும்பத்தை விட, அவன் குடும்பம் கோடிஸ்வர குடும்பம் வேறு. இது சில பேருக்கு வயிற்று எரிச்சல் ஆகவும் சில நல்ல உள்ளங்கள் ” அபிராமி குணத்துக்கு ஏற்ற மாதிரி தான் பையன் கிடைச்சிருக்கான்” என்றும் பேசி கொண்டனர்.
நம் அபிராமி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள் அவளை முன்னால் செல்ல விட்டு பின்னால் பேசுகின்றனர் இந்த ஊர் மக்கள்.
அவளுக்கு அது கேட்டாலும் எதையும் கண்டு கொள்ளாமல் நடந்தாள்.
****
என்ன இன்று நம் அகிலா வேலை முடிந்து வந்து கொண்டிருக்கிறாள்.
வீட்டுக்கு எப்பொழுதும் தாமதமாக வருபவள் இன்று அக்காவிற்கு பின் வந்து கொண்டிருக்கிறாள்.
அபிராமி யாருடைய கூற்றையும் காதில் வாங்காமல் விறு விறுவென நடக்க,
நம் அகிலா அவளை பின் தொடர்ந்து வந்தவனை அர்ச்சித்து கொண்டு வந்தாள்.
ஏம்மா அகிலா, கொஞ்சம் நில்லு என்ற குரலில் நடையை தளர்த்தி யார்? என்று பார்த்தாள்.
நம்ப அபிக்கு கல்யாணமாமே அப்படியா? ஒரு வார்த்தை கூட சொல்லைலயே இரண்டு தெரு தள்ளி இருக்கும் அந்த பெண்மணி இன்று ஊர் செய்தியை சேகரிக்க, இங்கு வந்து தனக்கேற்ற மாதிரி ஊர் கதைகள் பேசும் ஒரு ஆளை பிடித்து நின்று பேசி கொண்டிருக்கும் பொழுது தான் அபிராமியை பார்த்தார் .
அவளை முன் போக விட்டு மூவர் இருந்த குழு அவளை பற்றி பேச, பின்னாலேயே தங்கை வந்ததும் அவளை பிடித்து விசாரிக்க,
அகிலாவின் கண்கள் சிவப்பாக மாறுவதை கவனிக்க தவறிய அந்த பெண்மணி அவளிடம் வாயை கொடுக்க,
அந்த பெண்மணியின் அருகில் நின்ற மற்றொரு பெண்மணியோ ” அபியை கட்டிக்க போற பையனுக்கு ஏற்கனவே கல்யாணமாகி அவன் பொண்டாட்டி இறந்து, ஒரு கை குழந்தையோட இருக்கிறானாம். அவனுக்கு போயா நம்ப அபியை கட்டி தரிங்க? என்று வாயில் விஷத்தை தடவி கேட்டார் அந்த பெண்மணி.
அகிலா மூவரையும் கடுப்போடு பார்த்தாள்.
நம்ப அபிக்கு என்ன அழகு இல்லையா? நல்ல குணம் இல்லையா என்ன? டீச்சர் வேற கை நிறைய சம்பளம் வாங்குறாள். அப்போ ஏன் மா இப்படி ஒரு பையனுக்கு கட்டி வைக்குறிங்க? என்று அவர் பேசி கொண்டே போக,
விமலா அக்கா, எங்க அக்கா யாரை கல்யாணம் பண்ணிக்கிட்டா உங்களுக்கு என்ன? நீங்களா அவளுக்கு சோறு போட போறீங்க? நீங்களா அவளை பார்த்துக்க போறிங்க? எங்க குடும்ப விஷயத்தை உங்ககிட்டே எதுக்கு நாங்க சொல்லணும் என்று மூக்கு சிவக்க கேட்டாள் அகிலா.
இது என்ன டி வம்பா போச்சு? அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க நாங்க. நாளை பின்ன ஏதாவதுனா நாங்க தான் ஓடி வந்து நிற்க போறோம் என்று அவரும் இவளுக்கு சமமாக கேட்டார்.
அச்சோ அக்கா நீங்க வரலைனாலே எங்களுக்கு நல்லது தான். நாங்களும் விமலா அக்கா பக்கத்துலயே இருந்துட்டு ஒரு வார்த்தை கேட்கல பாரேன்! அப்படினு யாருகிட்டேயும் போய் சொல்ல மாட்டோம் என்று வெடுக்கென்று கூறிவிட்டு அவர்களை பார்க்காது சென்றாள் அகிலா.
இவங்களுக்கு எல்லாம் வேற வேலையே இருக்காது போல. எப்பவும் அடுத்த குடும்பத்தில என்ன நடக்குனு பார்த்துட்டே இருக்கணும்.
நல்லா இருக்குற அக்காவையே கதையை திரிச்சி ஊருக்குள்ள பேசி வர்ற மாப்பிள்ளைய எல்லாம் களச்சி விட்டுருச்சுங்க.
இதுல நம்ப பின்னாடி ஒரு ரெண்டு கால் நாய் வருது. அது தெரிஞ்சா எப்படி கதை உருவாக்க போறாங்களோ தெரியல என்று புலம்பி கொண்டு நடந்தாள் அகிலா. அவளின் ஆதங்கம் மொத்தமும் வீட்டிற்கு செல்லும் வழியில் கொட்டி கொண்டே சென்றாள்.
அது வேற ஒன்னும் இல்லை விமலா. பணக்கார வீட்டு பையனா புடிச்சிட்டாளுகள. அந்த திமிரு தான் இவளுகளுக்கு. பெரியவள் பணக்காரனா பார்த்து அவனுக்கு ஒரு பிள்ளை இருந்தாலும் பரவாயில்லை ஆயிசுக்கும் சொத்து சொகத்தோட வாழ்ந்துரலாம்னு பார்த்துட்டாள். இப்போ இவளும் அக்காக்காரி மாதிரி கோடிஷ்வரன் பையனை வளைச்சி போட போராள் என்று இருவரும் நாக்கில் நரம்பு இல்லாமல் பேச,
அது எப்படி விட முடியும். இவளுக்கு எப்படி கல்யாணம் நடக்குது பாப்போம். நம்ப கல்யாணத்தை நல்ல படியா நடக்க….. வச்சிருவோம் என்று நக்கலாக சிரித்து கொண்டனர் அந்த மூவரும்.
ஊருக்கு இப்படி மூணு நாலு சுத்திட்டு தான் இருக்கும் பா. அதை எல்லாம் பார்த்தால் நம்மளால வாழ முடியாது.
***
அஸ்வந்த் எப்பொழுதும் போல் வீட்டிற்குள் நடமாட ஆரம்பித்து விட்டான். சோகமே கதி என்று இருந்தவன் இப்பொழுது வீட்டில் உள்ளவர்களிடம் சாதுவாக பேச ஆரம்பித்தான்.
பாரிஜாதம் சந்தோஷத்தில் திளைத்து கொண்டிருந்தார் மகனின் இந்த மாற்றத்தில். இந்த மாற்றம் அபிராமி வந்ததில் இருந்து நினைத்தார். அபிராமியின் மேல் அவருக்கு ஒரு தனி பாசம் உண்டானது.
“நீ இனிமேல் அலுவலக பொறுப்பை பார்த்து கொள் அஸ்வந்த்” என்று தந்தை கூறி விட, இனிமேல் இப்படியே இருந்தால் நன்றாக இருக்காது. சுகன்யா கூறியது போல் மகனை வளர்க்க வேண்டும். அதற்கு நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்த அஸ்வந்த் ” சரி ” என்றான்.
ஆனால் சங்கர் திருமணம் முடிந்ததும் வா. அது வரை வெளியில் வர வேண்டாம் என்று கூறி விட்டார்.
இதோ இப்பொழுது அந்த அறைக்குள் அடைந்து கிடக்க பிடிக்காமல் ஹாலுக்கு வந்தான் அஸ்வந்த்.
கல்யாண பத்திரிக்கை பிரிண்ட் ஆகி வந்து விட்டது. பாரிஜாதம் பத்திரிக்கையை எடுத்து ” பத்திரிக்கையை பாரு பா ” என்று மகனிடம் நீட்டினார்.
தாயை வெறித்து பார்த்த அஸ்வந்த், ” இந்த கல்யாணம் உங்களுக்காக தான் எனக்காக இல்லை ” என்றான்.
பாரிஜாதத்தின் முகம் கருத்து விட்டது. அபிராமியை எண்ணி பாவமாக இருந்தது. தன்னிடமே இப்படி நடந்து கொள்கிறான். அந்த பெண்ணிடம் எவ்வாறு நடந்து கொள்வானோ! இதில் நாம் வேறு பெரிய பொய்யை உருவாக்கி விட்டோம் என்று பயந்தார்.
இப்பொழுது பயந்து என்ன செய்ய? பொய் கூறுவதற்கு முன் யோசித்திருக்கலாம். கேட்டால் மகனின் நல் வாழ்வுக்கு என்று கூறி விடுவார் இந்த பாரிஜாதம்.
****
திருமண நாள் நெருங்கி கொண்டிருந்தது. நம் நாயகன் நாயகியின் கழுத்தில் பூட்ட போகும் மாங்கல்யம் தாயாராகி குல தெய்வ கோவிலில் சாமி பாதத்தில் இருக்கின்றது.
அந்த விஷேசத்திலும் இரு குடும்பங்கள் மட்டுமே முக்கிய பங்கு வகிப்பு.
அக்காவின் இந்த முக்கிய சடங்கில் அகிலா கலந்து கொள்ளவில்லை. அக்கா தன் பேச்சை கேட்கவில்லையே என்ற கோபம் அவளுக்கு .
தங்கை வரவில்லை என்ற சோகமோ இல்லை கோபமோ அபிராமிக்கு துளியும் இல்லை.
இது இந்த சாமி பாதத்தில் வைத்து பூஜிக்கும் இரண்டாவது மாங்கல்யம்.
முதல் மாங்கல்யம் சாமி பாதத்தில் வைத்திருக்கும் பொழுதும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் முகமும் ஆனந்தத்தில் திக்கு முக்காடியது. அது மட்டுமா! முன்பு பார்த்திருந்த மாப்பிள்ளை சுவாமி கும்பிடும் பொழுது அபிராமியை ஓரக்கண்ணால் பார்த்து ரசிக்கவும் செய்தான்.
அந்த நிகழ்வுகள் யாவும் படமாக ஓடியது அபிராமியின் மனதில்.
இப்பொழுதும் அதே போல் மாங்கல்யம் சுவாமி பாதத்தில் இருக்க குடும்பத்தில் இருக்கும் அனைவரின் முகத்திலும் சந்தோசம்.
நம் நாயகன் நாயகி இருவரையும் தவிர்த்து.
கோவிலை விட்டு வெளியே வரும் பொழுது நாயகியின் தாய் தந்தை இருவர் மனதும் லேசானது போல் உணர்ந்தனர்.
ஆனால் நம் நாயகியின் மனது கனத்தது. இந்த முறையும் திருமணம் நின்று விட்டால் நம் தாய் தந்தையின் நிலை என்ன என்று சிந்தித்தாள்.
அவளுக்கு அது பழகி போய் விட்டது. திருமணம் நின்று விட்டால் கடைசி வரை பெற்றோரோடு இருந்து விடலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டாள்.
ஆனால் தாய் தந்தை இருவரும் அப்படி நினைக்க மாட்டார்களே! வாழ்நாள் முழுதும் அந்த வலியை சுமந்து கொண்டு வாழ்வார்கள்.
அபிராமியின் கண்கள் லேசாக சிவந்து போனது. தாய் தந்தை இருவர் முகத்தையும் பார்த்தவளுக்கு அழுவதை தவிர வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை.
எதார்த்தமாக நம் நாயகன் நாயகியை பார்த்தான். அவளின் முகம் வெளுத்து இருந்தது. கண்கள் சிவந்து இருந்தது.
நம்மை போல் இவளையும் வீட்டில் வற்புறுத்தி இருப்பார்களோ? என்று நினைத்தான் அஸ்வந்த்.
அபிராமி தாய் தந்தை இருவர் முகத்தை பார்த்து கொண்டு நின்றாள். இங்கு ஒருவன் தன்னை பார்ப்பதை அறியாமல்.
கல்யாண், கௌரி, இருவரும் அஷ்வந்த்தின் முன் வந்து ” தம்பி கிளம்புறோம் ப்பா ” என்றனர்.
இவ்வளவு நேரம் அவளை மட்டுமே பார்த்து சிந்தித்து கொண்டிருந்த அஸ்வந்த் திடுக்கிட்டு ஹான்…. சரி அத்தை மாமா என்றான்.
அந்த இருவருக்கும் அந்த வார்த்தையில் உலகமே அவர்கள் கைக்குள் வந்தது போல் உணர்ந்தனர்.
****
இன்னும் ஒரு வாரத்தில் திருமணம். அதற்குள் பத்திரிக்கையை விருந்தினர் வீட்டிற்கு சென்று வைக்க வேண்டும்.
அதற்கு முன் நம் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு வைத்து விடலாம் என்று அவர்களுக்கு முதலாக பத்திரிக்கையை வைத்தார் சங்கர்.
அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி. நம் பாஸ்க்கு திருமணம். இந்த திருமணம் நடந்தால் கண்டிப்பாக அவர் அலுவலகம் வந்து விடுவார். முன்பு போல் அவரை பார்க்கலாம். மூன்று மாதமாக அவரின் முக தரிசனம் கூட கிட்டாமல் இருந்தது.
அவரின் திருமணத்தில் கலந்து கொள்ள ஆசை கொண்டனர் அலுவலக ஊழியர்கள்.
யாருக்கு எல்லாம் நம் நாயகன் நாயகி திருமணத்தை பார்க்க ஆசையாக இருக்கிறது?
தொடரும்.
