அலை கடல் பெண்ணவள்

அலை – 2

 

தமிழ் வணிகர்கள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இலங்கைக்குச் சென்று அங்கே அநுராதபுரத்தில் தங்கி வாணிபம் செய்திருந்தனர் என்பது, சமீப காலத்தில் அந்நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பிராமி எழுத்துக் கல்வெட்டினால் அறியப்படுகிறது.

தமிழக வணிகர் அயல்நாடுகளுக்குச் சென்று வாணிபம் செய்தது போலவே அயல்நாட்டு வணிகரும் தமிழகத்துக்கு வந்து வாணிபம் செய்தார்கள். அக்காலத்தில் வாணிபத்தில் உலகப் புகழ்பெற்ற கொற்கை துறைமுகத்தில் அயல்நாடுகளிலிருந்து கப்பலோட்டி வந்து பலமொழிகளை பேசிய மக்கள் தங்கியிருந்தனர் என்பதை நமது சிலப்பதிகாரம் கூறுகிறது. 

மேற்குத் தொடர்ச்சி மலையின் பொதிகை மலையில் தோன்றி, நிலமடந்தையின் முகத்தைப் போலப் பொலிவுடன் விளங்கும் கொற்கை நகர் தண்பெருநை (தாமிரபரணி) ஆறு ஜீவநதியாய் அணி செய்ய, ஆழமுடைய அகழியாலும், பகைவர் எவராலும் அழிக்க முடியாத பிரமாண்ட கோட்டை மதில்களாலும், கரும்பாறை சுவர்களால் சூழப்பட்ட கொற்கை நகரினது கோட்டை வாயில் நெடிய நிலைகளையும், திண்ணிய கதவினையும், மாடங்களையும் கொண்டிருந்தது. 

இக்கோட்டைக்குள் இருபுறங்களிலும் உயர்ந்து தோன்றும் சாளரங்களுடன் கூடிய வீடுகளை உடைய அகன்ற தெருக்கள் இருந்தன. 

சங்ககால நகரங்கள் தொழில் மற்றும் மக்கள் பிரிவுகளின் அடிப்படையில் வீதிகளைக் கொண்டிருந்தன. முக்கிய வீதிகளாக ராஜ வீதி, பெருவீதி, மற்றும் வணிகர் அங்காடி வீதிகள் அமைந்திருந்தன.

இளங்காலை வேளை பெருவீதி வழியில் கூச்சல் சப்தம் கேட்டது. கட்டிளங்காளையாக அரச உடை அணிந்த காவல் வீரன் ஒருவனுக்கும், பருவமங்கைக்கும் சண்டை நடந்து கொண்டிருந்தது.

அவர்களைச் சுற்றிலும் காலைவேளை பணிகளுக்குச் சென்று கொண்டிருந்த மக்கள் சிலர் சற்று நின்று இவர்களது சண்டையைப் பார்த்துச் சிரித்துக் கொண்டும், ரசித்துக் கொண்டும் இருந்தனர்.

என்ன சண்டையைப் பார்த்து ரசித்துச் சிரிப்பதா? ஆச்சரியம்தானே! ஆனால் அவர்கள் இருவருக்கும் நடக்கும் இந்தச் சண்டை வாரம் ஒருமுறையாவது ஏதாவது ஒரு வீதியில் நாம் கண்டு களிக்கலாம்.

இது இவர்களின் பால்ய வயதிலிருந்து நடக்கும் ஒன்றேயாகும். இவர்களின் நாமகரணம் குவளை, சிங்கன்.

“யோவ்! உன் எலும்பை உடைச்சு சுறாக்கு போட்டுடுவேன்.” என்றாள் குவளை கோபத்துடன்

“என்ன என்ன… நீயா? நான் உன் திமிலைப் பிடிச்சேன் நீ திமிரக் கூட முடியாது. நான் சிங்கனாக்கும்!” என்றான் ஏளனமாக.

“ஓ… நீ என்னோட திமிலைப் பிடிப்ப? நீ பெரிய வீரனா இருந்தா தாழைப்பாக்கத்துக்கு வா… பார்ப்போம்.” என்றாள் நிமிர்வுடன்.

ஞாயிறின் சுடரொளி குவளையின் மேனியில் பாய்ந்து வியர்வைப் பூக்களைப் பூக்கச் செய்தது. அது காண்பதற்கு அலையின் பிரவாகம் பொங்கிப் பெருகிய வேகத்தில் துள்ளி விழுந்த செழுமீன் போல் பளபளத்தது.

சிங்கனுக்கு இதைக் கண்டதும் ‘ஐய்யோ! இது என்ன இவள் மீனைப் போலவே இருக்கிறாளே’ என்ற எண்ணம் வந்ததும், வாலிபப் பருவத்தின் ஆண்மையின் சிலிர்ப்பு ஒன்று மீன் போலவே துள்ளி வந்து போனது. முதன் முதலாகக் காதல் உணர்வு அரும்பியது.

புதிதாகப் பூத்த செவ்வரி ஓடிய வெள்ளரளி மலர்போல், வெள்ளைக் கச்சையும், வெள்ளைப் பருத்திப் பூப் போன்ற மென்மையான சீலை முழங்கால் தொட்டு மீதம் இருந்த பாகங்கள் உப்பு நீரின் பளபளப்பை போல் மின்னியது. முத்து போன்ற பல்வரிசை சிப்பிக்குள் முத்து போலவே ஒளிர் விட்டது.

கருங்குவளை மலர்களைப் பார்த்தே குவளைக்கு இப்பெயரிட்டனரோ என்று ஐயம் இருக்கும். சங்குக் கழுத்தில் கொற்கை முத்து மாலை அவளின் அழகுக்கு அழகைச் சேர்த்தது. தோள்களில் சங்கும், கெளுத்தி மீனின் ஓவியங்களைத் தொய்யல் (பச்சை) தீட்டியிருந்தாள். அது குவளையின் அழகை தேவலோக மங்கையாகக் காட்டியது. நெய்தல் பெண்ணை வெறிக்க வெறிக்கப் பார்த்தான் சிங்கன்.

சண்டையிட்டுக் கொண்டிருந்தவனிடமிருந்து சப்தம் இல்லாமல் போகவே, நிமிர்ந்து சிங்கனைப் பார்த்தாள் குவளை. சிங்கனின் பார்வையைப் பார்த்தவளுக்கு சினம் ஏறியது.

மக்கள் கொற்கை நகருக்குள் போகும்போது அவர்கள் கொண்டு செல்லும் பொருட்களைக் கண்காணிப்பது காவல் வீரர்களின் கடமையாகும்.

சிங்கனுக்கு எப்போதுமே குவளையை சீண்டி சினம் கொள்ள வைப்பது எப்போதுமே நடக்கும் ஒன்று.

“யோவ்! என்ன பண்ற? என்னோட பொருளைக் குடு நான் போகணும், உன் கண்ணை நோண்டிச் சுறாக்கு போட்டுடுவேன் பார்த்துக்க. எங்கிட்டியே எப்பப் பார்த்தாலும் வம்பு இழுக்குற, அடுத்த முறை நீ எங்கிட்ட இப்படி நடந்துக்கிட்ட நான் ஆயக்கணக்கர்கிட்ட போயிடுவேன் பார்த்துக்க.

பேரைப் பாரு பேரை… சிங்கன். காட்டுல போயி இருக்க வேண்டியது எல்லாம் நாட்டுல இருக்குது, அதுவும் நகர தலைமைக் காவல் வேற! அய்யோ… போய்யா போயி காவல் காக்குற வேலையை ஒழுங்காப் பாரு.” என்றாள்.

அப்போதும் சிங்கன் குவளையை மெய் மறந்து பார்த்துக்கொண்டிருந்தான்.

சிங்கனின் கையிலிருந்த மூங்கில் கூடையைப் பிடுங்கிக் கொண்டு நடந்தாள். அது கூடத் தெரியாமல் சிங்கன், குவளையைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் சண்டை முடிந்து விட்டது என்ற கவலையுடன் அவரவர் பணிகளுக்கு முணுமுணுத்துக் கொண்டே நடந்தார்கள்.

சுந்தர பாண்டியனின் கோநகரமாகிய கொற்கை தலைசிறந்த முத்துக் குளிக்கும் நகரமாய் விளங்கியது என்பதை மதுரைக்காஞ்சி மூலம் அறிய முடிகின்றது. 

குவளை பெருவீதி கடந்து கணீகையர் வாழும் வீதிக்குள் நடந்தாள். வீதி எங்கிலும் அகிலின் நறுமணமும், குங்கிலியத்தின் நறும்புகையும், பாரசீக அத்தரின் நறுமணமும் வீசிக்கொண்டு தலையைக் கிறுகிறுக்க வைத்தது

கொற்கை நகரங்களில் செழுமையான வீதிகள் கணீகையர் வாழ்ந்த வீதிகள் ஆகும். அரச குடும்பத்தினரும், பெரும் வணிகர்களும் நடமாடும் முக்கியமான இடங்களுக்கு அடுத்து கணீகையர் வீதிகள் இருந்தன. இந்த வீதிகள் எப்போதும் விழாக்கோலம் பூண்டது போலப் பொலிவுடன் விளங்கும்.

குவளை நாசியில் நறுமணத்தை நுகர்ந்து கொண்டே ஒரு மாளிகையின் பெரிய தேக்குக் கதவினை தள்ளினாள். நீண்ட நெடிய செண்பக மரங்களும், இருவாட்சி, மல்லிகை மொட்டுகள் நிறைந்த நந்தவனம் பூத்துக் குலுங்கியது.

கணீகையர் வீடுகள் வெறும் சாதாரணக் குடியிருப்புகள் அல்ல, அவை பல அடுக்குகளைக் கொண்ட மாட மாளிகைகளாக இருந்தன. நிலவொளி படும் வகையில் அமைக்கப்பட்ட நிலா முற்றங்கள் மற்றும் காற்றோட்டமான ஜன்னல்கள் இவற்றுக்குத் தனிச்சிறப்பு சேர்த்தன.

வீடுகளின் வாசல்கள் கலை நயம் மிக்கதாகவும், உட்புறம் மலர் மாலைகளாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். விருந்தினர்களை வரவேற்கும் வகையில் திண்ணைகளும், அகன்ற வாயில்களும் வடிவமைக்கப்பட்டிருந்தன. உள்ளே சித்திர வேலைப்பாடுகள் கொண்ட தூண்களும், உயர்ரக வேலைப்பாடுகளுடன் கூடிய விரிப்புகளும் விரிக்கப்பட்டிருக்கும்.

நறுமணம் கமழும் அகில் புகையின் நறுமணம் வீடெங்கும் எப்போதுமே நிறைந்திருக்கும். ஆடலிலும் பாடலிலும் வல்லவரான கணீகையர்கள் தனது ஆடல் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் தனித்தனி கூடங்கள் இருந்தன. கணீகையர் வீடுகளில் மன்னர்கள் வழங்கியப் பரிசுப் பொருட்களும், பொற்காசுகளும் நிறைந்திருந்தன. 

காமிகாகமம் ஆச்சார்ய லட்சணப் படலத்தில் கூறப்பட்டுள்ளபடி ஆலயங்களில் நடனமாடும் பெண்கள் தேனீயின் நிறம் போன்ற கூந்தலையும், எட்டாம் நாளின் பிறைச் சந்திரனைப் போன்ற சுருள் முடிகளைக் கொண்ட நெற்றியையும், மன்மதனின் வில் போன்ற புருவங்களையும், நீலத் தாமரை போன்ற கண்களையும், கிளியின் கொக்கைப் போன்றும், செம்பக பூப் போன்ற மூக்கையும் கொண்டிருக்க வேண்டும், அவர்களுக்குச் சந்திர வடிவ காதணிகள், பவளம் போன்ற உதடுகள், முத்துப் போன்ற பற்கள் மற்றும் சங்கு போன்ற கழுத்தையும் கொண்ட நடனப் பெண் இந்தக் குணங்களைக் கொண்டிருக்க வேண்டும்.

அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட வேண்டும். கடவுளுக்கு அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

அத்தகைய சிறப்பு வாய்ந்த நடனப் பெண், கோவிலில் உள்ள மகாமண்டபத்திலிருந்து கருவறை வரை ஐந்து பொடிகளைப் பூசிப் பூசி அலங்கரிக்க வேண்டும்.

நந்தவனத்தில் விசிறிவாழையாய் நடனமாடிக் கொண்டிருந்த பூவூஞ்சலின் அருகே குவளை நின்றாள்.

பூவூஞ்சல் நின்றது. “வா வா, குவளை!” என்ற குயிலின் குரல் கேட்டது.

குவளை அங்கே இருந்த மண்குவளை நீரைப் பருகிவிட்டு அருகே இருந்த கல்திட்டில் அமர்ந்து தனது மெல்லிய பருத்தி ஆடையால் வியர்வையை ஒற்றி எடுத்தாள்.

“மயூரி, என்னை எதுக்கு வரச் சொன்ன? தாழைப்பாக்கத்துல இருந்து இங்கே வருவதற்குள் எத்தனை இடர்கள்? அதுவும் அந்தக் கழுகு சிங்கன் தொல்லை தாங்க முடியவில்லை.”

கலகலவெனச் சிரித்துக் கொண்டு ஓடிவந்த மயூரி, குவளையைக் கட்டிக் கொண்டாள்.

சட்டென்று குவளை, “மயூரி, தள்ளி நில்லு. நீ எங்கே? நான் எங்கே…” என்றாள்.

மயூரி, “குவளை, நான் எத்தனையோ முறை உன்னிடம் கூறிவிட்டேன். நீ என்னைவிட உயர்ந்தவள், அழகி!” என்றாள்.

குவளை மயூரியிடம், “நீ எப்போதும் தவறாகப் பேசுகிறாய். நீ மயூரமோகினி, பேரழகி! அதுவும் கொற்கை நகரத்தில் ராஜமகளிர் யாரும் உன் அழகில் பாதியளவு கூட இல்லை. உன்னைத் தரிசிக்க இதோ இப்போது கூட நகரம் எங்கும் வாலிபர் கூட்டம் அலை மோதுகிறது.

நீ என்னவென்றால் எப்போதும் என்னையே உயர்த்திக் கொண்டும், என்மீது கருவாட்டின் நாற்றமே வீசுகிறது இதில் அழகி பட்டம் வேறு!”

என்றாள்.

மயூரி, “உனக்குத் தெரியாத புரியாத விடயங்கள் நிறைய உள்ளன.” என்றாள் மெல்லிய வேதனையுடன்.

குவளை, “சரி சரி, இங்கே வா. நீ கேட்டதை எடுத்துக் கொண்டு வருவதற்குள் நான் பட்டபாடு இருக்கே…” என்றாள்.

மயூரி கண்களில் ஆவலுடன், “எங்கே காட்டு காட்டு!” என்றாள்.  

மூங்கில்கூடையில் நெய்தல் பூக்களால் மூடப்பட்டு உள்ளே இரண்டு குடுவைகள் வெள்ளைநிற துணியால் மூடப்பட்டிருந்தது.

“செல்வமகள் நீ, உனக்கு இதுதானா பிடித்து இருக்கிறது? ஐய்யோ! உன்னை என்ன சொல்வது?” என்று தலையில் அடித்துக் கொண்டாள்

மயூரி குடுவையை எடுத்து அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டே குடுவையை திறந்தாள். அதில் பழைய நொய்சாதம், புளித்த தயிர் கடைந்த காய்ந்த மிளகாயும் கலந்த கூழைப் பார்த்ததும் வாயில் எச்சில் ஊறப் பருக ஆரம்பித்தாள்.

“ஆஹா… தேவாமிர்தம்! இதற்கு நிகர் இந்த மண்ணுலகில் இல்லை குவளை. என்ன சுவை!” என்று மயூரி பருகிக் கொண்டிருந்ததைக் கண்ட குவளைக்கு கண்கள் கலங்கியது.

மயூரியின் பளிங்கு கழுத்தில் பானம் இறங்கியது கண்ணாடிபோல் தெரிந்தது. நெய் கலந்த சாமை அரிசி சோறும், சுவையான இனிப்புப் பதார்த்தங்களை உண்பவள் பழைய சாதத்தைக் கொண்டாடுகிறாள் என்பதை நினைத்து பேருஉவகை கொண்டாள்.

மயூரி குடித்து முடித்தவுடன் அவசர அவசரமாகக் குடுவையை வாங்கிக் கூடையினுள் வைத்துக் கொண்டாள்.

குவளை மயூரியிடம், “சரி சரி, நான் செல்கிறேன். யாராவது பார்த்தால் வம்பு வந்து சேரும். பௌர்ணமி இரவு அர்த்தமண்டபத்தில் உன்னுடைய ஆடல் காண வந்து விடுவேன்.” என்றாள்.

மயூரி குவளையிடம் ஒரு பெட்டியைத் திணித்தாள். 

குவளை கேள்விக் குறியுடன், “என்ன இது?” என்றாள். 

“என் அன்பின் அடையாளம்!” என்றாள்.

பெட்டியின் உள்ளே பூங்கரை நீலம் ஆடை ஒன்று இருந்தது. பூங்கரை ஆடை பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் அழகிய உடை வகையாகும். “பூங்கரை” என்பது பூவடிவ ஓரம் அல்லது வேலைப்பாடு கொண்ட கரையைக் குறிக்கும். “நீலம்” என்பது ஆழ்ந்த மயில் தோகையின் கண்நீல நிறத்தைக் குறிக்கிறது. ஆகவே, பூங்கரை நீலம் ஆடை என்பது நீல நிறத்திலான துணியில் பூவடிவ அலங்கார ஓர நெய்தல் செய்யப்பட்ட ஆடையாகும். இவ்வகை ஆடைகள் வேலைப்பாடும் வண்ண அழகும் மிகுந்ததாக இருக்கும்.

சங்க காலத்தில் செல்வப் பெண்கள் அணியும் அழகிய இவ்வாடை அவர்களின் மேன்மையையும் செழிப்பையும் காட்டுவதாக இருந்தன. கண்களுக்கு இன்பம் தரும் ஆடைகளில் பூங்கரை நீலம் முக்கியமான ஒன்று.

குவளை தன் பெரிய கருவிழிக் குடைகளை விரித்து, “எனக்கா… எனக்கே… எனக்கா?” என்றாள் ஆச்சரியமாகவும், ஆனந்தமாகவும்.

மயூரி குவளையின் ஆனந்தக் களிப்பைக் கண்டு பரவசமடைந்தாள். “நானே உனக்காகத் தைத்தேன்.” என்றாள்.

யாரோ வரும் சப்தம் கேட்க மயூரி, “சரி, நீ பார்த்துச் செல். நான் செய்தி அனுப்புகிறேன்.” என்றாள்.

குவளை பெட்டியைக் கூடையினுள் வைத்துவிட்டு மான்போல் துள்ளிக் கொண்டு மாயமாய் மறைந்தாள் கொற்கையின் வீதிகளில்.

 

அலை வருடும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page