அலை கடல் பெண்ணவள்

அலை 20

 

அங்கு அப்போது துகிலனும், சிங்கனும் வந்தனர். 

வந்தவர்களை வரவேற்ற வீனஸ் சிங்கனிடம், “இந்த விழா ஏன் இருபத்தெட்டு நாட்கள் நடக்கிறது?” என்று கேட்டுக் கொண்டே துகிலனை பார்த்தவனுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. துகிலனின் அலங்காரம் அப்படி இருந்தது.

தலையில் ஒரு மயிலிறகு கட்டு. ஆனால் அது நேராக இல்லை சற்று சாய்ந்தபடி இருந்தது. 

“மயிலிறகு ஏன் சாய்ந்திருக்கு?” என்று வீனஸ் கேட்டான்.

“காதல் இதயத்துக்குள் நேராகப் போகாது தானே, சாய்ந்து துளைத்து தானே செல்லும்!” என்று துகிலன் கண்களைச் சிமிட்டினான்.

அப்போது எங்கிருந்தோ மயில் ஒன்று பறந்து வந்து அவுரிங்குகல் (தேய்க்கும் கல்) மேல் உட்காந்து துகிலனை பார்த்து, “மியா… ஆவ்… க்யாஆ… கீயாஆ… கீயாஆ…” நீளமான, இழுக்கும் ஒலியுடன் அகவியது (கத்தியது). 

மயில் பார்க்க மட்டுமே அழகாக இருக்கும். அதன் குரல் மென்மையாது அல்ல, அமைதியைக் கிழிக்கும் கூர்மையான அழைப்பாக இருந்தது.

(சிறு குறிப்பு : பண்டைய காலங்களில், வீடுகள் கட்டும்போது வீட்டிற்கு வெளியே இந்தக் ‘அவுரிங்குகல்’ நடுவர். இது பசுக்களின் முதுகில் அரிப்பு ஏற்படும்போது அதைத் தேய்த்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்தும், பசுக்கள் சுற்றித் திரியும் இடங்களில் இது நடப்பட்டது. அதே போலச் சிட்டுக்குருவிகள் வந்து தங்குவதற்காக மரத்தாலான சுவர்கள் வைக்கப்பட்டன. இது தமிழர்களின் மனிதாபிமானத்தைக் காட்டும் செயல் இல்லையா! பல விலங்கினங்கள், பறவைகளின் தேவைகளைப் பற்றிச் சிந்தித்து செயல்படும் கலாச்சாரத்தையும், கொண்டிருந்தனர். இந்த வழியில் சிறிய உயிரினங்களைப் பாதுகாப்பவர்கள் மற்றவர்களுக்குத் தீங்கு செய்பவர்களாக இருக்க முடியாது, இல்லையா? இதுவே தமிழ்ப் பண்பாட்டின் அடித்தளம். தமிழர்கள் பொது நலனைக் கருத்தில் கொண்டு வாழும் பண்பைக் கொண்டுள்ளனர்.)

மயில் துகிலனைக் கண்டு அகவியதைப் பார்த்த சிங்கனுக்கும், வீனஸிற்கும் சிரிப்பு பீறிட்டுக் கிளம்பியது. துகிலனிற்கு ஆத்திரம் தலைக்கேறியது.

துகிலனின் கையில் கரும்பு வில். அதை எடுத்து “டங்”கென்று இழுப்பதைப் போலச் செய்தான். அதைப் பார்த்தவுடன் மயில் மருகி விருட்டென்று ஓடியது. 

“அது ஓடு அப்படி!” என்றான் துகிலன்.

“துகிலா, உண்மையாகவே அம்பு விடப் போகிறாயா? யார் அந்தப் பெண்? இந்த மயில் தான் அந்தப் பெண்ணா பார், உன்னைத் தேடி வந்துவிட்டாள் உன் ரதி!” என்றான் சிங்கன்.

“ஆமாம், எதுக்கு இந்த மயில் உன்னைத் தேடி வந்தது துகிலா?” என்றான் வீனஸ்.

“நீங்கள் கேட்பதால் இதைச் சொல்கிறேன். அதுவா ஒன்றும் இல்லை… கொற்கையிலும், மற்ற நகரங்கள் கிராமங்களிலிருந்தும் வாலிபர்கள் இந்தக் காமன் விழாவில் நிறைய வேடம் போடுவார்கள். நான் எதைப் போடுவது? என்று யோசனை செய்து கொண்டே வந்தேனா அப்போது கம்பந்திணை காட்டில் ஒரு பெரிய ஆலமரத்துக்குக் கீழே உட்கார்ந்தேனா, அப்போது கீச்கீச்சு என்று சப்தம் கேட்டது. எங்கே இருந்து இந்தச் சப்தம் வருகிறது என்று மரத்தின் மேல் ஏறி ஒரு பெரிய பொந்தை பார்த்தேனா, அட! என்னடா இந்த மரத்துக்கு இடையில் இவ்வளவு பெரியதாகப் பொந்து இருக்கிறதேன்னு எட்டிப் பார்த்தேனா, பார்த்தால் பொந்தினுள் நிறைய மயிலிறகுகளுக்கு நடுவில் இரண்டு மயில் குஞ்சுகள் இருந்தது.

அப்போது பளீரென்று ஒரு யோசனை வந்தது. அந்த மயில் குஞ்சுகளைத் தள்ளி விட்டுவிட்டு அத்தனை மயில் இறகுகளையும் நான் தூக்கிக் கொண்டு வந்துவிட்டேன். அதுதான் அதோட அம்மா என்னைத் தேடி வந்துவிட்டாள்.” என்றான் துகிலன்.

சிங்கனுக்கும் வீனஸிற்கும் இப்போதுதான் அதிகமாகச் சிரிப்பு வந்தது.

“ஐயோ! துகிலா எனக்குச் சிரித்து சிரித்து வயிறு பிடித்துக் கொண்டது வலியினால்.” என்றான் வீனஸ்.

பின்னர் வீனஸ் சிரிப்பை அடக்கிக் கொண்டு, “அது சரி… உன் கண்ணில் என்ன கருஞ்சாந்து இவ்வளவு தடவியிருக்கிறாய்?”

“காதல் விழா தானே! கண் பேசணும்னு பூட்டி சொல்லுச்சு அதனால்தான்” என்றான் துகிலன். கண்களைச் சிமிட்டி உருட்டி, “எப்படி இருக்கு சிங்கா?” என்றான் ஆவலுடன்.

“உனக்கு என்னப்பா நீ மம்முதராசா உன்னைப் பார்த்தவுடனே பூட்டிக்கு தெரிந்து போய்தான் இந்த நாமத்தை வைத்திருக்கு” என்றான் சிங்கன் சிரித்தவாறு.

“ஓ… உனக்குப் பெண் கிடைத்துவிட்டது என்கிற கர்வத்தில் என்னை ஏளனம் செய்கிறாயா நண்பா?” என்று அவனைப் பார்த்துக் கொண்டே, துகிலன் ஒரு அடியெடுத்து வைத்ததும் காலில் சிலம்பு ஒலி சப்தம் “ஜிங்க், ஜிங்க்” என ஒலித்தது.

“காமன் அம்பு விடுவேன்” என்றான் துகிலன் பெருமையோடு.

“என் ரதியின் இதயத்துக்குத்தான்” என்றவன், “நான் நடக்கும்போதே பருவ மங்கைகள் என்னைக் கவனிக்கணும்.” என்றான்.

அடுத்தது ஒரு அடியெடுத்து வைத்ததும் “ஜிங்க் ஜிங்க்” என்ற ஒலியோடு அவன் இடுப்பும் சேர்ந்து ஆடியது.

“காமன் அம்புச் சத்தம் இப்படி வராது. சிலம்பு சத்தம்தான் வரும் போல” என்றான். நீ ஆடப் போகிறாயா துகிலா?” என்றான் சிங்கன்.

“நானே கஷ்டப்பட்டு பூட்டி சிலம்பை எடுத்துக்கிட்டு ஓடி வந்துவிட்டேன்.” என்றான் துகிலன்.

“துகிலா, இப்போது புரிகிறது நீ ஏன் பூட்டி பாதத்தில் விழுந்தாய் என்று, இதற்குத் தானா?” என்றான் சிங்கன்.

“ஆமாம்” என்றான் வெட்கத்துடன் துகிலன்.

வீனஸ் சிரித்துக் கொண்டே கேட்டான். 

“அடப்பாவி! நீ காமன் வேடமா? இல்லை காமனுக்கே போட்டியா?”

“இன்று காமன் விழா இல்லை, இந்தக் காமனுக்கு ரதி கிடைக்கிற போட்டி” என்றான் துகிலன் நெஞ்சை நிமிர்த்தி.

சிங்கன் வீனஸிடம், “வாருங்கள், போய் விடலாம். நொடி தாமதித்தாலும் பறந்து சென்ற ஒற்றை மயில் தன் பரிவாரங்களுடன் வந்து துகிலனுடன், நம்மையும் சேர்த்துப் பிய்த்துவிடும்.” என்றதும், 

துகிலன், “ஐயோ! ஆமாம். வாருங்கள், விரைவாகச் செல்லாம்.” என்றதும் சிரித்துக் கொண்டே காமக்கோட்டத்தை நோக்கிச் சென்றனர்.

காமக்கோட்டம் ஆற்றங்கரை அருகில் உள்ள சோலையில் அமைக்கப்பட்டது. இளவேனிலின் முதல் வெப்பம் மெதுவாக நிலத்தைத் தொட்டுக் கொண்டிருந்தது. கொற்கை நகர மக்களும், வேதியர்கள், நாட்டியக்காரிகள், இசைக்கலைஞர்கள்

அனைவரும் ஒன்று கூடியிருந்தனர்.

கோயில் கண் முன்னே இருக்கிறது. ஓர் இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது. முதலில் ஆற்றங்கரை நிலம் சுத்தம் செய்யப்பட்டது. பழைய மணல் அகற்றப்பட்டு புது மணல் பரப்பப்பட்டது. நடுவே உயர்ந்த மரக்கம்பம் நடப்பட்டு அதன் முன் பெரிய பரப்பளவிற்கு சமமான பெரிய மண்டபம் அமைக்கப்பட்டிருந்தது.

“இங்கே போதும்” என்றார் மூதுவர். காற்று நன்றாக அடிக்கும். பின் பசுஞ்சாணம் கலந்த நீர் தெளிக்கப்பட்டு, அந்த மண் மெழுகப்பட்டு மிருதுவாக்கப்பட்டது. அந்த மண்வாசனை இளவேனிலின் மணத்தோடு கலந்து ஒரு பரிசுத்த உணர்வை எழுப்பியது. நான்கு மரக்கால்கள் நிலத்தில் நிறுத்தப்பட்டு மேல் பந்தல் கட்டப்பட்டது. பந்தலின் நடுவில் சிறிய கம்பு ஒன்று நட்டு அதன் மீது வைக்கோல் பிரி சுற்றினர். தலையில் சாணவரட்டியும், குங்குமம் பூசி, திருநீறு இட்டடனர். அது ஒரு எளிய உருவமாக, மக்கள் கண்களுக்குக் காமதேவனாக தோன்றியது.

காமக்கோட்டத்தைச் சுற்றிலும் மாவிலை, வேப்பிலை தோரணம் கட்டினர். மஞ்சள், குங்குமம், புனித நீர், பறை முழங்கியது.

“இந்திரன் வாழ்க! காமன் வாழ்க!” என்ற முழக்கம் எழுந்தது.

கொடி மெதுவாக உயர்ந்தது. அதில் வரையப்பட்டிருந்தது கரும்பு வில் ஏந்திய காமன், அருகே மேகமூட்டத்தோடு இந்திரன். மெல்லக் கொடி கொண்டு வரப்பட்டது. வெள்ளை வானவில் நிறங்களுடன் மத்தியில் வஜ்ராயுதமும், கரும்பு வில்லும் மீன் கொடியுடன் கொடியேற்றம் சிறப்பாகத் தொடங்கியது.

வீனஸிற்கு இங்கு நடப்பவை எல்லாமே புதியவைதானே.

காமக்கோட்டத்து அருகிலே உள்ள சோலையை மூதூர்ப் பொழிலில் என்றும் சிறப்பு நாமமாக இளவந்திகை என்றும் கூறுவார்கள்.

மூதூர்ப் பொழில் ஓரத்தில் சிறுசிறு மணவறைகளும், புல்லால் வேயப்பட்ட ஓய்விடங்களும், அந்தச் சோலையில் காதலர்கள் தங்குவதற்கெனச் சிறு மண்டபங்கள், மலர் வளைவுகள், நெய்தல் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. மணம்மிக்க மலர் மாலைகள் தொங்கின. அந்தச் சோலையில் இளவேனில் மலர்கள் அனைத்தும் விரிந்திருந்தன. நுணவம் மென்மையாக மணந்தது. கோங்கம் பொன் நிறத்தில் துளிர்த்தது. குரா கொடிகள் மரங்களைச் சுற்றின. அதிரல் வெள்ளை நிழலைப் பரப்பியது. பாதிரி மலர்கள் மாலைக் காற்றில் அசைந்தன. புங்கம் மரங்கள் குளிர்ந்த நிறைந்த நிழல் தந்தன. வேம்பு மரங்கள் நீண்ட கிளைகளால் வானத்தைத் தொட்டன. செருந்தி செந்நிறமாகச் சிவந்து திகழ்ந்தது. காஞ்சி மெல்லிய வாசம் விட்டது. ஞாழல் நிழல் ஆழமாய் கருமையான இருட்டை பரப்பியது. அது ஒரு சோலை அல்ல காதலுக்கான கோவில். காதலர்கள் அங்குத் தங்குவர். பிரிவால் வாடியவர்கள் அங்கு மீண்டும் சந்திப்பர்.

நாட்டை விட்டுப் பணிக்காகச் செல்பவர்கள், போர்களத்திற்கு செல்லும் ஆண்கள் இந்தக் காமன்விழாவிற்காக ஓடோடி வந்து விடுவார்கள். பிரிந்திருக்கும் காதலரை மீண்டும் கூடி இன்பமடைய வேண்டும் என விரும்பும் பெண்கள், தங்கள் காதல் தேவனை வணங்கி, ‘காமன் திருநாளில், அவரும் அவருக்குத் துணையான நானும் சேர்ந்திருந்து மகிழ்ந்து களிக்க அருள் செய்ய வேண்டும் தேவா’ என்று வேண்டுகின்றனர்.

காதலன் தன்னை, தன் கண்ணால் காணுமாறு காணச் செய்ய வேண்டும் அவன். பனை ஈன்ற மடற்குதிரையில் ஏறி விரைந்து வரச் செய்ய வேண்டும். காதலனின் வருகையைப் பெறச் செய்வதற்காகக் காமனின் கால்களைக் கட்டிக் கொண்டு இருப்பேன். அவனின் அம்புகள் எனக்குக் கிடைக்க அருள் செய்ய வேண்டும் என்று காத்து நிற்பார்கள் காதல் துயரில் உள்ள பெண்கள். தண்பொருநை ஆற்றின் நீர் மெதுவாக ஓடியது. குரா இலைகள் அசைந்தது. வெண்கடம்பு பனித்துளி தாங்கியது.

காமக்கோட்டத்தில் கொடியேற்றம் முடிந்ததும், மூதூர்ப் பொழிலுக்கு வந்தார்கள் சிங்கன், துகிலன், வீனஸ். வீனஸ் காதல் சோலையைப் பார்த்ததும் பரவசமடைந்தான். ‘என்ன ஒரு ரம்யமான பூஞ்சோலை’ என்று வியப்புடன் பார்த்துக் கொண்டே வந்தான்.

அப்போது துகிலன் வீனஸிடம், “ஆமாம், உங்கள் ஊரில் இந்த மாதிரி காதல் விழா இல்லையா? நீங்கள் இப்படி கொணடாடுவீர்களா?” என்றான்.

வீனஸ் சிரித்துக் கொண்டே, “இருக்கிறது. அது முற்றிலும் வேறு.” என்றான்.

“உங்களுக்குக் காதல் கடவுள் இருக்கிறாரா இல்லையா? அது பெண்ணா ஆணா?” என்றான் துகிலன்.

“ஹ்ம்ம்… காதல் கடவுள் இருக்கிறார். அவர் பெயர்…” என்று நிறுத்தினான். 

அப்போது காமக்கோட்டத்தில் பிரசாதம் கொடுப்பதைப் பார்த்த துகிலன், வீனஸ் சொல்ல வருவதற்குள் காணாமலே ஓடி விட்டான்.

சிங்கன் ஒரு மரநிழலில் வீனஸை அமர வைத்ததும் அவன் முன்னே ஒரு வீரன் பானகம் கொண்டு வந்து கொடுத்தான்.

“இதை அருந்துங்கள் களைப்பு போய்விடும்.” என்று பருகச் சொன்னான். அந்தப் பானம் வீனஸின் களைப்பைப் போக்கியது.

அப்போது அங்கு வந்த துகிலன், “ஹப்பா! கொஞ்சம் பசி ஆறியது.” என்று மரத்தின் அருகே இருந்த மேடையில் படுத்தவனிடமிருந்து “கர்க் கர்க்” என்ற கர்ஜனை கேட்டது.

சிங்கன் வீனஸிடம், “பாவம்! இந்த மன்மத விழாவில் துகிலனுக்கு ஏற்ற ரதி கிடைக்கட்டும்.” என்றான் பரிவாக.

வளர்பிறை மெதுவாக வானத்தில் முளைக்கிறது.

 

 

அலை வருடும்…

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
அலை கடல் பெண்ணவள்
939 101 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page