அலை கடல் பெண்ணவள்

அலை 19

 

புதிய திருநங்கை அடுத்து யாரைப் பார்க்க விரும்புகிறார்களோ அவர்களைப் பார்க்கலாம். இறுதியாக, அவர்கள் கண்களைத் திறக்கும்போது அனைவரையும் பார்க்கிறார்கள். இது அவர்கள் வாழ்க்கையில் அடைந்த மிகப்பெரிய வெற்றியாகும். அவர்கள் இத்தனை வருடங்களாகப் பட்ட கஷ்டங்களை மறந்து நிம்மதி அடைகிறார்கள். அவர்கள் முழுமையான ஒரு திருநங்கைப் பெண்ணாக மாறும்போது, ​​பெண்மையின் அனைத்து இலங்கணங்களுமே வந்து சேரும். பின்னர் அவர்கள் தங்களை ஒரு பெண்ணாய் நினைத்துக்கொண்டு தங்கள் வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

கடைசி நாளான இந்தச் சடங்கு அவர்களின் குருக்கள் மற்றும் அனைத்து திருநங்கையர்கள் முன்னிலையில் ஒரு விழாவாக நடத்தப்படுகிறது.   

பின்னர் அன்று, ஒரு தோல்வினைஞர் (பாதுகையார் என அழைக்கப்பட்டனர். இவர்கள் தோல் பொருட்களையும் பாதணிகளையும் (பாதுகை) தயாரித்துப் பழுதுபார்த்து விற்பனை செய்த சமூகக் குழுவினரை அழைத்து வரப்படுவார்கள்.) அவர்களுடன் ஒரு திருமண இரவுக்கான ஏற்பாடுகள் நடைபெறும். இதற்காகவே பிரத்யேகமாக ஒரு தோல்வினைஞர் குழு இருப்பதாகத் தெரிகிறது. வருகிறவர் அவர்களுக்கு மங்கலநாண் இட்டு ஒரு இரவு தங்கி, சென்றுவிடுவார். பின்னர் அவர் அவர்களைத் திரும்பிப் பார்க்கக்கூட மாட்டார். ஆனால் அவர் அவர்களிடம் ஒரு நினைவாகத் தனது பாதுகையை மட்டும் விட்டுச் செல்வார். இதுவும் பல்வேறு பகுதிகளில் சடங்காகச் செய்யப்பட்டது. சில பகுதிகளில் இந்தச் சடங்குகிற்கு பதிலாக வேறு வினோத சடங்குகள் நடைபெற்றது.

இந்தச் சடங்கு ஒவ்வொரு திருநங்கையின் விருப்பங்களைப் பொறுத்தே செய்வது.

ஏற்கனவே ரதிமஞ்சரி குருநங்கையிடம் இந்தச் சடங்கு என் பெண்ணிற்கு வேண்டாம் என்று சொல்லி விட்டதால் அம்பைக்கு இந்தச் சடங்கு நடக்கவில்லை.

இந்த நிகழ்வுக்குப் பிறகு குருவிற்கு குருதட்சணைகளைக் கொடுப்பார்கள். தட்சணை குடுக்க முடியாத திருநங்கைகள் குருநங்கைகளுடன் பல்வேறு பணிகளைச் செய்து தனது நன்றிக் கடனைச் செலுத்துவார்கள். அடைக்கலத்துடன் சேர்ந்த வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுத் தருவார்கள் இந்தத் திருகுருமார்கள்.

நாற்பத்து ஒன்றாவது நாள் ரதிமஞ்சரியும் மார்கழியும் வந்தனர் பருவச்சடங்கு நடந்து கொண்டிருந்தது. அழகான தேவலோகப் பெண்ணுக்கு நடந்த சடங்குகளைப் பார்த்துக் கொண்டிருந்த ரதிமஞ்சரி மார்கழியிடம், “என்ன ஒரு தெய்வீக அழகு இல்லையா இந்தப் பெண் மார்கழி!” என்று ரசித்துச் சொன்னாள்.

திருவாங்கூர் குருநங்கை சிவனுக்கு ஆரத்தி பாடல் கணீர் குரலில் பாட ஆரம்பித்தாள்.

பூமியில் அவதரித்த அத்துனை திருநங்கைகளும் சாட்சாத் அந்த அர்த்தனாரீஸ்வரரின் பிம்பமே!

“அம்மை அப்பன் கலந்த உருவே நாங்கள்

ஆழிகடலை ஆட்கொண்ட ஹரிஹர உருவே நாங்கள்

இருடல் இருள்ளம் இல்லா உருவே நாங்கள்

ஈன்ற கருவின் முதல்பெண் உருவே நாங்கள்

உள்ளமும் உடலும் மறத்த உருவே நாங்கள்

ஊளிக்காற்றில் ஊசலாடும் உருவே நாங்கள்

எட்டுத்திக்கிலும் உமிழப்படும் உருவே நாங்கள்

ஏட்டுக்கல்வி எனக்கில்லை உருவே நாங்கள்

ஐயத்துடன் அணிசெய்யும் உருவே நாங்கள்

ஒன்றுபட்ட பாலினம் நாங்கள் இல்லை உருவே 

ஓரிடத்தில் தேங்கி நிற்கும் இனம் நாங்கள் உருவே

ஔவைகூட மறந்து விட்டாள் என் உருவே

ஃதாகி போனோம் என் உருவே”

என்ற பாடலில் கரைந்து போனார்கள் அங்கிருந்த அனைவரும். ஆழ்ந்த வலிகளுடன் ஈசனிடம் மன்றாடியதைக் கேட்ட ரதிமஞ்சரிக்கு இனி மனிதகுலம் ஒன்றே, அதில் மனிதமும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தியது.

“என்ன மார்கழி அம்பையை காணவே இல்லை?” என்றாள் துடிப்புடன்.

“ஆமா ரதி, நானும் பெண்ணைத் தேடுகிறேன் நிறைய நாட்கள் கடந்ததால் பெண்ணின் பிம்பம் கூடக் கலைந்து விட்டதே!” என்றாள் வருத்த்துடன்.

அப்போது அங்கு வந்த குருநங்கை, “வாருங்கள் வாருங்கள், நீங்கள் வந்து வாழ்த்துங்கள்” என்றழைத்தார்.

ரதிமஞ்சரி பெண்ணின் அருகில் சென்றதும் அம்பை, “அம்மா…” என்று அணைத்துக் கொண்டாள்.

ரதிமஞ்சரி அணைத்தவளை திரும்பிப் பார்த்தவள், “ஐயோ! அம்பை நீயாம்மா?” என்று பார்த்தவள், அம்பையின் அழகில் சொக்கிப் போனாள். “என் பெண்ணா இவள்!” என்றாள் குருநங்கையிடம்.

குருநங்கை சிரித்துக் கொண்டே, “அம்மா, இதுவரை என் வயதில் இப்படி இயற்கையான அழகிய பெண்ணை நான் கண்டதே இல்லை. அந்தச் சந்தோஷி மாதாவின் அழகே இந்தப் பெண்ணிடம் நிறைந்து உள்ளது. நான் தவம் செய்தது இந்த அழகுப் பெட்டகத்தின் தூசியை தட்டிய பெருமை என்னையே சேரும்.” என்றாள்.

ரதிமஞ்சரி கொண்டு வந்த பரிசுப் பொருட்களையும் குருதட்சணையையும் மற்ற திருநங்கைகளுக்கும் அன்போடு கொடுத்துவிட்டு அம்பையை கொற்கைக்கு அழைத்து வந்தாள். இயற்கையிலியே அம்பைப் பெண்ணாக இருந்ததாலேயே சப்தகன்னியர் தீவில் கரை ஒதுங்க முடிந்தது.

அன்றிலிருந்து அம்பை ரதிமஞ்சரியின் பெண்ணானாள். ரதிமஞ்சரியின் நாட்டியமும், அம்பையின் அழகும், இசையும் இந்தக் கொற்கை மட்டும் அல்ல சேர தேசம், சோழ தேசம், வடக்கு தேசம் ஏன் இந்த யவன தேசம்வரை பரவியுள்ளது.” என்றாள் பூட்டி.

அம்பையின் கதையைக் கேட்டவர்கள் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தனர்.

பூட்டி எல்லோரையும் பார்த்தாள். குவளை கண்களில் கண்ணீர் வழிந்தது. 

துகிலன், “அம்பை அக்கா… அக்கா…” என்று தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தான்.

சிங்கனும், வீனஸும் ஒரு பெண்ணின் வலிகள் எவ்வளவு பெரியது என்று திக்பிரமையில் இருந்தனர். 

பூட்டி, “அடே மம்முதா! எதுக்கு அழுகிறாய்?” என்று இடித்தாள்.

துகிலன், “அழகி, எனக்கு… எனக்கு…” என்று இழுத்தான். 

“சொல்லு ராசா” என்றாள். 

“நீங்க எல்லாம் தேவலோகத்து பெண் மாதிரி எனக்கு. உங்களுக்கு வலி வரக் கூடாது. யாராவது இப்படி அழ வச்சா அதைத் தாங்க முடியல.” அவன் குரல் நடுங்கியது.

சிங்கன் கைகளை முறுக்கிக் கொண்டான்.

“ஒரு பெண்ணுக்கு இவ்வளவு துன்பம் தர்ற உலகம்! நாம எந்த வீரத்தைப் பேசுறோம்?” என்று திகைத்தான்.

வீனஸ் மெதுவாகச் சொன்னான்.

“நம்ம கையில் வாள் இருக்கு, ஆனா இந்தக் கண்ணீருக்கு எதிரா என்ன ஆயுதம் இருக்கு?” என்றான் வேதனையாக.

துகிலன், “பூட்டி, உன் பேத்திக்காகக் காமன் விழாவில் யாரோ மடலேறப் போறான்.” என்றான் சிங்கனையும் குவளையையும் பார்த்துக் கொண்டே.

 

(மடலேறுதல் என்பது பனை மரத்தின் மட்டையால் செய்யப்பட்ட குதிரை போன்ற உருவம். மடலின் இருபுறமும் கூர்மையான முட்கள் நிறைந்திருக்கும். அவற்றைப் பொருட்படுத்தாமல், தன் உடல் முழுவதும் சாம்பலை பூசிக்கொள்வான். மேலும், மயில் இறகுகள், பூளை மலர், ஆவிரை மலர், எருக்க மலர் மாலை மற்றும் எலும்பு மாலை போன்றவற்றை அணிந்து கொள்வான் காதலால் வாடுபவன். அந்த மடலை அழகாக அலங்கரித்து ஊருக்குள் தன் காதலியின் நாமத்தைச் சொல்லிக் கொண்டே வருவான். ஊர் சிறுவர்கள் கயிற்றால் அதனை இழுத்துச் செல்ல, காதலிப்பவன் தன் நாணத்தை முதலில் விடுத்து தெருக்களில் பவனி வருவான். 

இதைக் காண்பவர்களுக்கு இவன் யார்மீது மோகம் கொண்டுள்ளான்? ஆழமான காதலை கொண்டுள்ளான்? என்பதை தெரிந்து கொள்வார்கள்.)

அதைக் கேட்டதும் சிஙகன் குவளை இருவருமே, “என்ன!” என்றனர் அதிர்ச்சியுடன்.

பூட்டி பாக்கை கடித்து, “உன் வாய்ல இருந்து நல்ல விசயம் வருதேன்னு நம்பலாமா?” என்றாள்.

சிங்கன் உடனே எழுந்து நின்றான்.

“ஏய்! என்ன சொல்றே?”

குவளை ‘ஐயோ… இது என்ன நம்மளை மாட்டிவிட்டுட்டானே இந்தத் துகிலன்’ என்று மனதில் நினைத்தாள்.

“நம்ம சிங்கன்தான் நாளைக்கு காமன் விழாவில் மடலேறப் போறார்.” என்றான் துகிலன்.

பூட்டி உடனே தலையைத் தூக்கிப் பார்த்தாள்.

“அப்படியா!” என்று மட்டும் சொன்னாள்.

துகிலன் சிரித்தான்.

“ஏன் தலைவரே! காதல் இருந்தா துணிவு வேண்டும். மடலேறிப் பெண் கேள். இல்லைன்னா குவளை மலரை மடல் அவிழ்க்கச் சொல்!” என்றதும்,

“மடல் அவிழ்க்கச் சொல்றானாம்” என்று குவளை வெட்கத்துடன் மெதுவாகச் சொன்னாள். அவள் கன்னங்கள் விளக்கின் ஒளியைவிடச் சிவந்திருந்தது.

அருகே நின்ற சிங்கனோ சற்றே பதட்டமாயிருந்தான். குவளைக்கு காதுகள் எல்லாம் இங்கேயே பூட்டி என்ன சொல்வாளோ என்ற பதட்டத்தில் கைகளை ஒடித்துக் கொண்டிருந்தாள்.

வீனஸோ ‘ஐயோ! என்ன இது, என்ன சொல்லப் போகிறார் இந்தப் பூட்டி?’ என்ற கவலையுடன் பூட்டியை பார்ததுக் கொண்டிருந்தான்.

சிறிது நேரம் அமைதிக்குப் பின் பூட்டி மெதுவாகக் கேட்டாள். 

“தலைவரே! மடல் ஏறுறதுக்கு குதிரை மாதிரிப் பனை ஒன்னு தயாரிச்சாச்சா? இல்லேன்னா நான் பழைய பனைத்தோலை எடுத்துக் கொடுக்கட்டுமா?” என்றாள் சிரித்துக் கொண்டே 

சிங்கன் திகைத்தான். 

“பூட்டி… நீ கோபப்படலையா?” 

பூட்டி பாக்கை ஒரு பக்கம் அதக்கி வைத்து, 

“கோபப்படணுமா? காதலுக்காக மடலேறுறவன் கெட்டவனா? ஊருக்கெல்லாம் முன் நின்னு ‘இவள்தான் என் காதலின்னு சொல்லுற துணிவு இருந்தா, அது எப்படி குறையாகுமா?” என்றாள்.

சிங்கனை பார்த்தவாறே, “அப்போ சம்மதமா பூட்டி?” என்று துகிலன் கண் சிமிட்டினான்

பூட்டி உடனே நேராகச் சொல்லவில்லை. 

“நாளைக்கு காமன் விழாக் கூட்டம் அதிகம் இருக்கும். மடல் ஏறும்போது சரியா பேசணும். பெண் பெயர் தெளிவா சொல்லணும். தடுமாறக் கூடாது.” என்றாள்.

அங்கிருந்த அனைவருமே பூட்டி என்ன சொல்கிறாள் என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் திகைத்தனர்.

பூட்டி, “அடடே! என்ன எல்லாரும் வாடிப் போயிட்டீங்க? அதெல்லாம் மடலேற வேண்டாம். காமன் விழாவில் சிங்கா குவளை மடல, ஒவ்வொரு மடலாப் பிரித்து மடலேறு.” என்றாள் பூடகமாக 

இதைக் கேட்டதும் வெட்கத்துடன் குவளை ஓடிவிட்டாள். சிங்கனும் முகத்தைத் திருப்பிக் கொண்டான். வீனஸிற்கு எல்லாம் புரிவது போல இருந்தது.

துகிலனோ சின வேட்கையுடன், “பூட்டி, நானும் காமன்விழாவுல என்ன செய்யப் போறேன் பார்!” என்று பூட்டியின் பாதத்தைப் பணிந்தான்.

பூட்டி, “ஐயா! மம்முதராசா என்ன பண்ற? எழுந்துரு ராசா, என்ன ஒரு உயர்ந்த பண்பு ராசா, உன்னோட எண்ணம் ஈடேரும் ராசா” என்று வாழ்த்தினாள்.

***

ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதம். அமாவாசை கடந்த மூன்றாம் நாள் தொடங்கி வளர்பிறையில் கொண்டாடப்படுவது வழக்கம். சுமார் இருபத்து எட்டு நாட்கள் தொடர்ச்சியாக நடக்கும் நிகழ்வானது, ‘காமன் பண்டிகை திடல்’ அல்லது ‘காமன் பண்டிகை திட்டு’ என்று வழங்கப்படும். இதை இந்திரனுக்காக மழை வேண்டி எடுக்கும் விழா என்றும் சொல்வார்கள். இசையும் நடனமும் பாட்டும் கலந்து குழுவாகக் காமன் கூத்தை நிகழ்த்துவார்கள்.

கொற்கையின் உப்புகாற்றும் தாமிரபரணியின் ஈரமும் கலந்திருந்த அந்த விடியற்காலையில் கொற்கை நகரத்தில் ஒரு வாளேந்திய வீரன் யானையின் கழுத்தில் ஏற்றப்பட்டிருந்த வச்சிரக் கோட்டத்து முதுகுடிப் பிறந்த வீரன் குறுந்தடியால் முரசு கொட்டினான்.

“தும்… தும்… தும்…” அந்த ஒலி கடலைத் தாண்டி வானத்தைத் தொட்டது. மாதந்தோறும் மூன்று முறை மழை பொழியட்டும்! ஞாயிறு, திங்கள் தங்கள் நிலை மாறாதிருப்பதாக! கொற்கை வேந்தனின் நீதி செங்கோலோடு என்றும் நிலைத்திருப்பதாக!” என்று வாழ்த்திக் காமன் விழா செய்தியை முரசொலி பரப்பினான். 

அவன் சொற்கள் நகரின் கற்சுவர்களிலும், கடற்காற்றிலும் ஒலித்தன. அந்த ஒலி வீதிகளில் பறந்தது. மாடமாளிகைகள் அதிர்ந்தன. மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியே வந்தனர். நகர வீதிகளைச் சூழ்ந்தனர். காமன் விழா தொடங்கிய செய்தியைக் கேட்ட மக்கள் எல்லோரும் குதூகலமாகத் தங்கள் இல்லங்களை அலங்கரிக்க நகர்ந்தனர்.

விருந்தினர் மாளிகையில் முரசொலியால் வீனஸிற்கு நித்திரை கலைந்து எழுந்தவன் காதில் இந்தச் செய்தி ஒலித்தது. ஏனோ மனதில் பெரும் துன்பமும், இன்பமும் சமமாக வந்து போனது.

 

அலை வருடும்…

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
அலை கடல் பெண்ணவள்
938 101 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page