அலை 6
அரண்மனையில் மூவரும் தாமரை வட்டப்பாதை வழியாகச் சென்றார்கள் உயர்ந்த தூண்கள், எண்ணெய் விளக்குகள், சுவரில் பாண்டியர்களின் போர்காட்சிகள், திக்விஜய யாத்திரைகள், தெய்வ அருள் காட்சிகள். ஒவ்வொரு சித்திரமும் ஒரு வரலாறாக வரையப்பட்டிருந்தது.
மண்டபத்தில் நுழையும் ஒவ்வொருவரின் காலடி ஓசை கூடத் தெளிவாக எதிரொலித்தது.
சிங்கன் நின்று அரண்மனை சேவகனிடம் சொன்னான்.
“இவர் இராஜ இலச்சினையுடன் வந்த யவனவீரர். அரசர் தரிசனம் காண வேண்டும்.” என்றான்.
பாண்டிய நாட்டின் அரசவையின் மண்டபத்தின் நடுவே மூன்று படிகள் உயர்ந்த மேடையில் பொன் பொலிவுடன் சிம்மாசனம் அமைந்திருந்தது. அதன் பின்னால் வெள்ளைத் திரையில் பொன் நூலால் நெய்யப்பட்ட மீன் சின்னம் ஜொலித்தது. இருபுறமும் சாமரம் வீசும் சேவகர்கள் தயாராக நின்றனர்; குடைத் தாங்கிகள் அசையாமல் காத்திருந்தனர்.
முதலில் அமைச்சர் வந்து தனது இடத்தில் அமர்ந்தார். அவரின் வலப்புறம் படைத் தளபதிகள், எல்லைக் காவல் அதிகாரிகள் வரிசையாக அமர்ந்திருந்தனர். இடப்புறம் பொருளாதார கணக்கர்கள், சுங்கவரி அதிகாரிகள் உட்கார்ந்திருந்தனர்.
அரண்மனை மணி அடிக்கப்பட்டதும் மக்கள் மனுக்கள் கொண்டு முன் நின்றனர். ஒரு முதியவன் நிலத் தகராறு கூற வந்தான். ஒரு வணிகன் துறைமுக சுங்கவரி குறையைப் பற்றி முறையிட்டான்.
ஒவ்வொருவரையும் அமைச்சர் அமைதியாகக் கேள்விகளைக் கேட்டார். சாட்சி அழைக்கப்பட்டார். விவாதம் நடந்தது. அந்த நேரத்தில் புலவர் ஒருவர் முன் வந்து வணங்கி நின்றார்.
“அரசவைக்கு முன் ஒரு புகழ் பாட விரும்புகிறேன்.” என்றார்.
அமைச்சர் சிரித்து, பொன் நாணயங்களைக் கொடுத்து, வேந்தன் வந்ததும் அவசியம் வந்து கவிபாடுமாறு வேண்டினார்.
அரசவையின் விவாதம் முடிவுக்கு வந்தபோது, வெளி வாயிலில் யவனவீரர் வந்த செய்தி அறிவிக்கப்பட்டது.
அமைச்சர் எழுந்து முன்னே வந்தார். “யவன தேசத்து விருந்தினரே, வருக வருக! கொற்கையின் வாசல் உங்களுக்குத் திறந்தே இருக்கும்.” என்று அன்புடன் வரவேற்றார்.
மூவரும் மரியாதையுடன் அமைச்சரை வணங்கினர்.
வீனஸ், “மகா வேந்தரை காண இயலுமா?” என்றான்.
அமைச்சர் மெதுவாகப் புன்னகைத்து, “வேந்தர் இப்போது திக்விஜயம் சென்றுள்ளார். அதுவரை எங்கள் மண் உங்களுக்குத் தாய்மண் போலே!” என்றார்.
அமைச்சர் சேவகர்களை நோக்கி, “விருந்தினர் மண்டபம் தயார் செய்யுங்கள். நறுமணம் வீசும் நீர், பழச்சாறு, இனிய உணவு அனைத்தும் உடனே கொண்டு வாருங்கள்.” என்றார்.
வயிற்றுப் பசியுடன் இருந்த துகிலனுக்கு உமிழ்நீர் சுரந்தது.
“ஆஹா… ஆஹா… ஹாகாகா… சுவையான விருந்து! இங்கே வராவிட்டால் மாபெரும் தவறு செய்து இருப்பேனே, நல்லவேளை என் வாழ்க்கையின் பெரும்பேறு முதன்முதலில் இராஜவிருந்து. ஒரு பிடி பிடிக்க வேண்டியதுதான்!” என்று சபதம் எடுத்துக் கொண்டான்.
மனதில் ‘ஏ… எனது அருமை தாயே! ஹாஹாஹா… உன் மீன்குழம்பு, பழைய சோறிலிருந்து இன்று தப்பித்து விட்டேன். எப்படி? பார், நன்றாகப் பார். இராஜவிருந்து, நமது பரம்பரையில் யார் உண்டீர்கள்? உனது கணவன், உனது தந்தை? இல்லை இல்லை… இல்லவே இல்லை தாயே! நானே அந்தப் பெருமைக்குரிய உனது புதல்வன். தாயே, உண்டு களித்து விட்டுப் போனால் போகிறது என்று உன்னிடம் சொல்வேன், நீ அதை வாயைப் பிளந்து நாக்கில் எச்சில் ஊறக் கேட்பாய். என்ன, உனக்குக் கொடுக்க முடியாத வருத்தம் ஒன்று உள்ளது தாயே காந்தாரி’ என்று நினைத்துக் கொண்டு மிகுந்த கொண்டாட்டத்துடன் சிரித்துக் கொண்டிருந்தான்.
வீனஸுடன் மற்ற இருவரும் அமர வைக்கப்பட்டனர். சந்தனமும், பன்னீரும் தெளிக்கப்பட்டது. அரண்மனை மண்டபம் முழுவதும் நறுமணத்தில் மூழ்கியது. வெள்ளித் தட்டுகள் ஒழுங்காக வரிசைப்பட்டிருந்தன; ஒவ்வொரு தட்டின் அருகிலும் நெய் மற்றும் இனிப்புகளுக்காகச் சிறு சிறு கிண்ணங்கள் வைக்கப்பட்டிருந்தன.
முதலில் தஞ்சையின் வெள்ளை சாதம் பரிமாறப்பட்டது. அதற்கு மேலே பொன்னெய் சொட்டியது. அந்த மணம் மண்டபம் முழுவதும் பரவி, மூவரின் கண்களையும், நாவையும் கவர்ந்தது. பக்கத்தில் பருப்பு அமுது, புளிச்சாறு கலந்த கூழ், தினை – வரகு சாதம் அழகாக வைக்கப்பட்டது.
அடுத்து ஆட்டிறைச்சிக் குழம்பு, மிளகு தூவி சுட்டக் கடல் மீன், நெய்யில் வறுத்த கோழித் துண்டுகள் பரிமாறப்பட்டன.
கடற்கரை நகரம் என்பதால், இறால் வறுவல், நண்டு சாறு கூட இருந்தது.
காய்கறித் தட்டில் முருங்கை, சேனை, அவரைப் பொரியல் வந்தது. அத்துடன் நெய் அடை, அரிசி அப்பம், உளுந்து வடை சூடாக வந்தது.
இனிப்புப் பகுதி வந்தபோது, தேன் கலந்த பால் பாயசம், பனைவெல்லப் பலகாரம், பழுத்த மா, பலா, திராட்சை துண்டுகள் பரிமாறப்பட்டது.
பானமாக இளநீர், மோர், பழச்சாறு வழங்கப்பட்டது.
வீனஸிடம் அமைச்சர் எப்படி உண்பது என்பதைப் பொறுமையாகச் சொல்லிச் சாப்பிட வைத்துக்கொண்டிருந்தார். வீனஸ் நிதானமாக ரசித்துச் சுவைத்துக் கொண்டிருந்தான்.
துகிலன் சிங்கனைப் பார்த்து, “நண்பா… இதுதான் இராஜ விருந்தா? இல்லை போருக்கு முன் வீரனுக்கு பலம் சேர்க்கும் மருந்தா? இதைச் சாப்பிட்டால் வீரர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை போல இருக்கிறது.” என்றான்.
சிங்கன் மெதுவாக, “இதைச் சாப்பிட்ட பிறகு யார் போர்களத்துக்குச் செல்ல முடியும்?” என்றான்.
“அதானே! இதைச் சாப்பிட்டு எப்படி முதலில் நடக்க முடியும்? ஓர் அடிகூட முடியாதே!” என்றவன், “எனக்கு ஒரு யுக்தி தோன்றுகிறது.” என்றான் துகிலன்.
சிங்கன், ‘புத்திசாலி பலே பலே அறிவுக்கூர்மையுடன் ஏதோ சொல்லப் போகிறான்’ என்று நினைத்து, “சொல்லு துகிலா, சொல்லு…” என்றான். “ஏதோ கண்டுபிடித்து விட்டாய் நாட்டுக்குப் பெரும் நன்மை பயக்கும், என்னை வேறு பெருமைபடுத்துவாய்!” என்றவாறே,
“சொல் தயங்காதே!” என்றான். துகிலன் கண்களைப் பெரிதாக்கி, “நண்பா, நாம் ஏன் வாள், கேடயம் தரித்து இரத்தம் சிந்திப் போராட வேண்டும்? அதற்கு ஒரு மாற்று உபாயம் கண்டுபிடித்து விட்டேன். போர்களத்திற்குச் செல்லவே வேண்டாம். எளிதான உபாயம்.” என்றான்.
சிங்கன், “அப்படியா! சீக்கிரம் முதலில் என்னிடம் சொல். ஆவலாக உள்ளேன். பிறகு அமைச்சர், அரசரிடம் சொல்லிப் பெரும் பரிசில் பெறலாம்.” என்றான்.
துகிலன், “நண்பா, எதிரி நாட்டு வீரப் படைகளை ஒன்று திரட்டி இராஜவிருந்து அளித்தால் எல்லோரும் உணவருந்தி விட்டுக் களைப்புடன் மயங்கி விழுந்து விடுவார்கள், நாமும் போரில் வெற்றி பெறுவோம் இல்லையா?” என்றவன் நிமிர்ந்து சிங்கனைப் பார்த்தான்.
கோப வேட்கையுடன் சிங்கனைப் பார்த்தவுடன், “ஐய்யோ! ஏதோ தவறாகச் சொல்லி விட்டோமோ? இருக்கலாம், நமது இராஜ உணவை வீணடிக்கக் கூடாது. பிறகு நண்பனைப் பார்க்கலாம்.” என உணவை ருசி பார்க்க ஆரம்பித்தான்.
கோபம் வந்த சிங்கன், துகிலனின் செயலைப் பார்த்தவுடன், கோபத்தை பின்னே தள்ளிவிட்டு உணவை ருசி பார்க்க ஆரம்பித்தான்.
வீனஸ் அமைச்சரைப் பார்த்து, “ஐயா, எந்த நாட்டிலும் இல்லாத, சுவைக்காத விருந்தை இன்று நான் உண்டேன். உங்கள் உணவு, நட்பைப் போலப் பெரிது!” என்று குனிந்து வணங்கியவன், “விருந்தோம்பல் உங்களிடம் பெரும் கலைபோல உள்ளது.” என்றான்.
அதற்கு அமைச்சர் புன்னகைத்து, “ஆமாம்! விருந்தினர் வயிறு நிறைந்தால் கொற்கையின் மனமும் நிறையும்.” என்றார். வேந்தன் வரும்வரை தாங்கள் கொற்கையின் அரண்மனை விருந்தினர் அறையிலேயே தங்கிக் கொள்ளுங்கள். இவர்கள் தங்களை கவனித்துக் கொள்வார்கள்.” என்றவர், “கொற்கையைக் கண்டு மகிழுங்கள்!” என்றார்.
சிங்கனிடம் எதையோ கூறினார். சிங்கன் தலையை அசைத்திட, மூவரும் அமைச்சரிடம் விடைபெற்று அரண்மனையிலிருந்து வெளியேறினார்கள்.
அரண்மனையிலிருந்து வெளிவந்த மூவரும் உணவு உண்ட மயக்கத்தில் சோர்ந்து இருந்தனர். வாயிலில் உள்ள குதிரை கொட்டடியில் உள்ள வைக்கோல் போரில் விழுந்தார்கள்.
எஜமானர்களைக் கண்டதும் குதிரைகள் இரண்டும் மகிழ்ச்சியாக “நாஹ் நாஹ்…” கணைத்தன. வைக்கோல் போரில் விழுந்தவர்களில் துகிலன் உருள ஆரம்பித்தான். சிங்கன், “என்ன நண்பா, என்னாச்சு?” என்றான்.
“அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சென்று ஆயி சொன்னதை நான் கேட்கவில்லை.” என்றவன் அவசரமாகப் பின்னங்கால் பிடறியில் அடிக்கப் பின்பகுதியில் இருக்கும் நீர்தேக்கத்திற்கு ஓடினான்.
இதைக் கண்ட வீனஸும், சிங்கனும் இடியெனச் சிரித்தனர். சிறிது நேரம் கழித்து வந்த துகிலன், “நண்பா, எனக்கு ஒருநாள் ஓய்வு கொடு. இராஜவிருந்தை ஒன்று விடாமல் வயிற்றிலிருந்து வெளித் தள்ளிவிட்டு வருகிறேன். இதற்கு மேல் என்னால் முடியாது.” என்றான்.
“இங்கே ஒருநிமிடம் இருந்தாலும் எனக்கிருக்கும் கொஞ்சம் நஞ்சம் இருந்த மரியாதையும் காற்றில் போய்விடும். எனது மானம் காக்க நான் போக வேண்டும். தாயின் உணவு உடம்புக்கு ஆரோக்கியமானது. தாய் சொல்லைத் தட்டக் கூடாது. காந்தாரி நீ இல்லாமல் நான் இல்லை காந்தாரி!” என்று ஏதேதோ பிதற்றினான்.
பார்க்க மிகுந்த சோர்வுடன் இருந்தவனைக் கண்ட சிங்கனுக்குப் பாவமாக இருந்ததது. “சரி, போய் வா!” என்றான்.
அவசரமாக நகர்ந்தவன், “நண்பா, எனக்காக ஒன்று செய்வாயா, இந்த உயிர் நண்பனின் மானத்தைக் காக்க?”
சிங்கன், “என்ன அது துகிலா?” என்றான்.
“எனக்கு நடந்த இந்த நிகழ்வை என் மாமன் பெண்ணிடம் மட்டும் எக்காரணம் கொண்டும் சொல்லிவிடாதே!” என்றான் நம்பிக்கையுடன்.
சிங்கன் கண்டிப்பான முகத்துடன், “முயற்சிக்கிறேன் துகிலா! அதிகமாக முயற்சி செய்கிறேன் சொல்லாமல் இருக்க…” என்று பலமாகச் சிரிக்க ஆரம்பித்தான்.
அதைக் கண்ட துகிலன் வயிற்றுவலியுடன் ஒரு பார்வை சிங்கனைப் பார்த்து, “நீ எல்லாம் ஒரு நண்பன்? துரோகி, இதற்கு உன்னிடம் நான் கேட்காமலே இருந்து இருக்கலாம்.” என்று நகர்ந்தான்.
சிங்கன் சிரித்துக் கொண்டே இருந்தான். வீனஸ் பரிவுடன், “போய் வாருங்கள், நான் உங்களுக்காகக் காத்திருப்பேன் நண்பா!” என்றான்.
துகிலன், “எனக்கும் ஒரு காலம் வருமடா சிங்கா, டேய் ஜீங்கா!” கத்திக்கொண்டே தாழைப்பாக்கத்ததுக்கு நடையைக் கட்டினான்.
அந்தி சாயும் நேரம் சிங்கனும், வீனஸும் இராஜவீதியின் இடது பக்கத்தில் திரும்பியதும் வணிகத் தெருவிலிருந்து வந்த அம்பை என்ற திருநங்கையைக் கண்டான் சிங்கன்.
எதிரே வந்த அம்பை, “சிங்கா, எப்படி இருக்க? என்ன கொற்கை தலைவா, கொற்கை பெண் இதுவரையில் உன் கண்வலையில் சிக்கவில்லையா?” என்றாள்.
சிங்கன் சிரித்துக்கொண்டே, “அம்பை, என்ன வர வர அழகு கூடிக்கொண்டே போகிறது?” என்றவன், “பெண்மீன் கிடைத்த மாதிரி கிடைத்து விட்டாள்.” என்றான்.
“ஓஓஓ… பெண்மீன்… என்ன சிங்கா, விடுகதையெல்லாம் போடுகிறாய்? சரி, எப்படியோ எல்லாம் இறைவன் செயல்!” என்றவள், “எங்கே துகிலனைக் காணவில்லை? நான் பார்க்க வேண்டும் என்று கூறு சிங்கா!” என்றாள்.
துகிலன் அம்பையின் செல்லத் தம்பி போன்றவன். இவர்களின் உரையாடலை வீனஸ் இளநகையுடன் பார்த்துக் கொண்டு இருந்தான்.
அதுவரை பேச்சு சுவாரசியத்தில் இருந்த அம்பையும் வீனஸைப் பார்க்கவில்லை.
பார்த்த ஒரு நொடியில் வாயடைத்து நின்றாள் அம்பை.
அலை வருடும்…
