அலை கடல் பெண்ணவள்
அலை 12
மார்கழி எதுவும் புரியாமல் ‘காதலா! யாருடன் யாருக்கு?’ என்று அதிர்ச்சியில் கேட்டார்.
மயூரியோ ‘ஐயோ, இது என்ன அம்பைக்கு தெரிந்து விட்டதோ?’ என்ற அதிர்ச்சியில் கேட்டாள்.
இவர்கள் இருவரின் அதிர்ச்சிக் குரலில் ஒரு நொடி அம்பையே திடுக்கிட்டு ‘ஐயோ மார்கழி வேறு இருக்கிறாளே மறந்து விட்டேனே’ என்று சமாளித்தவாறு,
“அதுவா, சிவனிடம் காதல் “காதல் பக்தி” அதைக் கேட்டேன்… அதையேதான் கேட்டேன்.” என்றவாறே, “மார்கழி இன்று மயூரியின் நாட்டியத்தைப் பார்க்கவில்லை நீங்கள் பார்த்து இருந்தால் உங்களுக்கு இந்தச் சந்தேகம் வந்து இருக்காது. இல்லையா மயூரி!” என்று கேட்டாள் அம்பை.
மார்கழி அம்பையிடம், “அம்மா சொல்லுவார்கள், நான் கேட்டுத் தெரிந்து கொள்கிறேன்.” என்றாள்.
மயூரிக்கு ‘அப்பப்பா! நல்லவேளை யாருக்கும் தெரியவில்லை’ என்ற பெருமூச்சுடன் கள்ளத்தனம் வந்து சேர்ந்தது.
கள்ளத்தனத்தின் பிரதிபலிப்பை மயூரியின் கன்னத்தில் நிலவொளி பட்டு அது மெல்லிய சிவப்பைக் கன்னக்கதுப்புகளிலும் காதுமடல்களிலும் காட்டிக் கொடுத்தது அம்பைக்கு.
மயூரிக்கும், அம்பைக்கும் வெந்நீரில் நன்கு வேகவைத்து மெலிதாக அரைத்த பாதாம் பருப்பு, சிறிது நெய் மணம் கலந்த கருப்பட்டிப் பால் சேர்த்து வெள்ளிக் கிண்ணங்களில் ஊற்றிக் கொண்டு வந்தாள் பணிப்பெண்.
மார்கழி மயூரியிடம் கொடுத்து, “குழந்தை, நடனத்துக்குப் பிறகு உனக்கு உடல் சோர்வு குறைய இதை அருந்து.” என்றார் அன்புடன்.
அம்பையிடம் அதேபோல் கொடுத்து, “அம்பா, நீயும் பாடியதால் தொண்டை கம்மியிருக்கும். இதைக் குடித்தால் இதமாக இருக்கும்.” என்றார் பரிவுடன்.
கருப்பட்டியின் இனிப்பு வாசனையும், பாதாமின் மென்மையும் அம்பையின் தொண்டை வழியே இதமாக இறங்கியது.
மயூரி கையில் வைத்திருந்த பாதாம் கருப்பட்டிப் பாலை உதடுகளுக்குக் கொண்டு சென்றாள். வாசனை நாசியைத் தொட்டது. ஆனால் அருந்த முடியவில்லை. கிண்ணம் மெதுவாகக் குலுங்கியது.
அம்பை கவனித்தாள். மயூரி கையில் இருந்த கிண்ணத்தைக் கீழே வைத்தாள். அம்பை நெருங்கி அமர்ந்தாள்.
“என்னவாயிற்று, என்ன ஏதோ நினைவு தானே?” என்றாள்.
“அம்பை… இப்போது எனக்கு அருந்த மனம் இல்லை.” என்றாள் மெளனமாக.
கருப்பட்டிப் பால் மேல் மெல்ல எழுந்த நீராவி அவள் கண்முன் மங்கலான ஒரு உருவமாய் மாறியது. அவன் முகம், அந்தக் கூர்மையான பார்வை பேசாமல் பல கேள்விகளைக் கேட்ட அந்தக் காந்தக் கண்கள்.
அவன் இப்போது எங்கே இருப்பான்? என்ன செய்து கொண்டு இருப்பான்? என்னை அவன் நினைப்பானா? என்ற எண்ணம் திடீரென நெஞ்சை இறுக்கியது.
***
அரண்மனை விருந்தினர் மாளிகை முழுவதும் ஆழ்ந்த இரவின் அமைதி படர்ந்திருந்தது. மெத்தைக் கட்டிலில் முதுகைச் சாய்த்தபடி, கைகளைத் தலையணையின் கீழ் போட்டுக் கொண்டு மேலே சாளரம் வழியே தெரியும் நிலாவை நேராகப் பார்த்தான் வீனஸ்.
‘என்ன நடந்தது எனக்கு? இது என்ன உணர்ச்சி?’ என்று மனதில் கேட்டுக் கொண்டான்.
‘நான் போர்க்களத்திற்கு செல்லும்முன் கூட இவ்வளவு கலக்கம் எனக்கு வந்ததில்லையே, போர்க்களத்தில் வாள் வீச்சு, குதிரை வீச்சு, குருதி வாசனை இவை எல்லாமே பழக்கமான ஒன்று. இது என்ன மாயம்?’ என்று உள்ளுக்குள் கேட்டான்.
மயூரியின் உருவம் நினைவில் தெளிவாக நின்றது.
‘அவள் நடனமாடிய தருணம், காற்று கூட நின்றதுபோல. அவள் கை நீட்டியபோது யாரை அழைத்தாள்? அவள் கண்கள் உயர்ந்தபோது யாரைத் தேடியது? அந்த ஒரு கணம் அவள் என்னைப் பார்த்தாளா? இல்லை நான் தான் அப்படிச் நினைக்கிறேனா?’
அவன் மெதுவாகச் சிரித்தான்.
வாளால் காயப்படுத்தாத ஒன்று பார்வையால் காயப்படுத்திவிட்டது. இதயம் அமைதியாக இருக்கவில்லை. நினைவு மீண்டும் மீண்டும் கோவிலுக்கு அவனை இழுத்துச் சென்றது.
போர்க்களத்தில் பல கண்களைப் பார்த்திருக்கிறேன். கோபம், பயம், வெறுப்பு… ஆனால் இப்படி பேசும் கண்களை முதல் முறையாகப் பார்க்கிறேன். எத்தனை தவிப்புகள்? ஏதோ பேசியதே! என்ன சொல்லியது?
இதயத்துக்குள் ஒரு இனிய வலி பரவியது.
போரில் பட்டக் காயம்போல அல்ல, இதமாக எரியும் ஒரு காயம். ‘இப்போது அவளும் விழித்திருப்பாளா?’ அந்த எண்ணமே அவனை நகர்த்தி, அவனை அறியாமல் தூங்கினான்.
***
அம்பை மெதுவாக மயூரியை அழைத்து வந்து உறங்க வைத்துவிட்டு அவளின் அடுத்த அறைக்குச் சென்றாள். மயூரியின் உறக்கம் அந்த இரவு உறக்கமாக இல்லை. படுக்கையில் படுத்தபின் கண்களை மூடினாள். உடல் சோர்ந்து கிடந்தது. திரும்பித் திரும்பிப் படுத்தாள். தலையணையை அணைத்தாள், ஆனால் மனம் விழித்தே இருந்தது. தூக்கம் இலேசாகத் தழுவியது. அவள் கனவிலேயே அடிக்கடி சிரித்துக் கொண்டே தூங்கிப் போனாள்.
அரண்மனை விடியலில் விழித்துக் கொண்டது. வீனஸ் மெதுவாகக் கண்களைத் திறந்தான். ‘நான் இருப்பது கொற்கையில்’ என்ற நினைவுடன் மனது அசை போட்டது. மயூரியின் நினைவு வந்தது. இன்பமும் துன்பமும் வந்து வந்து போனது.
அப்போது கதவைத் தட்டும் ஒலி கேட்டது. துகிலன் வந்தான்.
“நன்றாக உறக்கம் வந்ததா அரண்மனையில்?” என்றான்.
வீனஸ், “ம்மம்… உறக்கம் வந்தது, உறங்கினேன்.” என்றான்.
துகிலன், “சரி சரி, சீக்கிரம் போய்க் குளித்து விட்டு வாருங்கள்.
நம்மைத் துறைமுகத்திற்கு வந்து சேருமாறு சிங்கன் கூறியிருக்கிறார்.” என்றான்.
வீனஸிற்கு ஒரு நிமிடம் என்ன இது என்று தோன்றியது. மறுநிமிடம், “இதோ வருகிறேன்.” என்றவன் சிறிது நேரத்தில் வந்து விட்டான்.
வெளியே வந்தவர்களை வரவேற்றது எரா.
துகிலன், “கவலைப்படாதீர்கள், வெள்ளைச்சாமிக்கு காலை ஆகாரம் நன்றாகக் கொடுத்து விட்டேன். என்ன நான் கொஞ்சமாக என் அம்மாவிடம் பழையகஞ்சி குடித்தேன். உங்களுக்குத் தெரியாது நீங்கள் வாருங்கள் உங்களை என் மாமா வீட்டிற்குக் கூட்டிச் செல்கிறேன். அங்கு என் மாமா பெண்ணின் கையால் சமைத்த உணவை நீங்கள் சாப்பிட்டால் நீங்கள் ரோமாபுரி சென்றாலும் எச்சில் சுரக்கும்.”
“ஐயோ, நினைவு வந்து விட்டதே என்ன செய்வது?” என்று பரபரத்தான்.
வீனஸிற்கு நேற்றைய நினைவு வந்தது. “ஆமாம் துகிலா, உன் வயிற்றுவலி என்ன ஆனது? என்றான்.
“அது போய் விட்டது. கோவிலில் இரவு நெய் பொங்கல் சாப்பிட்டதும் வேங்குழலி அன்னை சரிசெய்து விட்டாள். இப்போது வேறு சாப்பிட வேண்டும்.” என்றவனைப் பார்த்து,
வீனஸ், “நீங்கள் நேற்று வந்தீர்களா?” என்றான்.
துகிலன், “ஆஹா! எல்லாம் சரியாகப் போயிற்றே! கோயிலுக்குள் வந்தேன். அபிநயத்தைப் பார்த்தேன்; உங்களையும் பார்த்தேன். கோவிலுக்கு வெளியே நடந்த அந்த அபிநயக் காட்சியையும் கண்டேன். நீங்கள் இரவு முழுவதும் உறக்கம் கண்ணைத் தொடாதபடி விழித்திருந்து ‘மீண்டும் எப்போது அந்த நாட்டிய தாரகையை காண முடியும்?’ என்று ஆதங்கம் கொண்டிருந்ததையும் பார்த்தேன்.”என்றான்.
அவன் சொன்னதைக் கேட்டதும் வீனஸிற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! ‘துகிலனை சாதாரணமாக நினைத்துவிட்டேனே, துகிலனுக்கு மதிநுட்பம் அதிகம் என்று நிறைய தடவை சிங்கன் சொல்லிக் கொண்டே இருப்பான். நான் தான் வேறுமாதிரி நினைத்து விட்டேன்’ என்று நினைத்தான்.
வீனஸ் முழித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, “சரி சரி, வாருங்கள் போகலாம். எனக்கு மிகுந்த பசி, வயிற்றை கிள்ளுகிறது.” என்று அழைத்துக் கொண்டு, “முதலில் பாக்கம் போக வேண்டும்.” என்றான்.
கதிரவன் இன்னும் முழுதாக எழாமல், வானம் இளஞ்சிவப்பு நிறத்தில் நனைந்திருந்தது. கடலலைகள் மெதுவாகக் கரையைத் தொட்டுத் திரும்பின. இரவு முழுவதும் ஆடிய அலைகளுக்கு இப்போது ஓர் அமைதியான தூக்கம் இருந்தது.
தாழைப்பாக்கத்தில் மட்டும் அமைதி இல்லை. அங்கு வாழ்க்கை ஏற்கனவே விடியலில் விழித்துவிட்டது.
வலைகளைத் தோளில் சுமந்து ஆண்கள் கூட்டமாக நடந்தனர். உப்புப் படிந்த கயிறுகள், ஈரமான வலைகள், மரப்படகின் வாசனை எல்லாம் கலந்த கடல் மணம் காற்றில் பரவியது.
பாக்கம் பெண்கள், அதிகாலையில் பிடித்த மீன்களை அல்லது உலர்த்த வேண்டிய பொருட்களை, வெயில் நேரடியாகப் படாமல் இருக்க புன்னை மர நிழலில் ஒழுங்காகக் கூடைக் கூளங்களாக அடுக்கி வைத்தார்கள்.
(கூளங்கள் என்பது மீன், உப்பு, உலர் மீன், நண்டு போன்றவற்றை வைக்கப் பயன்படுத்தும் கூடைகள்)
ஒருவள் மீன் வகைகளைப் பிரித்தாள். மற்றொருவள் மீன்களை உலர்த்தக் கம்பிகளில் தொங்கவிட்டாள்.
சிறுவர், சிறுமிகள் நண்டுகள் ஓடும் தடங்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டும் அதன் பின் ஓடிக் கொண்டும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
ஒரு முதிய சேர்ப்பான், அலையின் நிறத்தைப் பார்த்துக் கடலின் மொழி தெரிந்த காரணத்தினால், “இன்று வலை நிறையப் பிடிக்கும்.” என்றான்.
அலையின் உயரம், நீரின் நிறம், நுரை அமைப்பு, காற்றின் திசை, மண்வாசனை இவற்றைப் பார்த்தே ‘அன்று மீன்பிடி எப்படி இருக்கும்?’ என்று சேர்ப்பான்கள் ஊகிப்பார்கள்.
கடற்காகங்கள் மேலே சுற்றிச் சுற்றி உலர்ந்த மீன்களை எடுக்க வட்டமிட்டன. தூரத்தில் படகுகள் தண்ணீரை வெட்டி நகர்ந்தன.
சூரியன் தங்க வட்டமாக மேலே வந்தபோது கடல் முழுக்கப் பொன்னிற ஒளி பரவியது. அந்த ஒளியில், பாக்கம் ஒரு கிராமமாக இல்லை. உழைப்பால் எழும் ஒரு உயிருள்ள உலகம்போல இருந்தது.
சேர்ப்பான் குடிலின் முன்னே தூரத்தில் இருக்கும் கடற்கரையில், அலைகள் வந்து சென்ற தடத்தில் ஈரமான மணல் மென்மையாகப் பரந்து கிடந்தது.
குவளை தனியாக அமர்ந்திருந்தாள். கையில் ஒரு சின்னச் சிப்பி. கூடல் இழைக்கத் தொடங்கினாள் (மணலில் வட்டம் வரைந்து சகுனம் பார்ப்பது). இது ஒரு வகையான காதல் விளையாட்டு. வட்டம் வரையத் தொடங்கினாள். ஒரு வட்டம். அதன் பக்கத்தில் இன்னொரு வட்டம்.
‘இணையணும், இணையணும். ஆத்தா ஆத்தா! உனக்கு நான் சோறு பொங்குறேன்’ என்று மனத்தில் நினைத்தாள்.
இரட்டை எண்ணாக வந்தால் அவன் வருவான் என்று நம்பிக்கை.
மூன்றாவது வட்டம் தவறிப் பிரிந்து போனது. கோடு முனை, மறு முனையைத் தொடவில்லை. அது முழு வட்டமாக வரவில்லை.
பிறை போல நின்றது. குவளையின் இதயம் திடுக்கிட்டது. என்ன இது? அவள் விரைவாகத் தன் ஆடையின் ஓரத்தால் அந்த வட்டத்தை மூடினாள்.
பிறை முழுநிலாவாகும்
முழுநிலா வந்தால் நினைவு கூடும்
நினைவு வந்தால் துன்பம் கூடும்
அடுத்த கணம், மற்றொரு எண்ணம் வந்தது. பிறை தாங்கி நிற்பவர் அதைத் தேடுவாரே? அதை நான் மறைத்தால் தவறா? மெதுவாகத் துணியை எடுத்தாள்.
மணல் வட்டம் மீண்டும் தெரிந்தது. அவள் சிரித்தாள், சோகச் சிரிப்பு. வருவாயா? வரமாட்டாயா? என்ற துக்க ஆதங்கம் மனதில் ஓடியது. இந்த மணல் சொல்வதை விட, என் மனமே அதிகம் அறிவானது.
அப்போது அலை ஒன்று வந்து கரையை நனைத்தது. சில வட்டங்கள் அழிந்தன. இரண்டு மட்டும் இணைந்து நின்றன. அவள் அதைப் பார்த்துக் கொண்டே நீண்ட மூச்சு விட்டாள். குறி இன்னும் முடிவாகவில்லை.
அலை வருடும்…
