அலை கடல் பெண்ணவள்

அலை 25

 

மாலைநேரக் காற்றில் மூவரின் சிரிப்பும் கலந்து ஒலித்தது. அந்த நேரத்தில் முரசு பலமாக அடித்தது. கூத்து ஆரம்பமானது. மன்மதன் வேடம் போட்ட கூத்தன் மேடையில் ஆடி வந்தான். மக்கள் கைத்தட்டினர். சிலர் தலைவணங்கினர். அந்த இரவு தண்பொருநை ஆற்றின் காற்றில் சாம்பலின் வாசனையும் காதல் கதையின் நினைவும் கலந்து வீசியது.

துகிலன் மெதுவாகச் சிங்கனிடம் சொன்னான். 

“இந்தக் காமன் கணைகள் எல்லோரையும் தாக்கும்போல இருக்கிறது.”

“அப்படித்தான் சொல்கிறார்கள்.” என்று சிங்கன் சிரித்தான்.

அவன் வீனஸை பார்த்தான்.

“ஐயா! இந்த அம்பு உங்களையும் தாக்கியதல்லவா?” என்றான்.

வீனஸ் சிரிக்காமல் அமைதியாக இருந்தான். துகிலன் மெதுவாகச் சொன்னான்.

“சிங்கா… அம்பு எப்போது எய்யப்பட்டது தெரியுமா?”

“எப்போது?” என்று சிங்கன் கேட்டான்.

துகிலன் வீனஸைப் பார்த்துச் சிரித்தான். 

“காலைப் புனலாடும் பொழிலில்!” 

சிங்கன் உடனே சிரித்தான். வீனஸ் தலையைக் குலுக்கினான்.

கூத்தாடுபவன் காமன் கதையைக் கூறுகிறான். 

“மலர்க் கணைகளைத் தன் வசம் வைத்திருப்பவனும், உலகத்து உயிரினங்களின் மகிழ்ச்சிக்குக் காரண கர்த்தாவாக இருப்பவனும், அன்புள்ளங்களின் மனதை அலைக்கழிப்பவனும், உலகின் கண்களாக விளங்கும் பூரண மன நிறைவு, அன்பு, நேசம் ஆகிய இரண்டையும் தாராளமாய் அள்ளித் தருபவனுமான, ஹே! மன்மதா, உன்னை மனதார வணங்குகிறேன்.” என்றான்.

ஒலி எழுப்புகின்ற மணிகளைக் கோர்த்து இடுப்பில் கட்டிக்கொண்டுத் தெருக்களில் ஆடிப்பாடி ஆரம்பித்தான்.

மூதூர்ப் பொழிலில் நீர் சூழ்ந்து நிலம் துருத்திக்கொண்டிருக்கும் மணல்மேட்டில் காதலி தன் துணையைத் தழுவிக் கொண்டிருந்தனர். அங்கு வில்லேந்திய மன்மதனும், ரதியுடன் விளையாடுவது போன்ற காமாண்டிக் கூத்து நடந்து கொண்டிருந்தது.

“தென்றலெனும் தேரை கொஞ்சும் கிளிகள் இழுத்து வர, ரீங்காரம் பாடும் வண்டுகள் உடன் அணிவகுக்க, ரதிதேவியுடன் உல்லாசமாக இச்சை வீதியில் பவனி வருபவன் காதல் கடவுளாம் மன்மதன். கரும்பு எனும் வில் கொண்டு முல்லை, நீலம், மா, அசோகம், தாமரை எனும் பஞ்ச புஷ்பங்கள் சேர்ந்த அம்பைத் தொடுப்பதே, காலமெல்லாம் சலிக்காமல் அவன் புரியும் தொழில். 

நீண்ட தாழை மலர் மடலே அவனுக்கு வாளாயுதமாக விளங்குகிறது. ரதி பெரும்பாலும் காமனுடன் இணைந்தவாறே அழகிய தோற்றத்துடன் அலங்கரிக்கப்பட்ட ஆடைகளுடன் கைகளில் வாளை ஏந்தி காண்போர் கவரும் வண்ணம் கிளியினை வாகனமாகக் கொண்டு இருக்கிறாள்.

வசந்த பருவமே அவனது ஆட்சியில் உச்சபட்ச அதிகாரத்தைச் செலுத்தும் காலமாகத் திகழ்கிறது. அதன் காரணமாகவே காமன் ‘வசந்தன்’ எனும் புனைப் பெயர் கொண்டு அன்பை வேண்டும் அனைவராலும் ஆராதிக்கப்படுகிறான்.

காமன் ஒரு சமயம் உலக இயக்கத்தின் உண்மைப் பொருளாய் விளங்கும் ஈசனின் நிஷ்டையைக் விலக்க, உமையவளாம் பார்வதி தேவியால் ஏவப்பட்டான். தவத்தில் லயித்திருந்த சிவனாரின் மீது மலர்க்கணையைத் தொடுத்தான். நிஷ்டை கலைந்த சிவன் சினமுற்று, நெற்றிக்கண் திறந்து மன்மதனை எரித்துப் பொசுக்கி சாம்பலாக்கினார். 

காமனின் மறைவிற்குப் பின்னர் அச்சாம்பலை உடல் முழுவதும் பூசிக்கொண்டு ரதிதேவி கடும் தவம் புரிந்தாள். காமன் உயிர் நீத்து சாம்பலாகிப்போன தனது கணவனாம் மன்மதனை மீண்டும் உயிர்ப்பித்துத் தரும்படி ஈசனிடம் அழுது புலம்புகிறாள் ரதிதேவி. 

‘மறப்பது மனித குணம், மன்னிப்பது இறை குணம் அல்லவா என் ஈசனே!’ என்று கேட்ட ரதியின் தவத்தின் பலனாகக் கோபம் தணிந்த சிவபெருமான், ரதிதேவியின் வேண்டுதலை ஏற்று, அவளது கண்களுக்கு மட்டும் தெரியும்படி காமதேவனை உயிர்ப்பித்துத் தந்து அருள்பாலிக்கிறார். இதுவே காம தகனத்தின் புராணப் பின்னணி வரலாறு!” என்று கூறி கூத்தை ஆரம்பித்தான.

கூத்தில் சிவன் கோபமாக நெற்றிக் கண்ணைத் திறக்கிறார். அந்தத் தீயில் காமதேவன் சாம்பலாகிறான். அந்தக் காட்சி ஆடப்பட்டபோது அரங்கமே அமைதியாக இருந்தது. பின்னர் ரதிதேவி அழுது புரளும் காட்சி வந்தது.

“என் கணவனே… என் காதலனே…” என்று அவள் அழும் பாடல் இரவின் அமைதியில் நீண்டது. அந்தக் குரலைக் கேட்டவர்கள் கூட மனம் கனந்தனர். அதுவும் காதலர்கள் மிகவும் துடித்தனர். கதை முடிவில் சிவபெருமான் கருணை கொண்டு, “ரதியின் கண்களுக்கு மட்டும் மன்மதன் உயிரோடு தோன்றுவான்” என்று அருள் புரிகிறார்.

அந்த அறிவிப்புடன் காமதேவனின் உருவம் தீயில் எரிக்கப்பட்டது.

மக்கள் எல்லோரும் கைகளைத் தட்டினர். அந்தக் காட்சியைப் பார்த்த மயூரிக்கு கண்களில் கண்ணீர் பெருகி வழிந்தது. சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். பிறகு மெதுவாக வீனஸைப் பார்த்தாள்.

வீனஸ் அந்தப் பார்வையை உணர்ந்தான். அவன் மனதில் பல்வேறு நினைவுகள் வந்து வந்து போனது.

காமம் எனும் இயற்கை உணர்வு தெய்வ வடிவம் கொண்டபோது, அது மன்மதன் எனவும் ரதி எனவும் பெயர் பெற்றது. மன்மதனையும் ரதியையும் பிரியாத இன்ப இணையாகவும் சந்தோஷ ஊற்றின் வடிவமாகவுமே மன்மதன் பார்க்கப் படுகிறான்.

ஆகையால், காமம், இச்சை ஊட்டுபவை அனைத்தும் காமனுக்கு உரிமையானதே.

மன்மதன் சாம்பலானாலும் அவன் அம்புகள் இன்னும் உயிரோடு இருக்கின்றன. அது எப்போதும் உயிருள்ள ஜீவராசிகள் அனைத்திற்குமே காமன் அம்புகள் பாயும்.

அன்றைய கூத்து நடைபெற்று எல்லோரும் காமனையும் ரதியையும் நினைத்துக் கொண்டே கலைந்தனர் சோகமாக. கடைசி யாம இரவு காதலர்களைப் பாடாய்படுத்தியது.

 

***

காலை வெள்ளி இன்னும் முழுவதும் விரியாத நேரம். கடல் அலைகள் மெதுவாக வந்து மணலைத் தொட்டு மீண்டும் நீலத்தில் மறைந்து கொண்டிருந்தன. அந்த நேரத்தில் கடற்கரையில் தனியாக நடந்தாள் குவளை. அவள் கண்கள் கடலைப் பார்த்தாலும், அவள் மனம் சிங்கனிடமே இருந்தது.

காமன்விழா நடப்பதால் சிங்கனைப் பார்த்து வெகுநாட்களாக நீண்டதை போல இருந்தது. சிங்கனின் பிரிவால் அவளின் உள்ளம் அமைதி இல்லாமல் இருந்தது.

‘இன்று வருவாரோ?’ என்று எண்ணிக்கொண்டே ஈரமான மணலில் மெதுவாக நடந்தாள். அப்போது அவள் கவனத்தை ஈர்த்தது உள்ளான் என்ற சிறிய பறவை. அதன் நீண்ட சிறிய கால்களால் மணலில் விரைவாக ஓடிக்கொண்டிருந்தது. சில நேரம் நின்று மெல்லிய நீண்ட அலகால் மணலைத் தட்டி அதற்குள் மறைந்திருக்கும் சிறு புழுக்களை எடுத்துக் கொண்டது.

அதைப் பார்த்த குவளை சிறிது நேரம் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள். அந்தப் பறவை திடீரென்று சிறகை விரித்து மேலே சென்றது. மீண்டும் கடல் நீர்மேல் இறங்கியது. பிறகு வானத்தை நோக்கிச் சிறிது உயரத்தில் பறந்து ஒரு குரல் எழுப்பியது.

“கிறீச்… கிறீச்…” அந்தக் குரல் அழுகையைப் போல மெதுவாக இருந்தது. குவளை மெதுவாகச் சிரித்தாள்.

“நீயும் உன் துணையைத் தேடுகிறாயோ?” என்று அந்தப் பறவையிடம் பேசினாள்.

அவள் மனதில் சிங்கன் தோன்றினான். அவனது சிரிப்பு, அவனது கண்கள்,

அவனது வார்த்தைகள். அவள் மெதுவாகச் சொன்னாள்,

“சிறு பறவையே… நீ உன் துணையை அழைக்கிறாய். நானோ என் சிங்கனை நினைத்து இங்கே கடலை நோக்கி நிற்கிறேன்.” என்றாள்.

அந்த நேரத்தில் கதிரவன் மெதுவாகக் கடலிலிருந்து எழுந்தான். அவள் முகத்தில் மஞ்சள் ஒளி விழுந்தது. அந்தப் பறவை மீண்டும், “கிறீச்… கிறீச்…” என்று கூவியது.

குவளை கடலைப் பார்த்தாள். அவள் மனதில் ஒரு எண்ணம். இயற்கையே என் ஏக்கத்தை அறிவதுபோல் இந்தப் பறவையையும் என்னுடன் சேர்த்து காத்திருக்க வைத்திருக்கிறது.

அந்தக் காலைக் கடற்கரையில் ஒரு பெண் ஒரு சிறு பறவை இருவரும் ஒரே காதல் பிரிவு உணர்வில் இருந்தனர். துணையைக் காணத் துடிக்கும் அமைதியான காதல். 

அந்தப் பறவை பறந்து சென்றது. குவளையும் பறவையின் பின்னே ஓடினாள். பறவை தாழைப்பாக்க கயவாய் புன்னை மரத்தில் போய் அமர்ந்தது.

பெரும் மூச்சுகளுடன் ஓடி வந்தவள் தன்னுடைய புன்னை மரத்தின்மீது சாய்ந்தாள். அவள் அணிந்திருந்த கச்சையும் சேலையும் மலர்களால் நிரம்பிய கச்சை பூந்தோட்டங்களும், அந்தத் துணியில் பல வடிவங்கள் இருந்தன. வெள்ளை, மஞ்சள், சிவப்பு, நீலம் போன்ற பல நிற மலர்கள் அந்தக் கச்சையின் மேல் நெய்யப்பட்டிருந்தன.

அதைப் பார்த்தால் ஒரு ஆடை அல்ல, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு தோட்டம்போல இருந்தது. அந்த ஆடை மிகவும் மெல்லியது. அது காற்றில் அசைந்தபோது

ஒரு சிலந்தி நூல் நூற்பது போல மெல்லியதாகத் தெரிந்தது. அந்த மெல்லிய நெய்தல் கச்சை இடுப்பைச் சுற்றி இருந்த அந்த மெல்லிய பட்டு நூலால் நெய்யப்பட்டதால் காற்று வந்தபோது மெதுவாக அசைந்தது.

காமன் கணை பட்டதோ என்னவோ அவளின் அங்கங்கள் அவளை ரதிதேவியாகக் காட்டின.

கடற்கரையில் குவளையை தேடி வந்த சிங்கன், குவளை எங்கோ செல்வதைக் கண்டதும் வண்ணனின் மேல் இருந்தவன், “வண்ணா, அதோ குவளை போகிறாள். போ!” என்றான்.

தலையை அசைத்த வண்ணன் பாய்ந்து ஓடினான்.

குவளை புன்னை மரத்தை அணைத்திருப்பதைப் பார்த்ததும் வண்ணனை ஒரு மரத்தில் கட்டி வைத்து, “நீ நீர் அருந்தி ஓய்வெடு!” என்று சொல்லிவிட்டு புன்னை நோக்கிச் சென்றான்.

குவளையின் எழிலை முன்பு ஒருமுறை தொடாமல் கண்டுகளித்தவனுக்கு இன்று கள்வெறி ஏறிய மன்மதனாய் தன் ரதியை நோக்கி நடந்தான்.

புன்னையில் சாய்ந்திருந்தவளின் அங்கங்கள் ஆங்காங்கே இடமும் வலமுமாய் சரிபாதியாக இருந்தது. அதன் அழகு தெளிந்த தேன்குடங்களாய் சிங்கனை வர வைத்தது.

சிங்கன், ரதியின் மீது மேகம்போல, இலவம்பஞ்சினை அணைப்பது போலப் படர்ந்து சாய்ந்து பிடித்தான்.

“ஐயோ…” என்று அலறியவள் சிங்கனைப் பார்த்ததும் பதில் சொல்லாமல், குவளையின் முகம் புன்னை மலரைப் போலச் சிவந்தது. வசந்தக் காற்று வீசிப் புன்னை மலர்கள் அவள் தோளில் விழுந்தன. அவள் அவற்றைத் தட்டுவதற்கு முன், சிங்கன் அவளை மெதுவாக அணைத்துப் பிடித்தான். புன்னை பூக்கள் உதிர்ந்தன, கொங்கை பூக்கள் மலர்ந்தன. அந்த ஒரு கணத்தில் குவளையின் மேனி திடீரெனத் துடித்தது.

அவள் கண்கள் அவனைப் பார்த்தது. சிங்கனின் கண்களில் கள்வெறியேறி சிறிய நரம்புகள் சிவப்பேறிக் கிடந்ததைப் பார்த்தும் உடனே அச்சத்தில் தாழ்ந்தன.

முகத்தில் மெதுவான சிவப்பு மலர்ந்தது. அவள் கைகளை மெல்ல அவன் கையிலிருந்து விடுத்தாள். புன்னை மரத்தின் தண்டு அருகே சிறிது ஒதுங்கி நின்றாள்.

அந்த நேரத்தில் கரையோரத்தில் ஓடிய பறவை, “கிறீச்… கிறீச்…” என்று கூவியது. அந்தச் சப்தத்தைக் கேட்ட குவளை சிறிது சிரித்தாள்.

“ஏன் சிரிக்கிறாய் குவளை?” சிங்கன் கேட்டான். 

“அந்தப் பறவை தன் துணையை அழைக்கிறது.” குவளை மெதுவாகச் சொன்னாள்.

சிங்கன் சிரித்தான். “அப்படியென்றால் நான் உன்னை அழைக்க வேண்டுமா?” என்றான்.

குவளை சிறிது தூரம் நடந்தாள். திரும்பிப் பார்த்தாள். அவள் கண்களில் நாணமும் மறைக்க முடியாத காதலும் இருந்தது. அந்தக் காலைப் புன்னை மர நிழலில்

ஒரு காமம் மெதுவாக மலர்ந்தது. புன்னை நிழல் அவர்களை மூடியது. புன்னை மரத்தடியில் சிங்கனும் குவளையும் காதல் களியாடினார்கள்.

 

அலை வருடும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page