அலை கடல் பெண்ணவள்

அலை 18

 

“அச்சு, இது என்னுடைய செலவாணி நாணயங்கள். இது உன்னுடைய வழித்துணைக்குப் பாதுகாப்பாக இருக்கும்.” என்றாள் அழுது கொண்டே அன்னம்.

அச்சுதனுக்கு அவ்வளவு ஆனந்தமாக இருந்தது தன்னுடைய பால்யகால தோழி தன்னை புரிந்து கொண்டாள் என்று!

“நம்பியும் வேதனையுடன் தான் இருக்கிறான். நீ எங்களை எப்போதும் தவறாகவும், மறக்கவும் நினைக்காதே!” என்று கைகூப்பி நின்றாள்.

அப்போது சிரிப்புச் சப்தம் கேட்கவும், “அச்சு, சீக்கிரமாகச் செல். யாராவது உன்னைக் காயப்படுத்துவார்கள். இந்த அழகரும், ஆண்டாளும் உன்னுடனே இருப்பார்கள். நான் நிதமும் உனக்காகச் சேவித்துக்கொண்டே இருப்பேன் அச்சு” என்றாள்.

அச்சுதன் பெரும் சுமையுடன் வீட்டிற்கு வந்தான். அவன் வீட்டில் சாப்பாடு வைக்கும்போது தந்தை தட்டைப் பிரித்தார்.

அச்சுதா, “நீ ஒழுங்கா நடக்கணும்.” என்றார். 

மங்கை பேசாமல் இருந்தார். அவள் கண்களில் கண்ணீர் இருந்தது. ஆனால் அந்தக் கண்ணீர் அச்சுதனுக்காகவா, அல்லது சமூகம் என்ன சொல்கிறதோ அதற்காகவா புரியவில்லை.

மங்கைக்கு தன் மகனின் அழகை சிறுவயதில் அக்ரஹாரத்தில் கொண்டாடியவர்கள் இன்று வேறு மாதிரி சிலாகிக்கிறார்களே என்ற கவலை அப்பிக் கொண்டது.

தன் தமையன் கூடத் தன்னை வெறுத்து உற்று பார்ப்பது தெரிந்ததும் அச்சுதன் மிகவும் துயரமடைந்தான். உறவினர்கள் வந்தபோது அச்சுதனை உள்ளே அனுப்பிவிடுவார்கள்.

“வெளியே வராதே!”

அந்த ஒரு வார்த்தை அவன் மனதில் பெரிய சுவரைக் கட்டியது. அச்சுதன் தனியாக மாடியில் அமர்ந்து வீணை வாசித்தான். தென்றல் மட்டும் அவனுடன் சேர்ந்து மெதுவாகப் பாடியதே!

‘உடம்பு என்ன சொன்னாலும் உள்ளம் நான் தானே’ என்று நினைத்துக் கொண்டான்.

அந்த இரவு அவன் நிறைய அழுதான். ஆனால் முதல் முறையாக

அவன் தன்னை வெறுக்கவில்லை. அந்த இரவே அச்சுதன், அம்பையாக அக்ரஹாரத்தை விட்டும் கூடலழகரை வேண்டியும் வெளியேறினான்.

அக்ரஹாரத்தை விட்டு வீதியில் திரும்பிப் பார்த்துக் கொண்டே வந்தவன் முன்னே, “அச்சு…” என்ற குரல் கேட்டதும் திடுக்கிட்டுப் பயத்துடன் பார்த்தான். 

அப்போது தெருவில் உள்ள முச்சந்திப் பிள்ளையார் முன் நம்பி நின்றிருந்தான். நடுநிசி நேரம் இரவு வெளிச்சத்தில் நிழல் உருவமாய் தெரிந்தான். அச்சுவின் வழியை மறித்து நின்றதால் நம்பியைத் தாண்டிச் செல்ல முடியாமல் திண்டாடினான் ஏதோ கூச்சத்துடன். 

நம்பி, “அச்சு, அன்னம் சொன்னாள் நீ இன்றே செல்வாய் என்று! எதற்கும் காத்துக் கொண்டு இருக்கலாமே என்று நிற்கிறேன். அச்சு, என்னை முதலில் மன்னித்துவிடு. இதை நான் இன்றைக்குச் சொல்லாவிட்டால் என்னால் என்றைக்குமே சொல்ல முடியாமல் போய்விடும். அச்சு, உனக்கு நியாபகம் இருக்கா? நானும் நீயும் சிறுவயதில் நல்ல நண்பர்கள். உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

நானும் நீயும் ஒன்றாகவே சாப்பிடுவோம், கோவிலுக்குச் செல்வோம், ஒன்றாகவே தூங்குவோம், ஏன் ஒன்றாகவே ஸ்நானம் செய்வோம். இது பத்து வயதுவரை நடந்தது.

என்னுடைய பத்து வயதுக்கு மேல்தான் உன்குரலின் இனிமையையும், உன் அழகையும் என்னை அறியாமலேயே ரசிக்க ஆரம்பித்தேன். இதை எந்த அர்த்தத்தில் நான் எடுத்துக் கொள்வது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நீ பிரிவது என்னை விட்டு ஏதோ பிரிந்து போவதுபோல உள்ளது அச்சு.

இந்த அக்ரஹாரத்தில் நீ இருக்கவே வேண்டாம் அச்சு. நீ போ! உனக்குக் கூடலழகர் துணை இருப்பார்.” என்று தன் கழுத்தில் இருந்த பெருமாள் தங்கச் சங்கிலியை எடுத்து அச்சுதனின் கழுத்தில் போட்டான் நம்பி. 

“அச்சு, இதை என் ஞாபகமா வைச்சுக்கோ. நன்றாக இரு!” என்று வேக நடையுடன் அக்ரஹாரத்தை நோக்கி நடந்தான்.

நம்பி போவதையே பார்த்த அச்சுதனுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. “இந்த அன்பிற்கு ஈடேது அழகா? நான் முற்பிறவியில் என்ன பாவம் செய்தேன் எனக்கு ஏன் இந்தத் தண்டனை?” என்று கோவில் கோபுரத்தைப் பார்த்துச் சேவித்துக் கொண்டே நகர்ந்தான் பாதை தெரியாமல்.

நீண்ட பயணத்துடன் அவன் வந்தடைந்தது ஒரு கடற்கரை. அலைகள் கரையை அடித்தன. வானம் கருமையை பூசிக் கொண்டது.

‘இனி யாருக்கும் நான் சுமை இல்லை…’ என்று நினைத்தவன்,

மெதுவாகக் கடலுக்குள் நடந்தான். குளிர்ந்த நீர் முழங்கால்வரை… மார்புவரை… கழுத்துவரை நின்றவன் ‘ஏன் எனக்கு மட்டும் இந்த மாறுபாடு? ஆணாகப் பிறந்து பெண் தன்மையுடன் நான் என்ன செய்வேன்? இதோ உங்களிடமே சரணாகதி ஆகிறேன்.’ 

“ஆண்டாளே…” என்று அவன் கண்ணை மூட, அலை ஒன்று அவன்மேல் பலமாக மோதியது. அவன் சமநிலை இழந்தான். அலைகள் அவனை மயக்கி எங்கோ அழைத்துச் சென்றது. அச்சுதனின் அலை பயணம் அவனைச் சப்தகன்னியர் தீவில் கரை சேர்த்தது.

ரதிமஞ்சரியும் மார்கழியும் அச்சுதனின் சிறுவயது நினைவலைகளை வேதனையாகக் கண்ணீருடன் கேட்டனர். 

ரதிமஞ்சரி, “எனக்கு ஒரு பாசுரம் பாடு மகளே!” என்றார்.

‘மகளே’ என்ற வார்த்தையில் ரதிமஞ்சரியின் பாதத்தில் சரணடைந்த அச்சுதனை,

ரதிமஞ்சரி, “அம்பை எழுந்திரு…” என்றவுடனே புதிய ஜனனம் எடுத்ததைப் போல உணர்ந்தாள் அம்பை.

“நான் ஒரு பெண்… 

நானும் ஒரு பெண்ணே… 

இனி நானும் ஒரு பெண்ணே…

என் நாமம் அம்பை!” என்று குதூகலித்தவளை அணைத்துக் கொண்டார் ரதிமஞ்சரி. 

அம்பைப் பாட ஆரம்பித்தாள்.

“வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து

நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர்…”

‘நம்பி’ என்ற சொல்லில் அவள் குரல் சிறிது நடுங்கியது. ரதிமஞ்சரி அதைக் கவனித்தார்.

ஆனா அம்பைக்கு அது வெறும் தெய்வப் பெயர் இல்லை. அவள் சிறுவயதில் அவள் ‘நம்பி’ என்று அழைத்த ஒருவன், கோவில் தெருவில் சேர்ந்து ஓடிய நினைவுகள். மார்கழி காலையில் போட்டிப் போட்டுப் பாசுரம் பாடிய சிரிப்புகள்.

‘நீ நன்றாக இரு’ என்று அவன் சொன்ன நாள். அந்த நம்பி அவள் வாழ்க்கை மாறியபின் மறைந்துபோனவன்.

“பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்

தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்…” 

தேனினும் இனிமை கலந்த தெய்வீகக் குரலில் ரதிமஞ்சரியும் மார்கழியும் திளைத்துக் கிடந்தனர்.

அம்பை ரதிமஞ்சரியிடம், “அம்மா…” என்றான். 

அப்போதுதான் சுயநினைவை அடைந்த ரதிமஞ்சரி அம்பையின் கைகளைப் பற்றிக் கொண்டு, “அம்பை, நீயும் ஒரு பெண்தான். ஆனால் நீ முழுமையான பெண்ணாகவில்லை. அதைப் பூர்த்தி செய்தால் நீ சர்வ இலட்சணங்களும் பொருந்திய பெண் ஆவாய். நீ எங்கே சேர வேண்டுமோ அங்கே வந்து சேர்ந்து விட்டாய் மகளே!” என்ற ரதிமஞ்சரி மார்கழியிடம், “திருவாங்கூருக்குச் செல்ல வேண்டும் மார்கழி.” என்றார்.

ரதிமஞ்சரி, “அம்பை, நீ பெண்ணாக முழுமையடைய இன்னும் சில பெரிய தடங்கல்களும், உடல் வலிகளையும் பொறுத்துக் கொள்ள வேண்டும். உன்னால் முடியுமா?” என்றவரை நோக்கிய அம்பை,

“தாயே! நீங்கள் என் அருகில் உள்ளவரை நான் எத்தனை சோதனைகளையும் தாங்குவேன், தாண்டுவேன்.” என்றான் உறுதியாக.

திருவாங்கூரில் திருநங்கைகளைப் பெண்களாகச் செதுக்கப் பெரிய குருநங்கைகள் இருந்தனர். ஆண் அடையாளத்திலிருந்து பெண் அடையாளத்திற்கு முழுமையாக மாறியதைக் குறிக்கும் ஒரு முக்கியமான மறுசீரமைப்பு, பனை ஓலையால் செய்யப்படும் சடங்கு ஆகும்.

இயற்கையான அழகுடன் சில திருநங்கைகள் இருப்பதால் அவர்களை இந்தச் சடங்குகளின் மூலம் அழகியலை மிளிரச் செய்ய வைப்பார்கள்.

திருநங்கைகளை மிகவும் அழகாகக் காட்ட, யாரையும் பார்க்காமல் நாற்பத்து ஒரு நாட்கள் ஒரு விரத காலத்தைக் கடைபிடிக்கிறார்கள். இந்தக் காலத்தில் அவர்கள் பிம்ப பெட்டகத்தை பார்ப்பதையோ அல்லது வெளியே செல்வதையோ தவிர்ப்பார்கள்.

ஒவ்வொரு நாளும் ஒரு திருநங்கை இந்தத் திருநங்கையை முதலில் கஸ்துரிமஞ்சளை அரைத்து உடல் முழுவதும் தடவுவார். பின்னர் பத்து பதினைந்து அடி தூரத்தில் நின்று, பெண்மையுறுப்புக்கள் உட்பட, கொதிக்கும் நீரை அவர்கள்மீது வீசுவார்கள். அதன் பிறகு அவர்கள் திருநங்கையைக் கீழே கிடத்தி, சுத்தமான சந்தனத்தை அரைத்து, உடல் முழுவதும் பூசுவார்கள். அவர்கள் உடல் முழுவதும் வேப்ப இலைகளால் தடவுவார்கள். 

இதை நாற்பத்து ஒன்று நாட்கள் செய்தபிறகு, உடலில் உள்ள அனைத்து தேவையில்லாத ரோமமயிர்கள் விழுந்து விடும். நாற்பத்து ஒன்று நாட்கள் முடியும் நாளில், பாலால் அபிஷேகம் செய்வது மற்றும் கடலில் அல்லது நீர்நிலைகளில் புனித நீராடுவது போன்ற சடங்குகள் நடத்தப்படுகின்றன.

அழகு சிகிச்சை செய்து கொண்ட திருநங்கையை வீட்டின் மூலையில் அமர வைப்பார்கள். சுற்றியுள்ள பகுதியில் உள்ள அனைத்து திருநங்கைகளும் அந்தச் சடங்கில் பங்கேற்கிறார்கள். 

முதலில், பாலால் குளிப்பாட்டி சிகைக்காய், மஞ்சள் மற்றும் மருதாணி போன்ற பொருட்களைத் தலை, முகம், கைகள் மற்றும் கால்களில் தடவுகிறார்கள். ஒரு பெண்ணின் திருமணத்திற்கு சேலை வாங்குவது போல, இந்த சடங்கிற்காகத் திருநங்கைகள் பச்சை நிற சேலையை அணிவார்கள். அனைத்து நகைகளும் பச்சை நிறத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இவர்களின் தெய்வம் சந்தோஷி மாதா தெய்வத்திற்கு நன்றி தெரிவிக்கும் ஒரு வழி இது என்று அனைத்து திருநங்கைகளும் நம்புகிறார்கள். 

அன்று எல்லோரும் பாடுவார்கள், ஆடுவார்கள், மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதிகாலையில் தெய்வத்திற்கு ஒரு பூஜை செய்யப்படுகிறது. மாதாவின் முன் ஒரு பால் பானை வைக்கப்பட்டு ஒரு மூத்த திருநங்கை, பெண்ணை அலங்கரிப்பதுபோல அவளுக்குப் பட்டுச் சேலை மற்றும் பொன் நகைகள், மாலை அணிவித்து மணப்பெண் போல அலங்கரிக்கப்படுகிறார்கள்.

பச்சை நிறச் சேலையை அணிந்துகொண்டு, அவர்கள் முகத்தைச் சேலையின் தலைப்பால் மூடிவிட்டு அந்தத் திருநங்கை பால் பானையை தலையில் சுமந்து கொண்டு முன்னால் நடக்கிறார்கள்.

எக்காரணம் கொண்டும் அவர்கள் கண்களைத் திறக்கக் கூடாது. வழியில் என்ன தடை வந்தாலும் அவர்கள் கண்களைத் திறக்கமாட்டார்கள். ஏனென்றால் அப்போதுதான் அவர்கள் ஒரு முழுமையான பெண்ணாக மாற முடியும். இது அவர்களின் நம்பிக்கை. மற்ற திருநங்கைகள் பால் பானையை தலையில் சுமந்து செல்வதன் மூலம் வழியில் தீய கண்ணைத் தடுக்கிறார்கள். 

திருநங்கைகள் பால் பானையை ஓடும் நீரில் ஊற்றுகிறார்கள். அது அருகில் உள்ள கடல், ஆறு அல்லது ஏரியாக இருக்கலாம். அவர்கள் இவ்வளவு காலமாக அனுபவித்து வந்த துன்பங்கள் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையில், தங்கள் இதயங்களில் சந்தோஷி மாதாவிற்கு நன்றி செலுத்திக்கொண்டே பிரார்த்தனை செய்கிறார்கள்.

முதலில், ஓடும் நீரில் சந்தோஷி மாதாவிடம் தன் முகத்தை மூன்று முறை காட்ட வேண்டும். பின்னர், அவர்கள் கைதட்டியோ அல்லது சத்தமாகக் கூப்பிட்டோ மாதாவிடம் ஏதேனும் மூன்று வரங்களைக் கேட்கலாம். பின்னர் அவர்கள் மீண்டும் முகத்தை மூடிக்கொள்கிறார்கள். பின்னோக்கித் திரும்பி, அவர்கள் தலையில் உள்ள பால் பானையை மூன்று முறை தாழ்த்துகிறார்கள்.

திருநங்கை முதலில் மாதா தேவி அவர்களுக்கு வெளிப்படும்போது மட்டுமே அவளைப் பார்க்க வேண்டும். அவர்கள் நேரடியாகப் பார்க்கக் கூடாது. அவர்களுக்கு ஒரு பிம்ப பெட்டகம் வழியாகத் தெய்வம் காட்டப்படும். பின்னர் அவர்கள் கண்களைத் திறக்கிறார்கள். சடங்கின் முடிவில், அவர்கள் முதன்முதலாகக் கண்ணாடியில் தங்களைப் பார்ப்பது அவர்களின் புதிய அடையாளத்தை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது.

 

அலை வருடும்…

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
அலை கடல் பெண்ணவள்
920 101 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page