அலை கடல் பெண்ணவள்
அலை 14
சிங்கன் மனதில் ‘நல்லவேளை இவன் கண்ணில் படவில்லை அவள். மோகினிதான்… அவள் மோகினிதான் என்னை அடிக்கவில்லை அணைத்துக் கொண்டாள்’ என்று இனிதான நினைவைச் சுவைத்தான்.
சிங்கனைப் பார்த்த துகிலன், “வீனஸ், தலைவரை மோகினி அடித்து விட்டது. பேய் விரட்டுபவரைப் பார்த்தால் சரியாகி விடும். வாருங்கள் போகலாம்.” என்று சிங்கனை இழுத்துக் கொண்டே பாக்கத்துக்கு நடந்தார்கள்.
தாழைப்பாக்கத்தின் குடிலின் திண்ணையில் உமனார் பெண் உட்கார்ந்து இருந்தாள் கையில் இருந்த மண்சாடியில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தாள்.
குவளை ஆறுமாதக் குழந்தையை வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தாள். அந்தக் குழந்தை குவளையை பார்த்துச் சிரித்துக் கொண்டிருநதது. குவளை குழந்தையிடம் ஏதேதோ பேசி மகிழ்ச்சியாகச் சிரித்துக் கொண்டிருந்தாள்.
உப்பு வியாபாரியான உமனார் பெண், இவர்கள் கூட்டத்துடன் நீண்ட தூரம் பயணித்து, ஊர் ஊராக, தெருவுக்குத் தெருவாகச் சென்று, துன்பப்பட்டு, “உப்பிற்கு சமமான நெல் கொடுத்து உப்பு வாங்குவீர்களா?” என்று கூக்குரலிடுகிறாள்.
அப்படி தெருவில் போன இந்த உமனார் பெண்ணை ஒருவன் அவளை இடைமறித்து, “நீ சுமந்து செல்லும் உப்பு அப்படியே இருக்கட்டும், உன் உடலில் ஒட்டிய உப்பின் விலையைச் சொல்லு, நான் அதை வாங்கிக் கொள்கிறேன்.” என்று கேலி செய்தக் கொடுமையைச் சொல்லிக்கொண்டிருந்தாள்.
அதைக் கேட்ட குவளை, “உன் கூட்டம் எங்கே போனது அக்காய்?” என்றாள்.
“குவளை அவர்கள் வெவ்வேறு பகுதிக்குச் செல்வார்கள். அப்படியே சொன்னால் என்னுடைய உமனன் அவனின் உப்பு சவுக்கால் விளாசி விடுவார். பின் என்ன நடக்கும் சிறை செல்வார். பின் நானும் இதோ கையில் உள்ளவளும், இதோ காலையில்தான் தெரிந்தது வயிற்றில் உள்ளதற்கும், நாங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு எங்கே போவது?” என்றாள்.
“அக்காய், நல்ல சேதி கொண்டு வந்தாய். இரு, உனக்குச் சாப்பிட இனிப்பு எடுத்து வருகிறேன்.” என்று உள்ளே ஓடியவள் கையில் கிடைத்த பனங்கருப்பட்டியை சிறுதுண்டு ஊட்டினாள்.
உமனாட்டி, “குவளை, நான் வந்ததே வாய்க்குச் சிறுமீன்துண்டு வாங்க வந்தேன்.” என்றாள்.
“அக்காய், உனக்குப் புளியேறு தருகிறேன். இன்று செய்தேன் எடுத்துப் போ, மீன்துண்டுகளும் தருகிறேன்.” என்றவள் உள்ளே சென்று ஒரு பித்தளைத் தூக்கு ஒன்றையும், இன்னொரு இலையில் உலர் மீன்துண்டுகளையும் கொண்டு வந்து கொடுத்தாள்.
“இதோ என் ராஜா குட்டிக்கும் கொடுக்கவா? நீ போ, நான் அந்தியில் ராஜா குட்டியைத் தருகிறேன் அக்காய். நீ போய் ஓய்வு எடு.” என்றாள்.
“சரி, நான் வருகிறேன்.” என்று உமனார் பெண் சென்றாள்.
அப்போது அங்கு வந்தவர்களைப் பார்த்த குவளைக்கு அதிர்ச்சியாக இருந்தது.
கையில் குழந்தையுடன் இருந்த குவளையை பார்த்தவர்களில் துகிலனுக்கு பேரதிர்ச்சி.
“ஐயோ! குவளை இது உன்னுடைய குழந்தையா? என்னிடம் சொல்லவே இல்லை.” என்றான்.
சிங்கனும் குவளையும் ஒருவரையொருவர் பார்த்த மகிழ்ச்சியில் இருந்தவர்களுக்கு ‘ஐயோ இது என்ன இப்படி கேட்டுவிட்டானே’ என்று இருந்தது.
குவளை, “அத்தான், உனக்கு அறிவே இல்லையா, உனக்கு எங்கே எப்போ அது இருந்தது? உமாச்சி குழந்தை.” என்றாள்.
துகிலனுடன் வந்தவர்களை ஓலைப்பாய் விரித்து வரவேற்றாள். புதியவனைப் பார்த்தவளுக்கு மரியாதை வந்தது. சிங்கனும் வீனஸும் அமர்ந்தவுடன் துகிலனைத் தேடினாள்.
அவனைக் காணவில்லை. குழந்தையைச் சிங்கனிடம் கொடுத்தவளின் பார்வை ஏதோ சமிக்ஞை காட்டியது. குழந்தையைப் பூவைத் தாங்குவது போல் வாங்கியவனைக் கண்டதும் குவளைக்கு மனது பூரித்தது.
சிங்கனுக்கோ குவளையின் இடுப்பில் குழந்தை இருந்த காட்சி திரும்பத் திரும்ப வந்தது.
அடுப்பு மேடையின் அருகே வெந்நெருப்பு மெதுவாகச் சிவந்துக் கொண்டிருந்தது. மண்பானையில் புளியேறு கொதித்து, வாசனை முழுப் பாக்கத்தையும் நிரப்பியது. பின்புறம் சமையல் கட்டிற்குள் நுழைந்தவள், “ஆ…” என்று அலறினாள்.
ஒருபுறம் அடுப்பு எரிந்து கொண்டிருந்த திட்டின் ஓரத்தில் ஒரு உருவம் குரங்கு போலவே உட்கார்ந்து இருந்ததைக் கண்டவளுக்கு ஒரு நிமிடம் தூக்கி வாரிப் போடக் கத்தி விட்டாள்.
“ஐயோ…” என்ற அலறலுடன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓடினான் சிங்கன். அவன் பின்னே வீனஸும் ஓடினான்.
அங்கே அவர்கள் கண்ட காட்சியில் சிங்கனும், வீனஸும் சிரித்துக் கொண்டிருந்தனர்.
சிங்கன் குவளையிடம் வந்து, “அங்கே பார், கண்களைத் திறந்து பார்.” என்றவன் இதுதான் சமயம் என்று அணைத்துக் கொண்டே சமாதானம் செய்துகொண்டிருந்தான்.
மூவரும் ஒரே நேரத்தில் நின்று பார்த்தார்கள்.
துகிலன் குரங்குபோல் மடங்கி உட்கார்ந்து, ஒரு கையால் மண்பானையைப் பிடித்து, இன்னொரு கையால் புளியேறை வாய்க்குள் தள்ளிக்கொண்டிருந்தான்.
சோறு மட்டும் இல்லை, கன்னத்தில், தாடையில், மூக்குக் கீழே கூட ஒட்டியிருந்தது. துகிலன் இவர்களின் கத்தலைக் கொஞ்சம் கூடக் கவனிக்கவே இல்லை.
வாய் நிறையச் சாப்பிடும்போது, “ஹ்ம்ம்… இதுதான் உயிர்! என்ன சுவை! என்ன சுவை! காந்தாரி, எத்தனை தடவை உன்னிடம் சொல்லி இருப்பேன் இப்படி புளியேறு செய் என்று ஆனால் நீ செய்வதோ எலியேறு செய்கிறாய்.” என்று தலையசைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
குவளைக்குச் சிரிப்பை அடக்க முடியாமல் சிங்கனின் தோளில் சாய்ந்தாள்.
துகிலன், “ஹ்ம்ம்… யார் யாருக்கு இது கொடுத்து வைத்திருக்கிறதோ? இந்தக் கொற்கையில் என் மாமன் மகளைப் புளியேறுவில் வெல்ல யாருக்காவது திறமை உண்டா காந்தாரி? நீ சொல் காந்தாரி” என்று வாயில் கவளத்தை நிரப்பிக் கொண்டே இருந்தான்.
வீனஸ் மெதுவாகச் சொன்னான்.
“இவனுக்குப் பசி வந்தால் போர்க்களமும் நின்றிருக்கும் போல.”
சிங்கன் சற்றுக் குரலை உயர்த்தி,
“வீனஸ், உணவுக்கு நடுவே குடியரசு உரை நடக்குது கேட்கிறீர்களா?” என்றான்.
துகிலன் திடுக்கிட்டு முன்னே பார்த்தான். வாயில் இருந்த சோறு பாதி உள்ளே, பாதி வெளியே.
“அடேய் நண்பா! என்ன செய்கிறாய்?”
விழுங்க முயன்றான், இருமினான், மீண்டும் சாப்பிட்டான்.
“நீங்க எப்ப வந்தீங்க?” என்றான் துகிலன்.
சிங்கன், “நீ மூன்றாவது முறை சாப்பிட்டுவிட்டுக் கைகளைச் சுவைக்கும்போது.” என்றான்.
குவளை, “புளியேறா சாப்பிடுறே? இல்ல பானை உயிரையே குடிக்கறியா?” என்றாள்.
துகிலன் வெட்கப்பட வேண்டிய இடத்தில் பெருமையாக, “சாப்பாடு வீணாகக் கூடாது இல்ல, இது என் தர்மம்!” என்றான்.
வீனஸ் சிரித்துக் கொண்டே, “அப்படியென்றால் உன் முகத்தில் ஒட்டியிருப்பதும் தர்மமா?” என்றான்.
“என்ன? அடடே! எனக்குத் தெரியாமல் போய் விட்டது.” என்று அவன் கன்னத்தைத் துடைத்தவன், மீண்டும் கையில் இருந்த சோறை வாய்க்குள் தள்ளினான்.
அடுப்பு நெருப்பு பட்பட்டென வெடித்தது. மூவரும் சத்தமாகச் சிரித்தார்கள்.
துகிலன் சிங்கனிடம், “அது சரி, நீ என்ன பண்ணிக் கொண்டு இருக்கிறாய்?” என்றான்.
சிங்கன் குழந்தையுடன் சற்று நகர்ந்து நின்றான். ‘ஐயோ, இது என்ன உணர்ச்சி வசப்பட்டுவிட்டேனே’ என்று தோன்றியது.
குவளை வெட்கத்துடன் முகத்தை மூடிக் கொண்டு இருந்தாள்.
“சிங்கா, ஓ… இதுதானா அந்த மோகினிப் பேய்! என் மாமா பெண்ணை நீ கட்டிப்பிடித்துக் கொண்டு நிற்கிறாய்.” என்றான்.
துகிலன் உடனே, “நேற்று வரைக்கும் அத்தான் அத்தான்னு சொன்னாயே இன்றைக்கு நான் யாரோவா?” என்றான்.
சிங்கன் சிரிப்பை அடக்கிக்கொண்டு, “துகிலா, இது உனக்குப் புரியாது, தெரியாது.” என்றான்.
“ஆமாம்! எனக்குப் புரியாது, ஆனா பார்க்கப் பார்க்க நன்றாகப் புரிகிறது.”
அவன் சுற்றி வந்து இருவரையும் ஆய்வு செய்தான்.
“குவளை, நீ சரியாக இருக்கிறாயா? கண் மயக்கம் ஏதாவது வந்துதா? இந்தச் சிங்கன் கண்ணைப் பார்த்துப் பல பேர் விழுந்திருக்கிறார்கள்.” என்றான்.
துகிலன் கைகளை இடுப்பில் வைத்து நின்றான். முகத்தில் பெரிய ரகசியத்தைத் தெரிந்து கொண்ட சிரிப்பு.
“சரி, நான் இப்போது யாரிடமும் சொல்லவில்லை. ஆனால் சொல்லலாம். சொல்லுவேன்.” என்றான்.
சிங்கன் கண் சுருக்கினான்.
“எங்கே சொல்லப் போகிறாய்?”
துகிலன், “எங்கேயென்றால்? பாக்கத்துல மீனவர்கள், என் மாமா முதல் அரண்மனை வாயில் காவலன் வரை அனைவருக்கும் சொல்லுவேன்.”
குவளை திடுக்கிட்டாள். “அத்தான் அத்தான்…” என்றவள் பின் கோபமாக, “யோவ்! உன் வாயை அடை” என்றாள்.
துகிலன் உடனே பின்னோக்கி ஓரடி நகர்ந்தான்.
“என்ன பொருத்தம் இருவருக்கும்… அடடா! இப்போது கோபமும் சேர்ந்து வருகிறது.”
சிங்கன் துகிலன் அருகே வந்து மெதுவாகச் சொன்னான்.
“துகிலா, எவ்வளவு சாப்பாடு, என்ன வேணும் சொல்லு?” என்றான்.
துகிலன் கண் மின்னியது. “நண்பா! பேச்சு சரியான திசையில் போகுது. சொல் கேட்கிறேன்.” என்றான்.
“மாலை முழுக்க உனக்கு நெய் பொங்கல், புளியேறு, தேங்காய் அப்பம். மேலும்… இந்த விஷயம் உன் வயிற்றுக்குள் புதைஞ்சிருக்கும்.”
துகிலன் நிமிடம் யோசித்தான்.
பிறகு கையை மார்பில் வைத்து, “நான் உணவை விற்க மாட்டேன். ஆனால் ரகசியத்தைச் சாப்பாட்டுக்காகக் காக்கலாம்.” என்றான்.
குவளை சிரிப்பை அடக்க முடியாமல் திரும்பி நின்றாள்.
“இவன் ஆபத்தானவன்.” என்றாள் மெதுவாக.
சிங்கன், “ஆமாம். ஆனால் இப்போது நமக்குப் பயன்படும் ஆபத்து.”
துகிலன், “நான் இங்கேதான் இருக்கிறேன். நீங்கள் பேசுவது எல்லாம் கேட்கிறது.” என்றான்.
இருவரும், “ஒன்றும் இல்லை… ஒன்றுமே இல்லை” என்று முழித்தார்கள.
இதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தான் வீனஸ். குவளைக்கு அப்போதுதான் வீனஸ் சிங்கன் சாப்பிடாதது நினைவு வந்தது.
“உணவருந்த வாருங்கள்.” என்றழைத்தாள்.
சிங்கனிடம் இருந்தக் குழந்தையை வாங்கி, “அத்தான், இந்தக் கிலுகிலுப்பையை வெளியே எடுத்துச் சென்று குழந்தைக்கு விளையாட்டு காட்டு போ.” என்றாள்.
துகிலன், “நான் எங்கே பணி புரிகிறேன் என்று இல்லாமலே பல வேலைகளைப் பார்க்கிறேன். நேற்று வெள்ளைச்சாமி இன்று உப்புசாமி” என்று புலம்பியபடியே வெளியே சென்றான்.
மண் அடுப்பின் நெருப்பு மெதுவாக நுரைத்தது. கரிந்த மரச்சாம்பலில் வெந்நிற ஒளி. மண்பானையில் நன்கு ஊறிய புளிச்சாறு, எள்ளெண்ணெய் மேல் மின்னியது.
ஓலைப்பாயில் பரந்த இலை விரிக்கப்பட்டது. அதில் பொன்னிற அரிசி, புளிச்சாறு கலந்து கருந்தேன் நிறம் எடுத்திருந்தது.
வீனஸ் முதலில் வாசனையை சுவைத்தான். நன்றாக இருக்கிறதே என்று மூச்சை இழுத்து, “இதன் மணமே பசியை எழுப்புகிறது.” என்றான் மெதுவாக.
சிங்கன் சிரித்துக் கொண்டே, “சுவை பார்த்துச் சொல்லுங்கள்.” என்றான்.
சிங்கனுக்குமே இது புதியது. ‘முதல் முறை தன் காதலியின் கையால் சமைத்த உணவை ருசி பார்ப்பது எல்லையற்ற மகிழ்ச்சி நிறைந்த நாள்தான் எனக்கு’ என்று நினைத்துக் கொண்டான்.
வீனஸ் ஒரு கைப்பிடி எடுத்தான். விரல்களில் எண்ணெய் ஒளிந்தது. வாயில் சென்றதும் கண் தானாக மூடியது. புளியின் புளிப்பு, உப்பின் உறைப்பு, மிளகின் சிறு தீ, எள்ளெண்ணெயின் நெகிழ் இனிமை, மீனின் சதை அனைத்தும் ஒன்றாகக் கலந்து நாவிலே ருசித்தது.
சிங்கன், “இது உணவு இல்லை. குவளை உன் கையில் என்ன இருக்கிறது? கொடு சுவை பார்க்கிறேன்.” என்று குவளையின் கைகளை இழுத்தான்.
அலை வருடும்…
