அலை கடல் பெண்ணவள்

அலை 23

 

 

மயூரி சிரித்துக் கொண்டே, “ஆம் அம்பை, அப்படியொரு கற்பனை உண்மைதான்.” என்றாள்.

அம்பைத் தலையசைத்து, “அது கற்பனை இல்லை மயூரி. அது காதலின் வலி எவ்வளவு பெரிது என்று சொல்லும் கவிதை.”

அம்பை மயூரியை நேராகப் பார்த்தாள்.

“காதல் வந்தவள் கண்ணீர் விடுவது பலவீனம் இல்லை. அது காதல் உயிரோடு இருக்கிறது என்பதற்கான வழிகாட்டியாகும்.”

மயூரியின் கண்கள் மெதுவாக நனைந்தன. அவள் எதுவும் பேசவில்லை.

மரத்தின் பின்னால் நின்றிருந்த வீனஸ் அந்த வார்த்தைகளை எல்லாம் கேட்டான்.

அவனுக்கு மயூரியின் காதல் முழுவதும் புரிந்தது. ஆனால் அம்பையின் குரலில் இருந்த உண்மை அவன் இதயத்தைத் தொட்டது.

அவன் மெதுவாக மனதில் நினைத்தான்.

“இந்த நாட்டின் பெண்களும், அவர்களின் காதலும், அவர்களின் கண்ணீரும் கூட உயர்ந்த கவிதையாக இருக்கிறது. 

அம்பை, “இது மட்டும் அல்ல மயூரி, இந்த மாசி மாதத்தின் கதையைக் கேளு.” என்றாள். 

“பருவப்பெண்களும், பருவ ஆண்களும் பனிநீரில் தோய்ந்து, பாவை ஆடி, ஐங்கணைக் கிழவன் எனப்படும் ஐந்து பாணங்களை உடைய காம தேவனுக்கு ஆர்வமோடு நோன்பு நோற்பார்கள். மேலும் தை மாதத்தைத் தொடர்ந்து வரும் மாசி மாதம் எப்படிப்பட்டது என்றால் இதை ‘மாகூர் திங்கள்’ என்றும் குறிப்படுவார்கள்.

குளிர் தாங்காமல் உடலைக் குறுக்கிக் கொள்ளும் மாசி மாதம், மாகூர் மாசியாகும். வெளிநகரத்தில் உள்ள காதலன் எப்பொழுதுதான் குளிர் நீங்கி, வெயில் வரும் எனக் காத்திருக்கிறான். பொதுவாக, விடியலுக்கு முன்னாலேயே காதலன், காதலியைக் காணக் கிளம்பி விடுவான். அப்பொழுதுதான், வெயிலுக்கு முன் காதலியின் இருப்பிடம் சென்று அடைய முடியும். 

ஆனால் அவனுக்கு மாசி மாதத்தில் விடியற்காலையில் கிளம்ப முடிவதில்லை. உறைகுளிரும் உறைபனியும் அதிகம் என்பதால் மேலும் மாசித் (பனிமூட்டத்தால் மங்கலாகத் தெரிவது) தன்மை உடையதால் அது மாசி என்றும் பூட்டிகள் சொல்வார்கள்.

மாசி என்றால் மேகம் என்றும் பொருள். மேகமே இறங்கி வந்தாற்போல், பனி மூட்டம் நிலத்தின் மீது பரவி இருப்பதால் அது மாசி என்றாயிற்று. ஏன் மாசி மாதம், மாடுகள் குளிர் காரணமாக மேயச் செல்லாது. மந்திகூட உடலைக் குறுக்கிக் கொண்டு இருக்கும்.” என்றாள்.

“ஓ… அம்பை இதுஎனக்குத் தெரியவில்லை.” என்ற மயூரி அந்த நேரத்தில் தலையை உயர்த்தி வானத்தைப் பார்த்தாள்.

அவள் அறியவில்லை, அவள் அருகே இருந்த மரத்தின் நிழலில்

யவன வீரன் அவள் மனதின் கதையை முழுவதும்கேட்டுக்கொண்டிருந்தான்.

ஏனெனில் அவன் கண்கள் மயூரியைப் பார்த்து நிறுத்திக் கொண்டிருந்தன. மயூரி தண்ணீரை கைப்பிடியில் எடுத்து அம்பை மேல் தூவிக் கொண்டிருந்தாள்.

மயூரி கலகலவெனச் சிரித்தாள். அந்தச் சிரிப்பு அலைகளைவிட வேகமாக வீனஸின் இதயத்தைத் தொட்டது. அவன் அசையாமல் நின்றான்.

 மயூரி தன் மயில் தோகைபோலப் படர்ந்திருந்த கார்கூந்தலை பின்னோக்கி ஒதுக்கிச் சுற்றிலும் பார்த்தாள்.

அம்பை, “என்ன?” என்றாள்.

“ஒன்றும் இல்லை யாரோ என்னைப் பார்ப்பது போல இருந்தது.” என்றாள்.

“மயூரி, யாரோ பார்ப்பதுபோல இல்லை. அங்கே பார்” என்றாள். 

நீர்ப்பெருக்கு பொங்கிக் குதித்து இவர்களின் வழியே வரும்பொழுது சூரியக் குஞ்சுகள் கூட்டம்போல் கயல்மீன்கள் கூட்டம் சிறியதும், பெரியதுமாகக் குதித்து கொண்டே வந்தது.

கயல்மீன்களில் ஒன்றிரண்டு துள்ளிக் குதித்து மயூரியின் நீலவிழிகளை ‘ஐயோ! இது என்ன நம்மைவிட அழகான கயல்களாக இருக்கிறதே!’ என்று குதித்துப் பார்த்துக் கொண்டே நீரை நோக்கி நழுவிச் சென்றது.

“ஆஹாஹா!” என்றாள். 

அம்பை, “மயூரி, உன் நீலவிழிகளைக் கண்ட கயல்கள்கூட உன் கயல்விழிகளை கண்டு செல்கின்றன.” என்று சிரித்தாள்.

“போ அம்பை, உனக்கு எப்பொழுதுமே என்னை ஏளனம் செய்வதே வேலை.” என்றாள்.

இதைப் பார்த்துக் கேட்ட வீனஸிற்கே இதயப்பெருக்கு கொண்டது. இப்போதே அந்தக் கயல்களைக் காண ஆவல் கொண்டான். இல்லை சற்று நேரம் கடந்து செல்லலாம் என்று காத்து இருந்தான.

மயூரியின் மேனியோ பசலை படர்ந்து வெண்மையாக வெளிர் தளிர்நிறமாக இருந்தது. உற்றுப் பார்த்த அம்பைத் தன்னிடம் இருந்த வெள்ளிப் பெட்டகத்தை திறந்தாள். அதில் உள்ள பொடியை எடுத்து மயூரியின் முகத்திலும் தோள்களிலும் தேய்தாள். கோங்கின் பொன்னிற மகரந்தப் பொடியை மகளிர் மேனியில் பூசிக் கொள்வார்கள். கோங்குப்பூ குடை போன்றும் மீன் போன்றும் இருக்கும். இந்தப் பொடி மயூரியின் வெண்மையான வதனத்தைப் பொன்னிறமாக மாற்றியது.

அம்பைப் பெரிய பிண்டி (செந்நிற மலர்) மரத்தின் அடர்த்தியான வேரின் மீது உட்கார்ந்து இருந்தாள். அம்பையின் மேனி சிவந்த ரோஜா வண்ணத்தில் மிளிர்ந்தது.

(சிவந்த இந்தப் பிண்டி பூக்களைப் பெண்கள் காதில் குழை போல அணிந்து கொள்வார்கள். ஆடவர் இந்த மலர்களையும், தளிர்களையும் காதில் அணிந்து கொள்வர். இதை இக்கால அசோக மரம் என்பார்கள்.)

மயூரி நீரலையின் மேலே மிதந்துகொண்டிருந்தாள். அம்பை உட்கார்ந்து இருந்த மரத்தின் கிளைகளிலிருந்து பெரிய பெரிய பிண்டி பூக்கள் மயூரியின் மீதும் அம்பையின் மீதும் விழுந்தது.

நிமிர்ந்து பார்த்த அம்பைச் சிரிக்கத் தொடங்கினாள். கண்களைத் திறந்த மயூரிக்கு தன் மேனிமுழுவதும் சிவந்த பிண்டி பூக்கள் மூடியிருந்தது. மயூரி அம்பையைப் பார்த்ததும், “அம்மா, நான் இல்லை. மேலே பார் உன்னைக் காண வந்த உன் காதலர்!” என்றாள்.

மயூரிக்கு உன் காதலர் என்றவுடன் வீனஸ் வந்துவிட்டான் என்று வெட்கம் வந்தது. அதனால் அவளின் வெண்மையான மேனி எங்கும் வெட்கம் படர்ந்து பிண்டி பூக்களின் சிவந்த நிறத்தைக் கொடுத்தது. 

அதைப் பார்த்துக் கொண்டிருந்த வீனஸை காமன் ஐந்துமலர் கணையைத் தொடுத்து விட்டான் என்பதை வீனஸின் உடல் விரக வெப்பத்தால் சிவந்து போனதை சொல்லாமல் சொல்லியது.

பிண்டி மரத்தைப் பார்த்தவளுக்கு சிறிது ஏமாற்றத்தைக் கொடுத்தது. பிண்டி மரத்தின் மேலே இருந்த ஒரு மந்தி ஒன்று பிண்டி பூக்களைக் கொய்து கீழே வீசிக் கொண்டும், பூக்கள் நீரலையில் அடித்துச் செல்லும் காட்சியைப் பார்த்தும் கொண்டிருந்தது.

வீனஸ் இதற்கு மேல் தாளது என்ற முடிவுடன் எராவை அந்த மரத்தில் கட்டிவிட்டு நீரில் அமிழ்ந்து மெதுவாக நீந்தி வந்தான். அந்த ஆற்றங்கரைப் பகுதி ரதிமஞ்சரி வந்து போகும் பகுதி ஆதலால் ஆள் அரவம் இல்லாமல் இருந்த பகுதி.

அம்பையின் எதிர் திசையில் வீனஸ் வந்ததைப் பார்த்த அம்பையிடம், வீனஸ் அமைதியாக இருக்குமாறு சமிக்ஞை செய்தான். அம்பைத் தலையசைத்துவிட்டு மெதுவாக நகர்ந்தாள்.

மயூரி இது தெரியாமல் நீரின்மீது கிடந்தாள். தூரத்தில் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு மிக அருகில் பார்த்த பெண்ணவளைக் கண்டதும் மேனி சிலிர்த்து படபடக்க ஆரம்பித்தான்.

அம்பை எரா கட்டியிருந்த கரையோரமாக ஏறிச்சென்றாள்.

வீனஸ் பார்த்தது பால்வண்ண மேனியில் சிவந்த பிண்டி பூக்கள் ஆங்காங்கே இடம் பிடித்த காட்சியை ரசித்துக் கொண்டு நின்றான். ஆபரணங்கள் அணியாத மேனியில் இந்தப் பூக்களே ஆபரணங்களாகக் கொட்டிக் கிடந்தது. பார்க்கப் பார்க்கத் திகட்டாத காட்சியைப் பார்த்த இந்த யவன போர்வீரன் தள்ளி நின்று பருக ஆரம்பித்தான்.

எத்தனை எத்தனையோ காலங்கள் கடந்து இந்தக் கட்டுடலைப் பார்ப்பதுபோல இருந்தது வீனஸிற்கு. 

தேன் உண்ணும் தும்பி தேன்கூட்டைப் பார்த்ததும் பருகாமல் கிறங்கிப் பார்ப்பதுபோல பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது மேலிருந்து சிவந்த மலர் மயூரியின் செவ்விதழின் மீது விழுந்தது. ‘சிவந்த இந்த மலரைவிட என் பெண்ணவளின் செவ்விதழே அதிக நிறத்தை உடையது.’ என்று நினைத்துக் கொண்டான்.

பிண்டி மரத்தின் மீது இருந்த கருவண்டு ஒன்று பிண்டி பூக்களின் தேனை எடுத்துக் கொண்டே தேனை தேடியது.

மயூரியின் மேனியில் கிடந்த பிண்டி பூக்களைப் பார்த்ததும் அங்கே சென்றது. முதலில் மயூரியின் நாபியின் அருகே இருந்த ஒரு பிண்டி பூவின் தேனை ருசி பார்த்ததும் நாபிக்கமலத்தை பார்த்து அங்கேயும் தேன் இருக்கும்போல என மொய்த்தது.

மயூரி கண்களைத் திறக்காமலே, “ஆ…” என்ற முனகலை மட்டும் வெளிப்படுத்தினாள். பின்பு அந்த வண்டு முன்னேறியது. நீலக்கருங்குவளை கண்களைப் பார்த்ததும் ‘ஆஹா! இது என்ன மலர்?’ என்று கண்குடை அருகில் சென்றதும் கண்களை மலர்த்தியதை பார்த்ததும் கார்வண்டு உள்ளே செல்ல முற்பட்டது. அதைத் தடுக்கப் பதறி எழுந்தவளை கைகளில் தாங்கினான் வீனஸ்.

அவளின் கண்கள் அவன் கண்களுடன் சந்தித்தன ஒரு நொடி. ஆனால் அந்த நொடி ஒரு யுகமாக நீண்டது. ஆற்றின் அலைகள் மெதுவாயின, காட்டுமலர்களின் வாசனையைக் காற்று அள்ளித் தெளித்தது.

வீனஸ் இதுவரை புரியாத ஒரு உணர்வை உணர்ந்தான். அது போரின் சத்தமல்ல. அது வெற்றியின் பெருமையல்ல. அது காதல். மயூரி வெட்கத்தில் தலையைத் தாழ்த்தினாள். ஆனால் மீண்டும் ஒருமுறை அவன் பக்கம் பார்த்தாள். அவர்களுக்குள் ஒரு வார்த்தையும் பேசப்படவில்லை.

ஆனால் காமன் ஏற்கனவே தனது மலரம்பை எய்துவிட்டான். அந்தத் தண்பொருநை ஆற்றில் நடந்த புனல் விளையாட்டு பலருக்கு ஒரு விளையாட்டு மட்டும். இதயத்தில் காமன் ஆட்கொண்ட காதல் விளையாட்டு.

ஆற்றின் ஓசை மட்டும் அமைதியை நிரப்பிக் கொண்டிருந்தது. பிண்டி மரத்தின் இலைகள் மெதுவாகச் சடசடவென அசைந்தன. கதிரவனின் ஒளி மயூரியின் முகத்தில் விழுந்தது. கண்களைச் சுளித்தாள்.

வீனஸின் கரங்களில் இன்னும் மயூரி இருந்தாள். பதற்றத்தில் எழுந்ததால் அவள் மூச்சு வேகமாக இருந்தது. அவள் கன்னங்கள் சிவந்து கொண்டிருந்தன.

“கார்வண்டு…” என்று மெதுவாகச் சொல்ல முயன்றாள் மயூரி.

வீனஸ் ஆண்மையுடன் சிரித்தான்.

“கார்வண்டு தான்… ஆனால் அதைவிட கொடியது என்ன தெரியுமா?” என்று மெதுவாகக் கேட்டான்.

மயூரி ஆச்சரியமாக அவனைப் பார்த்தாள்.

“உன் நீலோற்பலம்…” என்றான் அவன்.

அந்த வார்த்தையைக் கேட்டவுடன் மயூரியின் பார்வை மயக்கத்துடன் கீழே தாழ்ந்தது.

மயூரியின் சிவந்த தளிர்விரல்கள் அவன் மார்பில் மெதுவாகத் அலைபாய்ந்து தாளம் தட்டின.

“அதை விடுங்கள்… எல்லாம் உங்களால்தான்…” என்று அவள் மெதுவாகக் கூறினாள்.

“என்ன செய்தேன் நான்?” என்று அவன் கேட்டான்.

“இப்படி திடீரென்று வந்து… அச்சப்படவைத்து…” என்றாள் அவள்.

வீனஸ் மெதுவாகச் சிரித்தான்.

“நான் வரவில்லை என்றால்… அந்த வண்டு இப்போது என்ன செய்திருக்கும் தெரியுமா?” என்றான்.

மயூரி உடனே அவன் கையை விலக்கி எழுந்தாள். ஆனால் ஒரு நொடி அவள் சமநிலையை இழந்தாள். மீண்டும் வீனஸின் கரம் அவளைத் தாங்கியது. வீனஸின் கரங்கள் மயூரியின் இடையில் அழுத்தமாகப் பதிந்ததைப் பார்த்ததும் சற்றே திகைத்தாள். மயூரியின் கூந்தல் அவன் முகத்தைக் கார்மேகம் போல் மறைத்து நின்றது.

 

அலை தொடரும்…

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
அலை கடல் பெண்ணவள்
935 101 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page