பொதிகை மலைச்சாரலின் இதமான தென்றல் காற்று, தரையில் தவழ்ந்து விளையாடும் சின்னஞ்சிறிய கிராமம் அது. பார்க்கும் திசை எல்லாம் பச்சைப் பசேலென்ற வயல்வெளிகள் சூழ்ந்த அந்த கிராமத்தில், வீதி எங்கும் வெள்ளந்தித்தனமான முகங்கள் மட்டுமே நிறைந்திருக்கும். ஆதிரா அங்கு பிறந்து வளர்ந்தவள்.
பதினெட்டு வசந்தங்களைக்கூட இன்னும் முழுதாய் காணாத பருவ மங்கை. பனித்துளி போன்ற தூய்மையான உள்ளம் கொண்டவள். அவளுக்கு உலகமென்பது தன் வீடும், தன் தந்தையின் கரும்புத் தோட்டமும், சற்றே பரந்த கிராமத்தின் எல்லைகளும் தான்.
கள்ளங்கபடமற்ற அவளின் கண்கள், சுற்றியிருக்கும் அழகை மட்டுமே எப்போதும் உள்வாங்கிக் கொள்ளும். சிறு அசௌகரியத்தை உணர்ந்தாலும் அப்போதே அவ்விடத்தை விட்டு நீங்கி சென்று விடுவாள். அவ்வளவு மென்மையான மனம் கொண்ட பெண் அவள். அஞ்சுகம் போன்ற மெல்லிய குரலும், மானைப் போன்ற மருண்ட பார்வையுமாய், கிராமத்திற்கே உரிய இயற்கையான உடல் அழகோடு வளர்ந்தவள் அவள்.
பள்ளிப் பருவம் முடிந்து கல்லூரியில் சேர்ந்ததும் நவீன உலகின் மாய வலை ஒன்று, அவள் வாழ்வினை மெல்ல ஆக்கிரமித்தது. ஆதிராவின் தோழிகள் அவளுக்கு அறிமுகப்படுத்திய அந்த மந்திர வலைக்கு, இன்டர்நெட் என்று பெயர். ஆதிராவின் கள்ளமில்லா உள்ளத்தினுள், ஒரு புதிய உலகத்தின் கதவு திறந்தது. இன்ஸ்டாகிராம் என்ற சமூக வலைத்தளம், அவளின் அப்பாவியான மனதினை சுலபமாக வசீகரித்தது.
அங்கேதான் இவளுக்கு முன்பின் தெரியாத ஒருவன், “உயிரோடு ஒன்றும் காதல் கவிதைகள்” என்ற பெயரில் அவளின் மனதிற்குள் நுழைந்தான். அவன் கவிதைகளில் மனதை தொலைத்தாள் மங்கை.
பெண்ணொருத்தி கமெண்ட் இடுவதை வழக்கமாக கண்ட அவன், அவளோடு இன்பாக்ஸில் பேச ஆரம்பித்தான். அவன் அனுப்பிய வண்ணமயமான கவிதைகள், இனிமையான குறுஞ்செய்திகள், காதலின் ஆழம் பற்றிய வார்த்தைகள், ஆதிராவின் மனதில் மாயக் கோட்டைகளை உருவாக்கிற்று. அவனுடனான ஒவ்வொரு உரையாடலும், அவளின் இதயத்துடிப்பை அதிகப்படுத்தியது.
ஒருநாள், ‘எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. நான் உன்னை காதலிக்கிறேன்!’ என்று கூறிவிட்டான். அவளுக்கும் அவன்பால் காதல் உருவாகி இருந்த நேரம் அது. எனவே உடனே ஒப்புக் கொண்டாள்.
“ஆதிரா, நீதான் என் உலகம். உன்னை விட்டு ஒரு நொடி கூட என்னால தனியா வாழ முடியாது. என்னை ஏமாத்திட மாட்டதான?” இப்படிப்பட்ட வார்த்தைகளை தினம் ஒரு முறை அனுப்பிவிடுவான். அது ஆதிராவின் அடி மனதில் பதிந்து போனது.
அவளின் அப்பாவித்தனமும், வெளியுலகம் அறியாத மனமும், அந்த வார்த்தைகளின் உண்மைத்தன்மையை ஆராயத் தவறிவிட்டன. அவள் அவனை நேரில் கண்டதில்லை. அவனின் குரலைக் கேட்டதில்லை. ஆனால், குருட்டு நம்பிக்கையோடு அவனுடனான காதலில் முழுதாய் மூழ்கிப் போனாள். இப்படியே இரண்டு வருடங்கள் ஓடிப்போனது!
அவளிடம் ஒப்புக்காக கூட தவறாக பேசாத அவன் கண்ணியத்தினால், அவன்மீது அளவு கடந்த நம்பிக்கை கொண்டாள் பேதை. அந்த சமயத்தில்தான் ஆதிராவின் வீட்டில் திருமண பேச்சை ஆரம்பித்தனர். தாய் தந்தையை எதிர்த்து பேசி பழக்கம் இல்லாதவள் ஒரு விபரீத முடிவெடுக்க துணிந்தாள். அந்த அளவுக்கு காதல் அவள் கண்ணை மறைத்திருந்தது!
அன்றைய இரவு, இருள் கிராமத்தை முழுதாய் விழுங்கியிருந்தது. வீட்டின் மூலையில் இருந்த கடிகாரம், ‘நள்ளிரவு பன்னிரண்டு மணியைக் கடந்துவிட்டேன்‘ என்று ஓசையின்றி சொல்லிக் கொண்டிருந்தது. வீட்டில் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, ஆதிராவின் இதயத்துடிப்பு மட்டும் இடியாக இடித்தது.
இவளின் காதலன், “நாளை காலை நம் திருமணம். உன் வீட்டை விட்டு வெளியே வா. நான் பக்கத்து ரயில் நிலையத்தில் காத்திருப்பேன். சரியாக இரண்டு மணிக்குள் நீ அங்கே வந்துவிடு. இல்லை என்றால், நான் உயிரோடு இருக்க மாட்டேன். ஏன் எதற்கு என்று யாருக்குமே தெரியாமல் என் உயிர் எமலோகம் சென்று விடும்” என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான்.
அந்த வார்த்தைகள் அவளின் மனதுக்குள் ரீங்காரமிட்டன. அந்த நிமிடத்தில் அவள் எடுத்த முடிவு, தனது எதிர்கால வாழ்க்கையையும், தன் குடும்பத்தின் கௌரவத்தையும், வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்ட விழுமியங்களையும் கேள்விக்குறியாக்கும் என்பதை அறியாமல் அவசரத்தில் முடிவு எடுத்தாள்.
மெதுவாகப் படுக்கையை விட்டு எழுந்தாள். இருட்டின் துணை கொண்டு, காலடிச் சத்தம் கேட்காமல் நடந்தாள். பூட்டியிருந்த கதவின் தாழ்ப்பாளை மெதுவாகத் திறந்தவுடன், “க்ரீச்” என்ற மெல்லிய சத்தம் உருவானது. அதுவே அவளின் இதயத்தின் அடி ஆழம் வரை சென்று அதிர்வை ஏற்படுத்தியது. வியர்த்து வழியும் முகத்தோடு வீட்டின் வெளியே வந்துவள், மீண்டும் கதவை வெளிப்புறமாக மூடி தாழிட்டாள்.
‘நான் செய்வது சரியா தவறா?’ என அவள் உடலில் ஒரு நடுக்கம் உருவானது.
“துணிஞ்சு வெளிய வந்தாச்சு. இனி திரும்பிப் போகக் கூடாது” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டவள், விரைந்து நடந்தாள்.
அந்த கிராமத்து மண் சாலைகளில் பாதம் பதிய விறுவிறுவென நடந்து சென்றாள் ஆதிரா. வீடுகள் இருக்கும் பகுதியை கடந்து ஊருக்கு வெளியே வந்ததும் இருட்டும், மரங்களின் மர்மமான நிழல்களும் அவளை பயமுறுத்தின. ஆந்தையும் வௌவாலும் அவள் பயத்தை இரட்டிப்பாக்கும் நோக்கத்தோடு ஒலி எழுப்பி அச்சுறுத்தின. ஆனாலும் அவளின் மனம் முழுவதும், ரயில் நிலையத்தில் தன்னைக் காணக் காத்திருக்கும் காதலன் மீதே இருந்தது.
இரண்டு ஊர்களுக்கும் இடைப்பட்ட காட்டுப் பாதையில் நுழைந்தாள். இதயம் வெளியே வந்து விழுந்துவிடும் அளவுக்கு தடதடவென துடித்தது. பயத்தில் வேகமாய் ஓட ஆரம்பித்தாள். அவளின் மூச்சிரைப்பு சப்தம், இருளின் அமைதியைக் கலைத்தது. ஒரு மணி நேரத்திற்கு பின் இறுதியாய், ரயில் நிலையத்திற்கு போகும் அந்த ஒற்றையடிப் பாதைக்கு வந்துவிட்டாள். ஒவ்வொரு அடியும், அவளை புதிய வாழ்க்கையை நோக்கித் தள்ளுவது போல் இருந்தது.
கிட்டத்தட்ட ஒன்றரை மணியளவில், மங்கிய மஞ்சள் வெளிச்சத்தில் ரயில் நிலையம் தெரிந்தது. உள்ளுக்குள் ஒருவித பதட்டம், ஒருவித பரவசம். அங்கேதான் அவன் இருப்பான். அவளின் கனவு நாயகன். அவனைப் பார்க்கப் போகிறோம் என்ற எண்ணம், அவளின் ஓட்டத்திற்கு இன்னும் வேகத்தைக் கொடுத்தது. வேகமாக ரயில் நிலையப் பிளாட்ஃபார்மில் நுழைந்தாள். அவளது கண்கள் பரபரப்புடன் அவனைத் தேடின.
‘அவன் இங்கேதான் எங்கோ இருப்பான். நிச்சயம் எனக்காக கண்கள் நிறைய காதலோடு காத்திருப்பான்! எனைக் கண்டதும் கட்டிக் கொண்டு அழுவான்!’ எனும் கனவுகளோடு வந்தவளுக்கு, மிகப்பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த ரயில் நிலையத்தின் பிளாட்ஃபார்ம் வெறிச்சோடி கிடந்தது. ஒப்புக்கு கூட ஒரு பயணியும் இல்லை. எங்கோ தூரத்தில், ஒரு நாய் ஊளையிட்ட சத்தம், அவளின் மனதை நடுங்கச் செய்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆள் நடமாட்டமே இல்லாமல் போக, ஆதிராவின் இதயம் ஒரு கணம் நின்று போனது. அதிர்ச்சியில் கண்கள் அகல விரிந்தன. அவள் நம்பிக்கை சிதைந்துபோனது.
“எங்கே அவன்? என்னை கூட்டிட்டு போக வருவேன்னு சொன்னானே…” என்று தனக்குத்தானே முணுமுணுத்தாள். நேரம் செல்லச் செல்ல, அவளின் பயம் அதிகரித்தது. உதடுகள் நடுங்கின. அவள் உருவாக்கிய மாய உலகம், உள்ளுக்குள் நொறுங்கிப் போனது.
‘எதற்காக இவ்வளவு தூரம் வந்தாய்? எதற்காக உன் குடும்பத்தை விட்டு வெளியேறினாய்?‘ என்று அவளது மனசாட்சி, அவள் இதயத்தை உலுக்கியது. நள்ளிரவின் குளிர் வேறு தன் பங்குக்கு அவளின் உடலை நடுங்க வைத்தது.
“அடுத்து நான் என்ன செய்யப் போறேன்?” என்ற கேள்வி, அவளின் அடி மனதில் இருந்து பெரும் ஆற்றாமையுடன் கிளம்பியது.
அவள் தனியாக நின்று அழுது கொண்டிருப்பதை, அவளின் காதலன் கண்கள் ஒருவித சந்தோஷத்தோடு பார்த்துக் கொண்டிருந்தது. ஆதிராவுக்கு தலையைச் சுழற்றிக் கொண்டு வர, அப்படியே ரயில் நிலையத்தின் தரையில் மயங்கி சாய்ந்து விட்டாள்.
ரயில் நிலையத்தின் கசகசப்பான நாற்றமும், தரையின் தூசிகளும் அவள் மேனியைச் சூழ்ந்து கொள்ள, அவள் ஒரு புழு போல தரையில் சுருண்டு கிடந்தாள். அசைய முடியாதபடி உடல் மரத்துப் போயிருந்தது. ஆனால் அவளின் மனமோ ஒரு நொடி கூட நில்லாமல் இன்னமும் அலைபாய்ந்து கொண்டிருந்தது.
அந்த சமயத்தில் மங்கலான வெளிச்சத்தில், இரண்டு ரயில்வே காவலர்கள் வேகமாக அவள் பக்கம் வருவது தெரிந்தது. அவர்களின் காலடிச் சத்தம் ஆதிராவின் செவிகளில் தெளிவாய் விழுந்தது. இருவரும் அவளை தூக்கி அமர்த்தி முகத்தில் தண்ணீர் தெளித்தனர். அதன்பிறகே காட்சிகள் கொஞ்சம் தெளிவாக தெரிய ஆரம்பித்தது அவளுக்கு.
அவளின் கலங்கிய கண்களைப் பார்த்த காவலர் ஒருவர், “ஏம்மா, இந்த நேரத்துல இங்க தனியா என்ன பண்ணிட்டு இருக்க?“ என்று கேட்டார்.
ஆதிராவால் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. கண்ணீர் மட்டுமே பதிலாய் வந்தது.
இன்னொரு காவலர், “காதல் கீதல்னு வீட்டவிட்டு ஓடி வந்துட்டியா?” என்றதும், ஓவென ஓலமிட்டு அழுதாள்.
“மாசத்துக்கு ஒண்ணு இப்படி வந்துருது. உன் அட்ரஸ் என்ன? வீட்ல யார் யார் இருக்கா?” என்று விசாரணையை தொடங்கினார்.
ஆதிரா தன் கிராமத்தின் பெயர், தந்தை யார் என்பதில் இருந்து, இன்ஸ்டாகிராம் காதலனை நம்பி ஓடி வந்தது வரை அனைத்தையும் ஒப்புவித்தாள்.
“பார்த்தா படிச்ச புள்ள மாதிரி இருக்க. முன்ன பின்ன தெரியாத யாரோ ஒருத்தரை நம்பி இப்படி வீட்டைவிட்டு வந்துட்டியே, அவன் உன்னை எங்கேயாவது கொண்டு போய் வித்துட்டா என்ன செஞ்சிருப்ப? நீ தப்பிச்சது உன் தகப்பன் செஞ்ச புண்ணியம்மா…” காவலர்களின் குரலில் மெல்லிய கோபமும், அதைவிட அதிகமாக ஏளனமும் இருந்தது.
இன்னொரு காவலர், “நாம சொல்லி புரிய போகுதா? லோக்கல் போலீஸ்க்கு இன்பார்ம் பண்ணிடுவோம். அவங்க ப்ரொசீஜர் படி செய்யட்டும். அப்பதான் அக்கம் பக்கத்து பிள்ளைங்க வீட்டை விட்டு வெளியே வர முன்னால ஒரு தடவையாச்சும் யோசிக்கும்.“
அடுத்த அரை மணி நேரத்தில் ஆதிரா காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டாள். அங்கிருந்து அவளின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாலைப் பொழுதில் காவலர்கள் தங்கள் கிராமத்து வீட்டின் கதவைத் தட்டியபோது, கைலாஷும் வித்யாவும் தூக்கக் கலக்கத்தில் கதவைத் திறந்தனர்.
“ஆதிரா வீடு இதுதான?” காவலர் வாயால் மகளின் பெயரைக் கேட்டதும், அவர்களின் இதயம் அதிர்ந்தது. குழப்பத்தோடு ஆம்! என்று தலையாட்டினர் இருவரும்.
ஆதிரா வீட்டை விட்டு ஓடி வந்த விவரத்தைச் சொன்னதும், வித்யாவின் நெஞ்சில் கல்லைப் போட்டு அழுத்தியது போல இருந்தது.
“எங்க பொண்ணா? அவளா இப்படி ஒரு காரியத்தை செஞ்சா? ஒத்த புள்ளனு செல்லங்கொடுத்து வளர்த்ததுக்கு, எங்க தலையில இடிய இறக்கிட்டாளே...” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதாள் வித்யா.
கைலாஷும் கோபத்தில் கொதித்துப் போனார்.
“பொட்டக்கழுத, என் மானத்தையே வாங்கிட்டா! இனி ஊர்ல நான் எப்படி தலைநிமிர்ந்து நடப்பேன்?” என்று ஆக்ரோஷமாக கத்தினார்.
“முதல்ல ஸ்டேஷனுக்கு வாங்க. கையெழுத்து போட்டு பொண்ண வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததுக்கு அப்புறம் பொறுமையா புலம்புங்க” என்று ஜீப்பில் கூட்டிச் செல்ல, ஒட்டுமொத்த வீதியும் அவர்களை வேடிக்கை பார்த்தது.
காவல் நிலையத்தில் அவர்கள் நுழைவதை பார்த்ததும், ஆதிரா ஓடிப்போய் தன் அன்னையை அணைக்க முயன்றாள். உச்சகட்ட கோபத்தில் இருந்த கைலாஷ், பளாரென தன் மகள் கன்னத்தில் அறைந்தார். அடுத்த நொடு சுருண்டு தரையில் தொப்பென விழுந்தாள் அவள். மீண்டும் அவள் கண் விழிக்கும் பொழுது மருத்துவமனையில் இருந்தாள்.
