அனல் – 2

அருகில் இருந்த வித்யா, “என்னம்மா இது? எதுக்கு இப்படி பண்ண? எதுவா இருந்தாலும் எங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்ல?” என்று அழுதாள். 

 

ஆதிராவும் தன் அம்மாவின் கையை பிடித்துக்கொண்டு அழுது கரைந்தாள். கைலாஷ் இன்னமும் மகளைக் கோபத்துடன் முறைத்தார். கிராமத்து வாழ்வில் ஊறி போயிருந்த அவருக்கு, கௌரவம் என்ற வார்த்தையே அவர் மனதை விடாமல் அரித்தன. அவர் பயந்தது போல அந்த செய்தி, காட்டுத் தீயாய் ஊர் முழுவதும் பரவி விட்டது. 

 

“ஐயோ பாவம் கைலாஷ்… பெத்த பொண்ணே, இப்படி அவர் மானத்த வாங்கிடுச்சே!” 

 

“நானும் கேள்விப்பட்டேன்… ஏதோ இன்ஸ்டாகிராம் காதலாம்… இந்த காலத்துப் புள்ளைங்க இப்படியா புத்தி இல்லாம இருப்பாங்க?” 

 

“யாரோ ஒருத்தனை நம்பி ஓடிருச்சு… இதுக்கு அப்புறம் இந்தப் பொண்ணை யார் கட்டிப்பா?” என்ற கேலிப் பேச்சுகளும், கிசுகிசுக்களும் ஊர் முழுக்க ஒலித்தது.

 

அன்று இரவு, ஊர் அடங்கிய பின்பு, ஆதிராவை டிஸ்டார்ஜ் செய்து வீட்டிற்கு கூட்டி வந்தனர். கைலாஷ் உள் அறைக்குள் தலைகுனிந்து உட்கார்ந்திருந்தார். பகல் பொழுதில் உறவுகள் ஃபோன் போட்டு விசாரித்த நக்கலான வார்த்தைகள், இப்போது அவரின் காதுகளில் கூர்மையான அம்புகள் போல வந்து பாய்ந்தன. உள்ளே, வித்யா ஆதிராவை அணைத்துக்கொண்டு அழுது தீர்த்தார். 

 

“தெய்வமே, நாங்க என்ன பாவம் செஞ்சோம்? இனி இந்த ஊர்ல எப்படி நடமாடுவோம்?” என்று அரற்றினாள். 

 

ஆதிராவின் உடல் முழுவதும் நடுங்கியது. அவமானத்தால் குன்றிப்போனாள். அவளின் காதல், அவளை ஒரு கேலிப் பொருளாய் மாற்றி விட்டிருந்தது. ஊர் மக்கள் இந்தச் செய்தியை புரளியாய் பக்கத்து ஊர் வரை பகிர்ந்துகொண்டனர். அடுத்த நாள், உள்ளூர் செய்தி சேனல்கள் வரை இந்தச் செய்தி எட்டிவிட்டது. 

 

“இன்ஸ்டாகிராம் காதலால் வீட்டை விட்டு ஓடிய கிராமத்து யுவதி! நள்ளிரவில் ரயில் நிலையத்தில் தனியே சிக்கினார்!” என்ற தலைப்பில் செய்திகள் ஒளிபரப்பாகத் தொடங்கின. 

 

ஆதிராவின் பெயர், அவளின் கிராமத்தின் பெயர், கைலாஷின் பெயர் என அனைத்தும் வெளிப்படையாகச் சொல்லப்பட்டன. அந்தச் செய்தியில், ஆதிராவின் ரயில் நிலையப் புகைப்படமும் ஒளிபரப்பானது. அவளின் கலங்கிய முகம், அந்தச் செய்தியின் தீவிரத்தை அதிகப்படுத்தியது. யார் எப்படி இதையெல்லாம் பரப்பியது என்று கைலாஷிற்கு தெரியவில்லை. நொந்துவிட்டார்…

 

சமூக ஊடகங்கள் அந்தச் சம்பவத்தை ஒரு கேலிச் சித்தரமாக மாற்ற, கைலாஷ் குடும்பத்தின் மானம் பொதுவெளியில் அம்பலமானது. ஒவ்வொரு இணையப் பக்கத்திலும் ஆதிராவின் கதை மீம் வடிவில் விவாதிக்கப்பட்டது. 

 

கைலாஷின் உறவினர்களும் நண்பர்களும் கூட, “ஏன் கைலாஷ், பொண்ணை இப்படி வளர்த்திருக்க?” என்று முகத்திற்கு நேராக கேட்க ஆரம்பித்தனர். 

 

ஒரு கட்டத்தில் வித்யாவும், மகளின் முகத்தைக் காண முடியாமல், சுவற்றைப் பார்த்து அழுதாள். அவமானம், கோபம், எதிர்காலத்தைப் பற்றிய பயம் அவர்கள் குடும்பத்தை பேய் போல சூழ்ந்து கொண்டது. ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு ஒரு யுகமாக நீடித்தது. 

 

தான் ஒரு நிமிடத்தில் எடுத்த தவறான முடிவு, தன் குடும்பத்தை இந்த கதியில் நிறுத்திவிட்டதே!’ என்று எண்ணி துடித்தாள் ஆதிரா. 

 

அவளின் கண்ணீர் ஊர் வாயை அடக்கவில்லை. மாறாக, கேலியை மேலும் அதிகப்படுத்தியது. என்ன விலை கொடுத்தாவது தன் பெற்றோர் மானத்தை மீட்டெடுக்க நினைத்தாள் ஆதிரா. ஆனால் அதற்கான வழி தான் தெரியவில்லை.

 

அந்த சமயத்தில்தான் அவள் வாழ்வில் நுழைந்தான் அக்னி வேந்தன்.

ஆதிராவின் அவசர புத்தியால், கிராமமே கைலாஷின் குடும்பத்தை அவல் போல மென்று கொண்டிருந்தது. அந்த வாரம் முழுதும் அவர்களுக்கு பெரும் அவமானத்துடனும் மன உளைச்சலுடனும் கழிந்திருந்தது. 

ஆதிரா வீட்டை விட்டு வெளியே வர அஞ்சினாள். கல்லூரியை பற்றி கனவிலும் நினைக்க மறந்தாள். அவள் கண்ணில் கண்ணீர் ஒரு கணம் கூட நிற்கவில்லை. கைலாஷ், ஊர் மக்களை சந்திக்கும் போதெல்லாம் தலைகுனிந்தே நடந்தார். இந்தச் சூழ்நிலையில் ஓர் நாள் மதியம், அந்தக் குடும்பத்திற்கே ஒரு பெரும் அதிர்ச்சியும், எதிர்பாராத திருப்பமும் காத்திருந்தது.

வாசலில் கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டு, கைலாஷ் வெளியே வந்து பார்த்தார். வண்டியில் இருந்து இறங்கியவர்களைக் கண்டதும் ஒரு கணம் திகைத்துப் போனார். அது அவருடைய தங்கை யசோதாவும், அவளின் இளைய மகள் நந்தினியும். யசோதாவைப் பார்த்ததும் கைலாஷின் முகம் சலனப்பட்டது. 

பல வருடங்களாக, சொத்துப் பிரச்சினை காரணமாக, இரு குடும்பங்களுக்கும் இடையே ஒருவித பனிப்போர் நிலவி வந்தது. இந்தச் சூழ்நிலையில், யசோதா இங்கு வந்திருப்பது கைலாஷுக்குப் பெரிய ஆச்சரியமாக இருந்தது.

“வா யசோதா, வாம்மா நந்தினி…” என்று வேண்டா வெறுப்பாக வரவேற்றார் கைலாஷ். யசோதாவின் முகத்தில் ஒருவித நிதானம் தெரிந்தது. ஆனால் அவள் கண்களில் ஒரு மெல்லிய குரூரப் புன்னகை ஒளிந்திருப்பதை கைலாஷ் கவனிக்கவில்லை. நந்தினி, தன் தாயைப் போலவே எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல், ஆதிராவின் வீட்டை ஒருமுறை நோட்டமிட்டாள்.

உள்ளே சென்றதும், யசோதா வித்யாவிடம், “என்ன அண்ணி, நல்லா இருக்கீங்களா?” என்று சாதாரணமாகக் கேட்டாள். 

வித்யா முகத்தை சுளித்தபடி, “ம்… நல்லா இருக்கேன்...” என்று இழுத்தவாறே சொன்னாள். 

அவர்கள் பேச்சு சப்தம் கேட்டு ஆதிரா, உள்ளறையில் இருந்து தயக்கத்துடன் வெளிவந்தாள். யசோதா அவள் முகத்தை உற்று பார்த்தாள். ஒரு கணம், யசோதாவின் கண்களில் ஆதிரா மீதான வெறுப்பு அப்பட்டமாகத் தெரிந்து மறைந்தது. நந்தினியோ, ஆதிராவை மேலும் கீழும் எகத்தாளத்துடன் பார்த்தாள். ஆதிராவின் மனம் மேலும் சுருங்கியது. பெண்ணவள் செய்வதறியாது தன் அம்மாவிற்கு பின்னால் ஒளிந்து கொண்டாள்.

பொம்பள புள்ளைய இப்படியா பொறுப்பில்லாமல் வளர்ப்பீங்க?” என்று ஆரம்பித்து, மனம் ஆறும் மட்டும் அவர்களை வார்த்தையால் வதைத்து எடுத்தாள் யசோதா.

எதுவும் பேச முடியாமல் தலைகுனிந்துமர்ந்திருந்தார் கைலாஷ். சற்று நேரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, யசோதா தான் வந்த நோக்கத்தை உடைத்துப் பேசினாள். 

“ஒரு வாரம் முன்னாடி, இந்த பொண்ணுக்கு வரன் கூடி வருதுனு நீங்க சொன்னதும், அவளுக்கு ஒரு நல்லது நடக்கும்னு நெனச்சிட்டு இருந்தேன். ஆனா இப்படி ஆயிருச்சு. பரவாயில்லை... போனதெல்லாம் போகட்டும். என் பொறந்த வீட்டு மானத்தை நாங்க காப்பாத்துறோம்” என்று நிதானமாகச் சொன்னாள்.

கைலாஷும் வித்யாவும் ஒருவரையொருவர் குழப்பமாக பார்த்துக் கொண்டனர். 

யசோதா ஒரு பெருமூச்சு விட்டபடி, “நான் வேற என்ன சொல்லப்போறேன்? இப்படி முழிக்கிறீங்க? என் புள்ளை அக்னி வேந்தன் இருக்கான் இல்லையா? அவனுக்கு உங்க பொண்ணு ஆதிராவை பொண்ணு கேட்டு வந்திருக்கேன். அவளுக்கு நீங்க நகை நட்டு, சீர்செனத்தினு எதுவும் செய்ய வேண்டாம். இழுத்துட்டு கெடக்குற சொத்து கேஸை முடிச்சு, உங்க பொண்ணு பேர்ல அந்த சொத்தை மாத்திக் கொடுங்க” என்றாள்.

அந்த வார்த்தைகள் கைலாஷ், வித்யா, ஆதிரா மூவரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தின. வித்யாவுக்கு வாயடைத்துப் போனது. ஆதிரா உடல் நடுங்கியது, அவளின் கண்கள் அகல விரிந்தன. 

இத்தனைக்கும் யசோதாவின் முகத்தில் எந்தவித மகிழ்ச்சியும் இல்லை. அவளின் கண்கள், ‘உன் மகளை நாங்கள் ஏற்கத் தயாராக இல்லை’ என்று அப்பட்டமாகக் கூறின. கையில் ஒரு முழம் பூ கூட இல்லாமல் வெறும் கையை வீசிக்கொண்டு பெண் கேட்டு வந்திருந்தார்கள். 

இவளுக்கு இது போதும் என்று நினைத்து விட்டார்களா?’ என‌ இல்லாததை எல்லாம் யோசித்தது ஆதிராவின் மனது.

நந்தினி, வா நான் உனக்கு புடவை கட்டி விடுறேன். பெரியவங்க கால்ல விழுந்து நமஸ்காரம் பண்ணிக்கோ” என்றுதிராவை அழைத்தாள்.

ஆதிரா கேள்வியாய் அவள் முகத்தைப் பார்த்தாள். நந்தினியின் முகத்தில் ஒரு சிறு புன்னகை உதித்தது. ஆனால், அது சந்தோஷப் புன்னகை அல்ல. 

‘பார்த்தாயா? உலகிலேயே நீதான் பெரிய அழகி போல நடந்து கொள்வாயே. உன் அதிக பிரசங்கி தனத்தால் என்ன நடந்தது பார்!’ என்பது போன்ற ஒரு குரூரப் புன்னகை. 

ஆதிராவின் மனம் பதறியது. அவள் தன் தந்தை ஏதாவது சொல்வாரா என்று அவர் முகம் பார்த்தாள்.

இந்த அவமானத்தில் இருந்து எப்படி மீள்வது என்று தவித்துக் கொண்டிருந்தவருக்கு, யசோதாவின் இந்த முன்மொழிவு, ஒரு பெரிய வாய்ப்பாகத் தெரிந்தது. 

“நீயே வீடு தேடி வந்து கேக்கும்போது, நான் வேண்டாம்னா சொல்லப் போறேன்? தேதி குறிச்சிடு, நாம மட்டும் போய், குலதெய்வ கோவிலில் கல்யாணம் பண்ணிடுவோம்!” என்று ஆதங்கத்துடன் கூறி முடித்தார்.

வித்யாவும் வாய் திறக்காமல் நிற்க, ஆதிராவுக்கு அழுகை வந்தது. அவளுக்கு தன் வாழ்க்கை சூதாட்ட மேசையின் மீது இருக்கும் காய்கள் போல அங்கும் இங்கும் நகர்த்தப்படுவதாய் தோன்றியது. ஆளாளுக்கு அதை அவர்கள் போக்கில் மாற்றிக் கொண்டிருந்தால் அவளும்ான் என்ன செய்வாள்? இறுதி நம்பிக்கையோடு தன் தாய் முகத்தை பார்த்தாள்.

அதை புரிந்து கொண்ட யசோதா, “நீங்க என்ன அண்ணி சொல்றீங்க?” எனக் கேட்டார்.

“என் பொண்ணு ஏதோ ஒரு இடத்துல வாழ்ந்தா போதும். அவளை நம்ம‌ அக்னி ஏத்துக்கிட்டாலே, எனக்கு சம்மதம்!” என்று படபடவெனச் சொன்னாள். 

தினம் தினம் சந்திக்கும் அவமானத்தை தாங்க முடியாமல், அவர்கள் இருவரும் அவசரப்பட்டு சம்மதம் சொன்னார்கள். ஆதிராவின் காதுகளில் இடி விழுந்த உணர்வு. 

“அம்மா! அப்பா! இது வேணாம்…” என்று அவள் சொல்ல விரும்பினாள். ஆனால் குரல் எழும்பவில்லை. சொன்னாலும் கேட்பார்களா என்று தெரியாது. எதுவும் பேச முடியாத நிலையில் அவளை விதி நிறுத்தி இருந்தது

தன் காதலன் ஏமாற்றிய அதிர்ச்சி அடங்குவதற்குள், இந்த எதிர்பாராத திருமணம் எனும் இருள் அவளைப் பிடித்துக் கொண்டது. ஆதிரா முகம் கருத்து நின்றிருப்பதை பார்த்த யசோதாவின் முகத்தில், ஒரு திருப்தியான புன்னகை மிளிர்ந்தது. நந்தினி, ஆதிராவை காரணமே இல்லாமல் முறைத்தாள். இரு குடும்பத்தினரும், சாஸ்திர சம்பிரதாயத்திற்காக வெற்றிலை மாற்றிக்கொண்டனர். 

அந்த ஒரு கணத்தில், ஆதிராவின் உலகம் தலைகீழாக மாறியது. நாட்கள் ஓடிட, திருமண நாள் வந்தது...

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page