அலை 11
அம்பை துகிலனின் அம்மாவிடம் சென்று நலம் விசாரித்தாள்.
துகிலனின் அம்மா, “ரொம்ப மகிழ்ச்சி அம்பை, அருமையாக இருந்தது.” என்றார்.
துகிலனின் தங்கை சினேகமாக, “அக்கா…” என்று கொஞ்சினாள்.
சிங்கன், “அம்மா, அவன் எனக்குத் தமையன் மாதிரி, நான் கோபம் கொண்டது உங்களைச் சாப்பிடவிடாமால் அவன் உண்டதற்கு.” என்றான்.
அவன் அன்னையோ, “என்ன பண்ணுவது நாட்டுக்கே ராஜா என்றாலும் எனக்கு அவன் குழந்தைதானே!” என்றார். “துகிலன் வளரும் பிள்ளை அப்பா” என்றார்.
சிங்கனுக்கு சிரிப்பாக இருந்தாலும், “அம்மா, இரவு நேரம் பார்த்துச் செல்லுங்கள்.” என்றான். துகிலனின் வீடு அரண்மனை ஊழியர்கள் தங்கும் வீதியில் இருந்தது.
துகிலன் அம்பையிடம், “அக்கா, போய்வருகிறேன்.” என்றான்.
அம்பை உடனே, “ஆமாம் துகிலா, ஏன் குவளை வரவில்லையா?” என்றாள்.
குவளையின் பெயர் கேட்டதும் இரு காதுகள் கூர்மையாகக் கேட்டது.
“தெரியவில்லை அக்கா வருகிறேன்” என்றான்.
“இந்த அத்தானைக் காண வரவில்லை. வந்திருந்தால், ஐயோ…” என்று நாக்கை சப்புக் கொட்டி இழுத்த விதத்தைக் கண்டு இரு கண்கள் வேங்கையின் இரத்தச் சிவப்பைப் பூசியது.
துகிலன், “ஐயோ, வந்து இருந்தால் இன்னும் இரண்டு தொன்னை பொங்கல் சாப்பிட்டு இருப்பேன்.” என்று சொல்லியவுடன் சிங்கனுக்கு பெரிய பாரமும் கோபமும் எங்கோ போனது.
சிங்கனின் முகத்தில் சிரிப்பு வந்தது. அதுவரை துகிலன் மேல் இருந்த கோபம் பன்னீராய் கரைந்து போனது.
அம்பைக்குமே துகிலனை நினைத்து முகம் மலர்ந்தது. ‘சிறிய வயதில் பார்த்த அதே குழந்தைத்தனம் தான் இன்றும் இவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும்’ என்று நினைத்தாள்.
சிங்கன், “சரி கிளம்புங்கள்.” என்றான்.
அம்பையும் சிங்கனும் வரும்வரையிலும் இரண்டு சிற்பங்களாய் சமைந்து இருந்தார்கள் மயூரியும், வீனஸும்.
மயூரியும், வீனஸும் அங்கே இவர்கள் கடைசியாக எப்படிப் பார்த்தார்களோ அப்படியே அச்சுப் பிசகாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். இவர்கள் வந்ததைக் கூட அறியாமலேயே நின்றார்கள்.
சிங்கனுக்கும் அம்பைக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. ரதிமஞ்சரி வரும் ஓசை கேட்டதும் அவசரமாக அம்பை, “சிங்கா, சீக்கிரம் வீனஸை இழுத்துக் கொண்டு போ.” என்றவள் மயூரியை இழுத்துப் பல்லாக்கினுள் உட்கார வைத்துத் தானும் உட்கார்ந்து திரைச்சீலையை மூடினாள்.
சிங்கன் எராவையும், வீனஸையும் இழுத்துக் கொண்டு எதிர் திசையில் இருந்த இருட்டில் கலந்தான்.
பல்லாக்கினுள் ரதிமஞ்சரி ஏறியவுடன் பல்லாக்குத் தூக்கிகள் இவர்களைத் தூக்கிக் கொண்டு கிளம்பினார்கள்.
ரதிமஞ்சரி, “யாரோடு பேசிக் கொண்டிருந்தீர்கள்?” என்றார் அம்பையிடம்.
“சிங்கன் விசாரித்துச் சென்றான் அம்மா. பாதுகாப்பு வேண்டி, மன்னர் திக்விஜயம் சென்று இருப்பதால் அதிகமாகப் பாதுகாவலை பலப்படுத்துகிறார்களாம் அம்மா.” என்றாள்.
“ஓ…” என்றவள் மயூரியைப் பார்த்தாள். “குழந்தை மிகவும் களைப்படைந்து விட்டாள் இல்லை அம்பை.” என்றாள். மயூரியோ சுய நினைவற்று இருந்தாள்.
அம்பை அதற்கு, “ஆம் அம்மா, குழந்தை அப்படித்தான் இருக்கிறாள்.” என்றாள்.
ரதிமஞ்சரி, “வீடு சேர்ந்ததும் படிகார வெந்நீரில் பாத ஒத்தடம் கொடுக்க வேண்டும்.” என்றாள்.
அதற்கு அம்பை, “ஆகட்டும் அம்மா! அதை நான் கவனித்துக் கொள்கிறேன். கவலை வேண்டாம்.” என்று சமாதானம் செய்தாள்.
சிங்கன் வீனஸை இழுத்துக் கொண்டு கோவில் பின்புறம் சென்றவன் வண்ணாவை கூட்டிக் கொண்டு அரண்மனை விருந்தினர் மாளிகை வந்தான்.
வீனஸை பார்த்தான். ‘காலையில் பார்த்த வீனஸ் இவன் இல்லையே!’ கண்களில் ஏதோ ஒன்று இருந்தது.
வீனஸிடம், “நன்றாக ஓய்வு எடுங்கள். நான் காலையில் வருகிறேன். எராவை காவலர்கள் கவனித்துக் கொள்வார்கள். கவலை வேண்டாம்.” என்றவன் கதவைச் சாற்றிவிட்டு சென்றான்.
சிங்கன் நேராக அவனின் தங்கியிருக்கும் பகுதிக்குச் சென்றான். சிங்கனுக்கு குவளையின் நினைவு அதிகரித்தது.
ரதிமஞ்சரி பல்லாக்கு வீட்டிற்கு வந்தவுடன் மயூரிக்கும், அம்பைக்கும் மங்கல ஆரத்தி எடுத்தார். ரதிமஞ்சரியின் தூரத்து உறவான மார்கழி, பார்ப்பதற்கு சற்று குள்ளமான உருவம் என்றாலும் விசுவாசமிக்கவள்.
மங்கல ஆரத்தி எடுத்ததும், “ரதி, என்னால் வர முடியாமல் போனதே இந்தப் பாழாய் போன இடுப்புவலியால். எப்படி இருந்தது குழந்தையின் நாட்டியம்? அசந்து போனார்களா எல்லோரும்?” என்று நிறைய கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனார்.
ரதி, “சொல்கிறேன் அக்கா. மயூரி சோர்ந்து இருக்கிறாள்.” என்றார்.
“நீ கவலையை விடு, அவளின் சோர்வை நான் நீக்கி விடுவேன்.” என்றார் மார்கழி.
மயூரியை அவளின் மேல்மாடத்திற்கு அழைத்துச் செனறாள் அம்பை. அங்கே வெள்ளைப் பருத்திப் பூக்களால் செய்த மெத்தையில் அமர வைத்து அவளின் ஆபரணங்களைக் களைந்தாள். அப்படியே சலனமே இல்லாத ஓவியம் போலவே இருந்தாள்.
அதற்குள் இரண்டு பணிப்பெண்களுடன் உள்ளே வந்த மார்கழி, “நிலா சதுக்கத்தில் கொண்டு வைத்து விடுங்கள்.” என்றாள்.
மயூரியின் மேல்மாடத்தில் பெரிய நிலா சதுக்கம் இருந்தது. நிலா சதுக்கம் என்பது பெரிய திறந்தவெளியின் ஒரு பகுதியில் சிறிய நான்கு தூண்கள் கொண்ட மண்டபம்போல் இருக்கும். கதிரவனின் கதிர்களும், சந்திரனின் ஒளியும் எந்தத் திசையிலும் விழுமாறு அமைக்கப்பட்டிருக்கும்.
மயூரியின் தினசரி நடன நிகழ்வு இங்கேதான் இருக்கும். ஏன் அம்பையும், மயூரியும் இங்கேதான் பெரும்பாலும் நாட்டியத்திலும், பாட்டிலும் கழிப்பார்கள்.
பளிங்கு கற்கள் பதித்த சதுக்கத்தின் நடுவே இரவு நேரத்தின் நிலா ஒளி வெள்ளி நீராகப் பொழிந்தது.
நிலவொளி விழுந்த பளிங்கு தரைகள் மெதுவாக ஜொலித்தது. நிலா சதுக்கத்தை சுற்றிலும் வரிசையாக நின்ற தூண்களின் நிழல்கள் நீண்டு வந்து தரையில் கோலம் போட்டது போலப் பரவின.
சதுக்கத்தைச் சுற்றி பூந்தோட்டம் வளையமிட்டிருந்தது. மல்லிகை, இருவாட்சி பாரிஜாத பூக்கள் (இரவு மலரும் பூ) இருந்தது. பாரிஜாதம் ஒரு விசேஷமான மலர். இதன் இதழ்கள் பால் வெள்ளையாக இருக்கும். நடுவில் ஆரஞ்சு நிற நார் (தண்டு) இருக்கும். இந்தப் பூ அதிகமாக இரவில் மலர்ந்து விடியற்காலையில் மரத்திலிருந்து தானாக உதிர்ந்து விடும்.
அதனால் மரத்தின் அடியில் வெள்ளை இதழ்களும், ஆரஞ்சு நார்களும் கலந்த பூத்தரை உருவாகும். வெண்மையான சிறு நட்சத்திரங்களாக மலர்ந்து நிலா சதுக்கத்தில் அற்புதமான வாசனையை நிரப்பி இருந்தது.
நந்தவனத்தில் இருந்த செண்பக மரங்கள் நிலா சதுக்கம்வரை வந்து மயூரியின் அழகைக் காண எல்லா மூலைகளிலும் உயர்ந்து நின்றது. அதன் மஞ்சள் மலர்களை நிலா ஒளியில் பொன் நிறமாக மாற்றிக் காத்திருந்தன. சில பூக்கள் காற்றின் வீரியத்தால் பளிங்கு தரையில் கீழே விழுந்த பூக்கள் எல்லாம் நிலா சதுக்கத்தின் தரையில் சிதறிய தீபம்போலச் சுடர் விட்டது.
நந்தவனத்தின் கீழே துளசி மாடம் அருகே தீபம் ஒன்று எரிந்தது. அதன் அருகில் தேனீக்கள் இல்லை. ஆனால் மணம் மட்டும் இன்னும் இருந்தது. இரவுக் காற்று அந்த மூலிகையின் மணத்தைச் சுமந்து நந்தவனத்தையே சுற்றிச் சுற்றி வந்தது.
மார்கழி மயூரியிடம், “எழுந்து வா மகளே!” என்று முன்னால் கால்களைத் தாங்கித் தாங்கி நடந்து சென்றாள்.
நிலா சதுக்கத்தில் இரு பணிப்பெண்களும் ஏதோ சில பொருட்களை ஓரமாக வைத்து விட்டுக் காத்து இருந்தார்கள்.
அம்பை, மயூரியை அழைத்து வந்து பளிங்கு மேடையில் அமர வைத்தாள்.
“மூச்சை சமமாக விடு, இன்னும் உன் மேனி நாட்டிய தாளத்தில் இருக்கிறது.” என்று மெதுவாகச் சொன்னாள்.
இரண்டு பணிப்பெண்கள் மயூரியின் முன் வந்து மண்டியிட்டு அமர்ந்தனர்.
கனமான இரு சலங்கைகளை அவிழ்த்தனர். மயூரியின் பாதத்தின் சோர்வு மெதுவாக அவிழ்ந்தது. மயூரிக்கு பெரிய பாரம் நழுவிக் கீழே விழுந்ததுபோல இருந்தது.
வெள்ளிக் கலசத்தில் வெதுவெதுப்பாக இருந்த வெந்நீர் படிகாரக் கரைசலை சிறு பாத்திரத்தில் ஊற்றி, மயூரியின் கால்களை இரு கரங்களாலும் தாங்கினார்கள் இரண்டு பணிப்பெண்களும்.
வெந்நீர் படிகாரக் கரைசலில் கால்களை நன்கு கழுவிய பிறகு, பணிப்பெண் சிறு களிமண் கிண்ணத்தைத் திறந்தாள். அதிலிருந்தது மெதுவான நறுமண எண்ணெய். வெட்டிவேர், சந்தனம், இளநெல்லி, இலவங்கப்பட்டை ஊறவைத்து தயாரித்து எடுத்த எண்ணெய். மார்கழியே தயார் செய்து கொடுத்தது.
ஒரு பணிப்பெண் கைவிரல் முனையில் ஒரு துளி எடுத்தாள். மயூரியின் பாதத்தின் நடுவில் தொட்டாள். முதலில் வட்டமாகத் தடவினாள். பிறகு கால்விரல் நரம்புகளின் வழியாக மெதுவாக இழுத்தாள்.
இன்னொரு பெண் கால்விரல் இடைவெளிகளை நிதானமாகச் சுத்தம் செய்தாள். மற்றொருத்தி பாதத் தண்டில் அழுத்தம் கொடுத்து மெதுவாகத் தடவினாள். கால்தண்டில் கீழிருந்து மேலாக அழுத்தம் கொடுத்தாள்.
“அழுத்தம் அதிகமா அம்மா?” என்று மெதுவாகக் கேட்டாள்.
மயூரி கண் திறக்காமல் தலையசைத்தாள்.
“இல்லை இல்லை, இப்படியே இருக்கட்டும்.” என்றாள்.
சோர்வு உடலிலிருந்து வெளியேறுவதுபோல இருந்தது. ஆனால் மனம் மட்டும் அமைதியாகவில்லை.
மார்கழி, “அப்படித்தான் இதே முறையில் மெதுவாகச் செய்யுங்கள்.” என்று கட்டளை பிறப்பித்துக் கொண்டு இருந்தாள்.
மயூரியின் செம்பஞ்சு பூசப்பட்ட பாதங்கள் நாட்டியத்தின் வெப்பத்தால் இன்னும் சிவந்தவையாக இருந்தது.
மயூரி கண்களை மூடினாள். அவள் மனதில் இன்னும் நடனம் ஓடிக் கொண்டே இருந்தது. ஆனால் அதற்கிடையில் இன்னொரு காட்சி மீண்டும் மீண்டும் வந்தது. கோவில் வாசல் நிழலில் நின்றவனின் பார்வை. அந்த ஒரு நொடி திடுக்கிட்டுக் கண்களைத் திறந்தாள் மயூரி.
“என்ன?” என்று அம்பைக் கேட்டாள்.
“யாரோ… இன்னும் பார்த்துக் கொண்டிருக்கிறார் போல இருந்தது.” என்றாள் மயூரி மெதுவாக.
அம்பை சிரித்தாள். ”நிலா தான் பார்த்தாள், உன் நாட்டியம் முடிந்ததும் அவள் எப்போதும் உன்னை இப்படித்தான் உற்றுப் பார்ப்பாள்.” என்றாள்.
ஆனால் மயூரி மீண்டும் திரும்பி வானவீதியைப் பார்த்தாள். நிலவின் நிழல் வழியாக வானத்தில் ஒரு உருவம் நகர்ந்தது போல இருந்தது. கைகளால் கண்களைக் கசக்கி விட்டுப் பார்ததாள்.
அம்பை, “இன்று அபிநயம் வேற மாதிரி இருந்தது மயூரி.” என்றாள் சிரிப்புடன்.
சட்டென மயூரி கண்களைத் திறந்தாள் அதிர்வுடன்.
“இல்லையே, எப்படி சொல்கிறாய்? நான் எப்போதும் போலவே இன்றும் அபிநயம் பிடித்தேன்.” என்றாள் அவசரமாக.
அம்பை, “ஆமாம் மயூரி. இத்தனை நாள் அபிநயம் சிவனை, சிவன் சிலையைப் பார்த்தவாறு இருந்தது. ஆனால் இன்று அந்தச் சிவன் உன் அருகில் இருந்த மாதிரி அபிநயம் பிடித்தாய். நான்கூட ஓ… சிவபெருமானை நீ தரிசித்து விட்டாயோ! என்று தேடினேன். என் கண்களுக்குத் தரிசனம் கிட்டவில்லை. ஒருவேளை காதல் இருந்தால் மட்டுமே தரிசனம் கிடைக்குமா என்ன?” என்று கேட்டுக் கொண்டு மயூரியின் மலர்ந்த முகத்தைப் பார்த்தாள்.
அப்போது மயூரியின் முகத்தில் நவரசமும் வந்து போனது.
காதல் என்ற வார்த்தையைக் காதில் கேட்டவுடனே இருவர், “என்ன…?” என்று அதிர்ச்சியாக அம்பையைப் பார்த்துக் கேட்டனர்.
அலை வருடும்…
