அலை – 5
வீனஸ் எராவுடன் மருதநிலத்தைக் கடந்து பிரமாண்ட கொற்கை நகரத்தின் கோட்டை வாயிலை நிமிர்ந்து பார்த்தான். ரோமாபுரி வேறு என்று நினைத்துக் கொண்டே முப்பது அடி உயர உயர்ந்த மதில்களுடன், இரும்பு முட்கள் பொருத்திய பழந்தேக்கு மரக் கதவுகளும் மிகப் பெரியது. கதவுகளின் இடையே உள்ள சாளரத்தின் வழியே அனுமதி வாங்கியே நகரத்துக்குள் செல்ல முடியும்.
இருபுறமும் ஈட்டி ஏந்திய காவலர்கள் பலர் இருந்தனர். தூசி படிந்த ஆடையுடன் வீனஸ் குதிரையிலிருந்து இறங்கி வாயிலை நோக்கி வந்தான்.
வாயில் காவல் வீரன் அவனிடம், “யார் நீவீர்? எந்த நாட்டவர்?” என்று அன்புடன் கேட்டான்.
வீனஸ், “நான் மேற்கு கடல் யவனநாட்டிலிருந்து வந்த வீரன். கொற்கை வேந்தனை காண வேண்டும்.”
வீரன் கண்களைச் சுருக்கி, “வேந்தனை யாரும் நேராகக் காண முடியாது. அமைச்சரைப் பார்த்து விட்டு அவரின் அனுமதியை பெற்றே தாங்கள் வேந்தரைக் காண முடியும். மன்னிக்கவும் தங்களின் அனுமதி இலச்சினையைக் காண வேண்டும்.” என்றான்.
வீனஸ் இடுப்பில் கட்டியிருந்த சிறு பையைத் திறந்து ஒரு பொன் இலச்சினையைக் காட்டினான். அதில் பாண்டியச் சின்னமும், இரட்டை மீனும் தெளிவாக ஜொலித்தது.
வீரன் அதைக் கண்டவுடன் மிகவும் மரியாதையுடன் ஈட்டியைத் தாழ்த்தி, “வாருங்கள், எங்களின் கோட்டைத் தலைவரைக் காணுங்கள்.” என்றழைத்துக் கொண்டு சென்றான்.
வீனஸ், எரா இருவரும் கதவுகள் வழியே உள்ளே நுழைந்தனர்.
வீரன் வாயில் உள்ளே சென்று, “ஐயா, இவர் யவனநாட்டு வீரர். தலைவரைக் காண வேண்டுமாம்.” என்று இலச்சினையை காட்டினான்.
“கோட்டைத் தலைவர் இராஜவீதி வரை சென்று இருக்கிறார்.” என்று சொல்லிக் கொண்டே இலச்சினை வாங்கிப் பார்த்தவனும் வியந்து மரியாதையுடன் வீனஸைப் பார்த்தான்.
“வாயில் வீரனுடன் நீங்கள் செல்லலாம்.” என்றவன் கோட்டைத் தலைவரின் வலது கையாக மதி நுட்பத்துடன், திறமை வாய்ந்தவனான துகிலன்.
“ஐயா, இது இராஜ இலச்சினை. இது மதிப்புமிக்க பெருமைமிக்க வீரர்களுக்கும், தூதுவர்களுக்கும் கொடுக்கப்படும் இலச்சினை.” என்றவன், “என்னுடன் வாருங்கள் நகரத்துக்குள் சென்று தலைவரைக் காணலாம்.” என்றான்.
துகிலன் உயரமாகவும், மெலிந்த தோள், கூர்ந்த கண், எப்போதும் சுற்றம் கவனிக்கும் பார்வையுடனும், இடுப்பில் பெரிய வாளுடனும் இருந்தான்.
துகிலன் வீனஸிடம், “எனது நாமம் துகிலன். தங்களது நாமத்தையும் இதோ எங்கள் வெள்ளைச்சாமி நாமத்தையும் கூறுங்களேன்.” என்றான்.
அதைக் கேட்டுப் புன்னகை புரிந்தவன், “நான் வீனஸ், தம்பி எரா.” என்றான்.
உடனே துகிலன், “உங்களது நாமத்தை விடுங்கள் அழகாக இல்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால், எங்கள் கருப்பண்ணசாமிக்கு எரா என்று வைத்துவிட்டீர்களே!” என்றான் கவலையுடன்.
“ஹாஹாஹா ஹாஹா…” என்று வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தான் வீனஸ். அதைக் கண்ட எராவிற்கு தன்னை ஏதோ சொல்லிச் சிரிக்கிறான் என்று தெரிந்ததும் இதற்குக் காரணம் இந்தப் புதியவனே என்று அருகில் இருந்த துகிலனைப் பின்னங்காலை சற்றே தூக்கி ஓர் உதை விட்டது எரா.
எதிர்பாராத குதிரையின் உதையில், “ஐய்யோ… அம்மா…” என்ற அலறலுடன் துகிலன் தூரமாகப் போய் விழுந்தான்.
இதைக் கண்டதும் இன்னும் அதிகமாக வீனஸ் சிரித்துக் கொண்டே வந்து துகிலனை தூக்கி விட்டான்.
இடுப்பை தேய்த்துக் கொண்டே எழுந்த துகிலன், “என்னப்பா இது நான் ஒன்றுமே பண்ணவில்லையே, எதற்கு இந்த உதை?” என்றான் வீனஸிடம்.
அதற்கு வீனஸ், “நான் சிரித்ததைப் பார்த்த எரா, அவனை நீ ஏளனம் செய்து விட்டாய் என்று கோபப்படுகிறான்.” என்றான்.
“இது என்ன வம்பாகப் போயிற்று? இதுவரை மனிதர்கள்தான் புரிந்து கொள்ளாமல் கோபப்படுவார்கள். இங்கே என்னவென்றால்…” என்றவன் எராவைப் பார்த்ததும், “ஐயோ! இப்போது சொல்வதும் தவறானால் இன்னொரு உதையா, வேண்டாம் சாமி…” நாக்கைக் கடித்துக் கொண்டு எராவிற்கு முன்னால் தள்ளி நின்று கைகளைக் கூப்பி,
“ஐயா வெள்ளைச்சாமி, நீங்கள் எங்கள் கருப்பசாமி. உங்களை நான் ஏளனம் செய்யவில்லை. நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்து இருக்கிறீர்கள். நீங்கள் எனக்குச் சாமிதான்!” என்று இராஜவீதி செல்லும் சாலையில் சாஷ்டாங்கமாக எராவின் முன் விழுந்து வணங்கினான்.
இதைச் சற்றும் எதிர்பாராத வீனஸ், தமிழகத்தில் குதிரைகளைக் கூடப் பக்தியுடன் வணங்குவார்கள் என்பதை நினைத்துப் பெருமைபட்டான். ‘இதுவரை ரோமாபுரியில் விலங்குகளுக்கு மதிப்பு என்பது போக்குவரத்துக்கு மட்டுமே பயன்படுத்துவார்களே ஒழிய அவைகளை உயிரினங்களாக நினைத்துப் பார்த்ததே இல்லை. இந்த மண் வேறாக இருக்கிறது. என் எண்ணமும், இந்த மக்களின் எண்ணங்களும்…’ என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போதே எரா மெதுவாக வந்து துகிலனை உரசியது.
‘திக்’கென்ற பயத்தில் இருந்த துகிலன், எராவின் அன்பைக் கண்டதும் மகிழ்ச்சியில் எராவின் தலையைத் தடவினான். எரா அமைதியாக இருந்ததைப் பார்த்ததும் துகிலனுக்குப் புரிந்து விட்டது, தன்னை எரா நண்பனாக ஏற்றுக் கொண்டது என்று.
வீனஸ் துகிலனிடம், “எரா என்பதின் அர்த்தம் பாதுகாவலன் என்பதாகும். எரா என் உடன்பிறந்த தமையன் மாதிரி.” என்று விளக்கினான்.
வீனஸிற்கே இது புதியது. ‘எரா யாரிடமும் ஒட்டவே மாட்டானே’ என்ற எண்ணவோட்டத்தை,
“வாருங்கள், போகலாம் தாமதம் ஆகிறது.” என்றான் துகிலன்.
மூவரும் நடந்தார்கள். அகலமாக நீண்டு இருந்த இராஜவீதியின் நீண்ட வரிசையில் சிறிய மாளிகைகள் எழுப்பியிருந்தனர். மந்திரி, தளபதி முக்கியமானவர்களின் வாயிலில் செதுக்கிய மரக் கதவுகளுடன், நடுவில் இரட்டை மீன் சின்னம் பதித்திருந்தது. மதில்களின் இருபுறமும் விளக்குத் தூண்கள் வரிசையாக நின்றன. அரண்மனை வாயிலை நோக்கிச் செல்லும் பாதையில் காவலர்கள் அணிவகுத்து நின்றனர்.
அரண்மனையின் வாயிலை நெருங்கிய சமயம் அழுத்தமான குதிரையின் குளம்படி சப்தம் ஒன்று கேட்டது. மூவரும் ஒன்றாகத் திரும்பினார்கள். கம்பீரமாகக் கார்வண்ணக் குதிரையின் மீது அமர்ந்திருந்தவன் நமது சிங்கனே!
சிங்கனைக் கண்டவுடன் துகிலனுக்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தது. வீனஸிற்கு இது யார் என்று பார்த்தவுடனே தெரிந்து விட்டது. போர்களுடன் நன்கு பழக்கப்பட்டவன் என்பது அவனது முறுக்கேறிய புஜங்களைப் பார்த்துப் புரிந்து கொண்டான்.
சிங்கன் இவர்களின் முன்னே வந்தவுடனே துகிலன், வீனஸ் யார் என்பதை தெரியப்படுத்தினான்.
சிங்கன் வீனஸைப் பார்த்துப் பேர் உவகையுடன், “கொற்கை நகரம் தங்களை வரவேற்கிறது.” என்று ஆரத்தழுவி வரவேற்றான். ஆரத்தழுவியவுடனே இருவருக்குமே தெரிந்தது இவர்கள் பலசாலிகள் என்று. அவரவர்களின் முதுகு விழுப்புண்களின் தழும்புகளால் கண்டறிந்து கொண்டார்கள்.
சிங்கன் வீனஸிடம், “கொற்கை வேந்தர் திக்விஜயம் சென்றிருப்பதால் நீங்கள் முதலில் அமைச்சரைக் காணுங்கள்.” என்று கூறினான். வீனஸ் யோசனையுடன் தலையை ஆட்டினான்.
சிங்கனின் கார்வண்ணனும், எராவும் கூட நலம் விசாரித்து இணைந்து கொண்டார்கள்.
துகிலனுக்கு ஒன்றும் புரியவில்லை ‘என்ன இது பார்த்துச் சிறிது நேரம் கூட இல்லை அதற்குள் ஏதோ காலம் காலமாகத் தெரிந்தவர்கள்போல இருக்கிறார்களே’ என்று விழிபிதுங்கி நின்றான்.
சிங்கன் வாயில் காவலர்களை அழைத்துக் குதிரைகளுக்கு ஆகாரம் கொடுத்துக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு வீனஸை, துகிலனுடன் அரண்மனைக்குள் கூட்டிச் சென்றான்.
பாண்டிய மன்னனின் அரண்மனை வாயிலைக் கடந்தவுடன் அகன்ற மண்டபம் விரிந்தது. கல் தூண்கள் வரிசையாக நின்றன. ஒவ்வொரு தூணிலும் யாளி, பக்க்ஷிகளின் உருவங்களும் செதுக்கப்பட்டிருந்தன. யானை பிளிறுவது போல உயிரோட்ட சிலைகளும், பகலொளி அரண்மனை மண்டபத்துக்குள் சிறிய சிறிய துவாரங்கள் கொண்ட பெரிய சாளரங்கள் வழியாக ஒளி பாய்ந்தது.
இரவில் சுடர் தரும் யவன விளக்குகள் இப்போது அமைதியாகச் சுவரோர பலகைகளில் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. எரியாமல் இருந்தாலும் அவற்றின் அழகு குறையவில்லை. பித்தளையால் விளக்கில் பொறிக்கப்பட்டிருந்த குதிரை, தேவதை, திராட்சைக் கொத்து அச்சுக்கள் இயற்கை வெளிச்சத்தில் தெளிவாகத் தெரிந்தன. தொங்கிய விளக்குகள் மணத் தூபம் கலந்த புகையோடு மெல்ல அசைந்தன.
சில விளக்குகளில் இன்னும் நேற்றிரவு எரிந்த திரியின் கருநிற சுவடு இருந்தது. பணிப்பெண் ஒருவள் மென்மையான துணியால் அவற்றைத் துடைத்துக்கொண்டிருந்தாள்.
அரசரின் அரியணைக்கு செல்லும் வழி முழுவதும் இந்தத் தொங்கும் விளக்குகளின் கீழ் பிரகாசித்து, இது அரச மண்டபம் என்று சொல்லாமலே சொல்லும் பெருமை பரவியது.
சிங்கன், “இவை யவன தேசத்திலிருந்து வந்த விளக்குகள்.” என்று பெருமையுடன் சொன்னான். “இரவில் ஒளி தரும், பகலில் கலை தரும்.” என்றான்.
அதைக் கேட்ட துகிலன் சிங்கனைப் பார்த்து, “என்ன ஏதோ உன்னிடம் வித்தியாசம் தெரிகிறதே? கருத்துக்கள் வேறு வருகிறது. தலைமைக் காவலன் மாதிரி இல்லை, கவிஞன் மாதிரி பேசுகிறாய்.” என்றான்.
“காவல் காப்பவனுக்கும் பருவக் கனவுகள் இருக்கு நண்பா!” என்றான்.
துகிலன், “ஓஓ… பருவக் கனவு! அதுவும் இன்றைக்கு காலையிலிருந்து வருகிறது. ஆனாலும் நீ இப்படிச் சொல்வது தான் புதிதாக இருக்கிறது.”
சிங்கன் சட்டென அதிர்ந்துவிட்டு, “ஏன் நானும் இரகசியமாகக் கவிதை எழுதுகிறவனாக இருக்கலாம் இல்லையா?” என்றான்.
துகிலன், “எது அப்படியா? அய்யோ! எனக்கு இது இத்தனை நாட்களாகத் தெரியாமல் போனதே. இருந்தாலும் உன் கவித் திறமையை அரண்மனை அறிய வாழ்த்துகிறேன்.” என்று, “எங்கள் தலைமைக் காவல் கவிஞன் சிங்கன் வாழ்க!” என்று கத்தினான்.
சிங்கன், “நண்பா, அமைதியாக வா!” என்று சிரித்தான்.
“இருப்பினும் ஏதோ உன்மேல் எனக்குச் சந்தேகம் வருகிறது. கண்டுபிடிக்கிறேன்!” என்று அவனைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டே சொன்னான் துகிலன்.
சிங்கனுக்கு தூக்கி வாரிப் போட்டது. ‘இவன் பார்க்கத்தான் மெலிந்தவன், அறிவுக்கூர்மையில் வல்லவன்’ என்று யோசித்தான். யாரும் கவனிக்காததை துகிலன் கவனிப்பான். சிங்கன் பலசாலி என்றால், துகிலன் புத்திசாலி.
இவர்களின் சம்பாஷணையைக் வீனஸ் கேட்டுக் கொண்டிருந்தாலும் அவனின் கவனம் முழுதும் அரண்மனை கலைநயத்தில் இருந்தது. அதில் மெய் மறந்து இருந்தான்.
துகிலன், வீனஸைப் பார்த்து மெதுவாகச் சிரித்தான்.
“கொற்கை நகரம் உங்களுக்குப் பிடித்திருக்கிறது போல? இன்னும் நிறைய நிறைய இடங்களை நாங்கள் காட்டுகிறோம்.” என்றான்.
வீனஸ் சிரித்தான். “நீ காவலனா அல்லது புலவரா?” என்றான்.
துகிலன் உடனே, “புலவராக ஆசை இருந்தது. ஆனால் என் கவிதையைக் கேட்டு எல்லோரும் உறங்கிவிட்டார்கள். அதனால் இந்தக் காவல் சிங்கத்திடம் மாற்றம்!” என்றான்.
“என்ன கவிதை?” என்றான் வீனஸ் ஆவலாக.
போர்க்கு வந்த வீரன் நான்;
எதிரி வந்தால் வெட்டுவேன்,
எலி வந்தால் ஓடி ஒளிவேன்!
சண்டை என்று வந்துவிட்டால்,
“வா சண்டைக்கு” என்றவுடன்,
“வா நாளை” என்று சொல்வேன்.
சங்கு மட்டும் ஊதுவேன்;
சந்தில் போய் ஒளிவேன்.
வீனஸ் சற்றே ஏமாற்றத்துடன் துகிலனைப் பார்த்தான்.
சிங்கன் தலையை ஆட்டினான். “இவன் பேச்சுதான் நகைச்சுவை, ஆனால் அறிவு கத்தியைவிடக் கூர்மை மிகுந்தது.” என்றான் பெருமையாக.
அலை வருடும்…
