அலை கடல் பெண்ணவள்

அலை 22

 

 

துகிலன், “ஐயா தலைவரே! நீங்கள் எங்கே போகிறீர்கள்? அக்கா உங்களுக்கு சொல்லவில்லை.” என்றான்.

சிங்கன் வெட்கத்துடன், “இல்லை, நானும் புனலாடலாமே…” என்று நினைத்தேன்.

“கொற்கை தலைவரே, நீங்கள் இப்பொழுதெல்லாம் கொற்கைக்கு காவல் இல்லாமல் தாழைப்பாக்கத்து தலைவராகப் பொறுப்பு ஏற்கிறீர்கள். இது சரியா முறையா?” என்றான்.

அம்பைத் துகிலனிடம், “என்ன?” என்று கேட்டாள். 

துகிலன் சிங்கனின் காதல் கதையைச் சொன்னதைக் கேட்டதும், “ஆஹா சிங்கா! என்ன குவளை மீன்தானா!” என்றாள் மகிழ்ச்சியுடன். சிங்கன் காதல் மயக்கத்தில் நின்றான்.

அம்பைக்கு மனது நிறைவாக இருந்தது. இரு காதல் வெவ்வேறு துருவத்தில் என்று நினைத்தவளுக்கு தன் காதல் நினைவு வந்தது. தன்னை சரிசெய்து கொண்டு, “சரி, நான் வருகிறேன்.” என்றவள் எராவின் தாடையை தடவிவிட்டு நகர்ந்தாள்.

மூவரும் பல்வேறு மனநிலைகளில் விருந்தினர் மாளிகை நோக்கிச் சென்றனர்.

 

***

தண்பொருநை ஆற்றங்கரையோரம் கடம்பபூக்கள் வெண்மையான மஞ்சள் துகள்கள் மொட்டுகள் திறந்து சிறு சிறு நிலவுஉருண்டைகளாக மரக்கிளைகளில் தொங்கின.

ஒவ்வொரு மலரும் மெதுவான, ஆழமான மணத்தை வெளிப்படுத்தியது. அதன் இலைகள் மேலே பார்க்கும்போது சிறியதாகப் பச்சை நிறமாக இருந்தன. இலைகள் முற்றியதும் பழுப்பு நிறங்களாக மாறி வயது முதிர்ந்து பெரிய இலைகளாகப் பூமியைத் தொட்டு தண்ணீரில் அலைபாய்ந்தபடியே கடலை நோக்கிச் சென்றது. ஆற்றங்கரை வெப்பக் காற்று அந்த இலைகளின் வாசனையை வசந்ததிற்குள் மெல்ல நுழையும் நினைவுபோல மூதூர்ப் பொழிலின் வழியே எடுத்துச் சென்றது.

மூதூர்ப் பந்தலின் கீழ் நின்ற காதலர்கள் தாங்கள் பேசிக் கொண்டிருந்ததை மறந்தனர் ஒரு நொடி. அவர்களின் காதலை இணைத்தது இந்த வெண்கடம்பு மரத்தின் வாசனை.

காதலின் சாட்சிபோல வரிசையாக ஆற்றங்கரையோரம் அணிவகுத்து நின்ற வீரர்கள்போல் நின்றது. அதன் கிளைகள் வலமாகச் சுருண்டிருந்ததால் அதற்கு “வலஞ்சுரி மராஅம்” என்ற பெயர் வந்தது.

காமன் விழாவின் ஒரு இனிய நிகழ்ச்சி புனல் விளையாட்டு. இதில் காதல் வயப்பட்ட இளைஞர்கள் இளம்பெண்கள் யார் வேண்டுமானாலும் இந்த விளையாட்டில் கலந்து கொள்ளலாம். அப்போது முரசொலி ஒலித்தது. 

“புனல்விளையாட்டு தொடங்கட்டும்!”என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்புடன் இளைஞர்களும் இளம்பெண்களும் ஆற்றுக்குள் இறங்கினர். தண்பொருநை தண்ணீர் தேனினும் இனிய சுவையுடனும், பளிங்கு போலவும் தெளிவாக இருந்தது. ஆண்களும், பெண்களும் கைகளால் தண்ணீரை எடுத்து ஒருவர்மேல் ஒருவர் தூவினர். சிரிப்புகள் அலைபோல் பரவின.

ஒரு இளம்பெண் தன் காதலனை நோக்கிக் குளிர்ந்த தண்ணீரைச் சிதறடித்தாள். அவன் சிரித்தபடி பதிலுக்கு நீரைப் பீய்ச்சினான். சிலர் மலர்களை ஆற்றில் விட்டனர். மலர்கள் நீர் அலைகளில் மிதந்தன. இந்த மலர்களை அடித்துச் செல்லும் நீரில் பாய்ந்து நீந்திச் சென்று பிடித்து வருவது காதல் வயப்பட்ட ஆண்ணின் வலிமை ஆகும்.

சில காதலர்கள் ஆற்றின் நடுவே நின்று ஒருவரின் கைகளை ஒருவர் பிடித்துக் கொண்டனர். பிரிவால் வாடியவர்கள் கூடினர். கோபம் மறைந்து, பசி மறந்து இருந்தனர். அங்கே காதலின் மணம் வீசியது.

சில காதலர்கள் தங்களின் காதலை நீரலையின் குறுக்கே படுத்துக் கொண்டு நீரின் ஓட்டத்தைத் தடை செய்து விளையாடினர். 

புனல் விளையாட்டைப் பல்வேறு விதமாக விளையாடிக் கொண்டிருந்தனர்.

ஆற்றங்கரை முழுக்க சிரிப்பு மட்டுமே. புனல் விளையாட்டு தொடங்கியிருந்தது.

இளைஞர்களும் இளம்பெண்களும் தண்ணீரை அள்ளி ஒருவர்மேல் ஒருவர் தூக்கி வீசினர். சிலர் நீரில் மூழ்கி மறைந்து, திடீரென மேலே வந்து மற்றவர்களைப் பயமுறுத்தினர்.

சிறுவர் சிறுமியர்கள் நீரின் வேகம் குறைந்த பகுதியில் சிறுசிறு மீன்களைச் சல்லடைத் துணியால் பிடித்துக் குடுவையில் அடைத்துத் தங்களது வீரத்தை தெரியப்படுத்திக் கொண்டிருந்தனர்.

மூதூர்ப் பொழிலின் அருகே கடம்பமர மலர்களின் நிழலிலிருந்து அம்பையும் மயூரியும் அந்தக் காட்சியைப் பார்த்தனர். அம்பை மெதுவாகச் சொன்னாள். 

“இன்று காமன் நம் எல்லோரையும் ஒரே அலைக்குள் சேர்த்துவிட்டான் போல!”

என்று புன்னகைத்தாள்.

 

ஆற்றில் சிதறும் நீர் நண்பகல் சூரிய ஒளியில் கொற்கை முத்துத் துளிகளைப் போலப் பிரகாசித்தது. இந்த விழா நாட்களில் கொற்கை நகரம் முழுவதும், நீரோடும், மலர்களோடும், சிரிப்புச் சிதறல்களோடும், காதல் களியாட்டங்களோடும் கலந்து ஓடியது.

ஆற்றில் தொப்பெனச் சப்தத்துடன் சிலீரெனத் தண்ணீர், விளையாடிக் கொண்டிருந்தவர்கள்மீது வாரி இறைத்தது. எல்லோரும் பயந்து போய்ப் பார்த்தவர்கள் அந்த நேரத்தில் என்ன விழுந்தது? முதலை தானோ அல்லது யாராவது குதித்தார்களோ? என்று சிலர் பதறினர்.

தண்ணீருக்குள் மூழ்கியிருந்த உருவம் மெதுவாக மேலே வந்தது. முதலில் தலை பிறகு தோள், பிறகு முழுக்க நனைந்த உடல். அவன் முகத்திலிருந்து தண்ணீர் சொட்டியது. அவன் யார்? துகிலன். நீரைக் கண்களிலிருந்து துடைத்துச் சுற்றி பார்த்தான். பின்பு அவரவர்களின் விளையாட்டுகளில் ஈடுபட்டனர்.

அடுத்த நொடியே அவன் கண்கள் பெரிதாகிவிட்டது. ஏனெனில் அவனைச் சுற்றி நான்கு அழகிய பெண்கள் நின்றிருந்தனர்.

ஒருத்தி இடுப்பில் கை வைத்துக் கொண்டாள்.

“ஐயோ! ஆற்றில் மீன் குதிக்குதுன்னு நினைச்சோம்.” 

மற்றொரு பெண் சிரித்தாள்.

“மீன் இல்லையடி, கொற்கை துணைத் தலைவர் குதித்திருக்கிறார் நம்மைப் பாதுகாக்க!”

மூன்றாவது பெண் கிண்டலாகக் கேட்டாள்.

“ஐயா, நீராட வர்றீங்களா அல்லது நீரை எல்லாம் எங்கள்மேல் சிந்த வர்றீங்களா?”

நான்காவது பெண் சிரித்துக் கொண்டு சொன்னாள். 

“இவர் குதித்த சத்தத்துக்கே மீன்கள் பயந்து ஓடிப் போய்விட்டது.”

துகிலன் இன்னும் திகைத்தபடி நின்றான்.

“அது… நான்…” என்று ஆரம்பித்தான்.

“நான்… வழுக்கி…” என்க,

ஒருத்தி உடனே சொன்னாள்.

“அப்படியென்றால் நீங்கள் கால் வழுக்கி விழுந்தீர்களா?”

மற்றொருத்தி சிரித்தாள்.

“ஐயோ இல்லை…”

“ஓ… பெண்களைப் பார்க்க வழுக்கி விழுந்தாரோ?”

அங்கிருந்த பெண்கள் எல்லோரும் சிரித்தனர்.

துகிலன் முகத்தைச் சுருக்கிக் கொண்டு சொன்னான்.

“அடடா… நான் இங்கே விழுந்தது பெரிய தவறாகிவிட்டது போல!”

ஒருத்தி உடனே பதில் சொன்னாள்.

“இல்லை… தவறு இல்ல. ஆனா… முதல்ல சொல்லுங்க எங்களைப் பயமுறுத்தியதுக்கு எவ்வளவு அபராதம் கட்டப் போறீங்க?”

துகிலன் ஒரு நொடி யோசித்தான். பிறகு தண்ணீரைக் கையில் எடுத்து அவர்கள்மேல் தூக்கி வீசினான். 

“இதுதான் அபராதம்” என்று விட்டால் போதும் என்று ஓடியவன், யாரோமீது மோதிக் கால் வழுக்கித் தண்ணீரில் விழுந்தான். தண்ணீர் அடித்துக் கொண்டு போனது.

நான்கு பெண்களும் கத்தினர். 

“ஐயோ பிடிங்க அவனை… காப்பாத்துங்க…” அடுத்த நொடியே ஆற்றில் பெரிய சலசலப்பு.

ஒரு பெண் சட்டென நீரில் பாய்ந்து துகிலனின் தலையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து கரையில் போட்டாள். அப்போது நான்கு பெண்களும் ஓடி வந்தனர். 

வந்தவர்கள், “பாருங்க பாருங்க… நம்மைப் பாதுகாக்க வந்த துணைத் தலைவரை நாம பாதுகாக்க வேண்டியதா போச்சு” என்று சிரித்தார்கள்.

அப்போது அந்தப் புதிய பெண் துகிலனின் கன்னத்தைத் தட்டினாள். நான்கு பெண்களில் ஒருவள் கேட்டாள். 

“ஏம்மா முல்லை, பார்த்துக் கன்னத்தைத் தட்டு. துணைத் தலைவர் நீ தட்டுற தட்டுல சொர்க்கத்துக்குப் போயிட போறாரு” என்று சொல்லிச் சிரித்தாள்.

மற்றொரு பெண், “பார்த்து முல்லை, துணைத் தலைவர் வாயிலிருந்து கெழுத்தி, கெண்டை ஏதாவது வரப் போகுது.” என்றாள்.

மூன்றாமவள், “ஆமா கெழுத்தி, கெண்டை கிடைச்சா துணைத் தலைவர் வீட்டுக்கு எடுத்துட்டு போயி இந்த வருட காமன்விழா ஞாபகமா வைத்துக் கொள்வார்.” என்று சிரித்துக் கொண்டிருக்கும் போதே துகிலன் மெல்ல கண்களைத் திறந்தான்.

தன் முன்னே அழகிய பெண் ஒருத்தி இருப்பதைப் பார்த்தவனின் கண்கள் சுற்றிலும் சிரித்துக் கொண்டிருந்த பெண்களைப் பார்த்ததும், “ஐயோ பேய்…” என முல்லையை கட்டிக் கொண்டான்.

நால்வரும் கோபத்துடன், “என்ன பேயா? நாங்களா?” என்று கோபத்துடன் கத்தினார்கள். 

துகிலனோ என்ன இது யாரை அணைத்துக் கொண்டிருக்கிறேன் என்று பார்த்தவன் அமைதியின் உருவமாக இருந்த பெண்ணைப் பார்த்தவன், “ரதி…” என்றான்.

புதிய பெண் தலையை வெட்கத்துடன் குனிந்து கொண்டாள்.

நான்கு பெண்களும், “சரிதான், துணைத் தலைவரே எப்படியோ உங்கள் ரதியை கண்டுபிடித்துவிட்டீர்கள். முல்லை, இவர்தான் உன்னோட காமனா? என்று கேட்டனர். முல்லை இன்னும் வெட்கம் கொண்டாள்.

“உங்களுக்கு ஏற்ற ரதிதான். ஹ்ம்ம் யார் யாருக்கு இன்றைக்கு கொடுத்து வைத்து இருக்கிறதோ?” என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்கள்.

துகிலன், “ஆஹா ஆஹா முல்லை… என்னோட ரதி… பூட்டி, நீ சொன்ன வாக்கு பலித்து விட்டது. இரு உன்னை இன்றைக்கு தாம்பூலம் கொடுத்தே சொர்க்கத்துக்கு அனுப்பறேன். தாயே காந்தாரி, உன் மகனின் ரதிமுல்லையைப் பார் காந்தாரி!” என்றவன்,

“முல்லை, இன்றிலிருந்து உன் நாமம் ரதிமுல்லை சரியா?” என்று ஆற்று நீரை எடுத்து ரதிமுல்லையின் மீது இறைத்தான். இருவரும் புனல் விளையாட்டைத் தொடர்ந்தனர்.

 

***

ஆற்றங்கரையின் ஆள் அரவமற்ற சோலைப் பகுதியில் மயூரி ஒரு கல்லின் மேல் அமைதியாக அமர்ந்திருந்தாள். அவளுடைய வாடிய முகத்தைப் பார்க்க அம்பைக்குப் பிடிக்கவில்லை. மேலும், மயூரியின் இதயம் புகைந்து கொண்டிருப்பதைத் தவிர, அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. அதை அம்பைக் கவனித்தாள். அவள் மயூரியின் அருகே வந்து மெதுவாக அமர்ந்தாள்.

“என்ன மயூரி… இவ்வளவு அமைதியா இருக்கிறாய்?” என்று கேட்டாள்.

மயூரி சிரிக்க முயன்றாள். ஆனால் அந்தச் சிரிப்பு முழுமையாக வரவில்லை. அம்பை அவளது கையை மெதுவாகப் பிடித்தாள்.

“காதல் வந்தவள் இப்படி தான் இருப்பாள்.” என்று சிரித்தாள்.

மயூரி உடனே தலையைத் தாழ்த்தினாள்.

“அம்பை…” என்று மட்டும் மெதுவாகச் சொன்னாள்.

அந்த நேரத்தில் அருகிலிருந்த மரத்தின் பின்னால் வீனஸ் அமைதியாக நின்றிருந்தான்.

அவன் அம்பையையும் மயூரியையும் தொந்தரவு செய்யாமல் அங்கேயே நின்றான். சிங்கன் துகிலனை காணச் சென்றிருந்தான்.

அவர்கள் பேசுவதை அவன் கவனமாகக் கேட்டான். அம்பை மெதுவாகப் பேசத் தொடங்கினாள்.

“மயூரி ஒரு சங்கக் கவிஞர் ஒரு அழகான காதல் கதையைச் சொல்கிறார் தெரியுமா?” மயூரி ஆர்வமாக அம்பையைப் பார்த்தாள்.

“ஒரு பெண் ஆற்றங்கரையோரம் தன் காதலனைப் பிரிந்து பிரிவாற்றாமையில் அழுகிறாள். கண்களிலிருந்து கண்ணீர் வழிகிறது. அவளின் கண்ணீர் கன்னங்களில் வழிந்து அது அவள் சங்கு போல இருக்கும் கழுத்தைத் தாண்டி வெண்மையான மார்புக் கச்சையில் மார்புகளுக்கிடையில் தேங்கி குளம்போல நிற்கிறது.” என்று அம்பை நிறுத்தினாள்.

மயூரி, “அம்பை சொல்” என்றாள். 

அம்பை சிரித்துக் கொண்டே கதையைத் தொடர்ந்தாள்.

“அந்த நேரம் மேற்கு நோக்கி மேலே பறந்த ஒரு கொக்கு தாகம் தாங்காமல் கீழே தண்ணீர் தேடியது. இந்தப் பெண்ணின் கண்ணீரை ஒரு சிறிய குளம் என்று நினைத்துக் கீழே இறங்கப் போகிறதாம். எப்படி?” என்று கேட்டாள்.

 

 

அலை வருடும்…

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
அலை கடல் பெண்ணவள்
947 101 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page