அலை கடல் பெண்ணவள்

அலை 16

 

தாழைப்பாக்கத்தில் துகிலன் கையிலிருந்த கிலுகிலுப்பையை மெதுவாக ஆட்டினான்.

“கிளிங்… கிளிங்…” என்ற ஒலி எழுந்ததும், குழந்தை இரு கைகளையும் ஆட்டிச் சிரித்தது.

அந்த நேரத்தில், முதுகை சற்று வளைத்துக் கையில் மூங்கில்கழியை ஊன்றிக் கொண்டு ஒரு வயதான பூட்டி அங்கே வந்தாள். 

அவள் ஒரு கையால் நெற்றியை மறைத்துக் கொண்டே கண்கள் சுருக்கி கூர்மையாய் துகிலனைப் பார்த்தாள்.

“யாரிது… அடடா…” என்று கிழவி வாயைச் சுருக்கினாள்.

“மம்முதராசா குழந்தை உன்னோடதாடா?” என்றாள்.

துகிலன் கிலுகிலுப்பையை ஆட்டிக்கொண்டே, 

“ஏய் அழகி! என்னை இப்படி கூப்பிடாதன்னு எத்தனை தடவை 

சொல்றது? என்னை மாதிரி அழகான முகம் இருக்கே, அதனால அதைப் பார்த்துக் குழந்தை கூட எனக்குத் தான் சொந்தம்னு நினைச்சுட்டியா?” என்றான் வெட்கப்பட்டுக் கொண்டே.

“அப்போ உனக்குத் திருமணம் ஆகலையாடா?” என்றவள், “உனக்கு வாய்த்த பெண் பாவம். இப்படி குழந்தையோட உன்னை நம்பி விட்டுட்டு எங்கேயோ போயிட்டாளா?” என்று கேட்டுப் பூட்டி சிரித்தாள்.

“அழகி, வேண்டாம். என்னை ஏளனம் செய்யாதே! போ அழகி, நீ என்னை மன்மதராசான்னு சொல்லிவிட்டு இவ்வளவு ஏளனம் செய்யுற” என்று குறைபட்டவனிடம்.

“ஐயோ ஐயோ, என்னோட மம்முதராசா என்சாமி… நீ அழகுல மம்முத சாமி ஐயா” என்றாள்.

“நீ இப்படி கிலுகிலுப்பை ஆட்டிக்கிட்டு குழந்தையைக் கையில் தூக்கிக்கிட்டு இருந்தா, நாளைக்கு ஊரெல்லாம் பேசும் ‘துகிலனுக்கு ரகசியமா கல்யாணம் ஆயிடுச்சாம்’னு…” என்றாள் பூட்டி.

துகிலன் கண்களைப் பெரிதாக விரித்தான்.

“அப்போ பூட்டி, நீயே போய்ச் சொல்லு குழந்தை என்னோடதுன்னா, அம்மா யாருன்னு முதல்ல கண்டுபிடிக்கணும். வருவான் பாரு உமனன் உப்பு சவுக்குல என்னை உறிக்க” என்றான்.

கிழவி சிரிப்பை அடக்க முடியாமல்,

“ஓகோ! உனக்குப் பெண் கிடைச்சா, அவள் உன்னை அடக்குறதுக்கு மூன்று கிலுகிலுப்பை வேண்டி வரும், அதாவது மூணு புள்ளைங்க பொறக்கும் ராசா” என்றாள்.

அந்த நேரத்தில் குழந்தை சிரித்தது. 

“அழகி, நீ சொன்னதைக் கேட்டு இங்க பாரு குழந்தை கூடச் சிரிக்குது.” என்றான்.

கிழவி அதைப் பார்த்து, “பார் பார்… இவனும் சிரிக்கிறான். ‘இந்த மம்முதராசாக்கு இன்னும் அறிவு வரணும்’னு தான் சிரிப்பான்.”

“ஹ்ம்ம்…அப்படியா அழகி!” என்றான் துகிலன் பாசமாகக் குழந்தையின் கன்னத்தைத் தடவிக் கொண்டே. 

“அழகி, நான் கல்யாணம் பண்ணிக்கிற நாளு, உன்னையே முதல் அழைப்பா வைக்கிறேன்.”

“அழைப்பா? நான் வந்து பெண்ணைக் கேட்கப் போறேன் ‘என் மம்முதராசனை மயக்கி எப்படி சமாளிக்கப் போறே?’ன்னு” என்று இருவரும் சிரித்தார்கள்.

குழந்தை மட்டும் கிலுகிலுப்பையின் சத்தத்துக்குச் சின்ன ராஜாவைப் போலக் கைகளை ஆட்டிக்கொண்டிருந்தது.

“ராசா, நீ வேணா பாரேன் இந்த மம்முதவிழால உனக்குப் பெண் கிடைப்பா” என்றாள் பூட்டி.

அப்போது உள்ளிருந்து வந்தார்கள் வீனஸ், சிங்கன், குவளை அதைப் பார்த்த பூட்டி, “குவள, யார் இவங்க?” என்றாள்.

துகிலன் வந்தவர்களைத் திண்ணையில் அமரச் சொன்னவன், “பூட்டி, இவரு கொற்கை தலைவர் சிங்கன்” என்றவுடன், “ஓ… தெரியும் தெரியும். ஏம்பா நீ குவளையை வம்புக்கு இழுக்கற?” என்றாள்.

சிங்கன் திடுக்கிட்டான். அதற்குள் துகிலன், “அழகி, அது அவர் கடமை சரியா?” என்றான். 

“சரிதான். நீ சொல்ற நான் கேட்கறேன்.” என்றவளிடம்,

“சரி சரி பூட்டி. இவரைப் பாரு யவனதேச மாவீரர் வீனஸ்.” என்றான்.

“ஹ்ம்ம்… பார்த்தாலே தெரியுதே, எவ்வளவு பார்த்து இருக்கிறேன் இந்த வயசுக்கு? யப்பா யப்பா, எல்லாம் கனவு மாதிரி இருக்கு” என்றவள், “எப்படியோ நல்லது நடந்தா சரிதான்.” என்றாள் பூட்டி.

துகிலன், “ஆமா அழகி, நீ மம்முத விழால தான் பூட்டன பார்த்தியா? சொல்லு உன் கதையை…” என்றான்.

“அட போ ராசா! அதை ஏன் இப்போ கேக்கற? எனக்கு வெட்கம் வருது.” என்றாள்.

அப்போது சிங்கன், “பூட்டி, நாளையிலிருந்து மன்மத விழா ஆரம்பம்.” என்றான்.

பூட்டி, “வயதானதுல மறந்துட்டேன். மாசி சித்திரை வந்தாச்சா?” என்றாள். 

சிங்கன், “ஆமா பூட்டி. காமக்கோட்டை கோவில் சாந்து பூசி, இதோ காவல் எப்படின்னு பார்க்கத்தான் துறைமுகம் வந்தோம். இன்னும் பல கிராமங்களிலிருந்து மக்கள், கூத்தாடுபவர்கள் எல்லாரும் வருவார்கள். இதைக் கவனிக்கவே நேரம் போதாது.” என்றான்.

துகிலன், “அப்போ நாம் அலைகளை எண்ண வரவில்லையா?” என்றான் சந்தேகமாக.

“அழகி, உன் ஆசை நிறைவேறப் போகுது சீக்கிரமாகவே!” என்று மந்திபோல் குதித்தான்.

சிங்கன், “இது போகச் சப்தகன்னியர் தீவில் நிறைய காவல் வேறு வேண்டும். கள் உண்டு வழிமாறிப் போகிறார்கள் வாலிபர்கள்.” என்றான்.

துகிலன், “அழகி, நீ சொல்லு அப்படி என்ன இருக்கிறது சப்தகன்னியர் தீவில்? ஏன் ஆண்கள் மட்டும் போகக் கூடாது, இது உண்மையா?” என்றான்.

பூட்டி திக்கென்று திரும்பியவள், “ஏய்! வாயை மூடு, தெரியாமல் பேசாதே.” என்று கையில் வைத்திருந்த தடியால் முதுகில் ஒரு போடு போட்டாள் துகிலனை.

“ஐயோ! ஏய்ய் பூட்டி… வலிக்குது. எதுக்கு அடிச்ச? உனக்குப் பித்து பிடிச்சிருச்சா?” என்றவனுக்குப் புரியவில்லை. துகிலனை தலைக்குமேல் வைத்துக் கொஞ்சியவள், இந்தக் கேள்விக்கு அடிக்கிறாளே என்று யோசித்தான்.

சிங்கன், குவளை, வீனஸிற்குமே விந்தையாக இருந்ததது. பூட்டிக்கு படபடப்பு வந்தது. இதைப் பார்த்ததும் குவளை உள்ளே சென்று தண்ணீர் குடுவையைக் கொண்டு வந்து கொடுத்தாள்.

பூட்டி படபடப்புடன் தண்ணீரைக் குடித்தவள் ஆசுவாசம் அடைந்தாள். துகிலனுக்கே இது புதிதாக இருந்தது ‘என்ன ஆச்சு இந்தப் பூட்டிக்கு?’ என்று. 

“துகிலா, பித்து எனக்குப் புடிக்கல. அங்க போனவங்களுக்கும் சோதனை போடணும்னு நினைச்சவங்களுக்கும் என்ன நடந்ததுன்னு நான் கண்ணால பார்த்து இருக்கேன் ராசா” என்றாள் கண்களில் திகிலுடனும், கலவரத்துடனும்.

வீனஸோ அது என்னவென்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தான்.

சிங்கன், துகிலன் இருவருமே கொற்கையில் உள்ளதால் இருவருக்குமே சப்தகன்னியர் தீவைப் பற்றித் தெரியும் அதனால் செல்லமாட்டார்கள். ஆனால் வீனஸிற்கு தெரியாதே?

துகிலன், “அழகி, இதோ இவர் யவனதேசத்திலிருந்து வந்தவர் இவருக்கு உண்மையைச் சொல்” என்றான்.

பூட்டிக்கு என்னவோ வீனஸைப் பார்த்ததும் பரிவு வந்தது. “சரி சொல்றேன், கேளுங்க.” என்றவள் சப்தகன்னியர் தீவைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தாள்.

“நீங்க நினைக்கிறது போல அது சாதாரண தீவு அல்ல என் மக்களே…” குரலை மெதுவாக்கினாள்.

“அது சப்தகன்னியர் குடியிருந்த புனிதத் தீவு. நீலக்கடல் இடையே ஏழு மரகதப்பேழை மிதப்பது போல இருக்கும் சப்தகன்னியர் தீவு.” என்றவுடன், 

சிங்கன், “அப்படியா பூட்டி! இதுவரை எங்களுக்கு இது தெரியாதே?” என்றான். 

துகிலனும் முழித்தான்.

பூட்டி சிரித்துக் கொண்டே, “குவள, அந்தத் தாம்பூல இடிகல்ல கொண்டா” என்றாள்.

துகிலன், “அழகி, கதைய சொல்றத விட்டுட்டு உனக்குத் தாம்பூலம் வேணுமா?” என்றான்.

குவளை இடிகல்லைக் கொடுத்தவுடன் அருகில் இருந்த துகிலனை ஒரு இடி இடித்தாள்.

“ஐயோ! அழகி வலிக்குது, ஆனா வலி உயிரே போகுது.” என்றவனிடம், மரப்பெட்டியில் உள்ள தளிர் வெற்றிலை, சீவல், சுண்ணாம்பைச் சுருட்டி, “இந்தா இடி” என்றாள்.

வீனஸ் இதை ஆச்சரியமாகப் பார்த்து, “என்ன இது?” என்றான்.

“வேறு ஒன்றும் இல்லை, உங்கள் ஊரில் பெண்கள் உதடு சிவப்பாக ஏதோ தயாரித்து தடவுவார்கள். ஆனால் எங்கள் பெண்கள் இயற்கையாகவும், வாய் மணக்கவும், வயிறு மணக்கவும் இதைச் சாப்பிட்டு உதட்டில் அழகு சேர்ப்பார்கள். இன்னும் சிறிது நேரத்தில் அழகி உதட்டைப் பார்த்துத் தெரிந்து கொள்வீர்கள்.” என்றான் துகிலன்.

“ஓ…” என்றான் வீனஸ். 

பூட்டி தாம்பூலத்தை வாயில் மென்று கொண்டே சொல்ல ஆரம்பித்தாள்.

தேவலோகத்தின் தலைநகரம் அமராவதி. அங்கே நின்றாலே இசை ஓடும். நாட்டியம் சுவாசிக்கும். தேவர்களின் அரசன் இந்திரன் சபையில் நாரதர் மற்ற தேவாதிதேவர்கள் எல்லாம் தேவலோக நங்கையர்களின் நாட்டியத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் நாட்டியம் மட்டுமே அதில் இருந்தது லயமும் இருந்தது.

ஆனால் ஸ்வரம் இல்லை. அதனால் எதுவும் மனதைத் தொடவில்லை. ஏன் என்ற கேள்வி எல்லாரிடமும் இருந்து கொண்டே இருந்தது. இந்திரனும், நாரதரும் இதைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இருவரின் கேள்வியை யாரிடம் கேட்பது என்ற சந்தேகத்தில் இருந்தபோது அங்கே இருந்த பிருங்கு முனிவர், “கலைகளில் சிறந்தவள் கலைவாணி. அன்னையிடம் கேட்கலாமே?” என்றார்.

எல்லோரும் அன்னையிடம் முறையிட்டதும் கலைமகள் சிரித்துக் கொண்டே, “இதோ நாரதனுக்குக் கூடவா இது தெரியவில்லை?” என்றாள்.

நாரதர் தன் மகதிவீணையின் கம்பியை மீட்டி, “நாராயணா நாராயணா, எனக்குத் தெரியவில்லை அன்னையே.” என்றார்.

கலைமகள் தன் வீணையை மெதுவாகத் தழுவினாள். அவள் சொன்னாள்.

“இசை என்பது ஒலி மட்டும் அல்ல. அது உயிர். அது பெண்மையின் அதிர்வு.”

கலைமகள் வீணையின் ஏழு கம்பிகளைத் தொட்டபோது ஒவ்வொரு கம்பியிலிருந்தும் ஒரு ஸ்வரம் உருவெடுத்தது. ஏழு ஸ்வரங்களும் ஏழு தேவகன்னியர்களாக உருவெடுத்து நின்றனர்.

ஏழு கன்னிகளும் ஒரே நேரத்தில் மூச்சை இழுத்துப் பாடினர்.

“ச… ரி… க… ம… ப… த… நி…”

ஏழெழுத்தும் ஏழிசைக்கு உரிய சரளி வரிசையாக இசையாகத் தேவலோகம் அதிர்ந்தது. தேவலோகத்ததில் ஊர்வசி, மேனகை, ரம்பை, திலோத்தமை நால்வரும் உருவத்திலும், அழகிலும் வேறு மாதிரியாக இருந்ததால் நாட்டியம் ஓவ்வொரு நாளும் புதுமையாக இருந்தது. ஆனால் ஏழிசை கன்னியரும் உருவத்தில் ஒரே மாதிரியாகவும், குரலிலும் ஒரே மாதிரியாகவும் இருந்ததால் கொஞ்ச காலத்தில் இந்திரனுக்கு சலிப்பு தட்டியது.

ஒருநாள் இந்திரன் சோமபான மயக்கத்தில் இருந்தபோது ஏழிசைகளையும் அவமானப்படுத்தியதைக் கண்டு கலைமகள் பெரும் கோபம் கொண்டாள். 

“என் மகள்களை நீ அவமானப்படுத்தியதால் இனி இந்திரசபையில் நாட்டியம் இருக்கும், இசை இருக்காது. அது போக நீ எந்தச் சோமபான மயக்கத்தில் தன்நிலை மறந்தாயோ உன்னுடன் இருந்த எல்லா ஆண்களும் தன்நிலையை மறப்பார்கள்.

இனி ஒரு க்ஷணமும் தேவலோகத்தில் என் மகள்கள் இருக்ககமாட்டார்கள். பூலோகத்தில் சப்தகன்னியர் தீவுகளில் வசிப்பார்கள். இந்தச் சாபம் எப்போது பலிக்கும் என்றால் என் மகள்களின் சப்தகன்னியர் தீவின் வாசலை ஆண்கள் தீண்டினால் அவர்கள் தன்னிலை மறந்து பித்தர்களாகத் திரிவார்கள்.” என்று சாபம் இட்டவுடன் இந்திரன் தன் தவறை உணர்ந்தான்.

“அன்னையே! என்னை மன்னித்து விடுங்கள். இந்தச் சாபம் போக என்ன செய்ய வேண்டும்?” என்றான்.

கலைமகள் கோபம் குறையவில்லை. 

“இந்திரா, நீ என் மகள்களை அவமதிக்கவில்லை என்னை அவமதித்து விட்டாய். நான் எப்படி இந்த வேதனையில் இருக்கிறேனோ அதே நிலையில் உன் மகள் நிற்கும்போது நீ உணர்வாய். அப்போதுதான் என் கோபம் தணியும்.” 

 

அலை வருடும்…

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
அலை கடல் பெண்ணவள்
941 101 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page