அலை கடல் பெண்ணவள்

அலை 1

 

இந்து மகாசமுத்திரம் எங்கும் கருநீல வண்ணத்தைப் பூசிக் கொண்டு, சூரியனை மேற்கு கரைக்கு அனுப்பிக் கொண்டிருந்தது. சமுத்திரத்தின் பரப்பளவு எனக்குப் போதவில்லை என்று இடமும் வலமும் எங்கும் தன் கைகளை நீட்டி அரவணைத்துக் கொண்டிருந்தது.

நான்கு திசைகளிலும் சமுத்திரம் ‘ஹோ’வென ஆர்ப்பரித்து அலைந்து கொண்டிருந்தது. ஆகாயமும், சமுத்திரமும் போட்டி போட்டு அன்று ஏனோ கடல் அலைகளுடன் கரையை தொட்டுத் தொட்டு விளையாடிக் கொண்டிருந்தது.

அலைகள் ஒவ்வொரு முறையும் கரையை தொடும் போதும் ஏதாவது ஒரு பொருளைக் கரைக்குப் பரிசாகக் கொடுத்து விட்டுச் செல்லும். கிளிஞ்சல்கள், சங்கு, நண்டு, மீன்கள் இப்படி ஏதாவது ஒன்றை ஒருமுறை கொடுத்து, ஒரு முறை தன்னுடனே எடுத்துச் செல்லும்.

ஒரு முறை அலை கரையும், மறுமுறை கரை அலையும். இப்படியே இன்பமாக விளையாடிக் கொண்டிருந்தன.

சூறைக்காற்று விசுவிசுவென்று சப்தமாக வீசிக் கொண்டிருந்தது. அலைகள் வெண்மையான மணற்பரப்புகளை தன்னுடைய வலிமையால் வரிகோடுகளை அங்காங்கே ஓவியம் வரைந்து விட்டுச் சென்றது.

மணல் வலைகளில் வசிக்கும் சிறிய கடல் நண்டுகள் அவ்வப்போது வந்து தன் ஓவியதிறமையையும் காட்டிக் கொண்டிருந்தது.

செக்கச் சிவந்த கீழ்வானத்திலிருந்து சூரியன் மறைந்து, வெள்ளியை உருக்கி வார்த்த பூர்ண சந்திரனை வெளியே தள்ளினான்.

சித்திரை முழுநிலவின் வரவிற்காக எத்தனையோ உயிரினங்கள் காத்துக் கொண்டிருந்தன. சிறிது சிறிதாக மேலே ஏறிய நிலவின் வெளிச்சம் கடலின் மீது விழும்போது நிலவின் பிம்பம் அலையுடன் சேர்ந்து நாட்டியமாடியது.

அலைகடலின் தாலாட்டிலும், எத்தனை எத்தனை கதைகள் இந்தச் சமுத்திரத்தில் நிகழ்ந்து இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே நடுவானில் ஒளிர்ந்தாள் வெண்மதி.

நீ பாதி, நான் பாதி, முன்பாதி பூர்ண சந்திரன் போலவும், பின்பகுதி வெண்மதியாகவும் குளிர்ந்து இருந்தது அந்த நிலவு உதயம்.

வெண்மதியின் முதல் கீற்றின் ஒளி மண்ணைத் தொடுவதற்குள் அந்த மணல் பரப்பு முழுதும் வைரம்போல் ஜொலித்தது.

அர்த்த ஜாமம் நேரம் ‘ஜல் ஜல்’ என்ற சிலம்பின் ஒலி கேட்டது. கூதல் காற்று ‘ஓ’வென்ற சப்தத்துடன் குளிரை வீசியது.

நடுநிசி நேரம் திடீரென்று கடற்கரையில் இருந்த மணல் சிற்பத்திலிருந்து மணல் துகள்கள் உதிர ஆரம்பித்தன.

காற்றின் வீரியத்தால் கடல் சிற்பத்திலிருந்த சித்திரப் பாவை உயிர்தெழுந்தாள். கடற்கரை மணலில் விளையாடிக் கொண்டிருந்த நண்டுகள் ‘சறக்’கென்று தன் மணல் வலைக்குள் ஓடி ஒளிந்து கொண்டு மெதுவாக எட்டிப் பார்த்தது.

அதுவரை பெரும் ஓசையுடன் அலைந்து கொண்டிருந்த அலைமகள் கூடத் தன்னை அமைதியாக்கிக் கொண்டு பாவையைப் பார்த்தாள்.

வானவீதியில் சுடர்விட்டுக் கொண்டிருந்த விண்மீன்கள் எல்லாம் ஒன்றாய் சேர்ந்து தனது பிரகாசத்தை சித்திரப் பாவைக்குப் பரிசளித்தன.

சித்திரப் பாவைக் கால் சிலம்புகள் சப்தமிட மெல்ல அடி எடுத்து அங்கே தூரத்தே தெரிந்த சப்தகன்னியர் தீவை நோக்கி நடந்தாள்.

உப்பங்கழி மணற்பரப்பில் தன்னிலை மறந்து பிணைந்து கொண்டிருந்த இரண்டு சர்ப்பங்கள் சிலம்பொலியின் சப்தத்தில் ஆனந்தக் களிப்பை கலைத்துவிட்ட ஆக்ரோஷத்தில் சீற்றத்துடன் சீறித் திரும்பிய வேகத்தில் சித்திரப் பாவையைக் கண்டதும் பிரிந்து வழிவிட்டன.

தாழை மலர் புதர்கள் எங்கும் தாழம்பூ மலர்ந்து தெய்வீக நறுமணம் கமழும் வாசத்தினை வீசியது. தாழையின் வாசத்தை சுவாசித்துக் கொண்டே சித்திரப் பாவை முன்னோக்கி நடந்தாள்.

(தாழையின் அடிமரத்தில் விழுதுகள் உண்டு. இது மடலாகப் பூக்கும். இதன் பூவில் ஆண் பெண் வேறுபாடு உள்ளது. ஆண் பூ தான் மணமிக்க தாழம்பூ. வெளிறிய மஞ்சள் நிறத்தில் இருக்கும் இப்பூ ஒரே நாளில் கீழே விழுந்து விடும். ஆண்மலர் காய் காய்ப்பதில்லை. பெண் வகையில் பூவும், காயும் அன்னாசிப்பழம் போன்ற அமைப்பில் இருக்கும்.)

சப்தகன்னியர் தீவு சிதிலமடைந்து கிடந்தது. பெரும் வணிக தளமாக இருந்த இந்தத் தீவு இன்று கேட்பாறற்று கிடந்தது. 

சிதிலமடைந்த கற்கோவில் கோபுரம் ஒன்று தெரிந்தது. பெரிய பெரிய இடிந்த மதில் சுவர்கள் எத்தனையோ சுனாமிகள் கடந்தும் தாங்கி நின்றது. 

பெரிய வன்னி மரங்களும், செங்குழலி மரங்களும் நிறைந்த கோவிலுக்குள் பாவைக் காலடி எடுத்து வைத்த அடுத்த ஷணம் பூர்ண வடிவை அடைந்தாள்.

கோவில் பிரகாரம் எங்கிலும் செங்குழலி மலர்களும், மகிழம் பூக்களும் ஒரு சேர நறுமணத்தைக் கொட்டி கோவிலைப் பரிமளப்படுத்தியது. உள்ளே சென்றவள் சப்தகன்னியர்களின் சிலைகளை வணங்கினாள். வணங்கியவள் பிரகாரத்தைக் கடந்து கோவிலின் பின்னே சென்றாள். அங்கே ஓர் அல்லி தடாகம் காய்ந்து கிடந்தது.

செந்தாமரைக் கால்களால் முதல் அடியை எடுத்துப் படிகளில் வைத்தாள்.

பாறைகளில் மறைந்த அல்லி மலர் தடாகம் பச்சை மாறாமல் தன்னை வெளிப்படுத்தியது. தடாகத்தில் கயல் போல் உள்ளே பாய்ந்தாள். தகிக்கும் மனவோட்டத்தின் வென்னீரை, தண்ணீரால் கரைத்தாள். கார்குழல் கலைந்து மேலே வந்தாள் வெண்மையான அல்லி மலராய்!

வண்டுகளின் ரீங்காரம் அந்தப் பகுதி எங்கும் கேட்டது. கோட்டான்களும் இரவுப் பறவைகளும் அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்தன.

 

துயில் கலைந்த தோகை

மயிலாய்…!

வெண்சங்கின் வார்ப்பெடுத்த

ஓவியமாய்…!

பவளமல்லிக் காம்பு வண்ணப் பளிங்கு 

சுடராய்…!

நீலக் கருங்குவளை கரும் விழிகளின்

நாட்டியத்தில்…!

செப்புக் குடங்கள் கூத்தாட பொன்சிலை ஒன்று…!

 

குளிர்ச்சியான குளத்திலிருந்து அப்போதுதான் பூத்த செம்மணிப் பூவாய் உயிர்த்தெழுந்து வந்தாள்.

சித்திரப் பாவையைக் கண்ட வீண்மீன்கள் எல்லாம் மெய்மறந்து பார்த்தது.

தேவலோக மங்கையர்களிடம் இல்லாத ஒளிர்வு பூலோக சிலையிடம் எப்படி என்று யோசனை செய்து, அந்த ஷணநேரம் வீண்மீன்களின் ஒளி குறைந்து சிமிட்டியது.

ஏன் பால்நிலா கூட மங்கி, சொக்கிப் போய்ச் சித்திரப் பாவையைப் பார்த்தது.

சித்திரப் பாவையின் கருங்கூந்தல் அவிழ்ந்து பின்காலைத் தொட்டு ஆடிக் கொண்டிருந்தது. இது பாவையின் பின்னழகை முழுதுமாக மறைத்துக் கொண்டது.

பேரழகின் தரிசனத்தை அந்த இடத்திலிருந்த ஜீவன்கள் மட்டுமே பார்த்துப் பரவசமடைந்தன.

கற்கோவிலின் முன்னே உடைந்து போன பாய்மரப் படகொன்றின் மேல் உட்கார்ந்தாள் சித்திரப் பாவை.

சமுத்திர ராஜனை கூர்மையான பார்வையுடன் வெறித்தாள். தொலைதூரத்தில் மின்னிய வெளிச்சத்தைக் கண்டவளின் முன்னே வந்து நின்றது இந்திர விழா (காமன் விழா) நாட்கள்.

***

பாண்டியர்களின் தலைசிறந்த துறைமுகமாகக் கொற்கை திகழ்ந்தது. கொற்கை நகரின் கடற்கரையில் அந்த மாலைக் காற்று பலமாகவும், சற்று வித்தியாசமாகவும் வீசியது.

தமிழ் வணிகக் கப்பல்களுக்கு நடுவே, உயர்ந்த கம்பங்களும் வெண்மையான துணிச்சாலைகளும் கொண்ட பெரிய யவன பாய்மரக் கப்பல் ஒன்று நின்றது.

கப்பலிலிருந்து பெரிய பெரிய மரப்பெட்டிகளுடன், கூடவே ஒரு வெள்ளைக் குதிரை ஒன்றும் இறக்கப்பட்டது.

பார்த்தவுடனே தெரிந்துவிடும் இவர்கள் யவனர்கள் என்று. கலத்திலிருந்து சில பாரசீக வியாபாரிகளும் இறங்கினார்கள்.

கப்பலிலிருந்து உயரமான ஒருவன் வெள்ளைக் குதிரையின் அருகே சென்று அதன் பிடரியில் கையை வைத்துத் தடவிய கணமே தன் முன்னங்காலை தூக்கி கணைத்தது.

அப்போது குள்ளமாக வந்த கப்பலின் மாலுமி, “என்ன வீனஸ், என்ன சொல்றான் எரா?” என்றார். 

வீனஸ் சிரித்துக் கொண்டே, “உப்புத் தண்ணீரை நிறையக் குடித்து விட்டானாம். திராட்சை பானம் வேண்டும் என்கிறான்.” என்று அழகிய முத்துப் பற்கள் தெரிய சிரித்தான்.

வீனஸ் உயரமாக நிமிர்ந்திருந்தான். தழும்புகள் நிறைந்த முதுகு. அவனுடைய தோல் கடல் காற்றில் பழுப்பு நிறமாக மாறி இருந்தது. ரோமாபுரியின் சூரியனும் கிழக்குக் கடலின் உப்பும் அவனுள் பதிந்திருந்தது. கண்கள் சாம்பல் கலந்த நீலம். அதில் நிறைய போர்களைப் பார்த்த திண்மையும் இருந்தது.

செம்பட்டை கூந்தல் சுருளாக நெற்றியில் விழுந்தது. போருக்குப் போகும்போது மட்டும் கூந்தலை கட்டிக்கொள்வான்.

தாடி அழகுக்காக வளர்த்தது அல்ல. நேரம் இல்லாமல் வளர்ந்தது. அந்தத் தாடியில் கப்பல் பயணங்களின் கதைகள் மௌனமாக ஒட்டியிருந்தன. அவனுடைய உடை ரோமப் போர் வீரனுக்கானது. எளிமையான நீளத் துணி, மேலே ஒரு வெள்ளையும், சிகப்பும் கலந்த போர்வை. போரின் தடயங்கள் கைகளில் இருந்தன.

கப்பல் மாலுமி இன்னும் ஒரு மாதம் தங்க வேண்டும் இந்தத் துறைமுகத்தில். முதலில் சோர்வு நீங்க உறங்க வேண்டும். அதற்கு முன் கொற்கையின் உணவு வகைகளை ருசி பார்க்க வேண்டும்.

“ஆமாம் வீனஸ், நீ கிரீஸ், பாரசீக நாடுகளுக்கு எல்லாம் சென்று இருக்கிறாய்தானே?” என்றான்.

வீனஸ், எரான் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தவன், “ஆமாம். நான் பல இடங்களுக்கும் சென்று போரிட்டவன்.” என்றான் கம்பீரமாக.

“ஏன் மாலுமி இதைக் கேட்கிறீர்கள்?” என்றான் வீனஸ்.

“இல்லை, அங்கே சாப்பிட்ட உணவுப் பண்டங்களைப் பற்றிச் சொல்லேன்.” என்றார் மாலுமி.

வீனஸ், “ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வகையான உணவுப் பண்டங்கள். பாரசீக நாடுகளில் மாமிசப் பண்டங்கள், இனிப்பு வகைகள். கிரேக்க நாடுகளில் ரொட்டிகளும், இனிப்பு உருண்டைகளும்.” என்றவன், 

“என்னவொன்று, எந்த இடத்திலும் சரிவர ருசி பார்க்க முடியாது.” என்றான் ஆதங்கத்துடன்.

மாலுமி சிரித்துக் கொண்டே, “நீ கொற்கையின் உணவுப் பண்டங்களை ருசி பார்த்து விட்டுப் பிறகு சொல்.” என்றார்.

யவனர் விஹார் (குடியிருப்பு) துறைமுகத்திற்கு அருகே அமைந்திருந்தது. இருவரும் அதை நோக்கிச் சென்றனர். யவனர் குடியிருப்பு மரமும் கல்லும் கலந்து கட்டப்பட்ட வீடுகள்.

கடற்கரையோரங்களில் சில இடங்களிலேயே துறைமுகங்கள் இருந்தன. துறைமுகங்களில் வணிகக் கப்பல்கள் வந்து இறக்குமதி, ஏற்றுமதி செய்தபடியால் துறைமுகப் பட்டினங்களில் வணிகமும் செல்வமும் பெருகின. ஆகவே துறைமுகப் பட்டினங்கள் நாகரிகமும் செல்வமும் பெற்று விளங்கின.

நெய்தல் நிலத்து மக்கள் கட்டுமரங்களிலும், படகுகளிலும் கடலில் வெகுதூரம் போய் வலைவீசி மீன் பிடித்து வந்து விற்று வாழ்ந்தார்கள். கடலில் சுறா, இறால், திருக்கை முதலான மீன் வகைகள் கிடைத்தன. அவற்றைப் பிடித்து வந்து அயல் ஊர்களில் விற்று (பண்டமாற்று செய்து) தானியங்களைப் பெற்று வாழ்ந்தார்கள். விற்று மிகுந்த மீன்களை உப்பிட்டுப் பதப்படுத்தி உலர்த்திக் கருவாடு செய்து விற்றார்கள்.

சில இடங்களில் கடற்கரையோரங்களில் உப்பளங்கள் இருந்தன. அந்த அளங்களில் கடல் நீரைப் பாய்ச்சி உப்பு உண்டாக்கினார்கள். உப்பை நெல்லுக்கு மாற்றினார்கள்.

மாலுமியையும், வீனஸையும் கண்ட மீனவர்கள், “யவனர்கள்… யவனர்கள்” என்றனர்.

மாலுமி வீனஸிடம், “நீ முதல்முறை இங்கே வருகிறாய் தானே வீனஸ்?” என்றான்.

வீனஸ், “ஆம். இதுதான் எனது முதல் பயணம். புதிய பயணம்.” என்றான்.

மாலுமி நமட்டுச் சிரிப்புடன், “நீ வேண்டுமென்றால் பார், இந்தத் துறைமுகத்தை விட்டுவிட்டு வர மனதே இல்லாமல் நிற்பாய் ஒருநாள்!” என்றார்.

“ஆஹா ஆஹா… என்னால் முடியாது. எனது புஜங்கள் போர்களத்திற்குச் செல்லத் தயாராக இருக்கிறது. என்னைவிட எரா துடித்துக் கொண்டிருக்கிறான். யவன அரசரின் சொல்லுக்காக இங்கே வந்தேன். ஏன் வந்தேன் இந்தச் சோம்பேறித்தனமான வேலைக்கு? எனக்கு இந்தக் கொற்கை பிடிக்கவேயில்லை மாலுமி. எனது வாள் எப்போது என்னைப் போர்க்களத்திற்கு அழைத்துச் செல்வாய் என்று கேட்கிறது.” என்றான்.

மாலுமி சிரித்துக் கொண்டே, “என்னவோ! உனக்கு இந்தக் கொற்கை துறைமுகம் நிறைய கொடுக்கப் போகிறது.” என்றார்.

வீனஸ் பெரிய சிரிப்புடன், “ரோமாபுரியிலும், மற்ற இடங்களிலும் கிடைக்காதது இங்கேயா கிடைக்கப் போகிறது?” என்றான்.

 

அலை வருடும்…

 

*****

❤️ Loading reactions...
அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
அலை கடல் பெண்ணவள்
944 101 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page